புதன், 30 ஜனவரி, 2013

குழப்பக் கோட்பாடு: கவிதை

குழப்பக் கோட்பாடு
பசுபதி

[ மூலம்: சில்பி ]

பட்டிக்காட்டில் பறந்திடுமோர்
பட்டுப்பூச்சி சிறகடித்தால்
பட்டணத்தில் பருவமழை பலக்கும்.

காலவெளியின் ஞாலத்தில்
அணுவொன்றின் அக்குளில்
ஒரு 'கிசுகிசு ';
வேறிடத்தில் வேறோர் துகள்
விலாப் புடைக்க சிரிக்கும் !
குழப்பக் கோமான் குதூகலிக்கும்
விஞ்ஞான விளையாட்டு !
அறிவியலின் புதுப்பாட்டு!
குழப்பக் கோட்பாடு!

காலவெளியைச்
சொடுக்கியது ஒரு சலனம்.
மயிலையில் ஒரு ஜனனம்.
வாயசைத்தது வள்ளுவப் பூச்சி.
'ஒன்றாக நல்லது கொல்லாமை
. . . . .
பொய்யாமை நன்று. '

அதிர்வுகள் அமுங்கின;
ஆண்டுகள் கழிந்தன.
குஜராத்தில் ஓர் அக்டோபர்.
கருவுற்ற ஒரு கார்மேகம்
சிலிர்த்தது; சிரித்தது.
அஹிம்சை மின்னியது; வாய்மை இடித்தது.
பெய்தது மோகனதாஸ் மழை.
குளிர்ந்தது பாரத மண்.

மீண்டும் வருமா வண்ணப் பூச்சி ?

******
குழப்பக் கோட்பாடு = Theory of Chaos

[ 'திண்ணை’ இதழில் 2001-இல் வெளியான கவிதை]

தொடர்புள்ள பதிவுகள்:

1 கருத்து:

Soundar சொன்னது…

தமிழ்க் கவிதைக்கு மேலே இருப்பதை உன்னிப்பாகப் பாருங்கள்.

அது ஒருவரிக் கவிதை
மொழியைக் கடந்த ஒருகோட்டுக் கவிதை!

பசுபதியும் சென்னையில் ஓர்நாள்
பேனாவில் நிரப்பினார் மை!

வரிக்கோலம் உயிர்த்தது;
பொக்கைவாய் சிரித்தது;
பூத்தது வாய்மை!

போர்பந்தரில்.

சௌந்தர்