செவ்வாய், 31 அக்டோபர், 2017

887. இராய.சொக்கலிங்கம் -2

அன்பர் ராய.சொ.
ஏ.கே.செட்டியார்

அக்டோபர் 30. ராய.சொ. வின் பிறந்த நாள்.


‘சக்தி’ இதழில் 1943-இல் வந்த ஒரு கட்டுரை.

தொடர்புள்ள பதிவுகள்:
இராய.சொக்கலிங்கம்

திங்கள், 30 அக்டோபர், 2017

886. லா.ச.ராமாமிருதம் -15: சிந்தா நதி - 15

13. நேர்த்தியின் நியதிகள்
லா.ச.ராமாமிருதம்

அக்டோபர் 30. லா.ச.ரா வின் பிறந்த நாள்; நினைவு தினமும் கூட.

” ஆசைகள், லக்ஷிய மலர்கள், மலர்களின் நளினங்கள் அத்தனையும் நீர்த்துப்போன நக்ஷத்ரங்களாயிருக்கலாம். ஆயினும் இவையெல்லாம் ஒரு காலத்தில் நக்ஷத்ரங்கள். எனக்கு மட்டுமல்ல. எல்லோருடைய நஷத்ரங்கள். எல்லோருக்கும் வான் ஒன்று.”


.
===
அன்று என் பெட்டியைக் குடைகையில்-

ஓ, பெட்டியைக் குடைவதற்கு எனக்கு வேளை, பொழுதே வேண்டாம். அது என் அவமானம். ஆனால் கூடவே பழக்கமாகவும் படிந்துவிட்டது. வேடிக்கை. அதில் தேடிய பொருள் அதில் கிடைப்பதில்லை. சந்தியாவந்தனப் புத்தகத்தைப் பெட்டியில் தேடினால் அது அரிசிப் பீப்பாயில், அரைப்படிக்குள் ஒளிந்துகொண்டிருக்கும். எப்படி? அதுதான் இந்த வீட்டில் கேட்கப்படாது. அதேபோல, என் ட்டியில் ஒன்று தேடப் போய், ஒன்று கிடைக்கும் விந்தைக்கு என்ன பதில்? அதிசயம் (Miracle) என்றே சொல்லணும். உள் ஆழத்தில் எங்கோ கிடந்துவிட்டு, மேலே மிதக்க அதற்கு இப்போ வேளை வந்ததா, அல்ல, தன் உயிரில், தன் எண்ணத்தில் சுயமாக இயங்குகிறதா?

ஒரு குறிப்பு. எப்போவோ எழுதினது. என் இதயத்துக்கு அப்போது ஒப்படைத்த அந்தரங்கம். எந்த எழுத்துமே அந்தரங்கம்தான்.

எழுத்தாகிவிட்ட பின் கிழிக்க எனக்கு மனம் வருவதில்லை. இது என் பலவீனமா, பலமா? இத்தனை வருடங்களுக்குப் பின் இதோ என் *எழுத்து, சாக்ஷிக்கூண்டில் வாக்குமூலம் சொல்கிறது. இதன்மூலம் எனக்கு முள் கிரீடமா? தலையைச் சுற்றிப் புஷ்பச் சரமா?

                                 நேர்த்தியின் நியதிகள்

1. தினம் சுத்தமான ஆடை அணிக (எளிமையான உடை)
 வீட்டுள்: பனியன், வேட்டி. (பனியன் தேவையா)
 வெளியே குர்த்தா, பனியன், வேட்டி.

2. மெருகு பழகிய குரலும், பேச்சில் தன்மையும், இரண்டும் சத்தம் உயராதபடி பார்த்துக்கொள்க. இரைச்சலே விரசம்.

3. எப்பவும் குறைந்த பட்சப் பேச்சு (முடியுமா?)

4. உணவு குறைந்த பட்ச உட்கொளல்: குறைந்த பட்சத் தடவைகள்.

காலைச் சாப்பாடு: வாழையிலையில்- கட்டுப்படி ஆகவில்லை.
இரவு: சாப்பாடு வேண்டாம்; ஒரு தம்பளர் கஞ்சி. சிற்றுண்டி: தவிர்க்க.

நாக்குக்கும், வயிற்றுக்கும் ஓயாத போராட்டத்தில் அனுபவத்துக்கு முழுக்கக் கைவரவில்லை. நாக்கு உணக்கையும், காரமும் கேட்கிறது. குடல் இரண்டுக்கும் அஞ்சிச் சுருங்குகிறது. நாக்கே வெற்றி கொள்கிறது. வயிறு பலனை அனுபவிக்கிறது.

உடலுக்குள்ளேயே நியாயங்கள் நடைபெறவில்லை. வெட்கம் கெட்ட நாக்கு.

5. தன் உணர்வுடன் (Self Consciousness) தியானம், தியானம் இல்லை. புரட்டு.

எண்ணப்பாடு- கூடியவவை விலக்கு (சொல்ல எளிது), ஆனால் மனதுக்கு எண்ணாமல், எண்ணி எண்ணித் தன்னைப் புண்ணாக்கிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இனி தனியாக, சுய விசார விஷயம்.

6. எழுதுவது: ஆம், இது என் வேலை. இதைப் பூதஞ்சி பண்ணாமல் செய்க.

7. மெளனம். இது ஒரு பெருகும் அழகு. இதன் அழகு கலையாமல் பேணுக... சிந்தனையின் ஓட்டத்தில் தானே படரும் மோனத்துடன் தானே இழையும் தியானத்தின் அடையாளம் கண்டுகொள்ள முடியும். கண்டுகொள்ளப் பழகிக்கொள்.

8. ஆர்வத்துடன் எதையேனும் (ஸ்தூலப் பொருளை), நீ விரும்பினால், உனக்கு வேண்டுமென்று வாய் திறந்து கேளாதே. உன் சக்திக்குள் அதை வாங்க முடியாவிட்டால், மற.

9. உன்னுள் ஓரளவேனும் உன்னை ஒடுக்கிக் கொள்ளுதல், லோகாயதமாகவும், ஆத்ம ரீதியாகவும் உசிதம். அதற்காகச் சிடுசிடுப் பூனையாகவும் இருக்கக் கூடாது.

10. பசி: உன் வயதில் அடக்கி ஆள்வது அசாத்தியம் அன்று. ஆச்சரியமும் அன்று. அவசியம் என்றே சொல்லலாம். இச்சையைப் பசியென்று உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே.

11. கோபம்: கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். மெளனம் இதற்கு வகையாகக் கை கொடுக்கும். கொடுக்க வேண்டும்.

12. நீயாகக் கடிதங்கள் எழுதாதே, வந்த கடிதங்களுக்குப் பதில் தவிர. அதுவும் பதில் தேவையானால், தேவையான பதிலை எழுதத் தவறாதே.

13. கேட்காத புத்திமதியை நீயாக வழங்காதே. உன்னை மலிவு படுத்திக்கொள்ளாதே.

14. காரியங்கள் நீ எண்ணியபடி அமைய வேண்டுமெனில் நீயே செய்து கொள்வதுதான் சரி.

15. பிறரிடம் பக்குவத்தை எதிர்பார்ப்பது முறையன்று. அவரவர், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி.

பொதுவாகவே, உன் உடலிலும் மனதிலும் தெம்புக்கேற்றபடி, பிறரை எதிர்பாராது உன் காரியங்களை நீயே செய்து கொள்வதுதான் முறை. அது உன் சுய மரியாதை. அதில் ஒரு ஸ்வதந்திரம் இருக்கிறது. ஒரு கலை மிளிர்கிறது. அதில் இழையோடும் ஆணவம் கடைசிவரை ஓங்கட்டும்.

16. அவரவர் தயாரித்த கிடைக்கையில் அவரவர் படுக்கட்டும். சின்ன மீன்கள் பெரிய மீன்களைக் கடித்துக் கொண்டு, அத்தோடு தொங்கிக்கொண்டு, அதன் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதுதான் இப்போதைய வாழ்க்கை உக்தி, ஒட்டுண்ணிகளை உதறு.

17. உன் பாக்கிகள்: எந்த வகையில் இருப்பினும் சரி. செலுத்திவிடு. செலுத்திக் கொண்டேயிரு.

18. வாக்கு கொடுக்காதே. கொடுத்த வாக்கைத் தலை போனாலும் காப்பாற்று.

இதற்காகவே ராமன், அரிச்சந்திரன், தருமபுத்திரன் இத்யாதிகள் பாடுபட்டார்கள், வாழ்ந்தார்கள். நீ இவர்களைத் தவிர வேறு யாருமில்லை; இதுதான் நம் மதம், நம் பண்பு, நம் சத்தியம். இதில்தான் பிறந்தோம். இதுதான் நம் வாழ்க்கையின் சாரக் கொம்பு. தட்டிவிடாதே.

19. எப்பவுமே கடமை One Way Traffic. எதிர்பார்க்காதே. நீ செய். கடமை என்பது என்ன? அது வேறு கதை.

மேற்கண்ட கோட்பாடுகளை ஓரளவேனும் கடைப் பிடித்து. இவைகளுள் நீ அடங்கினால், ஓரளவேனும் உன் உள் செளந்தர்யத்தைக் காண்பாய்.

இவை அனைத்தும் வெறும் ஆசைகளாகவே இருக்கலாம்.

ஆனால் ஆசைகள், லக்ஷிய மலர்கள், மலர்களின் நளினங்கள் அத்தனையும் நீர்த்துப்போன நக்ஷத்ரங்களாயிருக்கலாம். ஆயினும் இவையெல்லாம் ஒரு காலத்தில் நக்ஷத்ரங்கள்.

எனக்கு மட்டுமல்ல. எல்லோருடைய நஷத்ரங்கள்.

எல்லோருக்கும் வான் ஒன்று.

சிந்தா நதியில் ஒரு காயிதக் கப்பல்.
***
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

885. நா.பார்த்தசாரதி -4

சில கடிதங்கள் ! 


நேற்று ( 28 அக்டோபர், 2017) டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் ‘தீபம்’ நா.பா. பற்றிய ஒரு சிறப்பான கருத்தரங்கம் நடைபெற்றது.  மேலே உள்ள படத்தில் உரைகளைப் பற்றிய தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த முனைவர் அ.கோவிந்தராஜு உளவியல் அடிப்படையில் நா.பா.வின் நாவல்களைப் பற்றிப் பேசினார். எழுத்தாளர் தேவகாந்தன் நா.பா.வின் மணிபல்லவம் தொடர்கதையை ஒரு நாவலாகச் செம்மைப் படுத்திக் கொண்டிருக்கும் தன்  நூதன முயற்சியைப் பற்றிப் பேசினார்.


பின்னர், உரைகளைப் பற்றிய சில  கருத்துகளை நான் தெரிவித்து, கடைசியில் எனக்கும் நா.பா விற்கும் இருந்த கடிதப் போக்குவரத்தைப் பற்றிப் பேசினேன். ( அப்போது நான் யேல் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருந்தேன்.) ‘தீப’த்தில் நான் எழுதிய இரு கடிதங்களையும், நா.பா. எனக்கு 69/70-இல்  எழுதிய இரு கடிதங்களையும் கீழே பார்க்கலாம்.

( இரண்டாம் கடிதம் எழுதும்போது , தீபத்தில் அடிக்கடி எழுதும் ‘ செங்குளம் வீரசிங்கக் கவிராயர்’ என்பவர் நா.பா. தான் என்பது எனக்குத் தெரியாது! :- )

தொடர்புள்ள பதிவுகள்: 
நிகழ்ச்சியைப் பற்றிய ஒரு தொகுப்பு ; முனைவர் கோவிந்தராஜு

சனி, 28 அக்டோபர், 2017

884. பி.ஸ்ரீ. - 21

மெய்விளங்கிய அன்பர்கள் :  
சேக்கிழாரும் கிராம ஆட்சியும்
பி.ஸ்ரீ.

அக்டோபர் 28. பி.ஸ்ரீ அவர்களின் நினைவு தினம்.
1948-இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்னொரு கட்டுரை.[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

வெள்ளி, 27 அக்டோபர், 2017

883. காந்தி - 11

4. சாந்தி நிகேதனம்
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பாகம்-2) என்ற  நூலின் நான்காம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
====
இராஜகோட்டையிலிருந்து காந்திஜி ஸ்ரீ ரவீந்திர நாதரின் சாந்திநிகேதனத்துக்குச் சென்றார். ஏற்கெனவே அவ்விடத்துக்குப் போனிக்ஸ் பண்ணையில் வசித்தவர்கள் போயிருந்தார்கள். அவர்கள் சாந்திநிகேதனத்தில் மிக அன்பாக நடத்தப்பட்டு வந்தார்கள். அவர்களுக்குத் தனியாக இடம் கொடுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்குத் தலைவர் ஸ்ரீ மகன்லால் காந்தி. இவர் சாந்திநிகேதனத்திலும் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடத்திய வாழ்க்கை முறையையே தாமும் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைப்பிடிக்கும்படி செய்துவந்தார்.

காந்திஜி சாந்தி நிகேதனம் அடைந்ததும் அவரை அங்கிருந்த ஆசிரியர்கள் மாணாக்கர்கள் எல்லாருமே அன்பு வெள்ளத்தில் முழுகும்படி செய்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஆண்ட்ரூஸும் பியர்ஸனும் அப்போது அங்கே இருந்தார்கள். இவர்கள் தவிர, பரோடா கங்காநாத் வித்யாலயத்திலிருந்து சாந்திநிகேதனத்துக்கு வந்திருந்த காகாசாகேப் காலேல்கர் என்பவரைக் காந்திஜி இங்கே சந்தித்தார். பிற்காலத்தில் காகா சாகிப் காந்திஜியின் சிறந்த நண்பர்களில் ஒருவர் ஆனார்.

சாந்தி நிகேதனத்தை அடைந்த காந்திஜி வெகு சீக்கிரத்திலேயே அங்கிருந்த ஆசிரியர்கள்--மாணாக்கர்கள் எல்லாருடனும் சிநேகம் செய்து கொண்டார். மறுநாளே அவர்களுடன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதம் செய்ய ஆரம்பித்தார். போனிக்ஸ் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே சமையல் செய்து கொண்டார்கள். அஅதுமாதிரியே சாந்தி நிகேதன மாணாக்கர்களும் சமையற்காரர்களைப் போகச்சொல்லிவிட்டுத் தாங்களே சமையல் செய்து கொண்டால் என்ன என்று மகாத்மா கேட்டார். இதனால் பிள்ளைகளுக்குத் தேகதிடமும் மனோதிடமும் வளரும் என்று சொன்னார். இது சம்பந்தமாக ஆசிரியர்களுக்குள்ளே இரண்டு கட்சிகள் ஏற்பட்டன. ஒரு கட்சியார் மகாத்மாவின் யோசனையை ஆதரித்தார்கள். இன்னொரு கட்சியார் அது நடக்காத காரியம் என்று தலையை அசைத்தார்கள்.

காந்திஜியின் யோசனை மாணாக்கர்களுக்குப் பிடித்திருந்தது. புதுமையான காரியம் என்றாலே பிள்ளைகள் விரும்புவது இயல்பு அல்லவா? மகாகவி ரவீந்திரரிடம் போய்ச் சொன்னார்கள். உபாத்தியாயர்களும் மாணாக்கர்களும் சம்மதித்தால் தமக்கு ஆட்சேபம் இல்லை என்று குருதேவர் சொன்னார். மாணாக்கர்களைப் பார்த்து "சுயராஜ்யத்தின் திறவுகோல் இந்தச் சோதனையில் அடங்கியிருக்கிறது!" என்று கூறினார்.

பின்னர் சாந்திநிகேதனத்தில் ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணாக்கர்களே சமையல் செய்யும் சோதனை சில காலம் நடந்தது. கூட்டம் கூட்டமாகப் பிரிந்து ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது பியர்ஸன் என்னும் ஆங்கிலேய அறிஞர் இந்தப் பரிசோதனையில் பூரண உற்சாகத்துடன் ஈடுபட்டார். தம் உடல் நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர் சமையல் அறையில் வேலை செய்தார். சமையல் அறையையும் சுற்றுப் புறங்களையும் சுத்தம் செய்யும் வேலையை ஆசிரியர்கள் சிலர் ஒப்புக்கொண்டிருந்தார்கள். எம்.ஏ.பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கையில் மண்வெட்டி பிடித்து வேலை செய்வதைப் பார்க்க மகாத்மா காந்திக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

ஆனால் சாந்தி நிகேதனத்தில் இந்தச் சோதனை சில காலந்தான் நடந்தது. சோதனையில் ஈடுபட்டவர்கள் கொஞ்ச காலத்துக்கெல்லாம் களைப்படைந்து போனார்கள். பியர்ஸன் முதலிய சிலர் மட்டும் இறுதிவரை அந்தச் சோதனையை விடாமல் நடத்தி வந்தார்கள்.


காந்தி மகாத்மா சில காலம் சாந்தி நிகேதனத்தில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்திருந்தார். ஆனால் இறைவனுடைய விருப்பம் வேறு விதமாயிருந்தது. ஒரு வாரத்திற்குள்ளே ஸ்ரீ கோகலே மரணமடைந்தார் என்னும் செய்தி வந்து காந்திஜியின் உள்ளத்தைக் கலக்கியது. சாந்தி நிகேதனம் துயரத்தில் மூழ்கியது. மகாத்மா காந்தி தமது பத்தினியையும் ஸ்ரீமகன்லால் காந்தியையும் அழைத்துக் கொண்டு பூனாவுக்குப் பிரயாணமானார்.

இந்தப் பிரயாணத்தின் போதும் காந்திஜி மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் உள்ள கஷ்டங்களை அனுபவித்து அறியும்படியாக நேர்ந்தது. இது சம்பந்தமாக மகாத்மா காந்தி எழுதியிருப்ப தாவது:-
"மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் டிக்கட் வாங்குவதில்கூட எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகவேண்டியிருக்கிறதென்பதை பர்த்வானில் அநுபவித்து அறிந்தோம். 'மூன்றாம் வகுப்பு டிக்கட்டுகள் இதற்குள் தரமுடியாது' என்று முதலில் சொன்னார்கள். அதன்மீது நான் ஸ்டேஷன்மாஸ்டரைக் காணச் சென்றேன். அவரைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாயிருந்தது. யாரோ ஒருவர் தயவு வைத்து அவர் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். அவரிடம் சென்று எங்களுடைய கஷ்டத்தை எடுத்துக்கூறினோம். அவரும் அதே பதிலையே தெரிவித்தார். ஆகவே காத்திருந்து டிக்கட் ஜன்னல் திறந்ததும் சென்றேன். ஆனால் டிக்கட் வாங்குதல் எளிய காரியமாயில்லை." அங்கு "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்னும் சட்டம் அமுலில் இருந்தது. மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும் என்று எண்ணிய பலசாலிகளான பிரயாணிகள் ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னை இடித்துத் தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். ஆகவே முதலில் டிக்கட் வாங்குவதற்குப் போனவனாகிய நான் ஏறக்குறையக் கடைசியில் தான் டிக்கட் பெற முடிந்தது.

வண்டி வந்து சேர்ந்தது. அதில் ஏறுதல் மற்றொருபிரம்மப் பிரயத்தனமாயிற்று. வண்டியில் ஏற்கனவே இருந்த பிரயாணிகளுக்கும், ஏற முயற்சித்த பிரயாணிகளுக்கும் இடையே வசைமொழிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளலும் நிகழ்ந்தது. பிளாட்பாரத்தில் மேலும் கீழும் ஓடி அலைந்தோம். 'இங்கு இடமில்லை' என்னும் பதிலே எங்கும் கிடைத்தது. கார்டினிடம் சென்று சொன்னேன். அவர் 'அகப்பட்ட இடத்தில் உள்ளே ஏற முயற்சி செய்யும்; இல்லாவிடில் அடுத்த வண்டியில் வாரும்' என்றார்.

மூன்றாம் வகுப்பு ரயில்வே பிரயாணிகளின் துயரங்களுக்கு ரயில்வே அதிகாரிகளின் யதேச்சாதிகாரமே காரணம் என்பதில்ஐயமில்லை. ஆனால் பிரயாணிகளின் முரட்டு சுபாவம், ஆபாச வழக்கங்கள், சுயநலம், அறியாமை முதலியவைகள் அத்துயரங்களை அதிகப்படுத்துகின்றன. இதில் பரிதாபமான விஷயம் யாதெனில், தாங்கள் தவறுதலாகவும், ஆபாசமாகவும், சுயநலத்துடனும் நடந்து கொள்கிறோமென்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. தாங்கள் செய்வதெல்லாம் இயற்கையே என்று அவர்கள் விஷயத்தில் படித்தவர்களாகிய நாம் காட்டும் அலட்சியமே என்று கூறலாம்.

மகாத்மா காந்தி பூனா வந்து சேர்ந்து கோகலேயின் சிரார்த்த காரியங்கள் எல்லாம் நிறைவேறிய பிறகு, இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வது பற்றி மற்றும் ஒரு முறை சிந்தனை செய்தார். கோகலேயைக் குரு பீடத்தில் வைத்து மகாத்மா அவரிடம் பக்தி செலுத்தியவர். இப்போது கோகலே காலமாகி விட்டபடியினால் அவர் ஸ்தாபித்த சங்கத்தில் சேர்ந்து அவர் ஆரம்பித்து வைத்த பணிகளை நிறைவேற்றுவது தமது கடமை என்று கருதினார். மீண்டும் இந்திய ஊழியர் சங்கத்தின் அங்கத்தினரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். முன் போலவே அந்த அங்கத்தினர்களுக்குள் அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. சிலர் மகாத்மாவைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்கள். சிலர் கூடாது என்றார்கள். மகாத்மாவைச் சேர்த்துக் கொள்வதை எதிர்த்தவர்கள் இந்திய ஊழியர் சங்கத்தின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் மகாத்மாவின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் அடிப்படையான வேற்றுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்திய ஊழியர் சங்க அங்கத்தினர் கூட்டம் நடத்தி அதில் பெரும்பான்மையினரது அபிப்பிராயத்தின்படி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

மகாத்மா இதை விரும்பவில்லை. தாம் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வதற்கு ஒரு சிலர் விரோதமாயிருந்தாலும் அதில் சேர மகாத்மா இஷ்டப்படவில்லை. சிலருக்கு விரோதமாகப் பெருபான்மை வோட்டுப் பெற்று ஒரு ஸ்தாபனத்தில் சேர்வதில் என்ன நன்மை ஏற்படமுடியும்கோகலேயிடம் தாம் வைத்திருந்த பக்திக்கு அது உகந்ததாகுமா? - இப்படி யோசித்துக் கடைசியாக மகாத்மா தமது விண்ணப்பத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். இதன் காரணமாக இந்தியா தேசம் அடைந்த நன்மைக்கு அளவே கிடையாது என்று சொல்லலாம். தாம் மேற்படி சங்கத்தில் சேராததே நல்லது என்றும் தாம் சங்கத்தில் சேர்வதை எதிர்த்தவர்களே தமக்கு நன்மை செய்தவர்கள் என்றும் பிற்காலத்தில் காந்திஜி கருதினார். மேற்கண்டவாறு விண்ணப்பத்தை வாபஸ் பெற்று கொண்டதனால் சங்கத்தின் அங்கத்தினருடன் மகாத்மா காந்தியின் சிநேக பாந்தவ்யம் வளர்ந்து நீடித்திருந்தது.

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்
[  நன்றி: : http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0385_01.html  ]

வியாழன், 26 அக்டோபர், 2017

882. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 2

வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
வ.சு. செங்கல்வராய பிள்ளை


வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி
தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை 1949-இல்
இயற்றியது.

-----------------------------------------------------------

வள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்
 மையல் வலையிலே வீழ்ந்தாண்டி;
கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி-வேடக்
 கன்னியை உன்னியே நொந்தாண்டி. 1

நாடுந் தணிகையை விட்டாண்டி-நல்ல
 நாளாம் இதென்றே நடந்தாண்டி;
காடும் புனமும் கடந்தாண்டி-வள்ளிக்
 காதல் இழுக்க விரைந்தாண்டி. 2

வள்ளி மலைக்கவன் வந்தாண்டி-எங்கள்
 வள்ளியை நாடியே வந்தாண்டி;
மெள்ளவே வேடனாய் நின்றாண்டி-நல்ல
 வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி. 3

வளைவிற்குஞ் செட்டியாய் வந்தாண்டி-வள்ளி
 வரிவளைக் கையையும் தொட்டாண்டி;
இளைத்தவன் போலவே நின்றாண்டி-வள்ளி
 ஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி. 4

பேசொரு பேச்சென இரந்தாண்டி-அவள்
 பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி;
கூசுதல் இல்லாது பார்த்தாண்டி-கண்ணாற்
 கோலத்தை மொண்டு குடித்தாண்டி. 5

வேடர் தலைவனைக் கண்டாண்டி-உயர்
 வேங்கை மரமதாய் நின்றாண்டி;
ஆடல் பலபல செய்தாண்டி-வள்ளி
 அன்பினைச் சோதிக்க வந்தாண்டி. 6

தோன்றிய நம்பிமுன் சென்றாண்டி-நல்ல
 தொண்டு கிழவனாய் நின்றாண்டி;
ஊன்றிய கோலொடு சென்றாண்டி-சுபம்
 ஓதியே நீறும் அளித்தாண்டி. 7

குமரியி லாடவே வந்தேன்நான்-கோலக்
 குறவர் தலைவனே என்றாண்டி;
அமருவன் வேடிச்சி காவலனாய்-ஐய
 அவளொடும் என்றுமே என்றாண்டி. 8

தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
 திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;
மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
 விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9

தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
 தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;
மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி-மெல்ல
 மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி. 10

சுனைநீரை யுண்டு சுகித்தாண்டி-ஆஹா!
 சுதினம் ஈதென்றே சொன்னாண்டி;
உனைநீயே ஒப்பாயென் றுரைத்தாண்டி-வள்ளீ !
 உள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி. 11

தாகத்தைத் தீர்த்த தயாநிதிநீ-என்றன்
 தாபமோ சொல்லுக் கடங்காதென்;
மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி-முழு
 மோசக் கிழவனாய் வந்தாண்டி. 12

சூதினைக் கண்டதும் ஓடினளே-வள்ளி
 "சுப்ரம்மண் யாதுணை" என்றனளே;
மாதினை வந்து மடக்கும்ஐயா!-எங்கள்
 வாரண ராஜரே என்றழைத்தார். 13

ஆனையைக் கண்டு நடுநடுங்கி-அவள்
 ஐயன் கிழவனை வந்தணைந்தாள்;
மானை யடைந்து மகிழ்ந்தாண்டி-எங்கள்
 மால்மரு கன்தணி கேசனுமே. 14

தணிகை மலையை அடைந்தாண்டி-வள்ளித்
 தாயுடன் அங்கே தரித்தாண்டி;
பணிய வினையொழித் தருள்வாண்டி-பாடிப்
 பரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி. 15

மந்திரம் ஆவதும் அவன்தாண்டி-நல்ல
 மாமருந் தாவதும் அவன்தாண்டி;
தந்திரம் ஆவதும் அவன்தாண்டி-சுத்த
 சத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16

நானெனும் ஆணவம் விட்டார்க்கே-அவன்
 நாளும் பணிவிடை செய்வாண்டி;
கானெனுங் கூந்தல் படைத்தவள்ளி-காலிற்
 காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி. 17

தன்னை மறந்துநீ பத்திசெயின்-உன்னைத்
 தாவி யணைக்க வருவாண்டி;
அன்னையும் அத்தனும் ஆவாண்டி-உன்றன்
 ஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி. 18

ஓங்கிய வானத்துத் தேவரெலாம்-நாளும்
 ஓலமிட் டாலுமே வாராண்டி;
காங்கேயா கந்தா எனஉருகில்-உன்றன்
 காட்சிக் கெளியனாய் நிற்பாண்டி. 19

திருப்புகழ்ச் சாமியை ஆண்டாண்டி-அவர்
 செய்தவங் கண்டு மகிழ்ந்தாண்டி;
விருப்புடன் பாடும் அடியவர்க்கே-அவர்
 வேண்டும் வரங்களைத் தருவாண்டி. 20

[ நன்றி: மதுரைத் திட்டம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 25 அக்டோபர், 2017

881. முருக வழிபாட்டு நெறியின் முன்னோடி: கட்டுரை

முருக வழிபாட்டு நெறியின் முன்னோடி
பசுபதி( இது அம்மன் தரிசனம் 2017 தீபாவளி மலரில் வந்த கட்டுரை.)
===

முருக வழிபாடு மிகப் பழமையான வழிபாடு. உலகில் முதலில் மலைகள் தாம் இருந்தன என்பர் அறிவியலார். மலையும், மலை சார்ந்த பகுதியையும்குறிஞ்சித் திணை என்று அழைத்தனர் சங்க காலத் தமிழர். அந்தக் குறிஞ்சிக்கு முருகனே தெய்வம் என்றும் கூறினர்.

இன்றோ, முருகன் சிறுவருக்குப் பாலகுமாரனாய், இளையோருக்கு மயிலேறும் கந்தனாய், அறிஞருக்கு அறுசமயப் பொருளான ஆறுமுகனாய், வீர்ர்களுக்குத் தேவ சேனாபதியாய், பக்தருக்குச் சிவகுருநாதனாய், தம்பதிகளுக்கு வள்ளி மணாளனாய், தவசிகளுக்குப் பழனியாண்டியாய்ப் பல கோலங்களில் பிரகாசித்து மகிழ்விக்கிறான். மேலும், திருமால் மருகனும், சிவகுமாரனும் ஆன  முருகன் இந்து மதத்தினருக்கொரு சைவ - வைணவப் பாலமாய்த் திகழ்கிறான்.

   உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று வணங்கும் ஒரு தெய்வம் முருகன். எங்கே புதிதாய்க் கோவில் கட்டினாலும் அதில் முருகனுக்கொரு சன்னிதி இருப்பதைக் காண்கிறோம். இந்தியாவிற்கு விடுமுறைக்கு வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள்ஆறுபடை வீடுகளுக்குச் சென்று ஷண்முகனைத் தரிசித்து மனநிறைவு பெறுகிறார்கள். இசை வழிபாடு செய்பவர்களும்ஆறுபடை வீடுகளைப் பற்றி அருணகிரிநாதர் பாடிய  திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி முருகனை வழிபடுகிறார்கள்இப்படிப்பட்டஆறுபடைவீடுகள் சார்ந்த முருக வழிபாட்டு நெறியை நமக்கு முதலில் அறிவுறுத்தியவர் யார்?

திருமுருகாற்றுப்படைஎன்ற நூலை இயற்றிய மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரர் .அவர் பெயரில் முன்னுள்ளஎன்ற எழுத்தே அவர் பெருமையை நமக்குச் சுட்டுகிறது. ‘என்பது சிறப்பைக் குறிக்கும் அடைமொழி. சங்கப் புலவர்களுள் நச்செள்ளையார், நக்கண்ணையார், நத்தத்தனார், நம்பூதனார், நப்பசலையார் என்பவர்களும் இத்தகைய தனிச் சிறப்புள்ளவர்கள் தான். திருமுருகாற்றுப் படையின்  பெருமை, வழிபாட்டில், சமயநூல்களில்  அந்நூலின் தாக்கம் போன்றவற்றை இங்குக் காண்போம்.
நூலின் பயனைச் சொல்கிறது ஒரு பழம் வெண்பா.

நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும் 
[ தற்கோலதன்னைக் காப்பாற்றிக் கொள்ள; முன்பாராயணம் செய்பவனுக்கு முன், கோலம்அழகு ]

முன்காலத்தில் இந்நூல் கவசம் போல் பாராயணம் செய்யப்பட்ட நூல், அத்தகைய பாராயணமே பூஜை என்பதைச் சொல்கிறது இன்னொரு வெண்பா.

பரங்குன்றில் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால், நெஞ்சே, அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்

ஆறு என்றால் வழி. ஆற்றுப்படுத்துதல்என்றால்வழிகாட்டுதல்’. 'ஆற்றுப்படை' என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமையைப் போக்கிக்கொண்ட  ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, "அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள்" என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். இந்தப் பாடல்வகையே தமிழரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தனக்குக் கிட்டிய செல்வம் மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தெரிகிறது.

  திருமுருகாற்றுப்படை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறிப் புலவனுக்கு  வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர். ஆற்றுப் படையில் சொல்லப்பட்ட ஆறு ஆற்றுப்படை வீடுகள் என்ற வழக்கு மாறி, பின்பு படை வீடு, ஆறுபடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி  செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து.

திருப்புகழிலும் பிற பழைய நூல்களிலும் 'ஆறு படை வீடு' என எங்கும் கூறப்படவில்லை. 'ஆறு திருப்பதி 'அறுபத நிலை' 'ஆறு நிலை' என்றே கூறப் பட்டிருக்கின்றன. பிற்கால ஆட்சியில் தான் 'ஆறு படை வீடு' என இத்தலங்கள் ஆறும் வழங்கப் பட்டுள்ளன." என்கிறார் செங்கல்வராய பிள்ளை. குமரகுருபரர் கூட ஆறு படை வீடு என்று சொல்லவில்லை. ('ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே -- கந்தர் கலிவெண்பா). குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்... ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது.
பொதுவில், யார் பயன் பெற முயல்கிறார்களோ அவர்கள் பெயரை ஆற்றுப்படை நூலுக்கு வைப்பது வழக்கம். காட்டு: பாணனுக்கு வழிகாட்டினால், பாணாற்றுப்படை. நக்கீரரோ, ஒரு புதுமையாய், முருகனைப் பாட்டுடைத் தலைவனாய் வைத்தார். அதனால், இந்த நூலுக்கு முதலில் இருந்தபுலவராற்றுப்படைஎன்ற பெயர் வழக்கொழிந்து, ‘திருமுருகாற்றுப்படைஎன்றே பெயர் நிலைத்து விட்டது. தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகனைப் பற்றிய நூல் என்பதால், சங்க நூல்களில் பத்துப்பாட்டில் முதல் நூலாக, காப்பு நூலாகதிருமுருகாற்றுப்படையைவைத்தனர் சான்றோர். மேலும், சைவ மறைகளான பன்னிரு திருமுறையில் , திருமுருகாற்றுப்படை 11-ஆம் திருமுறையிலும் உள்ளது. இப்படி, சங்க நூல்களிலும், பன்னிரு திருமுறையிலும் காணப்படும் ஒரே நூல் , இதுதான் என்னும்போது, இதன் பெருமை இரட்டிப்பாகிறது இல்லையா?  
 நக்கீரனார் எழுதிய 317 அடிகள் கொண்ட நூலான  திருமுருகாற்றுப்படை.  ஆசிரியப்பா என்ற செய்யுள் வகையில் இயற்றப் பட்டது . இந்நூலில் போற்றப்படும் ஆறு  வீடுகள் : திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் ( திருச்செந்தூர் ), திருவாவினன்குடி , திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை. பெரும்பாலானோர், திருவாவினன்குடி பழனி என்றும், திருவேரகம் என்பது சுவாமிமலை, பழமுதிர்சோலை அழகர் கோவில் என்றே நம்புகின்றனர்மேலும், நாம் இப்போது ஐந்தாவது படைவீடு என்று திருத்தணியைக் குறித்தாலும், ஐந்தாம் படைவீடு நக்கீரர் சொன்ன 'குன்றுதோறாடல்'தான். முருகன் இருக்கும் எல்லாக் குன்றுகளும் இதில் அடக்கம். . ( ஆறு திருப்பதிகளின் தியானச் சிறப்பை கந்தர் அந்தாதியின் முதற் பாட்டில் கண்டு களிக்கலாம் )

திருமுருகாற்றுப்படையின் முதல் பகுதியில் முருகனின் உருவ அழகு, சூரர மகளிர் விளையாட்டு, பேய்மகள் துணங்கை, சூரசங்காரம், மதுரையின் பெருமை, பரங்குன்றத்தின் இயற்கை வளம் சொல்லப்படுகிறது.

இரண்டாம் பகுதியில் முருகனின் வாகனத்தின் சிறப்பு, ஆறு முகங்களின் செயல்கள், அவனுடைய பன்னிரு கரங்களின் செய்கை, திருச்சீரலைவாய்க்கு அவன் எழுந்தருளுதல் போன்றவை விவரிக்கப் படுகின்றன.

மூன்றாம் பகுதியில்,  முருகனை வழிபடும் முனிவர்களின் இயல்பு, தரிசிக்க வரும் தேவரின் நிலை, கந்தருவர் காட்சி உள்ளன

நான்காம் பகுதியில், முருகனை வழிபடும் அந்தணரின் இயல்பு வர்ணிக்கப் படுகிறது.

ஐந்தாம் பகுதியில்,  குன்றிலுள்ளார் ஆடும் குரவை, முருகன் தேவ மகளிரொடு ஆடுதல் போன்றவை கூறப்படுகின்றன..

கடைசிப் பகுதியில்,  முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்கள், குறமகள் செய்யும் பூசை, முருகனிடம் சென்று வழிபடும் முறை, அவனைத் துதிக்கும் வகை, அவன் ஏவலர் இயல்பு, அவன் அருள் செய்யும் விதம், பழமுதிர்சோலையின் இயற்கை வளம் போன்றவற்றைக் காண்கிறோம்.

இந்நூலில் இலக்கிய நயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ‘உலகம்என்ற மங்கலச் சொல்லில் தொடங்குகிறது நூல். நீலக்கடலின் மேல் உதிக்கும் சூரியனைபோல், நீல மயிலேறும் முருகனும் ஒளி வீசி உதிக்கின்றான்என்று கற்பனையும், சொல்லாட்சியும், உவமையும் சுடர்விடத் தன் நூலைத் தொடங்குகிறார் நக்கீரர். சூரியன் புறவிருளை நீக்குவதைப்  போல், முருகன் அகவிருளை அகற்றுவான் என்று சொல்லாமல் சொல்லுகிறார் நக்கீரர்.

கார்கோள் முகந்த கமஞ்சூழ் மாமழை “  என்று நூலில் நக்கீரர் சொல்வது அவர் சொல்லாட்சிக்கு ஒரு காட்டு. கார்கோள் என்றால் கடல்.  கடலை முகந்த நிறைந்த கர்ப்பத்தை உடைய கரிய மேகம்' என்பது இதன் பொருள். கடலில் இருந்து கார் (மேகம்) நீரைக் கொள்வதால், இந்தக் காரணப் பெயரைக் கடலுக்கு முதலில் பயன்படுத்தியவர் நக்கீரரே. அறிவியலும் பெயரில் இழையோடுகிறது

பிற்காலத்தில், நக்கீரர் பெருமையைச் சிறப்பாக எடுத்தோதியவர் அருணகிரிநாதர்.
 "வளவாய்மை சொற் ப்ரபந்த முள கீரனுக்கு உவந்து
மலர்வாய் இலக்கணங்கள் இயல்பு ஓதி
அடிமோனை சொற்கிணங்க **உலகம் உவப்ப**
என்று அருளால் அளிக்கும் கந்தப் பெரியோனே "  

"நக்கீரர் ஓதிய வளமை சேர் தமிழுக்காக
நீடிய கரவோனே"  

"கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டி
கீரரிசை கேட்ட கிருபையோனே “ 
என்றெல்லாம் நக்கீரரை மனம்குளிரப் போற்றுகிறார் அருணகிரிநாதர். நக்கீரர் காட்டிய வழியில் பாடிய அருணகிரிநாதர் கௌமார நெறிக்கு இன்னொரு மூல இலக்கியகர்த்தாவாகத் திகழ்கிறார்.

முருகனின் ஆறுமுகங்களைப் பற்றிய ஆற்றுப்படை நூற்பகுதி மிக அழகுடையது.

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உ வந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா அ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கருவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே

பொருள்:பெரிய இருளையுடைய உலகம் குற்றம் இன்றி விளங்கும் படியாகப் பல வகையான கதிர்கள் விரிந்தது ஒருமுகம். பக்தர்கள் போற்றிப் புகழ, அவர்களுக்கு ஏற்கும்படியாகப் பொருந்தி இனிதாகச் சென்று விருப்பத்தோடு மகிழ்ந்து வரத்தைக் கொடுத்தது இன்னொரு முகம். வேத மந்திர விதியின்படியே சம்பிராயதத்தினின்றும் வழுவாமல் செய்கின்ற வேள்விகளை யாதோர் இடையூறும் இன்றி நிறைவேற்றத் திருவுள்ளங் கொண்டு ஆவன செய்யும் தொழிலை, முருகனுடைய மூன்றாம் முகம் புரிகிறது. ஒரு  முகம், நூல்களாலும் ஆசிரியர்களாலும் விளக்கம் உறாமல் எஞ்சி நின்ற பொருள்களை , அவற்றை உணரும் வேட்கையுள்ள முருகனடியார்கள் இன்பம் அடையும்படியாக ஆராய்ந்து சந்திரனைப் போல அவர்கள் கேட்ட துறையின் பகுதிகளையெல்லாம் விளங்கும்படி செய்யும். ஒருமுகம். போர்செய்யும் பகைவர்களை அடியோடு அழித்து , வருகின்ற போர்களை ஒழித்துச் சினம் கொண்ட நெஞ்சத்தோடு வெற்றிக்கு அறிகுறியாகக் களவேள்வியைச் செய்கிறது. ஒருமுகம், குறவருடைய மடமகள் கொடிபோன்ற இடையையுடைய  மெல்லியளாள் வள்ளியோடு சேர்ந்து புன்முறுவலை விரும்பிச் செய்கிறது.

இப்படி ஆறு முகங்கள் பற்றி நக்கீரர் சொன்னதைப் பின்பற்றி, அருணகிரியும் ( “’ ஏறுமயிலேறி “ ) குமரகுருபரரும் ( “வெவ்வசுரர் போற்றிசைக்கும்” )  அவரவர் வழியில் நயம்படப் பாடியுள்ளனர்.
கடைசியாக, நக்கீரரின் ஒரு பரிந்துரையை முன்வைப்போம்:

செவ்வேற் சேஎய்,-
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே

பொருள்: ” சிவந்த வேலையுடைய செந்நிறத் தெய்வமான முருகனின் செம்மைத் திருவடியை சென்று அடையும் பெருமை கொண்ட உள்ளத்தோடு நன்மையைச் செய்கின்ற சங்கற்பத்தைக் கொண்டு உன்நாட்டைப் பிரிந்து , தங்குவதற்குரிய பயணத்தை நீ விரும்பினால், நல்ல மனத்தில் எண்ணிய இனிய விருப்பங்கள் யாவும் ஒருங்கே நிறைவேற, நீ நினைத்த காரியம் இப்போதே கைகூடப் பெறுவாய் ”.
நாமும் ஆனந்தக் களிப்புடன் பாடுவோம்:

ஆறு முகன்புகழ் பாடு! --முரு
. . காற்றுப் படையென்ற நூலினை நாடு!
கீரனின் நூல்தமிழ்ச் சாறு -- கந்தன்
. . கீர்த்தியைத் தேக்கிடும் வீடுகள் ஆறு !
 ================


தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 24 அக்டோபர், 2017

880. சங்கீத சங்கதிகள் - 134

மதுரை மணி ஐயர்
பா.சு. ரமணன் 


அக்டோபர் 25. மதுரை மணி ஐயரின் பிறந்த தினம்.
=== 
இசையுலகில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர் 'கான கலாதர' மதுரை மணி ஐயர். 'மதுர' மணி ஐயர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இவர் மதுரையில், எம்.எஸ்.ராமசுவாமி ஐயர் - சுப்புலட்சுமி தம்பதியினருக்கு அக்டோபர் 25, 1912 அன்று பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். தந்தை இசை ஆர்வலர். அக்காலத்தின் பிரபல இசைமேதை புஷ்பவனத்தின் சகோதரர். அதனால் இசைஞானம் மணி ஐயருக்குக் குடும்பச் சொத்து. சிற்றப்பா புஷ்பவனம், மதுரை பொன்னுசாமிப் பிள்ளை ஆகியோருக்கு குருவாக இருந்தவர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதர். அவருடைய மாணவரான ராஜம் பாகவதரிடம் சேர்ந்து இசை பயில ஆரம்பித்தார் மணி. ராஜம் பாகவதரின் வீட்டின் ஒரு பகுதியிலேயே வாடகைக்குக் குடியமர்ந்தது மணியின் குடும்பம். அவரிடம் பெற்ற பயிற்சியைத் தொடர்ந்து மணியின் இசைஞானம் பெருகவேண்டும் என்று தந்தை நினைத்தார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் மதுரை தியாகராஜ சங்கீத வித்யாலயத்தில் மணியைச் சேர்த்தார். ராஜம் பாகவதரும் அங்கேயே ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.
மணி ஐயரின் முதல் கச்சேரி 12ம் வயதில், நத்தம் சீதாராம ஐயர் (வயலின்), ராஜகோபால ஐயர் (மிருதங்கம்) பக்க வாத்தியம் வாசிக்க, ராமநாதபுரத்தில் உள்ள அலவாக்கோட்டை ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரங்கேறியது. நல்ல வரவேற்பு. சிறுசிறு வாய்ப்புகள் வரத் துவங்கின. 

1925ல் தேவகோட்டையில் காஞ்சி காமகோடி மஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் முன்பு பாடினார் மணி ஐயர். அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. பெரியவரது ஆசி மற்றும் பாராட்டுக்களுடன் தங்கப்பதக்கமும், பட்டு அங்கவஸ்திரமும் தந்து கௌரவிக்கப் பெற்றார். கச்சேரி வாய்ப்புகள் பெருகின. தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். தாம் கச்சேரிகள் செய்ததோடு, அப்போதைய ஜாம்பவான்களின் கச்சேரிகளுக்குச் சென்று கேட்டும் தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். 1927ல் சென்னையில் சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் திறப்பு விழாவில் தந்தை ராமசுவாமி ஐயர், 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றி ஓர் விரிவுரை ஆற்றினார். தொடர்ந்து மணி ஐயரின் கச்சேரியும் நடந்தது. அது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

அக்காலத்தில் ஸ்வரம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர். அவர் வழியைப் பின்பற்றினார் மதுரை மணி ஐயர். ராக பாவத்தாலும், கல்பனா ஸ்வரத்தாலும், நிரவல்களாலும் பாடல்களுக்குப் புத்துயிரூட்டினார். 'நாத தனுமனிஸம்', 'சக்கனி ராஜ', 'மா ஜானகி', 'காணக் கண் கோடி வேண்டும்', 'கா வா வா', 'தாயே யசோதா', 'எப்ப வருவாரோ', 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' போன்ற பாடல்கள் அவரது குரலில் மேலும் மெருகேறின. குறிப்பாக 'கந்தன் கருணை புரியும் வடிவேல்' பாடலை அவர் பாடும் அழகே அலாதி; உள்ளத்தை உருக்கிக் கண்களில் நீரை வரவழைப்பது என்பது அக்கால ரசிகர்களின் கருத்து. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய இங்கிலீஷ் நோட்டுகளைப் பாடி பிரபலமடையச் செய்ததும் மணி ஐயர்தான். மூன்று ஸ்தாயிகளிலும் சரளமாகப் பாடும் வல்லமை பெற்ற மணி ஐயர் சாருகேசி, நளினகாந்தி, லதாங்கி, ஹம்சநந்தினி, ரஞ்சனி, சரசாங்கி போன்ற பல ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப்படுத்தினார். தமது பெரும்பாலான கச்சேரிகளில் முத்துசாமி தீக்ஷிதரின் நவக்கிரஹக் கிருதிகளைப் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மைசூர் சௌடையா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, டி.என். கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜ பிள்ளை, பாலக்காடு மணி, பழனி சுப்ரமணிய பிள்ளை, முருகபூபதி எனப் புகழ்பெற்ற இசை ஜாம்பவான்கள் பலரும் மணி ஐயருக்கு பக்கம் வாசித்துள்ளனர்.


கல்வியிலும் மணி ஐயருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. பள்ளி சென்று முறையாகக் கல்வி பயில இயலாத காரணத்தால், ஆசிரியர் ஒருவரை வரவழைத்து அவர் மூலம் ஆங்கிலக் கல்வி பயின்று தேர்ந்தார். இலக்கியங்களிலும் அவருக்கு நல்ல ஆர்வமிருந்தது. ஜானகிராமன் போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் பலருடனும் அவர் நட்புக் கொண்டிருந்தார்.

மணி ஐயரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவரது பெருமைக்குச் சான்று. ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் சென்னைக்கு வந்திருந்தார். ஒருநாள் அதிகாலை சுவாமி தரிசனம் செய்வதற்காக மயிலாப்பூர் வீதி வழியாக வந்து கொண்டிருந்தவர், அருகில்தான் மணி ஐயரின் வீடு இருக்கிறது என்பதை அறிந்து அவர் வீட்டு வாசலில் நின்று விட்டார். பெரியவர் வாசலில் நிற்பதை அறிந்த உறவினர்கள் அனைவரும் வந்து மஹாபெரியவரை வணங்கி தரிசனம் பெற்றுச் சென்றனர். ஆனால் மணி ஐயர் வரவில்லை. "ஏன் மணியைக் காணோம், கூப்பிடு அவனை" என்றார் மகா பெரியவர்.

மணி ஐயரின் உதவியாளரும் சகோதரியின் கணவருமான வேம்பு தயங்கியபடியே, "அவர் மடியாக உங்களை தரிசனம் செய்ய, இன்னும் ஸ்நானம் செய்யவில்லை" என்றார்.

"மடியாவது ஒண்ணாவது. அவனுக்கு சங்கீதம்தான் எல்லாம். கூப்பிடு அவனை" என்றார் பெரியவர்.

வேம்பு உள்ளே போய்த் தகவல் சொல்ல, ஓடோடி வந்து பெரியவருக்குப் பாத நமஸ்காரம் செய்தார் மணி. உடனே தம் கழுத்தில் இருந்த ரோஜா மாலையைக் கழற்றி மணியின் கழுத்தில் போட்ட மஹா பெரியவர், "டேய், உனக்கு சங்கீதம்தான் மடி, ஆசாரம், பூஜை எல்லாம்" என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

மற்றொரு சமயம் மணி ஐயரின் கச்சேரியைக் கேட்டு ரசித்த மகா பெரியவர், இரவு வெகு நேரமாகி விட்டதால் பூட்டியிருந்த கடையைத் திறக்கச் செய்து, பட்டாடை வாங்கிவரச் செய்து அதை மணிக்கு அளித்து ஆசி கூறினார்.சபாக்களில் மட்டுமல்லாது, கோயில்கள், திருமணங்கள் எனப் பலவற்றிலும் கச்சேரிகள் செய்தார் மணி ஐயர். இவற்றோடு தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் நடத்திய சங்கர ஜயந்தி, கொத்தமங்கலம் சுப்பு நடத்திய புரட்டாசி சனிக்கிழமைக் கச்சேரி போன்றவற்றிலும் கலந்து கொண்டார். ஒருசமயம் நாகப்பட்டினத்தில் நீண்ட நாட்களாக மழையே இல்லை. அந்த ஊர் பிரபல மனிதர் வீட்டுத் திருமணத்தில் மணி ஐயரைப் பாட அழைத்திருந்தனர். அவரும் சில கீர்த்தனைகளைப் பாடி விட்டு பின்னர் மேக ரஞ்சனி ராகத்தைப் பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சில்லென்று காற்று வீச ஆரம்பித்தது. தூரத்தில் எங்கோ இடிமுழக்கம் கேட்டது. சற்று நேரத்தில் சாரலாக விழுந்த மழை அடுத்துத் தீவிரமானது. சொட்டச் சொட்ட மழையில் நனைந்தபடியே இசைப் பொழிவை ரசித்தனர் மக்கள்.

அவரைத் தேடி விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தன. 1944ல் தஞ்சை சமஸ்தானத்தினர் இவருக்கு 'கான கலாதர' என்ற பட்டமளித்தனர். 1960ல் மியூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி கிடைத்தது. ஜனாதிபதி விருதும் வழங்கப்பட்டது. 1962ல் தமிழ் இசைச் சங்கம் இவருக்கு "இசைப் பேரறிஞர்" என்ற பட்டத்தை அளித்தது. கொச்சி மகாராஜா தங்கத் தோடா அளித்தார். வானொலியில் தேசிய சங்கீத சம்மேளனம், அகில இந்திய இசை நிகழ்ச்சி என பலவற்றில் பாடியிருக்கிறார். இவருடைய ராகம்-தானம்-பல்லவியைக் கேட்பதற்கென்றே அக்காலத்தில் வானொலி முன் ரசிகர் கூட்டம் தவம் இருந்தது. இவை தவிர அவர் பாடி பல இசைத் தட்டுகளும் வெளியாகியுள்ளன.

இசை என்பது மக்களை இன்பப்படுத்துவதற்கும், அவர்கள் மனதை பக்குவப்படுத்தி மேன்மையுறச் செய்வதற்கும் ஓர் கருவி என்பது மணி ஐயரின் கருத்து. அதனாலேயே மங்களகரமான வார்த்தைகளைக் கொண்ட கீர்த்தனைகளையும், மகிழ்ச்சி தரும் ராகங்களையும் மட்டுமே பாடி வந்தார். எதிர்மறைக் கருத்துக்கள் கொண்ட பாடல்களை அவர் கச்சேரிகளில் பாடியதில்லை. இசையும் தமிழுமாக வாழ்ந்த அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி மகனும் சீடருமான டி.வி. சங்கரநாராயணனையே மகனாகப் பாவித்து வளர்த்தார். மணி ஐயர் ஜூன் 8, 1968 அன்று காலமானார். அவருடைய சாகித்யங்கள் உயிர்ப்புடன் விளங்கி என்றும் அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. அவரது நூற்றாண்டு விழா கர்நாடக இசை ரசிகர்களால் உலகமெங்கும் தற்போது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.(தகவல் உதவி: சு.ரா. எழுதிய இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்)


தொடர்புள்ள பதிவுகள்: