யோசனை கேட்க வராதீர்கள்!
ரா.கி. ரங்கராஜன்மறைந்த மாபெரும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனுக்கு ஓர் அஞ்சலியாக அவர் எழுதிய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்.
அவருடைய ‘ நான் கிருஷ்ண தேவராயன்’ ஒரு முக்கியமான வரலாற்றுப் புதினம். ( ஐ க்ளாடியஸ் (I, Claudius) என்ற ஆங்கில நாவலின் தாக்கத்தால் எழுதப்பட்ட நவீனம் ) விகடனில் தொடராக வந்தது. வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கின்றனர். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
===========
எழுத்தாளன் என்றால் சகலகலா வல்லவன், எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கிறார்கள். கல்யாண ரிசப்ஷனுக்கும் போகும்போது, யாராவது என்னிடம் வந்து பேச்சுக் கொடுப்பார்கள். உடனே ஒரு அம்மையார் குறுக்கிட்டு, ''மாமாகிட்டே பேசாதேடா சீமாச்சு! உன்னை வச்சுக் கதை எழுதிடுவார்'' என்று அவரை எச்சரிப்பார்.
உண்மையில் 'முதல் பந்தி எப்ப
போடுவாங்கன்னு தெரியலே! சாப்பிட்டுவிட்டு ரயிலைப் பிடிக்கணும்' என்ற தன்னுடைய
அப்போதைய கவலையைத்தான் அந்த சீமாச்சு என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அதை வைத்து, அவரை வைத்து எந்தக்
கதையையும் யாராலும் எழுத முடியாது. இருந்தாலும் அப்படியொரு மந்திர சக்தி எனக்கு
இருப்பதாகப் பல பேர் கருதுகிறார்கள்.
''தன்னுடைய மூளையை
வைத்துப் பிழைக்கிறவன் புத்திசாலி. இன்னொருவனின் மூளையையும் சேர்த்துக் கொண்டு
பிழைப்பவன் மகா புத்திசாலி''
என்று ஒரு அறிஞர் சொன்னார். நான் அந்த ரகம். விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு
வைத்துக்கொண்டு கதை அளப்பேன். அந்தக் கதையோ, நாவலோ புத்தகமாக வரும்போது யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதை என்
முன்னுரையில் ஒப்புக்கொண்டு நன்றி சொல்வேன். ஆனால் புத்தகத்தை வாங்கிப்
படிப்பவர்கள் கம்மி. பத்திரிகையில் வருவதைப் படிப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு
என் குட்டு தெரியாது. 'அடேங்கம்மா! எவ்வளவு விஷயம்
தெரிந்து வைத்திருக்கிறார்!' என்று தப்பாக பிரமிப்பார்கள்.
நான் 'கிருஷ்ண தேவராயன்' என்ற சரித்திரத் தொடர்
கதையை ஆனந்தவிகடனில் எழுதி வந்தபோது பல சமயங்களில் பல அறிஞர்களிடம் பல விஷயங்களைக்
கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நாட்டியச் சிற்பத்தைப் பற்றி ஒரு ஆஸ்தானச்
சிற்பிக்கும், ஆஸ்தான நடன
ஆசிரியருக்கும் அபிப்பிராய பேதம் வருவதாக அந்தக் கதையில் ஒரு நிகழ்ச்சி வந்தது.
பொதுவான அபிப்பிராய பேதம் என்று சொல்லாமல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றியது
என்று சொன்னால் சுவையும்,
அழகும் ஏற்படும் என்று தோன்றியது. ஸ்ரீநிதி ரங்கராஜன், பத்மா சுப்ரமணியம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த விஷயத்தைத்
தொடர்கதையில் எழுதினேன். உடனே சிலர் தங்கள் குழந்தையை எந்த நடனப் பள்ளியில்
சேர்த்தால் நன்றாய் சொல்லிக் கொடுப்பார்கள் என்று என்னைக் கேட்டார்கள்.
ஒரு இத்தாலிய இளைஞன் விஜயநகரத்துக்கு வந்து சித்த வைத்தியத்தில் தேர்ச்சி
பெறுகிறார்ன என்று அந்தத் தொடர் கதையில் வருகிறது. அவனுடைய மூலிகை ஆராய்ச்சி
பற்றிப் பல இடங்களில் எழுதினேன். உடனே இந்த மூலிகை நல்லதா, அந்தக் கீரையைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் மருத்துவம்
சம்பந்தப்பட்ட என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர் என் உற்ற நண்பர் டாக்டர்
ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற ரகசியம் யாருக்கும் தெரியாது. குன்றத்தூரில் 46 வருட காலமாக சித்த
வைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம்
இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாகப் பிராக்டிஸ் செய்து, மக்களின் அபிமானத்தைப் பெற்ற டாக்டராக விளங்குபவர் இவர். மத்திய அரசின்
ஆயுர்வேத சித்த வைத்திய ஆராய்ச்சிக் கவுன்ஸிலில் பிரதான பொறுப்பில் இருப்பவர்.
மயக்க மருந்து கொடுக்காமல் ஒரு பெரிய ரண சிகிச்சை நடப்பதாக என் 'படகு வீடு' கதையில் கிளைமாக்ஸ்
கட்டம் வந்தபோது, அது எப்படிச்
சாத்தியம் என்பதை விளக்கிச் சொல்லித் தந்தார். அன்று முதல் இன்று வரை நாவல், சிறுகதை, கட்டுரை முதலிய
பலவற்றிலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டறிந்து எழுதியிருக்கிறேன். இருப்பினும்
வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று என்னைப் போய் எல்லோரும்
நம்புகிறார்கள் !
கிருஷ்ண தேவராயன் கதையில் ஒரு வழிப்பறிக் கூட்டத்தை மடக்குவதற்காகக் கிருஷ்ண
தேவராயர் புறப்படுகிறார் என்ற ஒரு சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. சாதாரணப் பிரஜை
போல மாறுவேடம் அணிந்து ஒரு யாத்திரிகர் கோஷ்டியில் அவர் சேர்ந்துகொள்கிறார். அதில்
வழிப்பறிக் கூட்டத்தின் தலைவனும் இருக்கிறான். எல்லா யாத்திரிகர்களும் ஒரு
சத்திரத்தில் இரவு தங்குகிறார்கள். நள்ளிரவில் அந்த வழிப்பறிக்காரன் 'விடியப் போகிறது!
எல்லோரும் எழுந்திருங்கள்!'
என்று எல்லோரையும் எழுப்புகிறான். அவனது வழிப்பறித் தோழர்கள் யாத்திரிகர்களைத்
தாக்கிக் கொள்ளையடிப்பதற்காகச் சிறிது தூரத்தில் காத்திருக்கிறார்கள். கிருஷ்ண
தேவராயர் சத்திரத்திற்கு வெளியே வந்து வானத்தில் எந்த நட்சத்திரம் எங்கே
இருக்கிறது என்பதைப் பார்க்கிறார். பொழுது விடிவதற்கு இன்னும் வெகு நேரம்
இருக்கிறது என்பதை அறிகிறார். வழிப்பறித் தலைவனின் தந்திரத்தை அறிந்து, அவனையும் அவன்
கூட்டத்தையும் சாமர்த்தியமாகப் பிடித்துவிடுகிறார்.
எந்தக் குறிப்பிட்ட மாதத்தில் இரவின் எந்த வேளையில் எந்த நட்சத்திரம்
ஆகாயத்தில் எந்த இடத்தில் காணப்படும் என் விவரத்தை எனக்குச் சொன்னவர் பழம்பெரும்
எழுத்தாளரான மகரம் (கே. ஆர். கல்யாணராமன்). நட்சத்திரங்களின் நடமாட்டங்களைப்
பார்ப்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவரைக் கேட்டு அதை எழுதினேன்.
ஆனந்தவிகடனில் மேற்படி அத்தியாயம் வந்த சில நாட்களுக்கெல்லாம்
டெல்லியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் டாக்டர் வி.
கிருஷ்ணமூர்த்தி என்ற விஞ்ஞானி. கே. கே. பிர்லா அகாடமியின் டைரக்டர். பிலானியில் கணிதப் பேராசிரியர்.
இரவு வேளைககளில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் ஒரு
புத்தகம் எழுதி வருவதாகவும், அதற்கு நான் தகவல்கள் தந்து உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார் அந்தக்
கடிதத்தில்.
இது எப்படி இருக்கு!
மகரத்தின் விலாசத்தைத் தந்து அவரிடம் தொடர்பு கொள்ளுமாறு பதில் எழுதிப்
போட்டேன். மகரமும் அவருக்கு உதவி செய்தார். Night Sky என்ற அவருடைய புத்தகம்
வெளியே வந்ததும் எனக்கும் மகரத்துக்கும் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்பினார்.
முன்னுரையில் எங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
எனவே, இதன் மூலம்
சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்: என் எழுத்தைப்
படிப்பவர்கள் யாரும் சிற்சில துறைகளில் நான் அத்தாரிட்டி என்று எடுத்துக்கொள்ள
வேண்டாம். யோசனை கேட்க வேண்டாம்.
[ நன்றி: www.appusami.com ]
தொடர்புள்ள சில பதிவுகள்:
’ஹிந்து’க் கட்டுரை -1 (ஆங்கிலம்)
ரா.கி.ரங்கராஜன்
தொடர்புள்ள சில பதிவுகள்:
’ஹிந்து’க் கட்டுரை -1 (ஆங்கிலம்)
ரா.கி.ரங்கராஜன்
8 கருத்துகள்:
Interesting article.
நல்ல நினைவுகூறல்...
ராகி'யும்,ஜரா'வும் குமுதத்தின் தூண்களாக இருந்தநார்கள் என்று நினைக்கிறேன்...
நன்றி, அறிவன்; நாடோடிப் பையன்,
ஆம், ரா.கி.ர, ஜ.ரா.சு, புனிதன் மூவரும் குமுதத்தின் தூண்கள்.மூவரும் தங்கள் ஆசிரியர் எஸ்.ஏ.பி -ஐப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளனர்.
மிகச்சிறந்த முறையில் ராகி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள்! இணைப்பைக் கொடுத்ததற்கு நன்றி!
நன்றி, ரஞ்சனி அவர்களே.
நேரம் கிட்டும் போது மேலும் சில கட்டுரைகளை இங்கிடுவேன். டொராண்டோவில் நடந்த ஒரு தமிழரங்கத்தில் அவரைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறோம்.
ஆஹா - எழுத்தாளரின் நகைச்சுவை, ஒளிவு மறைவு இல்லாத விவரணம் சுவையோ சுவை - மிக மிக நன்றி பசுபதி ஐயா.
R.K.Rengarajan is one of my favourite writers. Thanks for sharing one of his articles.
Thanks for sharing this very interesting article on RKK. Ardent fans of Tamil lovers owe you a debt of gratitude. God bless you, Dr. Pasupathy.
கருத்துரையிடுக