சனி, 16 ஜூலை, 2016

டி.கே.பட்டம்மாள் - 7

பட்டம்மாள் என்கிற பாட்டம்மாள்!
நெல்லை பாரதி
ஜூலை 16. டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். 



தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் கிராமத்தில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய அப்பா கிருஷ்ணசுவாமிக்கு மகளை சங்கீதத்துறையில் பெரிய இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அதற்கேற்றபடி பட்டம்மாளுக்கும் சின்ன வயதிலேயே திறமை பளிச்சிட்டது. உறவினர் இல்ல விழாக்களில் பலகுரலில் பேசி, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். அப்பாவிடம் பெற்ற சங்கீதப் பயிற்சியால் நான்கு வயதிலேயே சுலோகங்களைப் பாடி, பாராட்டுகளை அள்ளினார். பள்ளிக்கூடத்தில் நடந்த இசை நாடகத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது. ஹெச்.எம்.வி கிராமபோனில் முதல்முறையாகப் பாடியபோது அவருக்கு பன்னிரண்டு வயது. மேடைக்கச்சேரி ஆரம்பிக்கும்போது பதினான்கு வயது.
 



காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்துக்கு மகாத்மா காந்தி வந்திருந்தபோது, வீர சுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ…’ என்ற பாரதி பாடலைப்பாடி, பார்வையாளர்களின் கைதட்டல்களைக் குவித்தார். கே.சுப்ரமணியம் இயக்கத்தில் தியாக பூமிபடம் உருவானபோது பாபநாசம் சிவனும் அவரது சகோதரர் ராஜகோபால ஐயரும் பாடல்களை எழுதினார்கள். பாபநாசம் சிவன் மற்றும் மோதிபாபு இசையில் தேச சேவை செய்ய வாரீர்…’, ‘பந்தம் அகன்று நம் திருநாடு உய்த்திட…’ என இரண்டு பாடல்களைப் பாடி பாட்டுச்சாலைப் பயணத்தைத் துவக்கினார் பட்டம்மாள்.


திருநெல்வேலியில் ஒரு கச்சேரி. அதில் பாரதியார் பாடலைப் பாடிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்மணி அழுதபடி இருக்க, கச்சேரி முடிந்ததும், அவர் யார் என்று விசாரித்ததும், பாரதியாரின் மனைவி செல்லம்மா என்று தெரிய வந்திருக்கிறது. பாட்டைப் புரிந்துகொண்டு உணர்ச்சியோடு பாடினீர்கள். இதை கேட்க அவர் இல்லையேஎன்று நெகிழ்ந்திருக்கிறார் செல்லம்மா. 1947 ஆம் ஆண்டில் பொங்கல் திருநாளில் வெளிவந்தது ஏவி.எம்மின் நாம் இருவர்’. அந்தப்படத்துக்கு சுதர்சனம் இசையமைத்திருந்தார். ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே…’ என்ற பாரதியார் பாடலுக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். பட்டம்மாள் குரலில் ஒலித்த அந்தப்பாடல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. அதே படத்தில் வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே…’ என்ற பாடலைப் பாடி வாழ்த்துகளையும் புகழையும் வாரினார்.

1947
ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு. நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க இருப்பதை எண்ணி மக்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த நேரம். வானொலியில் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே…’ பாடலை நேரலையில் பாடினார் பட்டம்மாள். கேட்டவரெல்லாம் உணர்ச்சிப்பெருக்கால் ஆனந்தக்கண்ணீர் விட்டார்கள். வானொலி நிர்வாகம் அவருக்கு ஒரு காசோலையை நீட்டியது. நாட்டுக்காகப் பாடினேன், பணம் தேவையில்லைஎன்று மறுத்திருக்கிறார். கொத்தமங்கலம் சீனு- விஜயகுமாரி நடித்த மகாத்மா உதங்கர்படத்தில் காண ஆவல் கொண்டேங்கும் என் இருவிழிகள்…’ என்ற பாடலைப் பாடினார். காதல் டூயட் பாடமாட்டேன்என்று விரதமிருந்த பட்டம்மாளின் பாட்டுப்பட்டியலில் அந்தப்பாடலில் மட்டும் காதல்ரசம் பொங்கியது. அதே படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் - வீணை ராமநாதன் இசையில் குஞ்சிதபாதம் நினைந்துருகும்…’ என்கிற பக்தி ரசத்தையும் பொங்கவைத்தார் பட்டம்மாள்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த தியாகய்யாவில் ராதிகா கிருஷ்ணா…’ மற்றும் நினைந்துருகும் என்னை…’ என இரண்டு பாடல்கலைப் பாடினார். இந்தியிலிருந்து ராம ராஜ்யாவை தமிழுக்குக் கொண்டு வந்தார் ஏவி.மெய்யப்பச் செட்டியார். அதில் அருணாசலக் கவிராயரின் எனக்குன் இருபதம்…’ என்கிற டைட்டில் பாடலைப் பட்டம்மாள் பாடினார். அந்த ஆறுநிமிடப் பாட்டில் ராமாயணத்தின் முன்கதை சொல்லப்பட்டதை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.  வேதாள உலகம்படத்தில் சுதர்சனம் இசையில் அவர் பாடிய தீராத விளையாட்டுப் பிள்ளை…’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  அதே படத்தில் தூண்டிற் புழுவினைப்போல்…’ பாடலும் ரசிக்கப்பட்டது.

ஜி.அஸ்வத்தாமா இசையில் பிழைக்கும் வழிபடத்தில் சுந்தர வாத்தியார் எழுதிய எங்கள் நாட்டுக்கெந்த நாடு பெரியது…’ பாடலின் நிறைவில் நேரு எங்கள் நாடு…’ என்று பட்டம்மாள் குரலில் ஒலித்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் கைதட்டி வரவேற்றார்கள். அந்தப்படத்தில் முதலை வாயில்…’, ‘கோட்டை கட்டாதேடா…’ என இரண்டு பாடல்களையும் பாடினார்.

வாழ்க்கைபடத்தில் பாடிய பாரத சமுதாயம் வாழ்கவே…’ பாடல் அவரது புகழுக்கு மேலும் மெருகூட்டியது. லாவண்யாபடத்தில் இடம்பெற்ற பழம் பாரத நன்நாடு…’ பாடலில் ஏழைகளின் குரலை ஏற்ற இறக்கத்தோடு ஒலித்து, பாராட்டுப்பெற்றார் பட்டம்மாள்.


ஜெமினியின் நாட்டிய ராணிபட விளம்பரத்தில் பாடல்கள்: டி.கே.பட்டம்மாள்என்று பெரிய எழுத்துக்களில் அவரது பெயர் அறிவிக்கப்பட்டு, பெருமை சேர்த்தது. லலிதா-பத்மினி நடனமாடிய நாடு செழித்திடவும் உள்ளமே நாடு…’ பாடல், பட்டம்மாள் குரலில் வனசுந்தரிபடத்தில் ஒலித்து, வசீகரித்தது. 1948ஆம் ஆண்டு, ஜனவரி 30ஆம் தேதி காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று, ‘சாந்தி நிலவ வேண்டும்…’ பாடலை மெட்டமைத்து, வானொலியில் பாடினார். கேட்டவர் கண்களெல்லாம் ஈரமாகின. அந்தப்பாட்டுக்காக வனொலி நிலையம் வழங்கிய காசோலையை வாங்க மறுத்துவிட்டார் பட்டம்மாள்.

எல்.சுப்ரமண்யம் மெட்டமைத்த வைஷ்ணவ ஜனதோ…’ பாடலை கமல்ஹாசனின் வேண்டுகோளை ஏற்று ஹேராம்படத்தில், நீண்ட இடைவெளிக்குப்பின் பாடினார். அவரது வீட்டுக்கே இசைக் கருவிகளை எடுத்துச்சென்று, பாடல்பதிவுசெய்து, அந்த இசை மேதைக்கு மரியாதை செய்தார் இளையராஜா. கான சரஸ்வதிஎன்று கலா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பட்டம்மாள் பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷண்விருதுகளைப்பெற்ற பெருமையாளர். 2009ஆம் ஆண்டில் முதுமையின் காரணமாக மரணமடைந்தார் பட்டம்மாள்.


[ நன்றி : http://kungumam.co.in/ ] 

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

RSR சொன்னது…

I have tried to preserve and present all the film songs ( background only...She did not act in any film). , in my site
https://sites.google.com/site/dkpattammalfilmsongs
thanks to help by old-time 78 rpm collectors .I hope that the site will be useful.

RSR சொன்னது…

ஜெமினியின் ‘நாட்டிய ராணி’ பட விளம்பரத்தில் ‘பாடல்கள்: டி.கே.பட்டம்மாள்’ என்று பெரிய எழுத்துக்களில் அவரது பெயர் அறிவிக்கப்பட்டு, பெருமை சேர்த்தது. லலிதா-பத்மினி நடனமாடிய ‘நாடு செழித்திடவும் உள்ளமே நாடு…’ பாடல், பட்டம்மாள் குரலில் ‘வனசுந்தரி’ படத்தில் ஒலித்து, வசீகரித்தது
I am unable to get this song in youtube. Can some veteran 78 rpm collectors help please?