செவ்வாய், 30 அக்டோபர், 2012

குறும்பா -1 : பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு!

1. பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு!
பசுபதி
பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு
பந்தயத்தில் போக்கிடுவான் துட்டு !
. . கொட்டினள்தாய் சுடுசொல்லை;
. . குணத்தையவன் விடவில்லை.
சட்டென்று போட்டாள் 'கால் கட்டு ' !
   
 Limerick என்ற ஆங்கிலக் கவிதை வடிவினைக் 'குறும்பா ' வாகத் தமிழில் முதலில் உருவாக்கினவர் ஈழத்துக் கவிஞர் 'மஹாகவி ' (உருத்திரமூர்த்தி)

அவருடைய ஒரு குறும்பா:

முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்.
முன்னாலே வந்து நின்றான் காலன்.
           சத்தமின்றி, வந்தவனின்
           கைத்தலத்திற் பத்துமுத்தைப்
பொத்திவைத்தான். போனான்முச் சூலன்


அவருடைய குறும்பாவின்  இலக்கணம்:

காய் - காய் - தேமா -
காய் - காய் - தேமா -
       காய் - காய் -
       காய் - காய் -
காய் - காய் - தேமா. 


’சந்தவசந்த’க் குழுவில் பலர் இதைத் தொடர்ந்து  பல புதிய 

இலக்கணங்களும் பரிந்துரைத்திருக்கின்றனர். 


தொடர்புள்ள பதிவுகள்:

குறும்பாக்கள்

கவிதைகள்

சனி, 27 அக்டோபர், 2012

சொற்களைச் சுவைப்போம் - 3: வலிமிகாத ஆத்திசூடி


வலிமிகாத ஆத்திசூடி
 பசுபதி
“ சார், இன்று தமிழ்த் தொலைக் காட்சி ஒன்றில் அறிஞர் ஒருவர் ஔவையாரின் ‘ஆத்திச்சூடி’யின் சிறப்பையும் , அதில் உள்ள சில நீதிகளைப் பற்றியும்  மிக அழகாகப் பேசினார் ”


“ ஆம், உண்மையிலேயே அது ஒரு நல்ல நீதி நூல் தான்.  அதை மனத்தில் வைத்து, அதே முறையில் பாரதி, பாரதிதாசன் போன்றோரும் எழுதி உள்ளனர். ஆனால், அந்த நூலின் சரியான பெயர் ‘ஆத்திசூடி’ தான்.  ‘ஆத்திச்சூடி’ அன்று.  அந்த நூலின் கடவுள் வாழ்த்துஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.என்று இருப்பதால் அதற்கு  அப்பெயர் வந்தது.   ‘ஆத்திசூடி’  என்பது சிவனைக் குறிக்கும் சொல். ஆத்தி மாலை சிவனுக்குரிய மாலை. ‘ஆத்தியைச் சூடுபவன்’ என்று  இரண்டாம் வேற்றுமையை விரித்துச் சொல்லும்போது,  ‘ச்’ வரும். ஆனால்,  ‘ஆத்திசூடி’ என்பதில் அந்த இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’  மறைந்து இருப்பதால் , ‘ச்’ வராது. 


 “ இப்படிச் சொற்களுக்கிடையே, ‘க்’, ‘ச்’, ‘த்’ ‘ப்’ எப்போது வரும் ? வரக் கூடாது? என்பதை அறிய நல்ல கட்டுரைகளைப் படித்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே? ”

  
“ ஆம், இந்தக் கருத்தை வைத்தே நாம் ஒரு புதிய  ‘ஆத்திசூடி’ விளையாட்டு விளையாடலாமே?  இலக்கணம் போதிக்கும் புதிய ஆத்திசூடி என்று கூட இந்த விளையாட்டைக் கூப்பிடலாம்.”
 

 ‘அ’ முதல் ‘ஔ’ வரை , 12 உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்றொடர்களைத் தயாரிக்க வேண்டும். எல்லாத் தொடர்களும் நாம் வழக்கமாகத் தின ஏடுகளிலும், வார, மாத இதழ்களிலும் படிப்பவையாக,  கடிதங்களில் எழுதக் கூடியவையாக இருக்கவேண்டும். இந்தப்  ‘புதிய ஆத்திசூடி’.யில்  இலக்கணத்தைப் பொறுத்தவரை எல்லாம் சரியான சொற்றொடர்களாக அமைய வேண்டும். ஆனால்,  இந்தச் சொற்றொடர்களின் நடுவில் பலரும் மெய்யைச் (ஒற்றைச்) சேர்த்துத் தவறாக எழுதும் வாய்ப்பு உண்டு. ‘ஆத்திசூடி’ என்ற சொற்றொடரைப் போல.   அப்படிப்பட்ட 12 சொற்றொடர்களைத் தயாரிப்பது தான் இந்த ‘வார்த்தை விளையாட்டு’ . க், ச், ப், த் போன்ற வல்லெழுத்து ஒற்று வராததை, “வலிமிகா” என்றழைப்பர் இலக்கணத்தில். அதனால்,  இந்தப் பட்டியலை ‘வலிமிகாத ஆத்திசூடி’ என்று கூட வேடிக்கையாக அழைக்கலாம்! ”


இதோ ஒரு மாதிரிப் பட்டியல்: சொற்றொடர்களைத் தொடர்ந்து அவை வரும்
மாதிரி வாக்கியங்களும் உள்ளன. விளையாட்டுக்கு விளையாட்டு, இலக்கணத்திற்கு இலக்கணம், எப்படி?”அசைபோடு’ : மாடு அசைபோட்டது.

ஆசைகாட்டு’: குழந்தைக்குச் சும்மா ஆசை காட்டாதே !

இலைபோடு’ : திருமணத்தில் உடனே இலைபோட்டுவிட்டனர்.

ஈடுகட்டு’: அந்த இழப்பை ஈடுகட்ட முடியாது.

உச்சிகுளிர்’ : அவன் புகழ்ச்சியில்  எனக்கு உடனே உச்சிகுளிர்ந்துவிட்டது.

‘ஊசிபோடு’; வைத்தியர் குழந்தைக்கு ஊசிபோட்டார்.

‘எடைபோடு’ : என்னைக் கண்ணால் அவள் எடைபோட்டாள்.

ஏறுதழுவுதல்; ஜல்லிக் கட்டுக்குப் பழைய பெயர் ‘ஏறுதழுவல்’.

ஐந்துகொடு’ : அந்தப் பழவகையில் ஐந்து கொடு.

ஒருகை பார்’ : மதிய உணவை ஒருகை பார்த்தேன்.

ஓய்வுபெறு’ : ஓய்வுபெற்றபின் எங்கே போகப் போகிறாய்?

ஔவை பாடல்’:  ஔவை பாடல்களில் இதுவும் ஒன்று.  


“ இப்போது நீங்களும் ஒரு ‘வலிமிகா ஆத்திசூடி’ தயாரிக்க முயலுங்களேன்.
நகைச்சுவை கலந்த வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பு!” 


~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள்:
சொல்விளையாட்டு

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ரா.கி.ரங்கராஜன் - 5: தியாகபூமி

தியாகபூமி
ரா.கி.ரங்கராஜன்


பாபநாசம் சிவன், எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா
(உமாராணியாகி விட்ட சாவித்திரி மகள் சாருவுடன்)

கல்கியின் ’தியாகபூமி’ ஆனந்தவிகடனில் 1939-இல் வெளிவந்தது.  சரியாக அறுபது வருடங்களுக்குப் பின் 1999-இல் எழுதிய ஒரு கட்டுரையில் ரா.கி.ரங்கராஜன் அந்த நாவலைப் படித்த அனுபவங்களைக் கூறுகிறார்.  படியுங்கள்!
====

மயிலாப்பூர் மாடவீதி வட்டாரங்களில் வெள்ளிக்கிழமை இரவு, எட்டு ஒன்பது மணியானால், ஒரு குரல் ஒலிக்கும். ‘ஆனந்தவிகடன்! ஆனந்த விகடன்’ என்று ஒரு சைக்கிள் பையன் கூவிக் கொண்டே விற்பனை செய்வான். வாடிக்கையாக வாங்குவோரின் வீடுகளில் ஒரு பிரதி போட்டு விட்டுப் போவான்.
. . .// . ..
கோடை விடுமுறைக்காகச் சென்னைக்கு வந்திருந்த எட்டாம் வகுப்புச் சிறுவனான நான் அதற்காகவே விழித்துக் கொண்டிருப்பேன். ஓவியர் வரைந்த படங்களுக்குப் பதிலாகப் புகைப்படங்களுடன் --திரைப்படத்துக்கான ஸ்டில் படங்களுடன்  --வந்து கொண்டிருந்த ‘தியாக பூமி’ கதையைப் படத்துக்காக ஒருமுறையும் கதைக்காக ஒரு முறையுமாக விழுந்து விழுந்து படிப்பேன்.அப்போதெல்லாம் ‘ஆனந்தவிகடன்’ ஏராளமான பக்கங்களுடன் மிகத் தடிமனாக வெளிவரும். பெரும்பாலான பக்கங்களில் கல்கியின் கைவண்ணம் மிளிர்ந்திருக்கும். ஆகவே, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை வரை வரிவரியாய்ப் படித்து ரசிப்பதிலேயே பொழுது கழியும்.விடுமுறை முடிந்து கும்பகோணத்துக்குத் திரும்பியபோது ஆனந்த விகடனை -- குறிப்பாகக் கல்கியின் எழுத்தை -- தேடிப் பிடித்துப் படிப்பதில் பித்துக் கொண்டவனாக ஆனேன். ‘தியாக பூமி’ என்னை அடிமை கொண்டது. கதையம்சத்தில் உள்ள சுவாரஸ்யம் மட்டுமல்ல; பாத்திரங்களும் வாக்கியங்களின் ஜாலங்களும் தூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் கூட மனசுக்குள் வட்டமடிக்கிற மாதிரி இருந்தன.ஏழை சம்பு சாஸ்திரி தன் மகள் சாவித்திரிக்கு வரன் பார்த்து, அந்த மாப்பிள்ளைக்காக  ஒரு பட்டு வேட்டி வாங்கி வைத்திருக்க, அவருடைய வீட்டோடு இருக்கும் ஒரு பையன் அதைப் பிரித்துத் தன் மார்பின் மீது போர்த்திக் கொண்டதும் சாவித்திரிக்குக் கோபம் வந்த காட்சி இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. ‘சீ, கொடுடா அதை!’ என்று அவன் கையிலிருந்து  அந்தப் பட்டு வேட்டியை அவள் பறித்துக் கொள்கிற வேகம்! ஏழை சாவித்திரியாக இருந்தவரையில் உதாசீனப்படுத்திய கணவன் அவள் பணக்காரி உமாராணியாக உயர்ந்ததும் ‘நீ மிதித்த பூமியை  நான் பூஜிக்கத் தயாராயிருக்கிறேன்’ என்று அவளிடம் கெஞ்ச, ‘நீங்கள் மிதித்த பூமியை நான் மிதிக்கக் கூடத் தயாராயில்லை!’ என்று அவள் திருப்பியடிக்கும் சீற்றமும் -- எப்படி அந்தக் கட்டங்களை மறக்க முடியும்?

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்; 

ரா.கி.ரங்கராஜன் : கட்டுரைகள்


செவ்வாய், 16 அக்டோபர், 2012

முத்தமிடு! : கவிதை

முத்தமிடு!
பசுபதிபோகி ஒருநண்பன் - எனக்குப்
   போதித்த சொற்களிவை.
"தேகம் நிரந்தரமோ ? - இதனைச்
   சிந்தனை செய்துவிடு!
சோகம் தவிர்த்துவிடு -தினநள
    பாகம் புசித்துவிடு!
மோகக் கடல்மூழ்கி -- மங்கை
    முத்துகள் முத்தமிடு! "

யோகம் பயில்பெரியார் - ஒருவர்
   என்னிடம் சொன்னதிது.
தேகம் ஒருகோயில் - அதனைத்
    தினமும் வணங்கிவிடு!
நாகம் எனவளைந்தே -- உனது
    நாபியை முத்தமிடு!
ஏகன் ஒருவனையே -- நினைத்து
   இந்த்ரியம் கட்டிவிடு! "

காவி உடுத்தியவர் -- எனது
   காதில் உரைத்ததிது.
" தேவை சுருக்கிவிடு -- உனது
    சிந்தை விரித்துவிடு!
பாவம் வெறுத்துவிடு -- ஆனால்
    பாவியை முத்தமிடு!
சாவில் அமைதியுறு -- ஆன்ம
   சாதனை செய்துவிடு! "

கனவில் அருவுருவம் -- என்றன்
   கருத்தில் பதித்ததிது.
"நினைவை எரித்துவிடு -- உன்றன்
    நெற்றிக்கண் பார்வையிலே!
மனதை முழுங்கிவிடு -- தினமும்
    மெளனத்தை முத்தமிடு !
எனதெனும் எண்ணமதைக்-- கொன்றே
    இறையுன தாக்கிவிடு ! "

~*~o0O0o~*~
[ இது ‘திண்ணை’யில் முதலில் 2001-இல் வெளியானது.]

தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 15 அக்டோபர், 2012

’தேவன்’: நடந்தது நடந்தபடியே - 2

நடந்தது நடந்தபடியே - 2
தேவன்

முந்தைய பகுதி


திருப்பதிப் பயண அனுபவங்களைத் தொடர்கிறார் ‘தேவன்’ .
( தொடர்ச்சி)( 4-ஆம் அத்தியாயம் நிறைவு )
[ நன்றி ; விகடன் ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:  

நடந்தது நடந்தபடி : மற்ற கட்டுரைகள்

தேவன் படைப்புகள்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

’தேவன்’: நடந்தது நடந்தபடியே - 1

நடந்தது நடந்தபடியே - 1
'தேவன்'


’தேவன்’ எழுதிய முதல் பயணக் கட்டுரைத் தொடர் ‘நடந்தது நடந்தபடியே’.

அமரர் ராஜுவின் சித்திரங்களுடன் விகடனில் மூன்று மாதங்களுக்கு வந்த சிறிய தொடர் இது .திருநீர்மலை, திருப்பதி, திருச்சானூர், காளஹஸ்தி,  திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சி, திருவிடைமருதூர் என்று பல தலங்களைப் பார்த்த அனுபவங்களை நகைச்சுவையுடன் சொல்கிறார் ‘தேவன்’.

40-அல்லது 50-களில் இத்தொடர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ‘அல்லயன்ஸ்’ நூலில் 130-பக்கங்களில் விரியும் தொடர் இது. ஆனால், முதலில் விகடனில்  வந்த ‘ராஜுவின்’ சித்திரங்களுடன் எந்தப் பதிப்பகமும் நூலாக இதுவரை வெளியிடவில்லை.

எடுத்துக் காட்டாக, ஓர் அத்தியாயத்தைப் பார்க்கலாமா? சித்திரத்துடன் தான்!
இது விகடனில் ‘வந்தது வந்தபடியே’ !

 ( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்

நடந்தது நடந்தபடியே : மற்றவை

துப்பறியும் சாம்பு

தேவன் படைப்புகள்

[ நன்றி : விகடன் ]

திங்கள், 8 அக்டோபர், 2012

நேற்றும், இன்றும் : கவிதை

நேற்றும், இன்றும்
பசுபதி


நேற்று
பனிசூழ் கனடாப் பகுதியிலே
      பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன்.
தனிமைத் துயரத் தழலதனைத்
      தாங்கச் சற்றுஞ் சக்தியிலை.
இனிமை எட்டும் வழியொன்றை
      ஈசன் எனக்குக் காட்டிவிட்டான்.
'மனித வருத்தம் மகிழ்வெல்லாம்
      மனத்தின் மாயம் ' எனவுணர்ந்தேன்.

இன்று:

கையிற் கணினி விசையுண்டு;
     கருத்திற் கன்னித் தமிழுண்டு ;
பையிற் பண்டை யாப்புண்டு;
     பாட்டுக் கோர்வா னொலியுண்டு;
வைய வலையில் நட்புண்டு;
     மலரும் மரபுக் கவியுண்டு;
ஐயன் முருகன் அருள்கிட்டின்
     அண்டர் உலகம் வேறுண்டோ ?
                                         
[ ’திண்ணை’, மே 28, 2000 ]

 தொடர்புள்ள பதிவுகள் :

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சாவி - 6 : 'அரசியல்' அண்ணாசாமி

'அரசியல்அண்ணாசாமி
சாவி


[ ஓவியம்: கோபுலு ] 


ஃப்ரெட்ரிக் மார்ச்  ( Fredrick March )  என்பவர் ஆஸ்கர் விருது வாங்கிய பிரபல அமெரிக்க நடிகர். தமிழ்நாட்டில் 1960 -இல் கைது செய்யப்பட்டார் ! இது சிலருக்கு நினைவு இருக்கலாம்!

அதைப் பற்றி எனக்குத் தெரிந்து ஒரு நகைச்சுவைக் கட்டுரையில் எழுதியவர் ‘சாவி’ ஒருவரே! மேலே படியுங்கள் !
====
          


காலை பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்று விடாமல் படித்துவிட்டு மாலையில் கூடும் அந்தப் பார்க் பெஞ்சு மாநாட்டில் விஷயங்களை அலசிவிட்டுப் போனால்தான் அங்கே கூடும் 'பென்ஷன்'களுக்கெல்லாம் தூக்கம் வரும்.
''அண்ணாசாமி ஸார், வாங்க வாங்க. நீங்க இல்லாமல் கான்பரன்ஸே 'டல்' அடிக்கிறது. ஏன் லேட்?''


''இதென்ன கேள்வி? ஆபீஸ் விட்டதும் சர்க்கார் பஸ்ஸைன்னா பிடிச்சு வந்து சேரணும்? லேட்டாகாமல் என்ன செய்யும்?'' என்று ஏதாவது குறை கூறிக்கொண்டே வந்து சேருவார் 'அரசியல்' அண்ணாசாமி.


அவர் வந்ததுமே கான்ஃபரன்ஸ் களை கட்டிவிடும்.


அண்ணாசாமி வரும்போதே சற்றுக் கடுகடுப்பாகத்தான் வருவார். உலகப் பிரச்னைகளையெல்லாம் எப்படித் தீர்த்துவைப்பது என்ற கவலை அவர் முகத்தில் பிரதிபலிக்கும். பெஞ்சு மீது அமர்ந்து ஒரு சிட்டிகையைத் தட்டி இழுத்துவிட வேண்டியதுதான். நகரசபை நிர்வாகத்திலிருந்து .நா.சபை நடவடிக்கை வரை எல்லா விஷயங்களையும் மட்டைக்கு இரண்டு கீற்றாக வெளுத்து வாங்கிவிட்டுச் செல்வார்.


[ ஓவியம்: நடனம் ] 


''திருச்சியிலே பார்த்தீங்களா? குழாய் தண்ணிக்குக் 'கியூ'விலே நிக்கறாங்களாம். பக்கத்திலே காவேரி ஓடறது - என்ன பிரயோசனம்?'' என்று ஆரம்பிப்பார் ஒரு மப்ளர் ஆசாமி. அவ்வளவுதான்; அண்ணாசாமிக்கு எங்கிருந்தோ ஓர் ஆவேசம் பிறந்துவிடும்.


''இது என்ன அக்கிரமம், ஸார்? வெள்ளைக்காரன் காலத்திலே இப்படிக் கேள்விப்பட்டிருப்போமா? குடிக்கிற தண்ணிக்கு 'க்யூ'வாம்! இந்த அழகிலே காவேரி வாட்டரை மெட்ராஸுக்குக் கொண்டு வரப் போறானாம். பக்கத்திலே இருக்கிற திருச்சிக்கு வழியைக் காணோம்!'' என்பார் அண்ணாசாமி.


''கிருஷ்ணா நதியைக் கொண்டுவரப் போறதா ஒரு 'ஸ்கீம்' இருந்துதே, அது என்ன ஆச்சு?'' என்று மெதுவாகக் காவேரியிலிருந்து கிருஷ்ணாவுக்குத் தாண்டுவார் சந்தனப் பொட்டுக்காரர்.


''ஸ்கீமுக்கு என்னங்காணும்? ஆயிரம் ஸ்கீம் போடலாம்! சி.பி.யும், சீனிவாசய்யங்காரும் போடாத ஸ்கீமா இவன் பெரிசா போட்டுடப் போறான்? பணத்துக்கு ஒரு ஸ்கீமையும் காணோம்! கன்னா பின்னான்னு கடனை வாங்கி, தண்ணி இல்லாத இடத்திலெல்லாம் டாமைக் கட்டிண்டிருக்கான். கேட்டா, 'இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்'புங்கறான். ஐக்கும், குருஷேவும் எதுக்குத் திருப்பி திருப்பி இந்தியாவுக்கு வந்துண்டிருக்கான் தெரியுமா? விஷயம் இருக்குன்னேன்! இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்பாவது, கப்பலாவது? போகப் போகத் தெரியும். பார்த்துண்டே இரும். நான் இன்னிக்குச் சொல்றேன். குருஷ்சேவ் குடுமி சும்மா ஆடாதுய்யா, அசகாய சூரன்!''


''அதிருக்கட்டும்; எவரெஸ்ட் எவருக்கு சொந்தம்னு தீர்மானமாயிடுத்தா?''
          


''பரமசிவனுக்குத்தான்; போய்யா! ஒருத்தன் எவரெஸ்ட் என்னதுங்கறான், இன்னொருத்தன் காஷ்மீர் என்னதுங்கறான். அப்படிச் சொல்றவனையெல்லாம் அழைச்சுண்டு வந்து நாம் விருந்து வெச்சுண்டிருக்கோம். இதெல்லாம் டிப்ளமஸியாம். இந்த லட்சணத்திலே டிபன்ஸ் வேறே! டிபன்ஸ் மினிஸ்டர் வேறே!''


''ஆடிட் ரிப்போர்ட் சந்தி சிரிக்கிறதே, பார்த்தேளா?''


''வெட்கக்கேடு: வெளியே சொல்லாதேயும்! அட்மினிஸ்ரேஷன்லெ ஒரே ஊழல். இதுக்குள்ள நாலு பைனான்ஸ் மினிஸ்டர் மாறியாச்சு. நேரு ஒண்டி ஆள். ஸின்ஸியர் மேன்தான். அவர் என்ன பண்ணுவார், பாவம்? சுத்தி இருக்கறவா சரியாயில்லையே! ஸெண்டர்லே ஒரு பாலிஸின்னா, ஸ்டேட்லே ஒரு பாலிஸி. ஒரு ஸ்டேட்லே ப்ரொகிபிஷன்ங்கறான். இன்னொரு ஸ்டேட்லே குடிக்கலாங்கறான். நம் ஊர் போலீஸ் குடிக்கிறவனையெல்லாம் விட்டுவிட்டு வெளியூர்லேருந்து வர பிரெடிரிக் மார்ச்சை அரெஸ்ட் பண்ணிண்டு இருக்கு (1). பிரெடிரிக் மார்ச் குடிச்சா என்னா? குடிக்காவிட்டா என்னா? அவனுக்காகவா புரொகிபிஷன் கொண்டு வந்தோம்? பர்ப்பஸையே மறந்துடறோம். இதைப்பத்தி நேருவே நன்னா டோஸ் கொடுத்திருக்கார் பார்த்தேளா? 'காமன்ஸென்ஸ்' இல்லைன்னு!''


''அது சரி; அசெம்பளிலே லாண்ட் ஸீலிங் அஞ்சு நாளா அமர்க்களப்படறதே!''


''நான் சொல்றேன், இதெல்லாம் டெமாக்ரஸியிலே ஒண்ணுமே நடக்காது, ஸார். இந்த கவர்மெண்டிலே எதையாவது உருப்படியாச் செய்ய முடியறதா பார்த்தேளா? எலெக்ஷனை எவன் நடத்தறான்; பணக்காரன்தானே நடத்தறான்!''


''ரிடயரிங் வயசை அம்பத்தஞ்சிலேருந்து அம்பத்தெட்டா பண்ண முடியலே. பென்ஷன் வரியை எடுக்க மாட்டேங்கறான். என்ன கவர்மெண்ட் வேண்டியிருக்கு? என்ன லாண்ட் ஸீலிங் வேண்டியிருக்கு? இதையெல்லாம் பார்த்தா கம்யூனிஸ்ட் கவர்ன்மெண்டே தேவலைன்னு தோண்றது.


''அதான் வந்துட்டிருக்கானே, சைனாக்காரன். மெதுவா பார்டர்கிட்டே வந்துட்டான். சூ என் லாய் வரான் பார்த்தயளா? வர சமயத்தைக் கவனிச்சயளா? அதுலேதான் இருக்கு ஸீக்ரெட்! நாசர் வந்துட்டுப் போறதுக்கும் இவன் வரதுக்கும் சம்பந்தம் இருக்கய்யா. பஞ்சசீலம் பஞ்சசீலம்னு இருக்கிறதையெல்லாம் கோட்டைவிடப் போறோம்!''


''என்ன அண்ணாசாமி ஸார், ஏன், இப்படி எதுக்கெடுத்தாலும் கவர்ன்மெண்டை அட்டாக் பண்றேள்? சர்க்கார் என்னய்யா பண்ணும்?''


''என்ன பண்ணுமா! தட்டிக் கேக்கறதுக்கு ஓர் ஆள் இருந்தா இப்படி நடக்குமா? சோஷலிஸ்டிக் பாட்டனாம் பேரனாம்? என்னய்யா சோஷலிஸம் வேண்டியிருக்கு? சோத்துக்கு லாட்டரி அடிக்கிறோம்.சோஷலிசம் பண்றாளாம்'' என்பார் அண்ணாசாமி.


''அதான் பெரியவர் ஆரம்பிச்சிருக்காரய்யா புது பார்ட்டி ( 2) !''


''ஆமாம்; புது பார்ட்டி ஆரம்பிச்சு ஓயாமல் கவர்ன்மெண்டை கிரிடிஸைஸ் பண்ணிட்டா ஆயிடுத்தா? அப்கோர்ஸ், பெரியவர் இண்டலிஜெண்ட்தான். ஸ்ட்ராங்காதான் பேசறார். யார் இல்லேங்கறா? நேருவும் ரெஸ்பெக்ட் வெச்சுதான் மீட் பண்ணியிருக்கார். பாலிஸி கிளியரா இல்லியே!''


''ஸார், இந்த ஸெளத் ஆப்பிரிக்கன் ப்ரீமியர்! (3)''


''அட, சரித்தான், ஸெளத் ஆப்பிரிக்காவுமாச்சு, புடலங்காயுமாச்சு. அடேடே! மார்க்கெட்டுலே பிஞ்சு புடலங்கா சீப்பா வந்திருக்காம். விலை ஏர்றதுக்கு முன்னே அதை வாங்கிண்டு போய்ச் சேருவோம்,வாரும்.''


 [ நன்றி: சாவியின் ‘கேரக்டர்’ நூல்; சித்திரம்: நடனம் ]

 =========
(1)
ஃப்ரெட்ரிக் மார்ச்சின் கைது பற்றிய செய்தி இங்கே  இங்கேயும்
(2)

இது ராஜாஜி 1959-இல்  தொடங்கிய ‘சுதந்திரா’ கட்சியைக் குறிப்பிடுகிறதாகத் தோன்றுகிறது.

(3) 

இது 1960-இல் தென்னாப்பிரிக்க முதல் மந்திரி சுடப்பட்டது பற்றிய
குறிப்பு என்று நினைக்கிறேன். 60-இல் மரணத்திலிருந்து தப்பித்தவர் ஆறு வருடங்களுக்குப் பின் கத்திக் குத்துகளுக்கு இரையாகிறார்.

இவ்வளவு  செய்திகளையும் தரும் ஒரே ‘நகைச்சுவை’க் கட்டுரை ..எந்த மொழியிலும் --- இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!

தொடர்புள்ள பதிவுகள்:

சாவியின் படைப்புகள்