சனி, 16 ஏப்ரல், 2016

வ.சுப.மாணிக்கம்

தமிழ் இமயம் வ.சுப.மாணிக்கம்

இடைமருதூர் கி.மஞ்சுளா


ஏப்ரல் 17. தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் பிறந்த நாள். அவருடைய நூற்றாண்டும் இன்று தொடங்குகிறது.

2009-இல் தினமணியில்  இ.கி.மஞ்சுளா அவர்கள் எழுதிய கட்டுரை இதோ!
=====


""எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங்கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல் இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள். தமிழுக்குத் "தொல்காப்பியமும்', வாழ்வின் உயர்வுக்குத் "திருக்குறளும்', உயிர்த் தூய்மைக்குத் "திருவாசகமும்' எனக்கு வழிகாட்டிய தமிழ் மறைகள்'' என்று கூறி, வாழ்ந்த மூதறிஞர், தமிழ் இமயம் எனப் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார்.

  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரியில் 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி நாட்டுக்கோட்டை நகரத்தார் வகுப்பில் வ.சுப்பிரமணியன் செட்டியாருக்கும் -  தெய்வானை ஆச்சிக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் அண்ணாமலை. பிற்காலத்தில் மாணிக்கம் என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.

  வ.சுப.மாணிக்கத்திற்கு ஆறு வயது ஆனபோது அவரது தாய் இறந்தார். அடுத்த பத்தாவது மாதம் தந்தையும் இறந்ததால், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து துன்புற்றார். இச்சூழ்நிலையில், தாய்வழிப் பாட்டி மீனாட்சியும் தாத்தா அண்ணாமலை செட்டியாருமே அவரை மகனாகப் பாவித்து வளர்த்தனர்.

  ஏழு வயதுவரை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாண்டுகள் ஆரம்பக்கல்வி பயின்றார். பதினொன்றாம் வயதில் தொழில் கற்றுக்கொள்வதற்காக பர்மாவுக்கு அனுப்பப்பட்டார். பர்மாவின் தலைநகரான ரங்கூனில், ஒரு வட்டிக் கடையில் வேலைபார்த்து வந்தார்.

  கடை முதலாளி அவரிடம், ""குறிப்பிட்ட நபர் வந்து கேட்டால் முதலாளி இல்லை என்று சொல்லி விடு!'' என்று கட்டளை இட, ""முதலாளி வெளியில் சென்றிருந்தால் இல்லை என்பேன்; இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்'' என்று முதலாளியிடம் பதில் கூறியதால், அன்றே பணியிலிருந்து நீக்கப்பட்டார் வ.சுப.மா. இந்நிகழ்ச்சியினாலேயே "பொய் சொல்லா மாணிக்கம்' என்று பின்னாளில் அவர் அழைக்கப்பட்டார் என்றுகூட சொல்வர் அறிஞர் பெருமக்கள்.

  பர்மாவில் இருந்து திரும்பிய வ.சுப.மா.வை, தமிழ் மொழியின் மீது மிகுந்த நாட்டம் கொள்ளச் செய்தவர் பண்டிதமணி மு.கதிரேசச்செட்டியார். அவரது பெரும் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் வ.சுப.மா.

  பின்னர் 1945-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல், எம்.ஏ.,(1951) ஆகிய பட்டங்களைப் பெற்றார். பின்னர் "தமிழில் வினைச்சொற்கள்' என்ற பொருளில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டமும், "தமிழில் அகத்திணைக் கொள்கை' என்னும் பொருளில் ஆராய்ந்து பிஎச்.டி. (முனைவர்) பட்டமும் பெற்றார்.

  1945-இல் நெற்குப்பையைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சியைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

   1941 - 1948 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் அங்கிருந்து விடைபெற்று, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். ஆறு ஆண்டுகள் அக்கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1970 முதல் 1977 வரை ஏழாண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல முதல்வராகவும் பணிபுரிந்தார் வ.சுப.மா.

  வள்ளுவம், தமிழ்க்காதல், கம்பர் போன்ற அவரது ஆய்வு நூல்கள் தமிழக அரசின் பரிசு பெற்றவை. தொல்காப்பியப் புதுமை, எந்தச் சிலம்பு, இலக்கிய விளக்கம், சிந்தனைக் களங்கள், ஒப்பியல் நோக்கு, தொல்காப்பியத் திறன் போன்றவை பல்பொருள் குறித்த ஆய்வு நூல்கள். மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில், ஆகிய நான்கும் நாடக நூல்கள். கொடை விளக்கு, மாமலர்கள், மாணிக்கக் குறள் என்பன அவரது கவிதை நூல்கள். இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப் பட்டயங்கள் இரண்டும் வ.சுப.மா. பதிப்பித்த நூல்கள். "தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை', திருக்குறள் தெளிவுரை, நீதிநூல்கள் உரை என்பன அவர் வெளியிட்டுள்ள உரை நூல்கள்.

The Tamil Concept of Love,A Study of Tamil Verbs, Collected Papers,
Tamilology    என்பன வ.சுப.மா. எழுதியுள்ள ஆங்கில நூல்கள். இவைதவிர "தலைவர்களுக்கு' என்பது வ.சுப.மா. கடித வடிவைக் கையாண்டு எழுதியுள்ள குறிப்பிடத்தக்க நூல்.

  ""பெண்ணுக்குக் கற்பினைப் போன்றது கவிஞருக்குக் கற்பனை. கற்பனை இல்லாமல் கவிஞர் இருக்க முடியாது; கவிதை பிறக்க முடியாது. கவிதை என்றால் அதில் கற்பனை கட்டாயம் கலந்திருக்கும்; புலவர்கள் குறிக்கோள் உடையவர்கள். அக்குறிக்கோளைப் பதியவைப்பதற்கு அன்னவர்கள் கையாளும் இலக்கியக் கருவியே கற்பனை யென்பது'' என தமிழ்க்காதல் என்ற நூலில் கற்பனைக்கு விளக்கம் தந்துள்ளார் வ.சுப.மா.

  உரையாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், உரைநடை ஆசிரியர் போன்ற பன்முகங்கொண்ட வ.சுப.மா. மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். அவரது சிந்தனைச் செழுமையை அவரது நூல்கள் அனைத்திலும் காணமுடிகிறது. வ.சுப.மா. பழமையைப் போற்றியது மட்டுமல்லாமல் புதுமையை இருகரம் கொண்டு மனமார வரவேற்கும் சிறந்த பண்பாளராகவும் விளங்கினார்.

  உயர்ந்த குறிக்கோள் உடைய வாழ்வே வாழ்வு; குறிக்கோள் இல்லையென்றால் அதற்குப் பெயர் வீழ்வு! என்று கூறும் வ.சுப.மா., குறிக்கோள் இல்லாத வாழ்வு எத்தகையது என்பதை ஒரு கவிதை மூலம் அழகாக; தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

  "குறிக்கோள் இலாத வாழ்வு

      கோடுகள் இலாத ஆட்டம்;

  நெறிக்கோள் இலாத நெஞ்சு

     நிறைநீர் இலாத யாறு;

  மறிக்கோள் இலாத கல்வி

      வரப்புகள் இலாத நன்செய்;

  செறிக்கோள் இலாத மேனி

      திறவுகோல் இலாத பூட்டாம்''

(மாமலர்கள்-ப.60)

  தமிழின் வளர்ச்சிக்குப் புதிய சொல்லாக்கங்களை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது என்பது வ.சுப.மா.வின் அசைக்கமுடியாத கருத்து. இத்தகைய சொல்லாக்கங்களைப் படைப்பது அவருக்குக் கைவந்த கலை.

  "தமிழ் வழி கல்வி இயக்கம்' என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் தமிழ் பரப்ப, தமிழ் யாத்திரை மேற்கொண்டார்.

  தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அற நிலையத்திற்கு வழங்கவேண்டும்; தாம் பிறந்த ஊரான மேலைச்சிவபுரியில் கல்வி, மருத்துவம், நலவாழ்வு, குழந்தைநலம், சாதி சமய வேறுபாடின்றி இலவசமாகச் செலவு செய்ய வேண்டும் என்றும், தம் நூலகத்தில் தாம் தொகுத்து வைத்துள்ள நூல்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்றும் இவ்வாறு தமது விருப்பத்தை உயிலில் குறித்துவைத்திருந்தார்.

  எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று முழங்கிய அந்தத் தமிழ் மாமலை, 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி புதுச்சேரியில் சரிந்தது. என்றாலும் இன்று வரை அவரது ஆன்மா, தமிழ் உள்ள இடங்களில் எல்லாம் நூல் வடிவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது!

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

மாணிக்கனார் பற்றிய மணிமணியான செய்திகள் ! அவர்செய்த தமிழ்ப்பணி.அவரை அமரருள் உய்த்துவிடும் !