மீனாட்சிசுந்தரம் பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனாட்சிசுந்தரம் பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 பிப்ரவரி, 2018

978. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 4

‘நுந்து கன்று’
உ.வே.சாமிநாதையர்




பிப்ரவரி 1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நினைவு தினம்.

அவருடைய கடைசி நாள்களில் நடந்த ஒரு நிகழ்வை உருக்கத்துடன் உரைக்கிறார் உ.வே.சா.
======

மார்கழி பிறந்தது; அது போய்த் தையும் பிறந்தது; ஒரு வழியும்
பிறக்கவில்லை. ஆசிரியர் நிலை வரவர அதிகமான பயத்திற்குக்
காரணமாயிற்று. தேவாரத்தில் அவர் அப்போது விளக்கிய விஷயங்கள் சில.

ஒருநாள் திருவாசகம் வாசித்து வந்தேன். இலக்கியச் சுவையோடு,
சிவபெருமான் திருவருட் பெருமையை எடுத்துரைத்துக் கேட்போரை
உருகச்செய்யும் பத்திச் சுவையும் நிரம்பியுள்ள அதனை ஆசிரியர் கேட்டு
வரும்போது இடையே கண்ணீர் விடுவார். அந்தத் தெய்விக நூற் செய்யுட்கள் அவர் உள்ளத்தை உருக்கினவென்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

சிவபெருமான் திருவடியை எப்பொழுதும் மறவாத உள்ளத்தினராக இருந்தாலும் அந்நினைவு மற்றச் சமயங்களில் மற்ற நினைவுகளுக்கிடையே தலைமை பெற்று நின்றது. அப்பொழுதோ அந்நினைவையன்றி வேறொன்றும் அவர் உள்ளத்தில்
இடம்பெறவில்லை.

திருவாசகத்தில் திருக்கோத்தும்பியென்னும் பகுதியைப் படித்தேன்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற செய்யுளை வாசித்தேன், ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள்
விளங்கவில்லை. சந்தேகம் கேட்கும் பொருட்டுத் தலை நிமிர்ந்து ஆசிரியரைப் பார்த்தேன். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “நுந்து கன்றாய் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. நாக்குக் குழறியது; தொண்டை அடைத்தது. “வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போல” என்று அந்தக் குழறலோடே சொன்னார். அந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் பெருகியது. தளர்ச்சியால் பேச முடியாமல் இருந்த ஆசிரியர் அந்தப் பாட்டில் உருகிப்போய் அவசமுற்றிருந்தார்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து”

என்ற அடி அவர் உள்ளத்தைப் பிணித்து அன்புணர்ச்சியை
எழுப்பிவிட்டது. மாணிக்கவாசகரது அவ்வாக்கு என் ஆசிரியருடைய நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நோயுற்று மூத்துநின்ற அவருடைய உள்ளக்கருத்தை அந்தச்செய்யுள் தெரிவித்தமையால் அவர் உருகிப் போனார்.

“தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற அடிகளில் மாணிக்கவாசகர் சிவபெருமான் தமக்கு அருளிய
பெருங்கருணைத் திறத்தைப் பாராட்டுகிறார். அவரை ஆண்டு கொண்ட
வண்ணம் தம்மையும் ஆண்டு கொள்வாரோ என்ற ஏக்கமும் ஆசிரியர்
உள்ளத்தே எழுந்தது போலும்! அவர் அப்பொழுது இவ்வுலகில் இருந்தாலும் இந்நினைவுகள் எல்லாம் சேர்ந்து அதனை மறக்கச் செய்துவிட்டன. “இவர் இப்போது நம்மோடு பேசவில்லை. ஆண்டவனோடு பேசுகிறார். இவர் தம் உள்ளமாகிய கோத்தும்பியை மாணிக்கவாசகரைப் போலச் சிவ பெருமான் திருவடி மலரில் ஊதும்படி விட்டிருக்கிறார்” என்ற உண்மையை அப்போது தெளிவாக நான் அறிந்து கொள்ளவில்லை. சிலநேரம் மௌனம் நிலவியது.

அவர் திருவாசகத்தில் ஒன்றி உருகினார்: நான் அவர் நிலைகண்டு
உருகினேன். பின்பு மீண்டும் தொடர்ந்து படிக்கலானேன்.

தொடர்புள்ள பதிவுகள்: 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை 

உ.வே.சா 

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

686. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 3

 திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை



 ஏப்ரல் 6. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.
===
” பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே “ என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார்.

ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

ஆசிரியரால் மாணாக்கர் தமிழ்நூற்கடலை நிலைகண்டுணர்ந்தார். மாணாக்கர் தம் ஆசிரியர் மகாவித்துவானின் வரலாற்றை நூலாக்கி அவரின் அளக்கலாகாப் புலமையை உலகறியச் செய்தார். கற்றல், கற்பித்தல், கவிபுனைதல் எனும் இவற்றை நற்றவமாய் மேற்கொண்ட நற்புலவர் மகாவித்துவான் எனக் கூறுதல் மிகையன்று. பலர்க்கும் இன்ன காலமென்னாது எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும் இணையிலா ஆசான் எனத் தம் ஆசானைப் பற்றிச் சாமிநாதய்யர் குறிப்பிடுவார். ஆசானின் மற்றொரு மாணாக்கர் சி.தியாகராச செட்டியார் பிள்ளை எழுதிக்கொடுத்த நூல்கள் பற்றிக் கூறுகையில், "எத்தனையோ கோவைகள் மற்றும் எத்தனையோ புராணங்கள், எண்ணிலடங்கா நூல்கள் அத்தனையும் இத்தனையென்று எத்தனை நாவிருந்தாலும் இயம்ப இயலாது' என்பார்.

சிதம்பரம்பிள்ளை-அன்னத்தாச்சி தம்பதியர் மதுரையில் சைவக் குடும்பத்தில் பிறந்தவர்கள். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மை திருக்கோயிலில் மீன் முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய் மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார். தமிழறிவு நிரம்பப் பெற்றிருந்த சிதம்பரம் பிள்ளை அவ்வூரிலிருந்தோர்க்கு தமிழ் நூல்களைக் கற்பித்தார். சிறிது காலத்துக்குப்பின் அங்கிருந்து அதவத்தூர் சென்று அங்கும் ஆசிரியப்பணியை மேற்கொண்டார். குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26-ம் நாள் (6.4.1815) அன்னதாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் பிறந்தமையின் மீனாட்சிசுந்தரம் எனப் பெயர் சூட்டினர். குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது.

மீனாட்சிசுந்தரம் தந்தையிடம் தமிழ் கற்றார். நெடுங்கணக்கு, ஆத்திச்சூடி, அந்தாதிகள், கலம்பகங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், மாலைகள், சதகங்கள், நிகண்டு, கணிதம் மற்றும் நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் பெற்றார். இவரின் கவிபுனையும் ஆற்றலைச் சோதிக்க விரும்பிய முருங்கப் பேட்டை செல்வர் ஒருவர், "இப்பாட்டுக்கு அருத்தம் சொல்' என்று முடியுமாறு ஒரு வெண்பா இயற்றச் சொன்னாராம். உடனே மீனாட்சிசுந்தரம் நெல்லுக்கும் திரிமூர்த்திகளுக்கும் சிலேடை அமைத்து ஒரு வெண்பா பாடினார்.


""ஒண்கமலம் வாழ்ந்(து)அன்ன மாகி உரலணைந்து 
தண்கயநீர்த் தூங்கித் தகுமேறூர்ந் - தொண்கதிரின் 
மேயவித் தான்மூவ ராகும் விளம்பியதென் 
தூயஇப்பாட் டுக்கருத்தம் சொல்.'' 

இப்பாட்டில்,

ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி -நெல்லுக்கும் பிரமனுக்கும் சிலேடை
உரலணைந்து தண்கயநீர்த்தூங்கி -நெல்லுக்கும் திருமாலுக்கும் சிலேடை
ஏறூர்ந்து ஒண்கதிரின் மேயவித்தால் -நெல்லுக்கும் சிவனுக்கும் சிலேடை

"சொல்' என்பதற்கு "நெல்' என்று பொருளுண்டு. "இப்பாட்டுக் கருத்தம் சொல் என்றால்', "இப்பாட்டுக் கருத்தம் நெல்' என்பது பொருளாகும்.

மீனாட்சிசுந்தரத்தின் 15-ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர் தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி'. "விரோதி' என்னும் சொல்லை இருபொருளில் அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது. அவ்வெண்பா வருமாறு:


""முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும் 
தந்தை எனைப் பிரியத் தான்செய்த-நிந்தை மிகும் 
ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற் கேதகுமால் 
ஈண்டேது செய்யாய் இனி.'' 


சோமரசம்பேட்டையில் இருந்தபோது காவேரியாச்சி என்ற பெண் இவரின் வாழ்க்கைத் துணைவியானார். தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில் குடியேறினார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த முத்துவீர வாத்தியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார் முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள் இவரைத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எனக் குறிப்பிட்டனர்.

மலைக்கோட்டை மௌனமடம் வேலாயுத முனிவர், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை, மழவை மகாலிங்கையர் ஆகிய தமிழ்ப் புலவர்களை அணுகித் தம் ஐயங்களைப் போக்கிக் கொண்டார். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்டார். திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும், கீழ்மேலூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார். இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.

பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித் தலபுராணங்களும், பதிகங்களும், அந்தாதிகளும், அங்குள்ள இறைவன், இறைவி மீது பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றினார். 1851-ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய செவ்வந்திப்புராணம் என்னும் நூலைப் பதிப்பித்தார்.

1860 முதல் மாயூரத்தில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று வந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதிறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாணதேசிகர் மீது கலம்பகம் பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு மகாவித்துவான் என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

1871-ல் உ.வே.சாமிநாதய்யர் மகாவித்துவானின் மாணாக்கரானார். இறுதிவரைத் தம் ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். மகாவித்துவான் திருவாவடுதுறையிலிருந்து பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய தலங்களுக்குச் சென்றுவந்தார்.

பிள்ளையவர்கள் 1876-ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், திருவாசம் படிக்குமாறு கூறினார். உ.வே.சா திருவாசகம் அடைக்கலப்பத்தைப் பாட, 1.2.1876-ல் தம் 61-ம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன், இணையிலாப் புலவன், மெய்ஞானக் கடல், நாற்கவிக்கிறை, சிரமலைவாழ் சைவசிகாமணி முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றார்.

தலபுராணங்கள் 22, சரித்திரம் 3, மான்மியம் 1, காப்பியம் 2, பதிகம் 4, பதிற்றுப்பத்தந்தாதி 6, யமக அந்தாதி 3, மாலை 7, பிள்ளைத்தமிழ் 10, கலம்பகம் 2, கோவை 3, உலா 1, தூது 2, குறவஞ்சி 1, பிறநூல்கள் 7 என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80. மேலும் பல தனிச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.


""பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை 
எனப் போர்த்த பண்பின்மிக்க 
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்'' 

என்று சி.சாமிநாததேசிகர் பாராட்டுவது பொருத்தமே

[ நன்றி: தமிழ்மணி ( தினமணி ) ]

தொடர்புள்ள பதிவுகள்: 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

புதன், 1 பிப்ரவரி, 2017

மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 2

முதற் காட்சி
உ.வே.சாமிநாதையர்

பிப்ரவரி 1. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் நினைவு தினம்.


உ.வே.சா அவருடைய ஆசிரியரை முதன் முதலில் சந்தித்த போது நடந்ததை விவரிக்கிறார்.
====

அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என்
கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி யடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின் புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை; அலக்ஷியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.

அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப்
பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்ஸாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது.

பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும்
உபாஸகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்
தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என்
மனத்தில் உத்ஸாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர் பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கி விட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்து விட்டன.

வந்த காரியம் என்ன?

அவர் வந்தவுடன் நின்று கொண்டிருந்த எங்களை உட்காரும்படி
சொன்னார். அந்தத் தொனியிலும் அமைதியைத்தான் நான் உணர்ந்தேன்.
எல்லாம் சாந்தமயமாக இருந்தன. அவரும் அமர்ந்தார்; என் தகப்பனாரைப்
பார்த்து, “நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தனர்;
அவ்வார்த்தைகள் அன்புடன் கலந்து வெளிவந்தன.

“நாங்கள் பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதான புரத்திலிருந்து
வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என் குமாரன். தமிழ் படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும் அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று
மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே இருக்கிறான். ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்து விட்டுப் போக வந்தேன்.”

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் வேங்கடஸுப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்”
என்றார் என் தந்தையார்.

“வேங்கடஸுப்பனென்பது நல்ல பெயர். வேங்கட ஸுப்ர
மணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள்
கோயில் கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.”

அவர் பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன்.
“சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விஷயம் வெளி வருகின்றதே!” என்று நான் ஆச்சரியம் அடைந்தேன்.

பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன
என்ன நூல்களைப் பாடம் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். நான் மெல்ல என் வரலாற்றைச் சொன்னேன்; சடகோபையங்காரிடம் படித்தது முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகைப் பாடம் கேட்டது வரையில் விரிவாக எடுத்துரைத்தேன்.

“இவருக்கு இசையில் எந்த மட்டும் பயிற்சி உண்டு?” என்று என்
தந்தையாரை நோக்கி அவர் கேட்டார். சங்கீதத்தை இசை யென்று அவர்
சொல்லியதை நான் கவனித்தேன். தாம் எனக்குச் சங்கீதத்தை முறையாகக்
கற்பித்து வந்ததை என் தந்தையார் தெரிவித்தார். அப்பால் தாம் கனம் கிருஷ்ணையரிடம் குருகுலவாசம் செய்து சங்கீதம் கற்றதையும் சொன்னார்.

“இந்த ஊரிலுள்ள கோபாலகிருஷ்ண பாரதியாரைத் தெரியுமோ?” என்று
பிள்ளையவர்கள் கேட்டனர்.

“நன்றாகத் தெரியும். அவரும் கனம் கிருஷ்ணையரிடம் சில காலம்
அப்பியாசம் செய்ததுண்டு.”

பரீட்சை

இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக் கவிஞர்
பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச்
சொல்லும்” என்றார். அந்த மகா வித்துவானுக்கு முன், காட்டுப்
பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக் கொண்ட நான் எவ்வளவு
சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம்
நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது.

இரண்டு மூன்று நிமிஷங்கள் இவ்வாறு நான் தடுமாறினேன். அப்பால் ஒருவாறு நைடதத்திலுள்ள, “தழைவிரி கடுக்கை மாலை” என்னும் காப்புச் செய்யுளைக் கல்யாணி ராகத்தில் மெல்லச் சொன்னேன்; முதலடியை,

“தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும்”  #

என்று நான் சொன்னேன். பிள்ளையவர்கள் இடைமறித்து, “தனி முதல்
சடையிற்சூடும்” என்று சொல்லித் திருத்தினார். பல காலமாகப் பிழைபட்ட
பாடத்தை உருவேற்றி இருந்த எனக்கு அந்தப் பாடமே முன் வந்தது. என்
நடுக்கம் அதிகமாயிற்று. ஆனாலும் பாடல் முழுவதையும் சொல்லி முடித்தேன்.

நான் அதைச் சொல்லும்போதே அவர் முகத்தையும் கவனித்தேன். “நான்
சொல்வதில் அவருக்கு வெறுப்பு உண்டாகுமோ” என்று பயந்தேன். நல்ல
வேளையாக அவர் முகத்தில் அத்தகைய குறிப்பு ஒன்றும் தோற்றவில்லை.
எனக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று.

“இன்னும் ஒரு பாடல் சொல்லும்” என்றார் அவர். நான் நைடதத்தின்
சிறப்புப் பாயிரமாகிய, “நிலவு பொழி தனிக்கவிகை” % என்னும் பாடலைச்
சாவேரி ராகத்தில் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மீட்டும்
சொல்லிப் பொருள் கூறும்படி கூறினார். நான் பாடல்களைச் சொல்லிப்
பொருள் கூறத் தொடங்குகையில் நாக்குத் தழுதழுத்தது.
“தைரியமாகச் சொல்லும்” என்று அக்கவிஞர்பிரான் கூறினார். நான்
இரண்டு செய்யுட்களுக்கும் பொருள் கூறி முடித்தேன்.

“நிகண்டு பாடம் உண்டோ?” என்று அவர் கேட்டார். நான்
“பன்னிரண்டு தொகுதியும் பாடம் உண்டு” என்று கூறவே சில சில
பாடங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு விட்டு, “நிகண்டை மனனம்
செய்வது நல்லதே. இக்காலத்தில் அதை நெட்டுருப் பண்ணும் வழக்கமே போய் விட்டது. சொன்னால் யாரும் கேட்பதில்லை” என்றார்.

சந்தேகப் பேச்சு

அப்போது என் தந்தையார், “இவனைத் தங்களிடம் ஒப்பித்து
விட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார்.

அப்புலவர் பெருமான் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அவர்
எதையோ யோசிக்கிறார் என்று எண்ணினேன்; “ஒரு கால் நம்மை
ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?” என்று அஞ்சினேன். அவர் மெல்லப் பேசத்
தொடங்கினார்.

“இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்த வண்ணமாக
இருக்கிறார்கள். வரும்போது பணிவாக நடந்து கொள்ளுகிறார்கள். சில காலம் படித்தும் வருகிறார்கள். படித்துத் தமிழில் நல்ல உணர்ச்சி உண்டாகும் சமயத்திலே போய் விடுகிறார்கள். சிலர் சொல்லாமலே பிரிந்து விடுகிறார்கள். சிலர் ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்’ என்று சொல்லிப் போய்த் திரும்புவதே இல்லை. சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்து விட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரை குறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை; நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை. இத்தகையவர்கள் இயல்பைக் கண்டு கண்டு மனம் சலித்துவிட்டது. யாராவது பாடம் கேட்பதாக வந்தால் யோசனை செய்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.”

அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர்
கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே
அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கி விட்டது. அவர் தம்மிடம் வந்து
சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும்
சொன்னார். “இந்த விஷயங்களை யெல்லாம் சொல்வதன் கருத்து என்ன?
நம்மை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை என் பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ?  அப்படி யிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.

தவம் பலித்தது

என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம்
இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை.
தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான்.
தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான் உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம்
சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டு வந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்து விட்டேன். இனிமேல் இவன் விஷயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது
சொன்னேன்; வேண்டிக் கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளி யிழந்தது.

அங்கிருந்தவர்கள் என் தந்தையார் வேண்டுகோளையும் எனது
பரிவையும் உணர்ந்து இரங்கி, “இந்தப் பிள்ளை இருந்து நன்றாகப்
படிப்பாரென்றே தெரிகிறது. தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று
கூறினார்கள்.

அக் கவிஞர் பிரானது முகம் மலர்ந்தது. ஒருவிதமான உறுதிக்கு அவர்
வந்துவிட்டாரென்பதையும், அத்தீர்மானம் எனக்கு அனுகூலமாகத்தான்
இருக்குமென்பதையும் அந்த முகமலர்ச்சி விளக்கியது. பிள்ளையவர்கள்: “திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய ஆகார விஷயத்தில் ஒரு குறையும் நேராமல்
பார்த்துக் கொள்ளலாம். சைவராக இருந்தால் ஒரு கவலையும் இராது; என்
வீட்டிலே சாப்பிடலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும்
செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்; அது பற்றி வருந்துகிறேன்.”

எந்தையார்: “அப்படியானால் இவ்வூரில் இருக்கும் வரையில் இவன்
ஆகாரச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று அனுப்பி
விடுகிறேன். இவனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க
ஆரம்பிக்கலாம்.”

என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன்.
===

பின் குறிப்பு:

#


அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

தழைவிரி கடுக்கை மாலைத் 
  தனிமுதல் சடையிற் சூடுங், 
குழவிவெண் டிங்க ளிற்ற 
  கோட்டது குறையென் றெண்ணிப், 
புழைநெடுங் கரத்தாற் பற்றிப் 
  பொற்புற விணைத்து நோக்கு,
மழைமதக் களிற்றின் செய்ய 
   மலரடி சென்னி வைப்பாம்.

இதன் பொருள். 
தழை - செழித்த, விரி - மலர்ந்த, கடுக்கை – கொன்றை மலர்களாலாகிய, மாலை - மாலையையுடைய, தனி - ஒப்பில்லாத, முதல் - பரமசிவனால், சடையில் - சடையின்கண், சூடும்  -சூடப்பட்டிருக்கிற, குழவி - குழந்தையாகிய, வெள் - வெள்ளிய, திங்கள் - சந்திரனை, இற்ற - ஒடிந்த, கோட்டது - (தன்) கொம்பினது, குறையென்று - மீதியென்று, எண்ணி - நினைத்து, புழை - தொளையையுடைய, நெடு - நெடிய, கரத்தால் - துதிக்கையினாலே, பற்றி - பிடித்து, பொற்பு - அழகானது, உற - பொருந்த, இணைத்து - (அதில்) பொருத்தி, நோக்கும் - பார்க்கின்ற, மழை - மழை போல்கின்ற, மதம் - மதத்தையுடைய, களிற்றின்-யானைமுகக் கடவுளுடைய, செய்ய மலர் - செந்தாமரை மலர்போலும், அடி - திரு வடிகளை, சென்னி - தலைமேல், வைப்பாம் . (நாம்) சூடிக்கொள்வாம், 

கருத்து. சிவன் முடியிலிருக்கும் பிறையைத் தனது ஒடிந்த கொம்புக்கு  இணைபார்க்கும் விநாயகரை நாம் வணங்குவோம்.

%
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

நிலவுபொழி தனிக்கவிகை நிடதர்கோன் புகழ்ச்சரித
  நெடுநீர் வைப்பிற், 
புலவர்களி யமுதொழுகு புதுமொழிகூட் டுணத்தமிழாற் 
  புனைதல் செய்தான்,
வலனுயர்த்த வண்ணலஞ்சேல் வான்றொடுபொற் கோட்டிமய 
  வரையிற் றீட்டி,
யலர்தலைமா நிலம்புரக்கு மதிவீர ராமனிக 
  லரச லேறே.

 பொருள்:
. இகல் - பகைத்த, அரசர் - மன்னராகிய (யானைகளுக்கு), ஏறு – ஆண்சிங்கம் போல்பவனாகிய, வலன்-வெற்றியினால், உயர்த்த - உயர்த்தப்பட்ட, அண்ணல் - பெருமை பொருந்திய, அம் - அழகிய, சேல் - மீனக்கொடியை, வான் - ஆகாசத்தை, தொடு - தீண்டுகிற, பொன் - பொன்னையுடைய, கோட்டு-சிகரத்தையுடைய, இமயவரையில் - இமயமலையினிடத்தே, தீட்டி - (தனக்குரிய எல்லைக்கல்லாக) எழுதி, அலர் - பரந்த, தலை - இடத்தையுடைய, மா - பெரிய, நிலம் - பூமியை, புரக்கும் - காக்கின்ற, அதிவீரராமன்-அதி வீரராமனென்கிற இயற்பெயரையுடைய (பாண்டியராஜனானவன்), நிலவு - சந்திரிகையை, பொழி - பொழிகின்ற, தனி - ஒப்பற்ற, கவிகை - (முத்துக்)குடையையுடைய, நிடதர்கோன் - நளமஹாராஜனது, புகழ் - புகழையுடைய, சரிதம் - சரித்திரமாகிய, களி - களிப்பைத் தருகின்ற, அமுது - அமிர்தத்தை, நெடுநீர் - கடலாற் சூழப் பட்ட, வைப்பில் - பூமியிலுள்ள, புலவர் - புலவரானவர், கூட்டுண. கொள்ளை கொள்ளும்படியாக, ஒழுகு-(அவ்வமிர்தம்) பெருகுகின்ற, புது மொழி - புதுக்காப்பியத்தை, தமிழால் - தமிழ் மொழியினாலே, புனைதல் செய்தான் - அலங்கரித்துப் பாடினான்.


கருத்து:
 அதிவீரராமபாண்டிய ராஜனானவன் நள மகாராஜனது சரித்திரத்தைத் தமிழில் பாடினான் என்பதாம். 
== 

தொடர்புள்ள பதிவுகள்: 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திங்கள், 11 ஏப்ரல், 2016

கி.வா.ஜகந்நாதன் - 1

கண்ணீரில் எழுதிய காட்சி
கி.வா.ஜகந்நாதன்

ஏப்ரல் 11. வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களின் பிறந்த தினம். 
அவர் எழுதிய ஓர் அரிய கட்டுரை இதோ! 


மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 
அவருடைய சீடர் உ.வே.சா, 
உ.வே.சா. வின் சீடர் கி.வா.ஜ ..... 
மூவரும் தோன்றும் ஒரு கட்டுரை இதோ! 



உடல் நலிவுற்ற நிலையிலும் தாம் எழுதி வந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. சொல்லச் சொல்ல, எழுதி வந்தவர் கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா. பற்றிய நினைவுகளை 'கண்ணீரில் எழுதிய காட்சி' என்னும் தலைப்பில் உ.வே.சா நூற்றாண்டாகிய  1955-இல்  ஓர் உருக்கமான கட்டுரையாக விகடனில் வடித்தார் கி.வா.ஜ.

===========
வழக்கம் போல் தியாகராஜ விலாசத்துக்குக் காலையில் போனேன். எங்கள் ஆசிரியப் பிரான் கூடத்தில் படுத்திருந்தார்கள். எப்போதும் மேல் மாடியில் இருந்து தமிழ்த் தொண்டு புரிபவர்கள் அவர்கள். அன்று கீழே கூடத்தில் படுத்திருந்தார்கள். அது அவர்களுக்கு வழக்கம் இல்லையாதலால், நான் உள்ளே புகுந்து அவர்களைக் கண்டவுடன் சற்றுத் திடுக்கிட்டேன். அருகில் சென்று, ”ஏன் இப்படி?” என்று கேட்டேன். ”ராத்திரி கீழே விழுந்து விட்டேன் ” என்றார்கள். ஐயரவர்களுடைய குமாரர் ஸ்ரீகல்யாணசுந்தாம் ஐயரவர்கள் உள்ளே யிருந்து வந்தார்.

“ராத்திரி தொப்பென்று ஏதோ சத்தம் கேட்டது. நான் விழித்து எழுந்து வந்து பார்த்தேன். மாடிப் படியின் கீழ் இவர்கள் விழுந்து விட்டார்கள். ஒருவரையும் எழுப்பாமல் தாமே எழுந்திருக்கப் பார்த்தும் முடியவில்லை. கால் சுளுக்கிக் கொண்டது போல் இருக்கிறது. எழுந்து காலை ஊன்ற முடியவில்லை. நான் எடுத்துக் கூடத்திலேயே படுக்கச் செய்தேன் ” என்றார்.

" இது சாதாரணச் சுளுக்குத் தான். விளக்கெண்ணெய் போட்டு நீவினால் சரியாகிவிடும். ஒன்றும் கவலைப்பட வேண்டாம் “ என்று படுத்தபடியே ஐயரவர்கள் சொன்னார்கள்.

இரவில் கீழே இறங்கி வந்தால் நிதானமாக எழுந்து வருவார்கள். யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்புவது இல்லை. அன்றும் அப்படியே வந்திருக்கிறார்கள். கடைசிப் படிக்கட்டிலிருந்து தரையில் கால் வைக்கும்போது நிதானம்  தவறி விழுந்து விட்டார்கள்.
பாதம் வீங்கி யிருந்தது. சுளுக்காக இருக்குமென்று எண்ணெய் தடவி நீவினார்கள். வலி வாங்க வில்லை. பிறகு ஏதேதோ மருந்து தடவினார்கள். வீக்கம் வடியவில்லை. வர வர அதிகமாயிற்று. அதோடு ஜூரமும் வந்து விட்டது. வழக்கமாகக் கவனிக்கும் குடும்ப டாக்டர் வந்து பார்த்தார். மருந்து போட்டார். வீக்கம் தணிந்த பாடில்லை. ஜூரமும் குறையவில்லை. ஜூரம் அதிகமாக ஆக, உடலில் மெலிவும் வேதனையும் அதிகமாயின.

’ஆபரேஷன்’ செய்ய வேண்டும் என்ற நிலை வந்து விட்டது. அப்போது அவர்களுக்கு எழுபத்தாறு வயசு. 1930-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் நடந்தது இது. ஒரு நாள் ஐயரவர்களுக்கு நினைவே இல்லை. ஜூரம் அவ்வளவு கடுமையாக இருந்தது.

தம்முடைய உடம்பு அசெளக்கியமாக இருந்தும் அவர்களுக்குத் தமிழ் வேலையிலே ஞாபகம். அப்போது அவர்கள் தம்முடைய ஆசிரியராகிய பிள்ளையவர்களுடைய சரித்திரத்தை எழுதிக்கொண்டிருந்த காலம். நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தொகுத்து வைத்த குறிப்புக்களை யெல்லாம் ஒழுங்கு படுத்தி, வருஷ வாரியாகப் பிரித்துப் பதிந்து கொண்டு சரித்திரத்தை எழுதி வந்தார்கள். அதை எழுதும்போது அவர்களுக்கு மீட்டும் இளமை வந்துவிட்டது போன்ற ஊக்கம் உண்டாயிற்று. தமிழ்ப் பாடம் சொல்வதற்கு ஏற்ற தமிழறிவையும் பாடம் சொல்லும் திறமையையும், கவி பாடும் ஆற்றலையும் தம் முடைய ஆசிரியரிடமிருந்து ஐயரவர்கள் கற்றுக் கொண்டார்கள். அந்த மகா வித்துவான் 1815-ஆம் வருஷம் முதல் 1876-ஆம் ஆண்டு வரையில் இவ்வுலகில் வாழ்ந்திருந்தார். 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐயரவர்கள் தம்முடைய பதினாறாம் பிராயத்தில் பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச் சேர்ந்தார்கள். அது முதல் அப்புலவர் பெருமானுடைய இறுதிக் காலம் வரையில் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார்கள். ஆறு வருஷ காலம் அவரிடம் பாடம் கேட்டார்கள்.

ஐயரவர்களுடைய குரு பக்திக்குச் சமானமாகத் தம் ஆசிரியரிடம் பக்தி யுடையவர்களை இனிமேல் தான் காண வேண்டும். ஐயரவர்களிடம் நேரில் பழகியவர்களுக்கு அவர்களுடைய குரு பக்தியின் ஆழம் நன்றாகத் தெரிந்திருக்கும். எப்போதும் பிள்ளையவர்கள், பிள்ளையவர்கள் என்றே சொல்வார்கள். பெயர் முழுவதையும் சொல்ல மாட்டார்கள்.

ஐயரவர்களுக்குத் தம் ஆசிரியரிடம் இருக்த பக்திக்கு ஒரு சிறிய உதாரணம் சொல்ல விரும்புகிறேன். பிள்ளையவர்கள் சரித்திரத்தில் சில இடங்களில் தான் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். மற்ற இடங்களிலெல்லாம் பிள்ளையவர்கள், புலவர்பெருமான், கவிஞர் சிகாமணி, கவிஞர்பிரான், இச் சரித்திரத் தலைவர், மகாவித்துவான், புலவர் கோமான், எங்கள் ஆசிரியர் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஒரிடத்தில் இந்த முறைக்குச் சிறிது மாறுபாடு அவசியமாக இருந்தது. பிள்ளையவர்களுடைய இளமைக் காலத்தைப் பற்றி எழுதிக் கொண்டு வந்தார்கள். ” மீனாட்சிசுந்தாம் பிள்ளைக்கு ஐந்து பிராயமானவுடன் சிதம்பரம் பிள்ளை வித்தியாரம்பஞ் செய்வித்துத் தம் பள்ளிக்கூடத்திலேயே கல்வி பயிற்றத் தொடங்கினார் ” என்று எழுதினார்கள். ஒர் அடையும் இன்றி, மீனாட்சிசுந்தாம் பிள்ளையென்று எழுதியது இந்த ஒரே முறைதான். அப்படி எழுதும் போது அவர்கள் மனம் சமாதானம் பெறவில்லை. ஏதோ தவறு செய்தது போலத் தோன்றியது. உடனே அடிக்குறிப்பு ஒன்றை அங்கே சேர்த்தார்கள். 'பிள்ளையவர்களை, இவ்வாறு பெயர் குறித்தெழுதுவதற்கு அஞ்சுகிறேன். என்று அந்தக் குறிப்பு இருப்பதை இப்போது பிள்ளையவர்கள் சரித்திரத்தின் முதற் பாகத்தில் இரண்டாவது அத்தியாயத்தில் பார்க்கலாம்.

 பிள்ளையவர்கள் சரித்திரம் பெரும்பாலும் எழுதி முடிந்தாயிற்று. இறுதிப் பகுதி மாத்திரம் பாக்கியாக நின்றது. ஒரு வழியாகச் சரித்திரத்தை  முற்றும் எழுதி விட்டு, இடையிலே சேர்க்க வேண்டியதைச் சேர்க்க எண்ணினார்கள், எங்கள் ஆசிரியப்பிரான்.  எத்தனை குறிப்புகள், எத்தனை பேர் சொன்ன செய்திகள், எத்தனை கடிதங்கள் ! ஒரு பீரோ நிறையச் சரித்திரத்துக்கு வேண்டிய குறிப்புகள் இருந்தன. யார் என்ன சொன்னாலும் எழுதி வைத்தார்கள்.  

அந்தக் குறிப்புகளை நாற்பத்தைந்து ஆண்டுகளாகச் சேகரித்து வந்தார்கள். என்றால், எவ்வளவு இருக்கும் என்பதை ஊகித்து உணரலாம். அவ்வளவையும், ஒரு முகப்பட்ட சிந்தையோடு: பார்த்தார்கள். எங்களையும் பார்க்கச் செய்தார்கள். ஆயிற்று, சரித்திரம் நிறைவேறப் போகிறது என்ற சமயத்தில் அவர்கள் கீழே விழுந்து விட்டார்கள்.
அவர்கள் மனத்தில் இளமை இருந்தாலும் உடம்பில் முதுமைத் தளர்ச்சி இருந்தது. அதனால், வந்த ஜூரம் நன்றாகப் பற்றிக் கொண்டது. புறங்காலில் உள்ள வீக்கமே ஜூரத்துக்கும் அதனால் உண்டாகும் ஞாபகப் பிசகு முதலியவற்றிற்கும் காரணம் என்று தெரிய வந்தது. அந்த வீக்கம் வடியும் நிலையைக் கடந்து நின்றது ; ஆபரேஷன் செய்யாமல் இதற்கு மாற்றில்லை என்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்தார்கள். ' இந்த வயசில் ஆபரேஷன் செய்தால் உடம்பு  தாங்குமா?’ என்று யோசித்தார்கள் .

ஐயரவர்களுக்குத் தெளிவு பிறந்த போதெல்லாம் பிள்ளையவர்களுடைய சரித்திர ஞாபகமே இருந்தது. “ அதை  இங்கே கொண்டு வா; கொஞ்சம் எழுதலாம்” என்பார்கள். கவலைக்கு இடமான அந்த நிலையிலா அதை எழுதுவது?  எழுதத்தான் முடியுமா? ஏதோ ஆவலால் அப்படிச் சொல்லுகிறார்கள் என்று நாங்கள் எண்ணினோம்.

 " என்ன செய்வது ?” என்ற கவலை ஐயரவர்கள் குமாரராகிய கல்யாணசுந்தரம் ஐயருக்கு உண்டாயிற்று. மற்றவர்களும் வழி தெரியாமல் திகைத்தார்கள். அப்பொழுது சிலர், டாக்டர் ரங்காசாரியார் வந்து பார்த்தால் எதாவது வழி பிறக்கும் ' என்றார்கள். ரங்காசாரியார் ஐயரவர்களிடம் அன்புடையவர். அவருடைய கை பட்டாலே நோய் தீரும் என்று பலர் நம்பினர்கள். அதற்கு ஏற்றபடியே அவர் தம்மிடம் வந்தவர்களைக் காலன் வாயிலிருந்து மீட்டார்.

டாக்டர் ரங்காசாரியார் வந்து பார்த்தார். தம்முடைய வீட்டுக்கு ஐயரவர்களின் குமாரரை வரச் சொன்னார். ”இது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆபரேஷன் செய்து விடலாம். உங்கள் வீட்டிலேயே அதை நடத்துகிறேன்.” என்று அபயம் அளித்தார்.

ஆபரேஷனுக்கு நாள் குறிப்பிட்டாயிற்று. பிற்பகல் இரண்டு மணி யளவுக்கு அது நடைபெற இருந்தது. டாக்டர் ரங்காசாரியாரவர்கள் வருகிறார் என்று ஆறுதல் இருந்தாலும் கத்தியினால் சீவுவது என்றாலே பயந்தானே? ஐயரவர்களோ பழுத்த பழம். வேறு விதமாக ஆகி விட்டால்-? அதை நினைக்கவே பயமாக இருந்தது.

ஐயரவர்களுக்கும் ஆபரேஷன் நடக்கப் போகிறது என்பது தெரியும். இறைவன் காப்பாற்றுவான் என்று உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.  ஆனாலும் இடையிடையில் சற்றே சலனம் உண்டாகும்.

” நிச்சயமாக எனக்கு நரகம் இல்லை. மறுபடியும் தமிழ் நாட்டில்தான் பிறப்பேன். பல காலமாகச் சேகரித்து வைத்திருக்கும் இந்த எடுகள், நான் பிறக்கும் இடத்தில் கிடைக்குமா ? நான் படித்த புத்தகங்களில் எல்லாம் மார்க்' பண்ணி யிருக்கிறேனே. அந்தப் புத்தகங்களை அடுத்த பிறவியில் நான் காண முடியுமா? இவற்றை நினைக்கும்போது தான் எனக்குத் துயரம் உண்டாகிறது. எல்லாவற்றையும் விடப் பெரிய துக்கம் ஒன்று இருக்கிறது. பிள்ளையவர்களுடைய சரித்திரத்தை முடிக்காமல் போய் விடுவேனே என்று நினைக்கும்போது என் மனசு தவிக்கிறது. ஈசுவான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறானோ?” என்று தமிழ் வழங்கிய தந்தையார் அவர்கள் சொல்வார்கள்.

டாக்டர் வந்து விட்டார். ஐயரவர்கள் அஞ்சலி செய்தார்கள். '' இந்தச் சரீரம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருந்தால் அரையும் குறையுமாக இருக்கிற சில காரியங்களை நிறைவேற்ற முடியும்’ என்று சொன்னார்கள். டாக்டர் புன்னகை பூத்தார். ” இது என்ன, சின்ன ஆபரேஷன் தான். நீங்கள் இன்னும் பல பெரிய காரியங்களைச் செய்யப் போகிறீர்கள் ” என்று சொல்லிப் பரபர வென்று தம் காரியத்தில் கண்ணாக வேலை செய்யத் தொடங்கினார்.

நான் அருகில் நின்றிருந்தேன். அந்த மேதாவி, மகான், அவதார புருஷர் விறுவிறு வென்று தம் வேலையை நடத்தினார். என்ன வேகம்! என்ன நுட்பம்! உடம்பைப் படைத்த பிரம தேவனுக்குக் கூட இந்த உடம்பில் இன்ன இடத்தில் இன்னது இருக்கும் என்பது மறந்து போயிருக்கும். அவருக்கோ ஒவ்வொரு மயிரிழையும் தெரிந்திருந்தது. அவர் சஸ்திர சிகிச்சையில் கலைஞர். கர கர வென்று அறுத்தார். ஐந்தே நிமிஷத்தில் தம் வேலையை முடித்துக் கட்டுக் கட்டி விட்டார். அவர் மனிதப் பிறவி அல்ல, தேவ புருஷர் என்று எண்ணி வியந்தோம்.

ஐயரவர்கள் மெல்ல மயக்கம் தெளிந்து கண்ணை விழித்தார்கள். என்ன இது, மருந்து நெடி வீசுகிறதே!” என்றார்கள். ” எப்படி இருக்கிறது?’ என்று டாக்டர் ரங்காசாரியார் கேட்டார்.

” ஆபரேஷன் செய்யவில்லையா?”

 ”ஆபரேஷன் ஆகிவிட்டது” என்று டாக்டர் சொன்னதை அவர்கள் நம்ப வில்லை. ”' அதற்குள்ளேயா? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே?” என்றார்கள்.

” இன்னும் ஒரு வாரம் ஜாக்கிரதையாக இருங்கள் சரியாகப் போய்விடும்”  என்று . சொல்லி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார் டாக்டர் ரங்காசாரியார். அதற்குப் பிறகு ஒரிரு முறை அவர் நேரே வந்து பார்த்தார். குடும்ப டாக்டரையே கவனித்துக் கொள்ளச் சொன்னார்.

ஆபரேஷன் செய்த பிறகு, ஜுரம் வராமல் இருக்க வேண்டுமென்று, கடுமையான நிபந்தனைகளை டாக்டர் விதித்தார். ஆகாரத்தில் நியமம் : உண்டு. “அதிகமாகப் பேசக் கூடாது, வேலையையும் கவனிக்கக் கூடாது. மூளைக்கு வேலையே கொடுக்கக் கூடாது” என்று கண்டிப்பாக டாக்டர் சொன்னார். அப்படியே கவனித்துக் கொண்டோம்.

ஐயரவர்களுடைய குமாரர் கல்யாணசுந்தரம் ஐயர் ஹை கோர்ட்டில்
உத்தியோகம் பார்த்தார். தம் தந்தையாரின் உடல் நிலை காரணமாக அவர் லீவு பெற்றுக் கொண்டிருந்தார். லீவு முடிந்தவுடன் தம் உத்தியோகத்துக்குப் போய் வந்தார். காலையிலும் மாலையிலும் வீட்டில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். மற்ற நேரங்களில் இன்னது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லிவிட்டுப்  போய்விடுவார். நான் எப்போதும் உடனிருந்து கவனித்துக் கொள்வேன்.

எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலை உண்டாயிற்று. பகல் நேரங்களில் ஐயரவர்கள், ” அந்தச் சரித்திரத்தை எடுத்துக் கொண்டு வா; முடித்து விடலாம்” என்பார்கள். மூளைக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று திட்டமாக டாக்டர் சொல்லி யிருக்கிறபோது, ஐயரவர்கள் கட்டளையை எப்படி நிறைவேற்ற முடியும்? நான் எதாவது காரணம் சொல்வேன். டாக்டர் சொன்னதைச் சொன்னால், ”அவர் அப்படித் தான் சொல்வார். நான் ஆபரேஷனில் பிழைத்து வந்ததே இதற்காகத்தானே? நான் இனிமேல் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்வதற்காகவா பிழைத்திருக்கிறேன்!” என்று கேட்பார்கள். இந்த நிலையிலும் ஹாஸ்யமாகப் பேசுவதை அவர்கள் மறக்கவில்லை. மீட்டும் ஏதாவது துன்பம் வந்தால் என்ன செய்வது? உடம்பை அலட்டிக் கொண்டால் ஜூரம் வந்து விடும் என்று டாக்டர் சொன்னார் ” என்று நான் சொல்வேன்.

” ஜூரம் வரட்டுமே ! அதைச் செய்து ஜூரம் வருவதற்கு முன் அதைச் செய்ய வில்லையே என்ற ஏக்கத்தினால் எனக்கு உண்டாகும் வேதனையை டாக்டர் அறிவாரோ ? நான் திடீரென்று போய் விட்டால் அந்தச் சரித்திரம் முற்றுப் பெறாமல் நின்று விடுமே! ஜூரம் வந்தாலும் குற்றம் இல்லை. பிள்ளையவர்கள் சரித்திரத்தை முடித்து விட்டேன் என்ற நினைவோடு இறந்து போனால் சாந்தியோடு இறப்பேன்”

“ இந்த வார்த்தைகளெல்லாம் இப்போது எதற்கு?”

” ஆமாம். என்னைப் பிழைக்க வைக்க எண்ணி நீங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு என்னைக் கொல்லாமல் கொல்கிறீர்கள். எனக்கு வேண்டியதைச் செய்ய விடாமல் என்னை உயிர்க்கழுவில் வைத்துச் சித்திரவதை செய்கிறீர்கள். சோறு தின்னவும் பணம் சம்பாதிக்கவும் பட்டம் வாங்கவும் நான் பிறக்கவில்லை. என் வேலையை நான் 
செய்யாமல் இருப்பதைவிட இறந்து விடுவதே மேல்......”

 வார்த்தைகள் கோபக் கனலில் தெறித்து விழும் சுடர்ப்பொறிகளாக வந்தன. அவர்களுடைய உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ள வேகம் - பிள்ளையவர்கள்  சரித்திரத்தை முடித்துவிட வேண்டும் என்ற வேகம் - எவ்வளவு மிகுதியாக இருக்கிறதென்பதை உணர்ந்தேன். அவர்களுடைய வார்த்தைகள்  என் கண்ணில் நீரை வருவித்தன.  நான் என்ன செய்வது ? கடவுள் காப்பாற்றுவார் என்ற உறுதியோடு பிள்ளையவர்கள் சரித்திரம் எழுதிய கட்டை எடுத்து வந்தேன்.  

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தேக அசெளக்கிய மடைந்திருந்த செய்தியைச் சொல்லும் பகுதி வரையில் சரித்திரம் உருவாகி யிருந்தது. அதற்கு மேல் நிகழ்ந்தவற்றை ஐயரவர்கள் சொல்லத் தொடங்கினர்கள். நான் எழுதிக் கொண்டு வந்தேன். திருவாவடு துறை மடத்தில் குருபூஜை சமீபித்துக் கொண்டிருந்தது. அதற்காகப் பலர் வெளியூர்களி லிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது பிள்ளையவர்களுடைய நோய் அதிகமாகிக் கொண்டே  வந்தது ” - இந்தப் பகுதிகளை அன்று : எழுதி முடித்தேன்.

 மறுநாளும் தொடர்ந்து எழுதச் சொன்னார்கள். டாக்டர் வராத நேரம் பிற்பகல். அப்போது ஐயரவர்களுடைய குமாரரும் காரியாலயத்துக்குப் போய் விடுவார். அந்த நேரத்தில் பிள்ளையவர்கள் சரித்திர கைங்கரியம் திருட்டுத்தனமாக நடந்து வந்தது ; வேகமாகவே நடந்தது.

 தனுக்கோடி என்ற வைத்தியன், பிள்ளையவர்கள் கையைப் பிடித்துப் பார்க்கிறான். ” இன்னும் மூன்று பொழுதிலே தீர்ந்து விடும்’ என்று ’ வெட்டென’ ச் சொல்லி விட்டுப் போகிறான். அப் புலவர் பெருமான் சில கடிதங்களை எழுதச் செய்கிறார். அக்கினிலிங்க சாஸ்திரிகள் என்ற வடமொழி வித்துவான் அவரைப் பார்க்க வருகிறார். அவர் ஒரு சுலோகத்தைச் சொல்கிறார். சங்கராசாரியார் செய்த சிவானந்த லஹரியி லுள்ள ”ஸதாமோஹாடவ்யாம்' என்ற சுலோகம் அது. அதைச் சொல்லிப் பொருளையும் சொல்கிறார். அந்தக் கவிஞர் அதை அப்போதே செய்யுளாக  மொழி பெயர்க்கிறார்.

 இப்படி வரும் நிகழ்ச்சிகளை ஐயரவர்கள் சொல்லச் சொல்ல நான் எழுதினேன். பிள்ளையவர்கள் வாழ்க்கையின் இறுதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரக்ஞை தவறுகிறது. மறுபடியும் சிறிது தெளிவு ஏற்படுகிறது. அப்போது அவர், ”திருவா” என்று மாத்திரம் குறிப்பிக்கிறார். அதைக் கேட்டவுடன் மாணாக்கராகிய ஐயரவர்கள் திருவாசகத்தை எடுத்து வந்து அடைக்கலப் பத்தை வாசிக்கிறார்கள்.

'கண்ணை மூடிக்கொண்டே இவர் கேட்டு வந்தார். அப்பொழுது இவருக்கு உடலில் ஒர் அசைவு உண்டாயிற்று. உடனே நாங்கள் சமீபத்திற் சென்றபொழுது வலக் கண்ணைத் திறந்தார். அதுதான் ஸ்ரீ நடராஜ மூர்த்தியினுடைய குஞ்சித சரணத்தை இவர் அடைந்த......”

சொல்லிக் கொண்டே வந்தவர்களுக்கு மேலே பேச முடியவில்லை. துக்கம் கப்பிக் கொண்டது. அவர்கள் அப்போது தியாகராஜ விலாசத்தில் இருக்க வில்லை. திருவாவடுதுறையில் பிள்ளை யவர்களின் நல்லுடலத்துக்கு அருகில் இருந்தார்கள். நினைவுலகத்தில் எத்தனை வருஷங்களுக்கு முன்னே வேண்டுமானலும் பிரயாணம் செய்யலாம் அல்லவா ?

சிறிது நோம் கழித்து அவர்கள் மேலும் சொல்லிக்கொண்டு போனார்கள்.

பிள்ளையவர்கள் சடலத்தை எடுத்துச் செல்கிறார்கள். அப்போது நிகழ்ந்தவற்றைச் சொல்லும்போது ஐயரவர்கள் கண்ணீர் விட்டது மாத்திரம் அன்று ; விம்மி விம்மி அழுதார்கள். நடுநடுவே நிறுத்தி நிறுத்திச் சொன்னார்கள்.

' வடமொழி வித்துவான்களாகிய அந்தணர்களின் கூட்டத்திலிருந்து 'தமிழ்க் காளிதாஸா! தமிழ்க் காளிதாஸா ! என்ற சப்தமும், தமிழ் வித்துவான்கள் வாக்கிலிருந்தும், அயலூரிலிருந்து வந்திருந்த இவர்  மாணாக்கர் கூட்டத்திலிருந்தும், கவிச் சக்கரவர்த்தியே! தமிழ்க் கடலே ! எங்களுக்கு அரிய விஷயங்களை இனி யார் அன்புடன் சொல்வார்கள்; யாரிடத்தில் நாங்கள் செல்லுவோம்? எங்களைக் கவனிப்பார் யார்?' என்ற ஒலியும், வேறொரு சாராரிடத்திருந்து, குணக்  கடலே! சாந்த சிரோமணி ! என்ற சப்தமும் உண்டாயின. உடன் சென்ற  அபிஷிக்தர்கள் திருவாசகம் சொல்லிக் கொண்டு போகையில், இனி மேல் திருவாசகத்திற்கு மிகத் தெளிவாகவும் அழகாகவும் யார் பொருள் சொல்லப் போகிறார்கள்?’ என்று என் தந்தையார் முதலியோர் பலர் சொல்லி மனம் உருகினார்கள்.

இந்தப் பகுதியை எழுதியபோது எனக்கே துயரம் தாங்க முடியவில்லை. கண்ணீர் என் எழுத்தைக் கலைத்தது.  பிள்ளையவர்கள் சரித்திரத்தின் இரண்டாம் பாகத்தில் 10-ஆம் அத்தியாயமாகிய தேக அசெளக்கிய நிலை : என்னும் பகுதியில் கடைசியிலுள்ளவற்றை யார் படித்தாலும் நிச்சயமாகக் கண்ணீர் துளிக்காமல் இருக்கமுடியாது. எழுதுகிறவர் துக்கத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து எழுதியதாதலின் படிக்கிறவர்களுக்கும் அந்த உணர்ச்சி மிகுகிறது.

அந்த அத்தியாயத்தை எழுதி முடித்தவுடன் ஐயரவர்களுக்கு உண்டான, திருப்தியை அளவிட முடியாது. அப்போது விட்ட கண்ணீரால் அவர்களுடைய நோய் கழுவப் பெற்றதுபோல் தோன்றியது. ஆறுதலுடன் பெருமூச்சு விட்டார்கள்.

தம் ஆசிரியருடைய வாழ்க்கை வரலாற்றை முடிக்காமல் வாழ்க்கை . முடியக் கூடாது என்று அவர்கள் எண்ணியது எண்ணியபடி நிறைவேறியது. சரித்திரம் மேலும் பல தடவை மெருகூட்டப்பெற்று, 1933-ல்  முதற் பாகமும், 1934-ல் இரண்டாம் பாகமும் வெளியாயின.

இப்போதும் அந்தச் சரித்திரத்தில் மேலே குறிப்பிட்ட பகுதியைப் படிக்கும்போது, ' அது மையில் தோய்த்து எழுதியது அன்று, கண்ணீரில் தோய்த்து எழுதியது  என்ற எண்ணம் எனக்கு உண்டாகிறது:

 [ நன்றி: விகடன் ]   

தொடர்புள்ள பதிவுகள்: 

புதன், 6 ஏப்ரல், 2016

மீனாட்சிசுந்தரம் பிள்ளை -1

சாலப் பெரிய ஆசிரியர் பிரான்!
ம.வே. பசுபதி


ஏப்ரல் 6. இன்று மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 201-ஆவது பிறந்த நாள்.


தமிழறிஞர் ம.வே.பசுபதி தினமணியில் ஏப்ரல் 2015 -இல் எழுதிய கட்டுரை இதோ! 
========

அழகோ அழகு; அவ்வளவு பேரழகு, தான் பெற்றெடுத்த தகத்தகாயத் தங்கக் குழந்தைகள்! அந்தக் குழந்தைகளைச் சற்றும் தயக்கமின்றி முழு மனதுடன், பெற்றெடுத்த பெருமகனாரே தானமாகக் கொடுத்துவிட்டாரென்றால் அந்த அதிசய மனிதரைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

கற்பனைகள், வர்ணனைகள், நீதிகள், நியதிகள் என அனைத்தும் கருக்கொண்டு, சொற்கட்கு இலக்கண அமைதிகளுடன் உருக்கொண்டு, ஓர் இலக்கியம் வெளிப்படுவது மகப்பேற்றுக்கு ஒப்பானது. சொல்லணி, பொருளணிகளை அணிவித்துத் தன் படைப்பைக் காணும் கவிஞனின் நிலை, நல்ல தாய் அடையும் மகிழ்ச்சியைக் காட்டிலும் நல்லதாய் அமையும்.

காரணம் தாய் பெறும் குழந்தை பிரம்மப் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை உண்டு. கவிஞனின் இலக்கியக் குழந்தை கலைமகள் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை இல்லை; அழிவதில்லை. "மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வதுபோல் மாயா; புகழ் கொண்டு மற்றுஇவர் செய்யும் உடம்பு' - என்பது குமரகுருபரரின் திருவாக்கு.

குசேலோபாக்கியானம், சூதசம்ஹிதை என்னும் மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்புகளை உருவாக்கி, "இவற்றை உங்கள் பெயரில் வெளியிட்டுக் கொள்ளுங்கள்' என்று வல்லூர் தேவராசப் பிள்ளைக்குக் கொடுத்தவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. வல்லூரார் "வேண்டாம்' என மறுத்தார். மகாவித்துவான் வற்புறுத்தித் திணித்தார்.

மகாவித்துவான் எப்பொழுது இந்த இலக்கியக் கொடை கொடுத்தார் என்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. வல்லூர் தேவராசப் பிள்ளையின் அழைப்பின்பேரில் மகாவித்துவான் பெங்களூருக்குச் சென்று சில காலம் தங்கியிருந்து அவருக்கும் பிறருக்கும் சில நூல்களைப் பாடம் சொன்னார்.

பின்னர் திருச்சிக்கு மீள் பயணம் மேற்கொண்ட நாளில், மகாவித்துவானைப் பிரிய மனமின்றித் தவித்த தேவராசர், மரியாதை நிமித்தமாக ஐயாயிரம் ரூபாய் காணிக்கை செய்தார். அன்றைய ஐயாயிரம் இன்றைய கோடிக்குச் சமமென்றே சொல்லலாம்.

நமக்கு இவ்வளவு அதிகமான செல்வமா என மகாவித்துவானின் மனம் மறுதலித்தது. "காணிக்கை' என்று சொல்லிக் கொடுத்துவிட்டதால் மறுக்க முடியவில்லை! அதனினும் மேலான குருவின் வாழ்த்தளிப்பாக, இலக்கியங்களை வழங்கினார். மகாவித்துவானே வென்றார்.

தமிழில் 11,661 செய்யுள்கள் செய்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பரே. அவற்றில் 1,293 பாடல்களை "மிகைப்பாடல்கள்' என்று தனிமைப்படுத்துவதும் உண்டு. அப்படி ஒதுக்கினாலும் 10,368 பாடல்கள் கம்பர் இயற்றியவையே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

தமிழில் நூறாயிரம் செய்யுள்கள் செய்தவர் மகாவித்துவான். இதனால் இவரைப் பத்துக் கம்பர் என்று குறிப்பிடலாம். இதுவரை அச்சில் வெளிவந்துள்ள மகாவித்துவானின் பிரபந்தங்கள், புராணங்கள், சரித்திரச் செய்யுள் நூல்கள் முதலியன மொத்தம் 75.

மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு நேரம் காலமே கிடையாது. எந்த நேரத்திலும் எந்தப் பணியின் ஊடேயும் பாட போதனை நடைபெறும். நள்ளிரவில் மாணவர்களை அழைத்து "திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி'யைப் பாடம் சொன்ன வரலாறும் உண்டு.

வெளியூர்களில் இருக்கும்போது மாலை, இரவு நேரங்களில் அரங்கேற்றம் செய்வார். அன்றைய நாள் காலையில் இயற்றிய கவிதைகளை அவையினர் முன்னே சொல்லி நயங்களுடன் விளக்குவார். மகாவித்துவான் பத்துப் பதினைந்து நாள்கள் ஓர் ஊரில் தங்கினாரென்றால் ஆயிரம் பாடல்களுக்கு மேற்பட்டதான ஒரு தலபுராணம் உருவாகியிருக்கும். அல்லது சில சிற்றிலக்கியங்கள் உருவாகியிருக்கும்.

அவர், கவிதைகளை அதிவேகமாகவும் சொல்வதுண்டு. பல மணி நேரம் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பாடல்களைச் சொல்வதும் உண்டு. சொல்லச் சொல்ல எழுதுவதையே தொழிலாகக் கொண்ட சிலர் அக்காலத்தில் இருந்தனர். அவர்களை ஏடெழுதுவோர் அல்லது கையேட்டுப் பிள்ளை என்பர்.

ஓர் அவசரத் தேவைக்காக மகாவித்துவான் சொல்லும் பாடல்களை ஏட்டில் எழுத ஒருவர் நியமிக்கப்பட்டார். தன் தொழில் திறமையின் பேரில் அளவுக்கதிகமான நம்பிக்கை கொண்டவர் அவர். அதனால் அவரிடம் ஆணவப் பேச்சும் உண்டு.

"என் கை வலிக்கும்படி விரைவாகவும் அதிகமாகவும் கவிதை சொன்னவர் எவரும் இலர்' என்று ஒருநாள் அதிகாலையில் மகாவித்துவானின் மாணவர்களிடம் அவர் கூறினார்.

அன்று காலை ஏழு மணிக்கு மகாவித்துவான், நாகைக் காரோணப் புராணம் சுந்தர விடங்கப் படலக் கவிதைகள் சொல்லத் தொடங்கினார். கற்பனைச் சூறாவளிகளுடன் கவிமழை கனமழையாகப் பொழிந்தது. பகல் பத்து மணிக்குள் நீராடிப் பூசைக்குப் போவதை வழக்கமாகக் கொண்ட அவர், அன்றைக்குக் கவிதையில் ஒன்றிக் காலத்தை மறந்தார்.

பதினொரு மணியளவில், ஏடெழுதுபவரின் வலக்கரத்தில் ரத்தம் கட்டிவிட்டது. வலியைத் தன் மனவலிமையால் தாங்கிக் கொண்டு தவித்தபடியே எழுதினார். பன்னிரண்டு மணி ஆயிற்று. மகாவித்துவான் கவி சொல்வதை நிறுத்தவில்லை. ஏடெழுதுவோரின் தாங்கும் சக்தி விடைபெற்றுக் கொண்டது. எழுத்தாணியைக் கீழே வைத்தார். ஓலைகளை அடுக்கிக் கட்டி வைத்தார். மகாவித்துவானின் திருவடிகளில் விழுந்து வணங்கி "இனி என்னால் ஆகாது; என் ஆணவம் அடங்கிப் போயிற்று' என்று அலறினார்.

இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட கவிஞர்களும் தமிழறிஞர்களும், "கவி சொல்ல வல்ல நல்வித்தை' என்னும் சகலகலாவல்லிமாலையின் தொடருக்கு மகாவித்துவானே உரிய உதாரணம் என்று கைகூப்பித் தொழுதனர்.

பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் இவரிடமில்லை. தன்னிடம் தமிழ்ப் படிக்க வந்த ஏழைகளுக்கு உணவு, உறைவிடம் அளித்து நுண்ணறிவுத் தமிழ்ப் புலமை கொடுத்த தனிப்பெரும் புலமைக் கொடையாளி இவரே. கவிதைகள் பாடிச் சன்மானமாகப் பெற்ற செல்வங்களைச் சேகரித்து வைத்து மயிலாடுதுறையில் தொள்ளாயிரம் ரூபாயில் இரண்டுகட்டு வீடு வாங்கி, மாணவர்கள் தங்கிப் படிக்க வசதி செய்து கொடுத்த கருணையாளர் இவர்.

அக்காலப் புலவர்களுக்கே உரிய வறுமையை ருசிக்கவும் செய்தார்; தமக்குக் கிட்டிய வளங்களைத் தமிழார்வலர்களுக்குச் செலவழித்து ரசிக்கவும் செய்தார்.

ஊடக வெளிச்சங்கள் இல்லாத அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் "மகாவித்துவான், இந்தியா' என்று மட்டும் முகவரி எழுதி லண்டனில் அஞ்சல் செய்யப்பட்ட கடிதம் மயிலாடுதுறையில் இருந்த இவரிடம் வந்து சேர்ந்ததென்றால், "இவரின் மிகுபெரும் புலமைத் தென்றல் உலகின் பல பாகங்களிலிருந்தோர்க்கும் இதமளித்தது' என்பதுதானே பொருள்?

திருவாவடுதுறை ஆதீனம் இளைய பட்டம் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் நல்லாதரவு காரணமாகத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகரால் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டவர் இவர். இவரின் அளப்பரும் கவியாற்றலுக்கும் தமிழ் கற்பிக்கும் தனிப்பெரும் திறனுக்குமாக இவருக்கு மேற்படி சன்னிதானம் "மகாவித்துவான்' என்னும் உச்சமான விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

தக்கவருக்குத் தக்க காரணங்களால், தக்கதொரு பெரு நிறுவனம், தக்கதொரு பட்டத்தை வழங்கினால் மட்டுமே, அது அவரின் இயற்பெயரையும் தேவையற்றதாக்கி, என்றும் நிலைபெறும் என்பதற்கு மகாவித்துவானே சான்றானார். மகாவித்துவான் என்ற பட்டத்தைச் சொன்னால், திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற அவரின் திருப்பெயர் சொல்ல வேண்டிய தேவை எழுவதில்லையல்லவா?

மகாவித்துவான் படைப்புகளில் தமிழ்த் தொண்டுக்காகவே உருவாக்கிய பெருங்காப்பியப் படைப்பொன்றுண்டு. அப்படைப்பின் பெயர்தான் உ.வே.சா. தமிழ் இலக்கண, புராண, இதிகாச, சாத்திர, தோத்திர, கவித்துவம் ஆகிய அனைத்தியல்களிலும் நுண்மாண் நுழைபுலம் எய்துமாறு உத்தமதான புரத்து உத்தமரை உருவாக்கியவர் இவரே.

"மூலையிலே இருந்தாரை முன்றிற்

கழைப்பவரே

சாலப் பெரியரென் றுந்தீபற'

என்பதற்கேற்பச் சூரிய மூலையிலே உதித்த சுடர்க் கொழுந்தை, குன்றேறி ஒளிவிட வழிசெய்த "போதனைப் புனிதர்' மகாவித்துவானே ஆவார்.

தம் குருநாதரின் சரித்திரத்தை விரிவாக எழுதி வெளியிட்டும், அவரின் நாற்பத்திரண்டு கவிதைப் படைப்புகளை இரு தொகுதிகளாக வெளியிட்டும் அவருக்குப் புகழஞ்சலி செய்த நன்மாணாக்கரும் உ.வே.சா.வே.

உ.வே.சாமிநாதய்யருக்கு மிகப் பிடித்த பேச்சு என்றால் மகாவித்துவானைப் புகழ்வதே. உ.வே.சா. பெற்ற புகழில் பெரும் பங்கு இந்த ஆசிரியப் பிரானின் திருவடிகட்கே உரியன.

இன்று நாம் மகாவித்துவானைப் பற்றிப் பேசுகிறோம், தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால் அதற்குக் காரணமும் அவரது மாணாக்கர் உ.வே.சா தான். "தமிழ்த் தாத்தா' தனது குருநாதர் "மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் எழுதிப் பதிவு செய்திருக்காவிட்டால், நாம் அந்த மாமேதையைப் பற்றித் தெரிந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.

ஆசிரியர்களால் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் உருவாக்கும் மாணவர்களால்தான் ஆசிரியர்கள் அறியப்படுகிறார்கள். இதற்கு மகாவித்துவானும் அவர் உருவாக்கிய மாணவரும்தான் எடுத்துக்காட்டு!




( கட்டுரையாளர்: முன்னாள் முதல்வர், திருப்பனந்தாள் தமிழ்க் கலைக் கல்லூரி.) 

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்: