விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 மார்ச், 2016

சித்திர விகடன் - 1

ஓவியத் துறையில் விகடன் ! : சில மைல்கற்கள்   



விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர், திரு வாசனின் பேரன், பா.சீனிவாசன் மற்றும் ஆனந்தவிகடன் ஆசிரியர் ஆர். கண்ணன் ஆகியோர் டொராண்டோவில் அக்டோபர் 12-ஆம் தேதி, 2015  அன்று  பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசனின் சந்திரஹாசம்என்ற கிராபிக் நாவல்  (A Graphic Novel)  ( வரைகலைப் புதினம் ) அறிமுக விழாவில் உரையாற்றினார்கள். 

டொராண்டோவில் உள்ள மார்க்கம் நகரசபையின் சபா மண்டபத்தில் 2015 அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்நூல் அறிமுக விழா இடம்பெற்றது.



[ கலாநிதி நா.சுப்பிரமணியன், பா.சீனிவாசன், பசுபதி ] 

[ ஒரு நினைவுப் பரிசு தருகிறார் பா.சீனிவாசன் ] 
தமிழ் நாட்டில் ஓவியத் துறை வரலாறும், வெகுஜனப் பத்திரிகைகளில் அத்துறையின் வளர்ச்சியும்  ஆழமாக ஆய்வு செய்யப் படவேண்டிய  களங்கள். இத்துறையில் விகடனின் பங்களிப்புகள் பற்றியும் நிறையச் சொல்லலாம். அதனால், இந்த நிகழ்ச்சியில்  நான் ”ஓவியத் துறையில் ஆனந்த விகடனின் பங்களிப்பு” என்ற தலைப்பில் **ஒரு சிறிய உரை**யாற்றினேன். நேர அருமை கருதி, விகடனின் ஓவியப் பயணத்தில் ஒரு சில மைல்கற்களை மட்டும் அப்போது எடுத்துரைத்தேன். 

அப்போது நான் குறிப்பிட்ட சில ‘விகடன்’ ஓவியர்கள்:  ( இவர்களைப் பற்றி விவரமாக எழுத வேண்டும். பார்க்கலாம்! ) 





..மாலி ---
 



. . . சில்பி . . . 




. . . கோபுலு . . .


**அந்த 9 நிமிஷ உரையின் காணொளிக் காட்சி இதோ: 
[ நன்றி: விகடன், அகில் சாம்பசிவம் ] 







மேலும் சில படங்கள்:





[  படங்களுக்கு நன்றி: திருச்செல்வம்,  அகில் சாம்பசிவம் ]  

சனி, 23 ஜனவரி, 2016

சங்கீத சங்கதிகள் - 67

அய்யங்காரின் பிளேட் 
‘கல்கி’  




ஜனவரி 23. அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் நினைவு தினம்.

அந்த நினைவில் ‘கல்கி’ விகடனில் அய்யங்காரின் இசைத்தட்டைப் பற்றி ( 30 -களில் ) எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை இங்கிடுகிறேன்.
=====

தென்னிந்தியாவிலுள்ள தற் கால வித்வான்களில் சிலர் இசைத்தட்டுகளின் மூலம் தங்கள் புகழைப் பெருக்கிக் கொண்டார்கள். வேறு சிலரோ, இசைத்தட்டுக் கொடுத்த பின்னர், தங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயரையும் இழந்து விட்டார்கள். இன்னும் சிலருடைய கீர்த்தி இசைத்தட்டுகளினால் அதிகமும் ஆகவில்லை; குறைவு படவுமில்லை.

அரியக்குடி இராமனுஜ அய்யங்கார் இவற்றுள் மூன்றாவது கோஷ்டியைச் சேர்ந்தவர். அவர் கிராமபோன் பிளேட் கொடுப்பதற்கு முன்னாலேயே சங்கீத உலகில் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துவிட்டார். அதற்கு மேல் உயர்வதற்கு இடமேயிருக்கவில்லை. ஏறக்குறைய பதினைந்து வருஷ காலமாக அவருடைய புகழ் மங்காமல் இருந்து வருகிறது. அந்தப் புகழை அவருடைய இசைத்தட்டுகள் அதிகமாக்கவுமில்லை; குறைவு படுத்தவுமில்லை. ஆனால் நிலைபெறுத்தி யிருக்கின்றன.

[ ஓவியம்: மாலி ]

அரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் சென்ற பதினைந்து வருஷத்தில் அநேக தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால் சங்கீதத்தில் மட்டும் அய்யங்காரின் தலைமை இன்னும் நீடித்திருப்பதின் இரகசியம் என்ன? பண்டிதர்கள், பாமரர்கள் எல்லாரையும் ரஞ்சிப்பிக்கக்கூடிய சில அம்சங்கள் அய்யங்காரின் பாட்டில் அமைந்திருப்பதுதான்.

அய்யங்காருக்கு முந்திய காலத்தில் சங்கீதக் கச்சேரிகளுக்கு வந்து ரஸித்தவர்கள் பெர்ம்பாலும் அந்த வித்தையின் நுட்பங்களை அறிந்த சிலரேயாவர். மற்ற சாதாரண ஜனங்கள் சங்கீதம் அநுபவிப்பதற்கு நாடக மேடையை நாடி வந்தார்கள். சங்கீத நுட்பங்களை அறியாத சாதாரண ஜனங்களும் ரஸித்து அனுபவிக்கும்படியாகக் கச்சேரி பந்தாவை அமைத்தவர் அய்யங்கார் என்றே சொல்லவேண்டும். சின்னச் சின்னக் கீர்த்தனைகளாக உருப்படிகள் அதிகமாகப் பாட ஆரம்பித்தவர் அவரே. கச்சேரியில், வித்தைத் திறமையே பிரதான அம்சமாகவுடைய பகுதிக்குக் காலத்தைக் குறைத்து, எல்லாரும் அநுபவிக்கக் கூடிய பகுதியை அவர் நீட்டிவிட்டார். கச்சேரியின் கடைசியில், துக்கடாக்கள்  அதிகமாகப் பாடினார். கீர்த்தனைகளையும், ராகங்களையும் ஒரே சிட்டையாகப் பாடிவந்தபடியால், கொஞ்சநஞ்சம் சங்கீத ஞானமுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கினார்கள். ஏகலைவன் துரோணாச்சாரியாரிடம் சிஷ்யனாயிருந்தது போல், அவருடைய கச்சேரிகளைக் கேட்பதின் மூலமாகவே அவருக்கு ஆயிரக் கணக்கான சிஷ்யர்கள் ஏற்பட்டனர்.

சங்கீத வித்தையில் ஆழ்ந்த தேர்ச்சியில்லாதவர் யாராவது இப்படிப்பட்ட புரட்சி செய்ய முயற்சித்திருந்தால் பண்டிதர்கள் சண்டைக்கு வந்திருப்பார்கள். “போச்சு! குடிமுழுகிப் போச்சு! “ என்பார்கள். ஆனால் அய்யங்காரிடம் அவர்கள் ஜபம் ஒன்றும் சாயவில்லை  

தென்னாட்டில் நமது காலத்தில் உயர்ந்த சங்கீத ஞானம் விஸ்தாரமாகப் பரவுவதற்குக் காரண புருஷர்களாயிருந்தவர்களில் தலை சிறந்தவர் யார் என்று கேட்டால், ‘அய்யங்கார் தான்’ என்று திட்டமாகச் சொல்லலாம்.

ஆனால், கச்சேரிகளில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் ஒருவரிடம் இருந்தாலும், இசைத் தட்டுகளில் அவர் பாட்டு சோபிக்காமல் போகலாம். இசைத்தட்டில் வெற்றி பெறுவதற்குச் சில தனி அம்சங்கள் இருக்கவேண்டும். முக்கியமானது சாரீரம். கச்சேரிகளில் வெகு நன்றாய்ச் சோபிக்கும் சாரீரம் சில சமயம் பிளேட்டில் சுகப்படுவதில்லை. அடுத்தபடியாக, உச்சரிப்பு. கசேரிகளில் பாடகர் சில சமயம் வார்த்தைகளை விழுங்கிவிட்டால் நாம் அதைப் பிரமாதப் படுத்துவதில்லை.பக்க வாத்தியங்களின் முழக்கம், குழந்தைகளின் அழுகைச் சத்தம் இவைகளுக்கிடையே  அநேகமாய்ப் பாட்டின் வார்த்தைகள் தான் நம் காதில் விழுவதேயில்லையே? சங்கீதக் கச்சேரியில் ஸ்வரங்கள் ஆகட்டும், வார்த்தைகள் ஆகட்டும்  காதில் விழாத இடங்களில் எல்லாம், நம்முடைய மனோ பாவத்தினால்   இட்டு நிரப்பிக் கொள்ள நாம் தயாராயிருக்கிறோம்.

ஆனால் இசைத் தட்டுகளில் அப்படியில்லை. எந்தப் பிளேட்டில்  வார்த்தைகளும் ஸ்வரங்களும் சுத்தமாய்க் காதில் விழுந்து, அந்தப் பிளேட்டிலிருந்தே பாட்டைக் கற்றுக் கொள்ளும்படியிருக்கிறதோ அத்தகைய பிளேட்டுகளைத்தான் ஜனங்கள் விரும்பி வாங்குவார்கள்.

மேலும், சாரீரத்திலும் ஸாஹித்யத்திலும் உள்ள குறைபாடுகள் எல்லாம் கச்சேரியில் பாடும்போதை விடப் பிளேட்டில் நன்றாக எடுத்துக் காட்டப்படுகின்றன. உதாரணமாக, அய்யங்காரிடம் எத்தனையோ தடவை

“ சிதம்பரம் என மனங்கனிந்திட” 

என்னும் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அதில் விரஸம் ஒன்றும் புலப்பட்டதில்லை.பிளேட்டில் அதே பாட்டைப் பாடுகையில்,

அடைக்கலமென் -றடியேன் உனை நம்பி
அலறுவதும் செவி புகவிலையோ - அடிமை” 

என்னும் அநுபல்லவியில் ( ** )  “றடியேன்”  என்று அய்யங்கார் இரண்டு தடவை சொல்லுபோது கஷ்டமாய்த்தானிருக்கிறது.

இந்த இடத்தை ஒரு விதிவிலக்கு என்றே சொல்லலாம். பொதுவாக அய்யங்காரின் சங்கீதம் இந்த இசைத்தட்டு சோதனையில் வெற்றியடைந்திருக்கிறது. அவருடைய கச்சேரிகளில் நாம் அநுபவிக்கும் நல்ல அம்சங்களையெல்லாம் அவருடைய பிளேட்டுகளில் காண்கிறோம். உண்மையில், அய்யங்காரின் உயர்த்ரக் கச்சேரி ஒன்றை ராகம் பல்லவி மட்டும் இல்லாமல் கேட்க விரும்பினோமானால், அவருடைய பிளேட் ஸெட் ஒன்றை வாங்கிக் கொண்டால் போதும். தெலுங்கிலும், தமிழிலும், அவர் வழக்கமாகப் பாடும் சிறந்த கீர்த்தனங்களும், ஜாவளி, ஹிந்துஸ்தானி, துக்கடாக்களும் அவருடைய பிளேட்டுகளில் அடங்கியிருக்கின்றன.

பின்வரும் ஒன்பது பிளேட்டுகள், கிராமபோன் வைத்திருக்கும்  சங்கீத ரஸிகர்  ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டுமென்று நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

A.122 எடு நம்மினா ஸாவேரி 
        கமலாம்பாம் பஜரே  கல்யாணி
A.120 பரிதான மிச்சிதே   பிலஹரி
A.124 பரம பாவன ராம பூரி கல்யாணி 
A.109 கார்த்திகேய காங்கேய  தோடி
A.114 அலகலல்ல  மத்யமாவதி 
        அனுபமகுணாம்புதி  அடாணா 
A.111  சிதம்பரம்  என கல்யாணி 
        கடைக்கண் நோக்கி தோடி 
A.107  ராட்டினமே காந்தி       காபி
A.119  அவனன்றி ஓரணுவும்  ராகமாலிகை 
A.126 வைஷ்ணவ ஜனதோ   ஸிந்துபைரவி  

மேற்சொன்ன பிளேட்டுகளில் சில நன்றாயிருக்கின்றன. சில ரொம்ப நன்றாயிருக்கின்றன. “அசாத்தியமாய் நன்றாயிருக்கிறது” என்று சொல்லக் கூடிய அய்யங்காரின் பிளேட் இனித்தான் வெளியாகவேண்டும் , கூடிய சீக்கிரம் வெளியாகுமென்று எதிர்பார்க்கிறேன்.

மேற் குறிப்பிட்ட இசைத்தட்டுகளில் ஒன்று மட்டும் அய்யங்காரின் புகழ் என்றைக்கும் அழியாமல் இருக்கச் செய்யக் கூடியதாகும். அதுதான் “வைஷ்ணவ ஜனதோ”  என்ற பாட்டு. மகாத்மா காந்தியின் மனதுக்கு உகந்த கீதம் என்பதாக, தேசத் தொண்டர்களால் தேசிய பஜனைகளில் அடிக்கடி அது பாடப்படுவதுண்டு. அநேகமாக அபஸ்வர களஞ்சியமாய்த்தான் இருக்கும். அந்த கீதத்தை சங்கீத மேன்மை பொருந்தியதாகச் செய்து வெகு அழகாய்ப் பாடியிருக்கிறார் அய்யங்கார். முதலில் ஆலாபனமே மிக நன்றாயமைந்திருக்கிறது. பிறகு பல கண்ணிகள் அமைந்த அந்தப் பாட்டைக் கேட்பவர்களுக்குத் துளிக்கூட அலுப்புத் தோன்றா வண்ணம் வித விதமான வேலைப்பாடுகளுடன் பாடியிருக்கிறார். மகாத்மாவுக்குப் பிரியமான பாட்டு, ஒருவருடைய சங்கீதக் காதுக்கும் பிரியமளிப்பது என்றால் வேறு என்ன வேண்டும்?  ஆகவே, அய்யங்காரின் இசைத் தட்டுகளுக்குள்  “வைஷ்ணவ ஜனதோ “ வுக்குத்தான், இப்போதைக்கு, நான் முதன்மை ஸ்தானம் அளித்திருக்கிறேன்.

[ நன்றி : ஆனந்தவிகடன் ; கல்கி களஞ்சியம் ( வானதி ) ]

பி.கு.
( ** )  ஒரு நண்பர் குறிப்பிட்டபடி, இந்த அனுபல்லவி  “ கடைக்கண் நோக்கி” என்ற பாடலில் உள்ளது. ( “ சிதம்பரம் “ என்ற பாட்டில் அல்ல.)

தொடர்புள்ள பதிவுகள் 

அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி! 

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

செவ்வாய், 10 மார்ச், 2015

எஸ். எஸ். வாசன் - 2

விகடனின் மழலைப் பருவம்! 


மார்ச், 10, 1903எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள். 

அவர் நினைவில் ஆனந்த விகடனின் தொடக்க கால இதழ்களிலிருந்து சில துளிகளை இங்கிடுகிறேன்.  
1926- பிப்ரவரியில் பூதூர் வைத்தியநாதய்யர் என்ற தமிழ்ப் புல்வர் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையைத் துவக்குகிறார்.    மாதம் ஒரு முறை வருகிறது விகடன். ஆண்டுச் சந்தா இரண்டு ரூபாய். 
விகடனின் முதல் இதழின் முதல் பக்கம் இதோ:

( விகட விநாயகர் துதி கந்தபுராணத்தின்  காப்புச் செய்யுள் ) 

அந்த வருடம் விகடனில் வந்த ஒரு “விகட சம்பாஷணை”:
=================

முத்தண்ணா: அப்பா சுப்பண்ணா, ஊரில் என்ன விசேஷம்?

சுப்பண்ணா: ஓர் ஆச்சரியம் உண்டு. அதாவது, இறந்துபோனவர்கள் மறுபடி திரும்பி வருகிறார்கள்.

முத்தண்ணா: எப்போ! எப்போ!! எங்கே?

சுப்பண்ணா: ஓட் போடும் போலிங் ஸ்டேஷனில்தான் 
==================
.  அந்தக் காலத்தில் பலரும் வி.பி.பி. முறையில் பத்திரிகையை அனுப்பச் சொல்வர். ஆனால், வி.பி.பி. வந்ததும், பலர் மனம் மாறி, இரண்டு ரூபாய் தராமல் விகடனைத் திரும்பி அனுப்பி விடுவார்கள். அப்படிச் செய்பவர்களை ஏசி, ‘விகடகவி’ வைத்தியநாதய்யர் ஏதாவது எழுதுவார். காட்டாக, 1926- நவம்பர் இதழில் ஓர் ஔவையார் பாட்டின் பகடி:
கொடியது கேட்கின் கூறுவேன் கேளீர்
கொடிது கொடிது கூத்தி கொடிது
அதனிலுங் கொடிது அற்பர்கள் நேயம்
அதனிலும் கொடிது அருந்துதல் மதுவை
அதனிலும் கொடிது அன்பிலார் நேயம்
அதனிலும் கொடிது ஆனந்த விகடனை
அனுப்பச் சொல்லி அன்றே திருப்புதல்! 

நிதிப் பிரச்சினையால் 1927- டிசம்பர் விகடன் இதழ் வெளிவரவில்லை!
1928-ஜனவரியில் விகடனைத் தனக்கு விற்றுவிடும்படி கேட்டுக்கொள்கிறார் வாசன் ( டி.எஸ்.சீனிவாசன்) . அப்போது வாசன் பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கித் தரும் வேலையில் இருந்தார். பத்திரிகையின் வியாபார விஷயங்களை ‘ஆனந்த போதினி’ அதிபர் முனுசாமி முதலியாரிடமும், எழுத்துத் தொடர்புள்ள விஷயங்களைப் பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பரிடமும் வாசன் அறிந்து வைத்திருந்தார்.

1928-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில். பூதூர் வைத்தியநாதய்யரிடமிருந்து ஆசிரியர் வாசன்  கைக்கு ஆனந்த விகடன் பத்திரிகை மாறுகிறது,  அப்போது முக்கியமாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனந்த விகடன் தலைப்பு கீழே உள்ளது போல் அலங்கார எழுத்துக்களோடு, இடையில் பாரத மாதாவின் உருவம் தாங்கி வரத் தொடங்கியது. 



முன்பு தலைப்பில் இருந்த 'குலை - காய்' என்பவை  'மாலை - மணி' என்று மாற்றப்பட்டன. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்னும் தாயுமானவரின் ’பராபரக் கண்ணி’ வரிகள் விகடனின் குறிக்கோளாகியது. ( 1980-இல் நடந்த விகடனின் பொன்விழாவில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இப்பாடலின் சில கண்ணிகளைப் பாடினார் என்பது என் நினைவு.) 
1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்ட முதல் வணிக விளம்பரம் ஆசிரியர் வாசனுடையதுதான்! ” இல்வாழ்க்கையின் ரகசியங்கள்” என்ற புத்தகத்தின் விளம்பரம் தான் அது! 
விகடனுக்கென ஓர் அச்சகமும் தொடங்குகிறார் வாசன். 48-இலிருந்து 64-பக்கங்களாகிறது விகடன். ஆண்டு சந்தா ரூபாய் இரண்டை ஒன்றாய்க்   குறைக்கிறார் வாசன்.
‘விகடன் சம்பாஷணைகள்’ என்ற தலைப்பில் அதுவரை வந்துகொண்டிருந்த துணுக்குகள் ‘ விகடன் பேச்சு’ என்ற தலைப்பில் வரத் தொடங்கின. இதோ ஒரு காட்டு:
==========
ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட வந்தவர்:| என்ன ஐயா, இந்தப் பாயசத்தில் ஈ விழுந்திருக்கிறதே!
ஹோட்டல்காரன்:| அதனால் என்ன குறைந்து போய்விட்டது? இந்த சிறிய ஈ எவ்வளவு பாயசத்தைக் குடித்திருக்க முடியும்?
=====

 'இந்திர குமாரி' என்னும் தொடர்கதை 1930 பிப்ரவரி இதழில் தொடங்குகிறது. இதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். ஆனால், அப்போது பெயர் குறிப்பிடப்படவில்லை. கதைகளுக்குப் படங்களும் இல்லை.
________________________________________
 இந்திரகுமாரி
1-வது அத்தியாயம்
 மாய மனிதன்
அந்த மின்சார மாயவன் சிவாஜியைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்னும் விஷயம் தென்னாடெங்கும் ஆச்சரியம், அச்சம், அவமானம், ஆர்ப்பாட்டம் முதலியனவை யுண்டாக்கித் திரள்திரளாகக்கூடும் ஜனங்களுக்குப் பிரமையைக் கொடுத்தது. மகாத் தந்திரமும், அதிகூரிய புத்தியுடைய அந்த தைரியசாலி சிவாஜியின் செயல்களைக் கண்டும் கேட்டும் ஜனங்கள் மயிர்க்கூச்சலெறிந்தனர். சிலர் அவனது ஆழ்ந்த புத்திக்காகப் பெருமை பேசினர்; சிலர் அவன் மனிதனோ அல்லது தெய்வலோகத்திலிருந்து குதித்திறங்கிய இந்திர ஜாலனோவென்று சந்தேகப்பட்டுக் கிசுகிசுவென்று பேசிக் கொண்டனர்; இன்னுஞ்சிலர் அவன் சுயநலங் கருதியே தனது அதி சாமர்த்தியத்தைக் காண்பிக்கிறானென்று 'சூ' கொட்டிப்பேசினர்; பலர் இதை ஆமோதித்தனர்; ஆனால் பெரியோரும் புத்திசாலிகளும் அல்லவென்றார்ப்பரித்தனர்  ...
[ நன்றி : விகடன் ’காலப்பெட்டகம்’, விகடன் பவழவிழா மலர், “பொன்னியின் புதல்வர்” (சுந்தா) ] 
தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 15 டிசம்பர், 2014

ஸர்தார் வல்லபாய் படேல்

சுதந்திர இதிகாசத்தில் ஒரு கதை 


டிசம்பர் 15, 1950. 
ஸர்தார் வல்லபாய் படேல் மறைந்த தினம்.


 ‘ஆனந்த விகடன்’ அடுத்த இதழில் வெளியிட்ட கட்டுரை இதோ!









[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
ஸர்தார் வல்லபாய் படேல்

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

சுதந்திர ’ விகடன்’

15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம்.



“ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம்.

17.8.1947 இதழ் விகடனில் அட்டைப்படத்தில் தொடங்கி தலையங்கம்
கட்டுரைகள், பாரதியார் பாடல், கொத்தமங்கலம் சுப்பு பாடல், ராஜுவின் முழுப்பக்க ஜோக், உபயகுசலோபரி, திண்ணைப் பேச்சு, நிருபர் டயரி என எல்லாவற்றிலும் சுதந்திர மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது “ 

என்கிறது விகடனின் “ காலப் பெட்டகம்” நூல். 

இதழில் வந்த சில படங்கள்.







மேலும் ரேடியோவில் அன்று நடந்த விசேஷ நிகழ்ச்சிகளை விவரிக்கிறது அந்த “விகட”னில் வந்த ”ரேடியோ எப்படி?” கட்டுரை.


 அதிலிருந்து சில பகுதிகள்:

“ என்ன அமர்க்களம்! என்ன அமர்க்களம்! அடேயப்பா! ரேடியோ சரித்திரத்திலேயே இது வரையில் இம்மாதிரி கொண் டாட்டம் நடைபெற்றதில்லை" என்று சொல்லும்படி அவ்வளவு பிரமாதமாக இருந்தது, ரேடியோவில் சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்!

எந்த ரேடியோவில் மகாத்மா காந்தி அவர்களை, 'மகாத்மா காந்தி' என்று அழைக்க பயந்து 'மிஸ்டர் காந்தி' என்று அழைத்து வந்தார்களோ அதே ரேடியோவில் 'மகாத்மா... மகாத்மா...' என்று அநேக தடவைகள் வாயாரச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார்கள். எந்த ரேடியோவில் 'வந்தே மாதரம்' என்று வாக்கியத்தைச் சொல்ல இதுவரையில் அஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அதே ரேடியோவில் 'வந்தே மாதரம்' என்று கணக்கற்ற தடவைகள் கோஷமிட்டார்கள். எந்த ரேடி யோக்காரர்கள் பாரதியாரின் தேசிய கீதங்களைப் பாடக் கூடாது என்று தடை செய்து வந்தார்களோ, அதே ரேடியோக்காரர்கள் பாரதியாரின் தேசிய கீதங்களை நிமிஷத்துக்கு ஒரு தடவை பாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்! நிகழ்ச்சிகளைக் கேட்டவர்களுக்கு, 'இதெல்லாம் கனவா? அல்லது நனவேதானா?' என்றே சந்தேகம் தோன்றியிருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பேச்சிலும், ஒவ்வொரு பாட்டிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அப்படி தேசிய மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.


சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் நடைபெற்ற இரண்டொரு நிகழ்ச்சிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

ஆகஸ்டு 14-ம் தேதி இரவு 12 மணி சுமாருக்கு, அதாவது தேசம் சுதந்திரம் அடையவிருந்த அத்தறுவாயில், "விடுதலை!" என்று பாரதியாரின் கீதத்தை ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள் பாடினார். உணர்ச்சி மிகுந்த அந்தப் பாட்டைக் கேட்டவர்களுக்கு நிச்சயமாக மயிர்க் கூச்சல் உண்டாகியிருக்கும்! அந்த இரவையும், அந்த சுதந்திர கீதத்தையும் ஒரு நாளும் நம்மால் மறக்க முடி யாது! ஸ்ரீமதிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி, என்.ஸி.வசந்தகோகிலம் இவர்கள் பாடிய தேசிய கீதங்களும் கேட்போரைப் பரவசப்படுத்துவதாக இருந்தன. ஸ்ரீ என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீமதி டி.ஏ.மதுரம் ஆகியவர்கள் நடத்திய 'அறுபது வருஷப் பயிர்' என்ற நிகழ்ச்சியில் தேசம் சுதந்திரம் அடைந்த விதமும் அதற்குப் பொறுப்பாளிகளாக இருந்த தியாகிகளின் விவரங்களும் எடுத்துச் சொல்லப்பட்டன. 
[ நன்றி; விகடன் ] 

சிறுவர்களுக்கென்று தயாரிக்கப் பட்ட ஒரு விசேஷ நிகழ்ச்சியில், பண்டித ஜவஹர்லால் நேருவின் சரித்திரத்தை ஸ்ரீ கொத்தமங்கலம் சுப்பு உருக்கமாகச் சொன்னார். “

சென்னையில் அன்று நடந்த சுதந்திர தின விழாக்களைப் பற்றி விகடன் உதவி ஆசிரியர் “கோபு” ( எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன் ) 24 ஆகஸ்ட் இதழில் எழுதிய கட்டுரையையும் இங்குப் படிக்கலாம்.

சுதந்திர விஜயம்
“கோபு” 

அந்த வேளையில் தேனாம்பேட்டை ஆலயங்கள் எல்லாவற்றிலும் இருந்து நாகஸ்வரம் கம்பீரமாய் எழுந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ரேடியோ முழக்கம் செய்துகொண்டு இருந்தது. விடுதலை கீதம் வானைக் கிழித்துக் கொண்டு சென்றது. இந்திய சுதந்திர விழாவைப் பார்ப்பதற்காக சூரியனும் அந்த நிசி வேளையில் கண் விழித்துக் கொண்டு சென்னைக்கு விஜயம் செய்துவிட்டானோ என்று அதிசயிக்கும்படி சென்னை மாநகரம் அப்போது ஜெகஜ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருந்தது.

சிற்சில இடங்களில் ஜனங்கள் தங்கள் வீட்டு அலங்காரத்தையும் தெரு அலங்காரத்தையும் மேலும் மேலும் மெருகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டே ஜார்ஜ் டவுனுக்குச் சென்றேன். அங்கு ஜனங்கள் கூட்டம் கூட்டமாக சமுத்திரக் கரையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் ஆசாமியை நிறுத்தி, “ எங்கே எல்லாரும் போகிறீர்கள்” என்று கேட்டேன். ‘ கோட்டையைப் பிடிக்க “ என்று சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே அந்த ஆசாமி போனார். “நாமுந்தான் அந்தக் கோட்டையைப் பிடிக்கலாமே!” என்று அவரைப் பின்தொடர்ந்தேன்.


கோட்டையில் இருந்து புறப்பட்டதும் நேராக வீடு திரும்ப எனக்கு மனம் வரவில்லை. சென்னையை இன்று அலசிப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று தீர்மானித்துக் கொண்டு பீச் ரோடில் நடந்தேன். “இரவோடு இரவாக எத்தனை கொடிகள் முளைத்திருக்கின்றன !’ என்று ஆச்சரியப்படும்படி சர்க்கார் மாளிகைகள், கட்டடங்கள் எல்லாவற்றிலும் கணக்கு வழக்கின்றி மூவர்ணக் கொடிகள் பறந்துகொண்டு இருந்தன.

சென்னையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் பிரதான சின்னமாக விளங்கிய செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்தபோதுதான் எனக்குக் கோட்டையைப் பிடிக்கும். மர்மம் புரிந்தது. ஜனங்கள் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற கோட்டையில் கொடியேற்ற விழாவைக் கண்டு களிக்கத்தான் அப்படிக் கூட்டம் கூட்டமாகப் போய் இருக்கிறார்கள். கோட்டை எல்லையில் காலை வைக்கக்கூட அஞ்சிய சென்னை வாசிகள், இன்று கோட்டையைப் பிடித்துவிட்டார்கள். கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் ஜனத் திரள் சூழ்ந்திருந்தது. இரவு முழுவதும் காத்துக்கிடந்த கூட்டத்தினர் சூரியோதயத்தின்போது கோட்டை கொடி மரத்தில் மூவர்ணக் கொடி ஜிலுஜிலு என்று பறப்பதைப் பார்த்து மனம் மகிழ்ந்தார்கள் அவர்களிடையே ஒரு நீண்ட பெருமூச்சும் ஏற்பட்டது. "அப்பா இப்போதுதான் மனம் நிம்மதியாயிற்று. வெள்ளைக்காரர்கள் உண்மையிலேயேதான் நமக்குச் சுதந்திரம் வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தில் சூது வாது ஒன்றும் இல்லை" என்று திருப்தியோடு கோட்டையை விட்டுத் திரும்பினார்கள். "இனி மேல் கோட்டையைக் கோட்டை விட மாட்டோம்" என்ற உறுதியும் அவர்களுக்கு அப்போது ஏற்பட்டு இருக்க வேண்டும் 

"கட்டடங்களையே பார்த்துக்கொண்டு போகிறீர்களே! நானும் இன்று மாறுதலோடு நிற்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று போட்டியிடுவதுபோல் பீச் ரோடில் தன்னந் தனியே நின்றுகொண்டு இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவச் சிலை என் கவனத்தைக் கவர்ந்தது. கிட்டத்தில் போய்ப் பார்த்தபோது, அந்த மன்னரின் கரங்களில் ஒன்று இந்திய தேசிய மூவர்ணக் கொடியை அழகாகத் தாங்கிக் கொண்டு இருந்தது. இதைச் செய்தவரின் ரசிகத் தன்மையைப் பாராட்டிவிட்டு, கலா சாலை கட்டடங்களைப் பார்க்கச் சென்றேன்.

இந்தியக் கலாசாரப் பண்புகளை இது வரை பிரிட்டிஷ் ஆதிக்க போர்வை கொண்டு போர்த்தி மறைத்துவைத்திருந்த அந்தக் கட்டடங்கள் இதோ சுதந்திர இந்தியாவுக்கு சேவை புரியத் தயாராகிவிட்டோம்: என்று பறைசாற்றுபவைபோல் காலைக் கதிரவனின் செங்கிரணங் களை, மூவர்ணக் கொடியைத் தாங்கியவண்ணம், வரவேற்றுக்கொண்டு இருந்தன.

சென்னையில், திருவல்லிக்கேணியும் ஆயிரம் விளக்கும் தனி முக்கியத்துவம் பெற்றிருக்கும் இடங்கள். ஏனெனில், முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அதிகமாகக் கலந்து வாழும் இடங்கள் அவை, அங்கே சென்று முஸ்லிம் சிறுவர்கள், பெரியவர்கள் எல்லாரும் இந்திய மூவர்ணக் கொடியைச் சட்டைகளில் குத்திக்கொண்டு வெகு உற்சாகமாகத் தெருவில் நடமாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் எந்த விதமான இடையூறும் இன்றி சுதந்திர விழா சென்னையில் நடந்தேறிவிடும் என்ற தைரியம் எனக்கு ஏற்பட்டது.

அடுத்தபடியாக மயிலாப்பூரை அடைந்தேன். வியாழக்கிழமை இரவிலேயே சுதந்திரம் பெரிய அதிர்ச்சியோடு மயிலாப்பூருக்கு விஜயம் செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். திடும் திடும் என்று அதிர்வேட்டுகள் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டு ஊரறிய அடிமை அரக்கனை விரட்டியதாகச் சொல்லிக்கொண்டார்கள். மயிலாப்பூர்_பெரிய மனிதர்களின் பெரிய பங்களாக்களில் மூவர்ணக் கொடிகள் பெருந் தன்மையோடும் கம்பீரத்தோடும் பறந்து காட்சி அளித்தன.

கார்ப்பரேஷன் கட்டடத்தை நெருங்கிப் பார்த்தபோது, “ பலே! அழகுக்கு அழகு செய்து இருக்கிறார்கள்!" என்று வியந்துகொண்டு குழுமி இருந்த ஜனத்திரளோடு கலந்துகொண்டேன். அப்போது திடீர் என்று எழுந்த கரகோஷம் காரணமாக அண்ணாந்து பார்த்தேன். பிரதமர் ஓமந்துர் ரெட்டியார் பக்தி சிரத்தையோடு கொடியேற்றி வைத்தார். மேயர் குதூகலத்தோடு குதித்துப் பேசினார்.

இப்படி சர்க்கார் மாளிகைகளிலும் காரியாலயங்களிலும், தேசியக் கொடி பறந்ததுதான் மக்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கியிருந்தது. வெற்றி வீரர்களைப்போல ஜனங்கள் சர்க்கார் கட்டடங்களை நிமிர்ந்து பார்த்தவண்ணம் சென்றார்கள். சில இடங்களில் அவர்கள் மகிழ்ச்சி அசுர உற்சாகமாகவும் மாறிவிட்டிருந்தது. கோட்டையைப் பிடித்த ஜனங்கள் அங்கே தங்கள் மனம் போனபடி எல்லாம் நடந்துகொண்டு இருந்தார்கள். மந்திரிகளின் அந்தரங்க ஆபீஸ் அறைகளில் புகுந்து தஸ்தாவேஜ்களைக் கிழித்து விளையாடிவிட்டார்கள் ஜனப் பிரதிநிதிகள். சர்க்கார் ஆட்சி நாட்டில் நிலைத்து விட்டது, இனிமேலும் பொதுமக்கள் கட்டுப்பாடு இல்லாமல் இப்படி எல்லாம் பழகிக்கொண்டார்களானால் சுதந்திரத்தின் பலனை அவர்கள் அடைவதில் கட்டாயம் தாமதம் ஏற்படத்தான் செய்யும்.

மாலை இரண்டு மணியில் இருந்தே கோட்டை மைதானம் திமிலோகப்பட்டது. நகரின் எல்லா பாகங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து குழுமியவண்ணம் இருந்தார்கள். சென்னை சர்க்காரின் பிரதிநிதியாக கவர்னர் ஸர் ஆர்ச்சிபால்ட் துரை, மன்றோ உருவச் சிலையின் முன்பு தேசியக் கொடியை ஏற்றிவைத்து வணங்கும் வைபவம் அது என்று அறிந்தேன். அப்புறம், கோட்டை மைதானம் பொங்கி வழிந்ததிலும், உற்சாகிகள் பலர் மரக் கிளைகளில் தொத்திக்கொண்டும் மின்சார விளக்குக் கம்பங்களில் வெளவால்போல் தொங்கிக்கொண்டு இருந்ததிலும் எனக்கு ஆச்சர்யமே இல்லை. இந்த உயர்ந்த நிலையை அடைந்ததாலோ என்னவோ இவர்களில் சிலருடைய சேஷ்டைகள் அன்று விரும்பத் தகாதவையாகக் கூட இருந்தனவாம்.

குறிப்பிட்ட நேரத்துக்கு கவர்னர் விஜயம் செய்துவிட்டார். ஆனால், பிரதம மந்திரி ஓமந்தூர் ரெட்டியார் அவர்கள் வந்து சேரவில்லை. கூட்டத்தினரும் கவர்னரும் சிறிது நேரம் சுற்று முற்றும் கவலையோடு பார்த்துக்கொண்டு இருந்தபோது, "போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விட்டதால் கூட்டத்தை நெருக்கிக்கொண்டு உள்ளே வரத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. மன்னிக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே பிரதம மந்திரி பாய்ந்து வந்து கவர்னர் துரையின் கை குலுக்கினார்.

குறிப்பிட்ட நேரத்தில் விழாவை நடத்தத் தவறிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதுபோல் கவர்னர் ஏற்றிவைத்த அந்தக் கொடி சற்று மக்கர் செய்துகொண்டுதான் மேலே சென்றது. ஜனங்களும் கிட்டத்தில் கூடியிருந்த பிரமுகர்களும், இதை முன்கூட்டியே சரி பார்த்து வைத்துக்கொள்ளக் கூடாதா? என்று எண்ணி பதைபதைத்துப் போனார்கள். பரபரப்பு அடங்குவதற்கு முன் அந்தக் கொடி கம்பத்தின் மேலே சென்று கம்பீரமாகப் பறந்து காட்சிஅளித்தது. சர்க்கார் மேற்படி வைபவத்துக்குச் செய்திருந்த ஏற்பாடுகளும் சபாஷ் என்று சொல்லக்கூடியவையாக அமையவில்லை. பத்திரிகைப் பிரதிநிதிகளுக்குச் சரியான இடம் கொடுத்திருந்தார்களானால் அவர்களாவது சரியாகப் பார்க்க முடியாத ஜனங்களுக்கு மேற்படி வைபவத்தைப் பற்றி சாங்கோபாங்கமாக எழுதி, பளிச் பளிச் என்று போட்டோக்களையும் பிரசுரித்திருப்பார்கள்.

கோட்டை மைதானத்தில் இருந்து புறப்பட்டபோது நன்றாக இருட்டிவிட்டது. நகரின் தீபாலங்காரத்தைப் பார்க்கச் செளகரியமாஇருந்தது. ஜெனரல் ஆஸ்பத்திரியில் கண்ணைப் பறிக்கும் விளக்குகளைப் போட்டு, அதைப் பிரமாண்டமானதொரு பொம்மைபோல் தோற்றம் அளிக்கும்படி செய்திருந்தார்கள். எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் ஒளிர்ந்தது. பக்கத்தில் ரிப்பன் கட்டடம், பஞ்சவர்ணங்களை வாரி விசிக்கொண்டு இருந்தது. நான் மட்டும் சளைத்துவிட்டேனா என்று கேட்பதுபோல் தூரத்தில் எழும்பூர் ஸ்டேஷன் பிரகாசித்தது.

நன்றாக இருட்டிய பிறகுதான் கொண்டாட்டம் பிரமாதப்படத் தொடங்கியது. வாண வேடிக்கைகள், ஊர்வலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு ஜனங்கள் சற்று களைப்புத் தீர காற்று வாங்க பீச்சுக்குப் போனபோது அங்கே அவர் களை வரவேற்கப் பலவித களியாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பல்லாயிரக் கணக்கான மக்கள் இரவைப் பரந்த மணற் பரப்பில் கழித்துவிட்டு மறுநாள் காலையில்தான் விடு திரும்பினார்கள்.

சுதந்திர விழாவில் மிக உற்சாகம் காட்டியவர்கள், ஸ்திரீகளும் குழந்தைகளும்தான் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். ஸ்திரீகள் தங்கள் ஜடையை மூவர்ண புஷ்பக் கொத்துகளினால் அலங்கரித்துக்கொண்டு இருந்த அழகையும் இடையில் மூவர்ண சேலை உடுத்தியிருந்த விமர்சையையும் பார்க்கக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் குதுகலத்துக்கு எல்லையே இல்லை. அவர்கள் சட்டை களில் கணக்குவழக்கின்றி தேசியக் கொடிகளைக் குத்திக்கொண்டும் வாய் நிறைய மிட்டாய்களைத் திணித்துக்கொண்டும் தலை கால் தெரியாமல் ஓடும் மோட்டார் கார்களோடும் சைக்கிள்களோடும் போட்டியிட்டுக்கொண்டு போன காட்சி இன்னும் என் கண் முன் தாண்டவம் ஆடுகிறது.

சென்னையில் சுதந்திர விஜய வைபவக் கொண்டாட்டத்தைப் பார்த்து அனுபவித்தவர்கள் ஒவ்வொருவரும் "எதிர்காலத்தில் வருஷா வருஷம் நடக்கப்போகும் இந்த சுதந்திர தின விழாவைப் பார்க்க எனக்கு இந்த இரு கண்கள் போதாது. இதைப் போல் ஆயிரம் கோடி கண்கள் வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள் என்று முடிவோடு விட்டுக்குத் திரும்பினேன்.


வாழ்க சுதந்திரம், வாழ்க பாரத நாடு !

[ நன்றி : விகடன், சுப்பு சீநிவாசன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுதந்திர தினம்

வியாழன், 23 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 28

அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி! 



ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் நினைவு தினம்.

பொதுவாக, ஒரு பிரபல பாடகர் தன் குருவல்லாத இன்னொரு பிரபல வித்வானுக்குப் பின்னால் உட்கார்ந்து தம்பூராவில் ஸ்ருதி போட்டுக் கொண்டே பாடுவது அபூர்வம் தான்! அப்படி இருக்கும்போது, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சீடரான செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் எப்போது அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு ஸ்ருதி போட்டு, கூடவே பாடினார்? மேலே படியுங்கள்!
[ செம்மங்குடி; நன்றி: விகடன் ]

1944-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம். வழக்கம்போல் சென்னையில் இசை விழா நடந்து முடிந்த சமயம். ஜனவரியில் அடுத்து வரும்  தியாகராஜ ஆராதனைக்கு மும்முரமாய் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்குகின்றன. முதலில் ஆராதனை மஹோத்சவ சபைக்கு வேண்டி இருந்தது என்ன ? வேறென்ன ? வைடமின் ‘ப’ , பணம்தான்! “நிதி சால சுகமா” என்று பாடினால் விழா நடத்த முடியுமா?

உத்சவ நிதிக்காகத் தஞ்சாவூரில் 15 கச்சேரிகள் நடக்கின்றன. யாரெல்லாம் பாடினார்கள்? ( யாரெல்லாம் பாடவில்லை என்பதும் முக்கியம் தானோ? ) இதோ, அப்போது “விகட”னில் வந்த ஒரு விளம்பரத்தைப் பாருங்கள்!
( அரியக்குடி, செம்மங்குடி, மகாராஜபுரம் பாடினார்கள் என்பதைக் கவனிக்கவும்! )

பிறகு என்ன? 45-இல் நடந்த தியாகராஜ ஆராதனையைப் பற்றி விகடனில் வந்த கட்டுரையில் ( செல்கள் ஏப்பமிட்டபின் மிச்சமிருக்கும் !)  ஒரு பக்கம் இதோ!


பி. கு.1 : 

உங்களுக்கு ஒரு ‘போனஸ்’ : மேலேயுள்ள ராஜுவின் அற்புத நகைச்சுவைச் சித்திரம். இது ஒரு வரலாற்றுச் சிறப்புள்ள, ‘க்ளாஸிக்’ துணுக்கு என்பேன்! ஏன் தெரியுமா? 1945- இல் இரண்டாம் உலகப் போர் காரணத்தால், தமிழ்நாட்டில் அரிசிப் பற்றாக் குறை ஏற்பட்டு, சப்பாத்தி போன்ற கோதுமை உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயம் வந்தது. இதைப் பற்றி வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்குத் தான் மேலே உள்ள கார்ட்டூன்!

பி.கு 2.
’ஜோக்’கைப் பார்த்த ஒரு நண்பர் அந்த இதழ் முழுவதிலும் இத்தகைய பல துணுக்குகள் இருந்தன என்று தெரிவிக்கிறார். அவர் சொன்ன இன்னொரு துணுக்கும் இதோ!

பி.கு.3:
அரிசிப் பஞ்சம் நீடித்தது. 1951-இல் “சிங்காரி” படம். தஞ்சை ராமையாதாஸின் பாடல் பிரதிபலிக்கிறது.

ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா -இந்த 
உலகினில் ஏது கலாட்டா
உணவுப் பஞ்சமே வராட்டா
நம்ம உயிரை வாங்குமா பரோட்டா

பாட்டை இங்கே கேட்கலாம் :

2:49 / 3:55 ORU JAANN VAYIREY ILLAADAA SSKFILM033 K N REDDI, KR @ SINGHKAARI

தொடர்புள்ள பதிவுகள்:
( 44 , 46 -ஆம் ஆண்டுகளில் நடந்த ஆராதனைகள் பற்றி ) 
தியாகராஜ ஆராதனைகள் : 40-களில்

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

திங்கள், 30 செப்டம்பர், 2013

தேவன் - 12 : சாப்ளின் தமிழன் தேவன்!

சாப்ளின் தமிழன் தேவன்!
ரவிபிரகாஷ்


தேவன் நூற்றாண்டு விழாவைப் பற்றி ‘ஆனந்த விகட’னில் வந்த கட்டுரை இதோ! 

ரவி பிரகாஷ் மிக அழகாக எழுதியுள்ளார். அவருக்கு என் நன்றி. கூடவே, ‘தேவனின் பழைய பல படைப்புகளை விகடன் ‘பொக்கிஷ’ப் பகுதியில் வெளியிட்டால் மேலும் சிறக்கும்! 



அச்சில் வராத பல தேவனின்  படைப்புகளை வெளியிட விகடனின் உதவி தேவை !
======

ஹாலிவுட்டில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்றால், நமக்கு உடனே 'சார்லி சாப்ளின்தான் நினைவுக்கு வருவார். அதே மாதிரி, தமிழில் 'நகைச்சுவைஎன்றதுமே சட்டென்று நம் நினைவுக்கு வரும் கதாபாத்திரம் 'துப்பறியும் சாம்பு’.

தமிழர் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்தச் சிரஞ்சீவிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பிரம்மா, 'தேவன்என்கிற மகாதேவன்.

ஆனந்த விகடன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது பேராசிரியர் கல்கி கண்டெடுத்த முத்து, இந்த தேவன். விகடனில் சுமார் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிரஞ்சீவிப் படைப்புகள் பல எழுதியும், சுமார் 15 ஆண்டுகாலம் பொறுப்பாசிரியராகப் பணியேற்று பத்திரிகையை நடத்தியும், விகடனின் புகழை உச்சத்துக்குக் கொண்டுசென்றவர் தேவன்.
துப்பறியும் சாம்பு உட்பட தேவன் எழுதிய அத்தனைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் நகைச்சுவை தெறிக்கும். 'ராஜத்தின் மனோரதம்’ 'மல்லாரி ராவ் கதைகள்போன்ற நகைச்சுவைக் கதைகளையும், 'மிஸ்டர் வேதாந்தம்’, 'ஸ்ரீமான் சுதர்சனம்’, 'லக்ஷ்மி கடாக்ஷம்போன்ற அற்புதமான குடும்ப நாவல்களையும் எழுதி, தனது பெயரை எழுத்துலகில் நீங்கா இடம்பெறச் செய்தவர் தேவன்.

இந்த வருடம், தேவனின் நூற்றாண்டு. 1913-ம் ஆண்டு, செப்டம்பர் 8-ம் தேதி திருவிடைமருதூரில் பிறந்த இவர், ஊர்ப் பாசம் காரணமாக தமது சொந்த ஊரை இயன்றபோதெல்லாம் தம் கதைகளில் எப்படியாவது நுழைத்துவிடுவார். இவரது கதைகளில் உவமைநயம் மிளிரும். உதாரணத்துக்குச் சில...

'எதைக் கேட்டாலும் இல்லைதான்; யார் கேட்டாலும் கிடையாதுதான். பீரங்கி வாயிலே வெளிப்படும் குண்டின் உத்வேகம் இங்கே வெட்கிப்போகும்!

'பல்வரிசை காட்டிக் கைக்கொட்டி ஆர்ப்பரிப்பது போல சமுத்திர அலைகள் ஓயாது எழும்புவதும் குனிவதுமாக இருந்தன.

'பகலிலேயே இருள் கவிந்திருக்கும் சுப்புரத்தினத்தின் கிரஹம் இரவில் துஷ்டமிருகத்தின் குகைபோலக் காணப்பட்டது.

பொதுவாகவே, துயரமான, துக்கமான நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு வாசகர்களுக்குப் படைப்பது தேவனின் பாணி. 'ஸ்ரீமான் சுதர்சனம்நாவல் ஓர் உதாரணம்.

எழுத்தாளர் சுஜாதா, தேவன் எழுத்துக்குப் பரமரசிகர். இவர் விகடனில் எழுதிய 'கற்றதும் பெற்றதும்தொடரில், 'பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக்கொண்டால்கூட, இன்றுவரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஓர் உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் 'ஸ்ரீமான் சுதர்சனம்அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்!என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தில் பல உத்திகளைப் புகுத்தியவர் தேவன். தொடர்கதை அத்தியாயங்கள் விகடனில் ஏழெட்டுப் பக்கங்கள் வெளியாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நறுக்கென்று ஒரே பக்கத்தில் 'மாலதிஎனும் சஸ்பென்ஸ் தொடர்கதையை எழுதினார் தேவன்.
தேவன், எழுத்துலகில் மட்டும் ஜாம்பவான் அல்ல; பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர், பயணக் கட்டுரையாளர், நாடக வசனகர்த்தா எனப் பல முகங்கள் கொண்டவர். தமிழ் எழுத்துலகத்துக்குப் பெரிய பங்களிப்பைச் செய்து, பெருமை சேர்த்தவர்.

இன்றைக்கு இலங்கைப் பிரச்னை பற்றிப் பேசுகிறோம்... படிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றிக் கண்ணீர் வடிக்கிறோம். 1930-களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியெல்லாம் நேரடியாகக் கண்டு, அங்குள்ள தமிழ்ச் சங்கங்களைப் பார்வையிட்டு, தமிழறிஞர்களைப் பார்த்துப் பேசி, தமிழர்களின் நிலையை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியவர் தேவன்.

ஆனந்த விகடனில் தேவனின் முக்கியப் பங்களிப்பு 'தென்னாட்டுச் செல்வங்கள்’. 1948-ம் ஆண்டில், விகடனில் முழு நேர ஓவியராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன் என்னும் 'சில்பியைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில்களையும் தெய்வத் திருவுருவங்களையும் அப்படியே சித்திரமாக வரையச் செய்து, வாசகர்களின் பார்வைக்கு வழங்கினால் என்ன என்று யோசித்து, அதைச் செயல்படுத்தியவர் தேவன்தான். தஞ்சை, தாராசுரம், திரிபுவனம், ஸ்ரீரங்கம், பேரூர் என ஏறத்தாழ, தமிழ்நாட்டில் சிற்ப எழில் கொஞ்சும் எல்லாக் கோயில்களையுமே 'தென்னாட்டுச் செல்வங்களில் காணலாம். ஓவியர் சில்பியின் திறமை பெரிதும் பேசப்பட்டது இந்தத் தொடர் மூலமாகத்தான். படங்களை சில்பி வரைய, அவற்றுக்கான விளக்கங்களை தமது பெயர் போட்டுக் கொள்ளாமலே எழுதினார் தேவன்.

1957 மே 5-ம் தேதி, தமது 44-வது வயதில் தேவன் மறைந்தார். மகாகவி பாரதி போல குறைந்த வயதே வாழ்ந்தாலும், தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கொடையாகப் பல பங்களிப்புகளைச் செய்துவிட்டு அமரத்துவம் பெற்றவர் அவர்.

விகடனின் மகத்தான நஷ்டம் என்னும் தலைப்பில் மனம் பதைபதைக்க ஒரு தலையங்கம் தீட்டி, அவரது மறைவுக்குத் தமது இதய அஞ்சலியைச் செலுத்தினார் எஸ்.எஸ்.வாசன்.


கடந்த எட்டாம் தேதியன்று, தேவன் அறக்கட்டளை சார்பில் சென்னையில் எழுத்தாளர் தேவனின் நூற்றாண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு, 'ஓவியப் பிதாமகன்கோபுலு வந்திருந்து சிறப்பித்தார்.  'தேவன் வரலாறுஎன்னும் தலைப்பில், தேவனின் படைப்புகளையும் அவரது அருங்குணங்களையும் வெளிக்காட்டும் விதத்தில் எழுத்தாளர் சாருகேசி தொகுத்திருந்த தேவனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.

[ நன்றி : ஆனந்த விகடன், 18 செப்டம்பர் 2013 ] 

தொடர்புள்ள பதிவுகள்: 
தேவன் நூற்றாண்டு விழா -1 
தேவன் நூற்றாண்டு விழா -2 
தேவன் நூற்றாண்டு விழா -3 
தேவன் படைப்புகள் 

தென்னாட்டுச் செல்வங்கள் இப்போது விகடன் நூல்களாய்க் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய ஒரு விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.