வெள்ளி, 29 மே, 2015

கவிஞர் சுரபி - 2

பரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க!  

‘சுரபி’ 



கவிஞர் சுரபியும் கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவும் மாறி மாறி விகடனில் கவிதைகளைப் பொழிந்த காலம் உண்டு. சிலசமயம் சுரபியின் கவிதையைப் படித்தால், சுப்பு அவர்களின் ஒரு பாடல் அவர் மனத்தில் ஓடினதோ என்று தோன்றும். உதாரணமாக, சுப்பு சாரின் பிரபல பாடல் ஒன்று

 : “வேட்டை முடிஞ்சு போச்சு தம்பி வீட்டுக்கு வாங்க”

என்று தொடங்கும். இதை என் வலைப்பூவிலும் இட்டிருக்கிறேன் இங்கே . இந்த மெட்டின் தாக்கத்திலே தான் சுரபி இந்தப்  பாட்டு எழுதினாரோ என்று எனக்குத் தோன்றும்!

இதோ அந்தப் பாட்டு: ( ஓவியம்: ராஜு )




இந்தப் பாடல் 7-4-1946 இதழில் வந்தது என்கிறது 

பரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க!

சுரபி
படிச்ச படிப்பு போதுந் தம்பி மடிச்சு வையுங்க
பரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க
போட்டி போட்டுப் பொஸ்தகத்தெப் பொரட்டி வந்தீங்க
பொஸ்தகமா நாளைக்கெல்லாம் பொதி சொமந்தீங்க
நோட்டு நோட்டா எழுதிக் கையும் நொந்து போனீங்க
நூறு வருஷம் எரிக்க ஒதவும் மூட்டெ கட்டுங்க
கப்பு கப்பா டீ குடிச்சுக் கண்முழிச்சீங்க
கணக்கு சயின்ஸ் இஸ்டரிண்ணு கடமும்போட்டீங்க
குப்பி குப்பி யாக்கெரஸின் கொளுத்திப்புட்டீங்க
கும்பிருட்டாப் போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க
கடியாரத்தெத் திருப்பிவச்சிக் கனவுகண்டீங்க
கதறியெழுந்து கண்ணெநிமிட்டிக் கர்ம மிண்ணீங்க
விடிய விடியத் தூங்கிவழிஞ்சி வெறுத்துப்புட்டீங்க
விடிவு காலம் வந்ததப்பா மூட்டெகட்டுங்க
மாலையெல்லாங் கோயிலிலே மண்டி போட்டீங்க
வழக்கமில்லா வழக்கமாக வலமும் வந்தீங்க
பாலை வாங்கிக் கொட்டிக் கொட்டிப் பழிகெடந்தீங்க
பார்த்துக்கலாம் பலனையெல்லாம் மூட்டெ கட்டுங்க
அருத்தமில்லா எழுத்தெக் கரைச்சிக் குடிச்சிப்புட்டீங்க
அப்பாவோட ஆஸ்தியெல்லாங் கரைச்சிப்புட்டீங்க
கருத்து தெரிஞ்ச நாள்மொதலா கஷ்டப்பட்டீங்க
கவைக்கொதவாப் படிப்பு தம்பி மூட்டெ கட்டுங்க
கோட்டு சூட்டு பூட்டு ஹாட்டு மாட்டிக்கிட்டீங்க
கோலெரிட்ஜு மில்ட னின்னு கொளறிப்புட்டீங்க
ஏட்டுச் சொரையே நம்பி அடுப்பெ மூட்டிப்புட்டீங்க
ஏளனமாப் போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க
பிரஞ்சு நாட்டு அரசியலெ அலசிப்புட்டீங்க
பின்லந்தோட குளிரையெல்லாம் அளந்துபுட்டீங்க
பொறந்த நாட்டெ மறந்துப் பேசப்புகுந்துபுட்டீங்க
போதுமப்பா படிச்ச படிப்பு மூட்டெ கட்டுங்க
ஒரஞ்செய்த க்ளைவை கர்ம வீரனாயாக்கி
ஒலகக் கொள்ளைக் கார ட்ரேக்கை உத்தமனாக்கி
மாரதத்தின் சிங்கந்தன்னை மலை எலியாக்கி
மானங்கெட்டது போதுமப்பா மூட்டெ கட்டுங்க
பண்டெக்காலப் படிப்புமில்லே அலட்சியமாச்சு
பரதேசத்துப் படிப்புமில்லே அரைகொறையாச்சு
ரெண்டு ஆட்டெ ஊட்டி வளர்ந்த குட்டியாயாச்சு
ரேஷன் படிப்பு போதுமப்பா மூட்டெ கட்டுங்க
அடிமெ வாழ்வு தீருங் காலம் வந்திருக்குது
ஆத்திரமா தேசமெல்லாங் காத்திருக்குது
புதுமெ வெள்ளம் பொரண்டு வரக் காத்திருக்குது
போதுமப்பா பழையபடிப்பு மூட்டெ கட்டுங்க.

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் -10: சிந்தா நதி - 10

6. உபதேச மந்த்ரம் 

லா.ச.ரா

     





‘சுறில்’ - ஒரு பொறி


       - ஒரு முள் தைப்பு

       - ஒரு பாம்புப் பிடுங்கல் 

       - ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே 

ஏற்படுத்தக் கூடிய உபதேச மந்த்ரம் இப்படித்தான் அமையுமோ? 


                     --லா.ச.ரா  





இதோ முழுக் கட்டுரை !

    அப்போ நாங்கள், பைக்ராப்ட்ஸ் ரோடு, ஜாம்பஜார் மார்க்கெட்டுக் கெதிரே, ஆயில் மாங்கர் தெருவிலே குடியிருந்தோம். கிழக்கில் அதே பைக்ராப்ட்ஸ் ரோடில் கலக்கும் நல்ல தம்பி முதலித் தெருவில் என் தங்கை மகளின் புக்ககம். நடை தூரம்தான்.

    என் மருமாள் மாதம் ஒருமுறை, இரு முறை பாட்டியை மாமாவைப் பார்க்க வருவாள்.

    ஆபீஸ் விட்டு, பஸ்ஸில் திரும்புகையில் அவள் தெரு முனையில்தான், நான் இறங்கணும். வாரம் ஒரு முறையேனும் எட்டிப் பார்த்துவிட்டு வருவேன்.

    என் வீட்டுக்கு நான்கு வீடுகளே தாண்டி, எதிர்ச் சாரியில் எங்களுடைய வாடிக்கை மளிகைக்கடை. முதலாளி செட்டியார். பிதுங்கிய பெரும் வண்டு விழிகள். கடை பார்க்கச் சிறியது ஆயினும், 'ஜே ஜே'. தொப்புளடியிலிருந்து கத்தியவண்ணம், செட்டியார் சிப்பந்திகளைக் கார்வார் பண்ணுகையில், எங்கள் வீட்டுக் கூடத்தில் கேட்கும்.

    நான் எப்பவோ ஒப்புக்கொள்ள வேண்டிய விவரம், இனியும் ஒத்திப்போட முடியாது. என் பாடும் 'பற்று'த் தான். நாடு விடுதலை பெற்று எத்தனை வருடமானாலும் சரி, எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, உற்பத்திப் பெருக்கு எத்தனை ஆனாலும் சரி, இந்த நடுத்தரக் குடும்பம் இருக்கிறதே, இதற்கு விமோசனம் கிடையாது. எல்லோருடனும் சேர்ந்து கும்மி அடிக்கிறேனா? அடித்து விட்டுப் போகிறேன்.

    நாங்கள் குடியேறின ஆறு மாதங்களுக்குள் முழியான் செட்டியார், எங்களைத் தன் கணக்குப் புத்தகத்துள் இழுத்து விட்டார். சிறுகச் சிறுக ஆரம்பித்து, ஒரு நாள் முழுக்க. அப்புறம் முதலை வாய்தான். சம்பளத்துக்கு ஒரு வாரம் முன்னரே, லிஸ்டைக் கொடுத்துவிட்டால், அன்று மாலையே, மறக்காமல் கொசிர்ப் பொட்டலத்துடன் (அதைச் சொல்லு), பெரிய அட்டைப் பெட்டியில் சாமான்கள் வந்து இறங்கிவிடும். லிஸ்டைத் தவிர, தனித் தனியா வேற அப்பப்போ, பெண்டிருக்கு வெகு செளகர்யம். அம்மியில் தேங்காய்த் துருவலையும் பச்சை மிளகாயையும் வைத்துக்கொண்டு, உடைத்த கடலைக்கு, கடைக்குட்டியைக் கடைக்கு அனுப்பலாம்.

    சின்னப் பையனிடம்கூட செட்டியாரின் கவனமும் மரியாதையும் குறிப்பிடத் தக்கதாயிருக்கும்.

    "இந்த மாதம் சாமான் கூட ஆயிடுத்து செட்டியார்...."

    "ஆவட்டும், ஆவட்டும். பிள்ளைங்க நல்லாச் சாப்பிட்டு நல்லா வளரட்டும்."

    "பணம், செட்டியார்-"

    "என்ன சாமி, பணம், பணம் ? நான் வாயைத் துறந்து கேட்டேனா? வசூலுக்கு இதுவரை உங்கள் வாசப்படி மிதிச்சிருப்பேனா பணம் எங்கே ஒடிப் போவுது? மனுஷாள்தான் முக்கியம் சாமி!"

    அவ்வளவுதான், தொப்புள்வரை 'ஜில்'

    ஒரு சமயம், ஆபீஸ் விட்டு, வழக்கம்போல் கலியாணி வீட்டில் எட்டிப் பார்க்கையில், என்னைக் கண்டதும் அவள் முகம் சட்டென இறங்கிற்று. என்னோடு முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. எனக்குப் புரிய வில்லை. வீட்டில் ஏதேனும் மசமசப்பா? நோ.நோ.நோ. அவளுக்கு அங்கே ரொம்ப செல்லம். அதிர்ஷ்டசாலி தென் வாட்? அடுத்த தடவையும் அப்படியே. நான் என்ன குற்றம் செய்தேன்?

    மூன்றாம் 'பீட்'டின்போது மாடியில் நான் தனியாக ஏதோ பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருக்கையில், மேலே வந்தாள்.

    "மாமா, உங்களிடம் சொல்லலாமா வேண்டாமா, இதுவரை யோசனை பண்ணிப் பண்ணி உங்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமைன்னு முடிவு பண்ணிட்டேன்."

    "என்ன? என்ன ஆச்சு?"

    சுப்ரீம் பீடிகை வயிற்றில் புளியைக் கரைத்தது.

    "அன்னிக்கு உங்காத்துக்கு வந்திருந்தேனா? திரும்பும் போது வீட்டில் டீ தீர்ந்துபோச்சு ஞாபகம் வந்தது. எதிரே செட்டியார் கடையேறி 50கி. பாக்கெட் ஒண்ணு கேட்டேன். கடையில் அவரைத் தவிர யாரும் இல்லை. சாப்பாட்டு வேளையோ என்னவோ? செட்டியார் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். சாமானை எடுத்து வரக் கடையின் உள் அறைக்குப் போனார்.

    தற்செயலில் என் பார்வை, திறந்தபடி அப்படியே விட்டுப் போயிருந்த கணக்கு நோட்டின் மேல் விழுந்தது. கொட்டை எழுத்தில், தலைப்பில் உங்கள் பெயர் பார்த்ததும், கவனம் சட்டுனு அங்கு ஊணித்து. ஐட்டங்களின் நடுவிலிருந்து டீ-ஒத்தை எழுத்தோன்னோ- தனியாப் பிதுங்கித்து.

    '100. கி பாக், 2-50.'

    "இந்தாம்மா டீ, A-1 சரக்கு-என்னம்மா பார்க்கறீங்க?" குண்டுக் கண் கடுத்து உடனே கனிஞ்சதை டிக்கெட் கொடுத்துப் பார்க்கலாம். புத்தகத்தைப் படக்'னு மூடினார்.

    "என்ன செட்டியார்வாள், எனக்கு டீ விலை ரூ. 2. அதே பொட்டலம், அதே ரகம் மாமாவுக்கு 2-50!"

    ரோசத்தில் என் குரல் தேம்பித்தோ என்னவோ?

    அவர் அமைதியா, "ஏம்மா, நீங்க காசைக் கொடுத்துட்டு டீ சாப்பிடறீங்க, அவங்க குடிச்சிட்டுத்தானே கொடுக்கிறாங்க!"

    அன்னியிலேருந்து எனக்கு மனசு சரியில்லே மாமா. அம்மாடி! இன்னிக்கு சுமை இறங்கித்து, இனி உங்க பாடு."

    -துடித்துப் போனேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கஜகர்ணம் கோகர்ணம் போட்டு, எப்படியோ புரட்டி, அடுத்த நாளே, செட்டியார் 'பற்றைப்' பூரா அடைத்தேன் என்பது வேறு கதை. அன்றிலிருந்து ரொக்கம். 'காசில்லேன்னா அந்த சாமான் இல்லாமலேயே நடக்கட்டும்'- உத்தரவு போட்டு விட்டேன். ஆச்சு, முப்பது வருடங்களுக்கு மேல். இது எல்லாமே கிடக்கட்டும்.

    அன்று செட்டியார் பேசினது நியாயமோ, நாணயமோ, கேலியோ- ஆனால் சந்தேகமில்லாமல் இலக்கியம். என்ன கச்சிதம், ஸ்வரக்கட்டு, லயம், என்ன அர்த்த வீச்சு!

    இன்னும் வியக்கிறேன்.

    'சுரீல்' -ஒரு பொறி

    -ஒரு முள் தைப்பு

    -ஒரு பாம்புப் பிடுங்கல்

    -ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக்கூடிய உபதேச மந்த்ரம் இப்படித்தான் அமையுமோ?

    சிந்தா நதியில் தண்ணீர் எப்பவுமே பளிங்கல் அல்ல.

    உச்சி வெய்யிலுக்கு, கக்கல் கரைசல், பாசி, கும்மி, அழுகிய தழை, இலை, வேரோடு பிடுங்கிக்கொண்ட கோரை, எல்லாம் மிதக்க, கலங்கலாயும் வரும் போலும்!
    * * *
    ----------------
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்: 

ஓவியம்: உமாபதி ]

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ரா : சில படைப்புகள்

சனி, 16 மே, 2015

முருகன் -4

மருதமலை மாமணி
குருஜி ஏ.எஸ்.ராகவன் 

மே 17. ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ!






மலையும் மலை சார்ந்த இடமும் தமிழ் மரபில் குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரியும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்படுகின்றன. இந்த இரு நில அழகுகளையும் தனதாக்கிக் கொண்டது போன்ற நூதனப் பெயருடன் ‘மருதமலை’ என அழைக்கப்படும் ஸ்தலத்தில் முருகன் இரட்டிப்புப் பிரகாசத்துடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்.. ‘இருநில மீது எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும்’ என அருணகிரி நாதர் பாடியதைப் புதுமையாய் அர்த்தம் செய்து கொண்டோமானால், இக பர சுகங்களை வாரி வழங்க  இந் நிலத்திலும் மேலுலகிலும் சிறப்புற நாம் வாழ்வாங்கு வாழ ஓடி ஓடி அருள்புரிபவன் அழகன் முருகன்! அதற்கு சாட்சியாக அவன் குடி புகுந்த ஸ்தலம் மருத _ மலை!

  மருதமலையில் அவனைக் காண பாதை அமைத்துப் பேருந்து வசதி செய்திருக்கிறார்கள். கோவை நகருக்கு வடமேற்கே, வயல்களையும் விவசாயப் பல்கலைக்கழகத்தையும் கடந்து செல்ல வேண்டும். மருதம் கடந்து மலையை அடைந்தால், மேற்கு தொடர்ச்சி மலைச் சாரலில் ஒரு பகுதி. ஐந்நூறு அடி உயரம் ஏறிச் சென்றால், கோயில் கட்டுவதற்கென்றே இயற்கை அமைத்ததுபோல் அழகான அளவான சமதளம். சோமாஸ்கந்த மூர்த்தம் போல், இரு மலைக் குன்றுகளுக்கிடையேயான இந்தப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மருதமலை முருகன் கோயில். வெள்ளியங்கிரி, நீலிமலை என மிகப் பொருத்தமான பெயர்கள் இரண்டு மலைக் குன்றுகளுக்கும்.

  பாதை வழியே பேருந்திலும் போகலாம். நிதானமாய்ச் சூழலை ரசித்தபடி படி ஏறியும் போகலாம். ஏற ஏற, ஒரு புறத்தில் பார்த்தால் கோவை மாநகர காட்சி விரிந்து படர்ந்திருக்கிறது. இன்னொரு புறத்தில் முடிவின்றி மலைத்தொடர் நீடிப்பதுபோன்ற கம்பீரமான காட்சி.

  படியேறிப் போனால் நாம் முதலில் காண்பது மயில் வாகனத்துடன் கூடிய ஒர் அழகான மண்டபம். 1915லேயே எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர் கட்டியதாக அறிகிறோம். வயலூரை உலகறியச் செய்தது வாரியாரின் முயற்சி என்றால், மருதமலையை முருகன் பக்தர்கள் மனத்தில் நீங்காது இடம்பெறச் செய்தது சின்னப்ப தேவரின் முயற்சிதான். தேவரின் ‘தெய்வம்’ திரைப்படத்தையும் அதில் குன்னக்குடியின் இசையில் மதுரை சோமு பாடிய ‘மருதமலை மாமணியே’ பாடலையும் நினையாமல் மருதமலை சென்று வருவது இன்று தமிழர்களுக்குச் சாத்தியமேயில்லை! பல திருப்பணிகளை இக்கோயிலுக்குச் செய்திருக்கிறார் தேவர்.

  படிகளில் தொடர்ந்து ஏறி இரண்டாவது மண்டபத்தை அடைந்தால், அங்கே தான்தோன்றி வினாயகர் மிகுந்த வனப்போடு காட்சி தருகிறார். அந்த பிரகாசமும் பொலிவும் மூலஸ்தானத்து முருகனின் பிரகாசத்துக்குக் கட்டியம் கூறி வரவேற்பதாக நமக்குத் தோன்றுகிறது.

  இன்னும் சில படிகள் ஏறி அருணகிரி நாதர் மண்டபத்தைக் கடக்கிறோம். சமீபத்திய (20 ஆண்டுகள் முன்பு கட்டிய) கட்டுமானம் இது. அகத்தியரின் சீடனான இடும்பன் காவடி தூக்கிய கோலத்தில் இங்கே
காட்சி தருகிறான். திருப்புகழும், கந்தரலங்காரமும் கந்தரனுபூதியும் சுவர்களில் பதித்து எழுதப்பட்டுள்ளன.

  மலை உச்சியில், மென் காற்றின் சுகத்தால் சதா அர்ச்சிக்கப்பட்டு நிற்கிறார் மருதப்பரான மருதலை முருகன். தண்டாயுத பாணியான இவரை ‘மருதாசலக்கடவுள்’, ‘மருத மலையப்பன்’ என்றெல்லாம் அழைத்து வழிபடுகின்றனர்.

  கீர்த்தியையும் விலாசத்தையும் மகனுக்கு அளித்துவிட்டு அர்த்த மண்டபத்தில் அம்மையப்பர்கள் அமைதியாய் இருக்கிறார்கள். மார்க்கண்டேஸ்வரர், மரகதாம்பிகை என்று ஊர்ப்பெயருடன் பொருந்தும் ஒலிநயம் அமைந்த நாமங்கள் இவர்களுக்கு! வரதராஜ பெருமாள் கூட இருக்கிறார்.

  மூலஸ்தான முருகனைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று தோன்றுகிறது. சன்னிதியிலிருந்து அகன்று நின்று அண்ணாந்தால் பொன் விமானம் சூரிய ஒளியில் தகதகப்பதைக் கண்கூசப் பார்க்கலாம். பழைய கோயிலில் மூலவரின் புராதனத் தோற்றம் காணக் கிடைக்கிறது. இவர் சுயம்பு மூர்த்தி என்கிறார்கள். வள்ளி, தெய்வானை சன்னிதிகள் இருக்கின்றன.

  மூலஸ்தானத்திலிருந்து எங்கே சென்றாலும் முருகனின் பிரகாசம் கண்களையும் கருத்தையும் விட்டு அகலாமல் கூடவே வருகிறது.

  மருதமலை யமக அந்தாதி, மருதமலை அலங்காரம், மருதமலை சந்தப் பதிகம் போன்ற படைப்புகள் இத்தலம் குறித்து எழுதப்பட்டுள்ளன. ‘ஈசன் கூறிய மருதமலைச் சிறப்பு’ என்றொரு குறிப்பு திருப்பேரூர் புராணத்தில் இடம் பெற்றிருக்கிறது. (கோவை அருகே உள்ள பேரூரில், பழம்பெரும் ஈசுவரன் கோயில் இருக்கிறது.)

  ‘முருகன் தன் அன்பர்களுக்கு உதவி புரியும் பொருட்டு அழகிய அம்மலையாகி நின்றான். அவன் கைவேலும் மருதமரமாகி அங்கே வளர்ந்தது. பூக்கள் நிறைந்த வனங்களிடையே வண்டுகள் மருத கீதம் இசைக்கத் தொடங்கின. அந்த திவ்ய மலையில் மருதமரம் நிற்கும் குற்றமில்லாத ஒரு காட்சியிலே அது மருதமலை எனப் பெயர் பெற்றது!

  இன்றும் அந்த மருதமரத்தையும் அதன் அடிப்பாகத்தில் ஐந்து விதமான மரங்கள் தழைத்து வளர்ந்திருப்பதையும் காண்கிறோம். அந்த மரத்தினருகிலேயே அழகான சுனை ஒன்று இருக்கிறது. சிவபெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் கங்காதேவி, பூவுலகில் குதித்து, இந்த மருதமரத்தின் வேர் வழியே பெருகி இத்தீர்த்தத்தை உண்டாக்கியதாக புராணம். அத்தீர்த்த மகிமையைக் கேட்டவர்களே நற்கதி அடைவார்கள் என்கிறது புராணம்.

  அதற்காக நாம் ஸ்தல வரலாறுகளைப் படித்து, புராணம் கேட்பதோடு நிறுத்தி விடப் போவதில்லை. மருத மலையை முழுமையாகச் சுற்றிப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.

  பிராகாரத்தை வலம் வருகிறபோது பின்புற வாயிலிலிருந்து பாதை செல்வது தெரிகிறது. அதில் மீண்டும் மீண்டும் ஏறியும் இறங்கியும் நடந்து போனால் ‘பாம்பாட்டிச் சித்தர் குகைக்குச் செல்லும் வழி’ என்ற அறிவிப்புப் பலகை காணப்படுகிறது.

  தமிழுக்கும் தமிழ் மக்களின் ஆரோக்கியத்துக்கும் நிறைய செல்வம் அளித்து விட்டுத் தாங்கள் மட்டும் வெட்டவெளியையே மெய்யெனக் கொண்டு வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவ்வாறு வாழ்ந்த பதினெட்டு சித்தர்களுள் பெரும்பாலோர் முருகன் குடிகொண்ட மலைச் சாரல்களில்தான் மெய்ஞானிகளாய்த் திரிந்தார்கள்!

  பழனி முருகன் உருவத்தை, தமது யோக வன்மையினால் நவபாஷாணங்களைக் கொண்டு அமைத்தவர் போகர் என்ற சித்தர்தான். பழனி கோயிலில் தென்கிழக்கு பாகத்தில் போகருக்கு ஆலயமும் அவர் பூஜித்த விக்ரஹங்களும் அவரது சமாதியும் இருப்பதைக் காணலாம்.

  பழனிக்கும் போகருக்கும் உள்ள தொடர்பு போன்றதுதான் பாம்பாட்டிச் சித்தருக்கும் மருத மலைக்குமான தொடர்பு. சட்டைமுனி என்பவரிடம் தீக்ஷை பெற்றவர் பாம்பாட்டிச் சித்தர். சமாதி நிலையில் அவர் அடங்கியிருந்தபடியே பல சித்துக்கள் செய்தார். மாண்டுபோன அரசனின் உடலுக்குள் புகுந்து உயிர்ப்பித்துக் காட்டினார்; செத்த பாம்பை எழுந்து ஆட வைத்தார். இதனால் இவருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயராகிவிட்டது.

  முருகனை நோக்கி மருதமலைச் சாரலில் தவம் செய்தார் பாம்பாட்டிச் சித்தர். தவ வலிமையினால் என்ன செய்ய முடியும் என்று உலகுக்கு உணர்த்த அவ்வப்போது சித்துக்களில் ஈடுபட்டார்கள் இவரைப் போன்ற பெரியோர்கள். ஆனால் அவர்கள் விட்டுச் சென்றுள்ள நிரந்தரச் செல்வம் வைத்திய நூல்களும் ஞானப் பாடல்களும் தான். அவருடைய இந்த ஒரு பாடலே அட்சர லட்சம் பெறும் அல்லவா!



  ‘‘தந்திரம் சொல்லுவார் 
      தம்மை யறியார் 
  தனிமந்திரம் சொல்லுவார் 
      பொருளை அறியார் 
  மந்திரம் செபிப்பார்கள் 
      வட்ட வீட்டிலுள் 
  மதிலினைச் சுற்றுவார் 
     வாயில் காணார் 
  அந்தரம் சென்றுமே 
     வேர் பிடுங்கி 
  அருள் எனும் ஞானத்தால் 
      உண்டை சேர்த்தே 
  இந்த மருந்தினைத் 
     தின்பீ ராகில் 
  இனிப் பிறப்பு இல்லை 
     என்று ஆடுபாம்பே.’’

  இறைவன் தியானமும் அதன் மூலம் பெறும் அவன் அருளும் பிறவிப் பிணிக்கான உத்தரவாதமான மருந்துருண்டை என்பதை எத்தனை ஆணித்தரமாகச் சொல்கிறது இப்பாடல்!

[ நன்றி : கல்கி]

தொடர்புள்ள பதிவுகள்: 

குருஜி ஏ.எஸ்.ராகவன்

திருப்புகழ்

முருகன்

புதன், 13 மே, 2015

ஆர்.கே.நாராயணன் -1

அமெரிக்காவில் நான் 
ஆர்.கே.நாராயணன்

மே 13. பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் நினைவு தினம்.

அவருடைய நாவல் மொழிபெயர்ப்புகள் ஆனந்த விகடன்  வாசகர்களுக்குப் புதியவை அல்ல. அவருடைய ‘சுவாமியும் சிநேகிதர்களும்’ விகடனில் 1937-இல் வந்திருக்கிறது. 40-இல் ‘இருட்டறை’யும் வெளியாகியுள்ளது.  அவர் எழுதிய “ தேதி குறிக்காத என் டயரி” ( My Dateless Diary )யின் பல பகுதிகளைப் பரணீதரன் மொழிபெயர்த்து விகடனில் 1963-இல் வழங்கினார். [ பரணீதரன் ( மெரினா, ஸ்ரீதர்)  நாராயணனின் தாய்மாமன் ‘கலாநிலையம்’  சேஷாசலம் அவர்களின் புதல்வர்.]

அந்தக் கட்டுரைத் தொடரில் பல புகைப்படங்களும்,  நாராயணனின் சோதரர், பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் வரைந்த கோட்டுப் படங்களும் விகடனில் வந்தன. அந்தத் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி இதோ :



ஸ்டேஷன் பூராவும் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒருவராவது சரியான தகவல் கொடுப்பதாகத் தெரியவில்லை. அருகில் இருக்கும் ஆல்பனியைப் பற்றிக்கூட விவரம் தெரியாமலிருக்கிறார்களே என்பதை நினைத்தபோது, ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஏதோ கடல் கடந்து செல்லும் ஒரு பிரயாணத்திற்கு நான் வழி கேட்டுவிட்டது போல் எல்லோரும் விழித்தார்கள்!


ஏதாவது ஒரு வண்டியைப் பிடித்துப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் நடந்துகொண்டிருந்தேன். மனித நடமாட்டமேயில்லாத ஒரு மூலையில் அந்த இரண்டு ஆசாமிகள் மறுபடியும் என்னை வழிமறித்தார்கள். இம்முறையும் என் டிக்கெட்டை நான் இழக்கத் தயாராக இல்லை. ஆகவே, அதை உள் பாக்கெட்டில் வைத்துப் பத்திரப்படுத்தினேன்.



அவர்களில் ஒருவன், என் கோட்டு காலரைப் பற்றிக்கொண்டு, "உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும்" என்றான். மற்றொருவனோ, சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டு, யாராவது வருகிறார்களா என்று கழுத்தை நீட்டி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தான்.
என்னருகில் இருந்தவன், "இதோ பாரு, வீண் சிரமம் கொடுக்காதே! நான் சொல்வதை மரியாதையாகக் கேளு" என்று சொல்லியபடி தன் கையை உயர்த்திப் பயமுறுத்தி னான். "உன் பல்லை உடைத்து விடுவேன், ஜாக்கிரதை! என்ன புரிகிறதா?" என்றான்.

அதன் அர்த்தம் எனக்கு மிக நன்றாகப் புரிந்தது. அவன் உருவத் தைப் பார்த்ததுமே, சொல்வதை உடனே செய்யக்கூடியவன் என்று தெளிவாகத் தெரிந்தது. எனக்கு உடலெல்லாம் நடுங்கிற்று. 'குப்' பென்று வியர்த்துவிட்டது. அடுத்த நாள் பத்திரிகையில் வெளியாகப் போகும் ஒரு தலைப்பு, என் மனக் கண் முன்னால் மின்னல் போல் பளிச்சிட்டது.

'கீ ஸ்டேஷன் அருகில் இந்திய நாவலாசிரியர் படுகொலை!'

"உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டேன் நிதானமாக.

தெரு முனையில் காவல் புரிந்து கொண்டிருந்தவன், உள்ளூர் மொழியில் ஏதோ சொன்னான். உடனே, என் காலரைப் பற்றிக் கொண்டிருந்தவன் தன் நிஜார் பாக்கெட்டில் கையைவிட்டான். 'அவன் துப்பாக்கியை எடுக்கப் போகிறான்' என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

 [ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 4 மே, 2015

தேவன் -20: யுத்த டயரி

யுத்த டயரி 
தேவன் 




மே 5. தேவனின் நினைவு தினம்.


இந்த வருடம் (2015)  இரண்டாம் உலகப் போர் முடிந்த 70-ஆவது ஆண்டு. உலகின் பல இடங்களிலும் அதை நினைவு கூரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தத் தருணத்தில் ஆனந்த விகடனில்  வாரம்தோறும் தேவன் எழுதிய “யுத்த டயரி” என்ற பத்தியிலிருந்து சில துளிகளைப் பார்க்கலாம்.

இதை பற்றி அசோகமித்திரன் சொல்கிறார்:

தேவன் பலவிதமான துறைகளில் எழுதியிருக்கிறார்.... சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை, நிருபரின் அறிவிக்கைகள்,  செய்திகளை அலசல்  என்று. இரண்டாம் உலகப் போரின் போது தேவன் ”யுத்த டயரி”  என்ற கட்டுரைத் தொடர் மூலம் செய்திகளை அற்புதமாக அலசிக் கொடுத்தார்.   இது விகடனை போர்த் தகவல்களை அறிய  மிகச் சிறந்த இடமாய் ஆக்கியது “

                 - அசோகமித்திரன், செப்டெம்பர் 2008
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article1435655.ece

என்னிடம் உள்ள யுத்தம் பற்றிய சில பகுதிகளை இங்கு இடுகிறேன்.

முதலில் 1936/37-இல்    (யுத்தம் தொடங்குமுன் ) எழுதப்பட்ட ஒரு குறிப்பு:

1. ஜெர்மனி 

இங்கே பழைய ஆசாமி ஒருவர் - அவர் பேர் ஹிட்லர் - அட்டகாசம் பண்ணிக் கொண்டு திரிகிறார். இவர் தன்னைப் பற்றியே ஒரு சுய சரிதம் எழுதி விட்டாராம். சுய சரிதத்தின் படியே தம் வாழ்க்கையையும் நடத்தப் போவதாய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் கிராப்பு சரியாக வாரி விட்டுக் கொள்வது கிடையாது. ஆனால் உலகத்தையே வாரிக் கொண்டு விடலாமென்று பார்க்கிறார். சமீபத்தில் இவர், ஜப்பானுடன் சிநேக உடன்படிக்கை செய்து கொண்டாராம். கள்ளனும் குள்ளனும் ஒன்று சேர்ந்தால் உலகத்துக்கு அனர்த்தம்தான்!

யுத்த டயரியிலிருந்து  சில துளிகள். .



2.  24-10-39 - விகடனில் 


சண்டையில் ஈடுபட்டிருக்கும் எந்தத் தேச நீர்முழ்கிக் கப்பல்களும் அமெரிக்காவின் கடற் பிரதேசத்தில் 300 மைலுக்குள் வரக் கூடாதென்று ரூஸ்வெல்ட் உத்தரவிட்டிருக்கிறார்.


ஹிட்லருக்கு இப்பொழுது ஒரு புது யோசனை தோன்றியிருக்கிறது. 'முதலில் பிரிட்டிஷ் கப்பல் படையை நூற்றுக்கணக்கான விமானங்களாலும், நீர்முழ்கிக் கப்பல்களாலும் தாக்கி நாசம் செய்து விட வேண்டியது. அப்புறந்தான் ஸிக்பிரீட் அரணில் யுத்தத்துக்கு ஆரம்பிக்க வேண்டியது' என்று தீர்மானித்திருக்கிறார். நடுவில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் ஒற்றுமை குலையும்படி விஷமப் பிரசாரம் செய்துகொண்டிருக்கப் போகிறார்.


3. ஸ்பெயின் யுத்தம் 

ரிடயர்ட் ரிஜிஸ்ட்ரார் ரிக்வேத சாஸ்திரிகள் 

அவங்களுக்கு என்னடா குறைச்சல்? ஸ்பெயின் காரனுக்கு இதாலி ஒத்தாசை பண்றான். ஆளைக் கொடுத்துக் கொல்ல, ருஷ்யாவிலே கடன் கொடுத்து, வெடிமருந்து வாங்கிச் சுட்டுக் கொல்லச் சொல்றான். அவர்கள் ஒத்தனை ஒத்தன் கொன்று கொள்கிறதுக்கு நான், நீ என்று போட்டுக் கொண்டு எல்லா ராஜ்யங்களும் ஒத்தாசை பண்ண வறதுகள்; நடக்கட்டும், நடக்கட்டும், இது எவ்வளவு தூரம்தான் போகிறதுன்னு பார்த்து விட்டு விடுவோம்.

4.ஜாவா 

ஜாவாவை ஜப்பானிய விமானங்கள் தாக்க வரும்போது, நம்மைத் தூக்கி வாரிப் போடும் செய்திகளைக் கேட்க நேரலாம். அந்தச் செய்திகள்:

மதுரையின் மீது விமானப் படையெடுப்பு” 

குண்டூரில் பலத்த குண்டு வீச்சு”   என்பவைதான்.

இந்தப் பயங்கரச் செய்திகளைக் கேட்டு நாம் அப்படியே விலவிலத்துப் போக வேண்டாம்.

ஜாவாவின் பக்கத்திலே மதுரை என்ற தீவும், ஜாவாவிலேயே குண்டூர் என்ற இடமும் தாக்கப்படலாம் என்பதைத்தான் நாம் குறிப்பிட்டோம்.


5. 1944-இல்  ( பிப்ரவரி 44 என்று நினைக்கிறேன்.) எழுதப் பட்ட ஒரு ”யுத்த டயரி”ப் பக்கம்:


ஹிட்லரின் வீழ்ச்சியைப் பற்றி  1944 -இல்  'யுத்த டயரி'யில் வெளியான ஒரு குறிப்பு.

6. ஹிட்லர் எங்கே?


எங்கு பார்த்தாலும் இவ்வாரம் ஹிட்லரைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அவர் இப்போது ஜெர்மனியில் இல்லை என்பதற்கு அனுசரணையான காரணங்களாகப் பலவற்றை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, அவருக்கு ரொம்ப உடம்பு அசௌக்கியம் என்றும், புத்தியே பேதலித்து விட்டது என்றும், தொண்டையில் ஆபரேஷன் ஆகியிருக்கிறதென்றும், இன்னும் இம்மாதிரி பலவிதமான ஹேஷ்யங்கள் தினம் தோறும் வந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் விட அதிக நம்பகமான தகவலை ஒரு டச்சு ஸ்திரீ சொல்லுகிறாள். ஹிட்லரும் கோயரிங்குமாக ஜப்பானுக்குப் போய்விட்டார்களாம். ஜப்பானை முடுக்கிவிட்டு, அதை ரஷ்யாமீது பாயும்படி செய்வதுதான் இந்த அவசர விஜயத்தின் நோக்கமாம்.

[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்; 

தேவன் படைப்புகள்