சனி, 25 மே, 2013

முருகன் -2

சென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி 
குருஜி ஏ.எஸ்.ராகவன் 


’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரில் 29-ஆவது கட்டுரை இது. ஓய்வுக்குப் பின் டில்லியிலிருந்து ’சென்னை நகர் மேவிய’ ஒரு குருமணி எழுதிய கட்டுரை.  முத்துக்குமரன் என்ற பெயரை உச்சரிக்கும்போதே மனத்திலே ஒரு குழந்தையைக் கொஞ்சி உச்சி முகரும் ஆனந்தம் ஏற்படும். அந்தத் திருப்பெயரைத் தாங்கி தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்தில் வளர் செல்வன் நம் மனத்துள் தோன்றும் பிம்பத்தின் பிரதிபலிப்பாகவே சின்னஞ்சிறு மூர்த்தியாகக் காட்சி தருகிறான். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்லத் தேவையில்லை! கீர்த்தியைக் காட்டிலும் பெரிது மிகப் பெரிது அவனது தனிப்பெருங் கருணை. அதனால்தானே, படிப்பு வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு ஆன்மத்தேடலில் இறங்கிய ராமலிங்க சுவாமிகளை ஆட்கொண்டு, உருக்கும் தமிழில் அருட்பா பாட வைத்தான். தனியறையில் கண்ணாடி முன் தீபம் ஏற்றி தியானத்தில் இருக்கையில் இளைஞன் ராமலிங்கத்தின் முன் முருகன் தோன்றியதாகவும் அதன் பின்னர் அவனருளால் ஆட்கொள்ளப்பட்டு கவிதை பாடியதாகவும் அவர் வாழ்க்கை சரித்திரம் சொல்கிறது.

  சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந்  
   தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர் 
  கூர்கொண்ட வேலும் மயிலுநற் கோழிக் கொடியும் அருட் 
   கார் கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே

  என்று முருகனை தரிசித்த கணம் முதல் வள்ளலார் தீந்தமிழ்க்கவி பாடலானார்.

  வள்ளலார் வரிந்து வரிந்து பாடிய ஷண்முகத் தெய்வமணி எப்படித்தான் இருக்கிறான் என்று நாமும் பார்த்து விடுவோமே! (பழைய?) பூக்கடை பஸ் ஸ்டாண்ட் - அங்கிருந்து பிரியும் இராசப்பா செட்டி வீதி. முத்துக்குமாரஸ்வாமி தேவஸ்தானம் என்ற பெயருடன் கம்பீரமாக நிற்கிறது பழம்பெரும் கோயில். வடதிசை நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். உள்ளே போய் வினாயகரை வணங்கிவிட்டு முன்னேறினால், கிழக்குப் பிராகாரத்தில் ஒரு பெரிய பக்தர் கூட்டமே கொலுவிருக்கிறது. பக்தர் என்றால் சாமானிய பக்தர் அல்ல! சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், இராமலிங்க அடிகளார் என்று பண்ணால் முருகனை அர்ச்சித்து மகிழ்ந்தவர்களின் சந்நிதிகள். கொடி மரத்தையும் கடந்து போனால் இந்த அடியார்க் குழாத்தின் மிக மூத்த முன்னோடியாம் அருணகிரிநாதர், தமக்குரிய சன்னிதியில் இருக்கிறார்.

  அர்த்த மண்டபம் - இங்கே, வள்ளலார் பாடிய சித்தி விநாயக வள்ளல், இளவலை முந்திக் கொண்டு அடியார்களுக்கு அருள் செய்யக் காத்திருக்கிறார். சூரியனார், வீரவாகுத் தேவர் என தனித்தனி சன்னிதிகளில் பரிவார தேவதைகள். அம்மையப்பர்கள் மீனாக்ஷி - சுந்தரேஸ்வரராகக் காணப்படுகிறார்கள்; வள்ளி - தெய்வானையருக்குத் தனித்தனி சன்னிதிகள்.

  மூலஸ்தானத்து கந்தஸ்வாமியின் அழகு நம்மை ஆட்கொண்டு விடுகிறது. வள்ளி தெய்வானை சமேதராக பாதாதி கேசம் அழகு சிந்த நிற்கிறார். ஒன்பதாவது வயதிலேயே இவரிடம் ஈர்க்கப்பட்டு வள்ளலார் கவியாகி ‘தெய்வமணி மலை’ பாடினார் என்றால் அதில் ஆச்சரியப்பட என்னவிருக்கிறது என்று தோன்றுமளவுக்கு ஒரு பொலிவு, பிரகாசம்.

  மூலஸ்தானத்து மூர்த்தி திருப்போரூரிலிருந்து வந்தார் என்பதற்கான கதை இருக்கிறது. சுமார் 500 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை.

  மராட்டியர்களுக்கும் பாளையக்காரர்களுக்குமிடையே மோதல். கலவரம் உச்சத்தை அடைந்தபோது கலகக்காரர்கள் வீடுகளையும் கோயில்களையும் தரைமட்டமாக்கினர்; கொள்ளையடித்தனர். திருப்போரூரில் முருகன் கோயில் பொன்னம்பலத் தம்பிரானின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தது.    கலகக்காரர்கள் கண்ணில் படாதபடி மூர்த்தியை பத்திரப்படுத்த எண்ணி, மூல விக்ரஹத்தை கல் சுவர் எழுப்பி மறைத்து விட்டார் தம்பிரான்.

  கலகமெல்லாம் ஓய்ந்து அமைதி திரும்பிய காலகட்டத்தில் கல் திரையை உடைத்து எடுத்தார்கள். ஆனால், அதிசயத்திலும் அதிசயம் - அதன் பின்னேயிருந்த முருகனைக் காணவில்லை! அதிர்ச்சியும் துயரும் தாளாமல் உயிர்நீத்தார் தம்பிரான்.

  அதன் பிறகு ஆட்சியாளராக வந்த அம்பலவாணத் தம்பிரானின் கனவில் அடிக்கடி முருகப் பெருமான் தோன்றலானார். தாம் ஒரு மரத்தடியில் புற்றில் மறைந்திருப்பதாகவும் தம்மை வெளிக் கொணர்ந்து கோயில் நிறுவும் படியும் தெரிவித்து வந்தார். ஆனால் தம்பிரான் அக் குறிப்பைக் கட்டளையாக ஏற்காமல் விட்டு விட்டார்.

  கிருத்திகைக்குக் கிருத்திகை சென்னையிலிருந்து திருப்போரூர் சென்று வழிபடும் வழக்கம் கொண்டிருந்தனர் மாரி செட்டியார், கந்தப்ப ஆசாரி என்ற இரு நண்பர்கள். ஒருமுறை களைப்புத் தீர, கோயில் வாசலிலிருந்த வேப்பமர நிழலில் சற்று உறங்கினர். அருகேயிருந்த புற்றில்தான் முருகப்பெருமான் மறைந்திருந்தான். அம்பலவாண தம்பிரானின் கனவில் தோன்றியது போலவே மாரி செட்டியாரின் கனவில் தோன்றி, தான் வெளிப்பட விரும்புவதை உணர்த்தினான். விழித்தெழுந்த செட்டியார், நடந்ததைத் தம் நண்பரிடம் தெரிவிக்க, இருவரும் திருப்போரூரில் வழிபாடு முடித்துத் திரும்புகையில் புற்றின் அருகே நின்று வேண்டிக் கொண்டனர். தங்களால் சுமந்து செல்லக்கூடிய அளவுக்கு முருகன் சிறிய உருவமாக மாறி உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதேபோல் முருகனும் சிற்றுரு கொண்டான். புற்று மலர்ந்தது; அப்படியே மாரி செட்டியாரின் கைக்கு அடக்கமாக அமர்ந்தான் முருகன். இருவரும் சென்னை நோக்கிப் புறப்பட்டனர்.

  சென்னையில், சரவணப் பொய்கை என்ற குளத்தருகில், தாங்கள் ஏற்கெனவே வணங்கி வந்த சித்தி வினாயகர் கோயிலில் முருகனைப் பிரதிஷ்டை செய்தார்கள் நண்பர்கள். வள்ளி தேவசேனா சமேதனாக முருகன் அக் கோயிலில் மூலஸ்தானத்தில் குடியேறினான்.

  சிறிது காலம் சென்று, கந்தகோட்டம் என்றே கோயில் வழங்கலாயிற்று. அப் பகுதியில் வாழ்ந்த வணிகப் பெருமக்கள், முருகனுக்குப் பிரும்மோத்ஸவம் நடத்த விரும்பி உற்சவ மூர்த்தியைப் பஞ்சலோகத்தில் செய்வித்தனர். அத் திருவுருவில் சில இடங்களில் பிசிறுகள் அமைந்து விட்டன. அவற்றை நீக்க, திருவுருவின் முகத்தில் செதுக்கியபோது தீப்பொறிகள் தெறிக்கக் கண்டு பயந்து போய், சிற்பிகள் சிலைகளை அப்படியே வைத்து விட்டனர். இரண்டு வருடங்கள் கழித்து அங்கே வந்த அந்தணர் ஒருவர் சில மந்திரங்களை ஓத, குறைபாடுகள் மறைந்து முழுப் பொலிவுடன் உத்ஸவ விக்கிரகம் ஜொலிக்க ஆரம்பித்தது.

  இப்படியாக, கட்டம் கட்டமாக பக்தர்களைத் தூண்டி இயங்கச் செய்து, கந்த கோட்டத்தில் வந்தமர்ந்தான் முத்துக்குமார சுவாமி. கும்பாபிஷேகமும் பிரும்மோத்ஸவமும் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டன.

  அதிசயம் அனேகமுற்ற இத் திருத்தலத்தின் நிர்வாகம் இன்றும் நித்யோத்ஸவம் போல் குறைவின்றி நடைபெற்று வருகிறது. சூழும் பக்தர்கள் மனம் குளிர முத்துக் குமாரசுவாமி அருளைக் குளிர் நிலவெனப் பொழிந்து கொண்டிருக்கிறான்.

  செல்வமுத்துக்குமாரசுவாமி என்ற பெயருக்கேற்ற ஐச்வர்யம் சூழ இருக்கிறான் முருகன். வியாபார ஸ்தலமான டவுன் பகுதி என்பது மட்டுமல்ல... உத்ஸவரின் மகாமண்டபத்தைப் பார்த்தால் தெரிகிறது அவன் செல்வ மகிமை - வெள்ளிக் கதவுகள் கொண்ட வெள்ளி விமானம், பொன்னாலான பிரபை; உத்ஸவருக்குத் தங்கக் கவசம் என பொன்னிழைத்த திருமேனியனாய் காட்சி தருகிறான். உலகின் அத்தனை ஐச்வர்யங்களுக்கும் உரிமையாளன் அவனன்றி வேறு யார் என எண்ணும் அளவுக்கு அழகு!

  தருமமிகு சென்னை என வள்ளலார் பாடிய தலைநகரம் அறத்துக்கு எடுத்துக்காட்டாக இன்று இருக்கிறதா? என்று யோசிக்க ஆரம்பித்தால் சோர்வுதான் வரும். ஆனால், மலியும் அதர்மத்திடையேயும் ஏழைமைக்கும் அக்கிரமங்களுக்கிடையேயும் நாம் நன்னெறியாளர்களைப் பார்க்க முடிகிறது; பக்தியும் சிரத்தையும் உள்ள மெய்யன்பர்கள் இருக்கவே செய்கிறார்கள். வேறொன்றும் இல்லா விட்டாலும் தருமமிகு சென்னையில் தினந்தோறும் பிரவசனங்களும் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் மூலைக்கு மூலை முழங்கிக் கொண்டிருக்கின்றன. பகவத் கீதை, உபநிஷத்தில் ஆரம்பித்து ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம் என ஒன்று விடாமல் எங்கேனும் ஒரு பகுதியில் செவிக்குணவும் சிந்தைக்கு உரமும் பரிமாறப்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் அதிபதியாயிருந்து கலியுக தெய்வமாய் ஆட்சி செலுத்தி நம்மைப் பரிபாலனம் செய்து வருபவன் கந்தகோட்டத்து முருகன்தான்.

  அவனை நோக்கி ராமலிங்க சுவாமிகள் பாடியது இன்றளவும் எத்தனை பொருத்தமாயிருக்கிறது! வாழ்க்கை நெறியை  வேண்டும் அப்பிரார்த்தனையை நாமும் செல்வமுத்துக்குமாரசுவாமியின் முன் வைப்போமே :
 ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர்தம் உறவு வேண்டும் 
  உள்ளொன்று வைத்துப் புறம்புஒன்று பேசுவார் 
   உறவுகல வாமை வேண்டும் 
  பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை 
   பேசாது இருக்க வேண்டும் 
  பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் 
   பிடியாது இருக்க வேண்டும் 
  மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை 
   மறவாது இருக்க வேண்டும் 
  மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற 
   வாழ்வில்நான் வாழ வேண்டும் 
  தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் 
   தலமோங்கு கந்த வேளே 
  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
   சண்முகத் தெய்வ மணியே

  முத்துக்குமாரசாமியிடம் ‘வேண்டும் வேண்டும்’ என வள்ளலார் வேண்டுகின்ற விஷயங்களின் பட்டியல் இதோடு முடிந்து விடவில்லை. இன்னும் நீண்டுகொண்டே தான் போகிறது. கேட்பவையெல்லாம் தரவா போகிறான் என்ற கேள்விக்கிடமளியாமல், கேட்பதையே அழகிய நெறியாக்கினார் வள்ளலார். முருகனின் கருணை நிதியினிடத்து அவர் கொண்ட நம்பிக்கை நம்மையும் பற்றிக் கொள்ளப் பிரார்த்திப்போம்.

[ நன்றி : கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:ஞாயிறு, 19 மே, 2013

திருப்புகழ் - 5

குராவடிக் குமரன் 
குருஜி ஏ.எஸ்.ராகவன் 


அண்மையில் ( 17 மே, 2013) காலமான குருஜி ஏ.எஸ்.ராகவன் அவர்களுக்கு நினைவஞ்சலியாக அவர் ‘கல்கி’ யில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன். 2002-இல் அவர் ‘தலந்தோறும் தமிழ்க்கடவுள்’ என்ற தொடரைக் ‘கல்கி’யில் எழுதினார்; அத்தொடரில் வந்த ஒரு கட்டுரை இது. 

குருஜி ராகவன் கனடாவிற்கு 1988-இல் வந்தபோது  அவருக்கு டொராண்டோ திருப்புகழ் அன்பர்கள் கொடுத்த வரவேற்பில் நான் படித்த ஒரு கவிதை ( சில சிறு மாற்றங்களுடன்) :

திருப்புகழுக் கிசைசேர்த்த மாசாதகன்
  திருச்செந்தூர் தீரனே கதியென்பவன்
முருகனது புகழ்பரப்பும் பணியேற்றவன்
  மனமுருகப் பண்ணிசைக்கும் குணக்குன்றவன்
திருப்புகழ் அன்பர்களுக் குயிரானவன் 
  திருமுருக பக்தியே சாறானவன் 
அறுமுகன் புகழ்பாட அசராதவன் 
  ஆறுமுக மங்கலத்து ஸ்ரீராகவன்  

இதோ அவர் எழுதிய ஒரு கட்டுரை.


 மருக்கு லாவிய மலரணை கொதியாதே
   வளர்த்த தாய்தமர் வசையது பொழியாதே
  கருக்கு லாவிய அயலவர் பழியாதே
   கடப்ப மாலையை யினிவர விடவேணும்
  தருக்கு லாவிய கொடியிடை மணவாளா
   சமர்த்த னேமணி மரகத மயில்வீரா
  திருக்கு ராவடி நிழல்தனி லுறைவோனே
   திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே

  அருணகிரிநாதர் திருவிடைக்கழி முருகனைக் குறித்துப் பாடிய எட்டு திருப்புகழ் பாடல்களுள் மிகப் பரவலாக அறியப்படுவது மேற்படி பாடல்தான்.

  காமாக்கினிக்கு வசப்படாமல், பழிச் சொல்லுக்காளாகாமல், தாய் தந்தையரைத் தூற்றாமல்வாழ்ந்து சிறக்க திருமுருகனின் கருணையை வேண்டி நிற்கிறார் அருணகிரி நாதர்.

  கற்பகவிருக்ஷமான தேவ தருவின் நிழலில் வளர்ந்த கொடியிடையாளம் தேவசேனையின் மணாளனே!

  போர் புரிவதிலும் அதில் வெற்றி கண்டு தேவமங்கையின் கரம்பற்றுவதிலும் சமர்த்தனாயிருப்பவனே! மணி நிறத்தவனே! மரகத வண்ணமான பச்சைநீல மயில் மீது ஆரோகணித்து வரும் வீரனே! திருக்கு ராமரத்தின் நிழலில் உறைபவனே! திருக்கரத்தில் வேலாயுதம் தாங்கியவனே! என்று அழைத்து அழைத்து அருணகிரிநாதர் கேட்பது என்ன...?

  கடப்ப மாலையை யினிவர விடவேணும்!

 - இந்த வரியில்தான் இருக்கிறது திருவிடைக்கழி முருகனின் வரலாறு; இந்த வரியிலும் திருக்குராவடி நிழலிலும் ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு முருகன் கதை:

  சிவபெருமானுடைய சக்தி வெளிப்பாடுதான் முருகப் பெருமான் என்பது நாம் அறிவோம்.

  ஜோதி பிழம்பாக நின்ற சிவபரம் பொருள், தன்னிடமிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தது. அந்த ஆறு பொறிகள்தான் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்ட கந்தனாக உருவாகின.
இதைத்தான் கந்தபுராணம் சொல்கிறது.

  அருவமும் உருவும் ஆகி
     அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
  பிரமமாய் நின்ற சோதிப் 
   பிழம்பதோர் மேனியாகக்
  கருணை கூர் முகங்களாறும்
     கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
  ஒருதிருமுருகன் வந்தாங்
   குதித்தனன் உலகமுய்ய


  ஆகவே, சிவன் வேறு முருகன் வேறு அன்று. அருணகிரிநாதரும் இவ்விருவரிடையே வேறுபாடு கொள்ளாமல் வழிபட்டார்.

  சிவபெருமானே முருகனைக் குறித்து பார்வதியிடம் சிலாகிப்பதாகச் சொல்கிறது கந்தபுராணம்:

  ‘‘நமது சக்தி ஆறுமுகன்’’ என்று எடுத்துச் சொல்லி, ‘‘ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும் போதமும் அழிவில் வீடும், போற்றினர்க் கருளவல்லான்’’ என்று உறுதியளிக்கிறார்.

  முருகப் பெருமான் இவ்வாறு சிவனால் அருளப்பெற்றவன் என்பதையும் சிவ ஸ்வரூபமே அவன் என்பதையும் உணர்த்துகிற திருத்தலம் திருவிடைக்கழி.

  சூரபத்மனின் மகனான இரண்யாசுரனை திருவிடைக்கழியில்தான் சம்ஹாரம் செய்தான் முருகன். அந்த சம்ஹார தோஷம் நீங்குவதற்காக, இத்தலத்திலுள்ள குராமரத்தின் நிழலில் சிவபெருமானுக்கு ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டான். சிவபெருமானும் அவனுடைய தோஷத்தை நீக்கி ஆட்கொண்டதோடுஅவ்விடத்தில் முருகன் தன்னுடைய ஸ்வரூபத்தையே பெற்று விளங்கும்படிச் செய்தாராம்! சிவஸ்வரூபமாக முருகனே இருக்கையில் தமக்கு அங்கு வேலை இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டாராம்!

  அதனால்தான் இந்த ஊரின் முருகன் கோயில் சிவாலய அமைப்பிலேயே இருக்கிறது. பிராகார அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தால் சோமாஸ்கந்தமூர்த்தி இருக்க வேண்டிய இடத்தில் வள்ளி-தேவசேனா சமேதராக முருகனே இருக்கிறார்! நடராஜர் சன்னிதி இருக்க வேண்டிய இடத்தில் _ சபா மண்டபத்தில் _ குமரப் பெருமான் இடது கையில் வில்லும் வலக் கரத்தில் வேலும் ஏந்தி நிற்கிறான்!

  இத்தலத்தில் திருக்குராவடி நிழலில் சிவலிங்கத்தை பூஜித்தபடி காணக்கிடைக்கிறான் முருகன். சம்ஹாரமூர்த்தியாயிருந்தபோது அணிந்த கடப்ப மாலையைக் களைந்து, குரா மலர்களாலான மாலையை முருகன் அணிந்த தலம் இது (கடப்ப மாலையை இனி விட வரவேணும்)

  பிரதான மூர்த்தியாக கருவறையில் குமார சிவமாக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறான் பாலசுப்ரமணியன். அவனுக்கு முன்னே ஸ்படிக லிங்க வடிவிலும் பின் புறத்தில் லிங்க உருவமாகவும் பாபநாசப் பெருமான் என்ற பெயருடன் சிவபெருமான் கோலோச்சுகிறார்!

  நாகை மாவட்டம் திருக்கடவூர் அருகே தில்லையாடி என்ற ஊர் இருக்கிறது. சுதந்தரப் போராட்ட வீராங்கனை வள்ளியம்மையின் ஊர்தான்! இந்த ஊருக்கு வெகு அருகில் இருக்கிறது திருவிடைக்கழி.
மகிழாரண்யம், மகிழ்வளங்குடி என்ற மங்களமான பெயர்களும் திருவிடைக்கழிக்கு உண்டு. நாகதலம் என்பது மற்றும் ஒரு பெயர்! சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற குராப்பள்ளி என்ற ஊர் இவ்வூர்தான்.

  தொன்மைச் சிறப்புடைய இவ்வூரில் திருமால், பிரும்மா வசிஷ்டர் தவிர முசுகுந்த சக்கரவர்த்தியும் வழிபட்டிருக்கிறார். சுமார் ஆயிரத்திருநூறு ஆண்டுகளுக்கு முன் முசுகுந்த மன்னர் பல திருப்பணிகளை இங்கு நடத்திக் காட்டியிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் பிராகாரத்தில் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன.

  கிழக்கு நோக்கிய ஆலயம் அதை எதிர்நோக்கி ஐந்நூற்று வினாயகர் என்ற பிள்ளையார் கோயில் இருக்கிறது.

  வெளிப்பிராகாரத்தில் திருகாமேஸ்வரர்என்ற பெயருடன் சிவன் இருக்கிறார்.


  மூலஸ்தானத்தில் சிவ வடிவமாக நின்று அருள் செய்யும் பாலசுப்ரமண்யன் அழகுக்கு இலக்கணமாய் அமைந்து நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறான். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய ஒரு முகம், இரு கரங்கள். வலது கரம் அபயமருளும் முத்திரை காட்ட, இடது கை இடுப்பில் பொருந்தியிருக்கிறது. திருப்பாதங்களில் வீரக் கழல்கள் மின்ன, விபூதி காப்பணிந்த எளிய அலங்காரமாயினும் சரி, விதவித ஆபரணங்கள் பூட்டிய ராஜ அலங்காரமாயினும் சரி... முருகனின் மறு பெயர் அழகுஎன்று நினைவூட்டி நிற்கிறான்.

  பதினோரு பாடல்கள் கொண்ட திருவிசைப்பா என்னும் பதிகத்தில் சேந்தனார் என்ற புலவர், இந்த பால முருகனை திருக்குரா நிழற்கீழ் நின்ற எழுங்கதிர்என்று உதய சூரியனின் பொலிவுடையவனாகப் பாடியிருக்கிறார்! பன்னிரு திருமுறைகளிலும் பாடப் பெற்றுள்ள தலம் திருவிடைக்கழி.

  வெளிப்பிராகாரத்தில் தெற்கு நோக்கிய மண்டபத்துக்கு வருவோம். இங்கே அந்த முருகனின் க்ரியாசக்தி அம்சமான தெய்வயானை, அவன் அழகில் மயங்கி நாணத்துடன் சற்று வலப்புறம் தலை சாய்த்து அவன் திருவுருவைக் கடைக்கண்ணால் நோக்கும் பாவனையில் நிற்கிறாள்.

  வசிஷ்டர் பூஜித்த வசிஷ்ட லிங்கம், சிவ சண்டேஸ்வரர், குஹ சண்டேஸ்வரர் என்று இரு சண்டேஸ்வரர் சன்னிதிகள் ஆகியவை இக் கோயிலின் தனிச் சிறப்புகள்.

  குராமர நிழலில் உள்ள பலிபீடத்துக்குத் தினமும் அர்த்த ஜாம ஆராதனை நடைபெறுகிறது.

  அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறையில் பேராசிரியராக இருந்தவர் திருமங்கலமுடையார். இவர் தம்மைத் திருவிடைக்கழி முருகனிடம் அர்ப்பணித்து இத்தலத்தின் பெருமை திசையெங்கும் பரவுவதற்கு நிறைய உழைத்தார். முன்னின்று நிதி திரட்டி ஏழு நிலை ராஜ கோபுரம் அமைத்தார்.

இன்றும் அடியார்கள் பலரை தன் அழகிலும் அருளிலும் கட்டிப்போட்டுக் கொண்டுதான் இருக்கிறான் முருகன். அந்த கருணையில் கட்டுண்டு எழில் தோற்றத்தில் மயங்கி நாம் அவனிடம் எதுவும் கேட்க மறந்து நிற்போம் என்பதை அறிந்துதானோ என்னவோ, அருணகிரிநாதர் என்னென்ன கேட்கலாம் என்பதை அன்றே வரிசைப் படுத்திவிட்டுப் போயிருக்கிறார்:

  பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
   பயனு மெப்படிப்    பலவாழ்வும்
  பழைய முத்தியிற் பதமு நட்புறப்
   பரவு கற்பகத்     தருவாழ்வும்
  புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
   பொலியும் அற்புதப்  பெருவாழ்வும்
  புலன கற்றிடப் பலவி தத்தினைப்
   புகழ்ப லத்தினைத்  தரவேணும்

  அற்புதப் பெருவாழ்வை வேண்டுகிறவர், தவப் பயனைத் தா என்று கேட்கிறவர் முத்தமிழின் பொருளும் வரமருளக் கேட்கிறார் என்றால் அந்தத் தமிழின் உயர்வை நாம் எத்தகையதாகக் கொள்வது! முக்தி நிலைக்கு நிகராக மொழிச் சிறப்பைச் சொல்லியிருப்பது அம் மொழியை ஆன்ம சிந்தனையின் வாகனமாக அவர் கருதுவதையே காட்டுகிறது. தமிழ்க் கடவுளுக்கும் தமிழ் மொழிக்கும் திருவிடைக்கழியில் அருணகிரிநாதர் செய்த சிறப்பை எண்ணி வியந்தபடி அந்த அழகு முருகனை வலம் வருவோம்.

வியாழன், 9 மே, 2013

பாடலும் படமும் - 5: திருப்புகழ்க் காட்சி

சித்திரம் வரையும் செவ்வேள்இன்றைய ‘யூட்யூப்’ உலகில் , ஒரு காணொளிக் காட்சியைப் பார்த்து, “சித்திரம் பேசுதடீ” என்று பாடினால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், இத்தகைய  “பேசும் படத்தை” அன்றே முருகன் வரைந்தார் என்று அருணகிரிநாதர் பாடுவது ஒரு கவித்துவமான கூற்று அல்லவா? அந்தக் காட்சியைக் காட்டும் ஒரு சித்திரத்தைப் பார்ப்பதும் அழகுதானே? ஓவியங்களுக்குகந்த இத்தகைய மனங்கவரும்  பல காட்சிகள் திருப்புகழில் கொட்டிக் கிடக்கின்றன!

“ கொந்துவார்” என்று தொடங்கும் திருத்தணித் திருப்புகழில் வரும் ஒரு பகுதி:செண்ப காடவி யினுமித ணினுமுயர்
      சந்த னாடவி யினுமுறை குறமகள்
      செம்பொ னூபுர கமலமும் வளையணி     புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
      குங்கு மாசல யுகளமு மதுரித
      இந்த ளாம்ருத வசனமு முறுவலு               மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
      மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
      மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய        பெருமாளே.


இதன் பொருள் ( ‘தணிகைமணி’ டாக்டர் வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்களின் உரையிலிருந்து ) :


செண்பகக் காட்டிலும், (தினைபுனத்துப்) பரண் மீதும், உயர்ந்த சந்தனக் காட்டிலும் உறைந்த குறமகள் (வள்ளியின்) செம்பொன்னாலாய சிலம்பணிந்த மலரடிகளையும், வளையல்கள் அணிந்த புதுமூங்கில் அனைய தோள்களையும் 

சந்திரனை ஒத்த  (குளிர்ந்த) ஒளி வீசும் முகமென்னும் தாமரையையும், கஸ்தூரி, குங்குமம் இவை அணிந்த மலையன்ன இரண்டு கொங்கைகளையும், இனிமை இன்பம் தருவதான பண் இந்தளம் ( நாதநாமக்கிரியை) போன்ற அமிருத மொழிகளையும், பற்களையும், அழகுவாய்ந்த 

தம்பலப் பூச்சி (இந்த்ர கோபம்) போன்ற (சிவந்த) வாயிதழ்களையும், பச்சை நிறத்தையும், இந்த்ர சாபம் (இந்த்ர வில்- வானவில்) போன்ற புருவத்தையும், இரண்டு காதணியாம் குழைகளைத் தூக்குகின்ற இந்த்ர நீலம் ( நீலோற்பல மலர்)  போன்ற கண்களையும் மடலின் கண் எழுதி (மகிழ்ந்த) பெருமாளே! 

வள்ளியின் பல அங்கங்களை வரைவது சிரமமல்ல ;  

“ஆனால் எழுதுதற்கு அரிதான வள்ளியின் “ இந்தளாம்ருத வசனத்தையும்” எழுதினார் என்கிறார் அருணகிரியார். இது முருகன் திறத்தைக் காட்டுகிறது. அவர் நினைத்த காரியங்கள் எவற்றையும் நிறைவேற்ற வல்லவர்.”   


என்கிறார் தணிகைமணி.


இந்தக் கருத்தை வலியுறுத்த, புறநானூற்றில் உள்ள ஒரு பாடல்(56) ஆசிரியர்  அரசனைப் பார்த்துச் சொல்லும்  ஓர் அழகான மேற்கோளையும் நம்முன் வைக்கிறார் தணிகைமணி.


முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்! “  


ஆம், “ நினைப்பதை  முடிப்பதில் நீ முருகனைப் போலிருக்கிறாய்” என்று அரசனைப் புகழ்கிறார் அந்தப் பாடல் ஆசிரியர்! 


ஓசை முனிவர் அருணகிரியின் பாடலையும், புறநானூற்றுப் பாடல் மேற்கோளின் அழகையும்,  திருப்புகழ் அன்பர்களின் வெள்ளி விழா மலரின் அட்டைப்படத்தில் வந்த அழகிய சித்திரத்துடன் சேர்ந்துப் பார்த்து, ரசித்து  மகிழலாம்! 


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

புதன், 8 மே, 2013

'தேவன்’: போடாத தபால் - 3

போடாத தபால் - 3
தேவன் ஹிட்லரின் கார் டிரைவருக்குச் சென்னை கார் டிரைவர் ஒருவர் 50-களில் எழுதிய கடிதத்தைப் படித்திருக்கிறீர்களா?

’தேவன்’ தன் கையெழுத்தே இல்லாமல் பல தொடர்களையும் கட்டுரைகளையும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார். அவற்றில் ‘போடாத தபால்’ என்ற தொடரும் ஒன்று. 50-களில் இருந்த நம் நாட்டு நிலைமையை அறிந்து கொள்ள இந்தத் தொடர் மிகவும் உதவும். அவருடைய மெல்லிய நகைச்சுவையிலிருந்தே ‘தேவ’னின் முத்திரையும்  தெரியும்.

( இன்னும் அச்சில் வராத பல தேவன் படைப்புகளில் இதுவும் ஒன்று.)


ஒரு கேள்வி: இந்த முதல் தபாலில் குறிப்பிடப்பட்ட சென்னை சட்டசபை மெம்பர் யார்?  யாருக்காவது தெரியுமா? ( இது 50-களில் எழுதப்பட்ட கட்டுரை...)
[நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

போடாத தபால் -1
போடாத தபால் -2

தேவன் படைப்புகள்


சனி, 4 மே, 2013

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -6

முந்தைய பகுதிகள்

பகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4பகுதி 5(தொடர்ச்சி)

இந்தக் கடைசிப் பகுதியில் ஷெர்லக் ஹோம்ஸின் வீட்டுச் சொந்தக்காரி ( landlady) மிஸ்ஸஸ் ஹட்சனை ( அமிர்தம்மாள்) நாம் சந்திக்கிறோம். இந்தக் கதையில் ஒரு முக்கியப் பணியாற்றும் அமிர்தம்மாள் மற்ற சில  ஷெர்லக் கதைகளிலும் வருவார். பி.பி.சி நிறுவனம் எடுத்த பல ஷெர்லக் தொலைக் காட்சித் தொடர்களில் இவர் ஒரு முக்கியப் பங்கு பெற்றிருக்கிறார்.


( முற்றும் )

தொடர்புள்ள பதிவுகள்:

மற்ற ஆனந்தசிங் கதைகள்


வெள்ளி, 3 மே, 2013

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -5

முந்தைய பகுதிகள்:
பகுதி 1 , பகுதி 2பகுதி 3பகுதி 4

(தொடர்ச்சி)இந்தக் கதையின் வில்லனை நாம் இப்போது சந்திக்கப் போகிறோம்.

மூலக் கதையில் கர்னல் மொரான்; தமிழில் கர்னல் மாரப்பன்.  ஏமநாதனின் சீடன். ( முன்பு பிரிட்டனின் இந்தியப் படையில் பணி புரிந்தவன்; பெங்களூர் பயனீர்ஸ் ( Bangalore Pioneers) -இல் இருந்தவர் என்றெல்லாம் எழுதியிருக்கிறார் கானன் டாயில். இமயமலையில் வேட்டையைப் பற்றி ஒரு நூல் எழுதியவர். லண்டனில் உள்ள ‘ஆங்கிலோ-இந்தியன் க்ளப்பில் ஓர் உறுப்பினர்! எப்படி வில்லனின் இந்த இந்தியத் தொடர்பு?)

இன்ஸ்பெக்டர் ராமநாத் ( லெஸ்ட்ரேட்) தையும் நாம் சந்திக்கிறோம்.

[ மாரப்பன் பிடிபடுகிறான் ] 


(தொடரும்) 
தொடர்புள்ள பதிவுகள்:

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ : கதைகள்

வியாழன், 2 மே, 2013

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -4

முந்தைய பகுதிகள்
பகுதி 1  , பகுதி 2 , பகுதி 3

(தொடர்ச்சி)


மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கதையை நகர்த்திச் செல்வதில் ஆரணியார் சமர்த்தர். கதையின் இந்தப் பகுதி அதற்கு ஒரு மிக நல்ல சான்று.(தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ : கதைகள்

புதன், 1 மே, 2013

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -3

முந்தைய பகுதிகள்
பகுதி 1
பகுதி 2

ஷெர்லக் ஹோம்ஸின் தமையனார் மைக்ராஃப்ட் ஹோம்ஸ் ஒரு சுவையான பாத்திரம். ஷெர்லக்கைவிட ஏழு வயது மூத்தவர். அவர் நான்கு ஷெர்லக் கதைகளில் வருவார்! முன்பே ‘மோகனசிங்’ என்ற பெயரில் ஆரணியாரின் “ கடைசிப் பிரச்சினை” யில் அவரைச் சந்தித்தது நினைவில் இருக்கும். இந்தக் கதையிலும் அவரை நாம் சந்திக்கிறோம்.


(தொடர்ச்சி)
(தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள்:

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ : கதைகள்