வெள்ளி, 15 ஜூலை, 2016

மறைமலை அடிகள்.

மறைமலை அடிகள். 
வெங்கடேசன்

ஜூலை 15. மறைமலை அடிகளின் பிறந்த நாள்.  


அவரைப் பற்றித் தினமணியில் 2014-இல் வந்த ஒரு கட்டுரை இதோ! 
==============
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச வேண்டும் என்று 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியவரும், குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவரும். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்தவர். அவரை தமிழ் உலகம் 'தமிழ்க்கடல்' என்றும், 'தனித்தமிழின் தந்தை' என்று தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ற அந்த வரலாற்று மனிதர்தான் மறைமலை அடிகள். 
பிறப்பு: 1876 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும், அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற விரும்பி 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் - மறை, அசலம் - மலை, சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள் என்று மாற்றிக் கொண்டார்.
கல்வி: வெஸ்லியன் மிஷன் என்ற கிறிஸ்துவப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார் மறைமலை அடிகள். அங்கு ஆங்கிலம் முதல் மொழியாக இருந்ததால் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். வே. நாரயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். அதோடு நின்று விடாமல் சமஸ்கிருத மொழியையும் நன்கு கற்றறிந்தார். எனவே அவருக்கு மூன்று மொழிகளில் புலமை இருந்தது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தணியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினொன் கீழ்கணக்கு போன்ற சிரமமான நூல்களையும் தெளிவாக கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையானார் மறைமலை அடிகள்.
ஆசிரியர் பணி: நாகை மீனலோசனி என்ற செய்தித்தாளுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டார். சைவ சித்தாந்தத்தில் பெயர் பெற்ற சோம சுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்த பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார். அவற்றைப் படித்து ரசித்த நாயக்கருக்கு அவருடைய எழுத்தின் மீது ஈடுபாடு ஏற்படவே சித்தாந்த தீபிகை என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பணியில் மறைமலை அடிகளை அமர்த்தினார். அந்தப் பணியை விருப்பமுடன் செய்த அதே வேளையில் தமிழாசிரியராக வர வேண்டும் என்ற தமது விருப்பத்துக்காகவும் உழைத்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணித் தேர்வுக்கு தம்மை தயார் செய்து கொண்டார். அந்தப் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மறைமலை அடிகளின் புலமையை சோதித்தவர் அப்போது புகழ் பெற்றிருந்த பரிதிமாற் கலைஞர் என்ற தமிழறிஞர். மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். வீ. கோ. சூரியநாராயண சாஸ்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். காலப்போக்கில் தனக்கு சோறு போட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்து தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.
1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றிய பின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912-ல் "சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் பொதுநிலைக்கழகம் என பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.
முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையான தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூய தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தலம் எனும் காதல் காவியத்தை தமிழில் மொழி பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆனால் தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார். 
தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது.
மறைவு: தம் வாழ்நாளில் அவரது உள்ளம் இரு விசயங்களை காதலித்தது. அதில் ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமது 75-வது வயதில் காலமானார்.
இவர் காலத்தில் பல புகழ்பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணியம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரை வேலர், திரு.வி.கல்யாணசுந்தரனார், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி.கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச.வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியருமான நாராயணசாமி, "சைவ சித்தாந்த சண்டமாருதம்" என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர் என்று பலர் வாழ்ந்த காலம்.
'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக வினாக்களை வீசலாம். ஆனால் ஒரு மொழியின் மீது காதல் கொண்டவர்களால்தான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால்தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தார் மறைமலை அடிகள். அவரைப்போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு தமிழ் உலகம் நன்றி கூறும் அதே வேளையில் அவரிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதை பற்றியும் சிந்தித்து சிறக்க வேண்டும்.
தான் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து காட்டியதால் தமிழ் வரலாற்றில் தனி இடம் பெற்றும், 'தனித்தமிழ்' என்ற வானமும் வசப்பட்டது. அவரிடமிருந்த துணிவும், வைராக்கியமும், சிந்தனைத் தெளிவும், கொள்கைகளுடன் வாழ்ந்து காட்டும் திடமும் நமக்கும் ஏற்பட்டால் நிச்சயம் நாம் விரும்பும் வானமும் வசப்படும்.
நூல்கள்:
* முதற்குறள் வாத நிராகரணம் (1898)
* முனிமொழிப்ரகாசிகை (1899)
* ஞானசாகரம் மாதிகை (1902)
* முல்லைப்பாட்டு - ஆராய்ச்சியுரை (1903)
* பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் (1906)
* பட்டினப்பாலை - ஆராய்ச்சியுரை (1906)
* சாகுந்தல நாடகம் (சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
* மரணத்தின் பின் மனிதர் நிலை (1911)
* சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
* யோக நித்திரை, அறிதுயில் (1922)
* வேளாளர் நாகரிகம் (1923)
* மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
* சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
* தொலைவில் உணர்தல் (1935)
* தமிழ் நாட்டவரும், மேல் நாட்டவரும் (1936)
* முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
* இந்தி பொது மொழியா? (1937)
* தமிழர் மதம் (1941)
* திருக்குறள் ஆராய்ச்சி (1951)
* பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
* சிவஞான போத ஆராய்ச்சி (1958)
* Oriental Mystic Myna Bimonthly (1908 - 1909)
* Ocean of wisdom, Bimonthly (1935)
* Tamilian and Aryan form of Marriage (1936)
* Ancient and Modern Tamil Poets (1937)
* Can Hindi be a lingua Franca of India? (1969)
[ நன்றி : தினமணி ] 

தொடர்புள்ள பதிவு:

2 கருத்துகள்:

ananth சொன்னது…

நூல் பட்டியலில் விட்டுப்போனது: ‘மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்’ (1930)

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அனந்த்.
நான் தொடர்புள்ள பதிவாய்க் கொடுத்த விக்கிப்பீடியாக் கட்டுரையில் அவருடைய 54 நூல்களின் பட்டியல் உள்ளது . ( தினமணிக் கட்டுரையில் ஒரு சில நூல்களே குறிப்பிடப் பட்டுள்ளன.)
https://ta.wikipedia.org/s/3tg