20 . தலைமைக் கிரீடம்
கல்கி
கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி 2) என்ற நூலில் வந்த 20-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
"அந்த நாட்களில் வாழ்ந்திருப்பதற்கே பாக்கியம் செய்திருக்கவேணும்!" என்று சொல்லும்படியாக ஒவ்வொரு நாட்டின் சரித்திரத்திலும் ஒரு காலம் வருவதுண்டு. பாரத நாட்டின் சரித்திரத்திலும் 1921-ஆம் வருஷம் அத்தகைய வருஷம். அந்த வருஷத்தில் காந்தி மகானின் தலைமையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தியாகமாகிய வேள்வித் தீயில் குதித்தார்கள். சுயநலம் என்பதை அடியோடு மறந்து, "தாய்நாட்டிற்கே உழைக்க-ஜன்மம் எடுத்தோம்" என்று பாடிக்கொண்டு சுதந்திரப்போரில் ஈடுபட்டார்கள். இதற்கெல்லாம் காரணமாயிருந்தது நாகபுரி காங்கிரஸ். மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாகத் தலைவர்களுக்குள் ஏற்பட்டிருந்த வேற்றுமைகள் நாகபுரி காங்கிரஸில் மறைந்து விட்டன. வோட்டு எடுக்காமல் ஏக மனதாகத் தீர்மானங்கள் நிறைவேறின. இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று பார்க்கலாம்.
* * *
சட்ட சபை பகிஷ்காரம் வெற்றியடைந்தது என்பதாக மகாத்மா காந்தியும் அவருடைய சீடர்களும் கருதினார்கள். ஆனால் கல்கத்தா விசேஷ காங்கிரஸில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்த தலைவர்கள் அவ்விதம் கருதவில்லை. "சட்ட சபை ஸ்தானம் ஒன்றுகூடக் காலியாக இல்லையே? தேசியவாதிகள் கைப்பற்றி யிருக்ககூடிய ஸ்தானங்களில் அதிகார வர்க்க தாஸர்கள் வீற்றிருக்கிறார்களே? வோட்டு எத்தனை பேர் கொடுத்தால் என்ன? காரியம் நடந்து கொண்டு தான் இருக்கிறது? அதிகார வர்க்கத்துக்கஇன்னும் சௌகிரியமாகத்தானே போயிற்று?" என்று அவர்கள் வாதமிட்டார்கள். வக்கீல்கள் வேலையே விடுவது, மாணாக்கர்கள் கலாசாலைகளை விடுவது,- ஆகிய திட்டங்களையும் காரியாம்சத்தில் நிறைவேற்ற முடியாது என்று நினைத்தார்கள். ஆகையால் 1920-ஆம் வருஷம் டிசம்பர் மாதக் கடைசியில் நாகபுரி காங்கிரஸில் மகாத்மாவின் திட்டத்தை மாற்றி விடுவதற்காகப் பலம் திரட்டத் தொடங்கினார்கள். காந்திஜியின் சீடர்களும் சும்மா இருக்கவில்லை. அவர்களும் நாகபுரி காங்கிரஸில் பலப் பரிட்சைக்கு ஆயத்தமானார்கள்.
ஆகவே நாகபுரி காங்கிரஸ் மிகவும் முக்கியத்தை அடைந்தது. அதற்கு முன்னாலும் பின்னாலும் நடந்த வேறு எந்த காங்கிரஸுக்கும் அவ்வளவு பிரதிநிதிகள் வந்ததில்லை. மொத்தம் 14,582 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் தம்முடைய சொந்த பணத்தில் முப்பதாயிரம் ருபாய் செலவு செய்து இருநூற்று ஐம்பது பிரதிநிதிகளை அழைத்து வந்தார். (இதில் மூடு மந்திரம் ஒன்றும் இல்லை. சித்தரஞ்சனதாஸ் பகிரங்கமாக கூறிய விஷயந்தான். ) இப்படியே பிரபல தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாகப் பிரதிநிதிகளைத் திரட்டிக் கொண்டு வந்தார்கள்.
பழம் பெரும் தேசபக்தரான சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் நாகபுரி காங்கிரஸுக்குத் தலைமை வகித்தார். அவர் தமது தலைமை உரையில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்தே பேசினார். "அப்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவது என்று ஏற்பட்டால், பஞ்சாப்-கிலாபத் அநீதிகளுக்காக மட்டும் அதைத் தொடங்குவனேன்! சுயராஜ்ய சித்திக்காகவே அந்த இயக்கத்தை நடத்தலாமே?" என்றார்.
தம்மை எதிர்பவர்களுடைய பேச்சை மகாத்மா எப்போதும் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்பது வழக்கம். ஏதேனும் ஒன்று நியாமாகத் தோன்றினால் அதை ஒப்புக்கொள்ளத் தவறுவதுமில்லை.
பஞ்சாப் கிலாபத் அக்கிரமங்களுக்குப் பரிகாரம் தேடவே ஒத்துழையாமை ஆரம்பிப்பதாகக் காந்திஜி சொன்னதின் காரணம் என்ன தெரியுமா? அந்த இரண்டு அநீதிகளுக்கும் பரிகாரம் பெறுவதில் வெற்றி பெற்றோமானால், அந்தப் போரில் நமக்கு ஏற்படும் பலமே சுயராஜ்யம் அளித்துவிடும் தான். ஆனால், ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியாரின் யோசனையை ஏற்று கொள்வதில் ஆட்சேபம் ஒன்றும் இருக்கவில்லை. எனவே, சுயராஜ்ய சித்தியையும் ஒத்துழையாமையின் மூன்றாவது நோக்கமாக கொள்வதாக மகாத்மா ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலிய தலைவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தையே எதிர்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்தார்கள் அல்லவா? ஆனால் நாகபுரி காங்கிரஸ் விடுதிக்கு வந்து சேர்ந்ததும் அவர்களுக்குத் தயக்கம் உண்டாகி விட்டது. காந்திஜியை எதிர்ப்பது வீண்வேலை என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குள்ளே காந்திஜியின் திட்டத்துக்கு அமோகமான ஆதரவு இருப்பதைக் கண்டார்கள். அதுமட்டுமல்ல; அமிருதசரஸ் காங்கிரஸுக்கு வந்திருந்த பிரதிநிதிகளைப் போலவே நாகபுரிக்கு வந்திருந்த பிரதிநிதிகளும் தலைவர்கள் வேற்றுமைப்பட்டு விவாதம் செய்வதை விரும்பவில்லையென்று தெரிந்தது.
ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலியவர்கள் இன்னொரு விஷயத்தையும் கண்டார்கள். காந்திஜியின் வேலைத் திட்டங்களைச் சாதாரண அறிவாராய்ச்சிகளுக்கு உட்படுத்துவதில் பிரயோஜனமில்லை. அந்த மகான் மற்றவர்களைப்போல லாப நஷ்டங்களையும் பலா பலன்களையும் யோசித்துக்கொண்டு ஒரு திட்டத்தை செலுத்துவதில்லை. அவருடைய அந்தராத்மா எந்த வழியைச் சொல்கிறதோ, அதை அவர் சொல்லுகிறார். தமது உள்ளுணர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு வாதமிடுகிறார். அவர் சொல்லும் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தமது ஆத்ம சக்தியையே நம்பியிருக்கிறார்.
இத்தகைய மகா புருஷருக்கு முன்னால் வெறும் வாதங்கள் என்ன செய்ய முடியும்? தேச மக்களும் அவருடைய வார்த்தையே வேத வாக்காகக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்களுடைய தீர்க்க யோசனை வாய்ந்த அறிவுக்கு உகந்த, வாதங்களைச் செவி கொடுத்துக் கேட்பதுகூட இல்லை!
இந்த நிலைமையை நாகபுரிக்கு வந்து சேர்ந்த தலைவர்கள் நன்கு உணர்ந்தார்கள். மகாத்மாவின் ஆத்ம சக்தி அவர்களையும் ஆட்கொண்டது. கல்கத்தா காங்கிரஸின் போதே காந்திஜியை சேர்ந்து விட்ட பண்டித மோதிலால் நேரு இந்தக் காங்கிரஸில் சமரசம் செய்து வைப்பதில் முன்னணியில் நின்றார். மற்றத் தலைவர்களும் சமரசத்துக்குத் தயாராகவே இருந்தார்கள்.
விஷயாலோசனைக் கமிட்டியில் ஓரளவு விவாதம் நடந்தது. மகாத்மாவின் திட்டத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் முதலியவர்கள் எதிர்த்துப் பேசினார்கள். அந்த நாளில் இந்தியாவின் நண்பர்கள் சிலர் இங்கிலாந்தில் இருந்தார்கள். இவர்களில் கர்னல் வெட்ஜ்வுட், மிஸ்டர் பென்ஸ்பூர், மிஸ்டர் ஹால்பர்ட் நைட் ஆகியவர்கள் நாகபுரி காங்கிரஸுக்கு வந்திருந்தார்கள். அவர்களும் "ஒத்துழையாமைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம்" என்று சொல்லிப் பார்த்தார்கள். மகாத்மா காந்தி எழுந்து ஆட்சேபங்களுக் கெல்லாம் பதில் சொல்லியபோது எதிர்த்தவர்கள் எல்லாரும் மந்திரத்தில் கட்டுண்டவர்கள் போல் ஆகிவிட்டார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவே துணிய வில்லை. எதிர்க்க வந்தவர்களும் எதிர்த்துப் பேசியவர்களும் தங்கள் எதிர்ப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். மகாத்மாவின் திட்டத்தையும் பூரணமாக ஒப்புக்கொண்டார்கள்.
ஆகவே காங்கிரஸ் மகாசபை கூடியபோது, ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் பிரேரேபித்தார்! ஸ்ரீ லாலா லஜபதிராய் ஆமோதித்தார்!! எதிர்ப்பு என்பதே இல்லை.தீர்மானம் நிறைவேறுவதற்குக் கேட்பானேன்? ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் அமோகமான ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
அப்போது அந்தப் பிரம்மாண்டமான காங்கிரஸ் பந்தலில் ஏற்பட்ட குதூகலத்தையும் அமளியையும் சொல்லிமுடியாது. தீர்மானம் நிறைவேறியதில் பிரதிநிதிகளுக்குச் சந்தோஷம். அதிலும் தலைவர்களுக்குள்ளே வேற்றுமை இல்லாமல், வோட்டு எடுக்காமல் ஏகமனதாக நிறைவேறியதில் அளவில்லா ஆனந்தம். மகாத்மாவின் தலைமையில் இந்தியா சுயராஜ்யம் அடைவது நிச்சயம் என்ற உறுதி எல்லாருடைய மனதிலும் ஏற்பட்டுவிட்ட படியால் அடங்காத உற்சாகம்.
இவ்வாறு நாகபுரி காங்கிரசில் தலைமைக் கிரீடம் காந்தி மகாத்மாவுக்குச் சூட்டப்பட்டது. அன்று முதல் 1948-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வரையில் காந்தி மகாத்மா தான் காங்கிரசின் உண்மையான தலைவராயிருந்தார். அந்தந்த வருஷத்துக் காங்கிரஸ் அக்கிராசனர் யாராயிருந்த போதிலும், மகாத்மாவே காங்கிரஸின் உண்மையான நிரந்தரத் தலைவராயிருந்தார். காங்கிரசிலிருந்து மகாத்மா காந்தி வெளிப்படையாக விலகி நின்ற காலத்திலும், அவரைத் தலைவராக எண்ணிக் கொண்டுதான் மற்றவர்கள் காரியங்களை நடத்தினார்கள்.
காந்திஜி காங்கிரசின் பூரண தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார் என்பது இன்னொரு முக்கியமான காரியத்தின் மூலமாகவும் நாகபுரியில் வெளியாயிற்று.
அது வரையில் காங்கிரசுக்கு ஒழுங்கான சட்டம், விதி, அமைப்புத் திட்டம் ஒன்றும் இல்லாமலிருந்தது. யார் வேண்டுமானாலும் காங்கிரஸ் பிரதிநிதியாக வந்துவிடலாம். வருஷத்துக்கொரு தடவை காங்கிரஸ் கூடிக் கலைந்துவிடும். அடுத்த காங்கிரஸ் வரையில் பொறுப்புடன் வேலை செய்யக்கூடிய ஸ்தாபனம் கிடையாது. காங்கிரஸ் மகாசபையில் நிறைவேறிய தீர்மானங்களை நடத்தி வைக்க ஏற்பாடு ஒன்றும் கிடையாது.
அமிருதஸரஸ் காங்கிரஸிலேயே மகாத்மா இந்தக் குறை பாட்டைக் கண்டு சில தலைவர்களிடம் பிரஸ்தாபித்தார். காங்கிரஸுக்கு அமைப்பும் விதிகளும் தயாரிப்பதற்கு அமிருதஸரஸிலேயே ஒரு கமிட்டி நியமித்தார்கள். அந்தக் கமிட்டியில் காந்திஜியையும் அங்கத்தினராக்கினார்கள். மற்ற இரண்டு அங்கத்தினர்கள் சும்மா இருந்துவிட, அமைப்பு விதிகள் தயாரிக்கும் வேலை முழுதும் மகாத்மா காந்தியின் தலையிலேயே சார்ந்தது.
காந்திஜி தயாரித்த அமைப்பு, காங்கிரஸ் மகாசபையில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்படி காங்கிரசின் லட்சியத்தை ஒப்புக்கொண்டு நாலணா வருஷ சந்தா செலுத்துவோரெல்லாம் காங்கிரஸ் அங்கத்தினராகச் சேரலாம்.
இத்தகைய நாலணா காங்கிரஸ் அங்கத்தினர்கள் மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த அங்கத்தினரே காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆவார்கள். மொத்தம் 6000 பிரதிநிதிகளுக்கு மேல் போகக் கூடாது என்று வரையறுக்கப்பட்டது. (பின்னால் இதுவும் அதிகம் என்று கண்டு காங்கிரஸ் பிரதிநிதிகளின் தொகை மூவாயிரம் ஆகக் குறைக்கப்பட்டது)
மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரால் தேர்ந் தெடுக்கப்படுவோர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர் ஆவர். இவர்களின் தொகை 350. ஆனால் இத்தனை பேர் ஒவ்வொரு தடவையும் கூடி எந்தக் காரியத்தையும் செய்ய முடியாதல்லவா? இதற்காக வருஷம் முழுதும் இடைவிடாமல் காங்கிரஸ் வேலைகளைக் கவனித்து நடத்துவதற்காக, காங்கிரஸ் காரியக்கமிட்டி ஒன்று ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப் பட்டது.
காங்கிரஸ் அமைப்பு விதிகளைக் காட்டிலும் முக்கியமானது காங்கிரஸின் இலட்சியம். 'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குட் பட்ட குடியேற்ற நாட்டு அந்தஸ்து' தான் அதுவரையில் காங்கிரஸின் இலட்சியமாயிருந்தது. அதை அடைவதற்கு வழி 'சட்ட வரம்புகுட்பட்ட' கிளர்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தது. காந்திஜிஇதை மாற்றி 'அமைதியான, நேர்மையுள்ள, எல்லா முறைகளினாலும் சுயராஜ்யம் அடைதல்' என்று காங்கிரஸ் இலட்சியத்தை அமைத்தார்.
"ஒத்துழையாமை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்டதல்ல" என்று ஆட்சேபம் சொல்லப்பட்டதல்லவா? இப்போது காங்கிரஸ் இலட்சியத்திலேயே 'சட்ட வரம்புக் குட்பட்ட என்ற சொற்றொடர் எடுத்து விடப்பட்டது.
'சட்ட வரம்பு' என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் ஏற்படுத்திய சட்ட வரம்புதானே? பிரிட்டிஷ் சட்டத்தையெல்லாம் நியாயமான சட்டமென்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நியாயமற்ற சட்டங்களின் வரம்புக்கு ஏன் உட்பட்டு நிற்க வேண்டும்? சிற்சில சந்தர்ப்பங்களில் பிரிட்டிஷ் சர்க்காரின் சட்ட வரம்பை மீறுவதே இந்தியர்களின் கடமை ஆகக் கூடும். அப்படி யிருக்கும்போது, பிரிட்டிஷ் சட்ட வரம்புக்கு நம்மை நாம் ஏன் உட்படுத்திக் கொள்ள வேண்டும்?
ஆகவே, புதிய காங்கிரஸ் இலட்சியம் 'சட்ட வரம்பை'க் கைவிட்டது. அமைதியையும் நேர்மையையும் கைக்கொண்டது. அதுபோலவே குடியேற்ற நாட்டந்தஸ்தைக் கைவிட்டது. 'சுயராஜ்ய' இலட்சியத்தைக் கைக்கொண்டது.
இவ்விதம் காங்கிரஸின் இலட்சியம் மாறியது காங்கிரஸின் தலைமை மகாத்மாவிடம் சென்று விட்டதற்கு அறிகுறியாயிற்று. அதனால் இந்தியப் பொது மக்களின் மனோபாவமும் மாறியது. காங்கிரஸ் என்பது யாரோ இங்கிலிஷ் படித்த ஒரு கூட்டத்தார் தங்களுடைய பட்டம் பதவிக்காக நடத்தும் ஸ்தாபனமல்ல, பாரத தேசத்தின் விடுதலைக்காக வேலை செய்யும் ஸ்தாபனம் என்று மக்களின் மனதில் நிச்சயம் ஏற்பட்டது.
-----------------------------------------------------------
[ நன்றி: : http://www.projectmadurai.org/ ]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக