வியாழன், 14 ஜூலை, 2016

லா.ச.ராமாமிருதம் -11: சிந்தா நதி - 11

7. அங்குல்ய ப்ரதானம் 
லா.ச.ரா

இந்த சமயம் உலகமே என் உள்ளங்கையில் லேகிய உருண்டை.
அம்மாவின் ரக்ஷைக்கு சாக்ஷி வேற வேணுமா?
உன் ஆவாஹணத்துக்கு ஏற்றபடி உன் அபிமானம்.
அபிமானத்திற்கேற்றபடி அருள். “  - லா.ச.ரா. 




மோதிரத்தைக் காணோம். எப்படி? இரவு, படுக்கு முன், சில சமயங்களில் கழற்றி, தலையணை உறையுள் போட்டுவிடுவேன். மறுநாள், எழுந்து, தலையணையை உதறினதும், மோதிரம் தரையில் க்ளிங்' என்று விழுகையில், நினைவில் ஏதேதோ எனக்கே சொந்தம் எதிரொலிகள் எழும்.

சங்கராந்தியுமதுவுமாய் மோதிரத்தைக் காணோம். ஆனால் தாமதமாகத்தான் ஞாபகம் வந்தது. ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கையில், விரலின் வெறிச்சைப் பார்த்ததும், தன் அறைக்குப் போய் சுருட்டின படுக்கையை விரித்து, தலையணையை உதறினால்-'ப்ளாங்கி.'

உடல் வெலவெலத்து அங்கேயே உட்கார்ந்துவிட்டது. எப்படி, என்ன, ஏது ஆகியிருக்கும்?

வெகு நாளாகவே என் அறை, படுக்கை, சாப்பாடு முறை, வேளை கூடத் தனி. இளவட்டத்தின் இரைச்சல்- பேச்சுத் தளம் ஒவ்வவில்லை. ஈடு கொடுக்க முடியவில்லை. என் அறைதான் எனக்கு அடைக்கலம். பிறர் நடமாட்டத்துக்கு அதிகம் ஏதுவில்லை. என் புத்தகங்களை யார் எடுத்துப் படிக்கப் போகிறார்கள்?

" 'The power of Silence'- தலைப்பைப் பார்த்தாலே தொடணும் போல இருக்கா பார்! ஓஹோ, அதனால் தான் ஐயா கொஞ்ச நாளா 'உம்' மா?"

ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு வேலைக்காரி பெருக்க வருவாள். அந்தச் சமயத்துக்கு என் புத்தகங்களை என்னைச் சுற்றிப் பரப்பிக் கொண்டிருந்தேனானால், கையை ஆட்டிவிடுவேன். அவளுக்கு வலிக்கிறதா?

ஆனால் எப்பவுமே, எங்கேயுமே, இப்படித்தான் என்று நினைக்கிறேன். ஒரு பண்டம் காணாமற் போனால், சந்தேகத்துக்கு முதல் காஷுவல்டி வேலைக்காரிதான்.

இவள் வந்து இன்னும் வாரம் ஆகவில்லை. கல்யாணமாகி ஒரு வருடம் ஆகவில்லை. மாமியார் வீட்டோடு சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டார்களாம். புருசன் குடிக்கிறானாம், அடிக்கிறானாம்.

பார்க்க நல்ல மாதிரியாகத்தான் தோன்றுகிறாள். ஆனால் புதுக்கை, கை சுத்தம் பற்றி என்ன கண்டோம் ?

சரிதான், என் தலையணையிலிருந்து அவள் எப்படி எடுத்திருக்க முடியும் ? சாத்தியத்துக்கும் பகுத்தறிவு நியாயத்துக்கும் சமயத்தில் புத்தி அவிந்துவிடுகிறதே! அவள் இன்னும் பெருக்க வரவில்லை.

வென்னீர் அடுப்படியில் உட்கார்ந்து, கட்டையை உள்ளே தள்ளும் பாவனையில் என்னிடமிருந்தே ஒளிந்து கொள்கிறேன்.




"அப்பா ஏன்டா ஒரு மாதிரியா இருக்கா?"

"யார் கண்டது: The Power of Silence."

"என்ன சொல்றே?"

"சொன்னால் உனக்கும் புரியாது. எனக்கும் புரியாது."

அத்தனையும் கிசுகிசு. ஆனால் என் செவி படணும். நான் சூளையில் வெந்து கொண்டிருக்கிறேன்.

கனுவன்று கன்னியம்மா நோட்டீஸ் கொடுத்து விட்டாள். மாமியாரும் புருசனும் கூட்டிப் போக நேரே வந்திருக்காங்களாம். "குடிகாரனோ, கொலைகாரனோ, என் இடம் அங்கேதானேம்மா! தை பிறந்திருக்குது. எனக்கு வழி விடுது-"

ஓஹோ, அப்படியா? பலே கைக்காரிதான். காரியம் முடிந்ததும், Knack-ஆ கழன்றுகொள்கிறாளா? ஆனால் ஜாடையாகக்கூடக் கேட்க முடியுமோ? புருஷனை அவள் அழைத்து வந்து விட்டால், அவ்வளவுதான், என்னை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி விடுவானே! கேட்க வேண்டிய சமயத்தைக் கோட்டை விட்டாச்சு. இனி அவ்வளவுதான். இனி என்ன ?

* * *

வீட்டுக்குத் தென்புற முன்வேலியை ஒட்டிப் புல்தரையில் உட்கார்ந்திருக்கிறேன்.


-ஒரு thesis டைப் அடித்துக் கொடுத்ததற்குக் கிடைத்த ஊதியத்தை, அம்மா சொற்படி, (உருப்படியா பண்ணிக்கோ, குடும்பம்தான் எப்பவுமே இருக்கு, எத்தனை வந்தாலும் போறாது!) அப்படியே பண்ணி, அம்மா கையில் கொடுத்து, வாங்கி, விரலிலேறி ஆச்சு இன்று இருபத்து ஏழு வருஷங்களுக்கு மேல். அம்மா காலமும் ஆயாச்சு. மோதிரமும் போயாச்சு.

இனி என்ன !

கரணையா ஒரு பவுன். ஆனால் அதன் மதிப்பு அதன் தங்கத்தில் அல்ல.

வானத்தில் அங்குமிங்குமா, ஒண்ணும் இரண்டுமாகத் தெளித்தாற்போல் சுடர்கள் ஏற்றிக் கொள்கின்றன. மோதிரத்தைத் தேடவா? அல்ல, என் நட்சத்திரத்தின் கண்ணீர்த் துளிகளா?

* * *

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாய்- 'உங்கள் மோதிரம் எங்கே?"

காத்திருந்த கேள்விதான். ஆனாலும் குப்பென்று வியர்வை.

"இதோ பார்……." ஏதோ ஆரம்பித்தேன்.

என் கையைப் பிடித்து இழுத்து, மோதிர விரலில் அவள் செருகியதுதான் தாமதம்-

என்னுள் ஒரு பெரும் சக்தி அலை எழும்பியதை

அனுபவத்துக்குத்தான் அறிய முடியும். கிணறு பொங்கின மாதிரி.

இந்த சமயம் உலகமே என் உள்ளங்கையில் ஒரு லேகிய உருண்டை.

அம்மாவின் ரக்ஷைக்கு சாஷி வேற வேணுமா?

உன் ஆவாஹனத்துக்கு ஏற்றபடி உன் அபிமானம். அபிமானத்துக்கேற்றபடி அருள்.

"என்ன வேலைக்காரியோ, என்ன பெருக்கறாளோ? பத்து நாள் முத்து மழை பேஞ்சு, ஒரு பழம் புடவையும் புது ரவிக்கையும் பிடுங்கிண்டு போனதோடு சரி. இன்னிக்கு உங்கள் புஸ்தக ஷெல்படியில் வாருகலைக் கொடுத்துப் பெருக்கறேன். கலம் குப்பையோடு இதுவும்-எல்லாம் நான் பார்த்தால்தான் உண்டு. நான் செஞ்சால் தான் உண்டு."

அரற்றுவதோடு சரி. எலியுடன் பூனை விளையாட்டின் நுண்ணிய கொடூரம் அறியாள். வெகுளி.

படுக்கையைச் சுருட்டி வைக்கையில், கண்ணுக்குத் தெரியாமல், காதுக்கும் கேட்காமல் எப்படியோ நழுவி விழுந்து உருண்டோடி, ஒளிந்துகொண்டு, எனக்கு 'ஜூட்' காட்டி, என்னை அம்பேல் ஆக்கிவிட்டது.

கன்னியம்மா, உன் ஊழல் காரியத்துக்கு நன்றி.

என் ஸகியே, உன் புலம்பலுக்கு நன்றி.

பொங்கலோ பொங்கல்!

சிந்தா நதியில் ஒரு சுழி.


* * *


[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்,  ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்: 

கருத்துகள் இல்லை: