ஞாயிறு, 10 டிசம்பர், 2017

932. ஜீவா -3

பாரதியைப் பற்றி  -1
ப.ஜீவானந்தம்


பாரதி தமிழகத்தின் தனிப் பெருமை. பாரதி தமிழினத்தின் தவப்பயன். உண்மைக் கலையையும் மக்கள் வாழ்வையும் பிரிக்க முடியாதபடி இணைத்துள்ள சிறந்த ஜீவனுள்ள உறவோடும், அச்சமற்ற சிருஷ்டித் திறன்மிக்க சிந்தனை, தெள்ளிய நேர்மை, வற்றாத வளமிக்க உயிராற்றல் ஆகியவற்றோடும் பாரதியின் திருநாமம் என்றும் இணைந்து நிற்கும்.பாரதியின் பாடல்கள், நூற்கள், எழுத்துக்கள், சாகாவரம் பெற்ற மனிதன் மேதாவிலாசத்தின் நினைவுக் களஞ்சியங்களாக ஊழி ஊழி காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

கம்பனுக்குப் பின் தமிழ் மக்களுக்கு, மகாகவி பாரதி, உணர்ச்சியாற்றல், கற்பனையாற்றல், அழகுக் கலையாற்றல், ரசனையாற்றல் முதலிய சிறந்த கவித்துவ அம்சங்கள் நிரம்பப் பெற்ற மகாகவி. அவரிடம் கொழுந்துவிட்டெரிந்த அரசியல் உணர்ச்சித் தீ, மேற்கூறிய நல்லிசைப் புலமையோடு இரண்டறக் கலந்து கவித்துவத்தின் அழகுக்கு அழகு செய்தது.

பொதுமக்கள் வாழ்வோடு, தண்ணீரில் மீன் மாதிரிப் பழகிப் பாரதி, தனது படைப்பாற்றல், படைப்புப் பணி முழுவதையும் மக்கள் விடுதலைக்கும் நல்வாழ்வுக்குமே தத்தம் செய்த பாரதி, இருபதாம் நூற்றாண்டைய மக்களின் -சிந்தனை ஓட்டங்களையும் உணர்ச்சிப் பெருக்குகளையும் அழகுச் சொட்டச் சித்திரிப்பதில் நேர் நிகரற்றக் கலைஞனாகப் பொலிந்தான்.

பாரதிக்கு "நான்", "நாங்கள்" என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளையே குறித்தன. பாரதியின் நல்லிசைப் புலமை, மாய காவ்ஸ்கி என்ற சோவியத் மகாகவி கூறியதுபோல், 'பிரபஞ்சம் முழுவதையும் சுற்றிப் பார்த்துக் களிக்கும் காதலை' விரும்பிற்று. புஷ்கினைப் பற்றி ஒருவர் சொன்னதைப் போல பாரதியின் கவிதை "என்றும் இருக்கிற எப்பொழுதும் இயங்குகிற இனத்தைச் சார்ந்தது ..... சமுதாய உணர்வில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தன்மை வாய்ந்தது". 

பாரதியின் மேதைப் பார்வையில் சரித்திரக் கண்ணோட்டத்தின் தெளிவும் விழுந்திருந்ததால் அவனால் உறுதியான நம்பிக்கையோடு மேலும் மேலும் மேன்மேலும் முன்னோக்கி, முன்னோக்கிப் பார்க்க முடிந்தது. சந்தேக வாதக் கறை அவனுடைய பாடல்களில் ஒரு எழுத்தைக்கூட அசுத்தப் படுத்தியதில்லை.

"நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல் 
இமைப் பொழுதும் சோராதிருத்தல்" 

என்று தனக்குத் தொழில் "நாட்டுப்பணி" (மக்கள் பணி) என்று ஆணித்தரமாக கூறி கவியரசின் தொழிலைப் பற்றி இவ்வாறு உலகறியப் பறை அறைகிறான் பாரதி. கவிஞன் என்பவன் 'மக்கள் தலைவன், மக்கள் தொண்டன்' என்ற நவயுக மகாகவியின் அறிவுரைக்கு இலக்கணமாக வாழ்ந்தவன் பாரதி.


'மக்கள் வாழ்க்கையை விட்டு ஓடி ஒளியக்கூடாது, தங்கள் பலத்தையும் திறத்தையும் உணர வேண்டும்' என்றே பாரதி காலமெல்லாம் போதித்தான். இன்று ஜன யுகத்தில் நாம் வாழ்கிறோம். நமக்கு மிக மிகத் தேவையான இலக்கியமும் கலையும், மக்கள் இலக்கியமாகவும், மக்கள் கலையாகவும்தான் இருக்க முடியும். அவை மக்களின் நலன்களை எதிரொலிப்பவைகளாகவே இருக்க வேண்டும். அவை ஜனநாயகத் தன்மை கொண்டவைகளாகவும், எதார்த்தமும், மனிதத்துவமும் உடையவைகளாகவும், தேசிய, அதே பொழுதில் சர்வ தேசியத் தன்மை உடையவைகளாகவுமே இருக்க வேண்டும்' என்று சீன அறிஞர் ஒருவர் கூறுகிறார். இந்த வகையில் பாரதி நமக்குத் தகுந்த முன்னோடி; சிறந்த வழிகாட்டி. இந்த எண்ணங்களோடு பாரதி பாடல்களின் அறிமுகத்தையும், பாடல்களையும் பார்க்கலாம். 

தமிழும் தமிழகமும்:

பாரதி தமிழை நினைக்கிறான். தனது நெஞ்சில் ஊறி உறைந்து நிற்கும் தமிழை நினைக்கிறான். தனது உயிரும் உணர்வும் ஆழ அமிழ்ந்து கிடக்கும் தமிழை நினைக்கிறான். அதேபொழுதில், தான் செவ்வனே அனுபவித்தறிந்த ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, வங்கம், பிரெஞ்சு முதலான மொழிகளையும் அவற்றின் மூலம் உலகமொழிகளையும் நினைக்கிறான். உடனே 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவதெங்கும் காணோம்" 

என்று ஒப்புநோக்கும் உணர்வுடன் தமிழமுதின் நிகரற்ற இனிமையைப் பெருமிதத்தோடு பாடுகிறான். அதே பொழுதில இத்தகைய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட கோடானு கோடித் தமிழர்களின் நிலையை நினைக்கிறான். "உலகமெலாம் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு" நிற்கும் அவர்களுடைய அவல நிலைமை பாரதியின் நெஞ்சைத் தாக்கி, கண் கலங்க வைக்கிறது. "நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ! சொல்வீர்!" என்று தமிழகம் கிடுகிடுக்க அறைகூவி, சாதாரணத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்புகிறான்.

"ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கு 
ஆக்கையோடு ஆவியும் விற்றார் 
தாங்களும் அன்னியர் ஆனார் - செல்வத் 
தமிழின் தொடர்பு அற்றுப் போனார்" 

என்று வயிற்றெரிச்சலுடன் ஆற்றாமையால் ஒரு புலவர் பாடினாரே, அத்தகைய 'ஆங்கிலத்-தமிழர்களை' அடுத்த படியாகப் பாரதி நினைக்கிறான். இவர்கள் தமிழில் "ஷேக்ஸ்பியர்" உண்டா, "மில்டன்" உண்டா, "டென்னிஸன்" உண்டா, "ஷெல்லி" உண்டா என்று புரியாத்தனமாக, ஆனால் புரிந்ததான எண்ணத்தோடு அடிக்கடி இளக்காரமாகக் கேட்கிறார்களே, அதையும் நினைக்கிறான். இவர்களுக்குப் பதில் - இதரர்களுக்கு உண்மை அறிவிப்பு செய்ய நினைக்கிறான். எனவே, உலக மகாகவிகளையெல்லாம் கவிதா மனோபாவத்தோடு நன்றாகக் கற்றறிந்து நிர்ணயித்திருந்த பாரதி 

"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் 
வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் 
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை 
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை" 

என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறான்.

பின்வந்த ஆராய்ச்சி வல்ல பன்மொழிப் புலவர்களான தமிழ்ப் பேரறிஞர்கள் பாரதி கூறிய இந்த உண்மையை அட்டியில்லாமல் ஒப்புக் கொள்கிறார்கள். ஆங்கில மோகம் பிடித்து அலைந்த தமிழர்களுக்கு,

 "சேமமுற வேண்டுமெனில் 
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் 
செழிக்கச் செய்வீர்!" 

என்று பாரதி அறிவுறுத்துகிறான். 


தொடர்புள்ள பதிவுகள்:

பாரதி
ப.ஜீவானந்தம்

1 கருத்து:

sankar kumar சொன்னது…

பாரதியின் சிறப்பை உணராதவர் யாரும் இல்லை... Tamil News

கருத்துரையிடுக