அக்கப்போர் சொக்கப்பன்
====
''சார், சார்!'' என்று கையைத் தட்டி, குடியே முழுகி விட்டதைப் போல் அவசரமாக யாரையோ கூப்பிடுகிறானே, அவன்தான் அக்கப்போர் சொக்கப்பன்.
காலம், இடம், மனிதர்களின் தராதரம் எதுவும் அவனுக்கு அக்கறை கிடையாது. யாராய் இருந்தாலும், எந்த இடமாய் இருந்தாலும் அவர்களைக் கூப்பிட்டு பயங்கரமாக நாலு சங்கதிகளையாவது சொல்லாவிட்டால் அவனுக்கு மண்டையே வெடித்துவிடும்.
''சார், உங்களுக்கு விஷயமே தெரியாதா? ராயப்பேட்டைல அரசியல் கட்சிங்க ரெண்டு, ஊர்வலமா போனதுல ரெண்டுக்கும் மோதல் ஏற்பட்டு, பெரிய ரகளை! ஒரே கல் வீச்சு! இதுவரைக்கும் முன்னூறு பேருக்கு மேலே பலத்த அடி. நாலு பேர் மண்டை உடைஞ்சு செத்துட்டாங்க. அடி பட்டவங்களுக்கு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலே இடம் போதாம, ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வேற தூக்கிட்டுப் போறாங்க சார்!'' என்பான்.
ராயப்பேட்டைப் பக்கம் போய்ப் பார்த்தால், அங்கே இரண்டு பிச்சைக்காரர்களுக்குள் பஸ் ஸ்டாண்டில் ஏதாவது தகராறு நடந்திருக்கும். போலீசார் வந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள். அவ்வளவு தான்!
திடீரென்று ஓடிவந்து, ''புழலேரி உடைத்துக்கொண்டுவிட்டது. மவுன்ட்ரோடு பக்கம் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது'' என்று ஒரு புரளியைக் கிளப்பி விடுவான். அந்தச் செய்தி கேட்டு மவுன்ட் ரோடே அல்லோலகல்லோலப் படும். அடுத்தாற்போல் மயிலாப்பூருக்குப் போய், ''வெள்ளத்தில் மவுன்ட்ரோடு பூராவும் முழுகி விட்டது. எல்.ஐ.சி. கட்டடத்தைத் தவிர எல்லாம் போய்விட்டது'' என்பான்.
அங்கிருந்து இன்னொரு இடத்துக்குப் போவான். அங்கே யாராவது குப்பைமேட்டுக்குத் தீ வைத்துக் கொளுத்திக்கொண்டு இருப்பார்கள். அதைப் பார்த்து விட்டு தெரிந்தவர்களிடமெல்லாம் ஓடிப்போய், ''சார்! பழைய மாம் பலத்தில் ஒரு தெருவே தீப்பிடிச்சு எரியுது சார். ஒரு டஜன் ஃபயர் என்ஜின் வந்து தீயை அணைச்சுக் கிட்டிருக்கு. ஆனா, இன்னும் தீ அடங்கினபாடில்லே'' என்பான்.
யாராவது ரோடிலே ஒரு நாலணாவைத் தொலைத்து விட்டிருப்பார். அந்தச் செய்தி சொக்கப்பனின் காதுக்கு எட்டும். அவ்வளவுதான்; சொக்கப்பன் தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக் கெல்லாம் போய், ''ஸார்! துரைசாமி இன்னிக்கு நடுரோடிலே நாலாயிரம் ரூபாயைத் தொலைச்சுட்டான் ஸார்!'' என்பான். அதே செய்தியை அடுத்தவரிடம் போய் சொல்லும்போது, 'நாற்பதாயிரம்' என்பான். அதற்கடுத்தவரிடம் போகும்போது, அது நாலு லட்சம் ஆகிவிடும்!
[ ஓவியம்: நடனம் ] |
காலைப் பத்திரிகைகளில் வரும் அக்கப்போர்களையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்து விட்டு, அவற்றுக்குக் காது மூக்கு வைத்து பயங்கரமாகச் சிருஷ்டித்து நாலு பேரிடத்தில் சொல்லாவிட்டால், அவனுக்கு நிம்மதி ஏற்படாது.
''பங்களூர்லே பாங்க் ஒண்ணு குளோஸ் ஆகப் போறதுன்னு ஒரு ஸீக்ரெட் இன்ஃபர்மேஷன் கிடைச்சுது. உடனே போய் அந்த பாங்கிலிருந்த என் பணம் பூரா வையும் வித்ட்ரா பண்ணிண்டு ராத்திரியோடு ராத்திரியா காரிலேயே திரும்பி வந்துட்டேன்'' என்று கரடி விடுவான்.
உலகமே பிரளயத்தில் மூழ்கி விடப்போவதாக போன வருஷம் ஒரு பெரிய வதந்தி அடிபட்டுக் கொண்டிருந்ததல்லவா? அந்த வதந்தியை அத்தனை பயங்கரமாகப் பரப்பியவனே அக்கப்போர் சொக்கப்பனாய்த்தான் இருக்க வேண்டும்!
[ நன்றி: விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
சாவி படைப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக