சனி, 18 ஆகஸ்ட், 2018

1140. காந்தி - 40

34. சர்வாதிகாரி காந்தி
கல்கி 


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த 34-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே இந்நூலில் வந்தன ]
===
பண்டித மாளவியாவும் மற்றும் சில மிதவாதப் பிரமுகர்களும் ஒரு கோஷ்டியாகச் சென்று டிசம்பர் 21 லார்டுரெடிங்கைப் பேட்டி கண்டார்கள். லார்டு ரெடிங் அவர்களுடைய ராஜி மனப்பான்மையை மிகவும் பாராட்டினார். இந்த மாதிரியே மற்ற இந்தியத் தலைவர்களும் நடந்துகொண்டால் ஒரு தொல்லையும் இல்லை யென்றும், தம்முடைய சர்க்காரும் ராஜிக்குத் தயாராயிருப்பார்கள் என்றும் கூறினார். ஆனால் அந்த மிஸ்டர் காந்தி இவ்வளவு வெறும் பிடிவாதமாக இருக்கும்போது தாம் என்ன செய்யமுடியும் என்று சொல்லி அகலக்கையை விரித்தார்.

டிசம்பர் 24- வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவுக்கு விஜயம் செய்தபோது அந்த மாபெரும் நகரில் பரிபூரண ஹர்த்தால் நடைபெற்றது. அன்று கசாப்புக் கடைக்காரர்கள் கூடக் கடையை மூடி வேலை நிறுத்தம் செய்தார்கள். மிதவாதிகளின் ராஜிப் சே்சுக்கு லார்ட் ரெடிங் செவி சாய்ப்பது போல் நடித்ததின் நோக்கம் டிசம்பர் 24- கல்கத்தாவில் வேலை நிறுத்தம் நடைபெறக்கூடாது என்பது தான். அந்தச் சூழ்ச்சி பலிக்காமற் போயிற்று. எனவே அதற்குப் பிறகு லார்ட் ரெடிங்கும் ராஜிப் பேச்சுகளில் எவ்விதமான சிரத்தையும் காட்டவில்லை.

ஆனால், பாவம், பண்டித மாளவியாஜியின் சபலம் இன்னும் அவரை விட்டபாடில்லை. ஆமதாபாத் காங்கிரஸுக்குச் சென்று அங்கேயும் ராஜி யோசனை மூட்டையை அவிழ்த்தார். பிற்பாடு 1922-ஆம் வருஷம் ஜனவரி மாதத்தின் மத்தியில் பம்பாயில் மித வாதிகள் ராஜிப்பேச்சு மகாநாட்டைக் கூட்டினார்கள். இவற்றைக் குறித்துப் பின்னால் பார்க்கலாம்.

ராஜி முயற்சிகள் என்னும் லார்ட் ரெடிங்கின் இராஜ தந்திர சூழ்ச்சிப் படலம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், ஆமதாபாத் காங்கிரஸுக்கு மகத்தான ஏற்பாடுகள் மற்றொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன. மேற்கூறிய ராஜி முயற்சிகளைப் பற்றித் தேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலோருக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுடைய கவனமெல்லாம் ஆமதாபாத்தில் கூடும் காங்கிரஸ் மகாசபையில் என்ன முடிவுகள் ஆகப் போகின்றனவோ என்பதிலேயே சென்றிருந்தது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆமதாபாத்தை நோக்கிப் பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரயிலேறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ராஜி முயற்சிகளைப் பற்றிச் சில செய்திகள் அரைகுறையாகக் கிடைத்தன. ஆனால் பிரதிநிதிகள் யாருமே ராஜிப் பேச்சை அச்சமயத்தில் விரும்பவில்லை. வங்காளத்திலிருந்து சென்ற பிரதிநிதிகள் கூட விரும்பவில்லை.

இதை, வங்காளத்தின் பெயரால் மகாத்மாவுக்குத் தந்தி அனுப்பிய ஸ்ரீ சியாம்சுந்தர் சக்கரவர்த்தியே பின்னால் ஒப்புக் கொண்டார். 1923-ஆம் வருஷத்தில் மேற்படி கல்கத்தா ராஜி முயற்சி பற்றி ஒரு விவாதம் பத்திரிகைகளில் எழுந்தது. மகாத்மா காட்டிய பிடிவாதத்தினாலேயே காரியம் கெட்டுப் போய்விட்டது என்றும், இல்லாவிடில் அப்போதே வெற்றி கிட்டியிருக்கும் என்றும் சிலர் சொன்னார்கள். பத்திரிகைகளில் இதைப்பற்றிக் காரசாரமாக விவாதம் நடந்தபோது ஸ்ரீ சியாம் சுந்தர சக்கரவர்த்தி 1923 ஜூன் 19-ஆம் தேதி வெளியான தமது "ஸர்வெண்ட்" பத்திரிகையில் "என்னுடைய பலவீனத்தை ஒப்புக்கொள்கிறேன்" என்ற தலைப்புக் கொடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் 1921-ஆம் வருஷக் கடைசியில் நடந்த சதுரங்கப் போராட்டத்தைப் பற்றி விவரமாக எழுதி, அதில் தம்முடைய பங்கு என்ன என்பதையும் சொல்லியிருந்தார். இந்தச் சதுரங்கத்தின் முக்கிய ஆட்டக்காரர்கள் லார்டு ரெடிங், காந்திஜி, பண்டித மாளவியா, தேசபந்து தாஸ் ஆகியவர்கள் அல்லவா?

ஸ்ரீ சியாம் சுந்தர் சக்கரவர்த்தி இது சம்பந்தமாக எழுதியதாவது:-

"நான் பண்டித மாளவியாவுடன் ராஜதானி சிறைச் சாலையின் வாசல் வரையில் சென்றேன். மாளவியா உள்ளே போனார். அங்கே தேச பந்து தாஸுடன் மாளவியாவும் தாஸின் குடும்பத்தார் சிலரும் இருந்தார்கள். மகாத்மாவின் தந்தியைக் குறித்துத் தாஸ் மிகவும் கலக்கமடைந்திருந்தார். எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தாலன்றி ராஜி செய்து கொள்வது உசிதமல்ல வென்று என் அபிப்பிராயத்தைத் தெரிவித்தேன். மாளவியா மறுபடியும் போய் லார்ட் ரெடிங்கைப் பார்த்துவிட்டு வந்தார். மகாத்மாவின் தந்தி லார்ட் ரெடிங்குக்குக் கோபமூட்டி யிருப்பதாகவும் 'பத்வா' கைதிகள் விஷயமான பேச்சை எடுக்கவே லார்ட் ரெடிங் விடவில்லை யென்றும் மாளவியா தெரிவித்தார். மாளவியாவும் தாஸும் எவ்வளவு மனவருத்தம் அடைந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்த நான் என்னுடைய பொறுப்பில் மகாத்மா காந்திக்கு ஒரு தந்திச் செய்தி அனுப்புவதாகச் சொன்னேன்! தேசபந்து தாஸ் இச்சமயம் ஒரு ராஜி செய்து கொள்வதை முக்கியமாய்க் கருதுவதால் மகாத்மா புனராலோசனை செய்ய வேண்டும் என்று தந்தி அடிப்பதாய்ச் சொன்னேன். அதற்கு ஸ்ரீ தாஸ் 'என் பெயரைச் சொல்ல வேண்டாம். வங்காளத்தின் அபிப்பிராயம் இது என்பதாகத் தந்தி அடியுங்கள்' என்றார். இது வங்காளத்தின் அபிப்பிராயம் அல்ல வென்றும் உண்மை எனக்குத் தெரிந்துதானிருந்தது. ஏனெனில் ஆமதாபாத் காங்கிரஸுக்குப் போகும் வழியில் கல்கத்தாவுக்கு வந்திருந்த வங்க மாகாண காங்கிரஸ் பிரதிநிதிகள் என்னைப் பார்த்துப் பேசினார்கள். இந்த நிலைமையில் ராஜிப் பேச்சை அவர்கள் விரும்பவில்லை. அரசியல் கைதிகளில் சிலரைச் சிறையில் விட்டு விட்டு மற்றவர்களின் விடுதலைக் கோருவதையும் அவர்கள் விரும்ப வில்லை. இது நன்றாகத் தெரிந்திருந்தும் தேச பந்து தாஸின் வார்த்தையைத் தட்ட முடியாமல் நான் காந்திஜிக்குத் தந்தியடித்தேன். நான் என்ன தந்தி கொடுத்தாலும் காந்திஜி எது சரியோ அதைத்தான் செய்வார் என்ற நம்பிக்கை என் மனதிற்குள் இருந்தது. ......"

இவ்விதம் ஸ்ரீ சியாம்சுந்தர் சக்கரவர்த்தி 1923-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுதினார். மகாத்மாவிடம் ஸ்ரீ சக்கரவர்த்தியின் நம்பிக்கை வீணாகவில்லை. அவருடைய தந்திக்குப் பிறகும் மகாத்மா தம் கொள்கையிலிருந்து நகரவில்லை.

வங்காளப் பிரதிநிதிகளைப் பற்றி ஸ்ரீ சியாம் சுந்தர சக்கரவர்த்தி கூறியிருப்பது மற்ற மாகாணங்களின் பிரதிநிதிகளின் விஷயத்திலும் உண்மையாக இருந்தது. யாரும் அவசரப்பட்டு ராஜி செய்து கொள்ள விரும்பவில்லை. அதோடு காங்கிரஸ் பிரதிநிதிகள் மிகப் பெரும்பாலோர் மகாத்மாவின் தலைமையில் பரிபூரண நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர் காட்டும் வழியைப் பின்பற்றவும் அவர் சொல்லும் திட்டத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் ஒப்புக் கொள்ளவும் நாடெங்குமுள்ள காங்கிரஸ் வாதிகளுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தது என்று ஆமதாபாத் காங்கிரஸில் நன்கு வெளி யாயிற்று.
ஃ ஃ ஃ

ஆமதாபாத் காங்கிரஸ் பல அம்சங்களில் மிகச் சிறப்புக் கொண்டதாகும். புதிய காங்கிரஸ் அமைப்பின்படி நடந்த முதலாவது காங்கிரஸ் அதுதான். முன்னேயெல்லாம் யார் வேணுமானாலும் வரையறையின்றிக் காங்கிரஸ் பிரதிநிதிகளாக வந்துவிடலாம். ஆனால் புது அமைப்பின்படி தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளே ஆமதாபாத் காங்கிரஸுக்கு வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் ஒத்துழையாமை இயக்கத்துக்காக மகத்தான தியாகங்களைச் செய்த தேச பக்தர்கள். பிரதிநிதிகள் ஆறாயிரம் என்று வரையறுக்கப்பட்ட படியால் காரியங்களை நடத்துவது இலகுவா யிருந்தது. அதே சமயத்தில் லட்சக் கணக்கான பார்வையாளர்கள் வந்து நடவடிக்கைகளைக் கவனிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது.

ஆமதாபாத் மகாத்மாவின் சொந்த ஊர். சத்தியாக்கிரஹ ஆசிரமம் இருந்த சபர்மதி நதிக்கரையிலேதான் காங்கிரஸும் நடந்தது. மகாத்மாவின் செல்வாக்கு இணையற்றிருந்த காலம் ஆகையால் கங்குகரை யில்லாத உற்சாகத்துடனே காங்கிரஸ் ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் மகாத்மா காந்தியின் விருப்பத்தின்படி நடைபெற்று வந்தன.

நாகபுரி காங்கிரஸில் நாற்காலிகளுக்காக மட்டும் 70000 ரூபாய் செலவாயிற்று. ஆமதாபாத்தில் பிரதிநிதிகளும் பார்வையாளரும் தரையிலேயே உட்கார வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. காங்கிரஸ் பந்தல், பிரதிநிதிகளின் ஜாகைகள் எல்லாவற்றுக்கும் மேற்கூரைக்குக் கதர்த்துணி உபயோகிக்கப் பட்டது.

காங்கிரஸ் பிரதிநிதிகள் தங்கும் விடுதிக்குக் “காதிநகர்” என்று பெயர் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் தனித் தனிப் பகுதிகள் விடப்பட்டன. காதி நகரின் மத்தியில் காந்திஜியின் ஜாகை அமைக்கப்பட்டது.

ராஜிப் பேச்சு சம்பந்தம்மான தந்திப்போக்குவரவுக்கிடையே டிசம்பர் 22-ஆம் தேதி மகாத்மாகாந்தி சபர்மதி ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டுக் காதி நகரில் தம் ஜாகைக்கு வந்து சேர்ந்தார். காங்கிரஸ் ஏற்பாடுகளை நேர்முகமாய்க் கவனிப்பதற்கும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கலந்து பேசுவதற்கும் சௌகரியமா யிருக்கும் என்று தான் காதி நகருக்கு மகாத்மா காந்தி தம்முடைய ஜாகையை மாற்றிக் கொண்டார்.

22-ஆம் தேதியிலிருந்தே காதி நகரில் ஜனக்கூட்டம் நிறைய ஆரம்பித்தது. இரண்டு மூன்று நாட்களுக்குள் பிரதிநிதிகளும் பார்வையாளரும் தொண்டர்களுமாகக் காதி நகரில் ஒரு லட்சம் பேர் சேர்ந்து விட்டார்கள்.

கிலாபாத் மகாநாடும் அதே இடத்தில் நடந்தபடியால் அதற்கு வேண்டிய ஜாகை வசதிகளும் செய்யப்பட்டன. காதி நகரைக் காட்ட்டிலும் அதிக அலங்காரமாகவே கிலாபத் நகர் அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் மகாசபைக்கு அந்த வருஷம் தலைவராகத் தேர்ந் தெடுத்திருந்த தேசபந்துதாஸ் சிறை புகுந்து விட்டார். அவருக்குப் பதிலாக, கிலாபாத் மகாநாட்டின் தலைவர் ஹக்கிம் அஜ்மல்கானே காங்கிரஸுக்கும் தலைமை வகித்தார். அந்த நாளில் ஏற்பட்டிருந்த ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக் காட்ட இதைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

ஆமதாபாத் காங்கிரஸ் நடந்த வாரத்தில் காதி நகரிலும் கிலாபத் நகரிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. தேசத்தில் சுதந்திரம் இன்னும் ஒரு லட்சியமாகவே இருந்தது. ஆனால் சீக்கிரத்தில் அடையப் போகும் இலட்சியமாகக் காட்சி தந்தது. ஆகையினால் அதன் மகிமை பிரமாதமாயிருந்தது. ஒவ்வொரு மாகாணப் பிரதிநிதிகளும் இறங்கி யிருந்த பகுதியிலிருந்து காலையில் 'பிரபாத் பேரி' என்னும் காலை பஜனை கோஷ்டி கிளம்பியது. ஒவ்வொரு கோஷ்டியாரும் தத்தம் தாய் மொழியில் தேசீய கீதங்களைப் பாடிக்கொண்டு காதி நகர் முழுவதிலும் வலம் வந்தார்கள். பஞ்சாப், சிந்து, அஸ்ஸாம், ஐக்கிய மாகாணம், குஜராத், மகாராஷ்டிரம், பீஹார், ஒரிஸ்ஸா, ஆந்திரா, தமிழ், மலையாளம், கொங்கணம் ஆகிய மாகாணப் பிரதிநிதிகளின் பஜனை கோஷ்டிகள் பாடிக் கொண்டு சென்ற போது, "இது குஜராத் கோஷ்டி" "இது ஆந்திரா கோஷ்டி" என்று மற்ற மாகாணத்தவர் பேசிக் கொண்டார்கள். செந் தமிழ் நாட்டில் பாரதியார் என்னும் கவி தெய்வீகமான தீர்க்க தரிசனம் வாய்ந்த தேசீய கவிதைகளைப் பாடியிருக்கிறார் என்பது அப்போதுதான் சில வட இந்தியர்களுக்குத் தெரிய வந்தது. மற்ற மாகாணத்தார் இசையோடு அமைதியான தேசீய கீதங்களை பாட, தமிழ் நாட்டான் மட்டும் ஆவேச வெறியோடு பாரதி கீதங்களைப் பாடிப் போவதைப் பார்த்து மற்ற மாகாணத்தார் நின்று கவனித்தனர்.

இப்படிக் காங்கிரஸ் பிரதிநிதிகள், சிதம்பரத்தின் கோபுரத்தைக் கண்டு களிப்படைந்த நந்தனைப்போல் ஆனந்த வெறி கொண்டிருக்கையில், மகாத்மாவின் விடுதியில் முக்கிய ஆலோசனைகளும் விவாதங்களும் நடந்து வந்தன. ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் வந்த முக்கியப் பிரதிநிதிகளிடமிருந்து அந்தந்த மாகாணத்தில் நடந்த அடக்குமுறைகளைப் பற்றியும் காங்கிரஸ் வேலைத் திட்டங்களைப் பற்றியும் காந்திஜி விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

இதைத் தவிர இன்னும் இரண்டு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
1. பண்டித மதன்மோகன் மாளவியாவின் ராஜிப் பிரேரணைகள்.
2. மௌலானா ஹசரத் மோகினி காங்கிரஸ் இலட்சியத்தைப் 'பரிபூரண சுதந்திரம்' என்று மாற்றுவதற்குக் கொண்டு வர விரும்பிய பிரேரணை.

பண்டித மாளவியாவுக்கு இன்னும் சபலம் விடாமல், ராஜிப் பிரேரணைகளை ஆமதாபாத்திலும் கிளப்புவதற்கு வந்திருந்தார். லார்ட் ரெடிங்கின் போக்கு எப்படியிருந்தாலும் காங்கிரஸ் ராஜிக்குத் தயார் என்பதைத் தெரிவித்துவிட வேண்டும் என்று அவர் சொன்னார்.

விஷயாலோசனைக் கமிட்டியில் பண்டித மாளவியாவுக்குப் பேச இடம் கொடுக்கப்பட்டது. பண்டித மாளவியா எப்போதும் வெகு நீளமாகப் பேசுகிறவர். அதிலும் இந்தச் சந்தர்ப்பத்தில் தம்முடைய கட்சியை மிகவும் சாங்கோபாங்கமாக அவர் எடுத்துச்சொன்னார். அவரை ஸ்ரீ ஜெயகரும் ஜனாப் ஜின்னாவும் மட்டும் ஆதரித்தார்கள். மகாத்மாவோ பண்டித மாளவியாவிடம் தமது மரியாதையைத் தெரிவித்துவிட்டு, அவருடைய வாதங்களுக்குப் பதிலாக, ராஜிப் பேச்சு சம்பந்தமான தந்திப் போக்குவரவுகளை மட்டும் படித்தார். விஷயாலோசனைக் கமிட்டியார் ஏறக்குறைய ஒருமுகமாக மகாத்மா அனுசரித்த முறையே சரியானது என்று ஒப்பம் வைத்தார்கள்.

இதற்கிடையி்ல் பண்டித மோதிலால் நேரு, லாலா லஜபதிராய் ஆகியவர்களிடமிருந்து சிறைக்குள்ளேயிருந்து கடிதம் வந்தது. "நாங்கள் சிறையில் இருப்பதை முன்னிட்டு நீங்கள் ராஜிப் பேச்சுக்கு இணங்கவேண்டாம். போராட்டத்தை இறுதிவரை நடத்தியே தீரவேண்டும்" என்று அவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆகக்கூடி மகாத்மா அனுசரித்த முறைக்குக் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் பரிபூரண ஆதரவு கிடைத்தது.

இன்னொரு பக்கத்தில் மௌலானா ஹஸரத் மோகினி என்னும் முஸ்லிம் மதத் தலைவர் காங்கிரஸ் திட்டத்தை இன்னும் தீவிரமாக்க விரும்பினார். "பிரிட்டிஷ் சம்பந்தமே அற்ற சுதந்திரமே காங்கிரஸ் இலட்சியம்" என்று மாற்ற மௌலானா ஹஸரத் மோகினி பிரேரணை கொண்டுவந்தார்.

இதைப்பற்றி மகாத்மா கடுமையாகவே பேசினார். இதைக்கொண்டு வந்தவரும் இதை ஆதரிப்பவர்களும் பொறுப்பற்றவர்கள் என்றார். "பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இந்தியா சமஉரிமையும் சுயராஜ்யமும் பெற்றால் அதன் விளைவு என்ன? இந்தியாவின் ஜனத்தொகைதானே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் அதிகம்? பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே நாம் ஆட்டி வைக்கலாமே?" என்று சொன்னார். எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதைவிட்டு, இலட்சியத்தை மேலும் தீவிரமாக்கிக்கொண்டு போவதில் பயனில்லை, என்பது மகாத்மாவின் கருத்து.

தேசபந்து தாஸ் சிறைப்பட்டிருந்தபடியால் அவரது தலைமைப் பிரசங்கத்தை ஸ்ரீமதி சரோஜினி தேவி வாசித்தார். ராஜிப் பேச்சு ஆரம்பிக்கும் முன்னாலேயே தேசபந்து எழுதிய பிரசங்கமாதலால் அதில் ஆவேசம் நிறைந்திருந்தது. ஸ்ரீமதி சரோஜினிதேவி வாசித்த முறையினால் அது மேலும் மகிமை அடைந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேசபந்துதாஸ்; அவருக்குப் பதிலாக அக்கிராசனம் வகித்தவர் ஹக்கிம் அஜ்மல்கான். ஆனால் உண்மையாக ஆமதாபாத் காங்கிரசின் தலைவராக விளங்கியவர் காந்திஜிதான். அவரைச் சுற்றியே எல்லாம் சுழன்று கொண்டிருந்தன. அவருடைய ஜாகையிலேதான் முக்கியமான யோசனைகள் எல்லாம் நடந்தன. அவர் வாக்கை வேதவாக்காகக் கருதி மற்றப் பிரதிநிதிகள் பக்தியுடன் ஒப்புக் கொண்டார்கள்.

இதற்கு முன்னெல்லாம் காங்கிரஸ் மகாசபைகளில் முப்பத்திரண்டு, நாற்பத்தெட்டு என்று தீர்மானங்கள் நிறைவேறுவதுண்டு. ஆனால் ஆமதாபாத் காங்கிரஸில் ஒன்பது தீர்மானங்கள்தான் நிறைவேறின. அவற்றிலும் இரண்டுதான் மிக முக்கியமானவை.

ஒரு முக்கிய தீர்மானத்தில் இந்தியாவுக்குச் செய்யப்பட்ட அநீதிகளையும் அவற்றை நிவர்த்திக்க ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த அவசியத்தையும் சொல்லியிருந்தது. தொண்டர்களின் அமைதியான நடவடிக்கைகளைப் பிரிட்டிஷ சர்க்கார் அடக்குவதற்காகக் கையாண்ட அடக்குமுறைப் பாணங்களைக் கண்டித்தது. குடிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காகப் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் தொடுத்துள்ள அடக்குமுறைச் சட்டங்களை மீறுவது தர்மம் என்றும், இதற்காகத் தொண்டர் படை அமைப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டது. தொண்டர்கள் கையெழுத்திட வேண்டிய வாக்குறுதிகளையும் வகுத்தது. மனோ வாக்கு காயங்களினால் அஹிம்சையை அனுசரிக்கவேண்டும் என்னும் நிபந்தனையில் மனதை எடுத்து விடவேண்டும் என்று சில கிலாபத் தலைவர்கள் முயன்றார்கள். இதை மகாத்மா ஒப்புக்கொள்ளவில்லை; மற்றப் பிரதிநிதிகளும் ஒப்புக்கொள்ளவில்லை.

அடுத்த முக்கிய தீர்மானம் ஒத்துழையாமை. சட்டமறுப்பு இயக்கங்களை நடத்துவதற்கு மகாத்மாவைச் சர்வாதிகாரியாக நியமித்ததாகும். சர்க்கார் அடக்குமுறைக் காரணமாகக் காரியக் கமிட்டியையோ அகில இந்திய கமிட்டியையோ கூட்டுவது அசாத்தியமாகலாம். எனவே அந்த ஸ்தாபனங்களின் அதி காரங்கள் எல்லாம் மகாத்மா விடமே ஒப்படைக்கப்பட்டது. மகாத்மாவையும் சர்க்கார் கைது செய்தால் தம்முடைய ஸ்தானத்தில் இன்னொருவரைச் சர்வாதிகாரியாக நியமிக்கும் அதிகாரத்தையும் மகாத்மாவுக்குக் காங்கிரஸ் கொடுத்தது.

முதலாவது முக்கிய தீர்மானத்தைப் பிரேரித்தபோது மகாத்மா பேசிய பேச்சு, பிரதிநிதிகள் – பார்வையாளரிடையே ஆவேசத்தை உண்டு பண்ணியது. மொத்தத்தில், ஆமதாபாத் காங்கிரஸின்போது தேசீய இயக்கத்தின் உற்சாகம் இமயமலையின் சிகரத்தையொத்து உயர்ந்திருந்தது. அடுத்த 1922 - ஆம் வருஷம் பிப்ரவரியில் அந்த உற்சாகம் பாதாளத்துக்கே போய்விட்டது!
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: