திங்கள், 11 ஜூன், 2012

’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1

துப்பறியும் சாம்பு -1
[ ஓவியம்: ராஜு ] 

தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறுகதைத் தொடர். 

ஆகஸ்ட், 30, 1942 -இல் “ஆனந்த விகடனில்”  அமரர் ராஜுவின்  ஓவியங்களுடன் தொடங்கிய அந்தத் தொடரைப் பற்றிய சில சுவையான தகவல்களைத் தம்பி’ ஸ்ரீநிவாசன் தருகிறார்:


சாம்புவை வைத்து முதலில் ஒன்பதே கதைகளை ‘தேவன்’ எழுதினார். பின்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் ஒன்பது கதைகளை எழுதினார். ஆனால், பொதுமக்கள் சாம்புவை அதிகமாக எதிர்பார்க்கவே திரும்பவும் இருமுறை சாம்பு கதைகளைத் தொடர்ந்தார். மொத்தம் 50 சாம்பு கதைகள் வெளிவந்துள்ளன. சாம்பு கதைகள் எழுது முன்பு கோபாலன் கவனிக்கிறார்’ என்ற ஒரு சிறு துப்பறியும் தொடரையும் எழுதினார்”

மூன்று குறிப்புகள்:

1) நூல் வடிவில் இப்போது கிடைக்கும் ‘துப்பறியும் சாம்பு’ வில் 50 கதைகள் தாம் இருந்தாலும், நூலில் அடங்காத ஒரு ‘சாம்பு’ கதையும் இருக்கிறது. ‘வாசகர் வட்டம்’ 1968-இல் வெளியிட்ட “இதோ ’தேவன்’!” என்ற தொகுப்பில் ‘துப்பறியும் சாம்பு’ என்ற தலைப்பில் இன்னொரு சுவையான கதை வெளியாகி இருக்கிறது. இந்திய சுதந்திர நாள் பற்றிய குறிப்புகள் உள்ள இந்தச் சாம்பு கதை ஏதோ ஒரு தீபாவளி மலரில்  வந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இந்தக் கதையில் சாம்பு, சி.ஐ,டி சந்துரு இருவரும் பங்கேற்கின்றனர்! அந்தக் கதை பற்றிப் பின்னர் ஒரு மடலில் பார்ப்போம்!

2) ‘கோபாலன் கவனிக்கிறார் !’ என்ற சிறு துப்பறியும் தொடரைப் பற்றி ...அதில் எவ்வளவு கதைகள் வந்தன? போன்ற --- மற்ற தகவல்கள் கிடைக்கவில்லை. அத் தொடரில் வந்த “ ரோஜா இதழ் மர்மம்” , “புது மாப்பிள்ளை மர்மம்” என்ற இரு கதைகளை மட்டும் ‘அல்லயன்ஸ்’ வெளியிட்ட ‘மனித சுபாவம்’ என்ற தொகுப்பில் பார்க்கலாம். ( இத்தொடரைப் பற்றி மேலதிக விவரங்கள் தெரிந்தவர்கள் எனக்கு எழுதலாம்.)

3) தேவன் 57-இல் மறைந்தபின் கோபுலுவின் ஓவியங்களுடன் சித்திரத் தொடர் வடிவத்தில்  58 -இல் விகடன் இதழிலும், பிறகு மீண்டும் ’விகடன் பேப்பரில்’ 97-இலும் வந்தது. 



‘சாம்பு’ வைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மிக அழகாக அண்மையில் அலசியிருக்கிறார். செப்டம்பர் 8, 2011-இல் நடந்த தேவன் நினைவுச் சொற்பொழிவில் அவர் சொன்னது ( நன்றி: இ.பா -வின் ஆங்கில உரையின் தமிழாக்கம், சாருகேசி, ‘அமுதசுரபி’, அக்டோபர் 2011 ) :


’துப்பறியும் சாம்பு’தான் குழம்பிப்போன, கவர்ச்சியற்ற, ஒரு சாதாரண சராசரி மனிதனைக் கதாநாயகனாக முதல் முதலில் அறிமுகப் படுத்திய நாவலாக இருக்கவேண்டும். சாம்பு கடைசி நிமிடத்தில் புதிரை அவிழ்த்து விடுவான். அவன் முட்டாள்தனமாக நடந்து கொள்வதெல்லாம் அவனுக்குச் சாதகமாகவே அமைந்து போய், துப்புத் துலங்கிவிடும்! ஆனால் ஏதோ சாம்புதான் வெகு சாமர்த்தியமாகத் துப்புத் துலக்கிக் கண்டு பிடித்துவிட்டது போல் அவன் புகழ் பரவி விடும்! சாம்புவின் முக்கிய அடையாளம் அவனுடைய சற்றே நீளமான மூக்கு. தலையோ சரியான வழுக்கை. அவனுக்கோ வெற்றி மீது வெற்றி வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். . . . ”

 “....‘துப்பறியும் சாம்பு’ தமிழ் நாவல்களில் ஒரு குறிப்பிடத் தகுந்த படைப்பு. அதுவரை, தமிழ் நாவல்களில் கதாநாயகர்கள் எல்லாம் அழகான, உயர் குடும்பத்து இளைஞர்களாக, மெத்தப் படித்தவர்களாக, வீர தீர சாகஸம் செய்பவர்களாகத்தான் இருந்து வந்தார்கள். இந்தப் பின்னணியில், மூக்கு நீளமான ஒரு சாதாரண வங்கி குமாஸ்தா, வாரந்தோறும் வாசகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது! முந்திரிப் பருப்பு கேக்கில் சாம்பு டயமண்ட் நெக்லேஸைக் கண்டு பிடித்த உடனேயே, தேவன் ஜாக்பாட் அடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அவருக்கு ஏற்றம் தான். “

சாம்பு பற்றி நான் ‘திண்ணை’ மின்னிதழில்  2002-இல் வெளியிட்ட ஒரு வெண்பா:

காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு
வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் -- ஆகமது
நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான்
சாகா வரம்பெற்ற சாம்பு
.

                                               ---பசுபதி ----
[ஆகம் -உடல் ]

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள் :

துப்பறியும் சாம்பு : மற்ற பதிவுகள்

துப்பறியும் சாம்பு -2

துப்பறியும் சாம்பு -3

துப்பறியும் சாம்பு -4

சாம்பு -5

சாம்பு -6

தேவன் நினைவு நாள், 2010

தேவன் நூற்றாண்டு விழா -1

தேவன் : படைப்புகள்


பி.கு.

ஆசுகவி சிவசூரியின் பின்னூட்டம்:

இதுவரையில் அறியாத சேதி கூட
   இவர்நமக்குச் சேமித்து வைத்துள் ளாரே,
புதிரவிழ்க்கும் சாம்புகதை மெல்ல மெல்ல
   பூத்துவந்த வரலாறும் இங்கே கண்டேன்!
இதழ்களிலே ஒருபக்கப் புதினம் தீட்டி
   எவ்வாறு மாலதியைத் தந்துள் ளார்பார்
அதிசயமாய் எனத்தோன்றும் வண்ணம் இங்கே
   அதன்பிறப்பைப் அழகாகப் பதிந்துள் ளாரே!

என்றைக்கோ இவரளித்த கதைகள் தம்மை
   எடுத்தின்று படித்தாலும் இன்பம் ஊட்டும்
தன்மைக்கே ஈடாகச் சொல்ல வேண்டில்
   தடுமாற்றம் நமக்கெல்லாம் சொந்தம் ஆகும்!
பின்னைவரும் சந்ததியர் படித்தால் கூட
   பெருமகிழ்வே அடைவதுவே திண்ணம் என்பேன்!
மன்னுபுகழ் மகாதேவன் சீரைச் சொல்ல
   வாய்ப்பளிக்கும் பசுபதியார் வலைப்பூ வாழ்க!


சிவசூரியநாராயணன்

3 கருத்துகள்:

Siva Suryanarayanan சொன்னது…

இதுவரையில் அறியாத சேதி கூட
இவர்நமக்குச் சேமித்து வைத்துள் ளாரே,
புதிரவிழ்க்கும் சாம்புகதை மெல்ல மெல்ல
பூத்துவந்த வரலாறும் இங்கே கண்டேன்!
இதழ்களிலே ஒருபக்கப் புதினம் தீட்டி
எவ்வாறு மாலதியைத் தந்துள் ளார்பார்
அதிசயமாய் எனத்தோன்றும் வண்ணம் இங்கே
அதன்பிறப்பைப் அழகாகப் பதிந்துள் ளாரே!

என்றைக்கோ இவரளித்த கதைகள் தம்மை
எடுத்தின்று படித்தாலும் இன்பம் ஊட்டும்
தன்மைக்கே ஈடாகச் சொல்ல வேண்டில்
தடுமாற்றம் நமக்கெல்லாம் சொந்தம் ஆகும்!
பின்னைவரும் சந்ததியர் படித்தால் கூட
பெருமகிழ்வே அடைவதுவே திண்ணம் என்பேன்!
மன்னுபுகழ் மகாதேவன் சீரைச் சொல்ல
வாய்ப்பளிக்கும் பசுபதியார் வலைப்பூ வாழ்க!

பெயரில்லா சொன்னது…

Danbury venbaa super - pasupathilingam@gmail.com

Pas S. Pasupathy சொன்னது…

Thanks. What is "Danbury "venbaa?