திங்கள், 11 செப்டம்பர், 2017

831. கறுப்புச் செவ்வாய் : கவிதை

கறுப்புச் செவ்வாய்
பசுபதி

9/11 தாக்கம்: ‘திண்ணை’ மின்னிதழில் 17 செப்டம்பர் 2001 அன்று வந்த கவிதை. 

கழுகு:
விடிந்தது கறுப்புச் செவ்வாய்
. . வெந்தழல் மேனிச் செவ்வாய் !
வெடித்தது வஞ்சக் குண்டு !
. . வெறுப்புமிழ் விமானம் தாக்கி
இடிந்தது வணிக மையம் !
. . எரிந்தது இழந்தோர் வையம் !
மடிந்தது மனித நேயம் !
. . மறக்குமோ யூயெஸ் தேயம் ?
புறா:
கூவிடும் மக்கள் சோகம்
. . குறைத்திடும் கொலைஞர் தாகம் !
யாவரும் கேளிர் என்றும்
. . யாதுமே நம்மூர் என்றும்
தீவிர வாதம் பேசும்
. . தீயவர் அறிவார் நாளை !
ஏவுவோம் அமைதிக் குண்டு !
. . தூவுவோம் அன்புச் செண்டு !
கழுகு:
சூளுரைப்போம் துடித்தெழுந்த அமெரிக்க நாட்டிற்கு,
. . . "தோழா! உங்கள்
தோளுக்குத் தோள்கொடுத்துத் துஷ்டர்செய் வன்முறையைத்
. . . துண்டம் செய்வோம் !
வாளதனை உறைக்குள்ளே வைத்திருப்போம்; பொறுத்திருப்போம்;
. . . வாய்ப்ப ளிக்கும்
நாளதனில் பாய்ந்திடுவோம் ; நசுக்கிடுவோம் எதிரிகளை ;
. . . நமக்கே வெற்றி !"
புறா:
விண்வெளியின் மேலுண்டோ வேலி ? விசாச்சீட்டு
வன்முறைக்கு வாங்கவும் வேண்டுமோ ? -- அன்றிழந்த
கண்ணுக்குக் கண்பறிக்கக் கங்கணம் கட்டினால்
அந்தகர்கள் ஆவர்உல கோர்.

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

Varadarajan Krishnaswami சொன்னது…

மறக்க முடியாத நாள்
மனித(ம்)ர்கள் பட்டபாட்டை

Subbaiyar Ramasami சொன்னது…

அற்புதமான பாடல். துடிப்பு

கருத்துரையிடுக