வெள்ளி, 30 ஜனவரி, 2015

காந்தி -1

ஐயன் முகம் மறைந்து போச்சே! 
“ சுரபி” 

ஜனவர் 30, 1948. அண்ணல் காந்தி மறைந்த தினம்.

அதற்குப் பிறகு வந்த “ஆனந்த விகட”னில் கவிஞர் “சுரபி” யின் ஒரு உருக்கமான கவிதை வெளிவந்தது . ( சுரபி அவர்களைப் பற்றிய முன்பதிவு இதோ )

இதோ அந்தக் கவிதை !


அந்த வார “விகட”னில் பல உலகத் தலைவர்களிடம் இருந்து வந்த செய்திகளின் பகுதிகள்  ” கோபுலு” வரைந்த அத்தலைவர்களின் சித்திரங்களுடன்  வெளிவந்தன.  அந்தப் பகுதியிலிருந்து, நான் சேகரித்து வைத்திருந்த ஒரு பக்கம் இதோ!பிப்ரவரி 8, 48 விகடன் இதழின் அட்டைப் படம் இதோ![ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

’சுரபி’ கவிதைகள்

மகாத்மா காந்தி

புதன், 28 ஜனவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 47

வி.வி. சடகோபன் -1
சங்கீத மும்மூர்த்திகள் 

ஜனவரி 29, 1915.
சங்கீத வித்துவான் வி.வி.சடகோபன் பிறந்த நாள் .


[ நன்றி: அரசி ] 

ஆம், இந்த வருடம் ( 2015)  பிப்ரவரி மாதத்தில் அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப் பட இருக்கிறது. அவர் பிறந்த ஊரான வீரவநல்லூரில் தொடங்கிச் சென்னையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

திரைப்பட நடிகர், இசைப்பேராசிரியர், எழுத்தாளர்,  கவிஞர், சங்கீத வித்வான் என்று பல முகங்கள் கொண்டவர். கவர்ச்சி மிகுந்த இவரை என் சிறிய வயதில்,  அவர் சென்னையில் தியாகராயநகரில் வசித்தபோது  பலமுறை பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ( அந்தக் காலத்தில் ( 50-களில்) சைதாப்பேட்டையில் வசித்துவந்த லால்குடி ஜயராமன், “ மின்சார ரயிலில் தி.நகருக்குச் சடகோபன், தண்டபாணி தேசிகர் ஆகியவர்களைச் சந்திக்க வருவேன்”  என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.)

 “கவர்ச்சியும் அழகும் மிகுந்த சடகோபனைக் கதாநாயகனாய்ப் போடப் படத் தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.  அதனால் எனக்கு நிச்சயம் அந்த வாய்ப்புக் கிட்டாது என்றே முடிவு செய்தேன்” என்ற தொனியில்  பிற்காலத்தில் தன் வாழ்க்கை வரலாற்றில் எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார். ! சடகோபன்  நடித்த நவயுவன்’ (1937) தான் வெளிநாட்டில் சில காட்சிகள் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் என்று கூறப்படுகிறது .


இவரைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு இதோ!
தினமணி கதிரில் 1984-இல் வந்தது.இவர் எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கங்கள்  தினமணி கதிரில் அந்தக் காலத்தில் வந்தன. அவற்றில் சிலவற்றை என் வலைப்பூவில் இடலாம் என்று நினைக்கிறேன்.

இதோ முதல் கட்டுரை! 1-1-84 - இதழில் வெளிவந்தது..


அடுத்த இதழில் ‘தினமணி கதி’ரில் வந்த ஒரு பிழைதிருத்தம் :


[ நன்றி : தினமணி கதிர் ]

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:

வி.வி.சடகோபன் 


’ஹிந்து’ கட்டுரை (ஆங்கிலம்):2005 சுஜாதா விஜயராகவன்

நவயுவன் : ராண்டார் கையின் ஆங்கிலக் கட்டுரை  ( 2)

எம்.ஜி. ஆர்: சடகோபனைப் பற்றி ( ஆங்கிலம் )  (1)

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

திங்கள், 26 ஜனவரி, 2015

பாடலும் படமும் - 9:

குடியரசுக் கொண்டாட்டங்கள் ! 

ஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ குடியரசு மலர் ஒன்றை வெளியிட்டது.   அதில் பாரதியாரின் சில வைர வரிகளுக்கு ஓவியர் சந்திரா வரைந்த இரு ஓவியங்களை இங்கு இடுகிறேன்.

முதலில் ஓவியர் சந்திராவைப் பற்றிக் கல்கி பொன்விழா மலரில் வந்த ஒரு குறிப்பு.
[ ஓவியர் சந்திரா: நன்றி: கல்கி ] 

“ சந்திராவின் தனிப்பாணியைப் படத்தைப் பார்க்கும் எவரும் உணரலாம்.  ஒவ்வொரு சிறு அம்சத்தையும் கவனித்து நகாசு வேலை போல் வரம்பு கட்டி வண்ணம் தீட்டுவார். இதனால் ஒவ்வொரு ஓவியமும் தங்கச் சரட்டில் வைரங்கள் பதிந்தது போல் மின்னும் .” 

இளம் வயதிலேயே ஓவியர் சந்திரா மறைந்தது பெரும் இழப்பு.

இந்தக் குடியரசு தினத்தில் இந்தப் பதிவின் மூலம் அவருக்கென் அஞ்சலி.
    

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவு:

புதன், 21 ஜனவரி, 2015

சாவி -12 : 'அவுட்' அண்ணாஜி

'அவுட்' அண்ணாஜி

சாவி 
[ ஓவியம்: நடனம் ]


நேர் வகிடு, நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கையிலே தோல் பை, கலகலப்பான குரல் - இவை யாவும் 'அவுட்' அண்ணாஜிக்கே உரிய அம்சங்கள்.

முன்பின் தெரியாதவர்களிடத்திலே கூட ரொம்ப நாள்  பழகிய வனைப் போல் பேச ஆரம்பித்து விடுவான்.  புருடாக்களும் கப்சாக் களுமாய் உதிர்த்துத் தள்ளிவிடுவான். தன்னுடைய பொய்களைக் கேட்பவர்கள் நம்புவார்களா என்பதைப் பற்றி அவன் கவலைப் படுவதில்லை.

''நேற்றுதான் டில்லியிலிருந்து திரும்பி வந்தேன். போன இடத்தில் ஒரு வாரம் 'டிலே' ஆகிவிட்டது. இப்போதுதான் ப்ளேனில் மீனம்பாக்கம் வந்து
இறங்கினேன். டாம் அண்டு டிக் கம்பெனி புரொப்ரைட்டரும் என்னோடு தான் விமானத்தில் வந்தார். அவர் காரிலேயே என்னையும் அழைத்து வந்துவிட்டார்'' என்று தன்னுடைய  பிரதாபங்களை அவிழ்த்துவிடுவான்.

[ ஓவியம்: கோபுலு ]
''டில்லியில் ஏன் டிலே?'' என்று நாம் அவனை கேட்க வேண்டிய தில்லை.
அவனாகவே சொல்வான்.... ''டிஃபன்ஸ் மினிஸ்டர் வி.கே.மேனன் என்
கிளாஸ்மேட் டாச்சே! தற்செயலா என்னைப் பார்த்துட்டார். 'ஹல்லோ
அண்ணாஜி! எங்கே கவனிக்காமல் போறே? வா வீட்டுக்கு!' என்றார். அவரோ ஓல்ட் ஃப்ரண்ட்; டிஃபன்ஸ் மினிஸ்டர் வேற! எப்படித் தட்டறது? சரின்னு அவரோடு போக வேண்டியதாப் போச்சு! டீ கொடுத்தார். எனக்கு டீ பிடிக்காது. ஆனாலும், என்ன செய்யறது! குடிச்சு வெச்சேன்.

''வந்தது வந்தே... என்னோடு கெய்ரோவுக்கு வறயா, நாசரைப் பார்த்துட்டு
வரலாம்னார். எனக்கும் நாசர் கிட்டே கொஞ்சம் வேலை இருந்தது. சரின்னு
புறப் பட்டுட்டேன்.''

''நாசர் கிட்டே உனக்கென்ன வேலை?''

''ஒரு பிஸினஸ் விஷயமாதான்! நாசரிடம் அஸ்வான், 'டாம் கான்ட்ராக்ட்'
கேட்டிருந்தேன். 'சூயஸ் தகராறு தீரட்டும்; அப்புறம் சொல்றேன்'னு
சொல்லியிருந்தாரு. கெய்ரோவுக்குப் போய்விட்டு இண்டியாவுக்குத்
திரும்பினேன். பாம்பேயில் இறங்கி டெஸ்ட் மாட்சைப் பார்த்துட்டு கார் ஏறப் போறேன்... கிரிக்கெட் பிளேயர் கண்டிராக்டர் இல்லே கண்டிராக்டர், அவன் என்னைப் பார்த்துட்டான். 'செஞ்சுரி போட்டேனே, பார்த்தயா அண்ணாஜி?'ன்னான். கையைப் பிடிச்சுக் குலுக்கினான். 'பிளேன்லே ஏதோ அகாமடேஷன் தகராறு. கொஞ்சம் இடம் பிடிச்சுக் கொடுக்க முடியுமா?'ன்னான். சரின்னு ஏர் இண்டியாவுக்கு டெலிபோன் பண்ணினேன். என்குயரி கர்ள் மிஸ்.கல்பனா  தன்னோட ஸ்வீட் வாய்ஸ்லே 'என்ன வேணும்?'னா. 'அண்ணாஜி'ன்னேன். அவ்வளவுதான்... 'ஹல்லோ! அண்ணாஜியா? உங்க லெதர் பாக் இங்கே இருக்குது. மறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்க. வந்து வாங்கிட்டுப் போங்கோ'ன்னா. உடனே காரில் புறப்பட்டுப் போய் அந்த சிந்தி கர்ள் கிட்டே பையை வாங்கிண்டேன். என் பிசினஸே அதுலதானே இருக்குது?

''அண்ணாஜி! நீங்க ஒரு 'மொபைல் மல்டிபிளைட் பிஸினஸ் இன்ஸ்டிடி
யூஷன்'னு அவ எனக்கு ஒரு அட்சதையைப் போட்டாள். கிறிஸ்மஸ்
பிரசன்ட்டுக்குதான் அடிபோடறாங்கறது எனக்குப் புரியாதா? சாக்லெட்
டின்னை வாங்கிப் போட்டுட்டு, கண்டிராக்ட ருக்கும் ஒரு ஸீட் புக் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்.''

அண்ணாஜி இப்படி அளந்து கொண்டேயிருப்பான். பம்பாய், கல்கத்தா, டில்லி,லண்டன், சௌத் ஆப்பிரிக்கா என எல்லா இடங்களிலும் தனக்கு பிஸினஸ் இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் எல்லாரையும் தெரியும் என்றும் சொல்வான்.

எல்லாம் ஒரே ஹம்பக்!


==================
[ நன்றி: விகடன்  ]

தொடர்புள்ள பதிவுகள்:

'சாவி'யின் படைப்புகள்

புதன், 14 ஜனவரி, 2015

மீ.ப.சோமு - 2

பாலு பொங்குச்சா? வயிறு வீங்குச்சா?
மீ.ப.சோமு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் !

பலவருடங்களுக்கு முன் மீ.ப.சோமு ‘கல்கி’யில் எழுதிய ஒரு கட்டுரையில் பொங்கலைப் பற்றிய ஒரு பகுதி இதோ!


[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்;
மீ.ப.சோமு
புதுமைப் பித்தன் பற்றி

தமிழுக்கு ஒருவர்!

சனி, 10 ஜனவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 46

பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 2
உ.வே.சாமிநாதய்யர்


[ நன்றி: ஹிந்து ] 


முந்தைய பதிவு 

பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1

( தொடர்ச்சி) 

'சங்கீத மருந்து'

ஒரு சமயம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கு இடுப்பில் வாயுப் பிடிப்பினால் உபத்திரவம் உண்டாயிற்று; நிமிரவும், நடக்கவும், சரியானபடி உட்காரவும் முடிய வில்லை. இடைவிடாமல் வலி இருந்து வந்தது. அவருடைய நிலைமையைக் கண்டு மடத்தில் இருந்தவர்கள் மிக்க வருத்தம் அடைந்தார்கள். தக்க வைத்தியர்களைக் கொண்டு மருந்துகளைத் தடவச் செய்தும் ஒற்றடம் கொடுத்தும் வந்தனர். ஆயினும், வாயுவின் கொடுமை குறையவில்லை. இங்ஙனம் சில தினங்கள் சென்றன.

ஒருநாள் தமக்கு இருந்த வலி தாங்கமாட்டாமல் தேசிகர் உட்கார்ந்திருந்தார். திடீரென்று அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாயிற்று. எதையோ உற்றுக் கேட்பவர்போல இருந்தார்; பிறகு அருகில் இருந்தவர் களை நோக்கி, "பெரிய வைத்தியநாதையரவர்கள் வரு கிறார்கள்; அவர்களுடைய வண்டிக் காளையின் சலங்கை யொலி என் காதில் விழுகிறது; அவர்கள் பாட்டைக் கேட்டு நெடுநாளாயிற்று. அவர்கள் வந்தால் தடை செய்யாமல் உள்ளே அழைத்து வாருங்கள்" என்றார். நோயினால் துன்புறும்போது இவர் வந்தால் பின்னும் துன்பமுண்டாகுமென்று மடத்திலுள்ளவர்கள் தாமே எண்ணிக்கொண்டு ஒருவேளை இவரை உள்ளே விடாமல் இருந்துவிட்டால் என் செய்வதென்பது தேசிகருடைய எண்ணம்.

பெரிய வைத்தியநாதையர் மிக்க உத்ஸாகத்தோடு மடத்துக்குள் நுழைந்தார். இவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரியஸ்தர்கள் இவரை உபசாரத்தோடு உள்ளே அழைத்துச் சென்றார்கள். அதனால் இவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. தேக அசௌக்கியத்தால் தேசிகர் வருந்துவதை இவர் அறியார். உள்ளே நுழையும்போதே, "ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' என்ற கீர்த்தனத்தின் பல்லவியைச் சொல்லிக் கொண்டு வந்தார்.

சுப்பிரமணிய தேசிகர் இவரை முகமலர்ச்சியுடன் வரவேற்றார்; "இருக்க வேண்டும்; யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப்போல் சங்கீத மத யானையாகிய உங்கள் வரவை உங்கள் வண்டிக் காளைகளின் சலங்கையொலி முன்னே தெரிவித்தது; நெடு நாளாகக் காணவில்லையே யென்றிருந்த வருத்தம் நீங்கி மிக்க சந்தோஷம் உண்டாயிற்று" என்றார்.

பெரிய வைத்தியநாதையர் புன்னகையோடு உட்கார்ந்து பாட ஆரம்பித்து விட்டார். காம்போதி ராகத்தை ஆலாபனம் செய்தார்; பல்லவி பாடினார்; ஸ்வரம் பாடினார்; இப்படி மூன்று மணி நேரம் தம்முடைய கான வர்ஷத்தைப் பொழிந்தார்.

சுப்பிரமணிய தேசிகர் தம் வாயு உபத்திரவத்தை மறந்து கேட்டுக்கொண்டிருந்தார். பெரிய வைத்திய நாதையருடைய இசைமாரி அந்த நோயின் வெம்மையை அவித்து மறைத்துவிட்டது. தேசிகர் தம் தேகத்தையே மறந்து கேட்டபோது அத்தேகத்திலுள்ள நோய்த் துன்பம் எப்படி நினைவுக்கு வரும்?

சங்கீதம் ஒருவாறு நின்றமை இனிய மழை பெய்து ஓய்ந்ததுபோல் இருந்தது. தாம் அதுகாறும் நோயை மறந்து கேட்டது தேசிகருக்கே மிக்க வியப்பை உண்டாக்கிற்று; "உங்களுக்குப் பெரிய வைத்தியநாதைய ரென்ற பெயர் அமைந்திருப்பது பொருத்தமானதே. சில நாளாக நான் வாத நோயினால் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன். இடுப்பை வாயு பிடித்துக் கொண்டது. நிமிஷத்துக்கு நிமிஷம் பதினாயிரம் தேள் கொட்டுவது போன்ற வலி இருந்தது. எந்த வைத்தியத்துக்கும் அது பயப்படவில்லை. உங்களுடைய பாட்டு இந்த மூன்றுமணி நேரமாக அதன் ஞாபகமே இல்லாமற் செய்து விட்டது. இப்பொழுதும் அந்த உபத்திரவம் தலை நீட்ட வில்லை. உங்களுடைய சங்கீதமாகிய மருந்து ஆச்சரியமான பலனை உடையது. அதைக் கொண்டு வைத்தியம் செய்து நோயை மறக்கச் செய்த நீங்கள், பெரிய வைத்தியரென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இன்றைக்கு நீங்கள் செய்த உபகாரத்தை வேறு யாரால் செய்ய முடியும்?" என்று தேசிகர் இவரை நோக்கிக் கூறினார்.

"எல்லாம் சந்நிதானத்தின் ஆதரவின் விசேஷமே யன்றி வேறொன்றுமில்லை. இங்கே வந்தால் எனக்கே ஒரு தனி உத்ஸாகம் உண்டாகிவிடுகிறது. மற்ற இடங்களில் நான் பாடும் முறை வேறு; இங்கே பாடும் விதம் வேறு!" என்றார் இவர்.

அன்றைக்கு முதல் நாள் காசியிலிருந்து வந்த பக்திமானும், ஆதீனத்து அடியவருமாகிய தம்பிரான் ஒருவர் சுப்பிரமணிய தேசிகருக்காக உயர்ந்த பட்டில் சரிகை வேலைகளுடன் மெத்தை, தலையணை, திண்டு, கொட்டை முதலியவைகளைக் காசியிலே தைக்கச் செய்து, அவற்றைத் திருநெல்வேலிக்குக் கொணர்ந்து நல்ல பஞ்சை அடைத்துக்கொண்டு கல்லிடைக் குறிச்சிக்கு வந்து அவற்றைத் தேசிகருக்குமுன் வைத்து வணங்கி, " சந்திதானத்தின் திருமேனிக்கு உவப்பாக இருக்க வேண்டு மென்று அடியேன் இவற்றைக் கொணர்ந்தேன்; அங்கீ கரித்தருளவேண்டும்" என்று விண்ணப்பம் செய்து கொண்டார். தேசிகர் அவற்றை எடுத்துத் தனியே உள்ளே வைக்குமாறு காரியஸ்தர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். 

மறுநாள் பெரிய வைத்தியநாதையர் பாடி நோயை மறக்கச்செய்த நிகழ்ச்சி நடந்தது. தேசிகர் அந்த மெத்தை முதலியவற்றை எடுத்து வரச்செய்து பெரிய வைத்தியநாதையரைப் பார்த்து " நீங்கள் இவற்றை உபயோகித்துக்கொள்ள வேண்டும். உங்களால் என் நோயை மறந்தேன். அதற்கு இந்த மெத்தை முதலியவை அறிகுறியாக இருக்க வேண்டும்" என்றார். சுக புருஷராகிய வைத்தியநாதையருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. மெத்தை முதலியன இவருடைய வண்டியிற் கொணர்ந்து வைக்கப்பட்டன.

அப்போது, அவற்றை முதல்நாள் கொண்டுவந்த தம்பிரானுக்குக் கண்களில் நீர் தோன்றியது. அருமையாகப் பெற்று வளர்த்த குழந்தையை அதன் தந்தை சிறிதும் யோசியாமல் யாருக்காவது கொடுத்துவிட்டால், அக்குழந்தையைப் பெற்ற தாய்க்கு எவ்வளவு துக்கம் இருக்குமோ அத்தனை துக்கம் அவருக்கு இருந்தது. அருகில் இருந்தவர்களுக்கோ இந்த வித்துவானைக் காணக் காணக் கோபம் உண்டாயிற்று; ' இவன் எங்கே வந்தான்?' என்று முணுமுணுத்தார்கள். தேசிகரோ, ' இந்தச் சமயத்தில் இவர் வந்து நம் துன்பத்தை மறக்கச் செய்தாரே!' என்ற நன்றியறிவினால் முகமலர்ச்சியுடன் இருந்தார். இப்படிப் பலவகையான அபிப்பிராயங்கள் கலந்திருந்த அக்கூட்டத்தில, வைத்தியநாதையர் யானையைப்போலவே கம்பீரத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். தம்பிரான்களுடைய கோபக்குறிப்பை இவர் லக்ஷியம் செய்யவில்லை. சந்தோஷ மிகுதியானால் தேசிகரை யோக்கி, "சந்நிதானத்தில் கொடுத்த மெத்தை யையும், மற்றவைகளையும் அருமையறிந்து உபயோகப் படுத்துபவர் என்னைப் போல வேறு யாரும் இரார். நான் இதுகாறும் பெற்ற பொருள்களுள் இவற்றிற்குச் சமமானவை வேறு இல்லை. மிகவும் சந்தோஷம். எப்போதும் சந்நிதானத்தின் அன்பு குறையாமல் இருக்க வேண்டுமென்பதே என் பிரார்த்தனை" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார். போகும்போதே மெத்தை முதலியவற்றை வண்டியிலே விரிக்கச்செய்து பேருவகையோடு ஏறிக்கொண்டு சென்றார்.

இவர் சென்ற பின்பு, தம்பிரான் முதலியவர்களுடைய உள்ளக் கருத்தை அறிந்துகொண்ட சுப்பிர மணியதேசிகர், "மெத்தையை இவருக்குக் கொடுத்தது பற்றி உங்களுக்கு வருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. இவர் இன்று எனக்குச் செய்த மகோபகாரத்திற்கு என்னதான் செய்யக்கூடாது? நான் படும் அவஸ்தை உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. இவ்வளவு நேரம் நான் அதை மறந்திருந்தது எவ்வளவு ஆச்சரியம்! இந்த நன்மையை நீங்கள் நினைக்கவில்லையே! அன்றியும் *துறவியாகிய எனக்கு மெத்தை முதலியவை எதற்கு?" என்று சமாதானம் கூறினார்.
-----------
* ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் பகலில் ஒரு தலையணையை மட்டும் வைத்துக்கொண்டு, வெறுந் தரையிலேதான் படுத்துக்கொள்வார்கள். இரவில் ஒரு முழ அகலமுள்ள ரத்ன கம்பளத்தை விரித்துக்கொள்வார்கள். சில சமயங்களில் அங்க வஸ்திரத்தையே சுருட்டித் தலையணையாக வைத்துக் கொள்வது முண்டு.

சங்கீதமா? வலிப்பா?

அக்காலத்தில் எட்டயபுரம் ஜமீன்தார் மைனராக இருந்தமையால், சில வருஷங்கள் அந்த ஜமீன் அரசாங்கத்தாருடைய பார்வையில் இருந்து வந்தது.

ஜமீன்தாருக்கு உரிய பிராயம் வந்தவுடன், ஜமீன் மீண்டும் அவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அங்ஙனம் ஒப்புவிக்கப்பட்ட காலத்தில் வந்திருந்த ஜில்லா கலெக்டர், ஜில்லா ஸர்ஜன் முதலிய பல பெரிய உத்தியோகஸ் தர்களுக்கும் பல ஜமீன்தார்களுக்கும் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. அப்பொழுது பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள்.

பெரிய மாளிகையொன்றில் பெருங்கூட்டத்துக்கிடையே இவருடைய வினிகை நிகழ்ந்தது. 'பல பெரிய உத்தியோகஸ்தர்களுடைய முன்னிலையில், பல வித்துவான்கள் இருக்க நம்மைத்தானே முதலிற் பாடச் சொன்னார்கள்' என்ற எண்ணத்தால் இவருக்கு உத்ஸாகம் அதிகமாயிற்று. அதனால் இயல்பாகவே நன்றாகப் பாடும் இவர் அன்று பின்னும் நன்றாகப் பாடலானார். இவருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன.

அங்கே வந்திருந்த ஜில்லா ஸர்ஜன் ஒரு வெள்ளைக் காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் அவருடைய காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டைகள் அதிகப்பட்டன; ஸர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று.

வைத்தியநாதையருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவன போல இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரையிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக்கொண்டார்கள். இவற்றை யெல்லாம் ஸர்ஜன் பார்த்தார்; 'சரி, சரி, இவர் பாட வில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட் டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீத மென்று எண்ணி இந்த மனுஷரைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது' என்று அவர் எண்ணினார்.

வித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும்பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க பலமாக உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகாரத்துடன் முடிக்கும்போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல ஸர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை; அவர் தம் கைக்கடியாரத்தை எடுத்தார்; கலெக்டரை நோக்கினார்; "ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்பொழுது இவருக்கு வலிப்பு ஏதோ கண்டிருக்கிறது" என்று வேகத்தோடு சொன்னார். கலெக்டர் சமஸ்தானத்தின் முக்கிய அதிகாரியை அழைத்து இதை அறிவித்தார். அவர், "இவர் பாட்டல்லவா பாடுகிறார்!" என்றபோது ஸர்ஜன், "பாடவாவது! முன்பு பாடி யிருக்கலாம். இப்பொழுது பாடவேயில்லை. எனக்கல்லவா அந்த விஷயம் தெரியும்! இவரை நிறுத்தச் செய்யாவிட்டால் அப்புறம் விபரீதமாகிவிடும்!" என்றார். அதிகாரி என்ன செய்வார் பாவம்! ஜில்லாவுக்கே வைத்திய அதிகாரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாக வில்லை.

அதிகாரி மெல்லப் பெரிய வைத்தியநாதையர் அருகிற்சென்று பக்குவமாக, "இன்னும் சில வித்துவான்களைப் பாடச் சொல்ல வேண்டுமென்று கலெக்டர் துரை முதலியவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அவகாசம் குறைவு; அதற்குள் சிலரைப் பாடச்சொல்ல வேண்டும். தாங்கள் தயை செய்து அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்; அன்றியும் உயர்ந்த சம்மானங்களையும் அளித்தார். சட்டென்று நிறுத்தும்படி சொன்னால், மிக்க தைரியசாலியாகிய வைத்தியநாதையரால் ஏதாவது விபரீதம் விளையுமென்பதை அவ்வதிகாரி உணர்ந்தவர். அவர் வேண்டுகோளின்படியே இவர் ஒருவாறு தமது பாட்டை முடித்து மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார்.

பிறகு அங்கிருந்த வித்துவான்களுள் ஸ்ரீ வைகுண்டம் சுப்பையரென்ற ஒருவர் பாடினார். அவர் சித்திரம் போல இருந்து பாடும் இயல்புள்ளவர். அவருடைய பாட்டு அனைவருக்கும் திருப்தியை விளைவித்தது; ஸர் ஜன், "இதுதான் பாட்டு; இவரல்லவா உண்மையாகப் பாடுபவர்!" என்று தம்முடைய மதிப்புரையில் வெளி யிட்டார்.*
--------- 
* மேலேயுள்ள இரண்டு நிகழ்ச்சிகளும் மேலகரம் ஸ்ரீ சுப்பிர மணிய தேசிகரவர்கள் கூறியவை.

பேயாட்டம்

தஞ்சாவூரில் ஒரு முறை இவர் பாடினார்; வழக்கம் போல இவருடைய சேஷ்டைகள் இருந்தன; அப்போது அங்கிருந்தவரும், தஞ்சாவூர் சமஸ்தானம் சங்கீத வித்துவான்களில் ஒருவருமாகிய  *தோடி சீதாராமைய ரென்பவர் அவற்றைப் பார்த்துவிட்டு, "இந்தப் பெரிய வைத்தி பேயாடுகிறான்; கிஞ்சிராக்காரன் உடுக்கை யடிக்கிறான்; கடவாத்தியக்காரன் குடமுடைக்கிறான்!" என்று சொல்லி ஆச்சரியப்பட்டாராம்.
--------
* இவர் ஸோல்ஜர் சீதாராமையரென்றும் கூறப்படுவார்.

சித்தபேதம்

லாகிரி வஸ்துக்களை உபயோகித்து வந்ததன் பயனாக இவர் பிற்காலத்தில் சிறிது சித்தபேதத்தை யடைந்தார்; இவருடைய கம்பீரம் குறைந்தது; ஓரிடத்தில் பாடிக் கொண்டே யிருப்பார்; திடீரென்று நிறுத்திவிட்டு எங்கேனும் போய்விடுவார். மிகவும் உச்ச ஸ்தாயியில் பாடி வந்ததனால் இவருக்குச் செவிட்டுத் தன்மையும் உண்டாயிற்று.

அக்காலத்தில், பல இடங்களில் முன்னமே இருந்த பழக்கமிகுதியால் அங்கங்கே இருந்தவர்கள் தங்களிடம் இவர் வந்தபோது ஏதேனும் உதவி செய்து பாதுகாத்து வந்தார்கள்.

உடுக்கடித்துப் பாடியது

ஒரு சமயம் மைசூர் மகாராஜாவைப் பார்க்கவேண்டு மென்றெண்ணி அந்நகருக்குப் போயிருந்தார். அங்கே மருத்துவக்குடி ஜஞ்சாமாருதம் சுப்பையர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். அறிவின் மாறுபாட் டினால் ஏதேனும் விபரீதமாக இவர் நடந்து கொண்டால் என்ன செய்வதென்றெண்ணி அங்குள்ளவர்கள் இவருடைய வரவை அரசருக்குத் தெரிவிக்கவில்லை; எப்படி யேனும் அரசரைப் பார்த்துவிட்டே போவதென்று பிடி வாதத்தோடு இவர் அங்கே சில நாள் ஒரு சத்திரத்தில் உண்டு தங்கியிருந்தார். சிலர் இவருக்கு வேண்டியவற்றை அளித்துப் பாதுகாத்தனர்.

ஒருநாள் மகாராஜா அரண்மனையிலிருந்து வெளியே புறப்பட்டு வந்தார். அப்போது தெருவிலுள்ள ஒரு கோயிலுக்கு அருகிலிருந்த இவர் அங்கிருந்த பூசாரியின் கையிலிருந்த உடுக்கையை வாங்கி அதை அடித்துக் கொண்டே பாடத் தொடங்கினார். உடுக்கையினுடைய முழக்கத்துக்கு நடுவே இவருடைய இனிய சங்கீதம் வீதி வழியே சென்ற மன்னரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர் தம் வாகனத்தை நிறுத்தச் செய்து பாடுபவர் யாரென்பதை விசாரித்தார். பெரிய வைத்தியநாதைய ரென்பதை அறிந்தார்; இவருடைய ஆற்றலைப்பற்றி அவர் முன்னமே கேள்வியுற்றவராதலின், உடனே இவரை அரண்மனைக்கு வருவித்துப் பாடச் செய்து கேட்டு மகிழ்ந்தார். இவர் மிக அருமையாகப் பாடி மகா ராஜாவால் அளிக்கப்பெற்ற சம்மானங்களைப் பெற்று ஊர்வந்து சேர்ந்தார்.

பிற்கால நிலை

மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் பெரிய பட்டத்தைப் பெற்றுத் திருவாவடுதுறையில் இருந்த காலத்தில், இவர் சிலமுறை அங்கே சென்றதுண்டு. இவருடைய சக்தி மழுங்கியிருந்தபோது இவரை நான் பார்த்திருக்கிறேன். அப்போது இவர் திடீரென்று அழுவார்; பிறகு சிரிப்பார். பழைய சமாசாரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தால் இவருக்கு உத்ஸாக முண்டாகிவிடும்; இடையிடையே நிறுத்தி விடுவார்.

ஒருமுறை இவர் திருவாவடுதுறைக்கு வந்த காலத்தில் என்னுடைய தந்தையார் இவரை வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தனர். இவர் மைசூரில் தாம் அரசரைக் கண்ட வரலாற்றைச் சொன்னார். "அங்கே இருந்த பயல்கள் என்னை உள்ளே விடாமல் தடுத்தார்கள். நானா விடுபவன்? உடுக்கையைத் தட்டிப் பாட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் ராஜாவாவது, சக்கரவர்த்தியாவது! எல்லாரும் மயங்க வேண்டியதுதானே!" என்று இவர் அதைப்பற்றிக் கூறினார். பிறகு சில கீர்த்தனங்களைப் பாடினார். பாட்டு மிக அருமையாக இருந்தது. திடீரென்று திண்ணையிலிருந்து குதித்து எங்கேயோ போய்விட்டார்.

அப்போதிருந்த இவருடைய நிலையைக் கண்டு நான் வருந்தினேன். பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தினால் அருமையான வித்தை கிடைத்திருந்தும், அதைத் தக்கபடி வைத்துக் காப்பாற்றாமல் மனம் போனவாறு உழன்று அறிவையும் தேகத்தையும் கெடுத்துக் கொண்ட இவருடைய பேதைமையை நினைந்து இரங்கினேன்; கல்வி அறிவு ஒழுக்கம் என்பவற்றை ஒருங்கு சேர்த்துப் பெரியோர்கள் கூறுவதில் எவ்வளவு உயர்ந்த கருத்து அடங்கி யிருக்கிறதென்பதை உணர்ந்தேன்.

பெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறைகளால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்!

செவ்வாய், 6 ஜனவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 45

பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1
உ.வே.சாமிநாதய்யர்

[ ஓவியம்: W.A.மேனன் ]

caஉca
உ.வே.சாமிநாதய்யர் வாழ்ந்த காலத்தில் சங்கீத வையகம் ‘ சர்வம் வைத்தியநாத மய’மாய் இருந்திருக்கிறது! ஆம், வைத்தியநாத ஐயர் என்ற பெயரில் பல நல்ல வித்வான்கள் இருந்திருக்கின்றனர்.

அவர்களுள் நமக்கு அதிகம் தெரியாத ஒரு ‘வைத்தியநாதய்ய’ரைப் பற்றியது இக்கட்டுரை. 

டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் இயற்றமிழுக்குச் செய்த தொண்டுகளைப் பற்றிப் பலர் அறிவர்.  அவர் தமிழிசைக்கும் பல தொண்டுகள் ஆற்றியுள்ளார்.  அந்தக் காலச் சங்கீத வித்வான்களைப் பற்றி விவரமாகக் கட்டுரைகள் எழுதியது அவற்றுள் ஒன்று. உ.வே.சா வின் தகவல்கள் சேகரிக்கும் திறனும், அவற்றைக் கோத்துக் கட்டுரையாக வழங்கும் அழகும் படித்து மகிழவேண்டியவை. 

அக் கட்டுரைகளில்  இதோ ஒன்று. 

பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1


உ.வே.சாமிநாதய்யர்


வாழ்க்கை வரலாறு

பழைய சங்கீத வித்துவான்களுள் வைத்தியநாதையரென்ற பெயர் கொண்டவர்கள் பலர். பெரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர், மகா வைத்தியநாதையர், வீணை வைத்தியநாதையர், பிரம்மாண்ட வைத்தியநாதையர், ஆனை வைத்தியநாதையர், அறந்தாங்கி வைத்தியநாதையர், ஆவூர் வைத்தியநாதையரென இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களில் ஒவ்வொருவரும் அக்காலத்தில் ஒவ்வொரு வகையிலே சிறந்த வித்துவானாக இருந்தனர்.

பெரிய வைத்தியநாதையரென்பவர் சோழ நாட்டிலுள்ள தேவூரென்னும் கிராமத்திற் பிறந்தவரென்பர். இவர் வடம வகுப்பினர். சிவகங்கைச் சமஸ்தான வித்துவானாக முதலில் இவர் விளங்கினார். அதனால் சிவகங்கை வைத்தியநாதையரென்றும் இவரை வழங்குவார்கள். இவருக்குத் தம்பி முறையுள்ள மற்றொரு சங்கீத வித்வானுக்கும் வைத்தியநாதயைரென்னும் பெயர் அமைந் திருந்தது. அதனால் இவரை பெரிய வைத்தியநாதைய ரென்றும், மற்றவரைச் சின்ன வைத்தியநாதையரென்றும் யாவரும் சொல்லி வந்தனர்.

பெரிய வைத்தியநாதையருக்குச் சங்கீதம் கற்பித்தவர் இன்னாரென்று இப்பொழுது விளங்கவில்லை. இவருடைய சங்கீதத் திறமை மிக்க வன்மையுடையது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும் போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்கும்.

பழக்கம்

புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவனந்தபுரம் முதலிய சமஸ்தானங்களிலும், திருநெல்வேலி ஜில்லா விலுள்ள ஜமீன்களிலும் தளவாய் முதலியார், வட மலையப்பப் பிள்ளையன் முதலியவர்கள் பரம்பரையில் உதித்த பிரபுக்களிடத்திலும் இவர் பழக்கமுடையவராக இருந்தார். அங்கங்கே இவர் பாடிப்பெற்ற பரிசில்கள் பல.

கனத்த சாரீரம்

இவருடைய கனத்த சாரீர விசேஷத்தால் இவருடைய பாட்டை ஒரே சமயத்தில் பலர் கேட்டு அனுபவித்து வந்தனர். இவருடைய சங்கீதம் நடைபெறும் இடங்களில் அளவற்ற ஜனங்கள் கூடுவார்கள். சில சம யங்களில் இடம் போதாதிருந்தால் அருகிலுள்ள மரங்களின் மேலும் வீட்டுக் கூரைகளின் மேலும் ஏறியிருந்து ஜனங்கள் ஆவலுடன் கேட்டு இன்புறுவார்கள். பல வருஷங்களுக்குமுன்பு வைத்தீசுவரன் கோயிலிற் கும்பாபிஷேகம் நடந்தபோது அத்தலத்திலுள்ள சித்தாமிர்தத் தீர்த்தக்கரை மண்டபத்தில் இவர் பாடினார்; அக் காலத்தில் பலர் அத்தீர்த்தத்திலே கழுத்தளவு ஜலத்தில் இருந்து கேட்டு இன்புற்றார்களாம்! அருகில் வந்திருந்து கேட்க வேண்டுமென்பது இவர் திறத்தில் இல்லை.

அங்க சேஷ்டைகள்

பாடும்போது பலவகையான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார்; ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேஷ்டைகளும் அதிகரிக்கும். நீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடும்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவிதமாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்திலேயே அது மீண்டும் அவிழ்ந்துவிடும். கழுத்து வீங்குதல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகளை உயர்த்தல் முதலிய செயல்கள் இவருடைய உத்ஸாகத்தின் அறிகுறிகள். வாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார்; ஒருவரைப் பார்த்து விழித்துக் கொண்டே முத்தாய்த்துச் சந்தோஷிப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார். இப்படி ஆடி ஆடிப் பாடுவதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம் பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உத்ஸாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவர் பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர் வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார். இவருக்குப் பொடிபோடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்துத் திறந்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் நிறைய எடுத்துக் கொண்டு போடுவார்; பின்பு கையை உதறுவார்; அப்பொடி அருகிலுள்ளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள்.

சங்கீதச் சிறப்பு

இவ்வளவு குறைபாடுகள் இவர்பால் அமைந்திருந்தாலும், இவருடைய சாரீர பலமும் சங்கீதச் சிறப்பும் அவற்றை மறைத்தன. இவருக்கு இணையாக இருந்து பாடுவோரே அக்காலத்தில் தென்னாட்டில் இல்லை. மற்ற வித்துவான்களைக் கண்டு பொறாமை கொள்ளும் இயல்பு இவர்பால் இராது. தமக்கு முன்பு யார் பாடினாலும் சந்தோஷமாகக் கேட்டுப் பாராட்டும் தன்மை இவர்பால் விளங்கிற்று. ஆயினும், வேறு எவரும் இவருக்குமுன் பாடத் துணிவதில்லை. "அந்த அசுரனுக்கு முன்பு யார் ஐயா அச்சமில்லாமல் பாடுவார்கள்?" என்று வித்துவான்கள் சொல்லுவார்களாம்.

இவர் ரக்தி ராகங்களையே பெரும்பாலும் பாடுவார். பெரியோர்கள் இயற்றிய பல கீர்த்தனங்கள் இவருக்குத் தெரியும். சிந்து, தெம்மாங்கு முதலிய உருப்படிகளில் இவருக்கு மிக்க பயிற்சி உண்டு. இவர் எங்கே பாடினாலும் ஒரு தெம்மாங்காவது பாடக் கேளாவிட்டால் சபையோருக்குத் திருப்தி உண்டாகாது. தெம்மாங்கை இனிமையாகப் பாடும் திறமையால் இவரைத் தெம்மாங்கு வைத்திய நாதையரென்றும் கூறுவதுண்டு. பல்லவி பாடுதலிலும் இவர் சமர்த்தர். இவரிடம் பக்க வாத்தியம் வாசித்தவர்களுள் கடவித்துவான் போலகம் சிதம்பரையரென்பவரும், கிஞ்சிரா ராதாகிருஷ்ணைய ரென்பவரும் என் ஞாபகத்தில் உள்ளார்.

பாஷாஞானக் குறைவு

வைத்தியநாதையருடைய சங்கீதஞானம் மிக உயர்ந்தது; ஆயினும் தமிழிலோ வடமொழியிலோ இவருக்கு ஞானம் இல்லை; அதனை இவர் விரும்பவுமில்லை. கீர்த்தனங்களையும், பிற உருப்படிகளையும் வைத்துக்கொண்டு தான் சங்கீதத் திறமையைக் காட்ட வேண்டுமென்ற அவசியம் இவருக்கு இல்லை; இவருடைய சங்கீதமானது சாகித்யத்தைத் தன் மனம்போனபடி இழுத்துக் கொண்டே செல்லும். சாகித்யத்தினால் ஒரு பயனுமில்லையென்பது இவருடைய கொள்கை.

பல்லவி பாடத் தொடங்கும்போது இவருடைய மனத்துக்குத் தோற்றியவை யெல்லாம் சாகித்யமாக அமைந்துவிடும். இவர் இவ்வாறு பாடும் பல்லவிகளுள் சில வருமாறு:-

"தாவரப் பத்தியில் நாலு தூண் இருக்குது!" 
"கொல்லா!- குறடிறுகப் பிடி கொல்லா!" 
"இடியிடிக்குது மழை குமுறுது எப்படிநான் போய்வருவேன்!"

இவருடைய அங்க சேஷ்டைகளையோ சாகித்யத்திலுள்ள பிழைகளையோ யாரேனும் எடுத்துச் சொன்னால், "உங்களுக்கு வேண்டியது சங்கீதந்தானே? மற்றவை எப்படி இருந்தால் என்ன? நீங்கள் என்னைத் திருத்தவேண்டிய அவசியமே இல்லை" என்று தைரியமாகக் கூறிவிடுவார். இவருக்கு இருந்த சங்கீதத் திறமையும், சென்ற இடங்களில் இவருக்கு உண்டான பெரு மதிப்பும் அந்தத் தைரியத்தை இவருக்கு அளித்தன.

சுகவாழ்வு

மனிதனாகப் பிறந்தால் சுகமாக வாழவேண்டுமென்பது இவருடைய நோக்கம். பலவகையான சுகங்களையும் குறைவின்றி அனுபவிப்பதைவிட இவ்வாழ்க்கையில் வேறு பிரயோசனமில்லையென்றே இவர் எண்ணியிருந்தார். அழகிய உருவமுடையவராதலின் அந்த உருவத்துக் கேற்றபடி அலங்காரம் செய்து கொள்வார். மீசையை நன்றாக முறுக்கி அழகு படுத்திக் கொள்வார். விலை யுயர்ந்த மோதிரங்கள், கடுக்கன், தோடா, ரத்னஹாரம் முதலியவற்றை அணிந்திருப்பார். உடை வகையிலும் உணவு வகைகளிலும் குறைவில்லாதபடி அமைத்துக் கொள்வார். எப்பொழுதும் ஐயம்பேட்டை இரட்டை உருமாலை இவர் மேலே இருக்கும்.

சொக்கம்பட்டி ஜமீன்தாரால் அளிக்கப்பட்ட பெட்டி வண்டி ஒன்று இவரிடம் இருந்தது. அதில் பூட்டுவதற்குரிய சிறந்த காளைகள் இரண்டின் கழுத்தில், நெடுந் தூரம் கேட்கும் ஒலியையுடைய சலங்கைகள் கட்டப்பட் டிருக்கும். அந்த வண்டியில் இவர் திண்டு முதலிய ஆடம்பரங்களுடன் போவதைப் பார்ப்பவர்கள் இவரை ஒரு பெரிய ஜமீன்தார் என்றே எண்ணுவார்கள். நெடுந் தூரத்தில் வண்டி வரும் போதே காளைகளின் சலங்கை யொலி இவருடைய வரவைத் தெரிவிக்கும்.

ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் பழக்கம்

ஒரு சமயம் பெரிய வைத்தியநாதையர், திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சில ஜமீன்களுக்குப் போய்வந்தார். அக்காலத்தில் திருவாவடுதுறையாதீனத்தில் சின்னப்பட்டத்தில் இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் கல்லிடைக்குறிச்சி மடத்தில் இருந்து வந்தார். அவர் சங்கீதத்திலும், தமிழிலும், வடமொழியிலும் தக்க பயிற்சியும், பேரன்பும் உடையவர். வித்துவான்களின் அருமையை யறிந்து ஆதரிக்கும் வள்ளல். பெரிய வைத்தியநாதையருடைய இசைப் பெருமையை அவர் கேள்வியுற்று இவருடைய பாட்டைக் கேட்கவேண்டு மென்று விரும்பியிருந்தனர். இவரும் தேசிகருடைய சிறந்த இயல்புகளையும், வித்துவான்களின் தரம் அறிந்து பாராட்டி ஆதரிக்கும் தன்மையையும் உணர்ந்து கல்லிடைக்குறிச்சி சென்றார். தேசிகர் இவரை நல்வரவு கூறி உபசரித்தனர்; இவருடைய சங்கீதத்தையும் கேட்டு மகிழ்ந்தார். சங்கீத உலகத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற அரிய வித்துவான்களுள் இவர் ஒருவரென்பதை அவர் உணர்ந்து கொண்டார். இவருடைய சங்கீத ஆற்றலைக் கொண்டாடி தக்க சம்மானங்களைச் செய்து அனுப்பினார். அதுமுதல் இவ்விருவருக்கும் பழக்கம் அதிகமாயிற்று. வைத்தியநாதையர் சம்மானங்களை எதிர்பாராமல் தாமே கல்லிடைக்குறிச்சிக்கு அடிக்கடி வலிய வந்து தம்முடைய இசை விருந்தால் தேசிகரை மகிழ்விப்பார். இடமறிந்து சந்தோஷிக்கும் ரஸிகர்களிடத்தில் வித்துவான்களுக்குத் தனியான அபிமானம் இருப்பது இயல்பன்றோ?

(தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்;
உ.வே.சா 
என் சரித்திரம்: உ.வே.சா

கம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா

மற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்