வியாழன், 26 அக்டோபர், 2017

882. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 2

வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
வ.சு. செங்கல்வராய பிள்ளை


வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி
தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை 1949-இல்
இயற்றியது.

-----------------------------------------------------------

வள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்
 மையல் வலையிலே வீழ்ந்தாண்டி;
கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி-வேடக்
 கன்னியை உன்னியே நொந்தாண்டி. 1

நாடுந் தணிகையை விட்டாண்டி-நல்ல
 நாளாம் இதென்றே நடந்தாண்டி;
காடும் புனமும் கடந்தாண்டி-வள்ளிக்
 காதல் இழுக்க விரைந்தாண்டி. 2

வள்ளி மலைக்கவன் வந்தாண்டி-எங்கள்
 வள்ளியை நாடியே வந்தாண்டி;
மெள்ளவே வேடனாய் நின்றாண்டி-நல்ல
 வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி. 3

வளைவிற்குஞ் செட்டியாய் வந்தாண்டி-வள்ளி
 வரிவளைக் கையையும் தொட்டாண்டி;
இளைத்தவன் போலவே நின்றாண்டி-வள்ளி
 ஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி. 4

பேசொரு பேச்சென இரந்தாண்டி-அவள்
 பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி;
கூசுதல் இல்லாது பார்த்தாண்டி-கண்ணாற்
 கோலத்தை மொண்டு குடித்தாண்டி. 5

வேடர் தலைவனைக் கண்டாண்டி-உயர்
 வேங்கை மரமதாய் நின்றாண்டி;
ஆடல் பலபல செய்தாண்டி-வள்ளி
 அன்பினைச் சோதிக்க வந்தாண்டி. 6

தோன்றிய நம்பிமுன் சென்றாண்டி-நல்ல
 தொண்டு கிழவனாய் நின்றாண்டி;
ஊன்றிய கோலொடு சென்றாண்டி-சுபம்
 ஓதியே நீறும் அளித்தாண்டி. 7

குமரியி லாடவே வந்தேன்நான்-கோலக்
 குறவர் தலைவனே என்றாண்டி;
அமருவன் வேடிச்சி காவலனாய்-ஐய
 அவளொடும் என்றுமே என்றாண்டி. 8

தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
 திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;
மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
 விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9

தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
 தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;
மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி-மெல்ல
 மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி. 10

சுனைநீரை யுண்டு சுகித்தாண்டி-ஆஹா!
 சுதினம் ஈதென்றே சொன்னாண்டி;
உனைநீயே ஒப்பாயென் றுரைத்தாண்டி-வள்ளீ !
 உள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி. 11

தாகத்தைத் தீர்த்த தயாநிதிநீ-என்றன்
 தாபமோ சொல்லுக் கடங்காதென்;
மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி-முழு
 மோசக் கிழவனாய் வந்தாண்டி. 12

சூதினைக் கண்டதும் ஓடினளே-வள்ளி
 "சுப்ரம்மண் யாதுணை" என்றனளே;
மாதினை வந்து மடக்கும்ஐயா!-எங்கள்
 வாரண ராஜரே என்றழைத்தார். 13

ஆனையைக் கண்டு நடுநடுங்கி-அவள்
 ஐயன் கிழவனை வந்தணைந்தாள்;
மானை யடைந்து மகிழ்ந்தாண்டி-எங்கள்
 மால்மரு கன்தணி கேசனுமே. 14

தணிகை மலையை அடைந்தாண்டி-வள்ளித்
 தாயுடன் அங்கே தரித்தாண்டி;
பணிய வினையொழித் தருள்வாண்டி-பாடிப்
 பரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி. 15

மந்திரம் ஆவதும் அவன்தாண்டி-நல்ல
 மாமருந் தாவதும் அவன்தாண்டி;
தந்திரம் ஆவதும் அவன்தாண்டி-சுத்த
 சத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16

நானெனும் ஆணவம் விட்டார்க்கே-அவன்
 நாளும் பணிவிடை செய்வாண்டி;
கானெனுங் கூந்தல் படைத்தவள்ளி-காலிற்
 காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி. 17

தன்னை மறந்துநீ பத்திசெயின்-உன்னைத்
 தாவி யணைக்க வருவாண்டி;
அன்னையும் அத்தனும் ஆவாண்டி-உன்றன்
 ஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி. 18

ஓங்கிய வானத்துத் தேவரெலாம்-நாளும்
 ஓலமிட் டாலுமே வாராண்டி;
காங்கேயா கந்தா எனஉருகில்-உன்றன்
 காட்சிக் கெளியனாய் நிற்பாண்டி. 19

திருப்புகழ்ச் சாமியை ஆண்டாண்டி-அவர்
 செய்தவங் கண்டு மகிழ்ந்தாண்டி;
விருப்புடன் பாடும் அடியவர்க்கே-அவர்
 வேண்டும் வரங்களைத் தருவாண்டி. 20

[ நன்றி: மதுரைத் திட்டம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

ananth சொன்னது…

மிக அருமை. ’திருப்புகழ்த் தந்தை’யான வ.சு.செ-யின் அரிய இந்தக் கும்மிப் பாடலைத் தேடிக் கண்டுபிடித்து இங்கிட்டதற்கு நன்றி.

Unknown சொன்னது…

Very nice