ஞாயிறு, 10 ஜூலை, 2016

சங்கீத சங்கதிகள் -79

எம்.எஸ். சிறப்பிதழிலிருந்து . . .

ஜூலை 10, 1940. எம் .எஸ் - சதாசிவம் திருமணம் நடந்த நாள்.

‘ஸங்கீத ஸரிகமபதநி’ என்ற இதழ் பிப்ரவரி 2005-இல் ஒரு எம்.எஸ். சிறப்பிதழ் வெளியிட்டது. அதிலிருந்து மூன்று முத்துகள் உங்களுக்காக!


முதலில், எம்.எஸ். ஸின் ஒரு கடிதம்:



இரண்டாவதாக, சுப்புடு அவர்களின் ஒரு கட்டுரை:

இறவா வரம் பெற்ற இசையரசி !

சுப்புடு




பல ஆண்டுகளுக்கு முன்பு வானொலி நிலையத்தில் என் பெயர் கொண்ட இஞ்சினியர் ஒருவர் இயந்திரங்களின் உதவியுடன் ஒர் ஆராய்ச்சி நடத்தினர்.

இம்மியளவும் ஆதார சுருதியினின்றும் பிறழாத சாரீரங்களில் எம்.எஸ்.ஸின் சாரீரம் தலைசிறந்தது என்று நிரூபித்தனர்.

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும்.

கச்சேரியின் துவக்கத்திலிருந்து மங்களம் வரை துளிகூட - ஒரு விநாடி கூட - சுருதியை விட்டு விலகாமல் சாரீரம் நிலைத்து நிற்பது துர்லபம். தேகத்திலும் சாரீரத்திலும் ஏற்படும் உஷ்ணத்தினால் சாரீரம் சுருதியைவிட, ஒரளவு மேலே ஒலிக்கும். வேறு சிலருக்குப் பாடப்பாடக் களைப்புத் தட்டி சுருதியை விட்டு விலகும்.

எம்.எஸ்.ஸ்"க்கு இந்தக் குறை சற்று கூடக் கிடையாது! இரண்டு தம்புராக்களை "தைரியமாய் வைத்துக் கொண்டு அப்படியே ஆதார சுருதியில் மிதக்கக் கூடிய ஆற்றல் அன்னாருக்கு உண்டு.

சங்கீதத்திற்கே அடிப்படையான சுருதி லாவகமாக அமைந்துவிட்ட பின்பு அவருடைய சங்கீத இளமை குன்றாது அன்று முதல் இன்று வரை சோபையுடன் விளங்குவதில் ஆச்சரியமில்லை அல்லவா?

இன்று ஸ்வர-தாள- சாகித்யச் சிதைவுகள் செய்யாமல் பத்தரை மாற்றாக விளங்குபவர் எம்.எஸ். கூடவே பக்தியையும் கலந்து, குழைத்து அளிக்கிறார்.

அவர் வாயைப் பாடுவதற்குத்தான் திறப்பார் என்று கூறலாம். 'வித்யாதி வினய என்கிறது வேதம். சான்று எம்.எஸ்.

ஒரு சத்தியமான சங்கீத வித்வானுக்கு அடக்கம்தான் அணிகலன். அடக்கத்தின் உறைவிடம் எம்.எஸ். துடுக்காகப் பேசுவதோ, அகம்பாவத்துடன் நடந்துகொள்வதோ அவர் அறியாதவை. நல்ல சங்கீதம் எங்கிருந்தாலும், அதைப் பிரயோகிப்பவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரியாதை செய்யத் தவறமாட்டார்.

ஒரு சிறிய இளம்பாடகி நேர்த்தியாகப் பாடினால் கூட, வாயாரப் புகழும் பெருந்தன்மை அவருக்குண்டு.

அவருடைய பாடாந்திரம் ஏட்டிலடங்காது. அவ்வளவும் நெட்டுரு. ஆங்கிலத்தில் போட்டோ கிராஃபிக் மைண்ட்' என்பார்கள் வடமொழியில் 'ஏகச் சந்த க்ராகி. ஒரே ஒரு முறை கேட்டவுடன் அதைத் திருப்பி மெருகுடன் வழங்கக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

இசையைத் தவிர, அவருக்கு வேறு ஒன்றுமே தெரியாது. எந்த இடத்தில் கந்நேரி என்பது கூட அவர் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. அதெல்லாம் திரு.சதாசிவத்தின் இலாக்கா.

சீஸனில் எத்தனை வித்வான்கள் பாடினார்கள், என்ன என்ன ராகங்களைக் 'கையாண்டார்கள் (அர்த்தத்தில்), பல்லவிக்கு எடுத்துக் கொண்ட ராகங்கள் எவை எவை என்றெல்லாம் கேட்டறிந்து, அலசி, எம்.எஸ்.ஸின் கச்சேரிக்கு சதாசிவம் அவர்கள்தான் நிரல் தயாரிப்பார். ரசிகர்களின் ரஸனைக்கு அவர் எவ்வளவு மதிப்பு கொடுக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று, எடுத்துகாட்டு.

எவன் ஒருவனுக்கு இறைவன் பெயரைச் சொன்ன உடனேயே ரோமாஞ்சலியோ அல்லது கண்கள் பனிப்பதோ ஏற்படுகின்றனவோ, அவனுக்கு மறுபிறவி கிடையாது' என்கிறது மறை. இந்த நோக்கில் எம்.எஸ்.ஸு-க்கு மறுபிறவி கிடையாது!

இசையினால் உலகம் உய்ய வேண்டும் என்பது நியதி. அவருடைய இசை பல தர்ம ஸ்தாபனங்களுக்குப் பல லட்சங்கள் திரட்டித் தந்திருக்கிறது. இந்தக் கீர்த்தியும் பெருமையும் வேறு எந்த வித்வானுக்கும் கிட்டியதில்லை என்றால் அது மிகையாகாது.

சமீப காலம் வரை கர்நாடக இசை அயல் நாட்டாருக்குப் புரியாத புதிராக இருந்து வந்திக்கிறது. அதுவும் வாய்ப்பாட்டு கேலிக்கிடமாகவே இருந்து வந்திருக்கிறது.

அந்த நிலையை மாற்றியவர் எம்.எஸ். கர்நாடக இசை - அதிலும் வாய்ப்பாட்டு - சர்வதேச அரங்குகளில் அங்கீகாரம் பெற்றது எம்.எஸ்.ஸினால்தான்!

மேலை நாடுகளில் இந்திய சங்கீதம்' என்றால் இந்துஸ்தானி சங்கீதம்' என்றுான் பொருள். கர்நாடிக் சங்கீதம் அந்த அளவுக்குக் கொடியேறவில்லை. இத்தனைக்கும் நமது சங்கீதத்தின் விரிவும் ஆழமும் வடக்கத்திய சங்கீதத்தில் கிடையா.

இந்துஸ்தானி சங்கீதத்தில் வாத்திய சங்கீதம்தான் புகழ் பெற்றிருக்கிறது. வாய்ப்பாட்டுக்கு மவுசில்லை.

இந்தச் சூழ்நிலையில் எம்.எஸ். தான் முதன் முதலாக ஐ.நா. சபையிலும், பின்னர் அமெரிக்காவின் கோடிக்குக் கோடி பாடி, கர்நாடக சங்கீதத்தின் புகழ்க் கொடியை வானளாவப் பறக்கவிட்டு வந்தார்.

நடுவிலே ஒரு மேற்கத்திய மெட்டு வேறே!

ராஜாஜி ஒரு வசனம் எழுத, வானொலியைச் சோந்த ஹாண்டல் மானுவெல், மேற்கத்திய சங்கீதத்தில் மெட்டமைக்க - எல்லாம் சரி - பாட வேண்டிய நிர்பந்தம் எம்.எஸ். ஸு -க்கு அல்லவா ஏற்பட்டது!

வெகு கவலையளிக்கும் சோதனை இது. மேற்கத்திய சங்கீதத்தின் போக்கே வேறு. ஆதார சுருதி கிடையாது. ஸ்தாயிக்கு ஸ்தாயி தாவும் தெம்பு வேண்டும். பல்லவி, அனுபல்லவி என்ற கணக்கு வரை கிடையாது. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடியும்.

இதைப் பரம சிரத்தையுடன் கற்றுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஐ. நா. சபையில் பாடி, இந்த விஷப்பரீட்சையில் தேறியது இவரது அபாரமான திறமைக்கு ஒர் எடுத்துக்காட்டு.

இதே மாதிரி வங்காளிப் பாட்டுகள் கற்றுக் கொள்ளும்போது இவர் பல அல்லல்களுக்கு உள்ளாகியுள்ளார். அந்தகார'வை 'ஒந்தகார என்றும், விரஹ' என்பதை 'பிரோஹொ' என்றும், உச்சரிக்க, வாயை கிழக்கு மேற்காக அசை போட்டு, நுனி நாக்கு அண்ணாவியைத் தொட்டு, பரம வேதனைப்பட்டால்தான் வங்காளம் வெளியே வரும். துளி உச்சரிப்புப் பிசகினால்கூட வங்காளம் வேதாளமாகி விடும்!

பலதரப்பட்ட ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு எம்.எஸ். எடுத்துக் கொள்ளும் சிரமத்தைக் குறிப்பிடவே இவற்றைக் கூறினேன்.

அவர் வாழ்க்கைத் தொடருக்கு ஒரு முன்னோடி எழுத என்னைப் பணித்ததை என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பேறாகக் கருதுகிறேன்.

இந்த முன்னுரை சூரியனுக்குக் கற்பூர ஆரத்தி எடுப்பதற்கு ஒப்பானது என்னைக் கேட்டால் இதற்குத் தேவையே இல்லை என்பேன். இதை ரசிகன் என்கிற முறையிலேயே நான் வடிக்க முயன்றிருக்கிறேன்.

எம்.எஸ் இசையில் விமரிசகனுக்கு இடமில்லை!

==============

கடைசியாக, “அரசி “ ( ராஜி கிருஷ்ணன்) அவர்களின் ஒரு பாடல்:



Radha Viswanathan and S.Aishwarya - gAnak kuyil - Raga valachi - Composer - Arasi

[ நன்றி : ஸங்கீத ஸரிகமபதநி ]

தொடர்புள்ள பதிவுகள்:





கருத்துகள் இல்லை: