புதன், 9 மே, 2018

1057. ஜீவா - 4

பாரதியைப் பற்றி  - 2 
ப.ஜீவானந்தம்

பாரதியைப் பற்றி -1

(தொடர்ச்சி ) 


அடுத்தபடியாக "அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்" என்பதுபோல், "தாங்கள் கற்ற தமிழே எல்லாம்" என்று பத்தாம் பசலி மனப்பான்மையோடு புதுமை கண்டு கசந்து முகம் சுளிக்கும் வைதிகத் தமிழ்ப் பண்டிதர்களைப் பாரதி நினைக்கிறான். "எல்லாப் பொருளும் இதன்பால் உள" என்ற வெண்பாப் பாட்டை இவர்கள் சங்கராபரணத்தில் ஆலாபனஞ் செய்து எக்களிப்படைவதற்கு அடிப்படையான கிணற்றுத் தவளை மரபை நினைக்கிறான்.

"மறைவாக நமக்குள்ளே பழங்கதை சொல்வதிலோர் மகிமை இல்லை"
என்று எடுத்துக்கூறி மாறுதல் வேண்டாத நம் பணிடிதர்களின் மனத்தடிப்பைச் சுக்கு நூறாக உடைத்தெறிகிறான் பாரதி. அதே மூச்சில்

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"

என்று தமிழ் வளர்ச்சித் திருப்பணியில் இறங்கும்படி ஆணையிடுகிறான். புதிய தமிழ்க் காதலர்களுக்கு, 'நாமே டமாரமடித்துக் கொள்வதனால் நமது புலமைக்குப் பெருமை ஏற்படாது. வெளிநாட்டார் வணக்கம் செலுத்தும் பொழுதுதான் நமது புலமையின் திறமைக்கும் பெருமை ஏற்படும்" என்பதைத் தமிழன்பர்கள் மறந்துவிடக் கூடாதென்றும் புத்தி புகட்டுகிறான்.

அடுத்தபடியாக "கவிதை கவிதைக்காகவே", "கலை கலைக்காகவே" என்ற கவிஞர்களையும், கலைஞர்களையும் பாரதி நினைக்கிறான். அவர்களுக்கும் யதார்த்தச் சூழ்நிலைக்கும், அவர்களுக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் சுருங்கச் சொன்னால் அவர்களுக்கும் உண்மைக்கும் ஒட்டும் உறவும் இல்லாதிருப்பதை நினைக்கிறான், உடனேயே அவர்களுக்கு

"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்"
என்ற உண்மையைப் போதிக்கிறான். பள்ளத்தில் வீழ்ந்து பரிதாபகரமாகத் தவித்துத் தத்தளிக்கும் "குருடர்கள்" (பாமர மக்கள்) உண்மையுணர்ந்து உயர்நிலை எய்தவேண்டுமானால், வெள்ளத்தின் பெருக்கைப் போல், கலைப்பெருக்கம் கவிப்பெருக்கும் மேவ வேண்டும் என்று தமிழ் இலக்கியச் செழிப்பின் தேவையை வற்புறுத்துகிறான். இறுதியாக

"தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்"
என்று மேற்கூறிய வகைதொகைகளிலெல்லாம் வளரும் தமிழை நுகரும் தமிழ் மக்கள் புதிய யுகத்தில் புதிய உலகத்தில் புதிய மனிதராய் மலர்ந்து புத்தின்பப் பெருவாழ்வு பெறுவர் என்று இமய முகட்டில் தூக்கி வைத்துத் தமிழுக்கு பூசனை புரிகிறான் பாரதி. மேற்கூறியவை "தமிழ்" என்ற பாட்டில் பாரதி காட்டும் முதன்மையான கருத்துக்கள். "தமிழில் முடியுமா?" என்று நம்பிக்கை செத்து, கேள்வி கேட்கும் பேராசிரியப் பெருமைக்காரர்களுக்கு

"வானம் அளந்ததனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே"

என்று தமிழை வாழ்த்தி நம்பிக்கை ஊட்டுகிறான் பாரதி.

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்று பிரிதோரிடத்தில் பாடுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. தமிழில் அதன் வலுவில் வளர்ச்சியில் பாரதிக்கு இருந்த அசையாத உறுதி கங்கு கரையற்றது. பாரதியால் தமிழ் மேன்மையுற்றது, தமிழால் பாரதி மேன்மையுற்றான் என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூற்று மெய் மெய் மெய்.

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை"

என்ற கருத்து தமிழர்களான பல ஆங்கிலம் கற்ற அறிவாளிகளையும் கல்விமான்களையும் பிடித்தாட்டுகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் (இங்கு ஜீவா குறிப்பிடுவது 20ஆம் நூற்றாண்டு) - பாரதி காலத்தில் மேற்படிக் கருத்து உரம் பெற்று நின்றதைப் பாரதி காண்கிறான். இதை உடைத்தெறிய வேண்டிய தனது கடமையை உணர்கிறான். தமிழ்த்தாயின் வாய் மூலமாகத் தமிழின் வரலாற்றைக் கூறுகிறான்.

"ஆதிசிவன் பெற்றுவிட்டான்" அதாவது என்று பிறந்தேன் என்று உரைக்க முடியாத தொன்மையினள் நான். அகத்தியன் இலக்கணத்தாலும், மூவேந்தர் அன்பு வளர்ப்பாலும், ஆரியத்திற்கு நிகராக வாழ்ந்தேன். கள், தீ, காற்று, வெளி இவை கலந்து தெள்ளு தமிழ்ப் புலவர்கள் நல்ல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்கள். பற்பல சாத்திரங்கள் படைத்தளித்தார்கள். உலகு புகழ வாழ்ந்தேன். அன்று என் காதில் விழுந்த திசை மொழிகள் பல. அவை இன்று இறந்தொழிந்தன.

"இந்த கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்"
"இன்றொரு சொல்லினைக் கேட்டேன்"

அது என்ன? 'புத்தம் புதிய கலைகள் தமிழினில் இல்லை. அவை சொல்லும் திறமை தமிழுக்கு இல்லை. மெல்லத் தமிழ் இனி சாகும்' - இதுதான் அந்த அவலச் சொல்.

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"
 "இந்தப் பெரும்பழி தீரும் - புகழ் ஏறிப்
புவிமிசை யென்று மிருப்பேன்".

இதற்கு முன் பல காவியங்களையும், பல சாத்திரங்களையும் கால மாறுதலுக்கு ஏற்பப் புதுமை செய்து தமிழ் அழியாது நின்று வந்திருக்கிறது. இன்றும் அறிஞர்களின் இடையறாத முயற்சியால் எட்டுத் திசையும் சென்று கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்து தமிழ் புகழ் ஏறிப் புவிமீது வாழ முடியும். இவ்வாறு சரித்திர உண்மைகளை எடுத்துக்காட்டி தமிழின் உயிராற்றலில் நம்பிக்கையை ஊட்டுகிறான் பாரதி உணர்ச்சிப் பெருக்கோடு. பாரதிக்குப் பின் இன்று வரை பல அறிஞர்களும், இளைஞர்களும் அந்த நன்னம்பிக்கையை நாள்தோறும் மெய்ப்பித்து வருகிறார்கள்.

பாரதி தனது தாயகத்தை - தமிழகத்தைப் பற்றிப் பாடுவதை அனுபவியுங்கள்! நாட்டன்பு நம்மிடம் மூண்டெழும்படி எவ்வாறு கிளறுகிறான் என்ற விந்தையைப் பாருங்கள்!

'செந்தமிழ்நாடு' என்றதும் அது சொற்றொடராகக் காதில் வந்து விழவில்லையாம். "இன்பத் தேனாக"க் காதில் வந்து பாய்கிறதாம். அந்த "இன்பத் தேனும்" வாயில் பாய்ந்து இனிமையூட்டவில்லை. காதில் பாய்ந்து பரவசமூட்டுகிறது. தொடர்ந்து, இது - இந்தச் செந்தமிழ்நாடு - "எங்கள் தந்தையர் நாடு" என்று பேச ஆரம்பித்தால் போதுமாம். "மூச்சில் ஒரு சக்தி பிறக்கிற"தாம். ஏன்? "தந்தையர் நாடு" என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய சொல்லாக்கம். அதோடு பல்லாயிரம் ஆண்டையத் தமிழர் வாழ்வின் மாட்சியும், அதில் செறிந்து கிடக்கிறது. பின் மூச்சில் சக்தி பிறக்காது என் செய்யும்? இனி ஒவ்வொரு தமிழனின் காதிலும் தேனையும் உணர்ச்சித் தீயையும் பாய்ச்சும். அட்சரம் லட்சம் பெறும் அந்த அடிகளைப் படியுங்கள் - பாடுங்கள், பார்க்கலாம்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே".

இது மாதிரி ஒரு அடி உலக இலக்கியத்தில் வேறெங்கேனும் காண முடியுமா? தேசபக்தியைக் கடல் மடை திறந்ததுபோல ஓடவிட்டு எத்தனையோ நல்லிசைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள் - பற்பல நாடுகளில், பலப்பல காலங்களில், ஆனால் மேற்கூறிய அடிகளில் பாரதி காட்டும் தேசபக்தியின் வேகமும் வன்மையும் போல் இனிப்பையும் நெருப்பையும் குழைத்து வேறெந்த கவிஞனேனும் பாடியதுண்டா?

இவ்வாறு சராசரித் தமிழனுக்கு உணர்ச்சியில் தேனைப் பாய்ச்சி, உயிரில் சக்தியைப் பாய்ச்சி, புதுத் தமிழனாக்கி நிறுத்தி, செந்தமிழ் நாட்டின் சிறப்பியல்புகளை, சாதனைகளை ஓவியம்போல் காட்டுகிறான் பாரதி. தமிழகத்தின் ஆண் - பெண்ணின் மேம்பாட்டை ஆறுகளின் வளமையால் நாடு "மேனி செழிக்கும்" அற்புதத்தை, மலை வளம், கடல் வளத்தை அமர சித்திரமாக வரைந்து காட்டுகிறான். 'செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு' என்று பாடி, தனது தீர்க்க தரிசனக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டி, நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறான். தமிழகத்தின் நேர்நிகரற்ற புலவர் பெருமான்களை, தமிழ்ப் பேரரசுகளை, தமிழ் மன்னர்களின் இணையற்ற விறல் வீரத்தை, தமிழர் நாகரிகப் பெருமையை, பண்பாட்டுத் திறத்தை, உலக இலக்கியம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் விதத்தில் பாடி, நாட்டைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நமக்குப் புத்துயிரும் புத்துணர்வும் ஏற்படும் வண்ணம் நமது இதய வீணையின் ஒவ்வொரு நரம்பையும் மீட்டுகிறான் பாரதி.
( தொடரும் ) 


தொடர்புள்ள பதிவுகள்:

ப.ஜீவானந்தம் 


பாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக