புதன், 12 மே, 2010

`தேவன்’ நினைவு நாள்: மே 5, 2010

தேடித் தேடி ... 
பசுபதி     
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 5-ஆம் தேதி வந்தவுடன் நான் உஷாராகி விடுவேன்; அடுத்த சில நாள்களில் சென்னையிலிருந்து வரும் ஆங்கில, தமிழ் நாளிதழ்களை ஊன்றிப் படிப்பேன். எங்கேயாவது , ‘தேவன்’ தினத்தைப் பற்றிய தகவல்களோ, படங்களோ இருக்குமா என்று தேடுவேன். ‘ஹிந்து’ பத்திரிகை என்னைக் கைவிடாது! ‘ஹிந்து’ நிருபர் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி ஒரு தீவிர ‘தேவன்’ விசிறி. அதனால் ஒவ்வொரு வருடமும் ஒரு பத்தி எழுதி இருப்பார். அதைப் படித்தவுடன், எனக்கு எப்போதும் தோன்றுவது ஓர் எண்ணம் தான்:


அடடா, ஒரு வருஷமாவது நான் இந்த ‘தேவன்’ தின விழாவில் கலந்து கொண்டு, மற்ற ’தேவன்’ ரசிகர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டாதா என்று ஏங்குவேன். இந்த வருடம், எனக்கு அப்படிப் பட்ட ஒரு அற்புதமான வாய்ப்புக் கிட்டியது! கீழே இருக்கும் ‘தேவன்’ தின அழைப்பிதழைப் பாருங்கள்! புரியும்!வேறு ஒரு காரணத்திற்காகச் சென்னை சென்றிருந்த என்னைத் ‘தேவன்’ விழாவிற்குத் தலைமை தாங்கும்படி பிரபல எழுத்தாளர் சாருகேசி, ‘தேவன்’ அறக் கட்டளையின் சார்பில் கேட்டுக் கொண்டார். கரும்பு தின்னக் கூலியா? மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். ‘இணையத்தில் தேவன்’ என்ற தலைப்பில் பேசுவதாகவும் சொன்னேன்.
‘ஹிந்து’வில் இந் நிகழ்ச்சியைப் பற்றி வந்த கட்டுரை: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Devan-popular-in-U.S./article15694228.ece

அன்று எடுக்கப்பட்ட சில படங்களைப் பார்க்க:

https://photos.google.com/album/AF1QipOxezJToX9_SRjial5fXiAmF4NA0DnB-TbVLW8A
தேவன் தின நிகழ்ச்சியில் நான் படித்த என் கவிதை:

===============


தேடித் தேடி
பசுபதி

எடுப்பு

ஆய்வுகளில் தேடித் தேடிக் களைத்ததுண்டு
ஆரோக்யம் தேடித் தேடி இளைத்ததுண்டு
இணையத்தில் தேடித் தேடிச் சலித்ததுண்டு
இலக்கியம் தேடித் தேடி முழித்ததுண்டு.
பலகாரம் தேடித் தேடிப் புசித்ததுண்டு
பண்ணிசையைத் தேடித் தேடி ரசித்ததுண்டு.
பதவிகளைத் தேடித் தேடிப் பறந்ததுண்டு
பட்டங்கள் தேடித் தேடி விரைந்ததுண்டு
தனக்குள்ளே தேடித் தேடித் தளர்ந்ததுண்டு
கனவுகளில் தேடித் தேடி எழுந்ததுண்டு
ஏமாற்றம் தந்தவைதாம் ஏராளம் தேடல்கள்
என்றாலும் இன்சுவையை எழுப்பியவை சிலவுண்டு
தேடுபொருளில் ஆர்வமும் திருப்திதந்த விளைவும்
இளமையில் கண்டதுபோல் இனிமேலும் வருமோ?
தெய்வத்தைக் கண்டகதை தேசத்தில் ஏராளம்
'தேவ'னை விண்டகதை தெரிந்துகொள்வீர் என்மூலம்!

தொடுப்பு


தேடித் தேடிச் சிறுவயதில் படித்தேன் . . .
திகில்கதைகள் மர்மங்கள் தெவிட்டாத படித்தேன்
திவான்கள் தீரர்கள் திருடர்கள் சீலர்கள்
சவால்கள் சாமர்த்யம் சாகசங்கள் நிறைகதைகள்
நாடோறும் நகம்கடித்து நான்படித்த நாவல்கள் . .
ஞாபகத்தில் வருகின்ற நனவோடைக் குமிழிகள் .


வடுமாங்காய் உணவிற்கு வழங்கிடுமோர் காரம்
வடுவூரார் எழுத்துகளோ வாசிப்பின் சாரம்
ஆரணியார் நாவல்கள் அனைத்தும்அ பாரம்
ஆங்கிலக் கதைகள்தாம் அடியஸ்தி வாரம் !:-))
அன்றைக்கென் வாழ்க்கைக்கு அவசியங்கள் எனத்துடித்தேன்
இன்றைக்கு நினைத்தாலும் எனக்கது நகையூட்டும்!

நடைபாதைக் கடைகளென்ன? நண்பர்களின் மனைகளென்ன?
விடாப்பிடியாய் தேடிடுவேன் வேண்டிய நூல்களெல்லாம்
அச்சேறாத் தொடர்களை அலைந்து’மூர் மார்க்கெட்டில்’
தேடுகையில் கண்டுபிடித்தேன் தேவனின்  எழுத்தில் . .

மெல்லிய நகைச்சுவையும் விஷயத் தெளிவும்
கற்பனை வளமும் கதைசொல்லும் பாங்கும்
பாத்திரப் படைப்பும் பன்முகப் பார்வையும்.
உள்ளத்தைத் தொடுகின்ற உருக்கமும் பக்தியும்.
நடுத்தரக் குடும்பத்து நடைமுறைச் சிக்கல்கள்
அத்யாயத் தொடக்கத்தில் அசத்திவிடும் மேற்கோள்கள்
ஆடம்பரம் அற்றவோர் ஆற்றொழுக்கு எழுத்து....
பசுமரத் தாணிபோல் பதிந்திடும் பாத்திரங்கள்....

துப்பறியும் கதைகள்மேல் சொல்லவொணா மோகம்
இப்போதும் தொடர்கிறது எனக்கந்தத் தாகம் !. . .

சாம்புவையும் சந்த்ருவையும் சட்டென்று மறப்பேனா?
சாம்பு(4)புகழ் பரப்பத் தனியனொன்று வேண்டாமா?

{வெண்பா}


காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு
வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் -- ஆகமது
நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான்
சாகா வரம்பெற்ற சாம்பு
.

(ஆகம்=உடம்பு)


 சந்துரு வை மறக்காமல் ‘சபாஷென்று சொல்வோமே!

துருவும் கூர்மை விழிமுகம்;
. துப்பறி தொழிலில் தனிரகம்;
இரும்புக் கரங்கள் பேசினால்
. எதிரி மீண்டும் எழுந்திரான்
தெருச்சீ ராளம் புசிப்பான்;
. திருவாய் மொழியும் ரசிப்பான்
திருடும் நபர்க்குச் சத்துரு;
. தேவன் படைத்த சந்துரு!


கோபுலுவின் சித்திரங்கள் குதித்துவரும் கதைகளிலே!
மேன்மையான அப்படங்கள் மேலதிக ‘போனஸ்’தான் !

வித்தகர் கோபுலு -வுக்கு வெண்பா ஒன்றிதோ!

(வெண்பா)
Gopulu 

நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,
ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்
சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிடும்
கோபுலு ஓவியர் கோ.


முடிப்பு

சென்னைசென்று தேவனைத் தேடிப் பிடிப்பேன்
தினமொரு நூலெனத் திரும்பவும் படிப்பேன்.
நினைவலையில் மூழ்கி நெருக்கடிகள் மறப்பேன்
முந்துநகைச் சுவையாலே முதுமைமுறி யடிப்பேன்!


==

தொடர்புள்ள சில பதிவுகள்:

தேவன் படைப்புகள்

’தேவன்’: துப்பறியும் சாம்பு

தேவன் நினைவுகள் -1

தேவன் நினைவுகள் -2

பின் குறிப்பு:
’தேவ’னைப் பற்றி என் நண்பர்கள் சிலர் மறுமொழியாய் எழுதிய  கவிதைகள்:

1)
சந்துரு வேதாந்தஞ் சாம்புஜகந் நாதனென்றுன்
சிந்தனை ஈன்றபல சேய்களாய் - வந்தென
வந்தணைக்கும் மாண்பெழுத்தாய் வைகுவாய் தேவா!நீ(டு)
அந்தமிழ் அன்பர் அகத்து.


வந்து என=காற்றைப் போல்; வைகுதல்=தங்குதல்; அம்=அழகு; அகம்=மனம்

சந்துரு=சி.ஐ.டி சந்துரு; வேதாந்தம்=மிஸ்டர் வேதாந்தம்;
சாம்பு=துப்பறியும் சாம்பு; ஜகந்நாதன்=ஜஸ்டிஸ் ஜகந்நாதன்


 வெண்பா விரும்பி


========
2) 
வானாளும் தேவர்க்கும் வாய்க்காப் பெரும்புகழைப்

பேனாக்கொண்(டு) இத்தேவன் பெற்றானே - நானிலத்தில்

ஆனந்த மாய்விகடன் ஆசிரிய னாய்நம்மைத்

தான்களிக்கச் செய்திட்ட தால்.

.. அனந்த்


3) 
தேடிப் படித்திடு தேவன் படைப்புகள்!
வாடிப் பறந்திடும் வாட்டங்கள்-- கூடும்
நகைச்சுவை; வெல்லும் நலிவுதரும் மூப்பை;
மிகையில்லை நம்கவிச்சொல் மெய்.


--- தங்கமணி.

4) 


பசுபதியாரின் தேவன் விழாக் கவிதைக்குப் பின்னூட்டம்

ஓவியர்கோ கோபுலுவின் கைவண் ணத்தில்
   ஒப்பில்லா உருவத்தில் உலவும் ஹாஸ்யக்
காவியத்து நாயகனாம் சாம்பு வைநாம்
   களித்ததெலாம் கவிதையிலே வடித்துத் தந்து
பூவிரியும் மணங்காட்டிப் பொழிந்த வண்ணம்
   புவியோரின் உள்ளத்துக் கோயில் கொண்ட
தேவன்புகழ் செப்பியநல் வேகம் கண்டேன்
   தேன்போலே மரபங்கே இனிக்கக் கண்டேன்.

எப்படியும் வெற்றிபெறும் சாம்பு வைப்போல்

  இதயத்தில் என்றென்றும் ஆட்சி செய்யும்
துப்பறியும் சந்துருவின் தோற்றம் கண்டேன்
  சொல்லிநின்ற கதைகளிலே உள்ள தெல்லாம்
அப்படியே எடுத்துரைததுக் கவியால் செய்த
  ஆலயத்தில் பொருத்தமுற அன்பாய் நீங்கள்
செப்பரிய விதமாகத் தேவன் தம்மைச்
  செகமகிழ நிறுவியதைக் கண்டேன் கண்டேன்!

தேவனின் கோமதியின் காதலன்

கோடிமுறை படித்தாலும் மீண்டும் மீண்டும்

  கோமதியின் காதலனைப் படிக்கத் தூண்டும்!
ஓடியாடி உழைத்துப்பின் ஓய்ந்தி ருக்கும்
  உள்ளத்தில் புத்துணர்வு வேண்டு மென்றால்,
தேடிவந்து தேவன்கை தீட்டி யுள்ள
  தெவிட்டாத அமுதமிதைத் தீண்டு வீரே:
நாடிவந்து நகைச்சுவையாள் நன்க ணைத்து
  நலம்பலவும் நமக்களிக்கக் காணு வீரே!

காதலது நமக்கிலையேல் சாதல் என்றே

  கவிகுயிலாய் மாறிவந்து கூவி நின்றான்!
காதலதால் சாவதையே கவிஞர் பல்லோர்
  காவியமாய்ச் செய்துள்ள புவியில் அந்தக்
காதலதே நகைச்சுவையைக் காதல் செய்து
  கைபிடித்து நடப்பதையே காட்டு கின்றார்,
பூதலத்தில் சிரித்தென்றும் வாழ்வ தற்குப்
  புதினமிதைச் செய்தளித்ததேவ தேவன்!

துப்பறியும் சாம்பு

இதிகாச புராணத்தை மீண்டும் மீண்டும்

  எல்லோரும் படிப்பதுவே இயற்கை ஆகும்,
அதிலொன்றும் அதிசயமே இல்லை என்பேன்,
  அவையூட்டும் சுவையென்றும் தனியே தானே!
புதிர்நீக்கும் சாம்புபுகழ் பேசும் காதை
  போதெல்லாம் படித்தாலும் போதை ஊட்டும்
புதிரான கதைக்கொத்தாய்த் திகழ்வ தென்னே,
  புதுமையிதைப் புவியிலெவர் விளக்கு வாரே!

சிவ சூரியநாராயணன்.

======
தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 5 மே, 2010

'தேவன்': நினைவுகள் - 1

விகடனின் மகத்தான நஷ்டம்!
மே 5. 'தேவ'னின் நினைவு தினம்.

[  'ஆனந்த விகடன்' இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து . . .]சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.

அவர் பேனாவிலே பிறந்த துப்பறியும் சாம்புவும், கல்யாணியும், கோமதியின் காதலனும், ஸ்ரீமான் சுதர்சனமும் உயிர் பெற்றுச் சிரஞ்சீவிகளாக உலாவிக்கொண்டிருக்கையில், அவர்களைப் படைத்த பிரமன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட ஸ்ரீ தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகந்நாதனையும், ஸி.ஐ.டி. சந்துருவையும் படித்துவிட்டுத் தமிழிலும் இப்படிப் புதுமைக் கருத்துக்களுடன் எழுத முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள்.

தேவன் அவர்களின் நஷ்டம் தமிழ்நாட்டுகே ஈடு செய்ய முடியாதது என்றால், விகடனுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பற்றி எப்படி எழுதுவது? அவருடைய அற்புதமான கதைகளை, எழுத்துக் கோக்கும்போதே படித்துக் களித்த ஆனந்த விகடன் கம்பாஸிடர்கள் அத்தனைபேரும் இன்று அழுது கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆசிரியர் குழாம் அலறித் துடிக்கிறது. கடமை உணர்ச்சியும், அன்பும், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் நற்குணமும் படைத்த உத்தமமான நிர்வாக ஆசிரியரை இழந்து விகடன் கண்ணீர் வடிக்கிறான். 5.5.57 ஞாயிற்றுக்கிழமை பகல் ஒன்றரை மணிக்கு, தேவன் தேவனாகிவிட்டார். அவர் பூத உடம்பு மறைந்து விட்டது. புகழுடம்புடன் ஆனந்த விகடன் வாசகர்களின் உள்ளங்களில் குடி புகுந்துவிட்டார்.


விகடனில் வந்த முழுக் கட்டுரை இதோ:  ( நன்றி: லக்ஷ்மண்குமார் ராஜு )

'கல்கி' யில் வந்த அஞ்சலிக் குறிப்பு

'சிவாஜி ' இதழில் ....
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் நினைவு நாள், 2010