இசை - போட்டேன் அசை!
வாலி
ஜூலை 18, 2013 அன்று காலமான ‘காவியக் கவிஞர்’ வாலிக்கொரு நினவாஞ்சலியாக அவர் கர்நாடக சங்கீத வித்வான்கள் பற்றி எழுதிய இரு கட்டுரைகளையும், ஒரு கவிதைப் பகுதியையும் இங்கிடுகிறேன்.
சிறுவயதில் அவருக்கும் சில சங்கீத வித்வான்களுக்கும் இருந்த தொடர்பு, முக்கியமாக ஒரு வித்வானிடமிருந்து அவர் பெற்ற ஓர் அறை ...இவற்றைப் பற்றி முதல் கட்டுரையில் விவரிக்கிறார் வாலி. ( இது ‘ நினைவு நாடாக்கள்’ என்ற தலைப்பில் ’ஆனந்தவிகடனி’ல் வாலி எழுதிய தொடரில் வந்த ஒரு கட்டுரை)
சிறுவயதில் அவருக்கும் சில சங்கீத வித்வான்களுக்கும் இருந்த தொடர்பு, முக்கியமாக ஒரு வித்வானிடமிருந்து அவர் பெற்ற ஓர் அறை ...இவற்றைப் பற்றி முதல் கட்டுரையில் விவரிக்கிறார் வாலி. ( இது ‘ நினைவு நாடாக்கள்’ என்ற தலைப்பில் ’ஆனந்தவிகடனி’ல் வாலி எழுதிய தொடரில் வந்த ஒரு கட்டுரை)
முதல் கட்டுரை:
நான் வாங்கிய அறை!
ஓவியம்: மணி |
முரசொலி’யில் ஒரு செய்திக் கட்டுரை. 'சங்கீத வித்வான்கள் சபையில் பாட - எத்துணையோ தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன; இன்ன இன்னார் இயற்றிஇருக்கிறார்களே!’ என்று -
தமிழ்ப் பாடல்கள் யாத்துளோர் பட்டியலில் அடியேன் பேரும் இருந்தது!
கட்டுரையை எழுதிய பெரியவர் பெயர் திரு.திருவாரூர் தியாகராஜன். 'சின்னக் குத்தூசி’ என்றால் சகமறியும்!
இந்தக் கட்டுரை வெளியான இதழை நான் படித்துக்கொண்டிருக்கையில் -
ஓராண்டு என்னிலும் மூத்த ஒரு சங்கீத வித்வான் - என் பால்ய நண்பர் - என் வீட்டுக்கு வந்தார். என்னைப்பற்றிய தகவலை, அவரிடம் படிக்கக் கொடுத்தேன்.
'ஓய்! நீர் கீர்த்தனங்கள் எழுதுவீரா என்ன?’ என்று சற்று நமட்டுச் சிரிப்புடன் வினவினார்.
சங்கீத பூஷணம் தாராபுரம் திரு.சுந்தரராஜனின் ஸ்வரக் குறிப்புகளோடு - என் கீர்த்தனங்களை -
கலைஞன் பதிப்பகம் வெளியிட்டு இருப்பதை அவரிடம் காட்டினேன்.
அதைப் புரட்டிக்கொண்டே வந்த என் நண்பர் -
''ஓய்! உம்ம பாட்டா இது? நான் அந்தக் காலத்துல மதுரை சோமு; எம்.எல்.வசந்தகுமாரி; கல்யாணராமன்; சுதா ரகுநாதன்; பாம்பே ஜெயஸ்ரீ - இப்படி இந்தக் காலம் வரைக்கும் இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கேன்! அவ்வளவு ஏன்? நானே என் கச்சேரீல இதை ரொம்ப நாளா 'வலஜி’யில பாடிண்டிருக்கேன்; உம்ம பாட்டூன்னு - இப்பதான் தெரிஞ்சுண்டேன்; கிண்டலாப் பேசிட்டேன்; க்ஷமிக்கணும்!'' என்று கைகளைக் கூப்பினார்.
நண்பர் குறிப்பிட்ட என்னுடைய பாட்டு இதுதான்...
'கூவியழைத்தால்
குரல் கொடுப்பான்; பரங்-
குன்றமேறி நின்று
குமரா வென்று...’ ( 1)
வெகு காலமாக ஒரு வெகுஜன அபிப்பிராயம் இருக்கிறது - கோடம்பாக்கத்திற்கும் திருவையாறுக்கும் ஏழாம் பொருத்தம் என்று.
அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
கோவையில் 'வாணி பிலிம்ஸ்’ என்று ஒரு படக் கம்பெனி. அதன் பாகஸ்தர்கள் யார் தெரியுமா?
வயலின் வித்வான் டி.சௌடய்யா;
புல்லாங்குழல் வித்வான் டி.ஆர். மகாலிங்கம்;
மற்றும்
மஹா வித்வான் செம்பை திரு.வைத்யநாத பாகவதர்!
திருமதி. கே.பி.சுந்தராம்பாளும், மகாராஜபுரம் திரு.விஸ்வநாதய்யரும் நடித்த படம் 'நந்தனார்!’.
திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமியும் திரு.ஜி.என்.பாலசுப்ரமணியமும் சேர்ந்து நடித்த படம் 'சகுந்தலை!’.
திருமதி. என்.ஸி.வசந்தகோகிலம் கதாநாயகியாக நடித்த படம் 'ஹரிதாஸ்!’.
திரு.பாபநாசம் சிவன் நடித்த படங்கள் 'தியாக பூமி’; 'பக்த குசேலா’; திரு.எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த படம் 'நந்தனார்’.
திருமதி. எம்.எல்.வசந்தகுமாரியும், திரு. பி.யூ.சின்னப்பாவும் சேர்ந்து நடித்து, சிறிது தூரம் வளர்ந்து நின்று போன படம் 'சுதர்ஸன்’.
திரு.பாலமுரளி கிருஷ்ணா நாரதராக நடித்தது மட்டுமன்றி பல படங்களில் பாடிஇருக்கிறார்!
திரு.மதுரை டி.என்.சேஷகோபாலன், திரு.குன்னக்குடி படத்தில் கதாநாயகன்!
நாதஸ்வர மேதை திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் 'கவிராஜ காளமேகம்’.
திருமதி. டி.கே.பட்டம்மாள் நிறைய படங்களில் பாடியிருக்கிறார்.
திரு.வி.வி.சடகோபன் கதாநாயகனாக நடித்த படம் 'மதன காமராஜன்’.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சின்ன வயதிலிருந்தே எனக்கு சங்கீத வித்வான்களோடு, நிறையப் பரிச்சயம் உண்டு!
ஸ்ரீரங்கத்தில்தான் இருந்தார், மகாவித்வான் வயலின் திரு. மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர்.
வருஷா வருஷம் தன் வீட்டில், தியாகராஜ உற்சவம் நடத்துவார். வந்து பாடாத வித்வான்களே இல்லை!
நான்தான் அங்கு எல்லாருக்கும் எடுபிடி.
சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையைக் காவேரிக்கு அழைத்துப் போய், ஸ்நானம் செய்விப்பது; மதுரை மணி அய்யரின் துணிகளை இஸ்திரி போட்டுவைப்பது; ஜி.என்.பி-யின் பொடி டப்பாவில் - நாசிகா சூர்ணத்தை, அவ்வப்போது நிரப்புவது; கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு 'டிகிரி காபி’ ஏற்பாடு செய்வது...
இத்யாதி; இத்யாதி!
ஒரு சங்கீத வித்வான் மீது எனக்கும், என் ஸ்ரீரங்கத்து நண்பன் விட்டலுக்கும் பயங்கரப் பிரியம்.
அவர், திருச்சிப் பக்கம் கச்சேரிக்கு வந்தால் எனக்குக் கடிதம் போடுவார். நானும் நண்பன் விட்டலும், திருச்சி அசோகா ஹோட்டலுக்குச் சென்று அவரோடு அக்கம்பக்கத்து ஊர்க் கச்சேரிகளுக்குச் செல்வோம்.
என்னுடைய எத்துணையோ பாடல்களை அவர் இசையமைத்து விஸ்தாரமாகக் கச்சேரியில் பாடுவதுண்டு.
நான், நாளாவட்டத்தில் அவருக்குத் தம்புரா போடலானேன்.
ஒருமுறை விடியற்காலை வரை அவரது கச்சேரி, திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரில் நடந்தது. ஜே ஜே என்று கூட்டம்.
ஒரு கட்டத்தில், நான் லேசாகக் கண்ணயர்ந்து - தம்புராவோடு அவர்மீது சாய்ந்து விட்டேன்.
அப்போதுதான், அவர் அனுபவித்து 'ராகம் தானம் பல்லவி’ பாடிக்கொண்டிருந்தார். என் செயலால், சுதி கலைய...
'பளீர்’ என்று என் கன்னத்தில் ஓர் அறை விட்டார். எனக்குப் பொறி கலங்கியது. அந்த வித்வான் குஸ்தி பழகியவர்!
நாள்கள் நகர்ந்தன. நான், சினிமாவில் பிரபலமாகிவிட்டேன்; நண்பன் விட்டல், எம்.ஜி.ஆர். மந்திரி சபையில் மந்திரியாகி விட்டான். திருச்சி சௌந்தரராஜனின் செல்லப் பெயர்தான் விட்டல்!
பல்லாண்டுகளுக்குப் பின் - அந்த சங்கீத வித்வான் -
'சஷ்டி விரதம்’ என்னும் தேவர் பிலிம்ஸ் படத்துக்காகப் பாட வந்திருந்தார். என் பாட்டுதான் அது.
என்னைப் பார்த்ததும் - என் கன்னத்தில் அவர் அறைந்தது நினைவுக்கு வந்து - மிகவும் கூச்சப்பட்டார். நான், அவரது கைகளைப்பற்றிக் கொண்டு சொன்னேன்.
'அண்ணே! நீங்க மஹாவித்வான்; சங்கீத சாகரம். இன்றும் நீங்கள் விடிய விடியப் பாடினால் - கூட்டம், கொட்டகை பிதுங்க நிற்கிறது. உங்கள் பேர் சொன்னாலே, சென்னை சபாக்கள் சந்தோஷித்துச் சிலிர்க்கின்றன!
உங்கள் கையால், பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஓர் அறைதான் -
நான் பாட்டுத் துறையில் இவ்வளவு பிரபலமாகக் காரணம்!’
- என்று அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.
உடனே, என்னை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தார் -
மகா மகா வித்வான்
திரு. மதுரை சோமு அவர்கள்!
[ நன்றி : விகடன் ]
இரண்டாம் கட்டுரை:
’விகடன்’ கட்டுரையில் வாலி குறிப்பிடும் அவருடைய இசைப்பாடல் நூலின் முகப்பு இதோ:
95-இல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலில் 15 பாடல்கள் ஸ்வரக் குறிப்புகளுடன் இருக்கின்றன. சங்கீத வித்வான்கள் பத்மஸ்ரீ கே.வி. நாராயணஸ்வாமி யும், சங்கீத கலாநிதி தஞ்சாவூர் எம்.தியாகராஜனும் இந்நூலிற்கு அணிந்துரைகள் கொடுத்திருக்கின்றனர்.
( ஆனால் , இந்நூலில் “கூவி அழைத்தால்” என்ற பாடலுக்குத் தாராபுரம் சுந்தரராஜன் அமைத்த ராகம் உதயரவிசந்திரிகா! இப்போதோ, வாலியின் கட்டுரையில் குறிப்பிட்டபடி, வலஜியில் தான் அது பிரபலமாகப் பாடப் படுகிறது! இதற்கு ‘வலஜி’யில் முதலில் மெட்டமைத்தவர் யாரென்று எவருக்காவது தெரியுமா? )
இன்று பலபேருக்குத் தாராபுரம் சுந்தரராஜன் யாரென்றும் தெரியாது. நல்ல குரல்வளமும், இசைஞானமும் வாய்த்திருந்தவர் அவர்; எங்கள் வீட்டில் நடந்த ஒரு கல்யாணத்திற்கு அவர் கச்சேரியை வைத்திருந்தோம். எல்லோரும் அவர் இசையை மிகவும் ரசித்தனர். இவர் வாலியின் பால்ய சிநேகிதர். இவரைப் பற்றி வாலி இந்நூல் முன்னுரையில் சிறப்பாக எழுதியிருக்கிறார். அவருடைய முன்னுரை சில அரிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதால், அந்த முழுக் கட்டுரையையும் கீழே தருகிறேன்.
[ நன்றி: கலைஞன் பதிப்பகம் ]
கடைசியாக, எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004-இல் மறைந்தவுடன் வாலி எழுதிய இரங்கல் கவிதையிலிருந்து ஒரு பகுதி:
ஓதம்சூல் உலகின்காண்-
ஓர்
ஒப்புலட்சுமி -இல்லாதவர்
சுப்புலட்சுமி ;
தூய வாய்மலரால்-
இசைத் தேனைத்
துப்புலட்சுமி
எம்.எஸ்
என்பது
சங்கீத
சாஸ்திரத்தின்
பெண்முக வடிவு ;இப்-
பெண்முக வடிவைப் பெற்றது -வீணை
சண்முகவடிவு !
வீணை சண்முகவடிவு-இவ்
வையத்தை..
விரல்வழி
வென்றார் ;அவரது
குலக்கொடி சுப்புலட்சுமி
குரல்வழி வென்றார் !
அம்புவி மேல்
அவர்போல் -
ஆர்க்கும்
அமைந்ததில்லை தொண்டை;
அஃதேபோல்
அவர் போல்
ஆரும்
ஆற்றியதில்லை ..
தொண்டை வழியாகப்-பொதுநலத்
தொண்டை !
கிருதி;
சுருதி;
இவை
இரண்டும் -
அவரை
அண்டியிருந்தன
தமது
தாயெனக் கருதி
ஒருவரும் கண்டதில்லை -அவை
ஒன்றோடு ஒன்று பொருதி ;
இலயத்தை-
இராகத்தை-
சிவப்பணுவாய் வெள்ளையணுவாய்
சுவீகரித்துக் கொண்டிருந்தது ..
எம்.எஸ் ஆக்கையுள்
எங்கணும் சஞ்சரித்த குருதி !
[ நன்றி : http://udanpirappe.blogspot.in/2012/04/blog-post.html , குமுதம் ரிப்போர்டர் ]
தொடர்புள்ள ஒரு சுட்டி ( 1 ):
கூவி அழைத்தால்: பாம்பே ஜெயஸ்ரீ
ஓர் இசையரசி
கடைசியாக, எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004-இல் மறைந்தவுடன் வாலி எழுதிய இரங்கல் கவிதையிலிருந்து ஒரு பகுதி:
ஓதம்சூல் உலகின்காண்-
ஓர்
ஒப்புலட்சுமி -இல்லாதவர்
சுப்புலட்சுமி ;
தூய வாய்மலரால்-
இசைத் தேனைத்
துப்புலட்சுமி
எம்.எஸ்
என்பது
சங்கீத
சாஸ்திரத்தின்
பெண்முக வடிவு ;இப்-
பெண்முக வடிவைப் பெற்றது -வீணை
சண்முகவடிவு !
வீணை சண்முகவடிவு-இவ்
வையத்தை..
விரல்வழி
வென்றார் ;அவரது
குலக்கொடி சுப்புலட்சுமி
குரல்வழி வென்றார் !
அம்புவி மேல்
அவர்போல் -
ஆர்க்கும்
அமைந்ததில்லை தொண்டை;
அஃதேபோல்
அவர் போல்
ஆரும்
ஆற்றியதில்லை ..
தொண்டை வழியாகப்-பொதுநலத்
தொண்டை !
கிருதி;
சுருதி;
இவை
இரண்டும் -
அவரை
அண்டியிருந்தன
தமது
தாயெனக் கருதி
ஒருவரும் கண்டதில்லை -அவை
ஒன்றோடு ஒன்று பொருதி ;
இலயத்தை-
இராகத்தை-
சிவப்பணுவாய் வெள்ளையணுவாய்
சுவீகரித்துக் கொண்டிருந்தது ..
எம்.எஸ் ஆக்கையுள்
எங்கணும் சஞ்சரித்த குருதி !
[ நன்றி : http://udanpirappe.blogspot.in/2012/04/blog-post.html , குமுதம் ரிப்போர்டர் ]
தொடர்புள்ள ஒரு சுட்டி ( 1 ):
கூவி அழைத்தால்: பாம்பே ஜெயஸ்ரீ
தொடர்புள்ள பதிவுகள்:
9 கருத்துகள்:
அருமையான கட்டுரைகள்.....
பகிர்வுக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள பதிவு. பிரமிக்கத்தக்க திறமை கொண்டிருந்தவர் வாலி என்பது இளைய தலைமுறைக்கு மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படவேண்டிய விஷயமே.
நன்றி, வெங்கட் நாகராஜ் , Chellappa Yagyaswamy
வாலி அவர்களின் விகடன் தொடர் படித்துள்ளேன். ஆனால் அவர் சுப்புலக்சுமி அம்மாவுக்கு பாடிய இரங்கல் இன்றே படிக்கிறேன்.
சொல்விளையாட்டில் வல்ல வாலி, அருமையாக யாத்துள்ளார். வாலி தமிழின் செழுமை.
இவற்றைப் பகிர்ந்ததற்கு நன்றி!
இன்று தான் உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன்; நான் படிக்க நிறைய எழுதுயுள்ளீர்கள். நேரம் தான் தேடவேண்டும்.
நன்றி, யோகன் பாரிஸ். மேலும் படியுங்கள், நிச்சயம் மகிழ்வீர்கள்!
வாலி அய்யாவின் கவிதைகளையும்,பாடல்களையும் நான் விடிய விடிய வாசித்து நெகிழ்ந்தவன்.அற்புதமான கவிஞர். தமிழ் அவரிடம் கடன்பட்டுள்ளது. அவர் எழுதிய “அவதார புருஷன்” என்ற நூலில் “மான்” என்ற ஒரு சொல்லை வைத்து அவர் ஆடிய சொற்சிலம்பம்,அப்பப்பா,இனியொரு கவிஞனால் இது சாத்தியமா என்றால் அதற்கு என்னால் பதில் சொல்ல இயலாது.வாலி அய்யா,உம்மை எல்லோரும் “வாலி நீ வாழி” என்று வாழ்த்தினார்களே,அய்யா அதெல்லாம் பொய்யா? வாலி அய்யா எழுதிய ஒரு திரைப்பட பாடலில்”மனதுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் பிடித்தான்” என்ற வரியைப் படித்த கண்ணதாசன் “வாலி நீ தான் என் வாரிசு” என்று சொன்னதாகப் படித்துள்ளேன்.
அபாரமான கருத்துக்கள் குவிந்த கட்டுரை., அத்தனையும் படித்து மகிழ்ந்தேன். வாழ்க நம் பசுபதியின் பணி! கவியோகியார் வேதம்
அருமை. காலத்தை வென்ற கவிஞர் வாலி.
கொடுத்த தலைப்பை எடுத்தார்
கொடுப்பது எல்லாம் கொடுத்தார்
யாருக்காகக் கொடுத்தார்
ஊருக்காகக் கொடுத்தார் ! (;-)
மிக அருமை! வாலி அவர்களின் இந்த முகம் என்னைப்போன்ற பலருக்கு தெரியாது. அதை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல பல! மதுரை சோமு அவர்கள் யென் பிரிய வித்வான்.
கருத்துரையிடுக