ஞாயிறு, 28 ஜூலை, 2013

'தேவன்': நடந்தது நடந்தபடியே - 3

தென்கயிலையில் ஒரு நாள்
தேவன் நடந்தது நடந்தபடியே’ தான் தேவன்’ எழுதிய முதல் பயணக் கட்டுரைத் தொடர்.


அமரர் ராஜுவின் சித்திரங்களுடன் விகடனில் மூன்று மாதங்களுக்கு வந்த சிறிய தொடர் இது .

திருநீர்மலை, திருப்பதி, திருச்சானூர், காளஹஸ்தி,  திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சி, திருவிடைமருதூர் என்று பல தலங்களைப் பார்த்த அனுபவங்களை நகைச்சுவையுடன் சொல்கிறார் ‘தேவன்’. 


இத்தொடரில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனியாகவே படித்தும் ரசிக்கலாம். கீழ்க்கண்ட அத்தியாயத்தில் திருப்பதி, திருச்சானூர், கீழத்திருப்பதி, காளஹஸ்தி சென்ற அனுபவங்களை விவரிக்கிறார் ‘தேவன்’.
[ நன்றி: விகடன் ]


துப்பறியும் சாம்பு

தேவன் படைப்புகள்

சனி, 20 ஜூலை, 2013

சங்கீத சங்கதிகள் - 18

இசை - போட்டேன் அசை! 

வாலிஜூலை 18, 2013 அன்று காலமான ‘காவியக் கவிஞர்’ வாலிக்கொரு நினவாஞ்சலியாக அவர் கர்நாடக சங்கீத வித்வான்கள் பற்றி  எழுதிய இரு கட்டுரைகளையும், ஒரு கவிதைப் பகுதியையும் இங்கிடுகிறேன். 

சிறுவயதில் அவருக்கும் சில சங்கீத வித்வான்களுக்கும் இருந்த தொடர்பு, முக்கியமாக ஒரு வித்வானிடமிருந்து அவர் பெற்ற ஓர் அறை ...இவற்றைப் பற்றி முதல் கட்டுரையில் விவரிக்கிறார் வாலி. ( இது  ‘ நினைவு நாடாக்கள்’ என்ற தலைப்பில் ’ஆனந்தவிகடனி’ல் வாலி எழுதிய தொடரில் வந்த ஒரு கட்டுரை) 

முதல் கட்டுரை: 

நான் வாங்கிய அறை!

ஓவியம்: மணி 

  
முரசொலி’யில் ஒரு செய்திக் கட்டுரை. 'சங்கீத வித்வான்கள் சபையில் பாட - எத்துணையோ தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன; இன்ன இன்னார் இயற்றிஇருக்கிறார்களே!’ என்று -
தமிழ்ப் பாடல்கள் யாத்துளோர் பட்டியலில் அடியேன் பேரும் இருந்தது!
கட்டுரையை எழுதிய பெரியவர் பெயர் திரு.திருவாரூர் தியாகராஜன். 'சின்னக் குத்தூசி’ என்றால் சகமறியும்!
இந்தக் கட்டுரை வெளியான இதழை நான் படித்துக்கொண்டிருக்கையில் -
ஓராண்டு என்னிலும் மூத்த ஒரு சங்கீத வித்வான் - என் பால்ய நண்பர் - என் வீட்டுக்கு வந்தார். என்னைப்பற்றிய தகவலை, அவரிடம் படிக்கக் கொடுத்தேன்.
'ஓய்! நீர் கீர்த்தனங்கள் எழுதுவீரா என்ன?’ என்று சற்று நமட்டுச் சிரிப்புடன் வினவினார்.
சங்கீத பூஷணம் தாராபுரம் திரு.சுந்தரராஜனின் ஸ்வரக் குறிப்புகளோடு - என் கீர்த்தனங்களை -
கலைஞன் பதிப்பகம் வெளியிட்டு இருப்பதை அவரிடம் காட்டினேன்.
அதைப் புரட்டிக்கொண்டே வந்த என் நண்பர் -
''ஓய்! உம்ம பாட்டா இது? நான் அந்தக் காலத்துல மதுரை சோமு; எம்.எல்.வசந்தகுமாரி; கல்யாணராமன்; சுதா ரகுநாதன்; பாம்பே ஜெயஸ்ரீ - இப்படி இந்தக் காலம் வரைக்கும் இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கேன்! அவ்வளவு ஏன்? நானே என் கச்சேரீல இதை ரொம்ப நாளா 'வலஜி’யில பாடிண்டிருக்கேன்; உம்ம பாட்டூன்னு - இப்பதான் தெரிஞ்சுண்டேன்; கிண்டலாப் பேசிட்டேன்; க்ஷமிக்கணும்!'' என்று கைகளைக் கூப்பினார்.
நண்பர் குறிப்பிட்ட என்னுடைய பாட்டு இதுதான்...
'கூவியழைத்தால்
குரல் கொடுப்பான்; பரங்-
குன்றமேறி நின்று
குமரா வென்று...’ ( 1)
வெகு காலமாக ஒரு வெகுஜன அபிப்பிராயம் இருக்கிறது - கோடம்பாக்கத்திற்கும் திருவையாறுக்கும் ஏழாம் பொருத்தம் என்று.
அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
கோவையில் 'வாணி பிலிம்ஸ்’ என்று ஒரு படக் கம்பெனி. அதன் பாகஸ்தர்கள் யார் தெரியுமா?
வயலின் வித்வான் டி.சௌடய்யா;
புல்லாங்குழல் வித்வான் டி.ஆர். மகாலிங்கம்;
மற்றும்
மஹா வித்வான் செம்பை திரு.வைத்யநாத பாகவதர்!
திருமதி. கே.பி.சுந்தராம்பாளும், மகாராஜபுரம் திரு.விஸ்வநாதய்யரும் நடித்த படம் 'நந்தனார்!’.
திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமியும் திரு.ஜி.என்.பாலசுப்ரமணியமும் சேர்ந்து நடித்த படம் 'சகுந்தலை!’.
திருமதி. என்.ஸி.வசந்தகோகிலம் கதாநாயகியாக நடித்த படம் 'ஹரிதாஸ்!’.
திரு.பாபநாசம் சிவன் நடித்த படங்கள் 'தியாக பூமி’; 'பக்த குசேலா’; திரு.எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த படம் 'நந்தனார்’.
திருமதி. எம்.எல்.வசந்தகுமாரியும், திரு. பி.யூ.சின்னப்பாவும் சேர்ந்து நடித்து, சிறிது தூரம் வளர்ந்து நின்று போன படம் 'சுதர்ஸன்’.
திரு.பாலமுரளி கிருஷ்ணா நாரதராக நடித்தது மட்டுமன்றி பல படங்களில் பாடிஇருக்கிறார்!
திரு.மதுரை டி.என்.சேஷகோபாலன், திரு.குன்னக்குடி படத்தில் கதாநாயகன்!
நாதஸ்வர மேதை திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் 'கவிராஜ காளமேகம்’.
திருமதி. டி.கே.பட்டம்மாள் நிறைய படங்களில் பாடியிருக்கிறார்.
திரு.வி.வி.சடகோபன் கதாநாயகனாக நடித்த படம் 'மதன காமராஜன்’.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சின்ன வயதிலிருந்தே எனக்கு சங்கீத வித்வான்களோடு, நிறையப் பரிச்சயம் உண்டு!
ஸ்ரீரங்கத்தில்தான் இருந்தார், மகாவித்வான் வயலின் திரு. மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர்.
வருஷா வருஷம் தன் வீட்டில், தியாகராஜ உற்சவம் நடத்துவார். வந்து பாடாத வித்வான்களே இல்லை!
நான்தான் அங்கு எல்லாருக்கும் எடுபிடி.
சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையைக் காவேரிக்கு அழைத்துப் போய், ஸ்நானம் செய்விப்பது; மதுரை மணி அய்யரின் துணிகளை இஸ்திரி போட்டுவைப்பது; ஜி.என்.பி-யின் பொடி டப்பாவில் - நாசிகா சூர்ணத்தை, அவ்வப்போது நிரப்புவது; கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு 'டிகிரி காபி’ ஏற்பாடு செய்வது...
இத்யாதி; இத்யாதி!
ஒரு சங்கீத வித்வான் மீது எனக்கும், என் ஸ்ரீரங்கத்து நண்பன் விட்டலுக்கும் பயங்கரப் பிரியம்.
அவர், திருச்சிப் பக்கம் கச்சேரிக்கு வந்தால் எனக்குக் கடிதம் போடுவார். நானும் நண்பன் விட்டலும், திருச்சி அசோகா ஹோட்டலுக்குச் சென்று அவரோடு அக்கம்பக்கத்து ஊர்க் கச்சேரிகளுக்குச் செல்வோம்.
என்னுடைய எத்துணையோ பாடல்களை அவர் இசையமைத்து விஸ்தாரமாகக் கச்சேரியில் பாடுவதுண்டு.
நான், நாளாவட்டத்தில் அவருக்குத் தம்புரா போடலானேன்.
ஒருமுறை விடியற்காலை வரை அவரது கச்சேரி, திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரில் நடந்தது. ஜே ஜே என்று கூட்டம்.
ஒரு கட்டத்தில், நான் லேசாகக் கண்ணயர்ந்து - தம்புராவோடு அவர்மீது சாய்ந்து விட்டேன்.
அப்போதுதான், அவர் அனுபவித்து 'ராகம் தானம் பல்லவி’ பாடிக்கொண்டிருந்தார். என் செயலால், சுதி கலைய...
'பளீர்’ என்று என் கன்னத்தில் ஓர் அறை விட்டார். எனக்குப் பொறி கலங்கியது. அந்த வித்வான் குஸ்தி பழகியவர்!
நாள்கள் நகர்ந்தன. நான், சினிமாவில் பிரபலமாகிவிட்டேன்; நண்பன் விட்டல், எம்.ஜி.ஆர். மந்திரி சபையில் மந்திரியாகி விட்டான். திருச்சி சௌந்தரராஜனின் செல்லப் பெயர்தான் விட்டல்!
பல்லாண்டுகளுக்குப் பின் - அந்த சங்கீத வித்வான் -
'சஷ்டி விரதம்’ என்னும் தேவர் பிலிம்ஸ் படத்துக்காகப் பாட வந்திருந்தார். என் பாட்டுதான் அது.
என்னைப் பார்த்ததும் - என் கன்னத்தில் அவர் அறைந்தது நினைவுக்கு வந்து - மிகவும் கூச்சப்பட்டார். நான், அவரது கைகளைப்பற்றிக் கொண்டு சொன்னேன்.
'அண்ணே! நீங்க மஹாவித்வான்; சங்கீத சாகரம். இன்றும் நீங்கள் விடிய விடியப் பாடினால் - கூட்டம், கொட்டகை பிதுங்க நிற்கிறது. உங்கள் பேர் சொன்னாலே, சென்னை சபாக்கள் சந்தோஷித்துச் சிலிர்க்கின்றன!
உங்கள் கையால், பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஓர் அறைதான் -
நான் பாட்டுத் துறையில் இவ்வளவு பிரபலமாகக் காரணம்!’
- என்று அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.
உடனே, என்னை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தார் -
மகா மகா வித்வான்
திரு. மதுரை சோமு அவர்கள்!

[ நன்றி : விகடன் ] 

இரண்டாம் கட்டுரை: 

’விகடன்’ கட்டுரையில் வாலி குறிப்பிடும் அவருடைய இசைப்பாடல் நூலின் முகப்பு இதோ:95-இல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலில் 15 பாடல்கள் ஸ்வரக் குறிப்புகளுடன் இருக்கின்றன.  சங்கீத வித்வான்கள் பத்மஸ்ரீ கே.வி. நாராயணஸ்வாமி யும், சங்கீத கலாநிதி தஞ்சாவூர் எம்.தியாகராஜனும் இந்நூலிற்கு அணிந்துரைகள் கொடுத்திருக்கின்றனர். 
( ஆனால் , இந்நூலில் “கூவி அழைத்தால்” என்ற பாடலுக்குத் தாராபுரம் சுந்தரராஜன் அமைத்த ராகம் உதயரவிசந்திரிகா! இப்போதோ, வாலியின் கட்டுரையில் குறிப்பிட்டபடி, வலஜியில் தான் அது பிரபலமாகப் பாடப் படுகிறது! இதற்கு ‘வலஜி’யில்  முதலில் மெட்டமைத்தவர் யாரென்று எவருக்காவது தெரியுமா?  ) 
இன்று பலபேருக்குத் தாராபுரம் சுந்தரராஜன் யாரென்றும் தெரியாது. நல்ல குரல்வளமும், இசைஞானமும் வாய்த்திருந்தவர் அவர்; எங்கள் வீட்டில் நடந்த ஒரு கல்யாணத்திற்கு அவர் கச்சேரியை வைத்திருந்தோம்.  எல்லோரும் அவர் இசையை மிகவும் ரசித்தனர். இவர் வாலியின் பால்ய சிநேகிதர். இவரைப் பற்றி வாலி இந்நூல் முன்னுரையில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.  அவருடைய முன்னுரை சில அரிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதால், அந்த முழுக் கட்டுரையையும் கீழே தருகிறேன். 
[ நன்றி: கலைஞன் பதிப்பகம் ]

ஓர் இசையரசி


கடைசியாக, எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004-இல் மறைந்தவுடன் வாலி எழுதிய இரங்கல் கவிதையிலிருந்து ஒரு பகுதி:

ஓதம்சூல் உலகின்காண்-
ஓர்
ஒப்புலட்சுமி -இல்லாதவர்
சுப்புலட்சுமி ;
தூய வாய்மலரால்-
இசைத் தேனைத்
துப்புலட்சுமி


எம்.எஸ்
என்பது
சங்கீத
சாஸ்திரத்தின்
பெண்முக வடிவு ;இப்-
பெண்முக வடிவைப் பெற்றது -வீணை
சண்முகவடிவு !

வீணை சண்முகவடிவு-இவ்
வையத்தை..
விரல்வழி
வென்றார் ;அவரது
குலக்கொடி சுப்புலட்சுமி
குரல்வழி வென்றார் !

அம்புவி மேல்
அவர்போல் -
ஆர்க்கும்
அமைந்ததில்லை தொண்டை;
அஃதேபோல்
அவர் போல்
ஆரும்
ஆற்றியதில்லை ..
தொண்டை வழியாகப்-பொதுநலத்
தொண்டை !

கிருதி;
சுருதி;
இவை
இரண்டும் -
அவரை
அண்டியிருந்தன
தமது
தாயெனக் கருதி
ஒருவரும் கண்டதில்லை -அவை
ஒன்றோடு ஒன்று பொருதி ;
இலயத்தை-
இராகத்தை-
சிவப்பணுவாய் வெள்ளையணுவாய்
சுவீகரித்துக் கொண்டிருந்தது ..
எம்.எஸ் ஆக்கையுள்
எங்கணும் சஞ்சரித்த குருதி !


[ நன்றி : http://udanpirappe.blogspot.in/2012/04/blog-post.html , குமுதம் ரிப்போர்டர் ]


தொடர்புள்ள ஒரு சுட்டி ( 1 ):

கூவி அழைத்தால்: பாம்பே ஜெயஸ்ரீ


தொடர்புள்ள பதிவுகள்:


செவ்வாய், 16 ஜூலை, 2013

திருப்புகழ் - 8

சந்தத்துள் அடங்கிய கந்தன்
குருஜி ஏ.எஸ்.ராகவன்

’போகாத ஊரில்லை, போற்றாத தெய்வமில்லை’ என்று சொல்லும்படி பாடிய அருணகிரிநாதர் பல ஊர்களில் உள்ள முருகப் பிரானைப் பற்றிப் பல பாடல்களை நமக்கு வழங்கியுள்ளார். ஆனால் சில ஊர்களில் அவர் பாடியவற்றுள் ஒரே ஒரு திருப்புகழ்ப் பாடல் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. அத்தகைய ஒரு ஸ்தலம் தான் ‘கந்தன்குடி’. அதைப் பற்றிக் குருஜி ராகவன் எழுதிய கட்டுரை இதோ!
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு காட்டுப் பிரதேசம். அங்கே மரங்கள்அடர்ந்திருக்க, அவற்றை மலர்க்கொடிகள் தழுவ, அக்கொடிகளில் பூத்து சிரித்த மலர்கள் தேன் சிந்தி மகிழ... அந்த ரம்மியமான வனத்தை ஒட்டி ஒரு குக்கிராமம். அக்கிராமத்து மக்களின் நிறை செல்வம் ஆநிரைகள். காட்டுப் பகுதியில் அவை மேய்ச்சலுக்குச் செல்வதும், அந்தியில் வீடு திரும்புவதும் வழக்கமாயிருந்தது.

ஒரு செல்வந்தர் வீட்டுப் பசு மட்டும் பின் தங்கித் தாமதமாய் வீடு திரும்பிற்று. பால் கறந்த நேரத்தில் இப் பசுவின் மடி மட்டும் வற்றிக் காணப்பட்டது.

இந்த வினோதம் ஏன் என்று விசாரிக்கப் புறப்பட்ட ஆட்கள், பசுமாடு வனத்திடையே இருந்த பல புற்றுகளுள் குறிப்பாக ஒன்றினை நெருங்கி, அதன் மீது மடியிலிருந்த பாலைச் சொரிந்துவிட்டு வருவதைக் கண்டனர். இந்த ‘அபிஷேகம்’ தினந்தோறும் நடைபெற்று வந்தது!

விஷயம் தெரிந்ததும் ஊர் மக்கள் புற்று இருந்த இடத்தைத் தோண்டினர். அவ்வாறு தோண்டிய பொழுது கிடைத்தது ஓர் அழகான முருகன் சிலை _ வள்ளி _ தெய்வானையுடன் கூடிய உருவம்.  கிராமத்தாரின் மகிழ்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா! அப்போது, அங்கேயே கோயில் அமைப்பதென்று முடிவு செய்து செயல்படுத்தினர். முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டான். மூன்று கால பூஜையும் வழிபாடுகளும் அமோகமாக நடைபெறலாயின.

 கந்தன் விரும்பி குடிகொண்ட இடம் என்பதால் இத்தலம் கந்தன்குடி என்று வழங்கலாயிற்று.  ‘கந்தன் குடி’ என்று சொல்வதிலேயே ஒரு சந்தம் அடங்கியிருக்கிறது. வல்லினமும் மெல்லினமும் கலந்த ஓசை நயம் ‘தந்தன் தன’ என்ற சந்தத்துள் அழகாகப் பொருந்தி உட்காருகிறது.  ஊர்ப் பெயரிலுள்ள இந்த சந்தத்தையே பயன்படுத்தி இவ்வூர் முருகனை அதனுள் பொதித்துத் துதித்துப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்:

எந்தன்சட லங்கம்பல பங்கம்படுதொந்தங்களை
  யென்றுந்துயர் பொன்றும்படி யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
  யென்றும்படி பந்தங்கெட மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
  மண்டும்படி நின்றுஞ்சுட ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
  வண்டன்தமி யன்றன்பவம் ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
  தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு மணியாரம்
சந்தன்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
  சம்புந்தொழ நின்றுந்தினம் விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
  கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே
கண்டன்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
  கந்தன்குடி யின்தங்கிய பெருமாளே.

இன் கனி சுவைசிந்துகின்ற, பொங்கு புனல்களும் தங்கு சுனைகளும் வளப்படுத்துகிற ஊராக கந்தன்குடியை வர்ணிக்கிறார் அருணகிரிநாதர்.

 அங்கே குடிகொண்டிருப்பவனோ ‘கந்தன் குகன் எந்தன் குரு’, சம்புவும் தொழக் கூடியவன், ‘தந்தந்தன’, ‘திந்திந்திமி’ என்று சந்தமெழ அவன் மணியாரங்கள் ஒலித்து அசைந்து கொண்டிருக்கின்றன. உலகியல் பந்தங்கள் அறுபட, நம் நெஞ்சில் குடி கொண்ட வஞ்சம் பொடிபட அவனே, சந்தத்திலுறையும் கந்தனே, வந்து நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

இத் தலம் பேரளம் - காரைக்கால் ரயில் பாதையில் உள்ள அம்பகரத்தூரிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கிறது.  குமரக்குடி என்றும் ஒரு பெயர் உண்டு.  தெய்வானை அம்மை இங்கே கடுந்தவமிருந்து முருகனை அடைந்ததாக புராணம் சொல்கிறது. அச்சமயம் மகளுக்குக் காவலாகவும் துணையாகவும் தனது வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பைரவரையும் அனுப்பி வைத்தானாம் இந்திரன்.  இன்றைக்கும், கந்தன்குடி முருகன் கோயிலில் ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்தைக் கடந்து கொடி மரத்தை நாம் அடைந்தோமானால் மயிலுக்குப் பதிலாக அங்கே யானை வாகனம் இருப்பதைக் காண்கிறோம்.

வெளிப் பிராகாரம் புல் மண்டிக் கிடக்கிறது. உட்பிராகாரத்தை வலம் வருகையில், முதலில் தவக்கோலத்தில் நிற்கும் தெய்வ யானையின் சன்னிதியில் நிற்கிறோம். அவளைப் போல் ஒருமுகச் சிந்தனையுடன் நாமும் முருகனை எண்ண வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.  தவத்துக்கிறங்கி தெய்வானையைத் திருமணம் கொண்ட முருகன், ‘கல்யாண சுந்தரர்’ என்ற திருப்பெயருடன் ஒரு முகமும் நான்கு கைகளுமாகக் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை இருவரும் இருபுறமும் இருக்கிறார்கள். கிழக்கு நோக்கிய சன்னிதி. மயில் உருவம் பொறித்த அழகான பீடத்தின் மேல் நின்ற திருக்கோலம்.

இந்திரன் அனுப்பிய ஐராவதேசுவரர், பைரவர் ஆகியோருக்கு இங்கே சன்னிதிகள் உண்டு. ஈசனும் அன்னையும் விச்வநாதர் - விசாலாக்ஷி என்ற பெயர்களுடன் இங்கு விளங்குகின்றனர்.  ஸ்கந்த புஷ்கரிணி என்ற தீர்த்தமும் ஸ்தல விருட்சமான வன்னி மரமும் உள்ளன.    மிக சிரத்தையுடன் ஐந்துகால வழிபாடு நடக்கிறது இங்கே.  பசுக்கள் பால் பொழிந்து, புதையுண்டு கிடந்த கடவுள் திருவுருவங்களை அடையாளம் காட்டியதாகப் பல கதைகள் உண்டு. பெரும்பாலான கதைகளில் அவ்விடங்களில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பிரதிஷ்டையானதாகவே வரலாறு அமையும். கந்தன்குடி கதை சற்று மாறுபட்டிருந்தாலும் அப்பாவுக்குப் பிள்ளையாகவே முருகன் தப்பாமல் பிறந்திருப்பதைக் காட்டுகிறது!

[ நன்றி: கல்கி ]

புதன், 3 ஜூலை, 2013

கல்கி -4 : கிட்டப்பா ஞாபகம்

கிட்டப்பா ஞாபகம்
கல்கி

இன்று மறக்கப்பட்ட பல தேசபக்தர்களில் ஆக்கூர் அனந்தாச்சாரியாரும் ஒருவர். பேராசிரியர் கல்கியுடன் 25 வருஷங்களுக்கு மேல் பழகிய ஆப்த நண்பர்களில் இவர் ஒருவர். பாரதி அன்பர்கள் பலரை உறுப்பினராய்க் கொண்டு 1949-இல் ’கல்கி’ நிறுவித் தலைவராய் இருந்த பாரதி சங்கத்தின் திறமைமிக்க செயலாளராய் இவர் பலவருடங்கள் பணியாற்றினார். சென்னையில் வாணிமகாலில் நடந்த பல பாரதி சங்க விழாக்களில் இவரை, பரலி நெல்லையப்பருடன் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

ஆக்கூர் அனந்தாச்சாரியார்
[நன்றி: 

நாடக உலகின் முடிசூடா மன்னராய்த் திகழ்ந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நெருங்கிய நண்பர் அனந்தாச்சாரியார். 1933-இல் தன் 27-ஆம் வயதிலேயே மறைந்த கிட்டப்பாவின் நினைவில் அனந்தாச்சாரியார் ஓர் இலவசப் பள்ளியை நிறுவி, அதில் இசையும், ஹிந்தியும் கற்றுக் கொடுத்து வந்தார். அதற்கு 1945-இல் விஜயம் செய்த ‘கல்கி’ அவர்களின் கட்டுரையைக் கீழே பார்க்கலாம்:


[ நன்றி: கல்கி ]

கல்கி’ கட்டுரைகள்

கிட்டப்பா பிளேட் : கல்கி

கிட்டப்பாவின் விருத்தம் : கல்கி

எஸ்.ஜி. கிட்டப்பாவைப் பற்றி அறிய:

http://senkottaisriram.blogspot.ca/2010/03/blog-post_2999.html