வாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஜூலை, 2022

2180. வாலி -3

கவிஞர் வாலி நினைவு தினம்

லாரன்ஸ் விஜயன்


ஜூலை 18. கவிஞர் வாலியின் நினைவு தினம்.

=== 

கவிஞர் வாலி நினைவு தினம்: எழுதி வைத்த ஓவியம்போல் இருக்‍கின்றாய் இதயத்தில் நீ!...



உறவு என்றொரு சொல்லிருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்‍கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவு இருக்‍கும்


பிரிவு... காலங்கள் சில ஆன பின்னே காயங்கள், வடுக்களாக மாறிவிடும். ஆனால், வடுக்களை காலாகாலத்திற்கும் காயங்களாக மாறி நம்மை வதம் செய்யும். இதற்குப் பெயர்தான் பிரிவு. பிரிவின் வலி வலியது. கொடியது. பிரிவு. ஒரு பங்கமா? அல்லது வாழ்வின் ஒரு அங்கமா?

பிரிவுத் துயரை பாடலாக வடித்து நெஞ்சை பிழிய வைத்திருக்கும் இந்த நேசமிகு கவிஞன் யார்?. அதுதான் கவிஞர் வாலி.

தீரர்கள் கோட்டமாம் திருச்சி.. 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருவரங்கம். இங்குதான் சீனிவாச ஐயங்காருக்‍கும் - பொன்னம்மாளுக்‍கும் மகனாக பிறந்தார் வாலி. இயற்பெயர் ரங்கராஜன். திருவரங்கத்தில் பிறக்‍கும் பல ஆண்குழந்தைகளுக்‍கு ரங்கராஜன், ரங்கநாதன் போன்றவைதான் திருப்பெயராய் சூட்டப்படும். வாலியும் அதற்கு விதிவிலக்‍கல்ல.

பிள்ளைபிராயத்திலேயே தமிழின் மீது தணிக்‍கமுடியாத காதல், ரங்கராஜன் என்ற வாலிக்‍கு. கோலிக்‍குண்டு, கிட்டிப்புள்ளும் விளையாட வேண்டிய பருவத்தில் இலக்‍கிய கூட்டங்களுக்‍கும், இசை விழாக்‍களுக்‍கும் சென்று முன்வரிசையில் அமர்ந்துகொள்ளும் பழக்‍கம் வாலிக்‍கு இருந்தது.

ஸ்ரீரங்கத்தில் ஒருமுறை தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. திரு. வல்லிக்‍கண்ணன் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில், அத்தனை எழுத்தாளர்களின் பேச்சையும் அருகிலிருந்து கேட்கும் வாய்ப்பு வாலிக்‍கு வாய்த்தது. தமிழ் மீது ஆர்வம் வளர இந்த மாநாடு, வாலிக்‍கு மேடை அமைத்துக்‍ கொடுத்தது.

எழுத்தின் மீது இருந்த காதல்போல், சித்திரம் தீட்டுவதிலும் சிறந்தவனாக விளங்கினார், சிறு வயது வாலி. மாலியைப் போல சிறந்த ஓவியராக விளங்கவேண்டும் என்பதற்காக ரங்கராஜனுக்‍கு வாலி எனப் பெயரிட்டார் அவரது பள்ளித்தோழர் பாபு. தேசிகர் என்றொரு தமிழ் ஆசிரியர் வாலியை அழைத்து, ''உன் பெயர் ரங்கராஜ்தானே?'' உனக்‍கு வால் இல்லையே, பிறகு ஏன் வாலி என வைத்துக்‍ கொண்டாய் எனக்‍ கேட்டார். மாணவர்கள் எல்லாம் கொல் என்று சிரித்தனர். அடுத்த நாள் ஒரு துண்டு காகிதத்தை ஆசிரியர் தேசிகரிடம் நீட்டினார் வாலி. அதில் இப்படி எழுதியிருந்தது.

'வாலில்லை என்பதால்

வாலியாகக் ‍கூடாதா?

காலில்லை என்பதனால்

கடிகாரம் ஒடாதா?'


இதைப்படித்த தமிழ் ஆசிரியரின் பாராட்டு, வாலிக்‍கு தமிழின் மீதுள்ள ஆர்வத்தை இன்னும் அதிகரிக்‍கச் செய்தது.

திருச்சி வானொலியில் வேலை கிடைத்தது வாலிக்‍கு. வானொலியில் நாடகம் எழுதினார் வாலி. ஸ்ரீரங்கத்தில் வடக்‍கு திசையில் ஓடும் காவிரிக்‍கு பெயர் கொள்ளிடம், அந்தக்‍கொள்ளிடத்திற்கு செல்லும் வழியில் பழங்கால கல் மண்டபம் உண்டு. அதற்குப் பெயர் கழுதை மண்டபம். இந்த மண்டபத்திலிருந்து தான் வாலியின் வற்றாத கற்பனை மற்றொரு காவிரியாக பொங்கிப் புறப்பட்டது.

'கற்பனை யென்றாலும் கற்சிலை என்றாலும்-

கந்தனே! உனை மறவேன்?'

என்ற பாடலும்,

'ஓராறு முகமும் ஈராறு கரமும்-

தீராத வினைதன்னைத் தீர்க்‍கும்! -துன்பம்?

துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்‍கும்?'

-போன்ற உன்னதமான பக்‍திப் பாடல்கள் இந்தக்‍ கழுதை மண்டபத்தில்தான் அரங்கேறின.

எழுதத் தொடங்கிய பல நாட்களுக்‍குப் பிறகுதான் தமிழ் இலக்‍கணத்தையே தான் இனம் கண்டுகொண்டதாக வாலி குறிப்பிடுகிறார்.

வாசித்துத் தமிழ்கற்றோர்

வரிசையிலே யானில்லை;

யோசித்துக்‍ கவிபுனையும்

யோக்‍கிதை தானில்லை;

நேசித்தேன்; நெஞ்சாரப்

பூசித்தேன்; நின்னடியில்

யாசித்தேன் அடடாவோ!

யானும் ஓர் கவியானேன்!

-என்று வாலி தன் தமிழ்புலமையை இப்படி விவரிக்‍கிறார்.

1958-ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரம். சென்னைக்‍கு வாலி குடிபுகுந்த வருடம். திருவல்லிக்‍கேணியில் நண்பர் ஒருவரின் அறையில் திடீர் விருந்தாளி ஆனார். திருவல்லிக்‍கேணிதான் தனது பாட்டுப் பயணத்திற்கு இந்த ராஜ கவிஞன் தன் சிறகுகளை சிலிர்த்துக்‍கொள்ள தொடங்கிய இடம். பல அலைக்‍கழிப்புகள், அவமானங்கள், காத்திருப்புகள் எனத் தொடங்கியது, வாலியின் திரைப்பட வாழ்க்‍கை. சென்னை தியாகராய நகர் கிளப் ஹவுஸில் வாலிக்‍கு பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில் முக்‍கியமானவர் நடிகர் நாகேஷ். நாகேஷ் வாலியின் முன்னேற்றத்தில் ஒரு முக்‍கியப் பாதை. நல்லவன் வாழ்வான் என்ற படத்தில்

'சிரிக்‍கின்றாள்! -இன்று

சிரிக்‍கின்றாள்!'

என்பதுதான் வாலியின் முதல் பாடல். பாடலின் சரணத்தில் வரும் சில வரிகளை பேரறிஞர் அண்ணா அடிக்‍கோடிட்டு, அவை கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அண்ணாவின் பாராட்டு, வாலிக்‍கு ஆனந்தத்தை தந்தது. இந்தப் பாராட்டுதான் வாலியின் பல வெற்றிகளுக்‍கு நீரூற்று.

சாரதா ஸ்டூடிவோயில் இருந்த புரட்சித் தலைவர் எம்.​ஜி.ஆர். பாடலை கேட்பதற்காக கம்போசிங் அறைக்‍கு வருகிறார். அப்போதுதான் வாலிக்‍கு எம்.​ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்தது. இந்த அறிமுகம்தான் பின்னர் எம்.ஜி.ஆரின் பாடல்கள் மூலமாக வாலியை இந்த ஊருக்‍கு அறிமுகப்படுத்தியது. தனக்‍கு வாழ்வளித்த வள்ளலை, வாலி ஒரு திரைப்படப் பாடல் வாயிலாக இப்படி நன்றி செலுத்துகிறார்.

'என்னைப் பாடவைத்தவன் ஒருவன்

என் பாட்டுக்‍கு அவன்தான் தலைவன்

ஒரு குற்றமில்லாத மனிதன்

அவன் கோயில் இல்லாத இறைவன்'

பிரபல தயாரிப்பாளரும், இயக்‍குனருமான முக்‍தா சீனிவாசனின் அறிமுகம் வாலிக்‍குக்‍ கிடைத்தது. வாலியின் வெற்றிப்படிக்‍கட்டில் எத்தனையோ பேர். முதற்படியாய் இருந்தவர் முக்‍தா சீனிவாசன். அவரது இதயத்தில் நீ படத்தில் வாலி இயற்றிய எல்லாப் பாடல்களும் எல்லையில்லாப் புகழை அவருக்‍கு வழங்கியது. 'பூவறையும் பூங்கொடியே', 'உறவு என்றொரு சொல்லிருந்தால்', 'ஒடிவதுபோல் இடை இருக்‍கும்' போன்ற பாடல்கள் வாலியை உயரத்துக்‍குக்‍ கொண்டுபோயின.

திரைப்படக்‍ கவிஞருக்‍கெல்லாம் பிதா மகனாய் திகழ்ந்த உடுமலை நாராயணக்‍ கவியோடு உடனிருந்து, குட்டை கவி என பெயரிடப்பட்ட திரு.கே.எஸ். கோபாலகிருஷ்ணன், வாலியின் வளர்ச்சிக்‍கு ஏணியாய் இருந்தார். கற்பகம் படத்தில் வாலியின் வைர வரிகளில் தமிழின் தாகமும், காதலின் மோகமும் கைகோர்த்து, களிநடனம் புரிந்தன. அதில் வரும் 'பக்‍கத்து வீட்டு பருவ மச்சான்' பாடலில் ஒரு சரணத்தில் 'மனசுக்‍குள்ள தேரோட்ட மை விழியில் வடம் பிடிச்சான்' இந்த சரணத்தில் வாலியின் வரியழகில் தான் சரணடைந்ததாக கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலிக்‍கு பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்‍கிறார்.

கற்பகத்துக்‍குப் பிறகு வாலியின் பட வாய்ப்பு அதாவது பாடல் வாய்ப்பு கற்பகவிருட்சம்போல் விரிந்தது. ஒரு பாடல் கம்போசிங்போது, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., தான் அசருவதுபோல ஒரு பல்லவியை சொன்னால் தன் கையில் இருக்‍கும் மோதிரம், கைகடிகாரம் ஆகியவற்றை உடனே தருவதாக வாலிக்‍கு கட்டளையிட, வாலி சொன்ன பல்லவிதான் இது.

'காற்று வாங்கப் போனேன் - ஒரு

கவிதை வாங்கி வந்தேன்! - அதைக்‍

கேட்டு வாங்கிப் போனாள்! - அந்தக்‍

கன்னி என்ன வானாள்?'

கலங்கரை விளக்‍கத்தில் வெளியான இந்தப் பாடல் இன்றுவரை கலங்கரை விளக்‍கமாக காட்சியளிக்‍கிறது.

கண்ணதாசனைப் போலவே ஒவ்வொரு சூழலுக்‍கும், வாலியின் பாடலும் வசதியாய் நின்றது.

'தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை

என்னுயிர் பிரிவதைப் பார்க்‍கின்றேன்'

வாழ்க்கையைப் போன்றே மரணமும் நிஜம். சத்தியம். உயிருக்கு ஏற்படும் மரணம், ஒரு நொடியில் முடிந்து போகிறது. ஆனால், மனதிற்கு ஏற்படும் மரணம், பிரிவு என்ற பேரில் பல காலம் கொல்கிறது. மரணம், அன்றே கொல்லும். பிரிவு, நின்று நின்று கொல்லும். பிரிவைப் பற்றி பிழிந்தெடுத்த வாலியின் பாடல்தான் இது.

இதயங்கள் இணைந்துவிட்டபின், இடைவெளிகளால் என்ன செய்துவிட முடியும்? மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்கிறது வாழ்க்கை தத்துவம். அப்படியிருக்க, பிரிவு மட்டும் எப்படி நிரந்தரம்?. பிரிவு தற்காலிகமானதுதான் என்கிறது, வாலியின் 'என்னையெடுத்து தன்னைக் கொடுத்து' என்ற படகோட்டி பாடல்.

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட

'என்னை எழு' தென்று சொன்னது வான்!

ஓடையுந் தாமரைப் பூக்‍களும் தங்களின்

ஓவியத் தீட்டுக, என்றுரைக்‍கும்!

புரட்சிக்‍ கவிஞர் பாரதிதாசனின் கவிதையைப்போல, இயற்கையை மட்டுமல்ல, இயல்பாக தோன்றுவதைக்‍கூட பாடுபவன்தான் கவிஞன்.

ஒலிநயம் உள்ள சொற்கோர்வைகளின் தொகுப்புதான் பாட்டு எனப்படுகிறது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் உள்ள நீண்ட செய்யுள்களை, பாடல் என வழங்கும் மரபு தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இறைவனையே இசையவைத்தது இசை, அதாவது பாட்டு... இது தலைகனம் அல்ல. தமிழ் கனம்! கவிஞர் வாலியின் தமிழ் கனமும், எதையும் ஈடுசெய்யமுடியாத தனி கனம்.

'யார் சிரித்தால் என்ன? இங்கு

அழுதால் என்ன'

வாழ்க்‍கையின் நிலையாமையை சொன்னது இந்தப் பாடல்.

'வானம் எனும் வீதியிலே - குளிர்

வாடை எனம் தேரினிலே'

வாழவைக்‍க மனைவியாய் வரப்போகிறவளை மானசீகமாக வரவேற்றது ஒரு பாடல்.

'நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல'

நடிக்‍கத் தெரியாத மனிதர்கள் முன்னே, நாடகமாடும் மனிதர்களின் முகத்திரையை கிழித்தது இந்தப் பாடல்.

'கண் மையேந்தும் விழியாக

மலரேந்தும் குழலாக'

காற்றுப் புகாத இடத்திலும் காதல் புகும். காதல் இருக்‍கும் இடத்தில் காமம் உச்சம் தொடும். ஆனாலும் காதலே அங்கு வெற்றிபெறும். இதை விளக்‍கியது இந்தப் பாட்டு.

'தொட்ட இடம் துலங்க வரும்

தாய்க்‍குலமே வருக'

பெண்மையின் மேன்மையை விளக்‍கியது இந்தப் பாடல்.

'பவளக்‍ கொடியிலே முத்துக்‍கள் பூத்தால்

புன்னகை என்றே பேராகும்'

காதலியை வர்ணிப்பதில் காலங்காலமாய் கவிஞர்கள் கங்கனம் கட்டிக்‍கொண்டுதான் இருக்‍கிறார்கள். வாலியும் அதற்கு விதிவிலக்‍கல்ல. வாலிபக்‍ கவிஞராயிற்றே.

'மதுரையில் பறந்த மீன் கொடியை

உன் கண்களில் கண்டேனே'

காதலியை தமிழால் வர்ணித்து பார்த்திருப்பீர்கள். தமிழகமாக வர்ணித்திருப்பதை பார்த்திருக்‍கிறீர்களா? திரைப்படப் பாடல் உலகில் வாலி ஒரு வல்லரசு.

'அழகு தெய்வம் மெல்ல மெல்ல', 'அவளுக்‍கும் தமிழ் என்று பேர்', 'கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே' - இப்படி எத்தனையோ மனது மறக்‍காத பாடல்கள், தமிழ்த் திரையில் வாலி வாரி இறைத்தது.

1964-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு அறிமுகம் வாய்த்தது வாலிக்‍கு. இந்த அறிமுகம்தான் 80 படங்களுக்‍கு அவருக்‍கு பாட்டெழுத வைத்தது. அன்புக்‍கரங்கள் என்றொரு படம். அதில் இடம் பெற்ற 'ஒன்னா இருக்‍க கத்துக்‍கணும்', என்ற பாடல் வாலியின் பெருமையை உரக்‍கப் பேசியது... இந்தப் பாடலைப் பற்றி கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., உங்கள் அன்புக்‍கரங்கள் எப்போது ரிலீஸ் என வாலியிடம் கேட்டாராம். உங்கள் அன்புக்‍கரங்களிலிருந்து என்றைக்‍குமே எனக்‍கு ரிலீஸ் கிடையாது என்றாராம் வாலி. எத்தனையோ கவிஞர்களை வாழவைத்த எம்ஜிஆர், வாலியின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனாராம்.

பின்பு சிவாஜிகணேசனுக்‍காக எழுதிய பல பாடல்கள் வெற்றி பெற்றன. வாலியின் தமிழ்மணம் தமிழ் உலகெல்லாம் பரவியது.

எத்தனையோ இசையமைப்பாளர்களின் வர்ண மெட்டுகளுக்‍கு வார்த்தை அளித்த வாலி, இளையராஜா என்ற இசை இமயத்துடன் இணைந்தபோது, தமிழ் சினிமாவின் இசை, தங்க ரதத்தில், வசந்தத்தின் பாதையில் பூக்‍களின் ஊர்வலமாய் உலா வரத் தொடங்கின. பத்ரகாளியில் 'கண்ணன் ஒரு கைக்‍குழந்தை', 'சின்னப்புறா உந்தன் எண்ணக் ‍கனாவினில்',

'ராசாவே உன்ன நான் எண்ணித்தான்' போன்ற பல பாடல்கள் வாலி-இளையராஜா கூட்டணியில் திரை இசையில் அருதிப் பெரும்பான்மை பெற வைத்தன.

திருமண மேடைக்‍கு வராமலேயே முதிர் கன்னிகளாகிவிட்ட பெண்களைப் போல, வாலியின் பல இனிய பல்லவிகள் திரைப்படங்களில் இடம்பெறாமலேயே போய்விட்டன.

'இறைவனில்லா ஆலயத்தில்

ஏற்றி வைத்த தீபம்;

இரவு பகல் எரிவதனால்-

எவருக்‍கென்ன லாபம்?'

இந்தப் பாடல் ஒலிப்பதிவு கட்டத்திற்கே போகவில்லை. என்ன காரணத்தினாலோ, இந்தப் பாடல் இடம்பெற்ற படம் கைவிடப்பட்டது.

கற்பனைத் திறன் உள்ள வாலியிடம் நகைச்சுவை உணர்வுக்‍கும் பஞ்சமில்லை. உடல்நலக்‍ குறைவால் மருத்துவமனை படுக்‍கையில் இருந்தபோது, மூச்சுத் திணறல் காரணமாக அவருக்‍கு மாஸ்க்‍ வைக்‍கப்பட்டிருந்தது. பிறப்பால் நான் ஒரு வைணவன், ஆனால், இப்போது என்னைக்‍ காப்பாற்றி வருவது மாஸ்க்‍ என்று, தன்னை பார்க்‍க வந்த நண்பர்களிடம் நகைச்சுவையாகக்‍ கூறினாராம் வாலி.

மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வாலி மறைந்தார்.

பல ஆயிரம் பாடல்கள் எழுதிய வாலி, இலக்‍கிய உலகிலும், இசை உலகிலும் ஈடு இணையற்று கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறார். 1973-ம் ஆண்டு, இந்திய நாடு என்வீடு என்ற பாரதவிலாஸ் பாடலுக்‍காக தேசிய விருது வழங்கப்பட்டது. இதனை வாலி ஏற்கவில்லை. 2007-ம் ஆண்டு வாலிக்‍கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பண்டிதர்களின் உயர்ந்த ரசனைக்‍கும், பாமரர்கள் உள்ளத்தின் ரசனைக்‍கும் பாடல் எழுதியவர் வாலி.

'நானும் இந்த நூற்றாண்டும்'... கவிஞர் வாலி தன் சுயசரிதை பற்றி எழுதிய நூல். பலநூறு ஆண்டுகள் வாலியின் புகழ், தமிழ் மக்‍கள் மத்தியில் வாசம் வீசிக்‍ கொண்டே இருக்‍கும்.

அற்புதக் கவிஞர் வாலி. அவர் புகழ் வாழி.


[ நன்றி: https://www.hindutamil.in/news/blogs/694511-kavignar-vaali-17.html  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வாலி 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 4 அக்டோபர், 2017

862. வாலி -2

நினைவு நாடாக்கள் -2 

வாலி 

பூஜ்யஸ்ரீ வாசன் அவர்கள் பூதலூர் சாஸ்திரிகளிடமிருந்து, எழுத்துக்கு நூறு ரூபாய்
எனும் கணக்கில் -
எட்டெழுத்துக்கு எண்ணூறு ரூபாய் என்று வாங்கிய ஆனந்த விகடனில் 
இதுகாறும் நான், கதை; கவிதை; காவியம் எழுதியிருக்கிறேன். கட்டுரை இப்போதுதான்!
'இருக்க வேண்டும் உங்கள் எழுத்து, வாராவாரம்; இருக்கக் கூடாது உங்கள் எழுத்து வாரா வாரம்! எதைப்பற்றியும் எழுதலாம்; ABOUT ANY-THING UNDER THE SKY! என்றார்கள்; ஏற்றேன்!
'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே!' என்கிறது தொல்காப்பியம்.
ஒரு சொல் ஒரு பொருளைக் குறிக்கலாம்; ஒன்றுக்கு மேலும் குறிக்கலாம்; அது
வியப்பல்ல!
ஆனால், ஒரு சொல்லுள் ஓரைந்து சொற்கள் உள!
அந்தச் சொல்தான் 'வாழ்க்கை'!
'வாழ நினைத்தால் வாழலாம்' எனும் கண்ணதாசன் பாட்டுக்கு உரிய வியாக்கியானம் -
'வாழ்க்கை' எனும் ஒரு சொல்லுள் ஒளிந்துகிடக்கிறது. அதனை ஓர்வார், வெற்றித் தேரில் ஊர்வார்!
 வறுமையிலேயே வாடிக்கொண்டு, வாழ்க்கை தமக்கு வாய்க்கவில்லையே என - மூக்கைச் சிந்துவோருக்கு எல்லாம் ஒன்று சொல்லுவேன்.
'ஊழிற் பெருவலி யாவுள' என்பது, ஒருபுறம் இருக்கட்டும். 'வாழ்க்கை' எனும் சொல்லை - அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் பாருங்கள்...
அந்த ஊழ், ஆகும் கூழ்!
நொந்தாரையும்; நொந்து நொந்து வெந்தாரையும் பார்த்து...
வாழ்க்கையின் முதல் எழுத்து அழைக்கின்றது 'வா' என்று;
முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்து 'வாழ்' என்கிறது.
எதை நம்பி என்னும் கேள்விக்கு, நான்காம் எழுத்து நவில்கின்றது விடை 'கை' என்று;
அதுமட்டும் அல்ல, கைகொண்டு உழைத்தாலும், காக்க வேண்டியது ஒன்று உண்டு என்று சொல்கிறது - முதல் எழுத்தும், மூன்றாம் எழுத்தும், நான்காம் எழுத்தும் சேர்ந்து 'வாக்கை' என்று;
மேற்சொன்ன கருத்தை உள்வாங்கி உழைத்தால் - நீ பெறுவது என்னவென்று முதல் எழுத்தும் நான்காம் எழுத்தும் சேர்ந்து சொல்கிறது 'வாகை' என்று!
'வா';
'வாழ்';
'கை';
'வாக்கை';
'வாகை'; - எனும் அய்ந்து சொற்களைத் தன்னுள் சூல்கொண்டு நிற்கும் ஒரே சொல் 'வாழ்க்கை'!
ஆக, அடியேன் அறிவிப்பது ஆதெனில்...
வாழ்க்கை என்பது மழை நாளில் உன் வீட்டு வாசலில் முளைக்கும் நாய்க்குடை அல்ல; அது நிழற்குடை!
தாரித்திரிய வெயில் தழல் பரப்பி, உனைத் தகிக்கையில் - உனக்கு நிழல் பரப்பி உதவவல்ல அந்த நிழற்குடையை, நீதான் முயன்று முன்நின்று வனைந்தெடுக்க வேண்டும்!
நாய்க்குடை - வான் வடிக்கும் நீரில் விளைவது; நிழற்குடை, உனது ஊன் வடிக்கும் நீரில் உண்டாவது!
வேர்வையில் விளைவது வாழ்க்கை; வேர்வையை வெல்லுமோ ஊழ்க்கை?'
[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள் :

திங்கள், 18 ஜூலை, 2016

வாலி -1

நினைவு நாடாக்கள் -1 
வாலி 
ஜூலை 18. கவிஞர் வாலியின்  நினைவு தினம்.

விகடனில் வந்த அவருடைய  “நினைவு நாடாக்கள்” தொடரிலிருந்து இரு பகுதிகள்:
============

எழுதுகோலை ஏந்துவதற்கு முன்னால், என் கை - தூரிகையைத் தூக்கிய கை!
பிள்ளைப் பிராயத்தில் - கலர் கலராய்ப் படம் வரைந்துவிட்டு, கலர்ச் சாயம் போகக் கை கழுவுவேன்; பின்னாளில், அந்தக் கலையையே கை கழுவுவேன் என்று - நான் கனாக்கூடக் கண்டதில்லை!
பாட்டுதான் பிழைப்பு என்று ஆன பிற்பாடும்கூட -
பல்வேறு சித்திரக்காரர்களின் படங்களின் மாட்டு - என்னை இழந்து நின்ற தருணங்கள் ஏராளம்!
அடியேனுக்குக் கொஞ்சம் அரசியல் பித்தும் உண்டு; ஆதலால், கார்ட்டூன்கள் பால் கவனத்தை அதிகம் செலுத்துவேன்.
அத்துணை பக்கங்களையும் கார்ட்டூன் களே அடைத்துக்கொண்டு - ஓர் ஆங்கில வார ஏடு, அற்றை நாளில் வெளியாகி...
அனேகப் பிரமுகர்களின் அடிவயிற்று அமிலத்தை அதிகப்படுத்தியது.
பத்திரிகையின் பெயர் 'SHANKER'S WEEKLY!’
அதன் ஆசிரியரும் அதிபரும் ஒருவரே. அவர்தான் மிஸ்டர் ஷங்கர். சிறந்த கார்ட்டூனிஸ்ட்.
கேரளாக்காரர். அவரது கேலிச் சித்திரங் கள், நேந்திரம் பழம் முழுக்க - நீள நெடுக நோகாமல் ஊசியேற்ற வல்லவை!
நேருவின் மந்திரி சபையில் - ஒருவர் உணவு மந்திரியாக இருந்தார். பெயர் நினைவில்லை. ஆனால், அவர் PERSONALITY   ஆவி படர்ந்த ஆடிபோல் - மங்கலாக என் மனத்துள் நிற்கிறது; தொந்தி பருத்தும், தலை சிறுத்தும் இருப்பார் அவர்!
கேள்வி கேட்பதில் மிகச் சமர்த்தராக விளங்கிய திரு.காமத், இன்றளவும் எல்லோராலும் கொண்டாடப்படுகிற ஒரு PARLIAMENTARIAN!
உணவு மந்திரியைப் பார்த்துப் பாராளுமன்றத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார்  -
'தற்போது நம் தேசத்தில் - உணவு தானியங்களின், DEFICIT AREA எது? SURPLUS AREA எது?’ என்று.
உடனடியாக பதிலிறுக்க உணவு மந்திரியால் ஏலவில்லை.

இதுபற்றி -
மறுநாள் கார்ட்டூனிஸ்ட் ஷங்கர் ஒரு கார்ட்டூன் வரைந்தார்.
உணவு அமைச்சரின் உடலமைப்பில் - தலை சற்று சிறியதாகவும் - தொந்தி சற்றுப் பெரியதாகவும் இருக்குமென்பதை ஓர்ந்து-
அவரது படத்தைப் போட்டு -
தலைப் பகுதியில், DEFICIT AREA  - என்றும்; தொந்திப் பகுதியில் SURPLUS AREA என்றும் எழுதினார் ஓவியர் ஷங்கர்!
உலகு சிரித்தது ஒருபுறம் இருக்கட்டும். உணவு அமைச்சரே விலா நோகச் சிரித்து, திரு.ஷங்கரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியதாகச் சொல்வார்கள்!
பின்னாளில் - என் மனதைப் பெரிதும் கவர்ந்த கார்ட்டூனிஸ்ட்  மிஸ்டர். மதன்!
அப்போதெல்லாம் - புதன் கிழமையில் 'விகடன்’ வந்துகொண்டிருந்தது.
'புதன் வந்தால், மதன் வருவார்!’ என்று நான் வேடிக்கையாகச் சொல்லி, விகடனைப் புரட்டுவேன்.
நக்கலும் நையாண்டியுமாய்ப் படங் கள் வரைந்து - சமூக அவலங்களைச் சாடியதில் -
மதன், மற்றவரிடமிருந்து தனித்து நின்றார் என்பேன்.
சுருங்கச் சொன்னால் -
'செவ்வாய்க்குப் பின் புதன்;
ஷங்கருக்குப் பின் மதன்!’ எனலாம்.
மதன் அவர்கள் -
நல்ல CARTOONIST மட்டுமல்ல;
நல்ல COLUMNIST கூட!
கேள்வி பதில் பகுதியே - அதற்குக் கண்கூடு.
அவ்வளவு ஏன்? என்னுடைய 'விகட’னில் வெளியான ராமாயணத் தொடருக்கு -
அவர்தான் வைத்தார் 'அவதார புருஷன்’ என்னும் தலைப்பை!
புடவைகளுக்கு மட்டுமல்ல; புதினங்களுக்கும் -
தலைப்பு என்பது தலையாய விஷயம். புடவைத் தலைப்பு, வாங்க வைக்கும்; புதினத் தலைப்பு, வாசிக்கவைக்கும்!
 *   *    *    *    *
கண்ணதாசனுடைய எழுத்துப் பணி புதுக்கோட்டையில்தான் கன்னி முயற்சி யாக ஆரம்பம் ஆனது.
என்னுடைய எழுத்துப் பணியும் புதுக் கோட்டையில்தான் ஆரம்பம் ஆனது.
புதுக்கோட்டை இராமச்சந்திரபுரத்தில் இருந்து பூத்துக் கிளம்பித் தமிழ் வளர்த்த பதிப்பகங்கள் அற்றை நாளில் அனேகம் உண்டு.
பல சிற்றேடுகள் தோன்றி, பின்னாளில் பிரபலமான பல எழுத்தாளர்களுக்கு நாற்றங்காலாக விளங்கிய ஊர் புதுக்கோட்டை!
நான் என் இளமைக் காலத்தில் கவிதைப்பித்து தலைக்கேறித் திரிந்தேன். நிறைய நிறைய - சின்னச் சின்னக் கவிதைகள் எழுதி, சிற்றேடுகள் அதிகம் வெளியாகிக்கொண்டிருந்த புதுக்கோட்டைக்கு அனுப்புவதுண்டு.
அச்சில் என் கவிதை வராதா என நாவில் எச்சில் ஊற நின்ற காலம் அது!
புறப்பட்ட வேகத்திலேயே, புதுக்கோட்டையிலிருந்து என் கவிதைகள் திரும்பி வந்தன. அச்சு வாகனம் ஏற அருகதையற்றவையாக என் படைப்பு கள் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் -
நான் சோரவில்லை. 'என் கவிதையைவிட மட்டமான கவிதையெல்லாம் ஏற்கப் படுகின்றனவே’ என்று - பெட்டைப் புலம்பல்களில் ஈடுபட்டு, பிறரது எழுத்துகளைப் பரிகசிக்கும் பாவத்தைப் பண்ணவில்லை.
'என் குஞ்சு பொன் குஞ்சு’ எனக் காக்கைபோல் எண்ணாமல் - நான், செப்பு கவிதை செப்பு என ஓர்ந்தேன்; அது, செம்பொன் அல்ல எனத் தேர்ந்தேன்!
வேதாளம் முருங்கை மரம் ஏற ஏற - நான் விக்கிரமாதித்தன்போல் விடாக்கண்டனாயிருந்தேன்.
ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது - 'உங்கள் கவிதை பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டது’ என்று!
கடிதத்தை அனுப்பிய பத்திரிகையின் பெயர் 'கலைவாணி’; புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மாதம் இருமுறை ஏடு.
திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் உண்டு.'கலைவாணி’ பத்திரிகை ஆசிரியரை நேரில் சந்தித்து, நன்றி சொல்வதோடு அல்லாமல் அவர்பால் என் நட்பை நீட்டித்துக்கொள்ள வும் நினைந்து -
நான் புறப்பட்டேன் புதுக்கோட்டைக்கு. 'கலைவாணி’ ஆசிரியரைக் கண்டு கும்பிடு போட்டேன்.
உட்காரச் சொன்னார். கவிதையைப் பாராட்டினார். தன் வாயால் என் கவிதையைப் படித்து அதன் நயங்களை வெகுவாக சிலாகித்து, அடிக்கடி எழுதச் சொன்னார்.
கவிதை இதுதான்:
'நிலவுக்கு முன்னே
நீ வர வேண்டும்;
நீ வந்த பின்னே
நிலவெதற்கு வேண்டும்?’
- இப்படிப் போகும் அந்தக் கவிதை; ஒரு கப் காபி வரவழைத்துக் கொடுத்து என்னை கவுரவப்படுத்தினார் 'கலைவாணி’ ஆசிரியர்.
கதர்ச் சட்டை; கதர் வேட்டி; நெற்றியில் திருநீறு; நேர்கொண்ட பார்வை; காந்தியடிகளின்பால் மாளாக் காதல்!
நெடுநாளைய நண்பனோடு அளவளாவுதல்போல் என்னோடு அளவளாவினார்.
திருச்சி தேவர் ஹாலில், தான் எழுதிய நாடகம் அடுத்த வாரம் நடக்க இருப்பதையும், அதற்கு நான் வர வேண்டும் என்பதையும் உறுதிபடச் சொன்னார்.
நான் அந்த நாடகத்திற்குப் போயிருந்தேன். அற்புதமான நாடகம். உரையாடல்கள் எல்லாம், சமூகத்தைச் சாட்டையெடுத்து விளாசுதல்போல் வெறியும் நெறியும் சார்ந்ததாயிருந்தன.
அந்த நாடகத்தை அரங்கேற்றியது - முத்தமிழ்க் கலா வித்வ ரத்ன டி.கே.எஸ். சகோதரர்கள்!
நாடகம் முடிந்ததும், நாடக ஆசிரியரைச் சந்தித்து, என் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். மெல்லப் புன்னகைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.
என் முதல் கவிதையைத் தன் பத்திரிகையில் வெளியிட்ட அவர்தான் -
பின்னாளில், எம்.ஜி.ஆர். படத்தில் - நான் முதல் பாட்டு எழுதும் வாய்ப்புப் பெறக் காரணமாவார் என்று, நான் கனவிலும் கருதினேனில்லை!
'கலைவாணி’ ஏட்டில் கவிதை எழுதிவிட்டால்கூட -
'பொன்னி’யில் என் எழுத்து இடம் பெறவில்லையே என்று நான் ஏங்கிக்கிடந்தேன்.
திரு.முருகு.சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராய்க்கொண்டு - புதுக்கோட்டையிலிருந்து அந்நாளில் வெளியான மாத இதழ்தான், 'பொன்னி’!
திராவிட இயக்கத்தினர் கரங்களில் அது தவழும் அளவு - தமிழ் ஆர்வலர் நெஞ்சங்களில் அதற்கொரு நிலைபேறு இருந்தது!
'பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்’ என்னும் வரிசையன்று -
'பொன்னி’ ஏட்டில் இடம் பெற்று, இறவாப் புகழ் பெறும் கவிதைகளை யாத்தருளும் புலவர் பெருமக்களை - இருந்தமிழ்நாட்டோர்க்கு இனம் காட்டியது.
இன்று நம்மிடையே மூத்த கவிஞராய் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியவர் -
திரு. சாமி.பழனியப்பன் அவர்கள், 'பொன்னி’ ஏடு சுட்டிய, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் தலையாயவர்.
கவிஞர் பெருமான் திரு.பழனியப்பன் அவர்களின் தந்தையார் பெயரும் - தமிழ்த் தாத்தாவின் பெயரும் ஒன்றாயிருப்பதே - இவர், தமிழ் வளர்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர், என்பதை உறுதிப்படுத்துகிறது!
ஆம்; கவிஞர் சாமி.பழனியப்பன் தந்தையார் பெயர் -
திரு. உ.வே.சாமிநாதன்!
திருச்சி வானொலி நிலையத்தில் நான் தற்காலிகக் கலைஞராகப் பணியாற்றிய நாளில் -
எனக்கு நெருங்கிய நண்பராயிருந்த திரு.என்.ராகவன் அவர்களின் உறவினர் திரு.சாமி.பழனியப்பன்.
வானொலி நிலையக் கவியரங்கத்தில் திரு.பழனியப்பன் பாடியபொழுது - நானும் கூட்டத்தில் ஒருவனாய் நின்று கேட்டவன்!
அவருடைய கவிதைகளை நான் - என் ஆரம்ப நாள்களில் நிறையப் படித்துப் பிரமித்துப்போயிருக்கிறேன் -
''பாரதிதாசனின் இன்னொரு புனை பெயரோ பழனியப்பன் என்பது’ என்று!
பழனியப்பனால் தமிழ் பெற்ற தகவு பேசத் தரமன்று; அவ்வளவு என்றால் அவ்வளவு!
என்னுள் இருக்கும், எள் முனையளவு தமிழும் பழனியப்பனார் பாக்களை என் இளமைக் காலத்தில் படித்ததனாலான பயனே!
சாமி.பழனியப்பன் பல கவிதைகளை இப்பசுந்தமிழ்நாட்டுக்கு வழங்கியிருப்பினும் -
அவர் யாத்த கவிதைகளிலெல்லாம் மேலான பெருங்கவிதை ஒன்று உண்டு!
அந்தக் கவிதையின் பேர்:
'பழநிபாரதி’!
என் முதல் கவிதையைப் பிரசுரித்த  -
புதுக்கோட்டை 'கலைவாணி’ ஏட்டின் ஆசிரியரும் -
என் முதல் பாட்டு - எம்.ஜி.ஆருக்கு நான் எழுத வாய்ப்பு வழங்கிய பெருமகனாரும், ஒருவரே என்றேனல்லவா?
அவர்தான் -
அதிக எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய திரு. ப.நீலகண்டன் அவர்கள்!
திரு. ப.நீலகண்டன் எழுதியதுதான் - திருச்சி தேவர் ஹாலில் டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றிய நாடகம்; நாடகத்தின் பெயர்:
   'முள்ளில் ரோஜா!’
====

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவு :

வாலி

சனி, 20 ஜூலை, 2013

சங்கீத சங்கதிகள் - 18

இசை - போட்டேன் அசை! 

வாலி



ஜூலை 18, 2013 அன்று காலமான ‘காவியக் கவிஞர்’ வாலிக்கொரு நினவாஞ்சலியாக அவர் கர்நாடக சங்கீத வித்வான்கள் பற்றி  எழுதிய இரு கட்டுரைகளையும், ஒரு கவிதைப் பகுதியையும் இங்கிடுகிறேன். 

சிறுவயதில் அவருக்கும் சில சங்கீத வித்வான்களுக்கும் இருந்த தொடர்பு, முக்கியமாக ஒரு வித்வானிடமிருந்து அவர் பெற்ற ஓர் அறை ...இவற்றைப் பற்றி முதல் கட்டுரையில் விவரிக்கிறார் வாலி. ( இது  ‘ நினைவு நாடாக்கள்’ என்ற தலைப்பில் ’ஆனந்தவிகடனி’ல் வாலி எழுதிய தொடரில் வந்த ஒரு கட்டுரை) 

முதல் கட்டுரை: 

நான் வாங்கிய அறை!

ஓவியம்: மணி 

  
முரசொலி’யில் ஒரு செய்திக் கட்டுரை. 'சங்கீத வித்வான்கள் சபையில் பாட - எத்துணையோ தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன; இன்ன இன்னார் இயற்றிஇருக்கிறார்களே!’ என்று -
தமிழ்ப் பாடல்கள் யாத்துளோர் பட்டியலில் அடியேன் பேரும் இருந்தது!
கட்டுரையை எழுதிய பெரியவர் பெயர் திரு.திருவாரூர் தியாகராஜன். 'சின்னக் குத்தூசி’ என்றால் சகமறியும்!
இந்தக் கட்டுரை வெளியான இதழை நான் படித்துக்கொண்டிருக்கையில் -
ஓராண்டு என்னிலும் மூத்த ஒரு சங்கீத வித்வான் - என் பால்ய நண்பர் - என் வீட்டுக்கு வந்தார். என்னைப்பற்றிய தகவலை, அவரிடம் படிக்கக் கொடுத்தேன்.
'ஓய்! நீர் கீர்த்தனங்கள் எழுதுவீரா என்ன?’ என்று சற்று நமட்டுச் சிரிப்புடன் வினவினார்.
சங்கீத பூஷணம் தாராபுரம் திரு.சுந்தரராஜனின் ஸ்வரக் குறிப்புகளோடு - என் கீர்த்தனங்களை -
கலைஞன் பதிப்பகம் வெளியிட்டு இருப்பதை அவரிடம் காட்டினேன்.
அதைப் புரட்டிக்கொண்டே வந்த என் நண்பர் -
''ஓய்! உம்ம பாட்டா இது? நான் அந்தக் காலத்துல மதுரை சோமு; எம்.எல்.வசந்தகுமாரி; கல்யாணராமன்; சுதா ரகுநாதன்; பாம்பே ஜெயஸ்ரீ - இப்படி இந்தக் காலம் வரைக்கும் இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கேன்! அவ்வளவு ஏன்? நானே என் கச்சேரீல இதை ரொம்ப நாளா 'வலஜி’யில பாடிண்டிருக்கேன்; உம்ம பாட்டூன்னு - இப்பதான் தெரிஞ்சுண்டேன்; கிண்டலாப் பேசிட்டேன்; க்ஷமிக்கணும்!'' என்று கைகளைக் கூப்பினார்.
நண்பர் குறிப்பிட்ட என்னுடைய பாட்டு இதுதான்...
'கூவியழைத்தால்
குரல் கொடுப்பான்; பரங்-
குன்றமேறி நின்று
குமரா வென்று...’ ( 1)
வெகு காலமாக ஒரு வெகுஜன அபிப்பிராயம் இருக்கிறது - கோடம்பாக்கத்திற்கும் திருவையாறுக்கும் ஏழாம் பொருத்தம் என்று.
அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
கோவையில் 'வாணி பிலிம்ஸ்’ என்று ஒரு படக் கம்பெனி. அதன் பாகஸ்தர்கள் யார் தெரியுமா?
வயலின் வித்வான் டி.சௌடய்யா;
புல்லாங்குழல் வித்வான் டி.ஆர். மகாலிங்கம்;
மற்றும்
மஹா வித்வான் செம்பை திரு.வைத்யநாத பாகவதர்!
திருமதி. கே.பி.சுந்தராம்பாளும், மகாராஜபுரம் திரு.விஸ்வநாதய்யரும் நடித்த படம் 'நந்தனார்!’.
திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமியும் திரு.ஜி.என்.பாலசுப்ரமணியமும் சேர்ந்து நடித்த படம் 'சகுந்தலை!’.
திருமதி. என்.ஸி.வசந்தகோகிலம் கதாநாயகியாக நடித்த படம் 'ஹரிதாஸ்!’.
திரு.பாபநாசம் சிவன் நடித்த படங்கள் 'தியாக பூமி’; 'பக்த குசேலா’; திரு.எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த படம் 'நந்தனார்’.
திருமதி. எம்.எல்.வசந்தகுமாரியும், திரு. பி.யூ.சின்னப்பாவும் சேர்ந்து நடித்து, சிறிது தூரம் வளர்ந்து நின்று போன படம் 'சுதர்ஸன்’.
திரு.பாலமுரளி கிருஷ்ணா நாரதராக நடித்தது மட்டுமன்றி பல படங்களில் பாடிஇருக்கிறார்!
திரு.மதுரை டி.என்.சேஷகோபாலன், திரு.குன்னக்குடி படத்தில் கதாநாயகன்!
நாதஸ்வர மேதை திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் 'கவிராஜ காளமேகம்’.
திருமதி. டி.கே.பட்டம்மாள் நிறைய படங்களில் பாடியிருக்கிறார்.
திரு.வி.வி.சடகோபன் கதாநாயகனாக நடித்த படம் 'மதன காமராஜன்’.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சின்ன வயதிலிருந்தே எனக்கு சங்கீத வித்வான்களோடு, நிறையப் பரிச்சயம் உண்டு!
ஸ்ரீரங்கத்தில்தான் இருந்தார், மகாவித்வான் வயலின் திரு. மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர்.
வருஷா வருஷம் தன் வீட்டில், தியாகராஜ உற்சவம் நடத்துவார். வந்து பாடாத வித்வான்களே இல்லை!
நான்தான் அங்கு எல்லாருக்கும் எடுபிடி.
சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையைக் காவேரிக்கு அழைத்துப் போய், ஸ்நானம் செய்விப்பது; மதுரை மணி அய்யரின் துணிகளை இஸ்திரி போட்டுவைப்பது; ஜி.என்.பி-யின் பொடி டப்பாவில் - நாசிகா சூர்ணத்தை, அவ்வப்போது நிரப்புவது; கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு 'டிகிரி காபி’ ஏற்பாடு செய்வது...
இத்யாதி; இத்யாதி!
ஒரு சங்கீத வித்வான் மீது எனக்கும், என் ஸ்ரீரங்கத்து நண்பன் விட்டலுக்கும் பயங்கரப் பிரியம்.
அவர், திருச்சிப் பக்கம் கச்சேரிக்கு வந்தால் எனக்குக் கடிதம் போடுவார். நானும் நண்பன் விட்டலும், திருச்சி அசோகா ஹோட்டலுக்குச் சென்று அவரோடு அக்கம்பக்கத்து ஊர்க் கச்சேரிகளுக்குச் செல்வோம்.
என்னுடைய எத்துணையோ பாடல்களை அவர் இசையமைத்து விஸ்தாரமாகக் கச்சேரியில் பாடுவதுண்டு.
நான், நாளாவட்டத்தில் அவருக்குத் தம்புரா போடலானேன்.
ஒருமுறை விடியற்காலை வரை அவரது கச்சேரி, திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரில் நடந்தது. ஜே ஜே என்று கூட்டம்.
ஒரு கட்டத்தில், நான் லேசாகக் கண்ணயர்ந்து - தம்புராவோடு அவர்மீது சாய்ந்து விட்டேன்.
அப்போதுதான், அவர் அனுபவித்து 'ராகம் தானம் பல்லவி’ பாடிக்கொண்டிருந்தார். என் செயலால், சுதி கலைய...
'பளீர்’ என்று என் கன்னத்தில் ஓர் அறை விட்டார். எனக்குப் பொறி கலங்கியது. அந்த வித்வான் குஸ்தி பழகியவர்!
நாள்கள் நகர்ந்தன. நான், சினிமாவில் பிரபலமாகிவிட்டேன்; நண்பன் விட்டல், எம்.ஜி.ஆர். மந்திரி சபையில் மந்திரியாகி விட்டான். திருச்சி சௌந்தரராஜனின் செல்லப் பெயர்தான் விட்டல்!
பல்லாண்டுகளுக்குப் பின் - அந்த சங்கீத வித்வான் -
'சஷ்டி விரதம்’ என்னும் தேவர் பிலிம்ஸ் படத்துக்காகப் பாட வந்திருந்தார். என் பாட்டுதான் அது.
என்னைப் பார்த்ததும் - என் கன்னத்தில் அவர் அறைந்தது நினைவுக்கு வந்து - மிகவும் கூச்சப்பட்டார். நான், அவரது கைகளைப்பற்றிக் கொண்டு சொன்னேன்.
'அண்ணே! நீங்க மஹாவித்வான்; சங்கீத சாகரம். இன்றும் நீங்கள் விடிய விடியப் பாடினால் - கூட்டம், கொட்டகை பிதுங்க நிற்கிறது. உங்கள் பேர் சொன்னாலே, சென்னை சபாக்கள் சந்தோஷித்துச் சிலிர்க்கின்றன!
உங்கள் கையால், பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஓர் அறைதான் -
நான் பாட்டுத் துறையில் இவ்வளவு பிரபலமாகக் காரணம்!’
- என்று அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.
உடனே, என்னை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தார் -
மகா மகா வித்வான்
திரு. மதுரை சோமு அவர்கள்!

[ நன்றி : விகடன் ] 

இரண்டாம் கட்டுரை: 

’விகடன்’ கட்டுரையில் வாலி குறிப்பிடும் அவருடைய இசைப்பாடல் நூலின் முகப்பு இதோ:



95-இல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலில் 15 பாடல்கள் ஸ்வரக் குறிப்புகளுடன் இருக்கின்றன.  சங்கீத வித்வான்கள் பத்மஸ்ரீ கே.வி. நாராயணஸ்வாமி யும், சங்கீத கலாநிதி தஞ்சாவூர் எம்.தியாகராஜனும் இந்நூலிற்கு அணிந்துரைகள் கொடுத்திருக்கின்றனர். 
( ஆனால் , இந்நூலில் “கூவி அழைத்தால்” என்ற பாடலுக்குத் தாராபுரம் சுந்தரராஜன் அமைத்த ராகம் உதயரவிசந்திரிகா! இப்போதோ, வாலியின் கட்டுரையில் குறிப்பிட்டபடி, வலஜியில் தான் அது பிரபலமாகப் பாடப் படுகிறது! இதற்கு ‘வலஜி’யில்  முதலில் மெட்டமைத்தவர் யாரென்று எவருக்காவது தெரியுமா?  ) 
இன்று பலபேருக்குத் தாராபுரம் சுந்தரராஜன் யாரென்றும் தெரியாது. நல்ல குரல்வளமும், இசைஞானமும் வாய்த்திருந்தவர் அவர்; எங்கள் வீட்டில் நடந்த ஒரு கல்யாணத்திற்கு அவர் கச்சேரியை வைத்திருந்தோம்.  எல்லோரும் அவர் இசையை மிகவும் ரசித்தனர். இவர் வாலியின் பால்ய சிநேகிதர். இவரைப் பற்றி வாலி இந்நூல் முன்னுரையில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.  அவருடைய முன்னுரை சில அரிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதால், அந்த முழுக் கட்டுரையையும் கீழே தருகிறேன். 




[ நன்றி: கலைஞன் பதிப்பகம் ]

ஓர் இசையரசி


கடைசியாக, எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004-இல் மறைந்தவுடன் வாலி எழுதிய இரங்கல் கவிதையிலிருந்து ஒரு பகுதி:

ஓதம்சூல் உலகின்காண்-
ஓர்
ஒப்புலட்சுமி -இல்லாதவர்
சுப்புலட்சுமி ;
தூய வாய்மலரால்-
இசைத் தேனைத்
துப்புலட்சுமி


எம்.எஸ்
என்பது
சங்கீத
சாஸ்திரத்தின்
பெண்முக வடிவு ;இப்-
பெண்முக வடிவைப் பெற்றது -வீணை
சண்முகவடிவு !

வீணை சண்முகவடிவு-இவ்
வையத்தை..
விரல்வழி
வென்றார் ;அவரது
குலக்கொடி சுப்புலட்சுமி
குரல்வழி வென்றார் !

அம்புவி மேல்
அவர்போல் -
ஆர்க்கும்
அமைந்ததில்லை தொண்டை;
அஃதேபோல்
அவர் போல்
ஆரும்
ஆற்றியதில்லை ..
தொண்டை வழியாகப்-பொதுநலத்
தொண்டை !

கிருதி;
சுருதி;
இவை
இரண்டும் -
அவரை
அண்டியிருந்தன
தமது
தாயெனக் கருதி
ஒருவரும் கண்டதில்லை -அவை
ஒன்றோடு ஒன்று பொருதி ;
இலயத்தை-
இராகத்தை-
சிவப்பணுவாய் வெள்ளையணுவாய்
சுவீகரித்துக் கொண்டிருந்தது ..
எம்.எஸ் ஆக்கையுள்
எங்கணும் சஞ்சரித்த குருதி !


[ நன்றி : http://udanpirappe.blogspot.in/2012/04/blog-post.html , குமுதம் ரிப்போர்டர் ]


தொடர்புள்ள ஒரு சுட்டி ( 1 ):

கூவி அழைத்தால்: பாம்பே ஜெயஸ்ரீ


தொடர்புள்ள பதிவுகள்: