திங்கள், 14 ஜனவரி, 2013

சசி - 4: பொங்கல் இனாம்!

பொங்கல் இனாம்!
சசி



"என்ன! பொங்கல் இனாமா? பொங்கல் இனாமும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே... போ! வேற வேலையே கிடையாதுபோல இருக்கு உங்களுக்கெல்லாம்! ஒரு தம்பிடி கூடக் கொடுக்க மாட்டேன்! ஆமா! ஏன் நிற்கிறே இன்னம்? போக மாட்டே?" என்று நடேசய்யர் தம் பற்களை நறநறவென்று கடித்தார். பொங்கல் இனாம் கேட்ட தபால்காரர் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்.

00  
இயற்கையில் தாராள சிந்தை உடைய நடேசய்யர் தபால்காரரிடம் அவ்வளவு நிர்தாட்சண்யமாக நடந்துகொண்டது எனக்கு ஆச்சரியத்தையே அளித்தது. "ஏன் ஸார், பொங்கல் இனாம் கேட்டதற்காகத் தபால்காரரை அப்படிக் கோபித்துக்கொண்டீர்கள்?" என்று விசாரித்தேன்.
"பொங்கல் இனாம் கொடுக்கிற பழக்கத்தையே அடியோடு எடுத்துடணும், ஸார்! முக்கியமாகத் தபால்காரர்களுக்குப் பொங்கல் இனாமே கொடுக்கப்படாது! அதனாலே எவ்வளவோ ஆபத்து நேரிடுகிறது! என் சொந்தக் கதையையே சொல்றேன் கேளுங்க" என்று சொல்லத் தொடங்கினார் நடேசய்யர்.
"நான் ஒரு கம்பெனியிலே முன்னே வேலை பார்த்துண்டிருந்தேன். சம்பளம் 50 ரூபாய். பொங்கல் சமயத்திலே முதலாளிக்கு ஒரு லெட்டர் எழுதினேன், அப்போ அவர் பம்பாய் போயிருந்தார். பத்து வருஷம் வேலை பார்த்தும் 50 ரூபாய்க்கு மேலே சம்பளம் உயர மாட்டேங்கிறதே! இந்தப் பணத்தை வச்சிண்டு நான் எப்படி என் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்? என் உண்மையான உழைப்பிலே உங்களுக்கு மதிப்பு இருந்ததுன்னா என் சம்பளத்தை நூறு ரூபாயா பண்ணிப்பிடணும்! இல்லேன்னா வேலையை ராஜினாமா செய்யத் தயாரா இருக்கேன் அப்படீன்னு எழுதிப் போட்டேன்."
"அடடே! அப்புறம்..?"
"இரண்டு நாள் ஆகியும் பதில் வரலே. உடனே, உங்ககிட்டே வேலை செய்யறதைவிட ஒரு கழுதைகிட்ட வேலை செய்யலாம் அப்படின்னு கடுமையா ஒரு லெட்டர் எழுதிப் போட்டுட்டு, கூடவே என் ராஜினாமாவையும் அனுப்பிச்சுட்டேன்..."
"ஐயோ! அப்புறம்..?"
"மூணு நாள் கழிச்சுத் தபால்காரன் ஒரு கடுதாசியைக் கொண்டு வந்து கொடுத்தான். பிரிச்சுப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டுது. உன் உழைப்பை மெச்சி உனக்கு இனிமே மாசம் நூறு ரூபாய் சம்பளம் போட்டுத் தரப் போகிறேன் அப்படீன்னு முதலாளி எழுதியிருந்தார்..."
"ராஜினாமாவைப் பார்த்து பயந்துட்டாரா?"
"அதான் இல்லே! நான் முதல்லே எழுதினேன் பாருங்கோ ஒரு லெட்டர், அதுக்கான பதில் தான் இது. ஆனா, தபால்காரன் என்கிட்டே உடனே கொண்டு வந்து கொடுக்கலே! அது கிடைச்சிருந்தா நான் ராஜினாமா லெட்டரை எழுதியிருக்கவே மாட்டேன்... எனக்கு உத்தியோகமும் போயிருக்காது!"

 =====

[நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்

5 கருத்துகள்:

kankaatchi.blogspot.com சொன்னது…

பாராட்டுக்கள் நண்பரே

உங்கள் வலைபதிவிற்கு முதல் வருகை
மலரும் நினைவுகளாக இருக்கின்றன.
சுவைக்க இந்த வண்டு மீண்டும் வரும்

நிலைமை அன்றும் அப்படிதான்
இன்றும் அப்படிதான்.

ஆண்டுகள் பல உருண்டோடினும்
இன்றும் அதே நிலைமைதான்

அதுதான் அன்றே சொன்னார்கள்
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுஎன்று.

எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?

இப்படிதான் பல மனிதர்கள் அவசரப்பட்டு
ஏதாவது செய்துவிட்டு பழியை பிறர்மேல் போடுகிறார்கள்

விளைவுகளை ஆராயாமல் ஏதாவது பேசுவது,
தேவையில்லாமல் பிறர் விஷயங்களில் தலையிடுவது. பிறகு துன்பத்தில் மாட்டிகொண்டு தவிப்பது .இவரைபோல் ஏராளமான மனிதர்கள் உள்ளனர்

எவர்கள் எத்தனை முறை துன்பப்பட்டாலும் இறுதி வரை திருந்துவதும் கிடையாது, வருந்துவதும் கிடையாது.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, நண்பரே.

UK Sharma சொன்னது…

நல்ல சிரிப்புக் கதை. ஆனாலும் தபால்காரர்கள் சில சமயங்களில் சமயோசிதமாகவும் நடப்பது உண்டு. Malgudi Daysல் ஒரு கதை உண்டு.

kankaatchi.blogspot.com சொன்னது…

பழையது சாப்பிட்ட அந்த கால மக்களுக்கு அதன் அருமை தெரியும்.
ஒரு மனிதர் ஒருவர் மீது கோபம் கொள்வதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தான் செய்கிறது.

PC சொன்னது…

அருமையான கதை.