சொல் விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல் விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜனவரி, 2013

சொற்களைச் சுவைப்போம் - 4

வாஞ்சையுடன் பூமாலை  வாங்கு !
 பசுபதி




‘தமிழ்’  மொழியைப் பற்றிப்  பேசுபவர்கள் மறக்காமல் சொல்லும் ஒரு விஷயம் உண்டு.  தமிழ் மொழியின்   வல்லினம் (த ), மெல்லினம் ( மி ) , இடையினம் 
 ( ழ் ) என்று மூன்று இனங்களும் தமிழ் என்ற சொல்லிலேயே அழகாக இணைந்திருக்கிறது  என்பதே. ‘முருகன்’  ஒரு தமிழ்க் கடவுள் என்று குறிப்பிடும் அறிஞரும் ‘முருகு’ என்ற சொல்லிலும் மூன்று இனங்கள் இருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.



தமிழில் மூன்று வித ஓசைகளைக் குறிப்பிடும் மூன்று இனங்கள் இருப்பது நம் மொழியின் ஒரு தனித்தன்மை. மூவினங்களை வைத்துப் பல விதமான வார்த்தை விளையாட்டுகளை ஆடலாம். அவற்றுள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.



முதல் ஆட்டம்:



மூவினங்களும் ஒரே ஒரு முறை வரும் ( தமிழ், முருகு போன்ற )  மூன்றெழுத்துச் சொற்கள் தமிழில் பல உள்ளன. கரம், சரம், பரம், ….அல்லது காலணி, சேமியா, தாமரை என்று  நிறைய சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப் பொதுவாய் எல்லா மூன்றெழுத்துச் சொற்களையும் வரிசைப் படுத்துவதற்குப் பதிலாய், மூவின எழுத்துகள் சேர்ந்த ஆண், பெண் பெயர்களை எழுதுவது முதல் ஆட்டம்.


இதோ ஒரு மாதிரிப் பட்டியல்:


கமலா, குமார், சரண், சிவன்,  சுநீல், சேரன், சோழன், சௌம்யா, தாரிணி, நித்யா, பரணி,  பவானி, பாலன், பிரேமா, மாதவி, மாலதி, யோகம், ரோகிணி, ரேணுகா, வனிதா, வேம்பு.



இப்படிப்பட்ட ‘மூவினப்’ பெயர்கள் கொண்ட மூவெழுத்துக்காரர்கள்  பெருமைப் படுவதோடு, தமிழ் மொழியின் ஒரு பரிமாணத்தையும் புரிந்து கொள்வார்கள் அல்லவா? 



இரண்டாம் ஆட்டம்:



மூவின எழுத்துகள் ஒவ்வொன்றும் இரு முறை மட்டும்  வரும் ஆறெழுத்துச் சொற்களைக் கண்டுபிடித்து எழுதுவது சற்றுச் சிரமமான வேலை. முயலுங்கள்!  கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கு இந்த ஆட்டம் தெளிவாகப் புரியும்.



களஞ்சியம், தலைநகரம், நெடுந்துயில், பணியரங்கு, பயங்கரம், பலவந்தம், பிரயோசனம், பெரியதனம், விற்பன்னர், மகாவித்வான், சிருங்காரம், மாங்காய்கள்.



களஞ்சியம் என்ற சொல்லில் வல்லினம் இரு முறையும் ( க, சி ) , இடையினம் இரு முறையும் ( ள, ய ) , மெல்லினம் இரு முறையும் (ஞ் , ம் ) வந்திருப்பதைக் கவனியுங்கள். இதே மாதிரி மற்ற சொற்களும் உள்ளன.  சொல்லில் ஓர் இனத்தைக் குறிக்க ஒரே எழுத்தின் இரு வர்க்கங்கள் வராமல், வெவ்வேறு  எழுத்துகள் வந்தால் இன்னும் அழகு தான். அதாவது, விற்பன்னர் என்ற சொல்லில்  அதே மெல்லின எழுத்து  இரு முறை ( ன்,ன ) வருகிறது . இதை விட, களஞ்சியம் என்ற சொல்லில் ஞ், ம் என்ற வித்தியாசமான மெல்லின எழுத்துகள் வருவது போல் வந்தால் அழகு. 



 மூன்றாம் ஆட்டம்:



மூவின எழுத்துகள் சமமான விழுக்காடுகளில் , ஒரு தடவை, இரண்டு தடவை , வார்த்தைகளில் வருவதை முதல் இரண்டு ஆட்டங்களில் பார்த்தோம். ஆனால், இப்படிச் சம எடையில் மூவினங்களும்  வரும்  தமிழ் வாக்கியங்களை எழுதுவது மேலும் சிரமமான ஓர் ஆட்டம். அதாவது, வாக்கியத்தில் ஒவ்வொரு இனமும் சமமான எண்ணிக்கையில் … 2,3, 4 ,… என்று வரவேண்டும். நான் கீழே கொடுத்திருக்கும் சில காட்டுகளைப் பாருங்கள். இதே மாதிரி சில வாக்கியங்களை உங்களால் எழுத முடியுமா? ”



துலாம் சாயுமோ?

தரணி தாங்கு!

வந்த  கனவு நீளுதே!

வாஞ்சையுடன் பூமாலை வாங்கு!

பழனிநகர் மேடையொன்றில் மயிலாட்டம் காணவா.

பெரும்பாலும் சாயங்காலம் தலபுராணம் வந்துசேரும்.    

பி.கு.

மேற்கண்ட கட்டுரையைப் படித்த ‘வெண்பா வீட்டு’ நம்பி

“ சார்! ”வாஞ்சையுடன் பூமாலை வாங்கு” வெண்டளை பிறழாமல், ஒரு வெண்பா ஈற்றடி போல் இருக்கிறதே?” 

என்றான்..

“அட! கவனித்தாயா? பலே! ஆம், ‘சம எடை மூவின’க் குறள் வெண்பாக்களைக் கூட நம் ஆட்டத்தில் இயற்ற முயலலாம். நல்ல மென்பொருள் உதவியால்  ‘திருக்குறள்’ போன்ற சிறு கவிதைகளில்  எங்காவது  மூன்று இனங்களும் சம எடையில் ( அல்லது தோராயமாகச் சம எடையில்)  வருகின்றனவா என்றும் ஆய்ந்து அறியலாம்”  என்றேன்.


~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள்:

சொல்விளையாட்டு

சனி, 27 அக்டோபர், 2012

சொற்களைச் சுவைப்போம் - 3: வலிமிகாத ஆத்திசூடி

வலிமிகாத ஆத்திசூடி
பசுபதி




“ சார், இன்று தமிழ்த் தொலைக் காட்சி ஒன்றில் அறிஞர் ஒருவர் ஔவையாரின் ‘ஆத்திச்சூடி’யின் சிறப்பையும் , அதில் உள்ள சில நீதிகளைப் பற்றியும்  மிக அழகாகப் பேசினார் ”


“ ஆம், உண்மையிலேயே அது ஒரு நல்ல நீதி நூல் தான்.  அதை மனத்தில் வைத்து, அதே முறையில் பாரதி, பாரதிதாசன் போன்றோரும் எழுதி உள்ளனர். ஆனால், அந்த நூலின் சரியான பெயர் ‘ஆத்திசூடி’ தான்.  ‘ஆத்திச்சூடி’ அன்று.  அந்த நூலின் கடவுள் வாழ்த்து



ஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.



என்று இருப்பதால் அதற்கு  அப்பெயர் வந்தது.  



 ‘ஆத்திசூடி’  என்பது சிவனைக் குறிக்கும் சொல். ஆத்தி மாலை சிவனுக்குரிய மாலை. ‘ஆத்தியைச் சூடுபவன்’ என்று  இரண்டாம் வேற்றுமையை விரித்துச் சொல்லும்போது,  ‘ச்’ வரும். ஆனால்,  ‘ஆத்திசூடி’ என்பதில் அந்த இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’  மறைந்து இருப்பதால் , ‘ச்’ வராது.  ”


 “ இப்படிச் சொற்களுக்கிடையே, ‘க்’, ‘ச்’, ‘த்’ ‘ப்’ எப்போது வரும் ? வரக் கூடாது? என்பதை அறிய நல்ல கட்டுரைகளைப் படித்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே? ”

  
“ ஆம், இந்தக் கருத்தை வைத்தே நாம் ஒரு புதிய  ‘ஆத்திசூடி’ விளையாட்டு விளையாடலாமே?  இலக்கணம் போதிக்கும் புதிய ஆத்திசூடி என்று கூட இந்த விளையாட்டைக் கூப்பிடலாம்.”
 

“  ‘அ’ முதல் ‘ஔ’ வரை , 12 உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்றொடர்களைத் தயாரிக்க வேண்டும். எல்லாத் தொடர்களும் நாம் வழக்கமாகத் தின ஏடுகளிலும், வார, மாத இதழ்களிலும் படிப்பவையாக,  கடிதங்களில் எழுதக் கூடியவையாக இருக்கவேண்டும். இந்தப்  ‘புதிய ஆத்திசூடி’.யில்  இலக்கணத்தைப் பொறுத்தவரை எல்லாம் சரியான சொற்றொடர்களாக அமைய வேண்டும். ஆனால்,  இந்தச் சொற்றொடர்களின் நடுவில் பலரும் மெய்யைச் (ஒற்றைச்) சேர்த்துத் தவறாக எழுதும் வாய்ப்பு உண்டு. ‘ஆத்திசூடி’ என்ற சொற்றொடரைப் போல.   அப்படிப்பட்ட 12 சொற்றொடர்களைத் தயாரிப்பது தான் இந்த ‘வார்த்தை விளையாட்டு’ . க், ச், ப், த் போன்ற வல்லெழுத்து ஒற்று வராததை, “வலிமிகா” என்றழைப்பர் இலக்கணத்தில். அதனால்,  இந்தப் பட்டியலை ‘வலிமிகாத ஆத்திசூடி’ என்று கூட வேடிக்கையாக அழைக்கலாம்! ”


இதோ ஒரு மாதிரிப் பட்டியல்: சொற்றொடர்களைத் தொடர்ந்து அவை வரும்
மாதிரி வாக்கியங்களும் உள்ளன. விளையாட்டுக்கு விளையாட்டு, இலக்கணத்திற்கு இலக்கணம், எப்படி?”



‘அசைபோடு’ : மாடு அசைபோட்டது.

‘ஆசைகாட்டு’: குழந்தைக்குச் சும்மா ஆசை காட்டாதே !

‘இலைபோடு’ : திருமணத்தில் உடனே இலைபோட்டுவிட்டனர்.

‘ஈடுகட்டு’: அந்த இழப்பை ஈடுகட்ட முடியாது.

‘உச்சிகுளிர்’ : அவன் புகழ்ச்சியில்  எனக்கு உடனே உச்சிகுளிர்ந்துவிட்டது.

‘ஊசிபோடு’; வைத்தியர் குழந்தைக்கு ஊசிபோட்டார்.

‘எடைபோடு’ : என்னைக் கண்ணால் அவள் எடைபோட்டாள்.

‘ஏறுதழுவுதல்; ஜல்லிக் கட்டுக்குப் பழைய பெயர் ‘ஏறுதழுவல்’.

‘ஐந்துகொடு’ : அந்தப் பழவகையில் ஐந்து கொடு.

‘ஒருகை பார்’ : மதிய உணவை ஒருகை பார்த்தேன்.

‘ஓய்வுபெறு’ : ஓய்வுபெற்றபின் எங்கே போகப் போகிறாய்?

‘ஔவை பாடல்’:  ஔவை பாடல்களில் இதுவும் ஒன்று.  


“ இப்போது நீங்களும் ஒரு ‘வலிமிகா ஆத்திசூடி’ தயாரிக்க முயலுங்களேன்.
நகைச்சுவை கலந்த வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பு!” 


~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள்:
சொல்விளையாட்டு

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

சொற்களைச் சுவைப்போம் - 2: உயிர்த்தொடர், மெய்த்தொடர்

சொற்களைச் சுவைப்போம் - 2: உயிர்த்தொடர், மெய்த்தொடர்
பசுபதி


“ சார்! நான் ஆங்கிலத்தில் வேகமாகத் தட்டச்சுச் செய்யக் கணினியில் பயில்கிறேன்  என்பது உங்களுக்குத் தெரியுமோ?”

“ ஓ! தெரியுமே! உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ புதிதாகக் கற்றுக் கொண்டது போலத் தெரிகிறதே? ”

“ ஆமாம், சார், என் ஆசிரியர் மிகச் சுவையான சில வாக்கியங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வோரு வாக்கியத்திலும் 26 ஆங்கில எழுத்துகளும் இருந்ததே அவற்றின் விசேஷம். அதனால், தட்டச்சுச் செய்ய நல்ல பயிற்சியாகவும் இருந்தது;  அதே சமயம், மிகச் சுவையாகவும் இருந்தது. ஆமாம், இதே மாதிரி தமிழில் வாக்கியங்கள் உண்டா?”

“ எல்லா எழுத்துகளும் கொண்ட அத்தகைய சொற்றொடர்களை ஆங்கிலத்தில் ‘பான்கிராம்’ ( Pangram) என்பர். ( 'எல்லா எழுத்து’ என்ற பொருள்). ஒவ்வொரு மொழியிலும் இத்தகைய பான்கிராம்களைக் கண்டுபிடித்தல் சுவையான சொல்லாட்டம் தான்!

ஆனால் ஒவ்வொரு மொழிக்கும் உள்ள தனித்தன்மைகளை வைத்துத்தான் இம்மாதிரி சொல் விளையாட்டுகளை நாம் அணுக வேண்டும். சரி, ஒன்று செய்கிறேன். தமிழில் முதலில் எளிதில் விளையாட, இந்தச் சொல்லாடலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறேன்.

ஆய்த எழுத்தை நீக்கி விட்டு, தமிழில் உயிரெழுத்துகள் 12 என்று கொண்டால், அவை:  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ . சரியா?”

“சரி!”

“ இந்தப் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களோ, அவை உள்ள உயிர்மெய் எழுத்துகளோ வரும்படி, ஓர் அழகான  வாக்கியமோ, சின்னக்  கவிதையோ, குழந்தைகள் பாட்டோ, எழுத முயல்வது தான் இந்த ஆட்டத்தின் முதல் பகுதி. இதை ‘ உயிர்த்தொடர்’ என்றழைக்கலாம்.

நம் உதாரணங்கள் எழுத்தெண்ணிக்கையில் குறுகக் குறுக அழகு அதிகம்! சொற்றொடரில் 12 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்! “

“ இதோ, என் ’உயிர்த்தொடர்’ முயற்சி. ஒரு காட்சி. 


ஒரு பௌர்ணமி நாள்.

பூஞ்சோலை.

நீ எங்கே?                                       ( 1)

“ இம்மாதிரி, தமிழில் 18 மெய்யெழுத்துகள். க,ச,ட,த,ப,ற (வல்லினம்), ய,ர,ல,வ,ழ,ள (இடையினம்) ங,ஞ,ண,ந,ம,ன (மெல்லினம்). எல்லா  (18) மெய்யெழுத்துகளோ, அவை வரும் உயிர்மெய் எழுத்துகளோ  வரும்படி ஒரு வாக்கியமோ, ஒரு சிறு கவிதையோ, ஒரு விளம்பரமோ  எழுத முயல்வது  இந்த ஆட்டத்தின் இரண்டாம் பகுதி. அத்தகைய சொற்றொடரை ‘மெய்த்தொடர்’ என்றழைக்கலாம். நம் சொற்றொடர்கள் குறுகக் குறுக அழகு அதிகம்! 18 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்! “

“ இதோ, என் முயற்சி.. 22 எழுத்துகள் உள்ள ஒரு ‘மெய்த்தொடர்’ ”

தமிழியலிசை ஞானம் பெற

நீ ஒரு கடவுளை வணங்கு.   ( 2)


“ சார், தமிழிலும் இம்மாதிரி சொல்லாட்டங்கள் விளையாடலாம் என்று பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”

“ ஒன்று கவனித்தாயா?  ‘உயிரெழுத்தில்’ கவனம் செலுத்திய (1) -இல்10 மெய்யெழுத்துகளும் உள்ளன!  அதே மாதிரி, ‘மெய்த்தொடரான’ (2) -இல்
7 உயிரெழுத்துகளும் உள்ளடங்கி உள்ளன!  அதனால், இன்னும் கொஞ்சம் யாராவது முயன்றால், மெய்யும், உயிர்மெய்யும் கலந்த  பதினெட்டே எழுத்துகளில் எல்லா உயிர்(12) + மெய்(18)  எழுத்துகளையும்   அடக்க வாய்ப்புண்டு!”

யாராவது அத்தகைய ஓர் அற்புத பொருள் பொதிந்த வாக்கியத்தை/சொற்றொடரை இங்கே இடுவார்களா என்று பார்ப்போம்!
கொஞ்சம் நீளமாக இருந்தாலும் வரவேற்கப்படும் !

தொடர்புள்ள பதிவுகள்:
சொல்விளையாட்டு


வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சொற்களைச் சுவைப்போம் - 1: அகரம் முதல் னகரம் வரை!

அகரம் முதல் னகரம் வரை !

பசுபதி




தமிழில் ‘அ’ முதல் ‘ஔ’ வரை 12 உயிரெழுத்துகள்: ‘க்’ முதல் ‘ன்’ வரை 18 மெய்யெழுத்துகள். அதனால் ‘அ’ முதல் ‘ன்’ வரை என்றால் தமிழ் முழுதும் என்றாகி விடுகிறது அல்லவா?

இதைத் தான் திருக்குறளும் சொல்கிறதோ? ஏனென்றால், முதல் குறள் ‘அ’ வில் தொடங்குகிறது ; 1330-ஆவது குறள் ‘ன்’ என்று முடிகிறது.

’அமுதசுரபி’  இதழ் 2012 ஜூன் மாதத்தில்    ‘அ’வில் தொடங்கி ‘ன்’ இல் முடிக்க வேண்டும்  என்று ஒரு வெண்பாப் போட்டி வைத்தது .

நான் நினைத்தேன்:

முதல் இரண்டு குறள்களையே ஒரு தனிச்சொல் சேர்த்து , ஒரு நாலடி நேரிசை வெண்பாவாய் எழுதினால், அதுவே  ‘அ’ வில் தொடங்கி ‘ன்’ -இல் முடியுமே !

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - சகலமும்
கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்


’அ’ முதல் ‘ன்’ வரை என்ற கருத்தைச்  சாமர்த்தியமாய் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தியது ‘ஆனந்தபோதினி’ பத்திரிகை.  ( 1932-இல்) அங்கே வந்த இராஜு செட்டியாரின்  ஒரு நாவலின் விளம்பரத்தைப் படித்துப் பாருங்கள் ! நான் சொல்வது உங்களுக்குப் புரியும்!




உங்களுக்குப் பிடித்த ‘அ***ன்’ வார்த்தை என்ன?

எனக்குப் பிடித்த ஒரு சொல் ‘அங்குஸ்தான்’ !
 ‘க்ரியா’ வின் தற்காலத் தமிழ்அகராதியில்
இருக்கும் இந்தச் சொல்லுக்குப் பொருள்: 

( தைக்கும்போது குத்தாமல் இருக்க) விரல் நுனியில் அணியும் உலோக உறை.
ஆங்கிலத்தில் ‘திம்பிள்’ ( thimble) .
 

இந்தச் சொல் எப்படி வந்தது ? யார் முதலில் பயன்படுத்தினார்கள்? எனக்குத் தெரியாது!

[  நண்பர் பாலசுப்பிரமணியன் சொல்லுவது போல்: வடமொழிச் சொல் ‘அங்குஷ்ட’ ; தமிழ் அகராதியில் ‘அங்குட்டம்’ ( பெருவிரல்)  ]

உங்களுக்குத் தெரிந்த மிக நீண்ட ‘அ**ன்’ பெயர் என்ன?

அறவாழிஅந்தணன், அடியார்க்குநல்லான்,  அனந்தபத்மநாபன், அனந்தநாராயணன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன, அல்லவா?  இவற்றில் கடைசிப் பெயருக்குப் பின் ஒரு சுவையான  ‘கதை’ இருக்கிறது. தமிழ் நாவல் முன்னோடி அ.மாதவய்யாவின் மூத்த மகன் மா. அனந்தநாராயணன். நீதிபதியாகப் பணி புரிந்தவர். கலாரசிகர்.   “சில்வர் பில்க்ரிமேஜ்” ( Silver Pilgrimage) என்ற நூலை எழுதியவர். ஜான் அப்டைக் ( John Updike) என்ற பிரபல ஆங்கிலக் கவிஞர் ‘அனந்தநாராயணன் ‘ என்ற பெயரில் உள்ள ஓசையில்  மோகம் கொண்டு ஒரு கவிதையே பாடியிருக்கிறார் !   அந்தக் கவிதையை இங்கே பார்க்கலாம்.


சுவையான ‘அ**ன்’ சொற்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்! 

இது போதும், இப்போது!

பி.கு:

நண்பர் பாலசுப்பிரமணியன் ஒரு நீண்ட ‘அ**ன்’ பெயராய் , ‘அகணிதகுணகணபூஷணன்’ என்பதை முன்வைத்ததும் ( பதிவின் பின்னூட்டமாய் வந்துள்ள கருத்துகளைப்  படிக்கவும்) , மீண்டும் யோசித்தேன்!

ஸம்ஸ்கிருதத்திலிருந்து வந்த ‘அகாதன்’ ( வஞ்சகன், புரட்டன்) என்ற சொல் சில தமிழ் அகராதிகளில் காணப்படுகிறது. இதுதான் மிக நீண்ட பெயர் என்று நினைக்கிறேன்.

ஏன் தெரியுமா?

முதல் எழுத்துக்கும், கடைசி எழுத்துக்கும் நடுவே ‘காத’ தூரம் உள்ளதல்லவா? :-))

~*~o0O0o~*~ 


தொடர்புள்ள பதிவுகள்:
சொல்விளையாட்டு