செவ்வாய், 22 நவம்பர், 2022

2320. கதம்பம்-104

மர்ரே எஸ்.ராஜம்

அ.ச.ஞானசம்பந்தன்


நவம்பர் 22. மர்ரே எஸ்.ராஜத்தின் பிறந்த நாள்.  ராஜம் தேவன், கோபுலு இருவரின் நண்பர்; இருவருக்கும் வீடு வாங்க உதவியவர் அவரே. தேவனின் 'ராஜத்தின் மனோரதம்' தொடரில் வரும் ஜயம் , மிஸ்டர் வேதாந்த'த்தில் வரும் சுவாமி இருவரும்  'மர்ரே ராஜம்' தான்! 

====

பழைய சாமான்களை ஏலம் விடும் மிக பெரிய நிறுவனம் மர்ரே அண்ட் கம்பெனி ஆகும். அரசாங்கத்தார் ஏலம் விடும் எதனையும் மர்ரே கம்பெனியார் மூலமாகவே விடுவர். அப்படிப்பட்ட மர்ரே கம்பெனி உரிமையாளர் எஸ். ராஜம் ஆவார். 1945- வாக்கில் பெரும் செல்வராகிய திரு ராஜத்திற்கு ஒரு புதிய சிந்தனை தோன்றிற்று.

பிறப்பால் வைணவ பிராமண குலத்தில் தோன்றினாலும் பிரபந்தங்களிலோ தமிழ் இலக்கியங்களிலோ அவருக்குப் பயிற்சி ஏதுமில்லை அக்கால  கட்டத்தில்  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது பரிதாபமான காகிதங்களில் பரிதாபமாக அச்சிடப்பெற்று, ஒரு சில இடங்களில் மட்டும் பரவி இருந்தது.. ராஜம், பல பிரதிகளை ஒப்பு நோக்கி அடக்க விலைப் பதிப்பாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தார். பல்கலைச் செல்வர் தெ. பொ. மீ, சா. கணேசன், நான் ஆகிய மூவரும் இப்பெரும் பணிக்குப் பதிப்பாசிரியர் குழு என்ற  பெயரில் இடம் பெற்றிருந்தோம்.  நீண்ட காலம் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்களிடம் இருந்து ஏடு பார்ப்பதிலும், பிரதிகளை ஒப்பு நோக்குதலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த திரு. மு. சண்முகம் பிள்ளை பதிப்புப் பணிகளை முழு நேரப் பணியாக ஏற்றார்.

1955-இல் திருவாய்மொழி முதலாயிரம் டெம்மி அளவில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் அடக்கவிலைப் பதிப்பாக வெளிவந்தது. இந்தப் பதிப்பு வெளிவந்தவுடன் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோவிலில் இதனை வெளியிட முடிவு செய்தார். சி.பி. ராமசாமி ஐயர் அவர்களைக் கொண்டு இதனை வெளியிடுவது என்று முடிவு செய்தார். அவரிடம் சென்று கேட்டவுடன் ”எனக்கு என்ன தெரியும்  பிரபந்தத்தில்? யாரையாவது தீவிர வைணவரைக் கொண்டு இதனை வெளியிடு” என்றார். ராஜம் விடுவதாக இல்லை.கடைசியாக சி.பி. அவர்கள், வந்து வெளியிடுவதாக ஒப்புக் கொண்டார். சி.பி. அவர்கள் பஞ்சகச்சம் வேட்டி கட்டி, ஒரு சட்டைஅணிந்து, மிகுந்த ஈடுபாட்டுடன் வந்து வெளியீட்டு உரையாக அற்புதமான ஒரு உரையை நிகழ்த்தினார்.. பல்கலைச் செல்வர் தெ. பொ.மீ அவர்களும், நானும், எஸ். ராஜம் அவர்களும் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டோம். அவ்வளவு அற்புதமாகச் சி.பி. அவர்கள்  தமிழில் பேசியது அதைவிடப் புதுமை.

இதன் பிறகு ராஜத்திற்கு சங்க இலக்கியங்கள். தொல்காப்பியம், கம்ப ராமாயணம், வில்லி பாரதம் ஆகிய அனைத்தையும் இதே முறையில் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பம் மிகுந்தது.. இப்பதிப்புகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.  அன்று வரை எந்த பழைய பாடலை எடுத்துப் படித்தாலும் சொற்களைப் பதம் பிரிக்காமல் சீர் ஒன்றின் அடிப்படையிலேயே அவை அச்சிடப் பெற்றிருக்கும். புதிதாகப் படிப்பவர்கள் படித்தால் ஒரு வரி கூட விளங்காது.. அந்த நிலையைப் போக்க வேண்டும் என்று நினைத்தார் ராஜம். எல்லாப் பாடல்களையும் சீர் பற்றிக் கவலைப் படாமல், தனித் தனிச் சொற்களாகப் பிரித்து, தாமே அச்சிட வேண்டுமென்று விரும்பினார்.

இந்த முறையில் முதலாயிரம் வெளிவந்தவுடன் பயங்கரமான எதிர்ப்புகள் தோன்றின. ‘தமிழின் அருமை தெரியாதவர்கள், இப்படி அக்கு வேறு ஆணி வேறாகப் பாடலைப் பிய்த்து வெளியிடுவது தமிழுக்கு செய்யும், துரோகம்’ என்று. தமிழ்ப் புலவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் பலர் ராஜத்திற்குக் கடிதம் எழுதினர். தமிழுக்குச் செய்யும் இக்கொடுமையில் தமிழ் கற்ற தெ.போ.மீ.யும் நானும் இடம் பெறுவது மேலும் கொடுமையானது என்றெல்லாம்  கடிதங்கள் வந்தன. வேறு ஒருவராக இருப்பின். ‘நமக்கு ஏன் இந்த வம்பு’ என்று சொல்லி, இந்தப் பணியையே உதறி விட்டிருப்பார். எதிர்ப்பு மிக மிக ராஜம் அவர்களின் உறுதியும் வலுப் பெற்றது. சங்க இலக்கியங்களோடு நிறுத்திக் கொள்ளலாம்  என்றிருந்த அவர்,தமிழ் இலக்கியம் முழுவதையும் இந்த முறையில் கொண்டுவர வேண்டும் என்று நினைத்து பத்து பதினைந்து புலவர்களை இதற்கென நியமித்தார், 12-ம்  நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணம் வரை இப்படிச் சொல் பிரித்து எழுதும் பணி தொடர்ந்தது. இதை விடச் சிறப்பு ஒன்று உண்டு,. சங்க இலக்கியங்களுக்கும்  இராமாயணம், பாரதம் ஆகியவற்றிற்கும் அட்டைகளில் ஓவியம் இருக்கவேண்டும் என்று நினைத்தார். தலை சிறந்த ஓவியராக விளங்கும் கோபுலு அவர்களை இதற்கென ஏற்பாடு செய்தார். புறநானூறு போன்ற தொகுப்பு நூல்களுள் ஏதாவது ஒரு சிறந்த பாடலை அடிப்படையாக வைத்து ஓவியம் வரையப் பெற்ற கோட்டு வரைபடம் என்ற முறையில் கோபுலு அவர்கள் வியக்கத் தகுந்த ஓவியங்களை வரைந்து கொடுத்தார். சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போக  சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம், திருவாசகம்  என்பவை வெளிவந்தன. அக்காலத்தில் பல இலட்ச ரூபாய்களை எவ்வித கைம்மாறும்  கருதாது செலவழித்து இந்த மாபெரும் தொண்டை செய்தவர் ராஜம் ஆவார்.

         அவர் நல்ல நேரத்தில் துவங்கியதால் போலும்  இன்று வருகிற பதிப்புகள் எல்லாம் சொல் பிரித்து அச்சிடப் பெறுகின்றன. துரதிஷ்டவசமாக அவர் காலம் சென்ற பிறகு எஞ்சியுள்ள நூல்கள்  சொல் பிரித்து எழுதப்பட்டிருப்பினும் அவற்றை வாங்கி வெளியிடுவார் இல்லாமல்  போகவே, புதுவையில் உள்ள இண்டாலஜி நிறுவனத்தார் அச்சிடாத நூல்களையெல்லாம்  எடுத்துச் சென்று விட்டனர்.

ஐம்பதுகளில் தமிழ் இலக்கியங்களை புதிய முறையில் சொல் பிரித்து அச்சிட்டு அடக்க விலைக்குத் தந்து தமிழ் மொழிக்குப் பெரும்பணி செய்த இவரை மாமனிதர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது!

தொடர்புள்ள பதிவுகள்:

மர்ரே எஸ் ராஜம்: கடுகு

மர்ரே ராஜம்: விக்கி

மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!

'கம்பராமாயண'த் தொகுதிகளுக்குக் கோபுலு வரைந்த 18 படங்களையும், அவற்றுக்குப் பொருத்தமான கம்பன் பாடல்களையும்  இந்த இழையில்  பார்க்கலாம். 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: