திங்கள், 30 ஜூன், 2014

மீ.ப.சோமு - 1

புதுமைப் பித்தன் பற்றி . . . 
மீ.ப.சோமு 

ஜூன் 30. புதுமைப்பித்தனின் நினைவு நாள்.

அவரைப் பற்றி, அவருடைய நெருங்கிய நண்பர், தமிழறிஞர் மீ.ப. சோமு பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இதோ அவற்றுள் இரண்டை, அவர்கள் இருவரின் நினைவில் இங்கே இடுகிறேன்.
மீ.ப.சோமு 

புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் இடையே நடந்த இலக்கியச் சண்டை இலக்கிய உலகில் பிரபலமானது. அதைப் பற்றி மீ.ப. சோமு குறிப்பிட்ட ஒரு கட்டுரை இதோ! ( ‘சில பல’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் 80-களில் ( 83-ஓ?)  ‘கல்கி’யில் வெளியானது என்று நினைக்கிறேன்.) 


[ நன்றி : கல்கி ]

 [  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

பின் குறிப்பு 1:


இந்தக் கட்டுரைத் தொடர்பாக நான் கேட்ட கேள்வியும், ஜெயமோகன் அதற்குச் சொன்ன பதிலும் :
கடித இலக்கியம்: ஜெயமோகன்

பின் குறிப்பு 2:

திருவனந்தபுரத்தில் புதுமைபித்தன் 1948-இல் அகால மரணமடைந்தபின் , அவருடைய குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டப் பட்டது. அது போதுமான அளவில் இல்லாததால், புதுமைப்பித்தனின் மனைவி கமலாம்பாள் ‘கல்கி’யின் உதவியை நாடினார். ‘கல்கி’ ஓர் உருக்கமான அறிக்கை ஒன்றை 10-6-51 ‘கல்கி’ இதழில் வெளியிட்டார். ” அற்புதமான சிறுகதை இலக்கியத்தைச் சிருஷ்டித்தவர்” என்று புதுமைபித்தனைப் போற்றினார் 'கல்கி’ அந்த அறிக்கையில். இதன் மூலம் நேரடியாய்க் கிடைத்த நிதி குறைவே: அதனால் டி.கே.எஸ் சகோதரர்களைக் ‘கல்கி’ அணுகவே, அவர்கள் நடத்திய நாடகத்தின் மூலம் மேலும் கொஞ்சம் நிதி திரண்டது. ஆக மொத்தமாய்க் கிடைத்த எல்லா நிதியையும் கொண்டு, கமலாம்பாள் சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீட்டைக் கட்டி, அதிலேயே வருவாய்க்கு ஒரு சாதனமாக, புதுமைப் பித்தன் பேரில் ஒரு நூலகத்தையும் நிறுவினார். அந்த நூலகத்தையும், அதிலே புதுமைப் பித்தனின் உருவப் படத்தையும் கல்கி 16-9-54-இல் திறந்து வைத்தார்: அதாவது , கல்கியின் மறைவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்!  

[ தகவல் : ‘பொன்னியின் புதல்வர்’, ‘சுந்தா’ ]தொடர்புள்ள மற்ற பதிவுகள்: 

புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன்: விக்கிப்பீடியா
மீ.ப.சோமு


வியாழன், 26 ஜூன், 2014

ம.பொ.சி -1

நன்றியுள்ள தமிழ் என்றும் மறவாது! 
ம.பொ.சிவஞானம் 


ம.பொ.சிவஞானம்


ஜுன் 26. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களுடைய பிறந்த தினம்.

பள்ளிப் பருவத்திலே அவருடைய பல உரைகளைக் கேட்டு, அவற்றில் நனைந்து,  உடலும், உள்ளமும் சிலிர்த்து வளர்ந்தவன் நான். அவருடைய நினைவில், அவர் எழுதிய இரு கட்டுரைப் பகுதிகளை இங்கிடுகிறேன். இரண்டு பகுதிகளும் அவருக்கும் , பேராசிரியர் ‘கல்கி’க்கும் இருந்த அன்பையும், நட்பையும் சுட்டிக் காட்டும் இதய ஒலிகள்.

ஒரு சமயம் ம.பொ.சி கல்லால் அடிபட்டபோது , “ ம.பொ.சி. யின் நெற்றியிலிருந்து இன்று சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் ஓராயிரம் ம.பொ.சிகள் தோன்றுவார்கள்” என்று ஆவேசத்துடன் எழுதினார் “கல்கி” !

கீழே இருக்கும் முதல் கட்டுரை, பேராசிரியர் கல்கி மறைந்தவுடன், டிசம்பர் 19, 1954 - இதழில் ம.பொ.சி எழுதியது.
இரண்டாவது , ‘கல்கி’ இதழின் பொன் விழா மலரில் (1992) அவர் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி :

கல்கி’. ஒரு நாடக விமர்சனம் எழுதும்போது, “நான் மிகவும் ரசித்த பகுதி ‘இடைவேளை’ என்று திரை விழுந்ததே அந்தப் பகுதிதான் “ என்று எழுதினார். நகைச்சுவை இருக்குமே தவிர மனம் புண்படும்படி இருக்காது. யாரையாவது பற்றிக் கடுமையாக எழுதிவிட்டாரென்றால், அதற்குப் பரிகாரம் காண்பதுபோல் அடுத்த சந்தர்ப்பத்திலேயே எழுதுவார். 

இதே நகைச்சுவை அவர் மேடைப் பேச்சிலும் துள்ளல்நடை போடும்.  


இசையை வளர்ப்பதிலே, மொழியை வளர்ப்பதிலே, நாட்டுப்பற்றை வளர்ப்பதிலே கல்கி ஆற்றியுள்ள தொண்டு கிருஷ்ணமூர்த்தியின் உள்ளத்திலிருந்து பிறந்த எதிரொலி ஆகும்.


அது மட்டுமல்ல, அந்தக் கால கதை, நாவல்களில் அக்கிரஹார பாஷைதான். அதை மாற்றி ஒரு தெளிவான தமிழ் நடையுடன் எழுதி மாறுதலைப் புகுத்தினார் ‘கல்கி’. 


ஒரு நாவல் முடிந்ததும், ஒரு மாதமோ இரண்டு மாதமோ சுற்றுலாச் செல்வார் ‘கல்கி’. அந்த சுற்றுலாவில் நல்ல பல யோசனைகள் உருவாகும். கிண்டி காந்தி மண்டபம், எட்டயபுரம் பாரதி மண்டபம் போன்றவை அப்படி உருவானவைதாம். அதே போல் அடுத்த நாவலுக்கான ஏற்பாடுகளில் இறங்குவது மட்டுமல்லாமல், அது சம்பந்தமாக வரலாற்று இடங்களையும் சென்று பார்ப்பார்.


இஸ்லாமிய மன்னர்கள், குறிப்பாக ஆர்காடு நவாப் பற்றி வரலாற்றுப் புதினம் எழுத வேண்டும் என்று என்னிடம் சொல்லி வந்தார். “தெற்கில் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், வடக்கில் ஆண்டவர்கள் போல நடந்து கொண்டதில்லை. இந்து மன்னர்களைப் பற்றி எழுதியாகி விட்டது. இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி எழுத வேண்டும்” என்று சொல்வார். ஓர் உதாரணம் கூடச் சொன்னார்: “ தேசிங்கு ராஜன் நவாபை எதிர்த்துப் போராடினான். ஆனால் முகமது கான் என்பவன்தான் தேசிங்கு ராஜனின் தளபதி “. இது போன்ற விஷயங்கள் இருப்பதால் நல்ல வரலாற்று நாவல் உருவாக முடியும் என்பது அவர் கருத்து. 


‘கல்கி’யின் கலை விமரிசனங்கள் கலையோடு நகைச்சுவையயும் வளர்த்தன. கலை விமரிசனத்தையே ஒரு கலையாக வளர்த்தார் அவர். ‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே” என்று ஒரு இசைவாணர் பாடிக் கொண்டிருந்தார். அவர் “காலைத் தூக்கி தூக்கி ... என்று பல்லவியை நிரவல் செய்ததைக் குறிப்பிட்டு, “எப்போது காலைக் கீழே இறக்குவார் என்றாகி விட்டது என்று எழுதினார் 

முதல் கட்டுரைத் தலைப்பைப் போல, ம.பொ.சி -ஐயும் “நன்றியுள்ள தமிழ் என்றும் மறவாது! “ 

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:
ம.பொ.சி

கல்கியைப் பற்றி . . .

'கல்கி’ கட்டுரைகள்

புதன், 25 ஜூன், 2014

பி.ஸ்ரீ. -8 : ஊமைத்துரை வரலாறு

சுதந்திர அருணோதயம்
“ கலைவிநோதன் “ ( பி.ஸ்ரீ.) தமிழறிஞர் பி.ஸ்ரீ.ஆசாரியா ‘கலைவிநோதன்’ என்ற புனைபெயரில் ஆனந்த விகடனில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விகடனின் தொடக்க காலத்தில், “ இலக்கியப் பூங்கா”, “ஆனந்த பூங்காவனம்” என்ற தொடர்களை அந்தப் புனைபெயரில்தான் எழுதினார் என்று அறிகிறேன். பிறகு விகடனின் புத்தக விமரிசனப் பகுதியைப் பெரும்பாலும் நிறைவு செய்தவரும் அவர்தான் என்றும் படித்திருக்கிறேன். இதோ அவருடைய ஒரு நூல் அறிமுகம்/விமரிசனம்.

50/51-இல் விகடனில் இது வெளியானது என்று நினைக்கிறேன்.

நூல்: பாஞ்சாலங் குறிச்சி வீர சரித்திரம் ( 2-ஆம் பாகம் ): 
ஊமைத் துரை வரலாறு : 
ஆசிரியர்: கவிராஜ பண்டிதர் ஜெக வீரபாண்டியனார் 

இந்த நூலின் முதல் பதிப்பு 1950-இல் வந்தது. முதல் பாகத்தில் கட்டபொம்முவின் வரலாறு;இரண்டாம் பாகம் ஊமைத்துரை பற்றி.
இரண்டும் பெரிய ஆய்வு நூல்கள்.இதைப் படிப்போர் மனத்தில் ஒரு கேள்வி எழலாம். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப் படம் 59-இல் வெளியானது. அதைப் பற்றி இந்த நூலின் ஆசிரியர் என்ன நினைத்தார்? திரைப்படம் எடுத்தவர்கள் ஜெகவீர பாண்டியனாரின் இந்த இரு ஆய்வு நூல்களைப் படித்திருந்தார்களா? இதற்கு விடைகளை அறிய, 59-இல் வெளிவந்த இந்நூலின் இரண்டாம் பதிப்பில் கவிராஜ பண்டிதர் எழுதிய ஒரு குறிப்பைப் படியுங்கள்! அவருடைய மனக் கசப்புப் புரியும்!


தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

வெள்ளி, 20 ஜூன், 2014

கோபுலு - 1

ஒன்பது நகை(ச்சுவை)கள்! 
கோபுலு

நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,

ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்


சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிடும்


கோபுலு ஓவியர் கோ. 


இந்த வெண்பாவைக் கோபுலு சாரின் நூல் ஒன்றில் எழுதி, அவரை 2010-இல் சந்தித்த போது , அவரிடம் காட்டி, வாழ்த்துப் பெற்றேன். அப்போது எடுத்த படம் தான் மேலிருப்பது.)  


18 ஜூன், 1924. ஓவியப் பிதாமகர் கோபுலு சாரின் பிறந்த தினம்.

தொண்ணூறு ஆண்டுகள் நிறைந்த அந்தக் ‘கோட்டோவியக் கோமா’னுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இதோ அவருடைய ஒன்பது நகை(ச்சுவை)கள்! ( என் கிடங்கிலிருந்து நான் இங்கு இட்டிருப்பவை ஓர் ஒழுங்குமுறையற்ற random தேர்வு தான்! )

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
கோபுலு

சிரிகமபதநி
மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்

செவ்வாய், 17 ஜூன், 2014

குறும்பாக்கள் 7,8 ; சார்புநிலைக் கோட்பாடு

 குறும்பாக்கள் 7,8 : சார்புநிலைக் கோட்பாடு 
பசுபதி

7.
ஐன்ஸ்டைனின் பெரும்விசிறி ஆண்டாள்,
மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்;
. பார்த்தொருநாள் புறப்பட்டு,
. சார்புவழி பறந்துவிட்டு,
முன்னாளில் வீடுவந்து சேர்ந்தாள் ! 

****
8.
ஐன்ஸ்டைனின் சீடன்சொன்ன பேச்சு:
'என்மறதி அதிகமாகிப் போச்சு!
. வாழ்வேகம் மிகவாகி,
. வருங்காலம் இறப்பாகி,
ஜனிக்குமுன்பே நான்எரிந் தாச்சு! '
****
சார்புநிலைக் கோட்பாடு =Theory of Relativity;
சார்புவழி = relative way; மின் =ஒளி.
இறப்பு = இறந்த காலம். 

[ ‘திண்ணை’  ஜூலை, 24, 2003 -இதழில் வெளியானது ]

=================
மூலம்: இரு ஆங்கில லிமெரிக்குகள்
There was a young lady named Bright
Whose speed was much faster than light;
     She set out one day,
      In a relative way
And returned on the previous night.

Said a pupil of Einstein; "It's rotten
To find I'd completely forgotten
      That by living so fast 
      All my future's my past 
And I'm buried before I'm begotten. 
தொடர்புள்ள பதிவுகள்: 

வெள்ளி, 13 ஜூன், 2014

கொத்தமங்கலம் சுப்பு -8

ஆசியக் கதைமன்னன் அமரன் பேர் வாழியவே !
கொத்தமங்கலம் சுப்பு 

" என்னை ‘மகராஜனாக இருங்கள்’ என்று வாழ்த்திய அமரர் கல்கிக்கும் வணக்கம் “ --கொத்தமங்கலம் சுப்பு [ பின்னுரை, “பொன்னிவனத்துப் பூங்குயில்’ ]“ காந்தி மகான் கதையை இந்நாட்டு மக்கள் கூட்டமாக அமர்ந்து ஆர்வத்துடன் கேட்கும் பொழுது ஒவ்வொருவர் முகத்திலும் இந்தியப் பண்பு ஒளிவீசும். அதில் அவரும் உணர்ச்சி வசப்படுவார். இதுவரை இந்த உலகில் எந்தக் கவிஞருக்கும் கிடைக்காத பெரும் பேறு இது“ 
                      --பேராசிரியர் கல்கி ( கல்கி, 6.8.1950 )
”ஸ்ரீ சுப்பு அவர்களே ஒரு ஸ்தாபனம். அவரே பல கலைகளின் உறைவிடம். “ --- பேராசிரியர் கல்கி, ஔவையார் படவிழா, 5-3-54

[ கல்கி,கொ.சுப்பு ]


பேராசிரியர் ‘கல்கி’ மேல் மிகுந்த மதிப்புக் கொண்டவர் கொத்தமங்கலம் சுப்பு. தன்னை மண்வாசனை வீசும் நாட்டுப் பாடல்களை எழுதத் தூண்டியவர்கள் ரசிகமணி டி.கே.சி, கல்கி என்று எப்போதும் பெருமிதத்துடன் பேசுவார் சுப்பு. வரலாற்று நாவல்களின் தந்தையான ’பொன்னியின் புதல்வர்’ ‘கல்கி’க்கு ஓர் அஞ்சலி என்று எண்ணியோ என்னவோ ‘கல்கி’ இதழில், 1967/68 -காலகட்டத்தில் ’பொன்னிவனத்துப் பூங்குயில்’ என்ற ஒரு வரலாற்று நாவலையும் எழுதி இருக்கிறார். [ ‘பூங்குயில் கூவும் ...’ என்ற பாடலையும் இயற்றியவர்  பொன்னியின் புதல்வர் கல்கி அல்லவா? :-) ]

கொத்தமங்கலம் சுப்பு விகடனில் தான் தன் பெரும்பான்மையான பாடல்களை எழுதினாலும், “சித்தத்தைப் பொன்னாக்கும் சித்தர்”, “ சங்கரர் ஏற்றிய தீபம்”, “காமகோடியில் இருகனிகள்” போன்ற சில பாடல்களைக் ‘கல்கி’ இதழ்களில்  எழுதியிருக்கிறார். அப்படிக் ‘கல்கி’யில்  எழுதிய சில பாடல்களில் ஒன்றுதான் நீங்கள் கீழே காண்பது . ‘

கல்கி’ டிசம்பர் 54-இல் மறைந்தவுடன் ‘கல்கி’ இதழில் அவர் எழுதிய கவிதை இது. அவருக்குக் ‘கல்கி’மேல் இருந்த பக்தியும், மதிப்பும் உணர்ச்சி வெள்ளமாய் இக்கவிதையில் வெளிப்பட்டிருப்பதைப் படிக்கலாம்.


[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள் :

கொத்தமங்கலம் சுப்புசெவ்வாய், 10 ஜூன், 2014

லா.ச.ராமாமிருதம் -8: சிந்தா நதி - 8

4. கண் கொடுக்க வந்தவன்
லா.ச.ரா 


அன்று ராமன், அக்கினி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனை சோதரனாக வரித்தான். இன்று, ஐந்தாம் பிள்ளையாக வரிக்க, அக்கினி சாக்ஷி என் எழுத்தா? --லா.ச.ரா.  ஐந்தாறு வருடங்களாக, கண்ணில் சதையால், மிக்க அவதியுற்றேன், முதலில் இடக்கண், மறு வருடம் வலது. நாள் ஒரு இம்மியாக, சதை வளர்ந்து அதுவும் கடைசி இரண்டு வருடங்கள். அப்பப்பா, வேண்டாம். என்றால் விடுமா? சாப்பாட்டில், வாய்க்கு வழி கை தானே கண்டுகொள்ளுமானாலும், இலையில் என்னென்ன எங்கே பரிமாறியிருக்கிறது? ஒரே தடவல். வழித்துணையிலாது வெளியே போக முடியாது. சினிமா, டிராமா, கச்சேரி, இலக்கியக் கூட்டங்கள்- முடியாது. படிக்க முடியாது; எழுத முடியாது. டிக்டேஷன்? சரிப்பட்டு வரவில்லை. ஒரு படைப்பு உருவாகும் அந்தரங்கத்தைப் பிள்ளையோடானாலும் பங்கிட்டுப் பழக்கமில்லை. பிறகு வீட்டுக்குள்ளேயே, மேடு பள்ளமாக இடறி விழுந்து இந்திரப்ரஸ்த மாளிகையில் துரியோதனன், திரெளபதியின் சிரிப்புக்கு ஆளானது போல்- எப்போதும், எங்கேயும் திரெளபதிகள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒருமாதிரியாக இற்றுப்போக ஆரம்பித்துவிட்டேன்.

  ஆஸ்பத்திரியில் சோதித்த பெரிய டாக்டர்: "அடாடா, இது ப்ளாக் காட்டராக்ட் அல்லவா? பத்து வருடங்களுக்குக் கத்தி வைக்க முடியாதே! வெச்சால் பெரிய ரிஸ்க். ரேர் கேஸ் உங்களுக்குன்னு வந்திருக்கு."

  தீர்ப்பு எப்படி? ஆயுளுக்கும் படிப்படியாக- ஒருநாள் முழுக் குருடு இல்லை, பத்து வருடங்களுக்குப் பின் இவரிடம் ஆபரேஷன் பண்ணிக் கொள்ள, நான் இப்பவே அடைந்துவிட்ட வயது. இடது கொடுக்க வேண்டாமா? இன்னும் பத்து வருடங்களுக்குப் பாஞ்சாலி சிரிப்பா? பயங்கரம் என்ன வேணும் ?

  மனச்சலிப்பு உயிர்ச் சலிப்பாகத் திரிந்து கொண்டிருக்கையில்- 83 தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. ஒரு நாள் மாலை-

  அவனுக்கு 25/27 இருக்கும். லா.ச.ரா. வீடு தேடி விசாரித்து வந்து என்னைக் கண்டதும் தடாலென்று விழுந்து நமஸ்கரித்து, "என் பெயர் வெங்கட்ராமன், பி.டி.சி.யில் வேலை செய்கிறேன். உங்கள் எழுத்தில் வெகு நாளைய ஈடுபாடு. உங்களை நேரில் காண வேணுமென வெகு நாள் ஆசை. விலாசம் சரியாகக் கிடைக்கவில்லை. லால்குடிக்கே போய் விசாரிக்கலாமான்னு யோசனை பண்ணினதுண்டு. எப்படியோ வேளை வந்துவிட்டது. இந்த மாசம் 14-ம் தேதி என் தங்கைக்குக் கலியாணம். மாமியோடு அவசியம் வரணும்."

  அவன் ஆர்வம், பேச்சு, சுழல்காற்று வேகத்தில் தன்னோடு என்னை அடித்துக்கொண்டு போயிற்று.

  பின்னும் பலமுறை வந்தான்.

  "இங்கே வருவதில், உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் உங்கள் பேச்சைக் கேட்பதில் என் மனதில் ஏதேதோ சந்தேகங்கள் தெளிகின்றன. குழப்பங்கள் பிரிகின்றன. அமைதி தருகிறது."

  அவன் தங்கை கலியாணத்துக்குப் போனேன். எனக்குப் புது வேட்டி மரியாதை. அங்கு அவனுடைய தந்தையைச் சந்தித்தபோது, அவர் கூழாங்கல் கண்ணாடி அணிந்திருப்பது கண்டு, அதையொட்டி அவரை விசாரித்ததில், முந்தைய வருடம்தான் காட்டராக்ட் ஆபரேஷன் பண்ணிக் கொண்டாராம். "லயன்ஸ் க்ளப் ஆஸ்பத்திரியில் நன்றாகக் கவனிக்கிறார்கள். எனக்கு இப்போ கண் நன்றாகத் தெரியறது."

  என் கை என் நெஞ்சக் குழியைத் தொட்டுக் கொண்டது. சபலத்தின் சிறகடிப்பு படபட-

  கலியாணச் சந்தடி ஒய்ந்த பின், வெங்கட்ராமனிடம் பிரஸ்தாபித்தேன்.

  "ஒ, தாராளமா! என் சந்தோஷம்!"

  அம்பத்தூர் எங்கே, ஆஸ்பத்திரி தி. நகரில் எங்கே? முற்பாடு சோதிப்புக்கள் ஏற்பாடுகளுக்காக, ஐந்தாறு முறை வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் சென்று, மீண்டும் வீடு சேர்த்துவிட்டுப் போனான். இதில் எத்தனை நாள் தன் ட்யூட்டி இழந்தானோ?

  பிள்ளைகள் இருக்க, பிறன் ஏன் இத்தனை முயற்சி எடுத்துக்கொள்ளணும்? கேள்விக்குச் சரியான பதில் அற்றவனாக இருக்கிறேன். ஆனால் என் மூத்த பிள்ளை வாயிலிருந்து, அவன் அறியாமலே வந்து விட்டது.

  "நியாயமா நாங்கள் செய்யவேண்டியதை வெங்கட்ராமன் செய்கிறான்."

  திடீரென்று ஒரு நாள், டிசம்பர் 16. காலை, ஆபரேஷன் டேபிளில் படுத்திருக்கிறேன்.

  ஆபரேஷன் செலவு பூரா தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமென முரண்டினான். மிகவும் சிரமப்பட்டு, அவன் மனதைத் திருப்ப வேண்டியிருந்தது.

  ஆபரேஷன் வெற்றி.

  அப்புறமும், கட்டு அவிழ்க்கும்வரை, அவிழ்ந்த பின்னும் வாரம் ஒரு முறை, ஆறு வாரங்களுக்கு வந்து காண்பிக்க வேண்டும்.

  நான்கு முறைகள் வந்து அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டில் கொண்டுவந்து விட்டான்.

  ஐந்தாம் முறை- அவனுக்கு என்ன அசந்தர்ப்பமோ? அடுத்தும் வரவில்லை.

  அப்புறம்- வரவேயில்லை.

  என்னவானான்? உண்மையில் என் கண் ஆபரேஷன் அவனுடைய வெற்றி அல்லவா?

  மீதிக் காரியம் வேறு துணைக்கொண்டு ஒருவாறு முடிந்தது.

  அவன் வராத ஏக்கம், வருத்தத்திற்கு அப்பால், சூட்சும தடத்தில் கொக்கிகள் நீந்தின.

  உண்மையில் இவன், அல்லது இது யார்?

  என்ன செய்வது? அறியாமல், என் நூல் நுனியை நான் அடைந்துவிட்ட சமயத்தில், என் விமோசனத்துக்காகவே, உயிரின் ஊர்கோலத்தினின்று வெளிப்பட்டு, எனக்குக் கண்ணைக் கொடுத்ததும், மீண்டும் வந்தவழியே போய் மறைந்து விட்ட சக்தி அம்சமா?

  தெய்வம் மனுஷ்யரூபேண:

  இவன் தங்கை கலியாணத்துக்குப் போனதால், மனதில் அடித்துக் கொண்ட சபலத்தின் சிறகுகள், கருணையின் அகண்ட சிறகுகளாக மாறி, மேல் இறங்கி கிருபை என்னே!

  சோதனைகள் தீரும் வேளை, விதம், வழி, மூலம்- நமக்குக் காட்டாத மிஸ்டிக்குகள்.

  அவனை 17-சி, 9, ரூட்களில் பார்த்ததாக என் பிள்ளை சொன்னான்.

  அவன் விலாசம், வடபழனி தாண்டி- தெரியும். ஆனால் போகமாட்டேன்.

  அன்று ராமன், அக்னி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனைச் சோதரனாக வரித்தான்.

  இன்று என் ஐந்தாம் பிள்ளையாக வரிக்க, சாக்ஷி அக்னி என் எழுத்தா?

  ஜன்மாவின் தொட்ட பிசுக்கு- தொட்டாப் பிசுக்கு,

  மறு கண் ஆபரேஷனுக்குக் காத்திருக்கிறது. அப்போது வருவாயா?

  அல்லது இன்னொரு வெங்கட்ராமனா?

  சிந்தா நதியில் குமிழிகள் தோன்றுகின்றன. சேர்கின்றன, பிரிகின்றன, மூழ்குகின்றன, மறைகின்றன.
  * * *

[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்,ஓவியம்: உமாபதி ]

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் படைப்புகள்

வெள்ளி, 6 ஜூன், 2014

கொத்தமங்கலம் சுப்பு -7

பொறந்த நாட்டை நினைச்சுப் பாத்துப்
பொறப்பட்டு வாங்க
கொத்தமங்கலம் சுப்புஜூன் 6, 1944. 
டி-டே ( D-Day ) என்று பரவலாக அறியப்படும் நாள். இன்று ( 6-6-2014 ) அதன் 70 ஆண்டு நிறைவை உலகெங்கும் பலர் நினைவு கூர்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரில், நேச நாடுகளின் படைகள் பிரான்ஸ் நாட்டில் , நார்மண்டி கடற்கரையில்  இறங்கின தினம் ஜூன் 6,44. உலகப் போர் வரலாற்றிலேயே மிகப் பெரிய படையிறக்கம் நடந்த நாள். அன்று தொடங்கிய போர் சில மாதங்களுக்குத் தொடர்ந்து நடந்தபின், ஆகஸ்டில் பிரான்ஸ் விடுதலை பெறுகிறது. 


போர் நிகழ்வுகளைப் பற்றி உன்னிப்பாய்த் தொடர்ந்து படித்து வந்த ஓர் இந்தியக் கவிஞர் இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டிஷ் படையில் இந்தியப் போர்வீரர்கள் பலர் பணி புரிந்து, வெற்றிக்கு வழிகோலியதை எண்ணிப் பூரிக்கிறார்.  போர் முடிகிறது. நாட்டுக்குத் திரும்பி வாருங்கள்’ என்று போர் வீரர்களைக் கூப்பிடுகிறது அந்தக் கவியுள்ளம். பிராஞ்சிநாட்டுச் சுதந்திரத்தைப்
   பிடிச்சுத் தந்தீங்க
போனமானம் போலந்துக்குத்
   திரும்பத் தந்தீங்க 
போய்மிதிச்ச நாட்டையெல்லாம்
   பொழைக்க  வச்சீங்க.
பொறந்தநாட்டை நினைச்சுப்பாத்துப்
   பொறப்பட்டு வாங்க.    
  
  

’கலைமணி’ கொத்தமங்கலம் சுப்பு கலைத்துறையின் பன்முகங்கள் பிரகாசிக்கும் மாமனிதர் தான். ஆயினும், அவருடைய முதல் முகம் மண்வாசனை வீசும் பல அற்புதமான கவிதைகளைப் படைத்த ’கவிமுகமே’! அவருடைய கவிதைகளிலும் நாம் பல வாழ்க்கை வண்ணங்களைச் சந்திக்கலாம். இயற்கை, பக்தி, தலைவர்கள், அறிவியல், சமுதாயம் என்று பல்வேறு கோணங்களில் அவர் கவிதைகளை நாம் பிரித்துப் பார்த்து, படித்து ருசிக்கலாம். அந்த வழியில் அவருடைய பல போர்ப் பாடல்கள் மிகுந்த எழுச்சியும், நெகிழ்ச்சியும் கொண்டவையாய் விளங்குகின்றன. 

அவருடைய போர்ப் பாடல்களில் , 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அவர் விகடன் தீபாவளி மலரில் எழுதிய ஒரு பாடல் எல்லோர் மனத்திலும் இன்றும் நிலைத்து உயர்ந்து நிற்கும் ஒரு ‘கோபுர’க் கவிதை! ( பல நண்பர்கள் என்னை ‘எங்கே? எங்கே?’ என்று கேட்டுத் துளைக்கும் கவிதையும் தான்!:-) அந்தக் கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!


போர் முடிந்துவிட்டது, ஆறு வருடங்களாய் வெளிநாட்டில் இருந்த சிப்பாய்களை நாட்டுக்குத் திரும்பி வந்து நாட்டுக்கு உழைக்கச் சொல்லி வேண்டுவதுபோல் அமைந்த கவிதை இது. 

இந்தியச் சிப்பாய்களின் வீரம், கடமை உணர்ச்சி இவற்றில் பெருமை கொள்ளும் அதே நேரத்தில் , சிப்பாயின் குடும்பத்தினரும், அண்டை அயலும் --ஏன், மாடு, கன்றுகளும் தாம்... அவனைப் பார்க்காமல் ஏங்கும் சித்திரம் நம்மை நெகிழவைக்கிறது. போருக்குப் போகும்போது தொட்டிலில் இருந்த குழந்தை --இப்போதோ பள்ளிக்குச் செல்லும் பிள்ளை -- ‘அப்பன் எங்கே’ என்று அம்மாவைக் கேட்பது, தந்திதபால்காரன் வந்தால் ‘எங்கே துயரச் செய்தி வந்துவிடுமோ’ என்று தாலியைத் தொட்டுப் பயப்படும் மனைவி, சிப்பாய்க்குப் பேர் இட்ட கிழவி தன் கடைசிக் காலத்தில் அவனைப் பார்க்கத் துடிப்பது ..போன்ற பல மனமுருக்கும் காட்சிகள் நிறைந்த ‘நிறைகுடம்’ இந்தக் கவிதை. விளக்கங்கள் எதற்கு? வாய்விட்டுப் படியுங்கள்! 1945-க்கே போய்விடுவீர்கள்! இந்தப் பாடலை உணர்ச்சியுடன் திரு சுப்புவே படிக்கக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள்! 
  

வேட்டை முடிஞ்சு போச்சுதம்பி
   வீட்டுக்கு வாங்க
காட்டைஉளுது செய்திருத்திக்
    கஞ்சி வாருங்க      ( வேட்டை )

எக்களிக்கும் கடலுமேலே
    ஏறிப் போனீங்க
முக்குளிக்கும் கப்பலுள்ளே
   மொடங்கிப் போனீங்க
திக்குஎட்டும் செதறியோடிச்
   செயிச்சுப் பிட்டீங்க
செரமப்பட்டது போதும் தம்பி
    வீட்டுக்கு வாங்க.

மாராழத்திலே பள்ளம்வெட்டி
  மறைஞ்சி ருந்தீங்க
பாறாங்கல்லுலே நெஞ்சுருத்தப்
   படுத்திருந் தீங்க.
நின்னுநின்னு கால்கடுத்து
   நினைப் பழிஞ்சீங்க
நீட்டிநிமிர்ந்து படுத்துக்கலாம்
   வீட்டுக்கு வாங்க.

ஆலாக்குருவி போலே நீங்க
   ஆகாசம் மேலே
அலைஞ்சுதிரிஞ்சு களைச்சிட்டீங்க
   ஆனாத் தன்னாலே
நூலாம்படையைப் போலேபறந்து
   நோட்டம் பாத்தீங்க
நூறுவயசுப் பயிருகளா
   வீட்டுக்கு வாங்க.

சட்டைதொப்பி மாட்டிக்கிட்டுச்
   சண்டைக் குப்போயி
செமந்தநாளு ஆயிப்போச்சு
   திரும்பி வாருங்க.
கொட்டைதுப்பி நட்டமாவும்
  குலுங்கிப் பூக்குது
கொம்பைவளைச்சுப் பழம்பறிக்க
   வீட்டுக்கு வாங்க.

வளவுதேடி மாமன்வந்து 
   வாரம் நடக்குறான்
வடக்கிவீட்டுக் குட்டிசும்மா
   பாட்டுப் படிக்கிறா
பிளவுபாக்குகேட்டு அயித்தை
   பேச்சுக் குடுக்குறா
பெருகிப்பலுகி வாளவேணும்
   வீட்டுக்கு வாங்க.

பெத்துவளத்துப் பேருமிட்ட
   பெரிய நாச்சியா
பித்துப்பிடிச்சு ராப்பகலா
   பேத்தி நிக்கிறா
முத்தைஉதுத்துப் பேந்தபேந்த
   முளிச்சுப் பாக்குறா
முகத்தைக்காட்ட வேணுமிடா
   வீட்டுக்கு வாங்க.

தொட்டிலிலே கிடந்த புள்ளை
   செவுடி தூக்குறான்   
தொட்டுத்தொட்டு அப்பன்எங்கே
   என்று கேக்குறான்
வட்டியிலே சோத்தை வச்சா
   மொகத்தைப் பாக்குறான்
வருத்தம்சகிக்க முடியுதில்லே
   வீட்டுக்கு வாங்க.

தந்திதவால் காரன்வந்தா
   தவிதவிக் கிறா
தாலிச்சரட்ட பாத்துக்கண்ணு
   தண்ணி வடிக்கிறா
அந்திப்பட்டா ஒருயுகமா
   அவ துடிக்கிறா
ஆறுவருச மாச்சுதப்பா
   வீட்டுக்கு வாங்க.

வீடுவாசல் நீயில்லாமல்
   வெறிச்சுன்னு போச்சு
மாடுகன்னும் ஒன்னைத்தேடி
   மருகர தாச்சு
காடுகரையும் ஆளில்லாமல்
   மோடிட்டுப் போச்சு
கலப்பைபுடிக்கும் சிங்கங்களா
   வீட்டுக்கு வாங்க.

பிராஞ்சிநாட்டுச் சுதந்திரத்தைப்
   பிடிச்சுத் தந்தீங்க
போனமானம் போலந்துக்குத்
   திரும்பத் தந்தீங்க 
போய்மிதிச்ச நாட்டையெல்லாம்
   பொழைக்க  வச்சீங்க.
பொறந்தநாட்டை நினைச்சுப்பாத்துப்
   பொறப்பட்டு வாங்க.    


பின்னர் இசைத்தட்டிலும் வெளியானது இந்தப் பாடல்.[ பாடலை அனுப்பிய சுப்பு ஸ்ரீநிவாசனுக்கு நன்றி  ] 

தொடர்புள்ள பதிவுகள்: 


கொத்தமங்கலம் சுப்பு

செவ்வாய், 3 ஜூன், 2014

சசி - 9: இப்படியும் நடக்குமா?

இப்படியும் நடக்குமா?

சசி ஒரு சிறிய துணுக்கையே ஒரு கதையாக்கி விடுவார் சசி!

============

''யார் அது?'' என்று அதட்டிய ஒரு குரலைக் கேட்டு நடராஜன் அப்படியே திடுக்கிட்டு நின்றான். சில விநாடிகளில், புதர்களுக்குப் பின் ஒளிந்திருந்த பத்து முரடர்கள் திடீர் என்று வெளியே வந்து, நடராஜனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொருத்தன் கையிலும் ஒரு பெரிய குண்டாந்தடி இருந்தது.

காட்டுப் பாதையில் இருட்டு வேளையில் செல்வது அபாயகரமானது என்று நடராஜனின் நண்பன் கோவிந்தராவ் எவ்வளவோ முறை எச்சரித்திருந்தான். அதை அலட்சியம் செய்துவிட்டு அந்தப் பாதையில் வந்தது, அதுவும் தனியாக வந்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை நடராஜன் அப்போதுதான் நன்றாக உணர்ந்தான்.

ஆயினும் தைரியமாக, ''யார் நீங்கள்?'' என்று கேட்டான்.

''புலிக்குட்டி முனுசாமி என்று நீ கேள்விப்பட்டதே இல்லையா, தம்பி? நாங்கள் அவருடைய ஆட்கள்!'' என்று கூறிவிட்டு, அந்தப் பத்து முரடர்களும் உரக்கச் சிரித்தார்கள்.

''சரி, நீங்கள் ஏன் என்னை இப்படிச் சூழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்?'' என்றான் நடராஜன், அதட்டும் குரலில்.

''உன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்துவிட்டால் தாராளமாக வழி விடுவோம்! சீக்கிரம் எடு, பணத்தை!'' என்று அவர்கள் குண்டாந்தடிகளை ஓங்கினார்கள்.

நடராஜன் சிறிதும் பயப்படாமல், ''முடியாது!'' என்றான்.

''முடியாதென்றால் உன்னை உயிரோடு விடமாட்டோம்'' என்றார்கள் அந்த முரடர்கள்.

உடனே நடராஜன் குபீ'ரென்று பாய்ந்து, அந்த முரடர்கள் அத்தனை பேரையும் ஒரே நொடியில் கீழே தள்ளிவிட்டான்.

நடராஜன் என்னமோ மகா நோஞ்சலான ஆசாமிதான். வயதும் இருபதுக்கு மேல் இருக்காது. காற்றடித்தால் கீழே சாய்ந்து விடக்கூடியவன்தான். என்றாலும், அவன் கையை ஓங்குவதற்கு முன்னால் அத்தனை முரடர்களும் தொப்... தொப் என்று கீழே விழுந்துவிட்டார்கள்.
விழுந்தவர்கள் மறுபடியும் எழுந்திருந்து நடராஜன்மீது பாய்ந்து, அவனோடு சண்டை போடுவார்கள் என்பதுதான் யாரும் எதிர்பார்க்கக்கூடியது.

ஆனால், அந்த முரடர்கள் அப்படி ஒன்றும் செய்துவிட வில்லை. விழுந்த இடத்திலேயே கிடந்தார்கள்; மூர்ச்சைகூட ஆகிவிட்டார்கள்.

'இப்படியும் நடக்குமா?' என்றே நினைக்கத் தோன்றும் நமக்கு! மகா பலிஷ்டர்களான பத்து முரடர்களை ஒரு நோஞ்சல் பேர்வழி எப்படிக் கீழே வீழ்த்தியிருக்க முடியும்? அவனிடம் ஏதாவது மந்திர சக்தி இருந்ததா?

அதெல்லாம் ஒன்றுமில்லை. அவனுடைய வெற்றிக்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது.

அது ஒரு சினிமா படப்பிடிப்பு. அந்த நோஞ்சான்தான் அந்தப் படத்தின் கதாநாயகன்! கதாநாயகன் எப்போதாவது தோல்வி அடைந்தான் என்பது உண்டா?

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சசியின் சிறுகதைகள்