புதன், 30 ஜனவரி, 2019

1256. சாருகேசி -1

பரிபூரண பத்திரிகையாளர்


ஜனவரி 30, 2019. 
இன்று மறைந்த இனிய நண்பர், மூத்த எழுத்தாளர் சாருகேசிக்கு என் இதயாஞ்சலி. ‘தேவன்’ நூற்றாண்டு விழாவுக்கு என்னைப் பேசச் சொல்லி அழைத்தபோது கடைசியாகப் பார்த்தது. சில வாரங்களுக்கு முன்புவரை கூட கடிதப் பரிமாறல் வைத்துக் கொண்டிருந்தோம் . என் சோதரர் மறைந்தது போல் இருக்கிறது. அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவருடன் கோபுலுவைப் பார்க்கப் போயிருந்தபோது நான் எடுத்த படம் இதோ:மறைந்த இனிய நண்பர் சாருகேசிக்கு அஞ்சலியாய் ,  பின்னர்  இதழ்களில் வந்த மூன்று  கட்டுரைகளைச் சேர்த்து இங்கே இடுகிறேன்.
=====

முதலில், கல்கியில் வந்த அஞ்சலி. 

எழுத்து ஜீவன் : சுப்ர.பாலன்இரண்டாவதாக,  சுப்ர.பாலன்  ‘ தினமணி கதி’ரில் எழுதிய கட்டுரை.
====
சாருகேசியும் நாங்களும் ; சுப்ர.பாலன்
*****
அண்மை நாட்களில் இலக்கிய உலகில் இரண்டு முக்கியமான நண்பர்களை உயிர்க்கொல்லி நோய்க்கு பலி கொடுத்து விட்டோம். சில வாரங்களுக்கு முன்னால் பிரபஞ்சன். இப்போது சிரிக்கச் சிரிக்கப் பேசியும் எழுதியும்  வந்த நண்பர் "சாருகேசி'  புகை, மது என்று எந்தவிதமான சங்கடங்களுக்கும் ஆட்படாமல் இருந்தாலும்கூட இந்தச் சனியன் விடாதோ?

சாருகேசி விஸ்வநாதனின் மறைவு மற்ற எல்லாத் துறைகளையும் விட பாரம்பரியமான லலித கலைகளைப் பற்றிய ஆரோக்கியமான, நடுநிலையான விமர்சனத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு. அற்புதமான இசை நடன விமர்சனங்கள் தவிர, ஏராளமான மருத்துவக் கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், திருத்தலப் பயண ஆன்மிகக் கட்டுரைகள், நகைச்சுவை நிஜமாகவே கொப்பளித்துப் பொங்கிப் பிரவகிக்கும் சிறுகதைகள், நாடகங்கள் என்று ஓயாமல் எழுதிக் குவித்தவர். 

அவர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த "கல்கி' தவிர, தினமணி, அமுதசுரபி, கலைமகள் என்று பல இதழ்களில் "சாருகேசி'யின் கெளரவமான எழுத்துகள் இடம்பெற்றன.  தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் சரளமாக எழுதுகிற ஆற்றல் பெற்றிருந்தார். கலைமகள் நிறுவனத்து "ஆர்வி'யின் பேரன்புக்குரியவராக இருந்த சாருகேசியின் முதல் எழுத்து "கண்ணன்' இதழில்தான் வெளியானது. முதல் சிறுகதையை "கல்கி' வெளியிட்டது.

வாழ்நாளில் தம்முடைய எழுத்துக்களை ஒரு முறைகூட நூல் வடிவத்தில் காணமுடியாமல் அமரரான ஆனந்தவிகடன் "தேவன்' அவர்களுடைய "ஐந்து நாடுகளில் அறுபது நாள்' பயணத்தொடர் முதலான எல்லா நூல்களையும் "அல்லயன்ஸ்' நிறுவனம் மூலம் வெளியிடச் செய்தது சாருகேசியின் அரிய தொண்டு. அந்த "அமரர் தேவ'னின் பெயரால் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தகுதியான பலருக்கு உதவிகள் செய்ததோடு ஆண்டுதோறும் கலை இலக்கியம் தொடர்பான இருவருக்கு "அமரர் தேவன் நினைவு அறக்கட்ளை விருது'களையும் வழங்கி வந்தார். ஃபைஸர் மருத்துவ நிறுவனத்தில் நிறைவாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் தம்முடைய முழுநேரத்தையும் எழுத்திலும் கலா ரசனையிலுமே செலவிட்டார்.

விரிவான நட்பு வட்டம் அவருடையது. "கல்கி' இதழுக்காக ப்ரியன், சந்திரமெளலி, சாருகேசி என்று நாங்கள் நால்வரும் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதவை. அப்போதைய ஆசிரியர் கல்கி ராஜேந்திரன் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் நாங்கள் கூடியிருந்து அவரோடு பல விஷயங்களைப் பற்றி உற்சாகமாகக் கலந்துரையாடியது ஒரு பொற்காலமேதான்.

சுதாமூர்த்தி உட்படப் பல பிறமொழி ஆசிரியர்களின் நூல்களைப் பக்குவமான இனிய தமிழ்நடையில் மொழியாக்கம் செய்ததும் சாருகேசியின் அரும்பணிகளுள் ஒன்று. 

அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர்களால் இன்னும் சில மாதங்களுக்காவது நல்ல உறக்கம் கொள்ள முடியாது. "அதானே...', "அச்ச்சோ..', "பாருங்கோளேன்' போன்ற முத்திரைச் சொற்களை அவரைப்போல் அனுபவித்துப் பயன்படுத்த எத்தனைபேரால் ஆகும்?.
நாரதகான சபா ஆதரவில் நடைபெற்ற "நாட்டியரங்கம்' நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் வடிவமைத்து, வித்தியாசமான பாடுபொருள்களைத் தேர்வு செய்துதந்து வழிநடத்தியவர் சாருகேசி. அவ்வாறே சில ஆண்டுகளாக "டாக் மையத்'தின் ஆர்.டி. சாரியின் ஆதரவோடு நடைபெற்று வருகிற "தமிழ்ப் புத்தக நண்பர்கள்' அமைப்பின் நால்வருள் ஒருவராகப் பணியாற்றிவந்தார். "இந்த மாதாந்திர விமர்சனக் கூட்டங்களுக்கான மதிப்பீட்டுக்குரிய நூலையும் தக்க விமர்சகரையும் தேர்வு செய்வதில் முழுப்பொறுப்பும் சாருகேசி சாருடையதுதான்' என்று ஒவ்வொரு கூட்டத்திலும் உற்சாகமாகப் பிரகடனம் செய்வார் அமைப்பாளர்களுள்  ஒருவரான ரவி தமிழ்வாணன். இந்த அமைப்பின் இன்னொரு நண்பர் ஆர்.வி.ராஜன் குறிப்பிட்டுள்ளவாறு "சாருகேசி ஒரு gentleman to the core.  இதைத் தமிழில் அத்தனை அழகுச் செறிவோடு சொல்ல முடியவில்லை. 

நண்பர் சாருகேசி தம்முடைய உணவில் மருத்துவப் பயன்கள் நிறைந்த வெங்காயத்தைக் கண்டிப்புடன் தவிர்த்து வந்தார். இதனாலேயே திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குப் போனால் விருந்துகளில் கலந்து கொள்வதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவார். சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான மருத்துவ ஆய்வேடு ஒன்றில்,  "வெங்காயமும் மஞ்சளும் உணவில் சேர்ப்பது புற்றுநோய்க் காரணிகளை அண்டவிடாமல் செய்யும்' என்று படித்தது நினைவுக்கு வருகிறது. முற்றிலும் குற்றமில்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருந்த நண்பர் சாருகேசி, வெங்காயத்தோடும் "சிநேகமாக' இருந்திருந்தால் ஒருவேளை இன்னும் சிலகாலம் நம்மோடு இருந்திருப்பாரோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

 மூன்றாவதாக,  சென்னையில்  நடந்த அஞ்சலிக் கூட்டத்தின் நிகழ்ச்சித் தொகுப்பு.[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


வெள்ளி, 25 ஜனவரி, 2019

1223. பாடலும் படமும் - 53

புரட்சித்தீ மூட்டிய போர்க்கவி முரசு
’தமிழரசு ‘ இதழில் 1971-இல் வந்த ஒரு கவிதை, அதற்கேற்ற ஓவியம்.
கவிஞர்: புலவர் தமிழ்ப்பித்தன்
ஓவியர்: “குமார்” ( "திருப்புத்தூர் திருத்தளியான்" / குமாரசாமி அம்பிகாபதி )  


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]
தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

செவ்வாய், 22 ஜனவரி, 2019

1222. பண்படும் சங்கீதமே : கவிதை

பண்படும் சங்கீதமே
பசுபதிஎத்தனை சுரங்களோ எத்தனை உறழ்ச்சிகள் 
. எத்தனை ராகங்க ளோ?
அத்தனின் இணையடி அருள்தனைப் பெற்றிட
. ஆக்கிய பாடல்க ளோ? 
வித்தகம் உள்ளவர் மேடையில் பாடினால்
. வித்தைகள் விண்ணேறு மே.
பத்தியும் பாவமும் பளிச்சிடும் பாடலால்
. பண்படும் சங்கீத மே. 


தொடர்புள்ள பதிவுகள் :


திங்கள், 21 ஜனவரி, 2019

1221. சங்கீத சங்கதிகள் - 176

பக்கத்து சீட்டில் பாலமுரளி
ஜே.எஸ்.ராகவன்

[ ஓவியம்: அரஸ் ]


ஐதராபாத் போக ஏர்பஸ் விமானத்தில் ஏற பாதுகாப்புத் தடவல்களை முடித்த கையோடு, கைப்பையுடன் ஏர்பஸ் விமானத்தில் ஏறினேன். வழக்கமாக சன்னமாக ஆலாபனை செய்யும் ஆனந்த பைரவி ராகத்தின் அரவணைப்பு என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தது. அனந்தராம தீட்சிதர் எல்லா ஸ்லோகங்களையும் அதே ராகத்தில்தான் சொல்வார். ஆகையினாலே அவருடைய அடையாளப் பெயர், ஆனந்த பைரவி அனந்தராம தீட்சிதர்.

கை குவித்து வரவேற்ற ஏர்ஹோஸ்டஸை எனக்குத் தெரியும். நர்கீஸ் மாதிரி இருப்பார். ஆனால், அவருக்கு என்னைத் தெரியாது. வழிதவறி விடப்போகிறேனே என்கிற கரிசனத்துடன் என்னை என் சீட் வரை அழைத்துக் கொண்டு உத்தரவு வாங்கிக் கொண்டு போனார். என்னுடைய இருக்கையைப் பார்த்தபோது ஒரு இன்ப அதிர்ச்சி. அட! அட!. நடு சீட்டில் சங்கீத கலாநிதி பால முரளி கிருஷ்ணா உட்கார்ந்திருந்தார். அடுத்த கணமே ஆனந்த பைரவி பவர் அவுட்டேஜ் வந்தது மாதிரி வாயில் பொசுக்கென்று உறைந்து போயிற்று. கேட்டிருப்பாரோ?

‘நம்ஸ்காரம்’ என்றார். அப்பா! என்ன குரல். நான் மேலும் திகைத்தேன். நானல்லவோ முந்திக் கொண்டு நமஸ்காரம் சொல்லி இருக்க வேண்டும்?. அசட்டுச்சிரிப்புடன், கைகளைக் கூப்பி, அருகில் உட்கார்ந்து கொண்டேன்.

நெடுங்காலம் சபாக்களில் தொலை தூரத்திலிருந்து பார்த்த அவரை, டைட் க்ளோசப்பில் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது. . கருப்பு சாந்து சூடிய அகன்ற நெற்றி.. கீழே கொழுக்கட்டை மூக்கில் இறங்கி, இரண்டு தாடைகளாக விரிவடைந்து நின்றது. வலது காதிலிருந்து இடது காதுவரை நீண்ட. வசீகரம், அன்பு, கரிசனங்களின் ராகமாலிகைப் புன்னகை. ‘’எல்லாம் இன்ப மயம்’ என்கிற சித்தாந்தத்துடன் இன்ப லாகிரியுடன் உட்கார்ந்திருந்த பாங்கு.

‘நடு சீட்டாச்சே? இம்சையாக இருக்குமே’ நான் வேணா மாறிக்கட்டுமா?’ என்றேன்.

சௌகரியமாய் சம்மணம் போட்டுக் கொண்டு சங்கீத சபா மேடையில் உட்கார்ந்திருப்பது போல ஏர் லைன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்,. ‘எனக்கு இதுதான் சௌகரியம். அந்தப் பக்கம் வயலின். இந்தப் பக்கம் மிருதங்கம்’ என்றிருக்குமோ? நான் வயலின் வாசிப்பவர் போல அவர் இடது பக்கத்திலிருந்தது சந்தோஷமாக இருந்தது.

பாலமுரளிக்கு, வயோலா ( வயலினின் குண்டு அண்ணாத்தை ), கஞ்சிரா, மிருதங்கம் எல்லாம் வாசிக்கத் தெரியும் என்று கேள்விம் பட்டிருக்கறேன். ஒரு முறை ஏற்பாடு செய்திருந்த வயலினிஸ்ட் வராததால் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கே வயலின் வாசித்திருக்கிறாராம். பின் என்ன வேணும்? அதைப் பற்றிச் சொன்னபோது உங்களுக்கு ஏதாவது இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிக்கத் தெரியுமா என்று கேட்டார். கல்யாணமான எல்லோரையும் போல மனைவிக்கு இரண்டாவது பிடில்தான் வாசிக்கத் தெரியும் என்று சொன்னேன். சிரித்தார்.

பாலமுரளி கார் பிரியர். பல கார்களை லாயத்தில் வைத்திருந்த அவர், காரோட்டியை வைத்துக் கொள்ளாமல் தானே ஓட்டுவதை விரும்புவார் என்று கேட்டிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு, அதே மாதிரி இந்தஃ ஏரோப்ளேனை ஓட்டுவீர்களா? அப்படி ஓட்டும்போது, கற்பனைச் சிறகை விரித்து, ஆகாஷ் ரஞ்சனி, மேகதூத் வர்ஷினி, பர்ஸாதி பந்தினி என்கிற புது ராகங்களை இயற்றிவிடுவீர்களா என்று கேட்க நினைத்தேன். ஆனால், அது தப்பு, கேலி செய்வது போல ஆகி விடும் என்று வாயைப் பொத்திக் கொண்டேன்.
சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு ஹம்மிங் செய்ய ஆரம்பித்தார். சில்க் ஜிப்பாவால் உறை போட்டிருந்த கைகள் அவர் முன்னால், நீண்டு வளைந்து, விரிந்து ராகத்தின் விரிவுக்கு ஏற்ப அபிநயம் பிடித்துக் கொண்டுருந்திருக்க வேண்டும்.

அவருடைய வலது பக்க ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த பான்-பராக் வாசனைப் பெருந்தகை, தன் பக்கத்தில் இருப்பவர் பால முரளி கிருஷ்ணாவா இருந்தால் என்ன? பகவான் கிருஷ்ணாவா இருந்தால் எனக்கென்ன என்று அன்றைய ஷேர் மார்க்கெட் விவரங்களை ஹிந்தி பேப்பரில் வாசித்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று கண்களைத் திறந்து என்னப் பார்த்தவர், ‘உங்கள் மனைவி ஒரு பாடகியா? கச்சேரிகள் செய்வாரா?’ என்று கேட்டு என்னை மிரள வைத்தார்.

எ…ன்…ன்…னது பாடகியா? கச்சேரிகள் செய்வாரா? என்னய்யா இது? என்னைப் பார்த்தால் ஒரு பிரபல பாடகியின் கணவன் மாதிரியாத் தெரிகிறது. ஓரிரு இஞ்ச் உயர்ந்த மாதிரி தோன்றியது. நான் இல்லை என்றால் பெருத்த ஏமாற்றம் அடைவேன் என்கிற பாவனையுடன் என்னைப் பார்த்திருந்தவரை ஏமாற்றாமல் இருக்க முடியவில்லை. ‘’கர்நாடக சங்கீதம் அவ்வளவு புண்ணியம் செய்யவில்லை’ என்று சொன்னேன். அழகாக சிரித்தார்.

ஆகாய வண்டி சிறிது தொலைவில் தென்பட இருக்கும் ஐதராபாத்தை மோப்பம் பிடித்து இறங்கத் தயாரானது. வழக்கமான பயிற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. கற்பனை உலகத்தில் மறுபடியும் சஞ்சரிக்கப் போன பாலமுரளி, நினைவு உலகத்திற்கு வந்து சீட் பெல்ட்டைப் பூட்டிக் கொண்டார்.

விமானம் இறங்கி ஓடி நின்றவுடன், கைப்பையை எடுத்துக் கொண்டு வெளிக் கதவை நோக்கி நகர்ந்தார். வாசற் கதவருகில் நின்றருந்த ஏர் ஹோஸ்டஸுடன் இரண்டு உபசார வார்த்தைகளைப் பேச நின்றவர், பின்னால் ஒரு அடி விட்டு மரியாதையாக நின்ற எனக்கு வழி விட நகர்ந்து, ‘ம். நீங்க போங்க.. நாம மறுபடியும் சந்திக்கணுமே?’ என்றார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது. ‘ஆமாம், சார். ஒரு நாள் போறுமா? இன்றொரு நாள் போறுமா? என்று கேட்டு விட்டு இறங்கினேன்.

-----oOo------
[ நன்றி: மாம்பலம் டைம்ஸ், ஜே.எஸ்.ராகவன் ]


தொடர்புள்ள பதிவுகள்: 

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

1220. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 12

என் வாழ்க்கையின் அம்சங்கள் -8
வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி 
சுதேசமித்திர’னில்  1941-இல் வந்த  ஒரு கட்டுரை

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி: சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி

சனி, 19 ஜனவரி, 2019

1219. பண்ணலைகள் : கவிதை

பண்ணலைகள்
பசுபதி
[ ஓவியம்: கோபுலு ] 


பண்ணலைகள் வங்காளக் கடலுடனே போட்டியிட்டுப்
. பரவசத்தில் ரசிகர்களை ஆழ்த்தும்
வெண்ணரரின் ஜிப்பாக்கள், மெல்லியரின் சல்வார்கள்;
. வீதியெங்கும் திருவிழாக் கோலம்.
கண்ணசைவைப் புரிந்துகொண்டு 'கச்சேரி' உணவகத்தில்
. 'காப்பிடிபன்' வழங்கிடும்நற் றொண்டர்.
தண்மைமிகு மார்கழிதான் கண்ணனுக்குப் பிடித்ததென்றால்
. சங்கீதம் மிகுசென்னை யாலா? 


தொடர்புள்ள பதிவுகள் :


வெள்ளி, 18 ஜனவரி, 2019

1218. சாயம் வெளுத்த சரக்கு : கவிதை

சாயம் வெளுத்த சரக்கு
பசுபதி 'ராக வனப்பையெல்லாம் ரஞ்சகமாய் வர்ணமொன்றில்
சேகரித்தேன் ' என்றவர் செப்பினும் -- பாகவதர்
வாயைத் திறந்தவுடன் வல்லுநர்சொன் னார்"இதுவோர்
சாயம் வெளுத்த சரக்கு".


தொடர்புள்ள பதிவுகள் :


வியாழன், 17 ஜனவரி, 2019

1217. அரு.ராமநாதன் - 1

அரு.ராமநாதன் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் என்ற பன்முகத் திறன்கொண்ட அரு.ராமநாதன் (Aru.Ramanathan)   பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சிவகங்கை மாவட்டம், கண்டனூரில் பிறந்தார் (1924). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வத்தில் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். 18 வயதுகூட நிரம்பாத இளம் பருவத்தில் ‘சம்சார சாகரம்’ என்ற நூலைத் தயாரித்து தன் நண்பரின் திருமண நாளுக்காகப் பரிசளித்தார்.

* இளம் தம்பதியினருக்கும் தேவையான விஷயங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. 1945-ல் டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாடகப் போட்டிக்காக ‘ராஜராஜ சோழன்’ என்ற நாடகத்தை எழுதினார். அதற்கு முதல் பரிசும் கிடைத்தது. 1955-ல் அரங்கேறிய அந்த நாடகம் 1000-க்கும் மேற்பட்ட தடவை மேடையேறியது.


* பின்னர், தமிழ் சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படமாகவும் ராஜராஜ சோழன் வெளிவந்தது. இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியவரும் இவர்தான். ரதிப்பிரியா, கு.ந.ராமையா ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார். 1947-ல் திருச்சியில் ‘காதல்’ என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கினார். இந்த தலைப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் எழுந்தன.


* ஆனால், இதன் தரம், கட்டுரைகளின் சாராம்சம் ஆகியவற்றால் எதிர்ப்புகள் காணாமல் போயின. இவரது முதல் கதை ‘கோழிப் பந்தயம்’. முதல் நாவல் ‘அசோகன் காதலி’. அம்பிகாபதி, பழையனூர் நீலி, நாயனம் சவுந்திர வடிவு, மனோரஞ்சிதம் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.


* அறிவுத் திறனிலும், தமிழ்ப் புலமையிலும் இவர் ஒரு அகத்தியர் என்று டி.கே.எஸ். புகழாரம் சூட்டியுள்ளார். ‘வீரபாண்டியன் மனைவி’ நாவல் இவரது பத்திரிகையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்தது. இவரது படைப்புகளிலேயே மிகவும் புகழை பெற்றுத் தந்த நாவல் இது. அடுத்து ‘வெற்றி வேல் வீரத்தேவன்’, ‘வானவில்‘ ஆகிய நாடகங்களையும் எழுதினார்.* சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தன் வீட்டிலேயே பத்திரிகையையும் நடத்தி வந்தார். இவர் வசனம் எழுதிய ‘தங்கப்பதுமை’ திரைப்படம் இந்திய அரசால் பாராட்டப்பட்டது. ‘பூலோக ரம்பை’, ‘ஆரவல்லி’ ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத் தகவல்களுக்காகவே ‘கலைமணி’ என்ற சினிமா இதழைத் தொடங்கினார்.

* 1952-ல் ‘பிரேமா பிரசுரம்’ பதிப்பகத்தைத் தொடங்கினார். புராண நூல்கள், பழம்பெரும் கதைகள், சிந்தனையாளர் நூல்கள், துப்பறியும் மர்ம நாவல்கள், சரித்திர நாவல்கள், சித்தர் பாடல்கள் உள்ளிட்ட 340-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து குறைந்த விலையில் விற்றார்.


* 1963-ல் கல்கி இதழில் ‘குண்டு மல்லிகை’ என்ற சமூக நாவலைத் தொடராக எழுதினார். சிந்தனையாளர் பிளேட்டோ, பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோர் குறித்து ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.


* தனது இதழில் பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். காந்தி, பாரதி, அவ்வையார், புத்தர் ஆகியோரின் பொன்மொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். ‘கலைமாமணி’ விருது பெற்றவர்.

* எழுத்துக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவர். இலக்கியப் பணி ஒன்றை மட்டுமே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்துவந்த படைப்பாளி, அரு.ராமநாதன் 1974-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 50-வது வயதில் மறைந்தார்.

[ நன்றி : https://tamil.thehindu.com ]

தொடர்புள்ள பதிவு:

அரு.ராமநாதன்

அரு. ராமநாதன்: விக்கிப்பீடியா

அரு.ராமநாதன் - அரவிந்த் : தென்றல் கட்டுரை

செவ்வாய், 15 ஜனவரி, 2019

1216. நன்றி ; கவிதை

நன்றி 
பசுபதி


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி 
. . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி
வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி
. . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி
பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி
. . படுக்கையறைக் கிசுகிசுப்புக் காதலுக்கோர் நன்றி
மண்ணிலெழு வாசனையோ பெய்மழைக்கோர் நன்றி
. . மன்பதையில் அன்புவழி சான்றோர்க்கு நன்றி (1)

வசந்தத்தில் விரிதோகை மயில்காட்டும் நன்றி
. . வானோக்கி நீளலைகள் வாரிதிசொல் நன்றி
புசித்தார்பின் விடுமேப்பம் பசித்தவனின் நன்றி
. . பூங்காற்றில் பொழிகானம் குயில்நவிலும் நன்றி
விசையோங்கும் சீழ்க்கையொலி ரசிகர்சொல் நன்றி
. . வேர்ப்புநிறை நெற்றிநல்ல விருந்துக்கோர் நன்றி
எசமான்முன் வாலாட்டல் நாய்காட்டும் நன்றி
. . இனியதமிழ்க் கவிபுனைதல் தாய்மொழிக்கோர் நன்றி (2)
=====

பொங்கலோ பொங்கல்!

[ நன்றி : படம் : https://www.facebook.com/FrescoRajam/  ] 


தொடர்புள்ள பதிவுகள் :
தினமணிக் கவிதைகள் 

சனி, 12 ஜனவரி, 2019

1215. சங்கீத சங்கதிகள் - 175

நினைவுத் திரையில்
"ஆஸ்திக சமாஜம்' நரசிம்மன்

...தினமணி-2012


மாலியை சந்தித்து ஒரு கச்சேரி ஏற்பாடு செய்ய சென்றிருந்தோம். அப்போது மந்தைவெளி பகுதியில் ஓஷியானிக் என்றொரு ஹோட்டல் இருந்தது. மாலி அங்குதான் தங்குவார். நாங்கள் சென்றபோது ஒரு உடைந்த புல்லாங்குழலை நூலால் கட்டிக்கொண்டு இருந்தார். "என்ன இது? ஃப்ளூட்டை நூலால் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு மாலியிடம்  இருந்து வந்த பதில்- "சாயங்காலம் ஒரு கச்சேரி இருக்கு.'

கூட வந்தவர் கேட்டார், "என்னையா இது! உடைந்த புல்லாங்குழலை வைத்துக்கொண்டு சர்வசாதாரணமாக சாயங்காலம் கச்சேரி இருக்கிறது என்று சொல்கிறாரே இவர். எப்படி வாசிக்கப் போகிறார்?' நான் சொன்னேன், "சாயங்காலம் கச்சேரிக்குப் போவோம், அவர் எப்படி வாசிக்கப் போகிறார் என்பதை நேரில் கேட்டுத் தெரிந்துகொள்.'

சாயங்காலம் நூலால் கட்டப்பட்ட உடைந்த புல்லாங்குழலை வைத்துக்கொண்டு ஒரு கச்சேரி வாசித்திருக்கிறார். இந்த ஜென்மாவில் அப்படி ஒரு சங்கீதத்தை இனிமேல் கேட்க முடியாது. அப்போதுதான் தெரிந்தது, சங்கீதத்தின் மகிமை வாத்தியத்தில் இல்லை. வாசிப்பவர்களிடம்தான் என்பது.

ஒரு முறை பாலக்காடு மணி அய்யரை பார்க்கப் போயிருந்தேன். பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு எங்களுடைய பேச்சு மாலியைப் பற்றி திரும்பியது. அவர் சொன்னார்- "லயத்திலே புலி அவன். மாலி மாதிரி இன்னொரு வித்வான் கிடையாது!'
÷
அப்போது ராம நாம யக்ஞ மண்டலி என்றொரு அமைப்பை டாஃபே மகாதேவன் நடத்திக் கொண்டிருந்தார். அந்த அமைப்பின் சார்பில் நாகேஸ்வர ராவ் பார்க் அருகில் மாலியின் கச்சேரி. டாஃபே மகாதேவன் மாலிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் நிச்சயமாக மாலி கச்சேரிக்கு வருவார் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. அதனால் கூட்டமோ கூட்டம். எட்டு மணி வரை மாலியை காணோம். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் டாஃபே மகாதேவனும் ரசிகர்களும் மாலி வந்துவிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். எட்டேகால் மணிக்கு மாலி வந்து சேர்ந்தார். எட்டரை மணிக்கு மேலேதான் மேடையில் போய் அமர்ந்தார்.

புல்லாங்குழலை எடுத்து "கமாஸ்' ராகத்தில் "சுஜன ஜீவனா' வாசிக்கத் தொடங்கினார் பாருங்கள் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. அடுத்த நான்கு மணி நேரம் தேவகானம் பொழிந்தார் மாலி. என் வாழ்நாளில் மறக்க முடியாத கச்சேரி அது.

தஞ்சாவூர் ஆனந்தா லாட்ஜில் தங்கியிருந்தார் ஃப்ளூட் மாலி. அவருக்கு எப்போது மூடு வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒரு நாள் காலை சுமார் 6 மணி இருக்கும். புல்லாங்குழலை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார். ரயில் நிலையத்தை சுற்றியிருக்கும் தெருவெல்லாம் ஸ்தம்பித்துவிட்டது. கூட்டமான கூட்டம். ரயில் ஏறுவதற்காக வந்தவர்களும் ரயிலில் வந்து இறங்கியவர்களும் உள்ளூர்காரர்களும் மாலியின் புல்லாங்குழல் கேட்டு மகுடி மயங்கிய பாம்பாக ஆனந்தா லாட்ஜை சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி நூற்றுக்கணக்கான பேர் கேட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் மாலி புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய மாலியின் வாசிப்பைக் கேட்ட ரிக்ஷாக்காரர்கள்கூட அதற்குப் பிறகு பல வருடங்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

தொ.மு.பாஸ்கர தொண்டைமான் கலெக்டராக இருந்தபோது தஞ்சாவூரில் கலைவிழா ஒன்றை நடத்தினார். அதில் பிரபலமான எல்லா கலைஞர்களும் கலந்துகொண்டனர். மாலியின் கச்சேரியும் இருந்தது. மாலி வருவாரா வரமாட்டாரா என்று தஞ்சாவூர் ஜில்லாவில் பந்தயம் கட்டியவர்கள் கூட உண்டு. அன்றைக்கு என்னவோ தெரியவில்லை. மாலி சொன்னது சொன்னாற்போல கச்சேரிக்கு வந்துவிட்டார். லால்குடி வயலின். அந்தக் கச்சேரி அமைந்ததுபோல இன்னொரு கச்சேரி தஞ்சாவூரில் அமையவில்லை. நேரம் போனது தெரியாமல் மாலியும் வாசித்துக் கொண்டிருந்தார். ரசிகர்களும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஜகந்நாதன் என்று எனக்கு ஒரு நண்பர். ஜகந்நாதனை அவருடைய அப்பா ஒரு கச்சேரிக்கு கூட்டிக்கொண்டு போனார். கச்சேரி சுமாராகத்தான் இருந்தது. ஜகந்நாதன் அப்பா சொன்னாராம்- "இன்னிக்கு நமக்கு பிராப்தம் இல்லைடா!' என்று. அடுத்த வாரம் கோனேரிராஜபுரத்தில் அதே பாகவதரின் இன்னொரு கச்சேரி. அதற்கும் தனது மகனை அழைத்துக்கொண்டு போயிருந்தார் அவர். கச்சேரி "ஓஹோ' என்று இருந்ததாம். ஜகந்நாதனிடம் அவருடைய அப்பா சொன்னாராம்- "கலைஞர்களுக்கு அன்னிக்கு எப்படி மூடு இருக்கு என்பதைப் பொறுத்துத்தான் கச்சேரி அமையும். ஒரு கச்சேரி நன்றாக அமையாவிட்டால் கலைஞர்களைத் தப்பு சொல்லக் கூடாது. அன்றைக்கு நமக்கு பிராப்தம் இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.'   
ஆலத்தூர் சகோதரர்கள் என்று சொன்னாலே கணக்கு விவகாரங்களில் புலி என்பது பரவலாக சங்கீத உலகத்தில் பேசப்படும் விஷயம். கணக்கு விவகாரம் என்று சொன்னால், என்னவோ ஏதோ என்று நினைத்து விடாதீர்கள். காலபிரமாணத்தில் செய்யப்படும் விதவிதமான தாள நுணுக்கங்களுக்குத்தான் சங்கீத மேடையில் கணக்கு விவகாரம் என்று பெயர். ஒரு கச்சேரிக்கு வரும்போதே மிகவும் நுணுக்கமான, கஷ்டமான தாளத்தில் பல்லவியை அமைத்துக்கொண்டு பக்கவாத்தியக்காரர்களைத் திணறடிப்பதில் ஆலத்தூர் சகோதரர்கள் சமர்த்தர்கள். சங்கீதம் நன்றாக தெரிந்தவர்களுக்கு ஆலத்தூர் சங்கீதம் என்று சொன்னால் விரும்பிக் கேட்பார்கள். பக்கவாத்தியக்காரர்கள் திறமைசாலிகளாக இல்லாவிட்டால் அவமானப்பட வேண்டியதுதான்.

ஒரு கச்சேரியில் திருவாலங்காடு சுந்தரேச அய்யர் ஆலத்தூர் சகோதரர்களுக்குப் பக்கவாத்தியம். கச்சேரி தொடங்குவதற்கு முன்னால் கேட்டாராம்- "இனிக்கு எப்படி சிவிலா, கிரிமினலா? என்று. அவர் கேட்டவுடன் ஆலத்தூர் சகோதரர்கள் சிரித்து விட்டார்களாம்.

ஆலத்தூர் சகோதரர்களுக்கு லால்குடி ஜெயராமன் நிறைய கச்சேரிகள் வாசித்திருக்கிறார். அவர்களுடைய கணக்கு விவகாரங்களை லால்குடி ஜெயராமனும் பாலக்காடு மணி அய்யரும் சர்வசாதாரணமாக ஊதித் தள்ளிவிடுவார்கள். அதனாலேயே இந்த காம்பினேஷனில் அமையும் கச்சேரிகள் அசாத்தியமாக இருக்கும். லால்குடி ஜெயராமனைப் பற்றி ஆலத்தூர் சுப்பய்யர் ஒருமுறை சொன்ன கருத்து- "லயத்திலே லால்குடி பிரம்மா. அவருடன் கச்சேரி செய்யும்போது ஏதோ கூட இருந்து பிரக்டீஸ் பண்ணினா மாதிரி இருக்கும். எப்படிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் அதை அவர் சர்வ சாதாரணமாக கையாண்டு விடுவார்'.

[ நன்றி : https://www.rasikas.org/forums/viewtopic.php?t=26658 ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

வெள்ளி, 11 ஜனவரி, 2019

1214. சங்கீத சங்கதிகள் - 174

சர்வம் சங்கீதமயம்! 

                                

சென்னை ‘மியூசிக் அகாடெமி’ யின் தொடக்க கால வரலாற்றைக் கூறும் இந்தக் கட்டுரை 1946-இல் ‘பாரிஜாதம்’ இதழில் வந்தது .

                     [  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்


வியாழன், 10 ஜனவரி, 2019

1213. பாடலும் படமும் - 52

கோவில் காட்சி 1938  ஆனந்த விகடன் தீபாவளி மலரில்  எஸ்.ராஜம் வரைந்த ஓர் ஓவியம்.  அவருடைய ‘பழைய’ முறை ஓவியங்களில் இது ஒன்று.

பாடலின் விளக்கம் இதோ:
=======

“ கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்” 
                                                                - திருஞானசம்பந்தர் .

எத்தனை நூற்றாண்டுகளாகக் கோவில் வழிபாடு இந்து சமயத்தின் - இந்து நாகரிகத்தின் - உயிர்நிலையாக அமைந்திருக்கிறது! குழந்தைகள், கிழவர், ஆண்கள், பெண்கள் - எவரானால் என்ன? - போய்க் கைதொழுததும், “பயப்படாதே”! என்று அவரவர் கவலைகளைப் போக்கி உள்ளம் குளிர அருள் செய்கிறானாம் விக்கிரரூபமான பரமேச்வரன். இந்த நம்பிக்கை - மதம் விசேஷமாகப் பெண்களின் இதயத்தை வசீகரித்திருக்கிறது. பக்தி ஞான பக்தியாய் இருந்தால், இதயமும் கோவிலும் ஒருங்கே ஜோதிமயமாக விளங்கக்கூடு மல்லவோ?

                 


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam


புதன், 9 ஜனவரி, 2019

1212. தகதிமி நடனம் ; கவிதை

தகதிமி  நடனம்
பசுபதி


சுகந்தரும் குரல்குழல் முழவுடன்
. சுருதியும் செவிகளில் இசைக்கவே 
துகில்களின் அடுக்குடை ஜரிகைகள்
. சுடொரொளி நகைகளும் ஜொலிக்கவே
மகிழ்வுறும் குருகரம் லயவழி
. மகளிரின் பதசரம் ஒலிக்கவே 
தகதிமி  நடனமென் விழிகளில்
. தமனியப் படமென ஒளிர்ந்ததே 

தொடர்புள்ள பதிவுகள் :


செவ்வாய், 8 ஜனவரி, 2019

1211. சங்கீத சங்கதிகள் - 173

இரண்டாவது தமிழிசை விழா (1945) 


ஸர் பி.டி.ராஜன் 


‘சிவாஜி’ இதழில் 1945 -இல் வந்த ஒரு கட்டுரை.

திவான் பகதூர் டி.எம்.நாராயணசாமி பிள்ளை 
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

1210. பாடலும் படமும் - 51

கைலைக் காட்சி 
‘கல்கி’ இதழின் முதல் தீபாவளி மலரின் ( 1942) அட்டைப் படமாய் ‘மணியம்’ வரைந்த படமும்,  அதை விளக்கும் மணிவாசகரின் பாடலும்.

மணியம் வரைந்த முதல் மலர் அட்டைப்படம் இதுவாய்த்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்!

மணியத்தை மணி என்று அழைத்து ஆசிரியர் ‘கல்கி’ இந்த மலரில் எழுதியது :
” இந்த மலரின் அற்புதமான மேலட்டைப் படத்தையும், கண்ணுக்கு விருந்தளிக்கும் வேலன் பாட்டுச் சித்திரத்தையும் எழுதிய இளம் சைத்ரிகர் மணியைப் பற்றி அதிகம் சொன்னால் திருஷ்டிப்படப் போகிறதென்று நிறுத்தி விடுகிறேன்”
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

திங்கள், 7 ஜனவரி, 2019

1209. சங்கீத சங்கதிகள் - 172

தமிழிசை மாநாடு - புதுக்கோட்டை -1942‘திருமகள்’ 1942 தீபாவளி இதழில் ( நவம்பர் , 42 ) வந்த ஒரு கட்டுரை.


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

வெள்ளி, 4 ஜனவரி, 2019

1208. மார்கழியில் சென்னை : கவிதை

மார்கழியில் சென்னை
பசுபதி 

[ ஓவியம்: கேசவ் ] 


கனமும் நயமுமாய் பிருகா கமகமும்
. களிப்பை இறைத்திடும் பண்ணிசை
இனிய 'சரிகம பதநி'ச் சுரங்களை
. இசைக்கும் இளையரின் தீங்குரல்
பனியின் குளிர்ச்சியில் இறையைப் பணிந்திடும்
. பஜனைக் குழுக்களின் ஊர்வலம் 
கனலின் பொறிகளாய் கடங்கள் முழவுகள்
. கலந்து வழங்கிடும் போஜனம்தொடர்புள்ள பதிவுகள் :

வியாழன், 3 ஜனவரி, 2019

1207. மார்கழி மாதம் : கவிதை

மார்கழி மாதம்
பசுபதி 


[ ஓவியம்: கேசவ் ]


சென்னை மார்கழி மாதம் என்றதும்
. சிந்தை இன்னிசை பாடுமே!
கன்னல் ராகமும் பின்ன தாளமும்
. காதில் தேனென வீழுமே! 
அன்னி யர்களும் பண்டி தர்களும் 
. ஆறு நற்சுவை தாசரும்
கின்ன ரர்களை, 'கேண்டின்' ஓசையைக் 
. கேட்க அந்நகர் சேர்வரே! தொடர்புள்ள பதிவுகள் :புதன், 2 ஜனவரி, 2019

1206. டிசம்பரில் சென்னை: கவிதை

டிசம்பரில்  சென்னை
பசுபதி


[ ஓவியம்: கேசவ் ] 

மாதம் டிசம்பரில் பாடும் கொசுக்களும்
. வந்து குலாவிடும் சென்னையில் ,
பாதச் சலங்கைகள் கீதக் குழுவுடன் 
. பண்ணும் கணக்குகள் ஜாலமே!
நாத சபைகளை நாடும் நரர்களின்
. ஞானம் தனியொரு ஞாலமே!
கூதல் விடியலில் மாட மயிலையில்
. கோஷ்டி பஜனைகள் கோலமே!


தொடர்புள்ள பதிவுகள் :


செவ்வாய், 1 ஜனவரி, 2019

1205. மன்றிலே சென்றுநீ காண் : கவிதை

மன்றிலே சென்றுநீ காண்
பசுபதி


[ ஓவியம்: கேசவ் ; நன்றி: ஹிந்து ] 

பண்ணிசை கேட்பின் பசியும் பறக்குமெனும்
எண்ணம் கலியில் எடுபடுமா? -- திண்டிபல 
தின்றுகளி மாந்தரைச் சென்னையின் சங்கீத 
மன்றிலே சென்றுநீ காண்.  

[ ‘ அமுதசுரபி’  பிப்ரவரி 2006 இதழில் வந்த - கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு எழுதப்பட்ட -   வெண்பா ] 


தொடர்புள்ள பதிவுகள் :