மாலைமாற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாலைமாற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

1932. பாடலும் படமும் - 140

போ!வேக மாகவே போ! 

பசுபதி 



தும்பிக்கை யால்நமக்கு  நம்பிக்கை தந்திடும்

அம்பிகை பாலனை ஐங்கரனை - நம்பனை 

நால்வாய் விநாயகனை நாடியொரு கோயிலுக்குப்

போ!வேக மாகவே போ!   


[ ஈற்றடி ஒரு மாலைமாற்று ( palindrome)  ]



[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

மாலைமாற்று

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 5 மார்ச், 2018

1001. சித்திரக் கவிகள் - 1

சந்த வசந்தக் கவியரங்கம் 


‘சந்த வசந்த’க் குழுவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரக் கவியரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் நான் இட்ட சில சித்திரக் கவிகளை இங்கே காணலாம்.  நான் முன்பு பயன்படுத்திய சில மாலைமாற்றுச் சொற்றொடர்களை எப்படிச் சித்திரக் கவிகளில் உள்ளிடலாம் என்று நான் சிந்தித்ததின் விளைவுகள் இவை. மிக எளிய முயற்சிகளே. நான்கு வகையான பந்தங்கள். 



1.  இறை வணக்கம்

உருத்திராட்ச பந்தம்
======
வஞ்சித் துறை
-------------------
சந்தவ சந்தத்திலே
அந்தமிகு பாவெழுதச்
செந்தமிழ் யாப்பறிவைக்
கந்தாநீ வழங்கு

 வாசிக்கும் முறை: மாலையின் வலப்புற மேல்பக்க மணியில் தொடங்கி இடவலமாகச் சுற்றி மேல்பக்கம் செல்லச் செய்யுள் நிறைவடையும். 


2.  அஷ்டநாக பந்தம்

வா!வேக மாகவே வா!
வனமாதை அணைவோனே!


வாசிக்கும் முறை: பலவிதமாய் இருக்கும் அட்ட நாக பந்தங்களில் இது மிக எளிய ஒன்று.  எந்தப் பாம்பின் தலையில் தொடங்கி வால் வரை வாசித்தாலும் , இந்த இரு வரிகள் - “ அரை வஞ்சித் துறை” -  அடங்கும். 

3.  இரட்டை நாக பந்தம்

குறள் வெண்பாக்கள்:

சேவேறும் தெய்வத்தின் சீர்பரவக் கோயிலுக்கு
வா!வேக மாகவே வா!

தேவாரச் சந்தத்தில் செந்தமிழைக் கேட்டிடநீ
போ!வேக மாகவே போ!

சே - எருது


வாசிக்கும் முறை: பின்னியிருக்கும் இரு பாம்புகளில் வலது பக்கம் இருக்கும் பாம்பின் தலையிலிருந்து வால்வரை படித்தால் முதல் குறளும், இடதுபக்கப் பாம்பில் இரண்டாவது குறளும்  அடங்கி உள்ளன.

4.  இரத பந்தம்

நேரிசை வெண்பா

நோகாமே காந்திபோல் காருண்யம் கூடுமா?
ஆகா! குணமதை நல்குமே! – சாகாத
வேதமா கச்சொல நேருமநு பூதியே!
கா!திருமால் மாருதி கா!

பொருள்: நோகாமல் காந்தியைப்போல் கருணைகுணம் சேருமா?
ஆகா! அந்தக் குணத்தை நல்குமே! – “ கா! திருமால் மாருதி கா! “ ( என்ற  மாலைமாற்றை) சாகாத வேதம்போல் ( மந்திரமாகச்) சொல்ல, அநுபூதி நேருமே! 

வாசிக்கும் முறை:  

 தேரின் இடப்பக்கச் சக்கர எழுத்தை வாசித்து,  மேலேறி அடுத்த சக்கரத்தில் இறங்கிப் பின் மீண்டும் மேலேறி, இடம் வலம்,வலம் இடம் ,  என மாறி மாறித் தட்டுகளில் வாசித்தவாறே மேலேறிச் சென்று , பின் நடுவே மேலிருந்து கீழ்நோக்கி இறங்க வேண்டும். 


தொடர்புள்ள பதிவுகள் :
போ! வேகமாகவே போ! : மாலை மாற்று

“ திருமால் மாருதி” : மாலை மாற்று

திங்கள், 9 ஜூலை, 2012

“ திருமால் மாருதி” : மாலை மாற்று

திருமால் மாருதி
பசுபதி



‘விகடகவி’ ‘மோரு போருமோ’ ‘தேரு வருதே’ போன்றவற்றை  மாலைமாற்றுச் சொற்றொடருக்கு ( Palindrome) உதாரணங்களாகப் பள்ளி நாட்களில் படித்திருப்பீர்கள்.  மாலைமாற்றைத் திரும்பிப் படித்தாலும் அதே சொற்றொடர் வரும்.  திருஞானசம்பந்தர் ஒரு மாலைமாற்றுப் பதிகமே பாடியிருக்கிறார்!

”தற்காலத் தமிழர்கள்” யாவரும் அகராதியின்றிப் புரிந்துகொள்ளும்படி ஒரு முழுப் பாடலை மாலைமாற்றாகப் பாடுவது எளிதன்று.

நான் எளிதில் புரிந்து கொள்ளமுடியும் சில மாலைமாற்றுச் சொற்றொடர்களை பாடலின் ஈற்றடியாக வைத்துச் சில கவிதைகளைப் புனைந்துள்ளேன். அவற்றில்

போ! வேகமாகவே போ!  

என்ற கவிதை ஒன்று ; இது ‘அம்மன் தரிசனம்’ 2002 -தீபாவளி மலரில்  வெளிவந்தது .

எனக்குப்  பிடித்த இன்னொரு மாலைமாற்றுச் சொற்றொடர் :

“திருமால் மாருதி” .

இதைப் பயன்படுத்திப் பல கவிதைகள் எழுதியுள்ளேன். ஒன்று இதோ:
( அம்மன் தரிசனம் இதழில் 2001 -இல் வெளியான கவிதை )


(“ கா!திருமால் மாருதி கா! “ என்பதை வெண்பாவின் ஈற்றடியாக வைத்துச் சில நான்கடி வெண்பாக்களையும் இயற்றியிருக்கிறேன். )

இன்னொரு கவிதை ( இணைய மின்னிதழ் திண்ணையில் 2004-இல்  வெளிவந்தது )

சொல்லின் செல்வன் 
பசுபதி


அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்;
'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? '

தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்:
'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். '

ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;
ஞானம் கனிந்தபின்னர் நானேநீர்; நீரேநான். '

சிரித்தணைத்தார் ஸ்ரீராமர் சொல்லின் செல்வனை;
திருமாலாய்க் காட்சிதந்தார்; செஞ்சொற்கள் ஒலித்ததங்கே.

' 'திருமால் மாருதி! ' திருப்பியிதைப் படித்தாலும்
'திருமால் மாருதி 'தான்
! தெளிந்தவர் களித்திடுக! '

இருநாமம் இணைந்துநிற்கும் இணையற்ற மந்த்ரமிது!
இருபோதும் ஓதுங்கள் ! இறையோடு இணையுங்கள் ! ”

தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்

வியாழன், 16 ஜூலை, 2009

போ! வேகமாகவே போ! : மாலை மாற்று

போ! வேகமாகவே  போ!
பசுபதி




கீழ்க்கண்ட வெண்பாக்களின் ஈற்றடிகளில் ஒரு மாலைமாற்றை வைத்துப் பல தெய்வங்களைப் போற்றியுள்ளேன். ( 'அம்மன் தரிசனம்' இதழில் 2002-இல் வந்த கவிதை) 

                                 நேரிசை வெண்பாக்கள்


இம்மையில் நேரும் இடர்கள் தகர்ப்பானை,
நம்பிக்கைக் குன்றனைய நம்பனை -- மும்மதனை,
நால்வாய் விநாயகனை நாடியோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (1)


[ நம்பன் = கடவுள்; நால் -தொங்கும் ; நால்வாய் = யானை  ]

                             
[ மூலம்: மணியம் ; நான் 1955-இல் வரைந்த  நகல் ]

                             


தரமிக்க கல்விபல தாரணியில் பெற்று
வரம்பிலாச் செல்வங்கள் வாய்க்க -- பிரமனின்
நாவேறும் வாணியை நாடியோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (2)

[ நா +ஏறும் = நாவேறும்.]

முந்தை வினைதீர்த்து முக்தி நெறிகாட்டச்
செந்தமிழ்த் தேவனருள் தேவையே -- கந்தனை,
தேவானை காந்தனைத் தேடியோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (3)

மங்களம் பொங்கிநம் வாழ்க்கை வளம்பெற
அங்கணனைப் போற்றுவோம் அன்றாடம் --
சங்கரனை,
சேவேறும் ஈசனைத் தேடியோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (4)

[ சே (= எருது ) + ஏறும் = சேவேறும் ]

அல்லல் அகற்றிடும் அம்மையை, வெம்பகையை
வெல்லும் வழிசொல் விமலையை -- வல்லரி
மாவேறும் சக்தியை வந்திக்கக் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (5)

[ வல் அரிமா= வலிய ஆண்சிங்கம் ]

கண்ணிமை போல்நமைக் காக்கும் கரியவனை,
மண்ணில் அவதரித்த மாயவனை -- கண்ணனை,
காவேரி ரங்கனைக் காணவோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (6)

சண்டையின்றி ஷண்மதமும் சாற்றும் வெளிப்படை
உண்மை இறைவன்நம் உள்ளொளி ! -- பண்டைய
நால்வேத ஞானமே ! எம்மனக் கோவிலுக்குள்
வா!வேக மாகவே வா! (7)

                                   
                  
                 ---- பசுபதி -----

****
பின்குறிப்பு: 





'




   போ! வேகமாகவே போ!' என்பது ஒரு மாலைமாற்று; 
( palindrome) ; கடைசி வெண்பாவில் வரும் 'வா! வேகமாகவே வா!' என்பதும் ஒரு மாலைமாற்றுச் சொற்றொடர் . இது 'அம்மன் தரிசனம்' 2002 தீபாவளி மலரில் வந்த கவிதை .
=======
‘மாலை மாற்று’ என்பது ஒரு மிகப் பழைய தமிழ்ச் சொல்.
ஆங்கிலத்தில்  உள்ள ‘பாலிண்ட்ரோம்’ ( Palindrome) என்பது இதன் பொருள்களில் ஒன்று.  ஒரு சொற்றொடரையோ அல்லது செய்யுளையோ முதலிலிருந்து கடைசி வரையோ அல்லது கடைசியிலிருந்து முதல் எழுத்து வரை  வாசித்தாலோ அதே சொற்றொடரோ அல்லது செய்யுளே வந்தால், அது மாலை மாற்று எனப்படும். முன்காலத்தில் , இந்தப் பெயரைச் செய்யுளுக்குத் தான்  பயன்படுத்தினர். மாலையை எந்தப் பக்கம் திருப்பினும் ஒரே மாதிரி இருக்கும் அல்லவா? அதனால், இத்தகைய செய்யுளுக்கு ‘மாலைமாற்று’ என்று பெயர் வைத்தனர்.

இக்காலத்தில், கற்க, குடகு, விரவி, மேகமே, விகடகவி, மாயமான் மாயமா, ராமகுமரா, தேளு மீளுதே, மாறுமா, மேளதாளமே  போன்ற சொற்றொடர்களையும் மாலை மாற்றுகள் என்று சொல்லலாம்.

’மாலை மாற்று’ க்கு ஓர் உதாரணம் பார்ப்போம்.

‘தண்டியலங்காரம்’ என்ற அணி இலக்கண
நூலில் கொடுக்கப்பட்ட ஒரு ‘மாலைமாற்று’க் குறள் வெண்பா :


நீவாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ.


இதற்குப் பொருள் சொல்வது எளிதன்று!
சான்றோர் சொல்லும் பொருள் :

நீவாத = நீங்காத, மா தவா =  பெரிய தவத்தையுடையாய்!, தா மோக ராகமோ தாவாது = மிக்க மயக்க வேட்கை கெடாது; (ஆதலால்) அ மாது = அழகிய மாதினுடைய, அவா = ஆசையை, நீ =  நீக்குவாயாக .

( தாவாது + அ = தாவாத;  மாது + அவா = மாதவா என்று ஆகிவிடும் )


****


தொடர்புள்ள சில பதிவுகள் :

‘திருமால் -மாருதி’: மாலை மாற்று

கவிதைகள்