வியாழன், 17 ஜனவரி, 2019

1217. அரு.ராமநாதன் - 1

அரு.ராமநாதன் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்



எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் என்ற பன்முகத் திறன்கொண்ட அரு.ராமநாதன் (Aru.Ramanathan)   பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சிவகங்கை மாவட்டம், கண்டனூரில் பிறந்தார் (1924). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வத்தில் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். 18 வயதுகூட நிரம்பாத இளம் பருவத்தில் ‘சம்சார சாகரம்’ என்ற நூலைத் தயாரித்து தன் நண்பரின் திருமண நாளுக்காகப் பரிசளித்தார்.

* இளம் தம்பதியினருக்கும் தேவையான விஷயங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. 1945-ல் டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாடகப் போட்டிக்காக ‘ராஜராஜ சோழன்’ என்ற நாடகத்தை எழுதினார். அதற்கு முதல் பரிசும் கிடைத்தது. 1955-ல் அரங்கேறிய அந்த நாடகம் 1000-க்கும் மேற்பட்ட தடவை மேடையேறியது.


* பின்னர், தமிழ் சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படமாகவும் ராஜராஜ சோழன் வெளிவந்தது. இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியவரும் இவர்தான். ரதிப்பிரியா, கு.ந.ராமையா ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார். 1947-ல் திருச்சியில் ‘காதல்’ என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கினார். இந்த தலைப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் எழுந்தன.


* ஆனால், இதன் தரம், கட்டுரைகளின் சாராம்சம் ஆகியவற்றால் எதிர்ப்புகள் காணாமல் போயின. இவரது முதல் கதை ‘கோழிப் பந்தயம்’. முதல் நாவல் ‘அசோகன் காதலி’. அம்பிகாபதி, பழையனூர் நீலி, நாயனம் சவுந்திர வடிவு, மனோரஞ்சிதம் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.


* அறிவுத் திறனிலும், தமிழ்ப் புலமையிலும் இவர் ஒரு அகத்தியர் என்று டி.கே.எஸ். புகழாரம் சூட்டியுள்ளார். ‘வீரபாண்டியன் மனைவி’ நாவல் இவரது பத்திரிகையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்தது. இவரது படைப்புகளிலேயே மிகவும் புகழை பெற்றுத் தந்த நாவல் இது. அடுத்து ‘வெற்றி வேல் வீரத்தேவன்’, ‘வானவில்‘ ஆகிய நாடகங்களையும் எழுதினார்.



* சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தன் வீட்டிலேயே பத்திரிகையையும் நடத்தி வந்தார். இவர் வசனம் எழுதிய ‘தங்கப்பதுமை’ திரைப்படம் இந்திய அரசால் பாராட்டப்பட்டது. ‘பூலோக ரம்பை’, ‘ஆரவல்லி’ ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத் தகவல்களுக்காகவே ‘கலைமணி’ என்ற சினிமா இதழைத் தொடங்கினார்.

* 1952-ல் ‘பிரேமா பிரசுரம்’ பதிப்பகத்தைத் தொடங்கினார். புராண நூல்கள், பழம்பெரும் கதைகள், சிந்தனையாளர் நூல்கள், துப்பறியும் மர்ம நாவல்கள், சரித்திர நாவல்கள், சித்தர் பாடல்கள் உள்ளிட்ட 340-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து குறைந்த விலையில் விற்றார்.


* 1963-ல் கல்கி இதழில் ‘குண்டு மல்லிகை’ என்ற சமூக நாவலைத் தொடராக எழுதினார். சிந்தனையாளர் பிளேட்டோ, பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோர் குறித்து ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.


* தனது இதழில் பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். காந்தி, பாரதி, அவ்வையார், புத்தர் ஆகியோரின் பொன்மொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். ‘கலைமாமணி’ விருது பெற்றவர்.

* எழுத்துக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவர். இலக்கியப் பணி ஒன்றை மட்டுமே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்துவந்த படைப்பாளி, அரு.ராமநாதன் 1974-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 50-வது வயதில் மறைந்தார்.

[ நன்றி : https://tamil.thehindu.com ]

தொடர்புள்ள பதிவு:

அரு.ராமநாதன்

அரு. ராமநாதன்: விக்கிப்பீடியா

அரு.ராமநாதன் - அரவிந்த் : தென்றல் கட்டுரை

4 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

மிக நன்றாகத் தொகுத்துள்ளீர்கள். இவர் எழுத்தில் எனக்குப் பிடித்ததும், "வீரபாண்டியன் மனைவி"யும், "குண்டு மல்லிகை"யும் தான். குண்டு மல்லிகை அந்தக் காலகட்டத்தில் "கல்கி" பத்திரிகையில் வந்தப்போ எனக்குப் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் பல ஆண்டுகள் கழித்துத் தான் புத்தகம் பைன்டிங்கில் படித்தேன். கல்பனா ஓவியங்கள் என நினைவு. இந்தக் கதை தான் சிற்சில மாற்றங்களோடு "அபூர்வ ராகங்கள்" என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டதோ என்பது என் எண்ணம்.

Geetha Sambasivam சொன்னது…

பிரேமா பிரசுரத்தின் துப்பறியும் நாவல்கள் "சிரஞ்சீவி" என்பவர் பெயரிலும் இன்னொருவர் பெயர் மறந்து விட்டது, போட்டி போட்டுக்கொண்டு வெளிவரும். நாங்களும் போட்டி போட்டுக்கொண்டு படிப்போம்.

Pas S. Pasupathy சொன்னது…

@Geetha Sambasivam. >>பிரேமா பிரசுரத்தின் துப்பறியும் நாவல்கள் "சிரஞ்சீவி" என்பவர் பெயரிலும் இன்னொருவர் பெயர் மறந்து விட்டது >> மேதாவி, பி.டி.சாமி இவர்களுடைய நாவல்களாய் இருக்கலாம். ( இவற்றை “மர்மக்கதை” என்ற தன் இன்னொரு இதழில் அவர் வெளியிட்டிருக்கிறார்.)

RV சொன்னது…

https://siliconshelf.wordpress.com/2011/08/24/அரு-ராமநாதனின்-வீரபாண்ட/