திங்கள், 21 ஜனவரி, 2019

1221. சங்கீத சங்கதிகள் - 176

பக்கத்து சீட்டில் பாலமுரளி
ஜே.எஸ்.ராகவன்

[ ஓவியம்: அரஸ் ]


ஐதராபாத் போக ஏர்பஸ் விமானத்தில் ஏற பாதுகாப்புத் தடவல்களை முடித்த கையோடு, கைப்பையுடன் ஏர்பஸ் விமானத்தில் ஏறினேன். வழக்கமாக சன்னமாக ஆலாபனை செய்யும் ஆனந்த பைரவி ராகத்தின் அரவணைப்பு என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தது. அனந்தராம தீட்சிதர் எல்லா ஸ்லோகங்களையும் அதே ராகத்தில்தான் சொல்வார். ஆகையினாலே அவருடைய அடையாளப் பெயர், ஆனந்த பைரவி அனந்தராம தீட்சிதர்.
கை குவித்து வரவேற்ற ஏர்ஹோஸ்டஸை எனக்குத் தெரியும். நர்கீஸ் மாதிரி இருப்பார். ஆனால், அவருக்கு என்னைத் தெரியாது. வழிதவறி விடப்போகிறேனே என்கிற கரிசனத்துடன் என்னை என் சீட் வரை அழைத்துக் கொண்டு உத்தரவு வாங்கிக் கொண்டு போனார். என்னுடைய இருக்கையைப் பார்த்தபோது ஒரு இன்ப அதிர்ச்சி. அட! அட!. நடு சீட்டில் சங்கீத கலாநிதி பால முரளி கிருஷ்ணா உட்கார்ந்திருந்தார். அடுத்த கணமே ஆனந்த பைரவி பவர் அவுட்டேஜ் வந்தது மாதிரி வாயில் பொசுக்கென்று உறைந்து போயிற்று. கேட்டிருப்பாரோ?

‘நம்ஸ்காரம்’ என்றார். அப்பா! என்ன குரல். நான் மேலும் திகைத்தேன். நானல்லவோ முந்திக் கொண்டு நமஸ்காரம் சொல்லி இருக்க வேண்டும்?. அசட்டுச்சிரிப்புடன், கைகளைக் கூப்பி, அருகில் உட்கார்ந்து கொண்டேன்.
நெடுங்காலம் சபாக்களில் தொலை தூரத்திலிருந்து பார்த்த அவரை, டைட் க்ளோசப்பில் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது. . கருப்பு சாந்து சூடிய அகன்ற நெற்றி.. கீழே கொழுக்கட்டை மூக்கில் இறங்கி, இரண்டு தாடைகளாக விரிவடைந்து நின்றது. வலது காதிலிருந்து இடது காதுவரை நீண்ட. வசீகரம், அன்பு, கரிசனங்களின் ராகமாலிகைப் புன்னகை. ‘’எல்லாம் இன்ப மயம்’ என்கிற சித்தாந்தத்துடன் இன்ப லாகிரியுடன் உட்கார்ந்திருந்த பாங்கு.
‘நடு சீட்டாச்சே? இம்சையாக இருக்குமே’ நான் வேணா மாறிக்கட்டுமா?’ என்றேன்.

சௌகரியமாய் சம்மணம் போட்டுக் கொண்டு சங்கீத சபா மேடையில் உட்கார்ந்திருப்பது போல ஏர் லைன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்,. ‘எனக்கு இதுதான் சௌகரியம். அந்தப் பக்கம் வயலின். இந்தப் பக்கம் மிருதங்கம்’ என்றிருக்குமோ? நான் வயலின் வாசிப்பவர் போல அவர் இடது பக்கத்திலிருந்தது சந்தோஷமாக இருந்தது.

பாலமுரளிக்கு, வயோலா ( வயலினின் குண்டு அண்ணாத்தை ), கஞ்சிரா, மிருதங்கம் எல்லாம் வாசிக்கத் தெரியும் என்று கேள்விம் பட்டிருக்கறேன். ஒரு முறை ஏற்பாடு செய்திருந்த வயலினிஸ்ட் வராததால் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கே வயலின் வாசித்திருக்கிறாராம். பின் என்ன வேணும்? அதைப் பற்றிச் சொன்னபோது உங்களுக்கு ஏதாவது இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிக்கத் தெரியுமா என்று கேட்டார். கல்யாணமான எல்லோரையும் போல மனைவிக்கு இரண்டாவது பிடில்தான் வாசிக்கத் தெரியும் என்று சொன்னேன். சிரித்தார்.

பாலமுரளி கார் பிரியர். பல கார்களை லாயத்தில் வைத்திருந்த அவர், காரோட்டியை வைத்துக் கொள்ளாமல் தானே ஓட்டுவதை விரும்புவார் என்று கேட்டிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு, அதே மாதிரி இந்தஃ ஏரோப்ளேனை ஓட்டுவீர்களா? அப்படி ஓட்டும்போது, கற்பனைச் சிறகை விரித்து, ஆகாஷ் ரஞ்சனி, மேகதூத் வர்ஷினி, பர்ஸாதி பந்தினி என்கிற புது ராகங்களை இயற்றிவிடுவீர்களா என்று கேட்க நினைத்தேன். ஆனால், அது தப்பு, கேலி செய்வது போல ஆகி விடும் என்று வாயைப் பொத்திக் கொண்டேன்.
சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு ஹம்மிங் செய்ய ஆரம்பித்தார். சில்க் ஜிப்பாவால் உறை போட்டிருந்த கைகள் அவர் முன்னால், நீண்டு வளைந்து, விரிந்து ராகத்தின் விரிவுக்கு ஏற்ப அபிநயம் பிடித்துக் கொண்டுருந்திருக்க வேண்டும்.

அவருடைய வலது பக்க ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த பான்-பராக் வாசனைப் பெருந்தகை, தன் பக்கத்தில் இருப்பவர் பால முரளி கிருஷ்ணாவா இருந்தால் என்ன? பகவான் கிருஷ்ணாவா இருந்தால் எனக்கென்ன என்று அன்றைய ஷேர் மார்க்கெட் விவரங்களை ஹிந்தி பேப்பரில் வாசித்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று கண்களைத் திறந்து என்னப் பார்த்தவர், ‘உங்கள் மனைவி ஒரு பாடகியா? கச்சேரிகள் செய்வாரா?’ என்று கேட்டு என்னை மிரள வைத்தார்.
எ…ன்…ன்…னது பாடகியா? கச்சேரிகள் செய்வாரா? என்னய்யா இது? என்னைப் பார்த்தால் ஒரு பிரபல பாடகியின் கணவன் மாதிரியாத் தெரிகிறது. ஓரிரு இஞ்ச் உயர்ந்த மாதிரி தோன்றியது. நான் இல்லை என்றால் பெருத்த ஏமாற்றம் அடைவேன் என்கிற பாவனையுடன் என்னைப் பார்த்திருந்தவரை ஏமாற்றாமல் இருக்க முடியவில்லை.
‘’கர்நாடக சங்கீதம் அவ்வளவு புண்ணியம் செய்யவில்லை’ என்று சொன்னேன். அழகாக சிரித்தார்.

ஆகாய வண்டி சிறிது தொலைவில் தென்பட இருக்கும் ஐதராபாத்தை மோப்பம் பிடித்து இறங்கத் தயாரானது. வழக்கமான பயிற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. கற்பனை உலகத்தில் மறுபடியும் சஞ்சரிக்கப் போன பாலமுரளி, நினைவு உலகத்திற்கு வந்து சீட் பெல்ட்டைப் பூட்டிக் கொண்டார்.
விமானம் இறங்கி ஓடி நின்றவுடன், கைப்பையை எடுத்துக் கொண்டு வெளிக் கதவை நோக்கி நகர்ந்தார். வாசற் கதவருகில் நின்றருந்த ஏர் ஹோஸ்டஸுடன் இரண்டு உபசார வார்த்தைகளைப் பேச நின்றவர், பின்னால் ஒரு அடி விட்டு மரியாதையாக நின்ற எனக்கு வழி விட நகர்ந்து, ‘ம். நீங்க போங்க.. நாம மறுபடியும் சந்திக்கணுமே?’ என்றார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது. ‘ஆமாம், சார். ஒரு நாள் போறுமா? இன்றொரு நாள் போறுமா? என்று கேட்டு விட்டு இறங்கினேன்.

-----oOo------
[ நன்றி: மாம்பலம் டைம்ஸ், ஜே.எஸ்.ராகவன் ]


தொடர்புள்ள பதிவுகள்: 

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக