உ.வே.சாமிநாதய்யர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உ.வே.சாமிநாதய்யர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

2391. உ.வே.சா. - 15

எங்கள் தமிழ் ஆசிரியர்

ரிஷியூர் எஸ். வேங்கடராமையர்










கலைமகளில் 1955-இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ.

====

எங்கள் காலத்தில் தமிழ் வாத்தியார் என்றாலே எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் பையன்களுக்கு வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்கும்.  அவரிடம் மதிப்பு உண்டாவது இல்லை.  பாடம் நடக்கும்பொழுது கூச்சல் ஓயாது.  சில வாத்தியார்கள் கடுமையாகக் கண்டிப்பார்கள்.  ஆனால் பையன்கள் பயப்படாமல் சிரித்து, நையாண்டி செய்வார்கள்.  சிலர் அழாத குறையாகக் கெஞ்சுவார்கள்.  இவர்களைப் பையன்கள் படுத்தி அழவே வைத்துவிடுவார்கள்.  வேறு சிலர் தலைவரிடம் புகார் சொல்லுவதாகப் பயமுறுத்துவார்கள்.  அதுவும் பலிக்காது.  அந்தோ! அவர்கள் கதி பரிதாபம்!  அத்தகைய குழாத்தில் தனிச் சிறப்புடன் விளங்கி, மாணாக்கர்களின் மதிப்பு, மரியாதை, கவனம், பயம், அபிமானம், நன்றி முதலிய எல்லாக் காணிக்கைகளையும் ஒருங்கே அடைந்தவர் எங்கள் குருமணியாகிய மகாமகோபாத்தியாயர்.

மெதுவாக நடந்து, புன்சிரிப்புடன் வகுப்பில் பிரவேசித்து மேடையிலேறி ஆசனத்தில் அமர்வார்.  பையன்கள் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டு எழுந்து நிற்பார்கள்.  அவர்களை உட்காரும்படி கையமர்த்திவிட்டு வகுப்பு முழுவதையும் நிதானமாக அன்பு சொரிய ஒரு சுற்றுப் பார்ப்பார்.  வருஷ ஆரம்பத்தில் சட்டாம்பிள்ளை என்று பையன்களில் ஒருவனை நியமித்துவிடுவார்.  அவன், பெயரேட்டை வாசிப்பான்.  பையன்கள், 'ஆஜர்' சொல்லுவார்கள்.  இது முடிந்தவுடன் பெயரேட்டில் கையொப்பமிட்டுவிட்டுப் பாடம் நடத்தப் புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொள்வார்.  செய்யுட்களை இசையுடன் வாசிக்க வேண்டும் என்பது அவர் கொள்கையும் விருப்பமும் ஆகும்.  முக்கியமாக, சஹானா, சுருட்டி, மோகனம், ஆநந்தபைரவி ஆகிய ராகங்களில் அவருக்கு விருப்பம் அதிகம்.

முதல் நாள் நான் அவர் வகுப்புக்குப் போனவுடன், பாடமாக வந்திருந்த கம்பராமாயணச் செய்யுள் ஒன்றை இசையுடன் படிக்கச் சொன்னார்.  "எனக்குச் சாரீரம் இல்லை" என்று தெரிவித்தேன்.  "உன் பிதாமகர், மாதாமகர் இருவரும் நன்றாகப் பாடுவார்கள்.  காவேரி தீரத்தில் தோன்றிய உனக்குச் சாரீர சம்பத்து இல்லையா?" என்று அங்கலாய்த்தார்.

சீகாழி ரங்காச்சாரியார் என்பவர் என் வகுப்பில் நல்ல சாரீரமுள்ள மாணாக்கர்.  அவர்தாம் இனிமையாகப் பாட்டை ஒரு தடவை முதலில் வாசிப்பார்.  செய்யுளின் பொருளைச் சொல்லிவிட்டு, அதில் குறிப்பிட்டுள்ள பூர்வநிகழ்ச்சிகளை விளக்க, ஆசிரியர் ஆரம்பிப்பார்.  ஆதார விவகாரங்களுடன் சுலபமான தமிழ் நடையில் சொல்லிக்கொண்டு போகும்பொழுது ஒவ்வொருவர் மனமும் அதில் ஈடுபடும்.  நாழிகை செல்வதே தெரியாது.  ஹாஸ்யச் சுவை ததும்பப் பேசுவார்.  அடிக்கடி உண்டாகும் கொல்லென்ற சிரிப்பைத் தவிர, வகுப்பு நிசப்தமாக இருக்கும்.

ஒவ்வொரு வகுப்பிலும் பாடத்தில் கவனம் செலுத்தாமல் விஷமமும் விளையாட்டும் மிகுந்த பையன்கள் உண்டல்லவா?  அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கு எங்கள் தமிழாசிரியர் கையாண்ட முறை அவருக்கே உரிய தனிப்பட்ட முறை.  கொஞ்சங்கூடக் கடுமை காட்டாமல், பரிகாசத்துடன் கலந்த புகழ்ச்சி முதலிய மார்க்கங்களால் அவர்களை அடக்கிவிடுவார்.  அவர் கோபித்துக்கொண்டே நான் பார்த்ததில்லை.  எப். ஏ. யில் இரண்டாம் வகுப்பு.  கம்பராமாயண கிஷ்கிந்தா காண்டத்தில் பாடம் நடந்துகொண்டிருக்கிறது.  அந்தச் சமயத்தில் கும்பகோணம் காலேஜில் மகாமகோபாத்தியாயரிடம் படித்தவரும், மைசூர் சிவில் ஸர்விஸில் உயர்ந்த பதவி வகித்துக்கொண்டிருந்தவருமான ஒரு கனவான் ஆசிரியரைப் பார்க்க வந்தார்.  வந்தவர், "பாடத்தை நிறுத்த வேண்டாம்.  நெடுநாளுக்கு முன் கேட்ட நான் இன்னொரு தடவை பாடம் கேட்க விரும்புகிறேன்" என்று சொல்லிக்கொண்டு பையன்களுடன் பெஞ்சியில் உட்கார்ந்துகொண்டார்.  வந்தவரை ஆசிரியர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய விதம் வேடிக்கையானது. எங்களுடன் கிரிக்கட்டு, ஹாக்கி என்ற விளையாட்டுகளில் நிகரற்றவர் எனப் புகழ்பெற்ற முதலியார் ஒருவர் மாணாக்கராக இருந்தார்.  பாடங்களைக் கவனிக்காமல் அடிக்கடி வகுப்பிலிருந்து அவர் நழுவி விடுவார்.  எப். ஏ. பரீட்சையில் ஒரு தடவை தவறிப்போய் மறுமுறை படித்துக்கொண்டிருந்தார்.  இவரைத் திருத்த இந்தச் சந்தர்ப்பத்தை ஆசிரியர் உபயோகப்படுத்தினார்.




"மாணாக்கர்களே, இப்பொழுது இங்கு விஜயம் செய்திருப்பவர் தற்காலம் பங்களூரில் பெரிய உத்தியோகம் வகிக்கிறார்.  இருபது வருஷங்களுக்கு முன்பு, கும்பகோணம் காலேஜில் உங்கள் மாதிரி என்னிடம் மாணாக்கராக இருந்தார்.  விஷமம் செய்வதில் இவருக்கு நிகர் ஒருவரும் இல்லை.  வகுப்பில் இருப்பார்.  பாடம் நடக்கும்.  திடீரென்று காவேரியாற்றில் ஒருவர் குதித்த மாதிரி சத்தம் கேட்கும்.  யார் என்று விசாரித்தால் நம் சிநேகிதர், மரத்தில் ஏறி நதியில் குதித்து அக்கரைக்கு நீந்திப் போய்க்கொண்டிருப்பதாகப் பையன்கள் சொல்லுவார்கள்.  நீந்தும் போட்டியில் காலேஜுக்கே இவர்தாம் முதல்.  இதே போல் படிப்பிலும் முதலாக இருந்தார்.  பி. ஏ. யில் முதல் வகுப்பில் தேறி எம். ஏ. பட்டமும் பெற்று ஸிவில் ஸர்விஸ் போட்டிப் பரீட்சையிலும் தேறிப் பெரிய பதவிக்கு வந்தவர்.  முதலியாரே, நீரும் இவர் மாதிரி விளையாட்டு, படிப்பு இரண்டிலும் மேம்பாடு அடைய வேண்டும் என்பது என் விருப்பம்" என்று முடித்ததும், வகுப்பிலுள்ளவர்களும் வந்த கனவானும் அடைந்த மகிழ்ச்சியை அளவிட முடியாது.

தமிழ் வகுப்பு நடந்த அறைக்கு அடுத்த அறையில் காலேஜ் இலக்கிய சங்கத்தின் வாசகசாலை (Literary Society Reading Room) இருந்தது.  இவ்விடத்தில் விளையாட்டில் பிரியமும் தேர்ச்சியுமுள்ள பையன்கள் ஓய்வு நேரங்களில் கூடிப் பேசுவதும், அட்டகாசம் செய்வதும், சிகரெட் பிடிப்பதுமாகச் சில வேளை ஆசிரியரவர்கள் பாடம் நடத்த முடியாமல் செய்து விடுவார்கள்.  சடையன் என்ற பெயருள்ள சேவகன், ஆசிரியரவர்களுக்கும் இலக்கிய சங்கத்திற்கும் பொதுவான வேலைக்காரன்.  இவனைச் சங்கத்தில் கூடும் பையன்களைக் கூச்சல் போடாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள ஆசிரியரவர்கள் அனுப்பினால், அந்தப் பையன்கள் இவனைச் சிகரெட்டு வெற்றிலை பாக்கு வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பிவிடுவார்கள்.

ஒரு நாள் சந்தடியும் சப்தமும் பொறுக்காமல் போகவே, ஆசிரியரவர்கள் மெதுவாக நடந்து போய் அந்தக் கோஷ்டியின் மத்தியில் உட்கார்ந்து கொண்டுவிட்டார்.  அப்பொழுது கால்பந்து விளையாட்டில் `கோல் கீப்பரா' க இருப்பதில் இணையற்றவர் என்று பெயர் வாங்கிய டி. பி. கைலாசம் (*இவர் பிற்காலத்தில் கன்னட பாஷையில் பல நாடகங்களை எழுதிக் கீர்த்தி பெற்றவர்*) ஐந்து ஆறு தோழர்களை வைத்துக்கொண்டு ஆங்கிலப் பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார்.  தம்மைக் கண்டு தலை குனிந்து நின்ற அனைவரையும் ஆசிரியரவர்கள் வகுப்புக்கு வரும்படி சொல்லி அழைத்து வந்து உட்காரச் செய்தபின், கைலாசத்தைப் பார்த்து, "கைலாசம், நீர் உங்கள் சிநேகிதர்களுக்கு மட்டும் செய்து காட்டிக் கொண்டிருந்த அபூர்வ நடனத்தை இவ்விடத்தில் நடத்திக் காட்டினால் எனக்கும் பையன்களுக்கும் மிகவும் பயன்படும்.  கிஷ்கிந்தையில் சுக்கிரீவன் முன்னால் நடந்த நாட்டியங்களைக் கம்பர் பாடியிருக்கிறார்.  நீர் அதை நன்றாக நடித்துக் காட்டினால் எங்களுக்கு நன்றாக விளங்கும்" என்று சொன்னவுடன் வகுப்பு முழுவதும் சிரிப்பு அமளி எழுந்து அடங்க வெகுநேரம் சென்றது.  அதற்குப் பின் பக்கத்து அறையில் ஒரு நாளும் சத்தமோ கூச்சலோ இருந்ததில்லை.

இளம் பிராயத்தில் தென்னாட்டில் மிகவும் கீர்த்தி பெற்ற பேராசிரியர்களிடம் பாடம் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.  வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், கே. நடேசையர், கே. ராமுண்ணி மேனன், ஆலன் துரை, ஸி. ராமலிங்க ரெட்டி ஆகிய பெரியவர்கள் இவர்களில் முக்கியமானவர்கள்.  இவர்கள் எல்லாம் பாடத்தைப் பொறுத்த வரையில் நன்றாகப் போதிப்பவர்களே.  ஆனால் தமிழாசிரியராகிய மகாமகோபாத்தியாய ஐயரவர்களின் முறையே வேறு.  ஒவ்வொரு பையனையும் அருகில் அழைத்து அவன் ஊர், குலம், பெற்றோர், தங்கியிருக்கும் ஜாகை ஒவ்வொன்றையும் பற்றி விசாரித்துத், தகப்பனாரைப் போல் அக்கறை காட்டித், தெருவில் எங்கே கண்டாலும் நின்று நாலு வார்த்தை பேசி, மாணாக்கனுடைய மனத்தை அன்பினால் கட்டிவிடுவார்.  அவர் தாய்மொழியில் பாடம் சொன்னபடியாலும் நம் நாட்டுப் புராண காவிய இதிகாசங்களை விளக்கியபடியாலும் மாணாக்கர்களுக்குத் தனியான உணர்ச்சியும் கவர்ச்சியும் உண்டாயின.

எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய களங்கமற்ற வாழ்வே வெற்றிக்குக் காரணம்.  "பகவத் கீதையின் வழிப்படி யாராகிலும் உலகில் வாழ்ந்தவர் உண்டா?" என்று கேட்டால், "பீஷ்மர் ஒருவர் உண்டு" என்று சொல்வார்கள்.  அதே போல் திருக்குறள் வாக்கியமான,

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
 இழுக்கா இயன்றது அறம்"

என்ற முறைப்படி அறத்தை நடத்திக் காட்டியவர் உண்டா என்றால், "எங்கள் ஆசிரியரான உ. வே. சாமிநாதையர் ஒருவர் உண்டு" என்று அவர் மாணாக்கர்கள் சொல்வார்கள்.

[ நன்றி: வெண்பா விரும்பி ]

தொடர்புள்ள பதிவுகள்: 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 3 டிசம்பர், 2022

2338. உ.வே.சா. - 14

பாண்டித்துரைத் தேவரின் செய்யுட் கடிதம்

உ.வே.சாமிநாதையர் 


டிசம்பர் 2. பாண்டித்துரைத் தேவரின் நினைவு நாள்.

உ.வே.சா.வுக்கு அவர் ஒரு செய்யுட் கடிதம் எழுதியதை  "என் சரித்திரத்தில்" பதிவிடுகிறார் உ.வே.சா.

===

புறநானூற்றைப் பெற்றுக் கடிதமெழுதியவர்களுள் பாலவ நத்தம் ஜமீன்தாராகிய பாண்டித்துரைத் தேவரும் ஒருவர். அதில் அவர், “தங்களால் லோகோபகாரமாய் அரிய நூல்கள் அச்சிடுவதாக எடுத்துக் கொள்ளப்பட்ட நன்முயற்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய எப்பொழுதும் ஆவலுற்றிருப்பவனாதலின் அதற்குரிய நற்சமயம் அறிவிக்கக் கேட்டுக் கொள்ளும் தங்கள் பாண்டித்துரை” (14-11-1894) என்று குறிப்பித்திருந்தார். இக்கடிதம் வந்த சில வாரங்களுக்குப் பிறகு அவர் திருவாவடுதுறையாதீன கர்த்தரைத் தரிசிக்கும் பொருட்டுத் திருவிடைமருதூருக்கு வந்தார். ஆதீன கர்த்தராகிய அம்பலவாண தேசிகர் அவர் வரவை எனக்குத் தெரிவித்து என்னையும் வரும்படியாக எழுதினார். அவ்வாறே சென்று பாண்டித் துரையைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் புறநானூற்றுப் பதிப்பைப் பாராட்டி விட்டு “இனிமேல் எந்த நூலை அச்சிடப் போகிறீர்கள்!” என்று கேட்டார்.


“பல நூல்கள் இருக்கின்றன, மணிமேகலையை அச்சிடலாமென்று நினைத்தேன். ஆனால் இன்னும் அதிலுள்ள சில விஷயங்கள் தெளிவுபடவில்லை. புறத்திரட்டென்ற தொகை நூல் ஒன்று இருக்கிறது. அதில் இப்போது வழக்கில் இல்லாத பல நூற் செய்யுட்கள் உள்ளன. புறநானூற்றைப் பதிப்பித்தபோது புறத் துறைகளின் இலக்கணங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள எண்ணினேன். அந்நூலிற்கண்ட துறைகளுக்கு விளக்கம் தேடுகையில் புறப்பொருள் வெண்பாமாலை மிகவும் உபயோகமாயிற்று. அதனை நன்கு ஆராய்ந்தேன். அதற்குப் பழைய உரையொன்று என்பால் இருக்கிறது. மூலம் மாத்திரம் சரவணப் பெருமாளையரால் முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது உரையுடன் வெளியிடலாமென்று எண்ணுகிறேன்” என்றேன் நான்.

செய்யுட் கடிதம்


அவர் இராமநாதபுரம் சென்றவுடன் எனக்கு ஒரு செய்யுட் கடிதமும் ஐந்நூறு ரூபாய்க்கு ஓர் உண்டியலும் 17-12-1894 அன்று எனக்கு அனுப்பினார். அக்கடிதத்திற் சில பகுதிகள் வருமாறு.


(கலி வெண்பா)


1. “திங்கள் புரையுந் திருவதனச் செல்வியொரு

பங்கினமர் பெம்மான் பதமலரே - துங்க


2. முடிக்கணியாத் தாங்கி முதுபரவை வேலிப்

படிக்கணியா யென்றும் பலநூல் - வடிக்கும்


3. உளத்தார்க் கொருநிதியா யோங்குபுகழ் மேய

வளத்தா லுயர்குடந்தை மன்னித் - துளக்கரிய


4. நேமிநா தன்மருகி நேயமனையா ளோடுவாழ்

சாமிநா தைய தகுநண்ப - மாமுகவை


5. மன்னியபாண்டித்துரைபல் வந்தனஞ்செய் தின்றெழுதும்

நன்னிருப மீதாம்..............


6. காமாரி தந்தவிளங் காதலனே ராய்த்தமிழின்

மாமாரி பெய்துலகை வாழ்விப்போய் - ..............


7. பயன்சிறிய தேனும் பனையளவாக் கொள்வர்

நயன்றெரிவோ ரென்றவுண்மை நாடி - முயன்றிதுபோ


8. தைந்நூறு ரூபா வனுப்பினனஃ தேற்றருள்வாய்

மெய்ந்நூ றுரீஇயொழுகும் வித்தகா - மைந்நூறி


9. ஆமாலை யிற்சுவையுண் டாக்கும் புறப்பொருள்வெண்

பாமாலை யச்சிற் பதிவுசெயும் - மாமுயற்சி


10. ஊறிகந்து முற்ற லுறுவிப்பா னோங்குகவான்

ஆறுகந்த சென்னியருள்.”


1. செல்வி - உமாதேவியார், பெம்மான் - சிவபெருமான்.

2. முதுபரவை வேலிப்படிக்கு - பழைய கடலாகிய எல்லையையுடைய பூமிக்கு. வடிக்கும் - இயற்றும்.

4. நேமிநாதன் மருகி - திருமாலுக்கு மருமகளாகிக் கலைமகள். நேய மனையாள் - அவனுக்கு அன்புள்ள மனையாளாகிய திருமகள். முகவை -இராமநாதபுரம்.

6. காமாரி - சிவபெருமான்.

7. காதலன் - முருகக்க டவுள்.

8. மெய்ந்நூறுஉரீஇ - மெய்யில் திருநீற்றைப் பூசி.

மை நூறி - குற்றத்தை நீக்கி.

9. ஆம் ஆலையின் சுவை உண்டாக்கும் - ஆகின்ற கரும்பைப்போலச் சுவையை உண்டாக்கும். 

10. ஊறு இகழ்ந்து - இடையூறு நீங்கி. ஆறு உகந்த சென்னி - கங்காதரனது அருள் ஒங்குக.


பாண்டித்துரைத் தேவர் இங்ஙனம் செய்த உதவியை நான் பாராட்டி எழுதியதோடு, அம்பலவாண தேசிகரிடமும் தெரிவித்தேன். அவர் உடனே முந்நூறு ரூபாய் வழங்கினார். இவ்விருவரும் உதவிய பொருளைக் கொண்டு வீட்டுக்காக நான் வாங்கின கடனை அடைத்து விட்டேன்.


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

2194. உ.வே.சா. - 13

ஹரதத்தரின் சிவபக்தி 

டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்

                         
                                         
[ ஓவியம்: மணியம்]


 'கல்கி' முதல் இதழில் ( 1-8-41) வந்த உ.வே.சா வின் கட்டுரை! 


சைவத்தின் மேன்மையைத் தம்முடைய செயல்களாலும், நூல்களாலும் நிலைநிறுத்திய பெரியார்களுள்' ஸ்ரீ ஹரதத்த சிவாசாரியார் ஒருவர். சோழவள நாட்டில் கஞ்சனூரென வழங்கும் *கம்ஸபுரம் என்னும் ஸ்தலத்தில் ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் அவர் உதித்தார். பிறகு சிவபக்த ராகி அவர் சுருதிசூக்தமாலை, சுலோக பஞ்சகம் முதலிய நூல்களை அருளிச் செய்தார். அவரைக் கஞ்சனூராழ்வார் எனவும் சொல்வதுண்டு. 

ஹரதத்த சிவாசாரியார் வேதாகமங்களிலும் சாஸ்திரங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். சிவ பூஜையை முறைப்படி செய்து அதில் இன்பம் காணுபவர், அக்காலத்தில் ஆண்டுவந்த அரசனுக்குக் குருவாக விளங்கினார். அவ்வரசன் தமக்கு அளித்த பொருளைக் கொண்டு அவர் திருவிடை மருதூரிலுள்ள காருண்யாமிர்த மென்னும் தீர்த்தத்திற்குப் படிக்கட்டுக்கர் கட்டுவித்தார். தினந்தோறும் கஞ்சனூர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அக்கினீசுவரரையும், கற்பகவல்லியம்மையையும் தரிசிப்பதோடு வேறு சில சிவஸ்தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்து வருவதை ஒரு நியமமாக அவர் வைத்துக்கொண்டிருந்தார். முக்கியமாகப் பிரதோஷ காலத்தில் திருவிடை மருதூருக்குச் சென்று ஸ்ரீ மஹாலிங்க மூர்த்தியை வழிபடும் விரதமுடையவர்.

ஒரு நாள் பகலில் அவர் சிவபூஜை செய்வதற்கு அமர்ந்தார். சிவபெருமானின் திருவுருவங்களாகிய  ஸத்யோஜாதம் முதலிய ஐந்து மூர்த்தங்களையும் ஜந்து தீர்த்த பாத்திரங்களில் ஆவாகனம் செய்து ஐபித்து, ருத்ரம் சமகம் முதலியவற்றைச் சொல்லி அத்தீர்த்தத்தைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது அவர் வழக்கம், அப்படியே அன்று ஆவாகனம் செய்து ஜபம் செய்யும்போது கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் இருந்தார். அச்சமயம் ஒரு நாய் உள்ளே வந்து ஒரு பாத்திரத்திலுள்ள அபிஷேக தீர்த்தத்தை நக்கத் தொடங்கியது. ஹரதத்தர் கண்ணைத் திறந்து பார்த்தார், நாய் அபிஷேக தீர்த்தத்தை எச்சிற்படுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அவர் அதை ஓட்டவில்லை. அது தன் தாகம் தீருமட்டும் தீர்த்தத்தைப் பருகிப் போய்விட்டது. அப் பெரியவர் வழக்கம் போல நான்கு பாத்திரங்களிலுள்ள தீர்த்தத்தோடு ஐந்தாம் பாத்திரத்தில் நாய் உண்டு எஞ்சிய தீர்த்தத்தையும் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தார். 

அருகில் இருந்து அதைக் கவனித்த சிலருக்கு அப்பெரியார் செய்த காரியம் உசிதமாகத் தோற்றவில்லை. அந்நாயை ஓட்டாமல் இருந்தது அவரது கருணை மிகுதிக்கு அடையாளமானாலும், அதனால் எச்சிற்படுத்தப்பட்ட தீர்த்தத்தை அபிஷேகம் செய்தது மாத்திரம் அவர்கள் மனத்தில் ஒரு பெரிய சங்கடத்தை உண்டாக்கிவிட்டது. சிறந்த ஆசார சீலராகிய ஹரதத்தர் அவ்வாறு செய்ததை மறுப்பதற்கும் அவர்களுக்குத் தைரியம் உண்டாகவில்லை. ஆனாலும் அவர்கள் அச்செய்தியை மெல்ல அயலார்களுக்குத் தெரிவித்தனர். கேட்டவர்கள் யாவரும் ஒன்றும் தெரியாமல் மயங்கினர். அச் செய்தி எங்கும் பரவியது. கடைசியில் வேதாத்தியயனம் செய்து ஒழுக்கத்தால் நிரம்பிய சிலர் அப் பெரியாரை அணுகி, "ஒரு சந்தேகம் இருக்கிறது. அதைப் போக்கவேண்டும்" என்று ஆரம்பித்தார்கள். 

அவர்கள் கருத்தை ஹரதத்தர் ஊகித்துக்கொண்டார்; "உங்கள் சந்தேகத்தை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வதற்கு முன்பே நான் சமாதானம் சொல்லுகிறேன்; கேளுங்கள் ; வேதங்களுக்குள் சிறந்ததாகிய யஜுர்வேதத் தின் மத்திய பாகமாக இருப்பது ஸ்ரீருத்ரம். பரமேசுவரனுடைய பெருமையை அது வெகு விரிவாக வெளிப் படுத்துவது. அதில் 'ஶ்வப்ய: ஶ்வபதிப்யஶ்ச' என்று வருகிறது ஞாபகம் இருக்கிறதா? அதற்கு என்ன அர்த்தம்? நாயாகவும் நாய்க்குத் தலைவனாகவும் இருப்பவன் பரமசிவன் என்ற தாத்பர்யம். அதனால் விளங்குகிறதே. அபிஷேக தீர்த்தத்தை நக்கிய அந்நாயை நான் பரமசிவனாகவே பாவித்தேன். நான் ருத்திர ஜபம் செய்து கொண்டிருந்த சமயம் அது; அந்த ருத்திரம் வாயளவில் இருக்கிறதா? மனதளவில் இருக்கிறதா?' என்பதைப் பரிசோதிப்பதற்காகப் பரமேசுவரன் செய்த லீலை இது என்பதே என் எண்ணம்'' என்றார், அந்தச் சிவஞானி . ஆக்ஷேபம் செய்ய வந்தவர்கள் மறுமொழி ஒன்றும் கூற இயலாமல் அப்பெரியாரை வந்தனம் செய்து விட்டுச் சென்றனர்.

 நாய் மேலே பட்டால் ஸ்நானம் செய்வது அந்தக் காலத்து வழக்கம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கஞ்சனூரிலும் அதைச் சார்ந்த மணலூர், துகிலி, கோட்டூர் என்னும் அக்கிரகாரங்களிலும் நாய் மேலே பட்டால் அதனை அசுசியாகக் கருதி ஸ்நானம் செய்வதில்லை. 

ஒரு நாள் சாயங்காலம் ஹரதத்த சிவாசாரியார் திருவிடைமருதூர் ஆலயத்திற்குச் சிவதரிசனம் செய்யும் பொருட்டு வந்தார். ஆலயத்தினுள் நுழையும் போது ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. "இல்லை; இனிமேல் இல்லை" என்று அவள் சொல்லிச் சொல்லி அழுதாள். அவர் எங்கிருந்து அவ்வொலி வருகிறதென்று கவனிக்கும் போது ஆலய வாசலின் ஒரு பக்கத்தில் அந்த ஆலயத்தைச் சேர்ந்த ருத்திர கணிகையர் சிலரை ஆலய மணியகாரர் தண்டித்துக் கொண்டிருந்தார். முதலில் ஒருத்திக்கு அண்ணாந்தாள் பூட்டி அவள் முதுகில் கல்லை ஏற்றிக் கையில் பிரம்புடன் அவளைப் பயமுறுத்திக்கொண்டிருந் தார். கணிகையோ தண்டனையைத் தாங்க முடியாமல் கதறினாள். 

ஹரதத்தர் கண்ணில் அந்தக் காட்சி பட்டது. அவருக்கு மிக்க இரக்கம் உண்டாயிற்று. அவர் ராஜகுரு என்றும் பெரிய மஹானென்றும் உணர்ந்து ஆலயத்தைச் சார்ந்தவர்களும் மற்ற ஜனங்களும் அவர்பால் பயபக்தியோடு நடந்து கொள்வார்கள். அங்கே நின்றிருந்த ஆலய அதிகாரி ஒருவரை அழைத்து, 'ஏன் ஐயா இப்படி அந்தப் பெண்ணை வருத்துகிறார்கள்?" என்று கேட்டார். 

அதிகாரி. 'இவள் இந்த ஆலய கைங்கரியம் செய்யும் ருத்திர கணிகையர்களில் ஒருத்தி. ஒரு வாரமாக ஆலயத்திற்கு வரவே இல்லை. இடையிடையே இவள் மஹாலிங்க மூர்த்தியின் கைங்கரியம் செய்யாமல் இப்படியே தவறு செய்துவருகிறாள். பல முறை வார்த்தைகளால் கண்டித்துப் பார்த்தோம். அபராதம் போட்டோம். மீண்டும் மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்துவருகிறாள். அதனால் தண்டோபாயந்தான் இவளைத் திருத்துவதற்கு ஏற்றதென்று இவ்வாறு செய்கிறார்கள்" என்று விஷயத்தை விளக்கினார். 

இயல்பாகவே மிக்க இரக்கத்தோடு அதைக்கேட்டு வந்த அப்பெரியார், அதிகாரி சொல்லச் சொல்ல ஏதோ துக்கத்தில் ஆழ்ந்தவரைப்போல விம்மத் தொடங்கினார். அவர் உதடுகள் துடித்தன. உடம்பில் ஒரு படபடப்பு உண்டாயிற்று. விஷயம் முழுவதையும் அதிகாரி சொல்லி முடித்தவுடனே ஹரதத்தர் அப்படியே கீழே விழுந்து புரண்டு புரண்டு கதறத் தொடங்கினார். 

அதைக்கண்ட யாவரும் திடுக்கிட்டுப் போயினர். தாசியைத் தண்டித்தவர்கள் தண்டனையை நிறுத்தி அவரைப் பார்த்தனர். அழுது கொண்டிருந்த தாசி கூட ஆச்சரியத்தால் ஸ்தம்பித்து அழுகையை நிறுத்தினாள். ஒரே கூட்டம் கூடிவிட்டது. 

ஹரதத்தர் உண்மை ஞானி என்று உணர்ந்திருந்த பலர் அவர் செய்கைக்குக் காரணம் தெரியாமல் பிரமித்தனர். பிறரால் அவர் பெருமையைத் தெரிந்து கொண்டிருந்த பலருக்கு அவர்பால் இருந்த நன்மதிப்புச் சிறிது கலைந்தது. வம்புப் பேச்சில் இன்பம் காணும் சிலர், "இந்தக் காலத்தில் யாரையும் நம்பக்கூடாது. அந்தத் தாசியை அடித்தால் இவர் எதற்காக இப்படிக் கதற வேண்டும்? இதில் ஏதோ இரகசியம் இருக்கிறது" என்றனர். 

"யார் கண்டார்கள்? அவள் அடிக்கடி கோவிலுக்கு வராமலிருப்பதற்கு இவரே காரணமாக இருக்கலாம். தம்மால் அவள் அடிபடுவதைக் கண்டு இவருக்கே பொறுக்க முடியவில்லை. அதனாலே தான் எல்லாவற்றை யும் மறந்து, இப்படி இவர் துக்கிக்கிறார்" என்றார் சிலர். ஒருவராவது உண்மை இன்னதென்று தெரிந்துகொண்டவராகத் தெரியவில்லை .

 துக்கம் தாங்காமல் அவசமாகச் சிறிது நேரம் கிடந்த ஹரதத்தர் மெல்ல எழுந்திருந்தார். கோவில் உத்தியோகஸ்தரில் ஒருவர் தைரியமாக அவரை அணுகி அஞ்சலி செய்து, ''ஸ்வாமி, நாங்கள் செய்த காரியம் தங்களுக்கு இவ்வளவு துக்கத்தை உண்டாக்கக் காரணமாகுமென்று தெரிந்திருந்தால் அவளைத் தண்டித்திருக்க மாட்டோம். குறிப்பாக ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் முன்னமே தண்டனையை நிறுத்தியிருப்போம். கோயில் வழக்கப்படி நாங்கள் செய்தோம். க்ஷமிக்க வேண்டும்" என்றனர். 

அப்பெரியார் சிறிது நிதானித்தார்; அதிகாரியின் பேச்சில் அவன் சொன்ன வார்த்தைகளுக்கு ஊடே வேறு குறிப்பு இருப்பதை உணர்ந்து தம்மை அறியாமலே புன்னகை பூத்து, "நீங்கள் அவளைத் தண்டித்தது பற்றி நான் துக்கப்படவில்லை . பரமேசுவரனது கைங்கரியத்தைச் சரியாகச் செய்யவில்லை என்று நம்மையும் தண்டித்து ஈசுவர கைங்கரியத்திலிருந்து மாறாமல் இருக்கும்படி செய்பவர்கள் இல்லையே என்றுதான் துக்கித்தேன். ஸ்ரீ மஹாலிங்க மூர்த்தியின் கைங்கரியமே கண்ணாக இருக்கும் நீங்கள் சிவகணங்களுக்குச் சமானமானவர்கள். உங்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்து கைங்கரியம் செய்வதற்கு இல்லையே என்ற குறை எனக்கு இருக்கிறது'' என்றார். 

அங்கிருந்தவர்களெல்லோரும் உள்ளம் உருகிக் கண்களில் நீர்ததும்ப அப்பெரியாரின் சிவ பக்தித் திறத்தைப் பாராட்டினர். தவறாக எண்ணியவர்களும், "இவர் உலகியலுக்குப் புறம்பானவர் என்பதை நாம் அறியாமல் அபசாரம் செய்தோமே" என்று கன்னத்தில் அடித்துக்கொண்டனர். 

நாயின் உருவத்திலே சிவபெருமானையும் தாசியின் உருவத்திலே தம் குறையையும் நினைந்து கனிந்து உருகும் சிந்தையையுடைய ஹரதத்தர் அப்பால் ஆலயத்தினுள்ளே புகுந்தார். 


( இந்த விஷயத்தை எனக்குத் தெரிவித்தவர் சைவ சாஸ்திர நிபுணராகிய திருவிடைமருதூர் ஸ்ரீ சுந்தர சாஸ்திரியவர்கள் ) 

====== 

* இது திருவாவடு துறைக்கு வடமேற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள ஒரு சிவஸ்தலம். 

=====

[ நன்றி: கல்கி, Picture-Courtesy: Ananth ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் :

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

2027. உ.வே.சா. - 12

 டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்

"கதிர்"





[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 20 அக்டோபர், 2020

1661. உ.வே.சா. - 11

என் பாட்டனார்
 க. சுப்பிரமணியன்



கலைமகளில் 1955-இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழுதியது.
=====



தமிழ்த் தாத்தா, தமிழ்த் தாத்தா என்று தமிழுலகம் கொண்டாடும் பெரியாரைத் தாத்தா என்று நேரிலே அழைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவருடைய ஒரே பேரனாகிய எனக்கு உள்ள அந்தத் தனி உரிமையை இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கு உண்டாகும் உணர்ச்சிகள் பல.

ஐயரவர்கள் பிறந்த தமிழ் ஆண்டிலேயே அடியேனும் பிறந்தேன்; அவருடைய 61-ஆம் ஆண்டுத் தொடக்கத்திலேதான் ஆனந்த வருஷத்தில் நான் பிறந்தேன். எனது 27-ஆம் பிராயம் வரை என்னுடைய பாட்டனார் ஜீவித்திருந்தார்.

அவரைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் என் கண்முன் நிற்பது அவர் மாணவர்களுடன் பழகிய காட்சிகளேயாகும். மாணவர் என்று குறிப்பிடுவது கல்லூரியில் படித்த மாணவர்கள் அல்ல. அவ்வகையில் பயன் பெற்றோர் பலருண்டு. ஆயினும் அவர் இல்லத்திலேயே முழு நேரத்தையும் செலவிட்டு அவருக்குப் பணிவிடை செய்து இன்பம் கண்ட சிலரைப் பற்றியே நான் குறிப்பிட விரும்புகிறேன்.


திருவாவடுதுறை மடத்தில் ஏற்பட்ட நற்பழக்கங்கள் எல்லாம் ஐயரவர்களின் வாழ்நாளில் தலைசிறந்து விளங்கின. தம் ஆசிரியப் பிரானாகிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடத்தும், திருவாவடுதுறை ஆதீனகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களிடத்தும் தாம் பெற்ற அன்பின் திறத்தை மாணவர்களுக்குக் கதை கதையாகப் பரிவுடன் பல முறை எடுத்துக் கூறுவார். என் இளமைப் பிராயத்தில் என் பாட்டனாரவர்களிடம் நெருங்கிப் பழகியவர்கள் ஸ்ரீ இ. வை. அனந்தராமையர், ஸ்ரீ  ம. வே. துரைசாமி ஐயர், ஸ்ரீ சு. கோதண்டராமையர் முதலியோராவர். இவர்களில் ஸ்ரீ  அனந்தராமையர் வயசானவர். அவர் காலையிலும் மாலையிலும் வெகு நேரம் வரை விடுமுறை நாட்களில் ஐயரவர்கள் செய்துவந்த ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவார். பல மணி நேரம் அவர் கருத்தையும் கண்ணையும் ஏடு பார்ப்பதிலும், பிரதிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதிலும், 'ப்ரூப்' பார்த்தலிலும் செலுத்துவதைக் கவனித்தால் ஆச்சரியமாகவே இருக்கும். சிறந்து உறுதியுடன் இவ்வகைப் பணியில் இக்காலத்தில் ஈடுபடுகிறவர் அரியர்.

ஸ்ரீ  கோதண்டராமையர் ஐயரவர்களுக்குப் பணிவிடை செய்வதில் சிறந்த பக்தராக விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்ற சமயம் அங்கே சங்கத்தில் படித்துக் கொண்டிருந்த அவரை ஐயரவர்கள் சென்னைக்கு உடன் அழைத்து வந்தார். 15 வயசுச் சிறாராகிய அவர் தியாகராச விலாசத்திலேயே ஐயரவர்களிடம் படித்துக் கொண்டும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டும் வரலானார். வெளியூர் யாத்திரை செல்லும் பொழுதெல்லாம் அவர் உடன் செல்வார். ஐயரவர்களின் குறிப்பை உணர்வதில் அவர் வெகு சமர்த்தர். அதனால் அவரிடம் ஐயரவர்களுக்கு மிகுந்த அன்பு உண்டு. அந்த அன்பு பல சமயங்களில் பல விதமாகப் புலப்படும்.

தாம் அருந்தும் எந்தச் சிற்றுண்டியையும் ஐயரவர்கள் தம் இல்லத்தில் பழகிய மாணவர்களுடனேயே பகிர்ந்து கொள்வார். எதையும் மறைத்துச் சாப்பிடும் வழக்கம் அவரிடத்தில் இல்லை. உடன் பழகிய மாணவர்கட்கு உணவும் ஆடையும் தேடித் தந்து அவர்களைப் பாதுகாப்பதில் அளவற்ற இன்பங்கொண்டார். சிலருக்கு விவாகம் செய்வித்தும் மகிழ்ந்தார்.

ஐயரவர்கள் 1924-ஆம் ஆண்டு முதல் 1927-ஆம் ஆண்டு வரை ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியாரவர்களால் சிதம்பரத்தில் நிறுவப் பெற்ற மீனாட்சி தமிழ்க் கல்லூரித் தலைவராக இருந்தார். அங்கே அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர். ஒவ்வொருவரும் சிறந்த பண்புடையவராகவே விளங்கினர். இந்தக் கல்லூரியைப் பற்றி நினைக்கும் பொழுது வித்துவான்கள் தண்டபாணி தேசிகர், சிவப்பிரகாச தேசிகர் இவர்கள் ஞாபகம் வருகிறது. இவர்கள் இருவரும் ஐயரவர்களுடைய தலை சிறந்த மாணவர்களாக விளங்கினர். இவர்களிடம் ஐயரவர்களுக்குத் தனிப்பட்ட அன்பு ஏற்பட்டது.

மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் படித்த மாணவரில் ஸ்ரீ வி. மு. சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். இவர் மிகவும் அடக்கமான சுபாவமுள்ளவர். சுயநலம் பாராதவர். ஆழ்ந்த கல்வியறிவும், சிறந்த ஞாபக சக்தியும் உடையவர். திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து ஆயிரம் ரூபாய்த் தமிழ்ப் பரிசை முதல் முதலாகப் பெற்றவர். இவரை ஒரு நடமாடும் புத்தகசாலை என்றே சொல்ல வேண்டும். ஐயரவர்கள் புத்தக வேலைகளுக்கு இவர் செய்த உதவி மிகுதியானது.



சென்ற முறை சென்னையில் காங்கிரஸ்  மகாசபை கூடிய பொழுதுதான் ஸ்ரீ கி. வா. ஜகந்நாதன் அவர்கள் ஐயரவர்களிடம் தமிழ்ப் பாடங் கேட்கத் தியாகராச விலாசத்திற்கு வந்து சேர்ந்தார். இவருக்கு அப்பொழுதே முருகக் கடவுளின் மீது அபார பக்தியும், அதன் விளைவாகச் சிறந்த தமிழறிவும், கவியியற்றும் ஆற்றலும் இருந்தன. இவரைப் பற்றி நான் எழுத விரும்பும் விஷயங்கள் பல. பிறிதொரு சமயம் வாய்ப்பு நேரும்பொழுது தனிக் கட்டுரையாகத்தான் எழுத வேண்டும் என எண்ணுகிறேன். இவருடைய இடையறா முயற்சியினால்தான் ஐயரவர்கள் சுயசரிதம் வெளிவந்தது. நூறாண்டு விழாவிற்குள் சுயசரிதத்தின் பிற்பகுதியும் வெளிவரச் செய்ய வேண்டுமென்ற அவா இருந்தது. இவ்விழாவை ஒட்டி ஸ்ரீ  கி. வா. ஜ அவர்கள் அப்பணியைத் தொடங்கி நன்கு பூர்த்தி செய்வார் என்பது திண்ணம்.


உற்றார் உறவினர்களிடம் ஏதோ வியாஜமான அபிமானமே வைத்திருந்தார் என்னுடைய தாத்தா. முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் அவர்களுடன் பழகுவார். அவருடைய தமிழ்ப் பணிக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்று நெருங்கிய உறவினர்களும் அவரிடத்துப் பக்குவமாகவே பழகி வந்தார்கள். தம் சிறு பிராயத்திலே உதவி செய்த உறவினர்களை அவர் மறக்கவே இல்லை. அவர்கள் சந்ததியாருக்கெல்லாம் தாம் சௌகரியமாக இருந்த பிற்காலத்தில் இயன்ற அளவு பொருளுதவி செய்து வந்தார். திருவாவடுதுறை மடத்தில் தாம் படித்துப் பயனடைந்ததை ஆயுள் பரியந்தம் மறக்கவேயில்லை. மடத்துச் சம்பந்தமான எவ்வகைப் பணியிலும் மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டார். ஆதீனத்தின் சிறப்பைத் தம்முடன் அன்பாகப் பழகிய தக்க கனவான்களிடத்தும் பிரமுகர்களிடத்தும் விரிவாக எடுத்துரைத்தார். ஆதீனகர்த்தர்களின் சிறப்பியல்புகளைச் சுவாரசியமாகக் கூறுவார்.  தாம் பெற்று வரும் நலன்களுக்கெல்லாம் காரணம் தம் தந்தையாரின் சிவபூஜா விசேஷமே என்று அடிக்கடி சொல்வதுண்டு.


ஏட்டுச் சுவடிகளும் பயன்படுத்திய அச்சுப் புத்தகங்களுமே ஐயரவர்களுடைய சிறந்த பொக்கிஷங்களாக விளங்கின. தியாகராச விலாசத்தில் அவர் வீட்டின் மாடியில் தம் தொண்டுகளைப் புரிந்து வந்தார். புத்தகங்களும் அவரும் மாணவர்களுமே அவ்விடத்தில் உறைந்து வந்தனர். மாடியிலுள்ள மேற்புறத்து அறையில் ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் பாதுகாத்து வந்தார். அவர் அநுமதியின்றி யாரும் அங்கே சென்று எதையும் பார்க்க இயலாது. நூல்களின் மேல் அளவு கடந்த பற்றும் பழைய நூல்களெல்லாம் நன்கு வெளிவரவேண்டுமே என்ற கவலையும் அவரிடம் குடி கொண்டிருந்தன. குடும்பச் செலவுகளைப் பற்றியோ வருவாயைப் பற்றியோ அவர் கவலைப்படவில்லை. குடும்ப விஷயங்களையெல்லாம் இளம் பிராயத்தில் அவர் தந்தையாரும், நடுத்தர வயசில் அவர் தம்பியாரும், பின்னர் என் தந்தையாரும் கவனித்துக்கொண்டார்கள். அவசர சந்தர்ப்பத்திற்கென ஒரு ரூபாய் சில்லறை மாத்திரம் தம்மிடம் வைத்துக்கொள்வார். இல்லத்தில் படித்து வந்த மாணவர்களே அவர் குடும்பத்தினராக விளங்கினர். மாணவர்களுக்குப் பாடம் சொல்வது, அவர்களுடன் தமிழ்ப் பணியில் ஈடுபடுவது, கவிகள் சொல்லியும் கேட்டும் இன்புறுவது என்பனவே அவருடைய தினசரி நடவடிக்கைகளாக இருந்தன. தமக்கு எந்தச் சிறிய வகையிலும் உதவி புரிந்தவர்களை அவர் மறக்கவே இல்லை. ஞாபகம் வைத்துக்கொண்டு நன்றி செலுத்திவந்தார்.

காலையில் தவறாமல் தினந்தோறும் முதலில் தேவாரத்தில் ஒரு பதிகமேனும் பாராயணஞ் செய்து இன்புறுவார். பிறகு புத்தக ஆராய்ச்சி வேலை நடைபெறும். 11 மணிக்கு மேல் நீராடல், அநுட்டானம், பூஜை, போஜனம் முதலியன நிகழும். பிற்பகலில் சிறிது நேரம் நித்திரை செய்வார். நித்திரை வரும்வரை உடனிருக்கும் மாணவரை அழைத்துப் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கச் செய்து கேட்பார். அயர்ச்சி நீங்கியபின் மாணவர்களுக்குப் பாடம் சொல்லுவார். மீண்டும் மாலையில் புத்தகப் பதிப்பு வேலையும் ஆராய்ச்சியும் தொடங்கும். இரவு 10 மணி வரை பதிப்புச் சம்பந்தமான பணிகள் நடைபெறும்.

இதற்கிடையே, காண வரும் அன்பர்கள் பலர். அவர்களிற் பல வகையினர் உண்டு. பிரபுக்கள், புலவர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், மாணவர்கள், உறவினர், யாசகர்கள், உற்றார்கள் எனப் பல விதமாகப் பிரிக்கலாம். யாவரிடத்தும் அவர் அவர் தகுதிக்கு ஏற்ற வண்ணம் முகமன் கூறி அன்புடன் உசாவி அவர் உரையாடும் விதம் சுவையாக இருக்கும். சிலேடையாகப் பேசிச் சிலரைச் சிரிக்கச் செய்வார். கொஞ்சம் கடுமையான சுபாவமுள்ளவர்கள் ஐயரவர்களிடம் விடை பெற்றுத் திரும்பும் பொழுது இன்முகத்துடனேயே செல்லுவார்கள். புத்தகங்களுக்கு அபிப்பிராயம் பெறும் அன்பர்கள் வருகை அதிகம். நல்ல அபிப்பிராயம் பெற வேண்டுமென்று சிலர் தந்திரமாக, அந்தச் சமயத்தில் ஐயரவர்கள் வெளியிட்ட நூல்களை விலைக்குப் பெறுவர். நூல்களுக்கு அபிப்பிராயம் நிதானமாகவே ஐயரவர்கள் அளிப்பது வழக்கம். தம் கருத்துக்கு ஒவ்வாத நூல்களுக்கு விரிவான முறையில் அபிப்பிராயம் எழுத மாட்டார். சமத்காரமாகவும் பக்குவமாகவும் பதில் எழுதி அனுப்பி விடுவார்.


வரும் கடிதங்களுக்குப் பதில் அனுப்பும் பணியை என் தந்தையார் செய்து வந்தார். என் தந்தையாருக்கும் பாட்டனாருக்கும் இடையே ஒரு சிறு தூதனாக நான் இருந்தேன். ஆதலின் இருவர் கருத்துக்கும் இணங்க நான் நடந்தேன். இளமையில் செய்து வந்த இந்தச் சிறு தொண்டு இப்பொழுது நினைக்குந்தோறும் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

புத்தகங்களுக்கு அகராதி தயாரிக்கும் முறை வேடிக்கையாக இருக்கும். இந்தப் பணியில் நான்கூட ஈடுபடுவதுண்டு. இதில் அதிகமாக ஈடுபட்டவர் என் சிறிய பாட்டனாராகிய ஸ்ரீ  சுந்தரமையரவர்கள். நீளமான காகிதங்களில் வார்த்தைகளைக் குறித்து விடுவார்கள். அவற்றை ஒவ்வொரு வார்த்தையாகக் கத்தரித்து அகராதி வரிசைப்படி அதற்கென அமைந்த சிறிய பெட்டியில் பிரித்துப் போட்டுப் பின் சேகரித்து வரிசைப்படுத்தும் முறை என் இளம் பிராயத்தில் ருசிகரமாகவே இருந்தது. இந்தப் பணியில் அன்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு விரைவில் பணியை முடிப்பார்கள். அகராதி வேலை செய்வதில் எனக்குப் பழக்கம் உண்டாகும்படி செய்து 'ப்ரூப்' பார்க்கும் விதத்தையும் என் பாட்டனார் எனக்கு நன்கு போதித்தார். அகராதி வரிசை தெரியுமா என்று விசித்திரமாக அவர் இடையே கேள்வி கேட்டு ஆராய்வது வேடிக்கையாக இருக்கும்.

நான் சிறு நூல்கள் சிலவற்றை அவரிடம் பாடம் கேட்டதுண்டு. சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், நள வெண்பா, ஆறுமுக நாவலர் இயற்றிய சிற்றிலக்கண வினா விடை முதலியவை படித்தேன். ஒரு நாளைக்கு ஒரு பாட்டிற்கு மேல் பாடஞ் சொல்ல மாட்டார். செய்யுளை நிதானமாகப் பலமுறை படிக்கச் செய்து கேள்வி கேட்கத் தொடங்குவார். பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பது போல் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லும் வழக்கம் அவரிடம் இல்லை. எழுவாய் பயனிலை செயப்படுபொருள் இவை யாவை என்று வினவிப் படிப்பவனையே சிந்திக்கச் செய்து, பிறகு ஒவ்வொரு தொடருக்கும் பொருள் சொல்லுவார். பாடலில் ஏதாவது வரலாறு வந்தால் அதனை விளக்குவார். ஒரு பாட்டைப் பாடம் கேட்கும் பொழுதே படிப்பவனுக்குப் பல விஷயங்கள் புலப்படுமாறு அரிய செய்திகளை எளிதில் எடுத்துரைப்பார். இசையுடன் செய்யுட்களைப் படித்துக் காட்டுவார்.


ஐயரவர்கள் எனக்கு அவ்வப்பொழுது கூறிய புத்திமதிகள் பல. தம்மிடம் கற்ற மாணவர்களிடம் எப்போதும் பிரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார். "வேறொன்றும் வேண்டாம்; அவர்களிடம் சுமுகமாக இருந்தாற் போதும்" என்று வேடிக்கையாகச் சில சமயம் சொல்லுவதுண்டு. பழைய அன்பர்களை உபசரித்து அவர்களுக்குச் செய்யக்கூடிய சிறிய உதவிகளைச் செய்யத் தயங்கக்கூடாது என்றும், யாசகர்கள் வந்தால் 'போ' என்று சொல்லுதல் பிழை என்றும், நம்முடைய வலிமையை அவர்களிடம் காட்டக் கூடாதென்றும் அறிவுறுத்துவார். சிறியவர்களையும் ஏகவசனமாக அழைத்தல் கூடாது என்று கூறுவார். காயத்திரி ஜபம் அவசியம் செய்ய வேண்டுமென்றும், ஜபம் செய்யுங்கால் சூரியனைத் தியானம் செய்ய வேண்டுமென்றும் உபதேசிப்பார். சந்தியாவந்தனம் செய்யும்பொழுது ஆசமனம் இப்படிச் செய்ய வேண்டும், பிரோக்ஷண ஜலம் சிரசில் படவேண்டும் என்பன போன்ற விஷயங்களையும் பிரியமாக மனங் கொள்ளுமாறு கூறுவார். சுற்றந் தழுவுதல் மிகவும் முக்கியம் என்றும், அவர்களைத் திருப்தி செய்வதற்காகப் பெரியவர்களாயின் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டியது நல்லதென்றும் கூறுவார். திருவாவடுதுறை, திருப்பனந்தாள் மடங்களிலிருந்து தாம் அடைந்த நன்மை பலவென்றும், அவ்விரண்டு மடத்து அதிபர்களிடத்தும் என்றென்றும் உண்மையன்புடன் நடந்துவர வேண்டுமென்றும் பல நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து உள்ளம் உருகப் பேசிய சந்தர்ப்பங்கள் பல உண்டு.


ஐயரவர்கள் சிலரைப்போல் கையெழுத்துப் போடுவதற்குக் கூட ஆங்கிலம் பழகவில்லை. சிலர் அவரிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விடுவார்கள். தமிழ் தெரிந்தும் ஆங்கிலத்தில் பேசுவது ஒரு கௌரவமென்று நினைத்த காலம் அது. ஐயரவர்கள் அவர்களுக்குப் புன்னகையுடன் "தேங்க்ஸ்" (Thanks) அல்லது "நோ தேங்க்ஸ்" (No Thanks) என்று சொல்லியனுப்பி விடுவார்.

(++)மீண்டும் ஐயரவர்கள் தோன்றினால் இன்றைத் தமிழுலகில் அவர் எங்ஙனம் விளங்குவார் என்று சில சமயம் நான் சிந்திப்பதுண்டு. பல விதமான புரட்சிகளும் போராட்டமும் நடந்துவரும் இக்காலத்திலும் அவர் வெற்றிகரமாக வாழ்வார் என்பது திண்ணம். காரணம், அவருடைய சிறந்த பண்பும் அனைவரிடத்தும் பழகும் முறையுமேயாகும்.



[ நன்றி: வெண்பா விரும்பி ]

தொடர்புள்ள பதிவுகள்: 

திங்கள், 27 ஏப்ரல், 2020

1531. உ.வே.சா. - 10

வீழ்ந்த ஆல மரம்
கல்கி


ஏப்ரல் 28. உ.வே.சாமிநாதையரின் நினைவு தினம்.
அவர் 42-இல் மறைந்தபின், கல்கியில் வந்த அஞ்சலி.




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ] 
தொடர்புள்ள பதிவுகள் :

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

1336.உ.வே.சா. - 9

உயிர் மீட்சி
உ.வே.சாமிநாதையர் 




’சக்தி’ இதழில் 1939 -இல் வந்த ஒரு கட்டுரை.





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள் :

திங்கள், 21 மே, 2018

1069. சங்கீத சங்கதிகள் - 153

தலைமுறைக்கும் போதும்!' 
உ.வே. சாமிநாதையர்


தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு  தனவந்தர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிக்க பணமும் பூஸ்திதியும் உண்டு.  பொருளை விருத்தி செய்வதிலும் அதனைக் காப்பாற்றுவதிலும் நல்ல திறமையுள்ளவர்; அவற்றிற்குரிய வழிகளையறிந்து அவ்வாறே பெருமுயற்சியுடன் ஒழுகிவந்தார்.  வயல்களுக்குத் தாமே நேரிற் சென்று
வேலைக்காரர்களிடமிருந்து வேலை வாங்குவார்; தாமும் செய்து காட்டுவார்.

பயிர்த் தொழிலில் மிக்க ஊக்கமும் பயிற்சியும் உடையவர்.  'தொழுதூண்
சுவையின் உழுதூணினிது' என்பதை நன்றாக அறிந்தவர்.  ஆனால், கல்வியில்  அவருக்கு ஒருவிதமான பழக்கமும் இல்லை; மற்ற ஜனங்களோடு அதிகமாக நெருங்கிப் பழகுவதுமில்லை.  யாவருக்கும் இன்பமளித்து மகிழ்விக்கும் சங்கீதத்திலோ சிறிதேனும் அவருக்கு விருப்பமில்லை.  வயல்களில் நிகழும் நிகழ்ச்சிகளும் உண்டாகும் ஓசைகளுமே அவருக்கு எல்லாவித இன்பத்தையும் அளித்தன.

இப்படியிருக்கையில் அந்தக் கனவானுடைய வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ்ந்தது.  உறவினர்களும் பிறரும் அவருக்கு ஊக்கமூட்டி அக்கல்யாணத்தை மிகவும் பிரபலமாக நடத்தவேண்டுமென்று சொன்னார்கள்.  அவர்களுடைய வசமாயிருந்த அவர் அக்கல்யாணத்தில் அவர்கள் விருப்பத்தின்படியே ஒரு சிறந்த சங்கீதக் கச்சேரி நடத்த உடன்பட்டார்.  பெரிய பணக்காரரானமையால் எவரை வேண்டுமானாலும் வரவழைக்கலாமல்லவா?  நண்பர்களுடன் கலந்து யோசித்து அக்காலத்தில் தஞ்சை சமஸ்தானத்தில் பிரபல சங்கீத வித்துவான்களாக இருந்த ஆனை, ஐயா என்பவர்களை வருவித்து அவர்களைக் கொண்டு சங்கீதக் கச்சேரியை நடத்த எண்ணினார்.

ஆனை, ஐயா என்பவர்கள் சகோதரர்கள்; இரட்டைப் பிள்ளைகளென்று
வழங்கப்படுவார்கள்.  வையைச்சேரி என்னும் ஊரில் அவர்கள் பிறந்தவர்கள். ஆனை என்பது ஒருவர் பெயர்; ஐயா என்பது மற்றொருவர் பெயர்.  இருவரும் சங்கீதத்தில் நல்ல பயிற்சியுடையவர்கள்; எக்காலத்திலும் பிரியாது சேர்ந்தே வசிப்பவர்கள்; சங்கீதத்தில் இணையற்ற வித்துவானாக விளங்கிய ஸ்ரீ மகாவைத்தியநாதையரவர்களுடைய தாய்வழியில் முன்னோர்கள்; வடமொழி தென்மொழி தெலுங்கு என்னும் மூன்று மொழிகளிலும் சிறந்த பழக்கமும் அவற்றில் கீர்த்தனம் இயற்றும் வன்மையும் உடையவர்கள்; அவர்கள் ஸ்வரம், பல்லவி
முதலியவற்றை எப்பொழுதும் சேர்ந்தே பாடுவார்கள்; சிவபக்திச் செல்வம்
வாய்ந்தவர்கள்; விபூதி ருத்ராக்ஷங்கள் அணிபவர்கள்; திருவையாற்றிலுள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தனியம்பிகை விஷயமாகவும் ஸ்ரீ பிரணதார்த்திஹரர்
விஷயமாகவும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.

ஒருசமயம் தஞ்சாவூர் ஸம்ஸ்தானத்திற்கு ஹைதராபாத்திலிருந்து பல விருதுகள் பெற்ற முகம்மதிய சங்கீத விற்பன்னரொருவர் வந்திருந்தார்.  அவர் இந்துஸ்தானி சங்கீதம் பாடி அரசரையும் பிறரையும் மகிழ்வித்தார்.  அரசர் மிக்க மகிழ்ச்சியை அடைந்து, "இந்த இந்துஸ்தானி சங்கீதத்தை யாரேனும் இங்கே கற்றுக்கொண்டு பாடமுடியுமா?" என்று சபையிலுள்ள சங்கீத வித்துவான்களையெல்லாம் கேட்டபோது அங்கு வீற்றிருந்த ஆனை, ஐயா இருவரும், "இரண்டு மாதம் அவகாசம் கொடுத்தால் நாங்கள் முயன்று பார்ப்போம்" என்றார்கள்.  அவ்வாறே இரண்டு மாதம் பயின்று அந்தச் சங்கீதத்தைத் தவறின்றி அரசருக்குப் பாடிக் காட்டினார்கள்.  அதுவரையில் தஞ்சையிலேயே இருந்த முகம்மதிய வித்துவான் கேட்டு வியப்புற்று, "நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தக்க ஆசிரியரிடம் பல வருஷங்கள் பயின்று கற்றுக்கொண்ட இந்த அருமையான வித்தையை இவர்கள் கேள்வியினாலேயே இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டார்களே! இவர்கள் எதையும் எளிதிற் கற்றுக்கொள்வார்களென்று தோற்றுகின்றது!" என்று சொல்லி மிகவும் பாராட்டினரென்று சொல்வார்கள்.

இத்தகைய வித்துவான்கள் மேற்கூறிய கனவான் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் வரவை அறிந்த ஜனங்கள் யாவரும் அவர்களுடைய பாட்டைக் கேட்க மிக்க ஆவல் கொண்டு வந்து கூடினார்கள். வெளியூர்களிலிருந்தும் பலர் வந்தனர்.  அவர்களுடைய பெருமை எங்கும் பரவியிருந்ததால் அவர்கள் பாட்டைக் கேளாவிடினும் அவர்களை நேரே பார்த்துவிட்டாவது போகலாமென்று பலர் வந்திருந்தனர்.  இவ்வளவு கூட்டத்தையும் கண்ட தனவந்தருக்கு உள்ளுக்குள்ளே மிக்க சந்தோஷம் உண்டாயிற்று.  எல்லோரும் தம்மை உத்தேசித்தே வந்துள்ளார்கள் என்பது அவருடைய நினைவு.

முகூர்த்த நாளின் மாலையில் சங்கீதவினிகை நடந்தது.  ஆனை, ஐயாவைச் சுற்றிலும் பிரபலர்களான வித்துவான்கள் பலர் அமர்ந்திருந்தார்கள்.
கூட்டம் அமைதியாகவிருந்து கேட்டு வந்தது.  வீட்டு எஜமான் அப்போதுதான் தமது கௌரவத்தைக் காட்டவேண்டுமென்று சுறுசுறுப்பாகப் பல காரியங்களையும் கவனித்துவந்தார்.  உணவுக்கு வேண்டியவற்றையும் பிற உபசாரங்களுக்கு உரியவற்றையும் செவ்வனே அமைக்குமாறு அங்கங்கே உள்ளவர்களை ஏவிக்கொண்டும்
அடிக்கொருதரம் சங்கீதக்கச்சேரி நடக்குமிடத்திற்கு வந்து கூட்டத்தையும்
பாடுபவர்களையும் சுற்றிப்பார்த்துக் கனைத்துக்கொண்டும் காற்றாடிபோல் சுழன்று வந்தார்.  உண்மையில் சங்கீதம் என்பது இன்னதென்று தெரியாமையால் அவருக்கு அதிலே புத்தி செல்லவில்லை.


ஆனை, ஐயா இருவரும் ஒரு பல்லவி பாட ஆரம்பித்தனர்.  பலபல சங்கதிகளையும் கற்பனை ஸ்வரங்களையும் அமைத்துப் பாடினர்.  அங்கிருந்தவர்கள், 'இதுவரையில் இவ்வாறு கேட்டதே இல்லை' என்று கூறி அதில் ஈடுபட்டனர்.  அதனால் ஊக்கம் மிக்க பாடகர்கள் இருவரும் தங்கள் மனோபாவ விரிவுக்கேற்றபடி பாடிக்கொண்டிருந்தார்கள்.  அங்கிருந்த யாவரும் ஒரே நோக்கமாக ஆனந்தக்கடலில் மூழ்கியிருந்தனர்.

அப்பொழுது ஒரு தூணின் அருகில் நின்றுகொண்டு எஜமான் கவனித்தார்.  அவர் தம் மூக்கின் மேல் விரலை வைப்பதும் அடிக்கடி முகத்தைச் சுளிப்பதும் வாயினால் வெறுப்புக்குரிய ஒலியை உண்டாக்குவதும் அவருக்கு ஏதோ மனத்தில் ஒருவித வருத்தம் இருப்பதை வெளிக்காட்டின.  வரவரக் கண்கள் சிவந்தன.  இரண்டுதடவை தூணில் தட்டினார்.  அவருக்குக் கோபம் வந்த காரணம் ஒருவருக்கும் தெரியவில்லை.  திடீரென்று பலத்த குரலில், "வித்துவான்களே, நிறுத்துங்கள்
உங்கள் சங்கீதத்தை.  இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதென்று நினைத்துவிட்டீர்களோ!  நானும் ஒரு நாழிகையாக எல்லா வேலையையும் விட்டுவிட்டுக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே! அதற்கென்ன அர்த்தமென்று நான் கேட்கிறேன்" என்று கர்ஜனை செய்தார்.  யாவருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊசியினால் குத்தினதுபோல் ஓர் உணர்ச்சி பிறந்தது.    "இவர்களைப் பெரிய சங்கீத வித்துவான்களென்று பொறுக்கியெடுத்தார்கள்!  இதற்குத்தான் முதலிலேயே கல்யாணத்துக்குப் பாட்டுக் கச்சேரி வேண்டாமென்று சொன்னேன்.  இருக்கிறவர்களெல்லாம் பிடுங்கி எடுத்துவிட்டார்கள்.  இவர்களுக்குக் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு விவசாயத்தை விருத்தி செய்யலாமே!" என்று மேலும் மேலும் கத்திக்கொண்டிருந்தார் பிரபு.

சங்கீதம் நின்றுவிட்டது.  அப்போது ஆனை, ஐயா அவர்களின் மனநிலையை யாரால் சொல்ல முடியும்?  அங்கிருந்தவர்களிற் பெரிய வித்துவான்களெல்லாம் கண்ணில் நீர்ததும்ப அவ்விருவருக்கும் சமாதானம் சொன்னார்கள்.  அவர்கள் உடனே கல்யாண வீட்டினின்றும் வெளியே போனார்கள்.  கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது.  அவ்விருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.  அளவற்ற வருத்தத்தை அடக்கிக் கொண்டவர்களென்பதை அவர்கள் முகங்கள் காட்டின.  அப்பால் நேராக
அவ்வூரிலுள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளைத்
தரிசித்தனர்; தரிசித்தபோதே ஓவென்று கதறிவிட்டார்கள்.  உடன்
வந்தவர்களெல்லோரும் அசைவற்று நின்றனர்.  ஆனை என்பவர் தம்முடைய வருத்த மிகுதியால் அடியிற்கண்ட கீர்த்தனத்தைப் பாடத் தொடங்கினார்.

இராகம்: புன்னாகவராளி; தாளம்: ஆதி

(பல்லவி)

போதும் போதும் ஐயா தலைமுறைக்கும்    (போதும்)

(அநுபல்லவி)

மாதுவளர்வர காபுரி தனில் விளங்கிய
மங்கை யலர்மேலுமிக மகிழ் வேங்கடாசலனே   (போதும்)

(சரணங்கள்)

1.

அரியென் றெழுத்தையறி யாதமூடன்றன்னை
...ஆதி சேஷ னென்றும்
ஆயுத மொன்றுமறி யாதவன்றனை
...அரிய விஜய னென்றும்
அறிந்து மரைக்காசுக் குதவா லோபியைத்
...தானக் கர்ண னென்றும்
அழகற்ற வெகுகோரத் தோனை யேமிக
...அங்கஜனே யென்றும் - புகழ்ந்தலைந்தது   (போதும்)

2.

காசுக் காசைகொண்டு லுத்தனைச் சபைதனில்
...கற்பக தருவென்றும்
கண்தெரி யாக்குருட னென்றறிந்துஞ் சிவந்த
...கமலக் கண்ண னென்றும்
பேசுத லெல்லாம் பொய்யா மொருவனைப்
...பிறங்கரிச் சந்த்ர னென்றும்
பெற்ற தாய்தனக்கு மன்ன மிடான் றன்னைப்
...பெரியதர்ம னென்றும் -- புகழ்ந்தலைந்தது  (போதும்)

3.

அறிவில் லாதபெரு மடையர்தம் அருகினை
...அல்லும் பகலும் நாடி
அன்னை *உமாதாச* னுரைக்கும் பதங்களை
...அவரிடத்திற் பாடி
அறிவரோ வறியா ரோவென் றேமிக
...அஞ்சி மனது வாடி
ஆசை யென்னும்பேய்க் காளா யுலகினில்
...அற்பரைக் கொண் டாடித்-திரிந்தலைந்தது   (போதும்)

(*உமாதாசனென்பது ஆனையென்பவர் முத்திரை.  அதனைத் தாம் இயற்றும் ஒவ்வொரு கீர்த்தனத்திலும் அமைத்துப் பாடுவது அவர் வழக்கம்.)

இந்தப் பாட்டைப் பாடி மேலும் சில தோத்திரங்களைச் செய்துவிட்டு
அவ்வூராரிடத்தில் விடைபெற்று அவ்வித்துவான்கள் இருவரும் தங்கள்
இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.  அதற்குப்பின் தெய்வ சந்நிதானத்திலன்றி வேறொருவரிடமும் அவர்கள் சென்று பாடியதில்லையென்பர்.

(இந்தக் கீர்த்தனத்தையும் வரலாற்றையும் எனக்குச் சொன்னவர்கள் ஸ்ரீ
மகாவைத்திய நாதையரவர்கள்.)

===

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

உ.வே.சா 

வியாழன், 1 பிப்ரவரி, 2018

978. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 4

‘நுந்து கன்று’
உ.வே.சாமிநாதையர்




பிப்ரவரி 1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நினைவு தினம்.

அவருடைய கடைசி நாள்களில் நடந்த ஒரு நிகழ்வை உருக்கத்துடன் உரைக்கிறார் உ.வே.சா.
======

மார்கழி பிறந்தது; அது போய்த் தையும் பிறந்தது; ஒரு வழியும்
பிறக்கவில்லை. ஆசிரியர் நிலை வரவர அதிகமான பயத்திற்குக்
காரணமாயிற்று. தேவாரத்தில் அவர் அப்போது விளக்கிய விஷயங்கள் சில.

ஒருநாள் திருவாசகம் வாசித்து வந்தேன். இலக்கியச் சுவையோடு,
சிவபெருமான் திருவருட் பெருமையை எடுத்துரைத்துக் கேட்போரை
உருகச்செய்யும் பத்திச் சுவையும் நிரம்பியுள்ள அதனை ஆசிரியர் கேட்டு
வரும்போது இடையே கண்ணீர் விடுவார். அந்தத் தெய்விக நூற் செய்யுட்கள் அவர் உள்ளத்தை உருக்கினவென்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

சிவபெருமான் திருவடியை எப்பொழுதும் மறவாத உள்ளத்தினராக இருந்தாலும் அந்நினைவு மற்றச் சமயங்களில் மற்ற நினைவுகளுக்கிடையே தலைமை பெற்று நின்றது. அப்பொழுதோ அந்நினைவையன்றி வேறொன்றும் அவர் உள்ளத்தில்
இடம்பெறவில்லை.

திருவாசகத்தில் திருக்கோத்தும்பியென்னும் பகுதியைப் படித்தேன்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற செய்யுளை வாசித்தேன், ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள்
விளங்கவில்லை. சந்தேகம் கேட்கும் பொருட்டுத் தலை நிமிர்ந்து ஆசிரியரைப் பார்த்தேன். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “நுந்து கன்றாய் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. நாக்குக் குழறியது; தொண்டை அடைத்தது. “வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போல” என்று அந்தக் குழறலோடே சொன்னார். அந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் பெருகியது. தளர்ச்சியால் பேச முடியாமல் இருந்த ஆசிரியர் அந்தப் பாட்டில் உருகிப்போய் அவசமுற்றிருந்தார்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து”

என்ற அடி அவர் உள்ளத்தைப் பிணித்து அன்புணர்ச்சியை
எழுப்பிவிட்டது. மாணிக்கவாசகரது அவ்வாக்கு என் ஆசிரியருடைய நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நோயுற்று மூத்துநின்ற அவருடைய உள்ளக்கருத்தை அந்தச்செய்யுள் தெரிவித்தமையால் அவர் உருகிப் போனார்.

“தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற அடிகளில் மாணிக்கவாசகர் சிவபெருமான் தமக்கு அருளிய
பெருங்கருணைத் திறத்தைப் பாராட்டுகிறார். அவரை ஆண்டு கொண்ட
வண்ணம் தம்மையும் ஆண்டு கொள்வாரோ என்ற ஏக்கமும் ஆசிரியர்
உள்ளத்தே எழுந்தது போலும்! அவர் அப்பொழுது இவ்வுலகில் இருந்தாலும் இந்நினைவுகள் எல்லாம் சேர்ந்து அதனை மறக்கச் செய்துவிட்டன. “இவர் இப்போது நம்மோடு பேசவில்லை. ஆண்டவனோடு பேசுகிறார். இவர் தம் உள்ளமாகிய கோத்தும்பியை மாணிக்கவாசகரைப் போலச் சிவ பெருமான் திருவடி மலரில் ஊதும்படி விட்டிருக்கிறார்” என்ற உண்மையை அப்போது தெளிவாக நான் அறிந்து கொள்ளவில்லை. சிலநேரம் மௌனம் நிலவியது.

அவர் திருவாசகத்தில் ஒன்றி உருகினார்: நான் அவர் நிலைகண்டு
உருகினேன். பின்பு மீண்டும் தொடர்ந்து படிக்கலானேன்.

தொடர்புள்ள பதிவுகள்: 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை 

உ.வே.சா 

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

975. கா. ஸ்ரீ. ஸ்ரீ - 1

பொதிகை மலைச் சாரலிலே
கா.ஸ்ரீ.ஸ்ரீ.

[ நன்றி: தென்றல் ] 

’அசோகா’ இதழில்  1948-இல் வெளியான கட்டுரை இதோ.







[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
கா. ஸ்ரீ. ஸ்ரீ : விக்கிப்பீடியா

கா.ஸ்ரீ.ஸ்ரீ: ‘தென்றல்’ கட்டுரை

பழைய பந்தல் வி.எஸ்.காண்டேகர் ( மொழியாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ. )