இதழியல் துறையில் ‘ஆனந்த விகடன்’ முத்தமிழின் பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தது . சித்திரத் துறையிலும் அப்படியே. ‘காரிகேசர்’ முதல் ‘காமிக்ஸ்’ வரை என்று விகடன் சித்திரங்களைப் பற்றித் தனியாக ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். உதாரணமாக, தமிழ்ப் பத்திரிகை உலகில் வந்த முதல் படக்கதை ”முத்து” எழுதிய “ஜமீந்தார் மகன்” என்கிறது விகடன் 'காலப்பெட்டகம்' நூல்; ஆனந்த விகடனில் தான் அது 1956-இல் வெளியானது. படங்களை வரைந்தவர் “மாயா” என்ற “ ’இன்னொரு’ மகாதேவன்”. ( அப்போது “தேவன்” விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்தார்.) "முத்து” என்ற பெயரில் பல அருமையான சிறுவர் கதைகளை எழுதியவர் விகடன் உதவி ஆசிரியர்களில் ஒருவரான, “கோபு” கோபாலகிருஷ்ணன்.
[ ஓவியர் ‘மாயா’ ஒரு நேர்காணலில் , தான் ”பாலபாரதி” என்ற பத்திரிகையில் ஓவியங்கள் வரைந்த “ வீர சிவாஜி” என்பதுதான் தமிழில் வந்த முதல் படக்கதை என்கிறார். ]
1957-இல் “தேவன்” மறைந்தபிறகு, “தேவனி”ன் “துப்பறியும் சாம்பு” படக்கதை வடிவில் 58 ஏப்ரல் முதல் விகடனில் பவனி வந்தது. கோபுலுவின் கைவண்ணத்தில் படக்கதை மின்னியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய தலைமுறையில் பலருக்கு “ராஜு” என்ற ஓவியர் தான் முதலில் “சாம்பு” வுக்கு உயிரூட்டியவர் என்றே தெரியாது! (அதாவது, என் ”சாம்பு” பதிவுகளையும், ராஜுவின் படங்களையும் பார்க்காதவர்கள்!:-) “சாம்பு” என்றவுடனே அவர்களுக்குக் “கோபுலு”வின் படங்கள் தான் நினைவுக்கு வரும்!
எனக்குத் தெரிந்து “கோபுலு”வின் கைவண்ணத்தில் இந்தப் படக்கதை மீண்டும் ஒருமுறை ஒரு விகடன் பிரசுரத்தில் ஜொலித்தது. எந்த இதழில் தெரியுமா? 1997- முதல் 99- வரை மாலைக் கதிரவனாய் ஒளிவிட்ட ( மாலையில் வெளியான) “ விகடன் பேப்பர்” என்ற நாளேடு! ( ”சுஜாதாட்ஸ்”, “சுப்புடு தர்பார்” போன்ற பிரபலமான பத்திகள் வந்ததும் அதில்தான்!)
படக்கதை என்று தெரிந்து ஒரு கதையை உருவகிப்பது ஒரு வழி; ஏற்கனவே பிரபலமான ஒரு சிறுகதைத் தொடரைப் படக்கதையாக்குவது இன்னொரு, மிகக் கடினமான விஷயம். அதுவும், “தேவ”னின் ஹாஸ்யம் குலுங்கும் சம்பாஷணைகள் நிறைந்த ஒரு கதை வேறு! செய்யுளில் “உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்” என்ற ஒரு வகை என் நினைவுக்கு வருகிறது. செய்யுளின் நடு நடுவே உரைநடை வரும். சிலப்பதிகாரம் ஒரு நல்ல முன்னோடி, எடுத்துக் காட்டு. அப்படித்தான், நம் படக் கதைகளும்! “உரையிடை இட்ட படமுடைக் கதை” !
எனக்கு ஓர் ஆசை! பத்து ஓவியர்களை ஒன்றாய்த் திரட்டி, ஒவ்வொருவருக்கும் அதே ‘சாம்பு’ கதையைக் கொடுத்து, இத்தனை படங்களுக்குள், இத்தனை மணிகளுக்குள் கதையைச் சித்திரிக்கவேண்டும் என்று நிபந்தனை போட்டு, விளைவுகளைப் பார்க்க வேண்டும்..... படக் கதைகள் மேலும் மேலும் வளர பல விதமான யுக்திகள் வெளியாகலாம்! தமிழ் காமிக்ஸ் இன்னும் தவழும் குழந்தையாகத்தானே இருக்கிறது ! மேலும் வளர வேண்டிய கலை அல்லவா?
சரி! ஓர் எடுத்துக் காட்டாகச் “சாம்பு”வின் முதல் கதையைப் பார்க்கலாமா? பிறகு, நீங்களே புரிந்து கொள்ளலாம். இந்தச் சாம்புவைக் காமிக்ஸ் அவதாரத்தில் உலவ விடுவது எவ்வளவு கடினம் என்று? ( இந்தப் படக்கதை ஒரு நூலாக இன்னும் வெளிவரவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்! )
1. ஒரு வேலை போய் ஒரு வேலை வருகிறது!
என்ற முதல் கதை இதோ!
மானேஜர் செய்தார்தி ருட்டு -- சாம்பு
வாசனை மோந்துடைத் தானவர் குட்டு !
ஆனால் கிடைத்ததோ திட்டு! -- துப்(பு)
அறியத் தொடங்கினான் வேலையை விட்டு!
இந்த முதல் கதையில் சாம்புவை வேலையிலிருந்து நீக்கிய அதே முதலாளி --- கதையில், பாங்கி டைரெக்டர் பரமேஸ்வர முதலியார்... பிறகு தனக்கு வந்த ஒரு பிரச்சினையிலிருந்து விடுபட, அப்போது பிரபல துப்பறியும் நிபுணனாகியிருந்த சாம்புவைக் கூப்பிடுவார், தெரியுமா?
அது என்ன ‘கேஸ்’? எந்தக் கதையில் இது நடக்கிறது?
[நன்றி: விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
துப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்
தேவன் படைப்புகள்







