ரா.அ.பத்மநாபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரா.அ.பத்மநாபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஜூன், 2020

1552. வ.வே.சு.ஐயர் - 7

பிடிவாதத்துடன் தேசத்தொண்டு!
ரா.அ.பத்மநாபன்




ஜூன் 3.  வ,வே.சு. ஐயரின் நினைவு தினம்.





[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.வே.சு.ஐயர்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

1142. ரா.அ.பத்மநாபன் - 1

சினிமாச் சுருள் 
ரா.அ.பத்மநாபன்


1939 ‘சக்தி’ இதழில் வந்த ஒரு கட்டுரை இதோ.



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
ரா.அ.பத்மநாபன்

இரா. அ. பத்மநாபன்: விக்கிப்பீடியா

புதன், 29 ஏப்ரல், 2015

பாரதிதாசன் -2

ரவிவர்மா பரமசிவப் பட பாரதி 
பாரதிதாசன் 

29 ஏப்ரல் . இன்று பாரதிதாசன் பிறந்த தினம்.
ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பிறந்த தினமும் தான்!



இவ்விரண்டும் சேர்ந்து எனக்கு நினைவு படுத்திய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்!

இந்தக் கட்டுரைக்கு ஒரு முன்னுரையாக ‘பாரதி’ அறிஞர் ரா.அ.பத்மநாபன் ஒரு நூலில் எழுதியதில் ஒருபகுதியை முதலில் இடுகிறேன்.

“ பாரதியாரால் ஊக்குவிக்கப் பெற்றுக் கவியாகி, கவிதையில் பாரதியாரின் நேர் வாரிசாகத் திகழ்ந்த “பாரதிதாசன்” தாம் பாரதியாரை முதன் முதலில் சந்தித்த சுவையான சந்தர்ப்பத்தை இங்கு அழகுற விவரிக்கிறார். 

பாரதியாரை விட ஒன்பது வயது சிறியவரானாலும், பாரதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கிய பாரதிதாசன், கடைசி வரை பாரதியாரை “ஐயர்” என்றே அழைப்பார். பாரதியைத் தவிர நிறை, எடை, தெய்வம் ஏதுமில்லை  அவருக்கு; “ஐயரை” யாரேனும் குறை சொல்லிவிட்டால் பொல்லாத கோபம் வந்துவிடும். அது மட்டுமல்ல. சாதாரணமாகப் பாரதியார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே குரல் உயர்ந்துவிடும்:  ஏதோ ஆவேசம் வந்தவர் போலப் பேசத் தொடங்கிவிடுவார் . ...... 

1939-இல் “ஹிந்துஸ்தான்” தமிழ் வாரப் பத்திரிகையில் இந்நூல் பதிப்பாசிரியர் வெளியிட்ட , ‘பாரதி மல’ரில் இக்கட்டுரை பிரசுரமாயிற்று. அனுமதியுடன் வெளியிடப் பெறுகிறது “ 
                                                                   --ரா.அ.ப. -- 

இப்போது  பாரதிதாசன் பேசுகிறார்!
=====

பாரதியார் பாடி வெளியிட்டிருந்த ' சுதேச கீதங்கள்' புதுச்சேரியில் படித்தவர்களிடையே உலவியிருந்தது. குவளை (குவளை கிருஷ்ணமாச்சாரியார்) அந்தப் பாட்டுக்களில் சிவற்றைக் கூவிப் பாட நான் கேட்டிருக்கிறேன். என் ஆசைக்கு ஒரு புத்தகம் கிடைத்தது ஒரு நாள்.

சுதேச கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன். 'இந்தியா' பத்திரிகையில் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு வளைவுகள், குவளையின் கூச்சல் இவை எல்லாம் சுதேச கீதங்களின் உட்பொருளை எனக்கு விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷயமான உணர்வோடும், 'நான் ஓர் இந்தியன்' என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களைப் பாட முடிந்தது நாளடைவில்!

எனது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது. மாலை 3 மணிக்குக் கல்யாணப் பந்தல் பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில் நானும் ஒருவன்.

கணீரென்று ஆரம்பித்தேன். "வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ!" என்பதை. அப்போது என் பின் ஒருபுறமாக, இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றில் ஒன்று ரவிவர்மா 'பரமசிவம்'.



வேணு நாய்க்கர், "இன்னும் பாடு சுப்பு" என்றார்.

நான், "தொன்று நிகழ்ந்த தனைத்தும்" என்ற பாட்டைப் பாடினேன்.

சபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது பேர் இருக்கும். 30 பேர்வழிகளில் சுமார் 25 பேர்கள், நான் பாடும் போது, அந்த ரவிவர்மா பரமசிவத்தையே பார்க்கிறார்கள். அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு குறிப்பிடத் தக்கவராக இருக்கலாம் என்று தோன்றிற்று.



என்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாய்க்கர். பாடினேன்.

அப்போது வேணு நாய்க்கர், "அவுங்க யார் தெரியுமில்ல?" என்று கேட்டார்.

தெரியாது என்று கூட நான் சொல்லி முடிக்கவில்லை. ரவிவர்மா படம்: "நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ?" என்று என்னைக் கேட்டார்.

நான்: "கொஞ்சம்."

'படம்': "உணர்ந்து பாடுகிறீர்கள்."

வேணு நாய்க்கர், அப்போது, "அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்களே?" என்று 'பரமசிவப் படத்தை' எனக்கு அறிமுகப்படுத்தினார்.

எனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது என் மூஞ்சியை நான் கண்ணாடி எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான் ஓர் அசல் இஞ்சி தின்ற குரங்கு. பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார், நான் அப்போது என்ன பதில் சொன்னேன் என்பவைகளைக் கேட்டால் அப்போதே என்னால் சொல்ல முடியாது. இப்போது என்னால் சொல்ல முடியுமா?

கடைசியாக பாரதியார் சொல்லிய வார்த்தையை மாத்திரம் நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன் என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி விடக் கூடும் என்று அதன் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.

அவர் கூறிய வார்த்தைகளாவன:

"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே?"

நான் வீதியில் அடிக்கடி பார்த்து, "இவர் ரவிவர்மா படத்தில் காணும் பரமசிவம் போல் இருக்கிறார்" எனறு ஒப்புக் கூட்டி நினைத்த மனிதர் பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று. அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று. அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு முருகேசம் பிள்ளை முதலியவர்களால் பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று -- அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச் சந்தோஷமயமாக்கிவிட்டன. மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன் பாரதியார் வீட்டுக்குப் போகப் போகிறேன். மறுநாள் என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான் கவலையாய்க் கிடந்தது.

நானும் வேணு நாய்க்கரும் பாரதியார் வீட்டு மாடியில் ஏறிப் போகிறோம்... வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின் உச்சரிப்பு என் காதில் கேட்கிறது. நான் மாடியின் கூடத்தில் பாரதியாரை, அவர் பக்கத்தில் பாடிக் கொண்டிருக்கும் சிவா நாயகரை, வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் தம்பி சாமிநாத ஐயரை, கோவிந்த ராஜுலு நாயுடுவைப் பார்த்தேன். நாயகர் பாட்டுக்கு பாரதியார் 'ஆஹா' போடும்போது நான் கும்பிட்டேன். பாரதியார் கும்பிட்டு, "வாருங்கோ, உட்காருங்கோ. வேணு உட்கார். குயில் பாடுகிறது. கேளுங்கோ" என்றார். சிவா நாயகருக்குப் பாரதியார் 'குயில்' என்று பெயர் வைத்திருந்தார்.

பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு. அதன் பிறகு என்னைப் பற்றிய விவரம் நடந்தது. கொஞ்ச நேரம். "எனக்கு உத்தரவு கொடுங்கள்" என்று பாரதியார் அதே கூட்டத்தில் ஒரு புறமாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார். மீதியுள்ள நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எனக்குப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அங்கு ஒரு மூலையில் கிடந்த கையெழுத்துப் புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே என் எண்ணம் சென்று மீண்ட வண்ணமிருந்தது. மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின் பக்கத்தில் உட்கார்ந்தேன். பிறகு அதைக் கையில் எடுத்தேன், விரித்தேன்... வசமிழந்தேன்.

நான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே என் காலத்தைக் கடத்தியிருந்தவன். என் ஆசிரியரும், புதுச் சேரியில் பிரபல வித்துவானுமாகிய பங்காரு பத்தர், மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை இவர்களால் நடத்தப்படும் கலைமகள் கழகத்தின் அங்கத்தினன். பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே யாருக்கும் புரியாதபடி எழுதுவதுதான் கவிதை என்ற அபிப்பிராயமுள்ளவன். கடிதம் எழுதும்போதுகூடக் கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்ற தப்பெண்ணமுடையவன்.

பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர் உலகில் சேர்த்தது.

நானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள கையெழுத்துப் புத்தகமும் ஒரு பக்கம்; என் அறிவும் அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும் விஷயமும் ஒரு பக்கம். என் உள்ளமும் அதில் இனிப்பைச் சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ள எளிய சொற்களும் ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை, அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள் வார்த்தைகளைக் கவனிக்க என்னிடம் மீந்திருந்த உறுப்புக்கள் ஒன்றுமில்லை. இப்படி வெகு நேரம்.

இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த ராஜுலு நாயுடு பீடி பிடித்தாயிற்று. பாரதியாரும் சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று. மணியும் 11 ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர் என்னைப் பாரதியாருக்குச் சுட்டிக்காட்டி, "இவர் தமிழ் வாசித்தவர் சுவாமி" என்றார். அதற்குப் பாரதியார், "இல்லாவிட்டால் என் கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்ன இருக்கிறது?" என்றார், அன்புடன், நல்லெண்ணத்துடன்.

அதன் பிறகு நான், "போய் வருகிறேன், சுவாமி" என்றேன். பாரதியார், "சரி, நேரமாகிறதா? நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்" என்று குறிப்பிட்டார். அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட முடியவில்லை. "நமஸ்காரம், நமஸ்காரம்" என்று துரிதமாய்ச் சொல்லிப் பிரிய எண்ணமில்லாது பிரிந்தேன். என்னுடன் மற்றவர்களும் எழுந்தார்கள்.


நாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி முழுவதும் பாரதியாரின் குணாதிசயங்களை விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில் சற்று நேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள் நூதனமாக ஒன்றும் கூறவில்லை!

[ நன்றி: “பாரதியைப் பற்றி நண்பர்கள்” , தொகுத்தவர்: ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், 1982. ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாரதிதாசன்

ரா.அ.பத்மநாபன்

பாரதி மணிமண்டபம்

திங்கள், 27 ஜனவரி, 2014

பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன்

’விகட’ அனுபவங்கள்! 



ஜனவரி 27, 2014 -இல் மறைந்த பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாய் இந்தத் தொகுப்பை இடுகிறேன். அவருடைய பாரதி எழுத்துகள் சேகரிப்பைப் பற்றிப் பலரும் படித்திருப்பர். ஆனால், அவர் ஒரு மூத்த பத்திரிகையாளரும் கூட; தமிழ் இதழ்களின் வளர்ச்சியை நேரில் பார்த்தும், ஆராய்ந்தும் கட்டுரைகளும், “தமிழ் இதழ்கள்” ( காலச்சுவடு) என்ற நூலும் எழுதியிருக்கிறார். அதனால், அவருடைய சில ’ஆனந்த விகடன்’ அனுபவங்களை  மட்டும் இங்கிடுகிறேன். இவை விகடன் மலர்களில் வெளியான அவர் அளித்த நேர்காணல்களிலிருந்தும் , அவர் நூலிலிருந்தும் தொகுத்தவை.

பத்மநாபன் 1933-இல் விகடனில் சேர்ந்தார். பிறகு, ஜெயபாரதி ( 1936-37), ஹனுமான் ( 1937), ஹிந்துஸ்தான் (1938), தினமணி கதிர் ( 1965-66) முதலான இதழ்களில் பணியாற்றியிருக்கிறார்.



இதோ அவரே பேசட்டும்!

“ 1926-இல் பூதூர் வைத்தியநாதையர் என்ற புலவர் ஆரம்பித்த விகடன் 1928-இல் வாசன் கைக்கு வந்தது. அவர் விகடனை ஏற்ற ஆறு மாதத்துக்கெல்லாம் ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் அவரைத் தேடி, நெல்லையப்ப பிள்ளையின் சிபாரிசுடன் வந்தார். நம் நாட்டில் நகைச்சுவை போதவில்லை என்று தலையங்கமே எழுதிய வாசன், கிருஷ்ணமூர்த்தியின் நகைச்சுவைக் கட்டுரைகளை விரும்பி, வரவேற்று, நல்ல சன்மானமளித்து ஊக்கி, ‘கல்கி’ என்ற சிறந்த எழுத்தாளர் உருவாக உதவினார். இதுபோல ‘துமிலன்’ என்ற ந.ராமஸ்வாமியையும் ஊக்கப் படுத்தி, அவரும் விகடனில் தொடர்ந்து எழுத வகை செய்தார். ( 1932 -இல்) விகடன் மாதமிருமுறையானதை முன்னிட்டு ‘தேவன்’ என்ற ஆர்.மகாதேவன் விகடன் உதவியாசிரியராக எடுத்துக் கொள்ளப் பட்டார்.”


“ஆனந்த விகடனில் சேரும்போது எனக்குப் பதினாறு வயது இருக்கும். அப்போதெல்லாம் விகடனில் ‘மாணவர் பகுதி’ என்று தனியொரு பகுதி வரும். அதற்கு சில சிரிப்புத் துணுக்குகளை அனுப்பி வைத்தேன். பிரசுரித்திருந்தார்கள். அடுத்ததாக, கல்கியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “நிறைய படியுங்கள். ஆங்கில இலக்கியங்களைத் தொடர்ந்து வாசியுங்கள்” என்று அதில் எழுதியிருந்தார். சில நாட்கள் கழித்து என் தகப்பனாருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருந்தார் ‘கல்கி’. ‘விகடனை வாரப் பத்திரிகையாய் மாற்றப் போகிறோம். உங்கள் மகனை வேலைக்கு அனுப்ப முடியுமா? “ என்று கேட்டிருந்தார். கதர் பிரசாரத்துக்காக கோவை வந்த கல்கி, என் தகப்பனாரிடம் நேரிலும் இதே கோரிக்கையை வைத்தார். இப்படித்தான் விகடனில் நான் சேர்ந்தேன். கல்கி, துமிலன், தேவனுடன் நான்காவது நபராக நான். அதற்கு அடுத்தவாரம் சேர்ந்தவர்தான் ‘றாலி’ ”
[ வாசன், கல்கி ]

” விகடனைத் தவிர ‘ஆனந்த வாஹினி’ என்ற தெலுங்கு மாதப் பத்திரிகையையும், ‘தி மெர்ரி மாகஸின்’ என்ற உயர்தர மாதமிருமுறை பத்திரிகையையும் வாசன் தொடங்கியதற்குக் காரணம், பத்திரிகைத் துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம்தான். வாசனின் நண்பரும் வக்கீலுமான எஸ்.சிங்கம் ஐயங்கார்தான் ‘தி மெர்ரி மாகஸி’னைக் கவனித்துக் கொண்டார். ஆங்கிலத்தில் அளவில்லாத பாண்டித்யம் பெற்றவர் அவர். அலுவலகத்தில் யாரும் பீடி, சிகரெட் பிடித்துவிட முடியாது. ஆனால், பெரிய சைஸ் சுருட்டை சிங்கம் ஐயங்கார் பிடிப்பார். அந்தளவுக்கு அவருக்கு உரிமை கிடைத்ததற்குக் காரணம், அவர் புலமையினால்தான்.”

“வெளிநாடுகளில் பிரபலமான எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் விகடன் அலுவலகத்துக்கு வியாழனன்று வந்துவிடும். அன்று அந்தப் பத்திரிகைகளை யார் முதலில் படிப்பது என்று கல்கிக்கும் சிங்கம் ஐயங்காருக்கும் போட்டியே நடக்கும். அப்போது நான் விகடன் நூலகராகவும் இருந்ததால் இதைக் கவனிக்கும் பொறுப்பு என்னுடையது. மொத்தத்தையும் அள்ளிவிட்டுப் போய் ஒரு திருப்பு திருப்பிவிட்டுத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, மறுபடி கொண்டு வந்து போட்டு விடுவார் சிங்கம் ஐயங்கார். “

“ தலையில் கொம்பு முளைத்த விகடன் தாத்தாவுக்கு முன், குல்லா போட்ட பபூன் படம்தான் விகடனின் லோகோவாக வரும். இந்த லோகோவை மாற்றவேண்டும் என்று பேச்சு வந்தபோது என்னுடைய மூக்கையும் தாடையையும் பார்த்து அதே மாதிரி வரைந்தார் மாலி. ‘உன்னோட மூக்கும் தாடையும் ஒண்ணுக்கொண்ணு ஒட்டும் போல” என்று கிண்டலடிப்பார் மாலி. “

“ மாலியின் பென்ஸில் படங்களில் மாறுதல் செய்தால் நன்றாயிருக்குமே என்று கல்கி சில சமயம் விரும்புவார். ஆனால், அதை நேரில் சொல்லமாட்டார் ! என் மூலமாக, சொல்லும்படி பணிப்பார். நான் ‘மாலி’யிடம் இதைத் தெரிவிப்பேன். ‘அப்படிச் சொன்னாரா?’ என்று சொல்லி, அவருக்காக ஆசிரியர் சொன்ன மாறுதல் ‘சரி’ என்று படுவதை உடனே ஏற்பார். “


“ ( விகடன் அலுவலகத்தில் ஒரு ஹால் உண்டு.) இந்த ஹாலில், ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தமது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”

“ ஆனந்த விகடனில் முதல் தொடர்கதை எழுதிய பெருமை எஸ்.எஸ்.வாசனையே சாரும். பத்திரிகையைத் தாம் மேற்கொண்டதும், ‘இந்திரகுமாரி’ என்ற தொடர்கதையை எழுதினார் வாசன்.  தமிழ் நாட்டில் முதல்முறையாக ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியவரும் அவரே. 1933-இல் நூறு ரூபாய் முதற்பரிசுடன் நடந்த இந்தப் போட்டியில், ‘றாலி’ முதல் பரிசு பெற்றார். இரண்டாவது பரிசு பி.எஸ்.ராமையா. மூன்றாவது பரிசு, ரா.ஸ்ரீ. ஸ்ரீகண்டன் பெற்றார்.  “

“ விகடன் வாரப் பத்திரிகை ஆனதும், அதில் எழுதிவந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் பிரமாதமாக அதிகரித்தது. விகடனில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ராஜாஜி, வ.ரா, மகாகனம் சாஸ்திரிகள், டி.கே.சி., பெ.நா.அப்புஸ்வாமி ஐயர் முதலிய பெரியவர்களும் விகடனில் ஆரம்ப காலத்திலேயே எழுதி அதற்குப் பெருமை கூட்டியிருக்கிறார்கள். ”

” ஆனந்த விகடன் உண்மையில் ஒரு தமிழ் வளர்ப்பு இயக்கமாகவே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மை “

[ நன்றி ; விகடன் காலப்பெட்டகம் (நூல்) , ‘விகடன்’ பவழ விழா மலர், “தமிழ் இதழ்கள்” ( நூல்: காலச்சுவடு) ; படங்கள் : விகடன் ]

ஒரு பின்னூட்டம்: நண்பர் பேராசிரியர் வே.ச.அனந்தநாராயணன்  எழுதியது :

அண்மையில் நான் சென்னையில் இருந்தபோது, கடந்த மார்ச் 2-ஆம் தேதியன்று மாலை 4.30 மணிக்கு, சாஸ்திரி நகரில் சரஸ்வதி வெங்கடராமன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது

விழாவின் தொடக்கத்தில், சங்கீதகலாநிதி டி.கே. கோவிந்த ராவ் குருகுல மாணவியர் பல பாரதியார் பாடல்களை நல்ல குரலும் இசை ஞானமும் சேரப் பாடினார்கள். இந்நிகழ்ச்சி அமைப்புக்குக் காரணமான திரு. குப்புசாமி அவர்களின் அறிமுகத்துடன், திரு.நரசய்யா அவர்களின் தலைமையில் விழா தொடங்கியது. முதலில், கவிஞர் கே.ரவி ஆற்றவிருந்த சிறப்புரையை (அவருக்குத் தொண்டைக்கட்டு இருந்ததன் காரணமாக) விவேகானந்தர் கல்லூரி முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பின், இளம் வழக்கறிஞர், அ.க. ராஜாராமன், அழகாக உரையாற்றினார். இதனை அடுத்து, முன்னதாக அறிவித்திராத பேச்சாளர்கள் பலர் ரா.அ.ப.-வின் பாரதி இலக்கியத் தொண்டைப் பற்றிய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமையான ‘போனஸ்’ ஆக இருந்தது. பேராசிரியர் அவ்வை நடராசன், ரா.அ.ப-வின் மகன் (பெயர் நினைவில்லை), ஓவியர் மதன், திரு.மண்டையம் பார்த்தசாரதி ஆகிய ஒவ்வொருவர் பேச்சையும் கேட்கையில் மறைந்த பாரதி அறிஞரின் எண்பதுக்கும் மேலான ஆண்டுகளாக ஆற்றிய அரும்பணியின் முழுப்பரிமாணம் தெரியலாயிற்று. 1917-ல் பிறந்த ரா.அ.ப.-வை விட நான்கே மாதம் இளையவரும் அவருடன் 77 ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்தவருமான திரு.மண்டையம் பார்த்தசாரதியின் உற்சாகமான, நகைச்சுவை கலந்த பேச்சை நானும் குழுமியிருந்தோரும் மிகவும் ரசித்தோம்.  குழுமி இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமில்லாவிடினும் தமிழ் இலக்கியத்திலும் பாரதியின் படைப்புகளிலும் தேர்ச்சிபெற்ற பலர் வருகை தந்திருந்தனர். நகுபோலியன் பாலு, கே.ரவி, குமரிச்செழியன், கோபால், சுவாமிநாதன் ஆகியோர் அவர்களில் சிலர். ரா.அ.ப.-வின் குடும்பத்தினரும் முன் வரிசைகளில் அமர்ந்திருந்தனர் (இணைப்புப் படங்கள்). 

இந்நிகழ்ச்சி பற்றித் திரு. கோபு எழுதியுள்ள (படங்களுடன் கூடிய ) விரிவான கட்டுரையை இங்கே காணலாம்:

அனந்த் 20-3-2014







 
[ ரா.அ.ப. அஞ்சலிக் கூட்டத்தில் ஒரு பகுதி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ரா.அ.பத்மநாபன்