செவ்வாய், 19 ஏப்ரல், 2016

தென்னாட்டுச் செல்வங்கள் - 18

தென்னாட்டுச்  செல்வங்கள் - 18
மீனாட்சி திருக்கல்யாணம்

ஏப்ரல் 19, 2016. இன்று மீனாட்சி திருக்கல்யாணம்.

சித்திரைத் திருவிழாவில் நேற்று மதுரையின் அரசியாக மீனாட்சிக்குப் பட்டம் சூட்டப் பட்டிருக்கும். இரவில் மீனாட்சி எல்லாத் தேவர்களையும் திக்விஜயத்தில் வென்று, கடைசியில் சுந்தரேஸ்வரரை அடையும் வைபவம் நடந்திருக்கும். இன்று முத்தாய்ப்பாய்த் திருக்கல்யாணம்.

சக்தி விகடனில்’ 2012-இல் வந்த ஒரு கட்டுரையிலிருந்தும், ”தென்னாட்டுச் செல்வங்கள்”  தொடரின் கட்டுரையிலிருந்தும் ஒரு பகுதி   இதோ :

" தென்னாட்டுச் செல்வங்கள்” என்ற இலக்கிய-ஓவியத் தொடர் 1948 -ஜனவரியில் விகடனில் தொடங்கியது என்பதை நினைவூட்டுகிறேன். மீனாட்சி கோயிலில் உள்ள ஊர்த்வ கணபதியின் ஓவியத்துடன் தான் தொடர் தொடங்கியது!

============




 மதுரை கோயிலில் ஒவ்வொருவரும் தரிசித்துப் பேறு பெற வேண்டிய சிற்பம்- அருள்மிகு மீனாட்சியம்மையின் கல்யாணத் திருக்கோலம்!

பாண்டிய மன்னன் மலையத்துவஜனின் செல்வ குமாரி ஸ்ரீ மீனாட்சியை, கயிலைக் கடவுளாம் ஸ்ரீசுந்தரேசர் மணந்து கொள்ளும் காட்சியை மிக அற்புதமாக வடித்திருக்கிறார்கள். திவ்யாபரண பூஷிதையாகவும், பீதாம்பரங்களால் அலங்கரிக்கப்பட்டவளாகவும், பிரும்ம ஸுரேந்திரர்களால் பணி செய்யப்பட்டவளாகவும், கருணா சமுத்திரமான அம்பிகை சிவபெருமானின் வாம பாகத்தில் இருக்க... தேவாதிதேவன் சர்வ மங்கலமான கோலத்தில் அருகில் நிற்கிறார். பசுபதியின் இடக்கரத்திலே அபய முத்திரை ஜடாமகுடத்தில் சந்திரப்பிறை. இந்த ஜகன்மோகன தம்பதியின் கைகளீலே மலர்ந்த முகத்துடன் திருமால் தாரை வார்க்கிறார்.

முனிபுங்கவர்கள் கீழே ஹோமங்கள் நடத்துகின்றனர். தேவ கன்னிகைகள் வீணா வேணு மிருதங்க வாத்தியங்கள் சகிதமாக நடனமாடுகிறார்கள்.ஒரே கல்லில் சிருஷ்டியானது இந்தச் சிற்பம்.

அம்மை-அப்பனின் கல்யாணக் கோலங்களில். மதுரையில் உள்ள இந்தத் திருக்கோலம் கன்னிகா தான திருக்கோலம் ஆகும். கல்யாண வரத்துக்காகக் காத்திருக்கும் கன்னிப் பெண்களும் இளைஞர்களும் தரிசித்து வணங்கவேண்டிய திருக்கோலம் ஆகும்.  மதுரைக்குச் செல்லும் பக்தர்கள் மீனாட்சியம்மையையும் கந்தரேஸ்வரரையும் தரிசித்து வழிபடுவதுடன், கோலாகலமான இந்த திருக்கல்யாண சிற்பத்தையும் தரிசித்து வாருங்கள். உங்கள் வீட்டிலும் விரைவில் சுபகாரியம் கைகூடும்; கெட்டிமேளம் முழங்கும்!

[ நன்றி: சக்தி விகடன், ஆனந்த விகடன் ]

போனஸ்:  கோபுலு மீனாட்சி கல்யாணம் வரைந்திருக்கிறார். பார்த்திருக்கிறீர்களா?



தொடர்புள்ள  பதிவுகள்:


2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஐயா இந்த சிற்பத்தில் மணமகளின் கை கீழே உள்ளது. கன்யாதானத்தின்போது மணமகளின் கை, கோபுலுவின் ஓவியத்தில் உள்ளது போல், மேலே அல்லவா இருக்கும். ஏன்இந்த முரண்பாடு.
கோவிந்தஸ்வாமி

Pas S. Pasupathy சொன்னது…

ஒரு ஸ்தபதியைத் தான் கேட்கவேண்டும்.