சனி, 2 டிசம்பர், 2017

924. நட்சத்திரங்கள் -2; டி.ஆர்.ராமச்சந்திரன்

டி.ஆர்.ராமச்சந்திரன் - மேட்டுக்குடி வாழ்வின் பகடி
பிரதீப் மாதவன்

நவம்பர் 30. டி.ஆர்.ராமச்சந்திரனின் நினைவு தினம்.
===
நகைச்சுவை நடிகர்களின் பெரும் புகழைப் பார்த்து அவர்களுக்கு ஏற்ற கதையை எழுதி, நாயகனாக்குவது இன்றைய கண்டுபிடிப்பு அல்ல. அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்படித் தொடங்கி வைத்தவர்களில் ஒருவர்தான் டி.ஆர். ராமச்சந்திரன். இவர் ஹீரோவாக நடித்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில், அன்று முன்னணி நாயகனாக வளர்ந்துவிட்ட சிவாஜி கணேசன் இரண்டாவது ஹீரோவாக நடித்தார் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். இதில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால் ராமச்சந்திரனுக்கு ஜோடி ராகினி. நகைச்சுவை நாயகனாக அடைந்த வெற்றியால், ராகினி மட்டுமல்ல, வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி, ஸ்ரீரஞ்சனி எனப் பல முன்னணிக் கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை. டி.ஆர். ராமச்சந்திரன் நாடகம் வழியாக சினிமாவுக்கு வந்தவர். 25 படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், அதன் பிறகு நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் சுமார் 30 ஆண்டு காலம் நிலையான செல்வாக்குடன் சாதனை படைத்தவர்.

காவிரி மைந்தர்

கரூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்காம்புலியூர் என்ற கிராமத்தில் 1917-ல் பிறந்தவர். அப்பா ரங்காராவ் எளிய விவசாயி. ராமச்சந்திரன் நான்கு வயது சிறுவனாக இருக்கும்போதே அம்மாவை இழந்தார். தாயை இழந்த ஏக்கம் தெரியக் கூடாது என்பதற்காக மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தார் அப்பா. ஆறு வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்த்தார். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து திடீர் திடீரென்று ராமச்சந்திரன் காணாமல் போய்விடுவார். தேடிப்போனால், ஆடுகள், கோழிகளோடு அன்புடன் பேசிக்கொண்டிருப்பார்.


உள்ளூர் பள்ளிக்கூடம் சரிவராது என முடிவு செய்து குளித்தலையில் ஒரு குருகுலப்பள்ளியில் சேர்த்துவிட்டு வந்துவிட்டார் அப்பா. வீட்டு ஞாபகமாகவே இருந்த ராமச்சந்திரனுக்கு படிப்பு பாகற்காய் ஆனது. பள்ளிக் கல்வியைக் கஷ்டப்பட்டு முடித்தவரைத் திருச்சி நேஷனல் கல்லூரியில் சேர்க்க நினைத்திருக்கிறார் அப்பா. ஆனால் படிப்பு வேண்டாம் எனக்கு நடிப்பு போதும் என்று கிளம்பிவிட்டார் ராமச்சந்திரன்.

பாட்டு போட்டுக் கொடுத்த ரூட்

பரீட்சை முடிந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம், மகனை வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா அனுமதியுடன் ராகவேந்திரராவுடன் ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக் கம்பெனியில் சேர அனுமதி கேட்டு அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.

3 ரூபாயிலிருந்து 25 ரூபாய்


மதுரையின் புகழ்பெற்ற நாடக கம்பெனிகளில் ஒன்றான ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா’வில் நடிகராகச் சேர்ந்தார் ராமச்சந்திரன். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான எஸ்.வி. வெங்கடராமன் (மீரா படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய் சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வந்தார்.

நண்பரின் கம்பெனியில் சேர்ந்த அதிர்ஷ்டம் உடனடியாக அவருக்குப் படவாய்ப்பைக் கொண்டுவந்தது. காரைக்குடியில் வெங்கட்ராமன் குழு திறமையைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், பிரகதி பிக்சர்ஸ் கம்பெனியுடன் இணைந்து தயாரித்த ‘நந்தகுமார்’படத்தில் நடிக்க வெங்கட்ராமன் நாடகக் குழுவில் இருந்த அத்தனை பேரையும் ஒப்பந்தம் செய்தார். இதுதான் ராமச்சந்திரன் நடித்த முதல்படம். இதில் சின்னக் கதாபாத்திரம் என்றாலும் தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை மெய்யப்பச் செட்டியாருக்குப் பிடித்துப் போய்விட்டது.


திருப்புமுனை

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். நாடக வடிவில் இருந்ததைத் திரைக்கு மாற்றி எழுதும்படி ஏ.டி. கிருஷ்ணசாமியைக் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.

மிகப் பெரும் வெற்றியை பெற்ற இந்தப் படம், ராமச்சந்திரனுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் செல்லப் பிள்ளையானார் ராமச்சந்திரன். உலக போர் முடிந்த பிறகு சென்னைக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோ இடமாற்றம் செய்யப்பட்டது. இதன்பிறகு ஏ.வி.எம் தயாரித்த பெரும்பாலான வெற்றிப் படங்களில் ராமச்சந்திரனுக்காவே ரகளையான காமெடி கதாபாத்திரங்கள் முக்கியவத்துடன் உருவாக்கப்பட்டன.

உயர்தட்டு நகைச்சுவைக்கு உதாரணம்

40களில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த மேட்டுக்குடி இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவையுடன் குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கமும் கொஞ்சம் அம்மாஞ்சித்தனமும் கலந்த காதல் உணர்ச்சி, இவற்றுடன் தனது அபாரமான உடல்மொழியால் ரசிகர்களை வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்த நகைச்சுவைக்கு டி. ஆர். ராமச்சந்திரன் சிறந்த உதாரணம். கதாநாயகிகள் தங்களது கண்களை நடிக்கப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, இவர் தனது உருண்டையான கண்களைப் பயன்படுத்தினார். இவர் உருட்டி விழிப்பதைப் பார்த்ததுமே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர் ஏற்றுக்கொண்ட பெரும்பாலான பாத்திரங்கள் மேட்டுக்குடி வாழ்வை நகைச்சுவையாக்கின.50க்கும் அதிகமான படங்களில் தனக்கான பாடல்களைப் பாடி நடித்த இவர், ரசனையுடன் பல படங்களைத் தயாரித்தும் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின் அமெரிக்காவில் தன் மகள்களுடன் வசித்துவந்தார். கடந்த 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானர். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

[ நன்றி:  tamil.thehindu.com  ]


தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்
டி. ஆர். இராமச்சந்திரன்: விக்கிப்பீடியா

4 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

சாதுமிரண்டால் படத்தில் மிகவும் அருமையாக நடித்து இருப்பார்.
பகிர்வுக்கு நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

இவர் நடித்த "தேவன்" அவர்களின் கோமதியின் காதலன் பற்றி என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி ஐயா

Babu சொன்னது…

மனதை இலேசாக்கும் அற்புதமான நகைச்சுவை நடிகர்.- பாபு

கருத்துரையிடுக