தனிநாயகம் அடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனிநாயகம் அடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

1333. தனிநாயகம் அடிகள் - 2

தாய்லாந்து
தனிநாயகம் அடிகள் 


ஆகஸ்ட் 2. தனிநாயகம் அடிகளின் பிறந்த தினம்

இதோ அவர் எழுதிய ஒரு பயணக் கட்டுரை.









 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தனிநாயகம் அடிகள்

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

822. தனிநாயகம் அடிகள் - 1

தமிழாய்வினுக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளார்
ந. முருகேசபாண்டியன்

செப்டம்பர் 1.  தனிநாயகம் அடிகளின் நினைவு தினம்.



தமிழில் திறனாய்வு என்பது நீண்ட பாரம்பரியம் உடையதெனினும் புற நிலையில் ஒரு படைப்பினை நுணுகி ஆராய்தல் நூற்றாண்டுப் பழமையானது. இலக்கியப் படைப்புகளை வாசித்து அவற்றில் பொதிந்துள்ள நுட்பங்களை ரசித்து மகிழ்தலும், மேலைநாட்டுத் திறனாய்வுக் கோட்பாடுகளை வறட்டுத்தனமாகப் பிரயோகித்துத் திறனாய்வெனச் சிலாகிப்பதும் வழக்கமாக இருந்த காலத்தில், தனிநாயகம் அடிகளாரின் திறனாய்வு அணுகுமுறை தனித்துவமானது. வ.வே.சு. ஐயர், டி.கே.சி. போன்றோரின் விமர்சனம் ரசனையை அடிப்படையாகக் கொண்டிருந்தபோது, அதனைப் பல்வேறு தளங்களுக்கு விரித்தவர் தனிநாயகம் அடிகள்.

தமிழுடன் ஆங்கிலம், லத்தீன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்த்துகீஸ் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்த தனிநாயகம் அடிகளாரின் அனைத்துலகப் பார்வை முழுமையாக அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. ஒப்பிடுதலும் தர மேம்பாட்டினை அறிதலும் அவருடைய விமர்சனப் பார்வைக்குச் செழுமையூட்டின. தமிழ்மொழி, தமிழிலக்கிய மேன்மை, தமிழரின் பாரம்பரியச் சிறப்பினை உலகமெங்கும் வாழும் பிறமொழி அறிஞர்களிடம் பரப்புதலை வாழ்வின் இலக்காக தனிநாயகம் அடிகள் கொண்டிருந்தார்.

ஈழத்திலுள்ள காவலூர் அருகிலுள்ள பொன்னகரம் எனப்படும் காம்பொன் என்ற சிற்றூரில், ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதியரின் முதல் குழந்தையாக 1913-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதியன்று தனிநாயகம் அடிகள் பிறந்தார். இவரது இயற்பெயர் சேவியர். சொந்த ஊரில் தொடக்கக் கல்வியும் யாழ்ப்பாணத்தில் கல்லூரிக் கல்வியும் கொழும்பு நகரில் இறையியல் கல்வியும் பயின்றார். பின்னர் திருவனந்தபுரம் மறை மாவட்டத்தில் சேர்ந்த தனிநாயகம், மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றார். "The Carthaginian Clergy"  என்ற தலைப்பில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். அது 1960-ல் நூல் வடிவில் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு திரும்பி வந்தவர் சிறிது காலம் வடக்கன் குளத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுகலை மாணவராய்ச் சேர்ந்து எம்.லிட் பட்டம் பெற்றார்.

"பழந்தமிழ்க் கவிதையில் இயற்கை' என்பது ஆய்வுத் தலைப்பாகும். தூத்துக்குடியில் பணியாற்றிய அடிகள், தமிழ் இலக்கியக் கழகத்தை நிறுவி "Tamil Culture” என்ற ஆங்கிலக் காலாண்டிதழை வெளியிட்டார்.

இலங்கைக்குச் சென்று பல்கலைப் பணியில் சேர்ந்தார். லண்டன் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனத்தில், "தமிழிலக்கியம் வழியாகக் கல்வியியல்', என்ற தலைப்பில் முனைவர் பட்டர் பெற்றார். பின்னர் மலேசியாவிலுள்ள மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறையின் தலைவராக 1968-ம் ஆண்டு பணியேற்றார்.

1964-ம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டில் உலகமெங்கிலுமிருந்து கலந்துகொண்ட பேராசிரியர்களை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் குழு தோற்றுவிப்பதில் மூலவராக விளங்கினார். அவர் அவ்வமைப்பின் செயலராகப் பொறுப்பேற்றார்.

முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவப்படுவதற்கான செயலாக்கத்தில் அடிகளாரின் பங்கு கணிசமானது. அந்நிறுவன வெளியீடான "Journal of Tamil Studies"  இதழுக்குச் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அடிகளாரின் முதல் நூல் "தமிழ் தூது' இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. அது 1952-ம் ஆண்டு வெளியானது. அடிகளாரின் உலகப் பயண அனுபவங்கள் "ஒரே உலகம்' என்ற தலைப்பில் 1963-ம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய சொற்பொழிவானது "திருவள்ளுவர்' என்ற தலைப்பில் 1967-ம் ஆண்டு நூல் வடிவில் வெளியாகியுள்ளது. அடிகளார் எழுதிய 30 ஆய்வுக் கட்டுரைகள் “Tamil Culture" இதழில்  வெளியாகியுள்ளன. சுமார் 70 கட்டுரைகள் பல்வேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன.

தமிழிலக்கியப் பரப்பினுக்குள் சுருங்கியிருந்த தமிழாய்வுப் போக்கினை திறனாய்வு என்ற புதிய தளத்திற்கு விரிவுபடுத்தியவர் அடிகளார். பண்பாடு, ஒப்பிலக்கியம், கல்வி, இறையியல், புவியியல், வரலாறு, மொழியியல், மெய்யியல், நாட்டுப்புறவியல், கவின் கலைகள் போன்ற பல்வேறு துறைகளுடன் தமிழ் இலக்கிய ஆய்வைத் தொடர்புபடுத்தி நுணுகி ஆராய்திட முனைந்தவர்களில் அடிகளாரின் செயற்பாடு முதன்மையானது. பன்மொழிப் புலமையுடைய அடிகளார் உலக இலக்கியப் படைப்புகளை மூலமொழிகளிலேயே வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர். ஆதலால், தமிழிலக்கியப் படைப்புகளை ஒப்பீட்டு நிலையில் ஆராய்ந்திடும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார்.

""உலக இலக்கியத் திரட்டு' என்னும் பெருந்தொகை நூல்களில், நம் இலக்கிய நூல்களும் இடம்பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும்'' என்ற அடிகளாரின் ஆர்வத்தில் தமிழை அனைத்துலக இலக்கியப் பரப்பினுக்கு உயர்த்தும் முயற்சி பொதிந்துள்ளது.

உலகமெங்கும் பல நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுவதால், தமிழுக்கெனப் பொது ஒலிப்பு முறை என்ற கருத்தையும் அடிகளார் முன் வைக்கிறார். இது அவரது மொழியியல் அணுகுமுறையின் வெளிப்பாடாகும். தமிழ் உலக மொழியாவதற்கான தகுதியுள்ளது எனவும் தமிழின் தனித்தன்மைகளையும், வளங்களையும் உலகமெங்கும் ஆங்கிலம் வாயிலாகப் பரப்ப வேண்டுமெனக் குறிப்பிடுகின்ற அடிகளாரின் பார்வை முழுக்க முழுக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.

தமிழரின் தொன்மை அடையாளங்கள் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இடத்தில் இன்றும் எச்சமுடன் காணப்படுவதை அடிகளார் விளக்குகிறார். மேலும் ஜப்பான் மொழிக்கும் தமிழுக்குமிடையில் சில அம்சங்களில் ஒற்றுமை நிலவுவதையும் நுணுக்கமாகச் சுட்டுகிறார்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய நூல்களைத் தமிழில் முக்கியமானவையாக அடிகளார் கருதுகிறார்.

தமிழ், தமிழர் பற்றி ஐரோப்பிய மொழிகளில் வெளியாகியுள்ள நூல்களைத் தொகுப்பதன் மூலம் சர்வதேச ரீதியில் தமிழ் மொழியைக் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார். "Reference Guide to Tamil Studies”  என்ற 122 பக்கங்களைக் கொண்ட பார்வை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ரஷியன், மலாய் போன்ற பல மொழிகளில் தமிழியல் பற்றி வெளியான நூல்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. தமிழாய்வில் ஈடுபட முனைந்திடும் வெளிநாட்டவருக்குப் பார்வை நூலாக அடிகளார் தொகுத்த நூல் என்றும் விளங்கும் என்பது உறுதி.

இறுதியில் ஈழத்தில் தங்கியிருந்த அடிகளார் 1980-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இவ்வுலக வாழ்வைவிட்டு மறைந்தார். மாறிவரும் புதிய உலகத்தின் தேவைக்கேற்பவும், ஏற்கனவே தேங்கிப்போயுள்ள சூழலைத் தகர்த்தெறியவும் அடிகளாரின் ஆய்வுகள் முயன்றன. தமிழ், தமிழர் குறித்த திறனாய்வில் தனிநாயகம் அடிகளாரின் பங்கு என்றும் தனித்துவமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

[  நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

தனிநாயகம் அடிகள்

சேவியர் தனிநாயகம் : விக்கிப்பீடியா