திங்கள், 30 அக்டோபர், 2017

886. லா.ச.ராமாமிருதம் -15: சிந்தா நதி - 15

13. நேர்த்தியின் நியதிகள்
லா.ச.ராமாமிருதம்

அக்டோபர் 30. லா.ச.ரா வின் பிறந்த நாள்; நினைவு தினமும் கூட.

” ஆசைகள், லக்ஷிய மலர்கள், மலர்களின் நளினங்கள் அத்தனையும் நீர்த்துப்போன நக்ஷத்ரங்களாயிருக்கலாம். ஆயினும் இவையெல்லாம் ஒரு காலத்தில் நக்ஷத்ரங்கள். எனக்கு மட்டுமல்ல. எல்லோருடைய நக்ஷத்ரங்கள். எல்லோருக்கும் வான் ஒன்று.”


.
===
அன்று என் பெட்டியைக் குடைகையில்-

ஓ, பெட்டியைக் குடைவதற்கு எனக்கு வேளை, பொழுதே வேண்டாம். அது என் அவமானம். ஆனால் கூடவே பழக்கமாகவும் படிந்துவிட்டது. வேடிக்கை. அதில் தேடிய பொருள் அதில் கிடைப்பதில்லை. சந்தியாவந்தனப் புத்தகத்தைப் பெட்டியில் தேடினால் அது அரிசிப் பீப்பாயில், அரைப்படிக்குள் ஒளிந்துகொண்டிருக்கும். எப்படி? அதுதான் இந்த வீட்டில் கேட்கப்படாது. அதேபோல, என் ட்டியில் ஒன்று தேடப் போய், ஒன்று கிடைக்கும் விந்தைக்கு என்ன பதில்? அதிசயம் (Miracle) என்றே சொல்லணும். உள் ஆழத்தில் எங்கோ கிடந்துவிட்டு, மேலே மிதக்க அதற்கு இப்போ வேளை வந்ததா, அல்ல, தன் உயிரில், தன் எண்ணத்தில் சுயமாக இயங்குகிறதா?

ஒரு குறிப்பு. எப்போவோ எழுதினது. என் இதயத்துக்கு அப்போது ஒப்படைத்த அந்தரங்கம். எந்த எழுத்துமே அந்தரங்கம்தான்.

எழுத்தாகிவிட்ட பின் கிழிக்க எனக்கு மனம் வருவதில்லை. இது என் பலவீனமா, பலமா? இத்தனை வருடங்களுக்குப் பின் இதோ என் *எழுத்து, சாக்ஷிக்கூண்டில் வாக்குமூலம் சொல்கிறது. இதன்மூலம் எனக்கு முள் கிரீடமா? தலையைச் சுற்றிப் புஷ்பச் சரமா?

                                 நேர்த்தியின் நியதிகள்

1. தினம் சுத்தமான ஆடை அணிக (எளிமையான உடை)
 வீட்டுள்: பனியன், வேட்டி. (பனியன் தேவையா)
 வெளியே குர்த்தா, பனியன், வேட்டி.

2. மெருகு பழகிய குரலும், பேச்சில் தன்மையும், இரண்டும் சத்தம் உயராதபடி பார்த்துக்கொள்க. இரைச்சலே விரசம்.

3. எப்பவும் குறைந்த பட்சப் பேச்சு (முடியுமா?)

4. உணவு குறைந்த பட்ச உட்கொளல்: குறைந்த பட்சத் தடவைகள்.

காலைச் சாப்பாடு: வாழையிலையில்- கட்டுப்படி ஆகவில்லை.
இரவு: சாப்பாடு வேண்டாம்; ஒரு தம்பளர் கஞ்சி. சிற்றுண்டி: தவிர்க்க.

நாக்குக்கும், வயிற்றுக்கும் ஓயாத போராட்டத்தில் அனுபவத்துக்கு முழுக்கக் கைவரவில்லை. நாக்கு உணக்கையும், காரமும் கேட்கிறது. குடல் இரண்டுக்கும் அஞ்சிச் சுருங்குகிறது. நாக்கே வெற்றி கொள்கிறது. வயிறு பலனை அனுபவிக்கிறது.

உடலுக்குள்ளேயே நியாயங்கள் நடைபெறவில்லை. வெட்கம் கெட்ட நாக்கு.

5. தன் உணர்வுடன் (Self Consciousness) தியானம், தியானம் இல்லை. புரட்டு.

எண்ணப்பாடு- கூடியவவை விலக்கு (சொல்ல எளிது), ஆனால் மனதுக்கு எண்ணாமல், எண்ணி எண்ணித் தன்னைப் புண்ணாக்கிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இனி தனியாக, சுய விசார விஷயம்.

6. எழுதுவது: ஆம், இது என் வேலை. இதைப் பூதஞ்சி பண்ணாமல் செய்க.

7. மெளனம். இது ஒரு பெருகும் அழகு. இதன் அழகு கலையாமல் பேணுக... சிந்தனையின் ஓட்டத்தில் தானே படரும் மோனத்துடன் தானே இழையும் தியானத்தின் அடையாளம் கண்டுகொள்ள முடியும். கண்டுகொள்ளப் பழகிக்கொள்.

8. ஆர்வத்துடன் எதையேனும் (ஸ்தூலப் பொருளை), நீ விரும்பினால், உனக்கு வேண்டுமென்று வாய் திறந்து கேளாதே. உன் சக்திக்குள் அதை வாங்க முடியாவிட்டால், மற.

9. உன்னுள் ஓரளவேனும் உன்னை ஒடுக்கிக் கொள்ளுதல், லோகாயதமாகவும், ஆத்ம ரீதியாகவும் உசிதம். அதற்காகச் சிடுசிடுப் பூனையாகவும் இருக்கக் கூடாது.

10. பசி: உன் வயதில் அடக்கி ஆள்வது அசாத்தியம் அன்று. ஆச்சரியமும் அன்று. அவசியம் என்றே சொல்லலாம். இச்சையைப் பசியென்று உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே.

11. கோபம்: கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். மெளனம் இதற்கு வகையாகக் கை கொடுக்கும். கொடுக்க வேண்டும்.

12. நீயாகக் கடிதங்கள் எழுதாதே, வந்த கடிதங்களுக்குப் பதில் தவிர. அதுவும் பதில் தேவையானால், தேவையான பதிலை எழுதத் தவறாதே.

13. கேட்காத புத்திமதியை நீயாக வழங்காதே. உன்னை மலிவு படுத்திக்கொள்ளாதே.

14. காரியங்கள் நீ எண்ணியபடி அமைய வேண்டுமெனில் நீயே செய்து கொள்வதுதான் சரி.

15. பிறரிடம் பக்குவத்தை எதிர்பார்ப்பது முறையன்று. அவரவர், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி.

பொதுவாகவே, உன் உடலிலும் மனதிலும் தெம்புக்கேற்றபடி, பிறரை எதிர்பாராது உன் காரியங்களை நீயே செய்து கொள்வதுதான் முறை. அது உன் சுய மரியாதை. அதில் ஒரு ஸ்வதந்திரம் இருக்கிறது. ஒரு கலை மிளிர்கிறது. அதில் இழையோடும் ஆணவம் கடைசிவரை ஓங்கட்டும்.

16. அவரவர் தயாரித்த கிடைக்கையில் அவரவர் படுக்கட்டும். சின்ன மீன்கள் பெரிய மீன்களைக் கடித்துக் கொண்டு, அத்தோடு தொங்கிக்கொண்டு, அதன் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதுதான் இப்போதைய வாழ்க்கை உக்தி, ஒட்டுண்ணிகளை உதறு.

17. உன் பாக்கிகள்: எந்த வகையில் இருப்பினும் சரி. செலுத்திவிடு. செலுத்திக் கொண்டேயிரு.

18. வாக்கு கொடுக்காதே. கொடுத்த வாக்கைத் தலை போனாலும் காப்பாற்று.

இதற்காகவே ராமன், அரிச்சந்திரன், தருமபுத்திரன் இத்யாதிகள் பாடுபட்டார்கள், வாழ்ந்தார்கள். நீ இவர்களைத் தவிர வேறு யாருமில்லை; இதுதான் நம் மதம், நம் பண்பு, நம் சத்தியம். இதில்தான் பிறந்தோம். இதுதான் நம் வாழ்க்கையின் சாரக் கொம்பு. தட்டிவிடாதே.

19. எப்பவுமே கடமை One Way Traffic. எதிர்பார்க்காதே. நீ செய். கடமை என்பது என்ன? அது வேறு கதை.

மேற்கண்ட கோட்பாடுகளை ஓரளவேனும் கடைப் பிடித்து. இவைகளுள் நீ அடங்கினால், ஓரளவேனும் உன் உள் செளந்தர்யத்தைக் காண்பாய்.

இவை அனைத்தும் வெறும் ஆசைகளாகவே இருக்கலாம்.

ஆனால் ஆசைகள், லக்ஷிய மலர்கள், மலர்களின் நளினங்கள் அத்தனையும் நீர்த்துப்போன நக்ஷத்ரங்களாயிருக்கலாம். ஆயினும் இவையெல்லாம் ஒரு காலத்தில் நக்ஷத்ரங்கள்.

எனக்கு மட்டுமல்ல. எல்லோருடைய நஷத்ரங்கள்.

எல்லோருக்கும் வான் ஒன்று.

சிந்தா நதியில் ஒரு காயிதக் கப்பல்.
***
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: