வெள்ளி, 17 ஜூன், 2016

மீ.ப. சோமு -4

"சித்தர் இலக்கியச் செம்மல்' மீ.ப. சோமு
 திருப்பூர் கிருஷ்ணன்


ஜூன் 17. மீ.ப.சோமு அவர்களின் பிறந்த தினம்.  தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!
==============

திருநெல்வேலிப் பகுதியில் பிறந்து இலக்கியத்தைக் கணிசமாக வளர்த்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் பலர் தமிழில் உண்டு. தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், டி.கே.சி., தி.க.சிவசங்கரன் என வளரும் அந்தப் பட்டியலில் அமரர் சோமுவும் இணைகிறார். திருநெல்வேலி சந்திப்பின் அருகிலுள்ள மீனாட்சிபுரம்தான் அவரது சொந்த ஊர். பிறந்த தேதி 17.6.1921.

 சிறுகதை எழுதும் சிலருக்கு நாவல் எழுத வருவதில்லை. நாவல் எழுதுபவர்களிலும் சிலருக்குச் சரித்திர நாவல் எழுத வருவதில்லை. (அதனாலேயே சரித்திர நாவல் இலக்கியமல்ல என்று சொன்ன எழுத்தாளர்களும் தமிழில் உண்டு) மீ.ப.சோமு சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, பயண இலக்கியம் என இலக்கியத்தின் பல துறைகளில் முயன்று எழுதி வெற்றிபெற்ற மிகச் சில சாதனையாளர்களுள் ஒருவர்.

 சோமு இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் மிகுந்தவர். தமிழின் பக்தி இலக்கியத்தில், குறிப்பாக சித்தர் பாடல்களில் தோய்ந்த பக்தர் அவர். நெல்லை சுந்தர ஓதுவா மூர்த்திகள் என்ற புகழ்பெற்ற தேவார இசைமணி, திருமதி சோமுவின் பெரியப்பா.

 இளைஞராக இருந்தபோதே எழுத்தார்வம் கொண்டு நிறைய எழுதினார். ஆனால் பரவலாக அவர் அறியப்பட்டது, விகடன் வழங்கிய "பாரதி தங்கப் பதக்கம்' அவரது சிறுகதைக்குக் கிடைத்தபோதுதான்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டம் பெற்ற வகையில், முறையாகத் தமிழ் கற்ற தமிழ்ப் பண்டிதரும்கூட. மு.வரதராசன், நா.பார்த்தசாரதி போன்றோர் வரிசையில் பழந்தமிழ் அறிந்து, தற்கால இலக்கியத்தில் சாதனை படைத்தவர்.

 சம்ஸ்ருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். வெளிதேச இலக்கிய அமைப்புகளில் தமிழிலக்கியம் குறித்து ஆங்கிலச் சொற்பொழிவுகள் செய்திருக்கிறார். அவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளின் பெருமை பற்றி "தி டைம்ஸ்' என்ற  ஆங்கில நாளேடு வியந்து பாராட்டிக் கட்டுரை எழுதியதுண்டு.

 தமிழில் அநாயாசமான சொல் வளத்தோடு தெளிந்த நீரோடைபோல் சொற்பொழிவாற்றக் கூடியவர். அகில இந்திய வானொலியில் பணிபுரிந்ததாலோ என்னவோ, அவரிடம் ஒரு வித்தியாசமான ஆற்றல் இருந்தது. பேசத் தொடங்குவதற்கு முன் அமைப்பாளர்களிடம் எத்தனை நேரம் பேசவேண்டும், அரைமணி நேரமா, இருபத்தைந்து நிமிடமா என்றெல்லாம் விசாரித்துக் கொள்வார். மேடையேறினால் கைக்கடிகாரத்தைப் பார்க்காமலே மிகச் சரியாகக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவார். அவரது அந்த ஆற்றல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு.

 "சித்தர் இலக்கியச் செம்மல்' என்று குறிப்பிட வேண்டுமானால் தமிழில் மீ.ப.சோமுவைப் பற்றி மட்டும்தான் அப்படிக் குறிப்பிட முடியும். திருமூலரின் திருமந்திரம் உள்பட ஏராளமான சித்தர் பாடல்கள் அவருக்கு மனப்பாடம். சிலப்பதிகாரம் குறித்து ம.பொ.சி. பேசிக் கேட்கவேண்டும் என்று சொல்வதுபோலவே, சித்தர் பாடல் பற்றி மீ.ப.சோமு பேசிக் கேட்க வேண்டும் என்றும் சொல்வதுண்டு. அவர் சித்தர் பாடல்களை விளக்கிப் பேசினால், அந்தத் தமிழின் குளுமையைப் பருகவென்றே ஏராளமான கூட்டம் வருவதுண்டு.


 கொஞ்ச காலம் வானொலியில் பணிபுரிந்துகொண்டே கல்கி வார இதழிலும் ஆசிரியராக இருந்தார். (1954 முதல் 1956 வரை). இவர் வானொலியில் வகித்தது, தென் மாநிலங்களுக்கான தலைமை அமைப்பாளர் என்ற பெரிய பதவி.

 கல்லறை மோகினி, திருப்புகழ்ச் சாமியார், கேளாத கானம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர். கடல் கண்ட கனவு உள்ளிட்ட பல நாவல்களை எழுதியவர். இவரது "ரவிச்சந்திரிகா' நாவல் ஏராளமான வாசகர்களால் பாராட்டப்பட்டு, பெரும்புகழ் பெற்ற நாவல். தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் அது வெளிவந்தது.

 தத்துவச் சிந்தனை சார்ந்த மரபுக் கவிதைகளைப் படைப்பதில் வல்லவர். அந்த வகையில் இவரது இளவேனில் கவிதைத் தொகுதி குறிப்பிடத்தக்கது. பிள்ளையார் சுழி, நமது செல்வம் முதலிய கட்டுரைத் தொகுதிகளின் ஆசிரியரும்கூட. பற்பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்.


 மீ.ப.சோமு, தம் சமகாலத்தில் வாழ்ந்த இருபெரும் ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகும் பேறுபெற்ற பெருமைக்குரியவர். ஒருவர் மூதறிஞர் ராஜாஜி. இன்னொருவர் கம்பன் புகழ்பாடும் டி.கே.சி. ராஜாஜியின் கடைசிப் பதினைந்து ஆண்டுகளில் பெரும்பாலும் அவரது இரவு உணவு சோமு வீட்டில்தான்.

 மீ.ப.சோமு எழுதிய நாடகங்கள் பல பிரபலமானதற்கு, அவரது தமிழால் கவரப்பட்டு டி.கே.எஸ். சகோதரர்கள் அவற்றை மேடை ஏற்றியதும் ஒரு முக்கியக் காரணம்.

 பல பரிசுகள் இவர் எழுத்தாற்றலைத் தேடி வந்தன. இவரது "அக்கரைச் சீமையிலே' என்ற பயண நூலுக்கு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது. படைப்பிலக்கியம் அல்லாத நூலுக்கு அகாதெமி பரிசு கொடுத்ததைப் பற்றி எப்போதும் போல், அப்போதும் சில விமர்சனங்கள் எழத்தான் செய்தன. ஆனால் ஏ.கே.செட்டியார், மீ.ப.சோமு போன்றோர்தான் தமிழ்ப் பயண இலக்கியத்தின் முன்னோடிகள் என்பதை விமர்சித்தவர்களே கூட மறுக்கவில்லை.

 எம்.ஏ.எம். அறக்கட்டளைப் பரிசு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு, தமிழக அரசுப் பரிசு, பல்கலை வித்தகர், இசைப் பேரறிஞர் போன்ற பட்டங்கள் என இவரது பெருமைகள் இன்னும் பல.

 சிக்கனம்பாறை ஆசிரமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சுவாமிகள் என்ற சித்தர்தான் இவரது குரு. சித்தரிடம் நேர்முகமாக ஆன்மிகப் பயிற்சிகளைக் கற்றார். உடலில் உள்ள பல மையங்களில் மனத்தை ஒருமுகப்படுத்தி மானசீக பூஜை செய்யும் பயிற்சியும் அவற்றில் ஒன்று. அந்த பூஜையை நாள்தோறும் விடாமல் செய்துவந்தார். அக்காலத்தில் பெரும் பதவிகளில் இருந்த பலர் மீ.ப.சோமுவிடம் மந்திர உபதேசம் பெற்றவர்களும் கூட.

 தம் ஒரே மகளுக்கு தமது நன்றியறிதலைத் தெரிவிக்கும் வகையில், வித்தியாசமான பெயரொன்றை வைத்தார் சோமு. சிதம்பர ராஜ நந்தினி என்பது மகளின் பெயர். முதல் வார்த்தை டி.கே.சி.யையும் இரண்டாம் வார்த்தை ராஜாஜியையும் மூன்றாம் வார்த்தை கல்கியையும் ஞாபகப்படுத்துவது. (சோமுவின் புதல்வி ராஜாஜியின் மடியில் வளர்ந்த செல்லக் குழந்தையும் கூட). உயர் நீதிமன்ற வழக்கறிஞரான எஸ்.கோமதிநாயகம் மீ.ப.சோமுவின் மாப்பிள்ளை.

 தம் மனைவி காலமானபோது வயோதிகத்தால் தளர்ந்திருந்த சோமு, சற்று விரக்தி அடைந்தார். ஆனாலும், இறுதிக் காலங்களில் பண் ஆராய்ச்சி மையத்தின் கௌரவ இயக்குநராகப் பதவி வகித்துப் பணியாற்றத் தொடங்கினார். "தமிழே என்னை விட்டு என்றும் பிரியாத என் நிரந்தரத் துணை' என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொல்வதுண்டு. 1999-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி ஒரு பொங்கல் திருநாளையொட்டி அவர் மறைந்தார். ஆனால், என்றும் மறையாத தமது எழுத்துகளில் அவர் வாழ்கிறார்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

மீ.ப.சோமு

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தேடித்தேடி படித்திட இந்த ஆயுள் போதாது...அத்துணை அத்துணை அறிஞர் பட்டாளம்.நன்றிகள் கோடி.வேல்முருகன் சென்னைத் துறைமுகம்