ராவ் பகதூர் ப.சம்பந்த முதலியார் பி.ஏ.பி.எல்
செப்டம்பர் 24. சம்பந்த முதலியாரின் நினைவு தினம்
====
சென்னைப் பட்டணம் இந்தியாவில்
மிகவும் குறைந்த நாகரிகமுடைய நகரமென்று கல்கத்தா, பம்பாயிலுள்ள ஜனங்கள் ஏளனம் செய்கிறதாகக் கேள்விப்பட்டேன்.
இவ் விழிசொல் ஏற்றதா, இல்லையா என்று பார்க்கும்
பொருட்டுச் சென்னையிலுள்ள அநேக இடங்களைச் சுற்றிப் பார்த்து வந்தேன். முடிவில்,
''அவ் விழிசொல் சென்னைக்கு ஏற்றதல்ல,
சென்னையிலுள்ள சில விஷயங்கள் கல்கத்தா,
பம்பாய் முதலிய இடங்களில் இல்லை''
என்கிற தீர்மானதிற்கு வந்தேன்.
அவைகளில் சிலவற்றைப் பற்றி அடியில் எழுதுகிறேன்.
[சென்னை அண்ணாசாலை 1905]
சென்னையில் பீபிள்ஸ்
பார்க்கில் ஒரு பக்கம் 'ரயில் பாத்'
என்ற பெயரையுடைய ஒரு கட்டிடமுண்டு.
அது 1922ம் ஆண்டு ஒரு சீமானுடைய
நன்கொடையால் கட்டப்பட்டதாம். அது சென்னைவாசிகள் நீந்திக் குளிக்கும்படியாகக் கட்டப்பட்டது.
இதில் விசேஷமென்ன வென்றால் ஜனங்கள் நீந்திக் குளிப்பதற்காக எல்லா செளகரியங்களும் அமைக்கப்பட்டிருக்
கின்றன. நீந்தக் கற்போர்களுக்கு அபாயமில்லாதபடி ஒரு பக்கம் கொஞ்சம் ஆழமில்லாமலும்,
போகப் போக ஆழம் அதிகமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் ஒன்றுதான் குறைவாயிருக்கிறது. இந்தக் குளிக்கும் இடத்தில் தண்ணீர்தான் கிடையாது!
பம்பாய், கல்கத்தா முதலிய பட்டணங்களைப்
பற்றிப் புகழ்ந்து பேசும் ஜனங்களில் யாராவது அவ்விடஙகளில் தண்ணீரில்லாத குளிக்குமிடங்கள்
அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்னும் கேள்விக்குப் பதில் கூறட்டும், ஏறக்குறைய இந்தியா முழுவதுமேயே
- ஏன், இவ்வுலக முழுவதிலுமேயே,
ஜலமல்லாத ஸ்நான கட்டம் கிடைப்பது
அரிது என்றே சொல்லவேண்டும். இந்த அருமையான பெருமை நம்முடைய சென்னைக்குத்தான்,
எனக்குத் தெரிந்தவரையில் உரித்தானது!
சிலர் நீந்தக் கற்றுக் கொண்ட பிறகுதான் ஜலத்தில் இறங்குவோம் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த ஸ்நான கட்டம் கட்டப்பட்டதோ, என்னமோ? அப்படியானால் முனிஸிபல் சாமான்களையெல்லாம் இங்கு நிரப்பி வைப்பானேன்?
இந்தக் கேள்விக்குப் பதில் இதை
வாசிக்கும் நண்பர்கள் தான் கூறவேண்டும்.
(சமீபத்தில்தான் இந்தக்
கட்டிடம் நீந்தக் குளிக்கத் திறந்து விடப்பட்டிருக்கின்றது)
[பாரீஸ் கார்னர் 1890]
பாரிஷ் வெங்கடாசல ஐயர்
வீதியில் சுமார் 50,000 ரூபாய் வரையில் செலவழித்துக்
கட்டப்பட்ட ஒரு கட்டிடம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாகச் சென்னை கவர்னர் ஒருவருடைய
மனைவி அக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார்கள். அச்சமயம் இப்பெருங் கட்டிடமானது சென்னையில்
ஜவுளி வியாபாரம் செய்ய உபயோகப்படும்படியாகக் கட்டப்பட்டது. கிடங்குத் தெருவில் இதற்குப்
போதுமான வசதியில்லை. இந்தியாவில் மற்றுமுள்ள தலைநகரங்களில் இருப்பது போல சென்னையிலும்,
ஒரே கட்டிடத்தில் பலவித ஜவுளிகள்
விற்பனை செய்ய ஏற்பாடு செய்தல் நலமெனக் கருதி, இதற்கென்று ஒரு கம்பெனி ஏற்படுத்தி, இதைக் கட்டி முடித்தார்கள். இதற்கு
'பீஸ்-கூட்ஸ் மார்க்கெட்
(piece - goods market)
[ நன்றி : விகடன் 25-11-1934 ]என்று பெயர் வைத்தார்கள்.
இது திறக்கப்பட்டுப் பல வருஷங்களாகியும் இவ்விடத்தில் ஜவுளி வியாபாரம் நடக்கவேயில்லை.
இப்பெரிய கட்டிடத்தில் பல அறைகள் இருந்தபோதிலும் ஒன்றிலாவது ஜவுளிகள் இன்றளவும் வைக்கப்படவில்லை!
ஆனால் அதற்குப் பதிலாக சில சவுக்குக்கட்டை டெப்போக்கள் இருக்கின்றன. நான் எவ்வளவோ யோசித்துப்
பார்த்தேன். ஜவுளிகளுக்கும் சவுக்குக்கட்டைகளுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா என்று பூர்வ
காலத்தில் நமது தேசாத்திய ரிஷிகள் சில மரப்பட்டைகளினின்றும் நார்களை எடுத்து மரவுரிகள்
செய்து உடுத்திக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் சவுக்குக் கட்டைகளிலிருந்து
எப்பொழுதாவது மரவுரிகள் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே சவுக்குக் கட்டைகள் விற்கும்
ஜவுளி மார்க்கெட் என்பது உலகத்திலில்லாத விஷயமல்லவா? இந்த மார்க்கெட்டை முன்னின்று கட்டினவர் ஒரு வடக்கத்திய
ஆசாமி என்று கேள்விப்படுகிறேன். அவர் இப்பொழுது சென்னையிலில்லை. வேறு எந்த ஊரிலிருக்கிறாரோ
தெரியாது. எந்த ஊரில் இருந்த போதிலும் அந்த ஊரில் இம்மாதிரியான ''ஜவுளி'' மார்க்கெட் கட்டாமலிருக்கும் படியாக நான் அவரை வேண்டிக்
கொள்கிறேன்.
பைகிராப்ட்ஸ் சாலை 1890 - திருவல்லிக்கேணி
சென்னைவாசிகள் திருவல்லிக்கேணி பீச்சிலிருந்து வடக்கே கடற்கரையோரமாய்ப் போனால், அங்கே இரும்பு வாராவதிக்கருகில் சிமிட்டியினால் கட்டப்பட்ட பலமான கட்டடம் ஒன்றைக் காண்பார்கள். அதன் பெயர் என்னவென்று விசாரித்ததால் 'கிளைவ் பாட்டரி' என்று அறிவார்கள். 'பாட்டரி' என்னும் ஆங்கிலப் பதத்திற்கு 'பீரங்கிகள் வைக்குமிடம்' என்று இந்தச் சந்தர்ப்பத்தில் அர்த்தமாகும். இது நமது ராஜாங்கத்தால் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக, சென்னையை எதிரிகள் சமுத்திரத்தின் வழியாக எதிர்த்தால் அவர்களைத் தடுக்க வேண்டி ஏராளமான திரவியம் செலவழித்துக் கட்டப்பட்டதாகும். கட்டிடம் மிகவும் பலமானது. எல்லாம் சரியாகத்தானிருக்கிறது. பீரங்கி மாத்திரம்தான் இல்லை.
இதற்குக் காரணமென்னவென்று விசாரித்ததில், ராஜாங்க ராணுவ உத்தியோகஸ்தர்கள் இந்தப் பீரங்கிகளை மாத்திரம் வெளியே எந்த ஊருக்கோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்! கட்டிடம் மாத்திரம் காலியாகவே இருக்கிறது. ஆயினும் கட்டிடம் ஒன்றிற்கும் உபயோகப்படாமற் போகவில்லை. சில வேலையாட்களும், அவர்கள் குடும்பங்களும் இங்கே வசித்து வருகிறார்கள். 1915ம் வருஷத்தில் ஐரோப்பிய மகா யுத்தத்தில் 'எம்டன்' என்னும் கப்பல் சென்னையைத் தாக்கியபோது இந்த கிளைவ் பாட்டிரியிலிருந்த ஆடவரும் பெண்களும் குழந்தைகளும் அக்கப்பலிலிருந்து வந்த குண்டுகள் தங்கள் மேல் படாதபடி, உள்ளே ஒளிந்திருக்க மிகவும் உபயோகப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குமுன் சென்னையில் கவர்னராயிருந்த லார்ட் க்ளைவ் என்பவர், தம் பெயரால் சென்னையில் கட்டப்பட்ட ஒரு 'பாட்டரி'யானது தற்காலம் மேற்கண்டபடி உபயோகப்படுகிறதென்று தம் சூட்சும சரீரத்தோடு கேள்விப்பட்டால், உடல் சிலிர்ப்பார் என்று நினைக்கிறேன்.
[மெரீனா பீச் - 1890]
அப்படியே கடற்கரையோரமாகவே இன்னும் வடக்கே நோக்கி வருவீர்களானால், சென்னை கஸ்டம் ஹவுஸுக்கு எதிராக, ஒரு எட்டு வாயில்களுடைய கட்டிடத்தைக் காண்பீர்கள். அதன் ஒவ்வொரு வாயில்களிலும் 'கார்ன்வாலிஸ்' என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். லார்ட் கார்ன்வாலிஸ் என்பவர் இந்தியாவில் பல வருஷங்களுக்கு முன் கவர்னராக இருந்த ஒரு சீமான். ஆகவே இக்கட்டிடத்திற்குள்ளாக அவரது சிலை உருவம், அவருடைய ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம். ஆயினும் இந்த எட்டு வாயில்களுக்குள் ஏதாவது ஒன்றின் வழியாக நீங்கள் உள்ளே சென்று பார்ப்பீர்களானால் கார்ன்வாலிஸ் சிலை உருவம் ஒன்றையும் காணமாட்டீர்கள்! அதற்குப் பதிலாகத் தண்ணீர்த் தொட்டி மாதிரி ஒன்று இக்கட்டிடத்தில் நடுவில் கட்டியிருப்பதையே காணலாம். அதிலும் தண்ணீர் கிடையாது! பிறகு நான் விசாரித்ததில், லார்ட்கார்ன்வாலிஸின் சிலை சென்னை மியூஸியத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். ஒருவருடைய சிலையை ஓரிடத்திலும், அது வைக்க வேண்டிய கட்டிடத்தை வேறொரு இடத்திலும் வைக்கும் விந்தையானது நமது சென்னை மாநகருக்குத்தான் உரித்தானது.
சென்னையில் ஒரு 'பார்க்'. 'பார்க்' என்றால் பெரியதோட்டம் என்று அர்த்தமாகும். அதிலும் சாதாரணமாகக் கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களிலுள்ள பார்க்குகள் மைல் கணக்கான விஸ்தீரணமுடையவை. அவற்றில் அழகிய புஷ்பச் செடிகளும், ஆகாயத்தை அளாவிய மரங்களும் நிறைந்திருக்கும். அன்றியும் சாதாரண ஜனங்கள் கண்டுகளிப்பதாகக் காட்டு மிருகக் கூண்டுகளும், பட்சிக் கூடுகளும், நம் நாட்டிலில்லாத பாம்பு முதலியவைகளும் கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். அன்றியும் படகுகளில் ஜனங்கள் போகும்படியான நீர் நிலைகளும் அமைக்கப்பட்டிருக்கும். சென்னையில் பீபிள்ஸ் பார்க்கை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். நிற்க,
முதலில் கூறிய பார்க் எங்கே இருக்கிறதெனப் பெரும்பாலருக்குத் தெரியவே தெரியாது. இதைப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு பூதக்கண்ணாடியை எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். திருவல்லிக்கேணியில் இது இருக்கிறது. இதன் பெயர் 'கான்பகதூர் ஹாஜி ஹகீம் முகம்மது அப்துல் அஜீஸ் சாகிப் பார்க்!' மற்றப் பார்க்குகளெல்லாம் நான்கு அல்லது ஐந்து மைல் விஸ்தீரணமிருந்தால் இது நான்கு அல்லது ஐந்து அடி விஸ்தீரணமுடையதாயிருக்கிறது! மற்ற விநோதப் பார்க்குகளிலெல்லாம் நூற்றுக் கணக்காகப் பெரிய மரங்கள் வளர்ந்திருந்தால் இதில் ஆயிரக்கணக்கான புல் முளைத்திருக்கிறது. மற்றப் பூந்தோட்டங்களிலெல்லாம் புலி, சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்தால் இந்தத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான எறும்புகள் எதேச்சையாகத் திரிகின்றன. நான் ஒருமுறை பார்த்தபோது இவ்வளவு பெரிய பார்க்கில், மற்றப் பார்க்குகளில் உள்ளது போல் சங்கீதத்திற்கும் ஏன் ஒரு ஏற்பாடும் செய்யவில்லையென்று துக்கப்பட்டேன். மற்றொரு முறை அந்தப் பக்கம் போனபோது அக்குறையும் நீங்கியது. ஒரு ஹரிஜனப் பையன் இங்கே உட்கார்ந்து கொண்டு தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தான். இந்தப் பார்க்கில் நீங்கள் முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தப் பார்க்கைவிட, இந்தப் பார்க்கின் பெயர் எழுதப்பட்டிருக்கும் போர்ட்டு பெரியதாகக் தோன்றுவதேயாம்! அந்த போர்டைவிட அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர் பெரியதானது என்று யாராவது சொன்னால் அவர்களுடன் நான் சச்சரவிட மாட்டேன்!''
இப்படிப்பட்ட விநோதங்களெல்லாம் இருக்கும்பொழுது சென்னையைப்பற்றி யார்தான் குறை கூறக் கூடும்?
சென்னையில் பச்சையப்பன்
கல்லூரிக்கு எதிரில் ஒரு கட்டிடமிருக்கிறது. அதற்குக் 'கார்ப்பொரேஷன் பழக்கடை' என்று பெயர். இது சில வருஷங்களுக்கு முன்பாக 'பழங்களையெல்லாம் வீதிகளில் விற்பது
தகுதியல்ல, ஆகவே பம்பாய்,
கல்கத்தா முதலிய பட்டணங்களிலிருப்பது
போல் ஒரு தனிக் கட்டடமிருக்க வேண்டும்' என்று நமது சென்னை கார்ப்பொரேஷன் கவுன்சிலர்கள் கட்டின இடமாகும்.
இதன் வாயில் வழியாக நீங்கள் நுழைத்தால் முதல்முதல் உங்கள் கண்களுக்குப் புலப்படும்
'பழ' தினுசுகள் அடியிற் குறித்தனவாம்.
துணிகள், செண்டுகள்,
பாய்கள், பொம்மைகள், பந்தாடும் கருவிகள், கட்டில்கள், புஸ்தகங்கள், கொசுவலைகள், கம்பளிகள் முதலியவை. இவை எந்த மரங்களில்
காய்த்துப் பழுக்கின்றனவோ, என்னால் கூறமுடியாது.
கார்ப்பொரேஷன் கவுன்சிலர்களில் யாராவது தாவர சாஸ்திரப் பரிட்சையில் தேறினவர் இருந்தால்
அவர்கள் ஒரு வேளை இதற்குத் தகுந்த பதில் அளிக்கலாம். இப்படிப்பட்ட பழக்கடைகள் இந்தியா
முழுதும் வேறு எந்த இடத்திலும் கிடைப்பது அரிதென்றே நாம் கூறவேண்டும்.
====
தொடர்புள்ள பதிவுகள்:
தொடர்புள்ள பதிவுகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக