திங்கள், 25 மார்ச், 2019

1256. சாருகேசி -1


சாருகேசியும் நாங்களும்!

சுப்ரபாலன்  

அண்மையில் ( ஜனவரி 30, 2019) மறைந்த இனிய நண்பர் சாருகேசிக்கு அஞ்சலியாய் அவர் நண்பர் சுப்ர.பாலன்  ‘ தினமணி கதி’ரில் எழுதிய கட்டுரையை இங்கிடுகிறேன். 
====

அண்மை நாட்களில் இலக்கிய உலகில் இரண்டு முக்கியமான நண்பர்களை உயிர்க்கொல்லி நோய்க்கு பலி கொடுத்து விட்டோம். சில வாரங்களுக்கு முன்னால் பிரபஞ்சன். இப்போது சிரிக்கச் சிரிக்கப் பேசியும் எழுதியும்  வந்த நண்பர் "சாருகேசி'  புகை, மது என்று எந்தவிதமான சங்கடங்களுக்கும் ஆட்படாமல் இருந்தாலும்கூட இந்தச் சனியன் விடாதோ?

சாருகேசி விஸ்வநாதனின் மறைவு மற்ற எல்லாத் துறைகளையும் விட பாரம்பரியமான லலித கலைகளைப் பற்றிய ஆரோக்கியமான, நடுநிலையான விமர்சனத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு. அற்புதமான இசை நடன விமர்சனங்கள் தவிர, ஏராளமான மருத்துவக் கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், திருத்தலப் பயண ஆன்மிகக் கட்டுரைகள், நகைச்சுவை நிஜமாகவே கொப்பளித்துப் பொங்கிப் பிரவகிக்கும் சிறுகதைகள், நாடகங்கள் என்று ஓயாமல் எழுதிக் குவித்தவர். 

அவர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த "கல்கி' தவிர, தினமணி, அமுதசுரபி, கலைமகள் என்று பல இதழ்களில் "சாருகேசி'யின் கெளரவமான எழுத்துகள் இடம்பெற்றன.  தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் சரளமாக எழுதுகிற ஆற்றல் பெற்றிருந்தார். கலைமகள் நிறுவனத்து "ஆர்வி'யின் பேரன்புக்குரியவராக இருந்த சாருகேசியின் முதல் எழுத்து "கண்ணன்' இதழில்தான் வெளியானது. முதல் சிறுகதையை "கல்கி' வெளியிட்டது.

வாழ்நாளில் தம்முடைய எழுத்துக்களை ஒரு முறைகூட நூல் வடிவத்தில் காணமுடியாமல் அமரரான ஆனந்தவிகடன் "தேவன்' அவர்களுடைய "ஐந்து நாடுகளில் அறுபது நாள்' பயணத்தொடர் முதலான எல்லா நூல்களையும் "அல்லயன்ஸ்' நிறுவனம் மூலம் வெளியிடச் செய்தது சாருகேசியின் அரிய தொண்டு. அந்த "அமரர் தேவ'னின் பெயரால் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தகுதியான பலருக்கு உதவிகள் செய்ததோடு ஆண்டுதோறும் கலை இலக்கியம் தொடர்பான இருவருக்கு "அமரர் தேவன் நினைவு அறக்கட்ளை விருது'களையும் வழங்கி வந்தார். ஃபைஸர் மருத்துவ நிறுவனத்தில் நிறைவாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் தம்முடைய முழுநேரத்தையும் எழுத்திலும் கலா ரசனையிலுமே செலவிட்டார்.

விரிவான நட்பு வட்டம் அவருடையது. "கல்கி' இதழுக்காக ப்ரியன், சந்திரமெளலி, சாருகேசி என்று நாங்கள் நால்வரும் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதவை. அப்போதைய ஆசிரியர் கல்கி ராஜேந்திரன் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் நாங்கள் கூடியிருந்து அவரோடு பல விஷயங்களைப் பற்றி உற்சாகமாகக் கலந்துரையாடியது ஒரு பொற்காலமேதான்.

சுதாமூர்த்தி உட்படப் பல பிறமொழி ஆசிரியர்களின் நூல்களைப் பக்குவமான இனிய தமிழ்நடையில் மொழியாக்கம் செய்ததும் சாருகேசியின் அரும்பணிகளுள் ஒன்று. 

அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர்களால் இன்னும் சில மாதங்களுக்காவது நல்ல உறக்கம் கொள்ள முடியாது. "அதானே...', "அச்ச்சோ..', "பாருங்கோளேன்' போன்ற முத்திரைச் சொற்களை அவரைப்போல் அனுபவித்துப் பயன்படுத்த எத்தனைபேரால் ஆகும்?.
நாரதகான சபா ஆதரவில் நடைபெற்ற "நாட்டியரங்கம்' நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் வடிவமைத்து, வித்தியாசமான பாடுபொருள்களைத் தேர்வு செய்துதந்து வழிநடத்தியவர் சாருகேசி. அவ்வாறே சில ஆண்டுகளாக "டாக் மையத்'தின் ஆர்.டி. சாரியின் ஆதரவோடு நடைபெற்று வருகிற "தமிழ்ப் புத்தக நண்பர்கள்' அமைப்பின் நால்வருள் ஒருவராகப் பணியாற்றிவந்தார். "இந்த மாதாந்திர விமர்சனக் கூட்டங்களுக்கான மதிப்பீட்டுக்குரிய நூலையும் தக்க விமர்சகரையும் தேர்வு செய்வதில் முழுப்பொறுப்பும் சாருகேசி சாருடையதுதான்' என்று ஒவ்வொரு கூட்டத்திலும் உற்சாகமாகப் பிரகடனம் செய்வார் அமைப்பாளர்களுள்  ஒருவரான ரவி தமிழ்வாணன். இந்த அமைப்பின் இன்னொரு நண்பர் ஆர்.வி.ராஜன் குறிப்பிட்டுள்ளவாறு "சாருகேசி ஒரு gentleman to the core.  இதைத் தமிழில் அத்தனை அழகுச் செறிவோடு சொல்ல முடியவில்லை. 

நண்பர் சாருகேசி தம்முடைய உணவில் மருத்துவப் பயன்கள் நிறைந்த வெங்காயத்தைக் கண்டிப்புடன் தவிர்த்து வந்தார். இதனாலேயே திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குப் போனால் விருந்துகளில் கலந்து கொள்வதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவார். சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான மருத்துவ ஆய்வேடு ஒன்றில்,  "வெங்காயமும் மஞ்சளும் உணவில் சேர்ப்பது புற்றுநோய்க் காரணிகளை அண்டவிடாமல் செய்யும்' என்று படித்தது நினைவுக்கு வருகிறது. முற்றிலும் குற்றமில்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருந்த நண்பர் சாருகேசி, வெங்காயத்தோடும் "சிநேகமாக' இருந்திருந்தால் ஒருவேளை இன்னும் சிலகாலம் நம்மோடு இருந்திருப்பாரோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

  [ நன்றி: தினமணி கதிர் ] 

1 கருத்து:

ஜீவி சொன்னது…

'கலைமகள்' ஆர்வி என்று அழைப்பதை விட 'கண்ணன்' ஆர்வி என்று அழைப்பது நிறைவாக இருக்கும். இல்லை, கிவாஜ காலத்துக் கலைமகள் என்று திருத்தியாவது சொல்லலாம்.

கருத்துரையிடுக