சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 மே, 2021

1879. சுஜாதா- 6

எழுத்தில் ஹிம்சை

சுஜாதா


 ஹிம்சை செய்யாத எழுத்துக்கு உரியவர் சுஜாதா. ஆனால் அவர் எழுதிய முதல் கதையின் தலைப்போ ' எழுத்தில் ஹிம்சை' ! 

'சிவாஜி'  29 நவம்பர் 1953- இதழில் வந்தது. 






[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா

சுஜாதா கதையில் குறிப்பிடும் இரு ஆங்கில எழுத்தாளர்கள் எனக்கும் மிகப் பிடித்தவர்களே. அவர்களைப் பற்றி அறிய ;

E. Phillips Oppenheim 

Edgar Wallace 

 இவர்களின் நாவல்கள்  தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளனவா? வடுவூர் , ஆரணி வால்லஸ் நாவல்கள் சிலவற்றைச் செய்ததாக நினைவு. 

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading! 

புதன், 26 பிப்ரவரி, 2020

1477. சுஜாதா- 5

சுஜாதா - ஒரு சகாப்தம்
சீதா ரவி 
பிப்ரவரி 27. சுஜாதாவின் நினைவு தினம். அவர் மறைந்தபின் 'கல்கி'யில் வந்த ஓர் அஞ்சலிக் கட்டுரை.






[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]



தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா

வியாழன், 28 பிப்ரவரி, 2019

1239. சுஜாதா- 4

சுஜாதா - குமுதம் - நான்
( நண்பருக்கு நினைவாஞ்சலி )
பாக்கியம் ராமசாமி 

 
ஜ.ரா.சு. அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் செப்டெம்பர் 13, 2017 -இல் எழுதிய ஒரு கட்டுரை.

டியர் சுஜாதா,
தாங்கள் புறப்பட்டுப் போய் ஒன்பது வருடமாகிறது. இலக்கியத்தில் நீங்கள் வசித்த பகுதிக்கு இன்னும் யாரும் குடித்தனம் வரவில்லை.
எனது ஏக்கத்தின் பிரதிபலிப்பாக இந்த அஞ்சலி.
அய்யா சுஜாதா, உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை. சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.
பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.
ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.
திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.
அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.
ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.
அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.
அவர் குமுதத்தில் எழுதிய ‘ சிவப்பு கறுப்பு வெளுப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.
‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.
ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.
‘சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.
எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பையும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.
மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.
உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.
தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.
நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.
அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.
நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.
குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.
குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.
சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.
ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.
இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..
- பாக்கியம் ராமசாமி
( நன்றி: குமுதம் 12.3.2008 )

======
1. சுஜாதாவின் அந்தத் தொடரின் (1980) முதல் இரண்டு பக்கங்கள்:






[ படங்கள்: நன்றி: கணேஷ் பாலா ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா


பாக்கியம் ராமசாமி

வெள்ளி, 2 ஜூன், 2017

737. சுஜாதா - 3

ஒரு லட்சம் புத்தகங்கள்
சுஜாதா



ஜூன் 1, 1981. யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட தினம்.



சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்!
- மகாகவி
WELCOME TO DELEGATES OF
BHARATHI INTERNATIONAL
நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாயிலில் ஆடின. தலைப் பாகைக்காரரின் படம் கீழே துடித்துக்கொண்டு இருந்தது. அருகே பல வண்ணக் கொடிகள் சஞ்சலித்துக்கொண்டு இருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழ் அறிஞர்கள் நிறைந்து இருந்தார்கள். புதுக் கவிஞர் கேக் கடித்துக்கொண்டு இருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்றவைத்துக்கொண்டு இருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்துகொண்டு தொடை மேல் காகிதம்வைத்துக் கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.

'' 'தமிழ்நாட்டிலே சாஸ்திரங்கள் இல்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்!’
இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?''



''பேரறிஞர் அண்ணாங்களா?''
''இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. 'காற்று’னு வசன கவிதை படிச்சுப் பாருங்க.''
''அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க. ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்!''

டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக ''வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்!''
''எதுக்கு?'' என்றார் டாக்டர்.
''அ! தெரியாத மாதிரி கேக்கறீங்க.''
''உண்மையிலேயே தெரியாதுங்க.'' தெரியும்.
''பாரதி பல்கலைக்கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப்போறாங்களாம்.''
''ஓ... அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது.''
''இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க.''
''சேச்சே! அமைச்சருக்குப் பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க.''
''உங்களைவிட்டா பொருத்தமா வேற யாருங்க?''
''எதோ பாக்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்லைங்க. அரசியல் வேற கலக்குது...'' டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக,
''வள்ளுவர் சொல்லியிருக்காரு...
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’னு.
இப்ப யாருங்க பாப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில்தான் பாரதி சொல்லி இருக்காரு.''



ரிசப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக்கொள்ளும்போது அந்தப் பெண், ''சார் யூ ஹவ் எ மெசேஜ்'' என்று புறாக் கூட்டில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள்.

'செல்வரத்தினம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்’. நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. 'யார் இந்த செல்வரத்தினம்? புரியவில்லை.’ ''தேங்க்ஸ்!'' என்று அவளைப் பார்த்தபோது ''யூ ஆர் வெல்கம்'' என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த சன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவியை (டாக்டர் மணிமேகலை) விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பு இருந்தது!

'கூடிப் பிரியாமலே - ஓரிராவெல்லாம்
   கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே - உன்றன் மேனியை
  ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி...’

''டாக்டர், வணக்கம்!''
''ஓ, பெருமாள்! வாங்க, எங்க இருக்கீங்க இப்ப?''
''உத்கல்ல! புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சு இருக்காங்க...''
''உத்கல் எங்க இருக்குது?''

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண்பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து 'ஹலோ’ என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.
''இது வந்து கத்தரினா. ரஷ்யாவுல இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி!''
''ஆ, ஐஸ்ஸீ!'' என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண்பிள்ளைபோல் ஏராளமாக இருந்தாள். வல்லி இடையில்லை, ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.
''யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட் யூ?''
''நோ... ஐம் பிரிஸைடிங்! மத்தியானம்... ஆஃப்டர் நூன். யூ நோ டாமில்?''
''யெஸ்! கான்ட் ஸ்பீக்!''
''இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாட விட்டாங்க தமிழங்கன்னு கேக்குது!''
''அவர் காலத்துத் தமிழங்க அவர் பெருமையை உணரலை...''
''டாக்டர்! உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?''
''சேச்சே! இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா.''
''ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத் தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருந்து எப்படியாவது ரீடராக் கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா... என்னுடைய பைல்ஸுக்கு ஒப்புக்கலை!''



''பாக்கலாங்க, முதல்ல ஆகட்டும்.'' செல்வரத்தினம்... எங்கயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே? ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்துவிட்டு, டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார். மணிமேகலைக்குச் செய்தி சொல்ல வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே! அதற்குள் எத்தனை கோட்டைகள்!

மெஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்ததால் உள்ளே பேச்சு கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளே இருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிப் பருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது,

 ''அவன் சர்வதேசக் கவிஞன்! பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். 'மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்’ என்று ரஷ்யப் புரட்சியைப்பற்றிப் பாடினான். அவனன்றோ...'' என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயம் இல்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான்! நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக்காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயம் உள்ளவர் யாரும் கிடையாது. 'பாரதி கவிதைகளில் சமத்துவம்’ என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல்!

மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக்கொண்டுவரலாம். முதலில் மணிமேகலைக்குத் தொலை பேசி மூலம் விவரம் தெரிவித்துவிடலாம்.
டாக்டர் லேசாக,
'காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்...’
என்று பாடிக்கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும்போது, அறை வாசலில் நின்றுகொண்டு இருந்தவனைக் கவனித்தார்.
''வணக்கம் ஐயா!''
''வணக்கம்! நீங்க..?''
இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தது.
''கண்டு கன காலம்'' என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.
எங்கோ பார்த்திருக்கிறோம் மையமாக. ''வாங்க! எப்ப வந்தீங்க?''
''இஞ்சாலையா?''
இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன்! இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.
''நீங்கதானா, செல்வரத்தினம்?''
''ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்ப்பாணத்தில் சந்திச்சிருக்கோம்.''
இப்போது முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. இவன் வீட்டில் யாழ்ப்பாண உலகத் தமிழ் மகாநாட்டின்போது டாக்டர் இரண்டு நாள் தங்கியிருக்கிறார்.
''எங்க வந்தீங்க?''



''சும்மாதானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்!'' மனசுக்குள் மொழி பெயர்த்துக்கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும், ''வாங்க! உள்ள வாங்க'' என்றார்.
அறைக்குள் ஆஷ் - டிரே தேடினான். டாக்டர் அவனுக்கு நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.

''விழாவில் எண்ட பேச்சும் உண்டு'' என்றான்.
''அப்படியா! சந்தோஷம். விழாவுல கலந்துக்கறதுக்காக வந்தீங்களா சிலோன்ல இருந்து?''
''ஆமாம்.''
''ரொம்பப் பொருத்தம். சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப...''

இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடுகொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்துவைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் 'நெஞ்சில் உரமுமின்றி’ பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன..?
''உக்காருங்க... ஊர்ல எல்லாரும் சௌக்கிய முங்களா?''
''ஊர்ல யாரும் இல்லீங்க.''
''அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?''
''தங்கச்சி இல்லைங்க'' என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.
''என்ன சொல்றீங்க?''
''எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க.''
''அடப்பாவமே! எப்ப? எப்படி?''
''ஆகஸ்ட் கலகத்துலதாங்க!''
''ஐயையோ! எப்படி இறந்துபோனாங்க?''
''தெருவுல வெச்சு... வேண்டாங்க! விவரம் வேண்டாங்க... நான் ஒருத்தன்தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்.''

டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும்போது, எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,
''ஏதாவது சாப்பிடறீங்களா?''
''கோப்பி'' என்றான்.
''இத்தனை நடந்திருக்குனு நினைக்கவே இல்லை! அதும் நமக்குத் தெரிஞ்சவங்க. நாம பழகினவங்க இதுல பலியா இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது...''
''அதைப்பத்தி இப்பப் பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக.''
''சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்துல என்ன உதவி தேவையா இருக்குது?''
''நிகழ்ந்தது எல்லாம் தமிழ் நாட்டுல முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொது நூலகத்துல இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?''
''அப்படியா?''
''அருமையான புத்தகங்கள்! பாரதியாரே சொந்தச் செலவில் பதிப்பித்த 'ஸ்வதேச கீதங்கள்’ 1908-லயோ என்னவோ வெளியிட்டது. 'இதன் விலை ரெண்டணா’ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி! லட்சம் புத்தகங்கள்னா எத்தனை தமிழ் வார்த்தைகள்! எண்ணிப் பாருங்க. அத்தனையும் தெருவுல எரிச்சாங்க.''
''அடடா!''
''அதை நான் சொல்ல விரும்பறேன். அப்புறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினஞ்சு நாளா தமிழ்நாட்டில் பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்.''
''எங்க சொல்ல விரும்பறீங்க?''
''இன்றைய கூட்டத்தில்தான்!''
''இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே!''
''பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த்தினவன்! இன்றைக்கு இருந்திருந்தா, சிங்களத் தமிழர் களுக்காக உருகியிருக்க மாட்டானா?''
''கட்டாயம்... கட்டாயம்...''
''அதைத்தாங்க சொல்லப்போறேன்!''
''அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே!''
''இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்தியத் தமிழறிஞர்கள் எல்லாரும் வர்ற இந்த மேடையில எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கிறேன்!''
டாக்டர் சற்றே கவலையுடன், ''குறிப்பா என்ன சொல்லப்போறீங்க?'' என்றார்.
''சிங்களத் தமிழர்களைத் தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப்போறேன்.''
''புரியலீங்க.''
''ஐயா! நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க, அவங்களை எப்படி 'றீட்’ (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறதுக்கு. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த உடனே அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிற்றர் வெச்சிருக்கியா? றேப் றிக்கார்டர் கொண்டுவந்திருக்கியா?
தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்துல கலைஞ்சுபோயிருதுங்க, அந்த காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை! சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்துல க்வாரன்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக்காங்க. இரண்டு ரூமுக்குப் பத்து பேற்றை அடைச்சுவெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுனு பேரு. எல்லாம் அப்ளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சம் இல்லாம வராது. இவங்க உடமைகளை, கொண்டு வந்த அற்பப் பணத்தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும். கிடைக்கிறது நாப்பத்தஞ்சுதான். எல்லாரும் திரும்பிப் போயிரலாம், அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்பச் சேர்த்துக்க மாட்டாங்க! போக முடியாது.

1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு 'இது உன் தாயகம் இல்லை, தமிழ்நாட்டுக்குப் போ’னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டு கப்பலில் அனுப்பிச்சிட்டாங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி, ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு, இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்னை இல்லையா?''

''எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்தித்தான் எனக்கு...''
''வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல் வாதிங்ககிட்டயா? ஏ.டி.எம்.கே-காரங்க, 'இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க! டி.எம்.கே, 'இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூராக் கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க!''
''இல்லை. இதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க...''
''சொல்றேங்க! எல்லாப் பத்திரிகையையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க; நாங்க அட்டைப் படமே கண்ணீர்த் துளியா ஒரு இஷ்யூல போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்துல கேட்டா, விகடன்ல வந்துருச்சேன்னாங்க. ராணியில இதைப்பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதிட்டு இருக்கமேன்னாங்க...''
''நீங்க என்ன எழுதறதா சொன்னீங்க?''
''அந்தப் புத்தகங்களை எரிச்சதைப்பற்றித்தாங்க! ஒரு லட்சம் புத்தகங்க! அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சுபோய், ராத்திரி பூரா வெளிச்சமா இருந்ததை! ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கனு... ஆனா, அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க... அவங்க கலர் ட்ரான்ஸ்பரன்ஸி இருந்தா கொடுங்க, அட்டையில போடுவோம்... கொஞ்சம் ஹ்யூமன் இன்ட்ரஸ்ட் இருக்கும்னாருங்க! அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பம் இல்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க! முதல்ல பக்கத்து வீட்ல சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிக்கிட்டு இருந்தது! அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப்போயிருச்சுங்க. சந்துலவெச்சுப் பிடிச்சுத் தெருவுல... நடுத் தெருவுல... என் கண் முன்னாலயே! கண் முன்னாலயே...'' அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.
''ரொம்பப் பரிதாபங்க.''
கொஞ்ச நேரம் அழுதுவிட்டு ''எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பம் இல்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சம் இல்லை. ஆனா, அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்புல இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க...'' சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக்கொண்டு, ''எனக்கு ஒரு நாட்டு 'குடிமகன்’கிறது யாருங்கறதைப்பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள் தமிழர்கள் இரண்டு பேரும் இந்தியாவுல இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில் இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம். சக்கிலியங்களாம்! இதைஎல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?''

டாக்டர் மூக்கைச் சொறிந்துகொண்டார்: ''இவ்வளவு விவரமாச் சொல்ல வேண்டாங்க. ஏன்னா, இது இலக்கியக் கூட்டம். இதில் அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க...''
''அரசியல் இல்லைங்க, மனித உரிமைப் பிரச்னை இல்லையா?
'சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ-கிளியே!
செம்மை மறந்தாரடீ!’னு
பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?''
''அதுவும் ஒருவிதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்...''
''எனக்கு இதைவிட்டா வேற வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்துல நடந்ததைச் சொன்னா, கண்ல ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப்போறது இல்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்குப் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப்போறேன்!''
''என்ன புத்தகம்?'' என்றார் கவலையோடு.
''இந்த மாநாட்டு மலரை!''
''எதுக்குங்க அதெல்லாம்..?''
''பாரதி சொன்ன எதையும் செய்யாம ஏர் கண்டிசன் ஹோட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக் கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு, பாரதி சொன்னதை நடைமுறையில் செய்துகாண்பிங்கனு சொல்லப்போறேன். 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலம் இல்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க! அப்பதான் பளிச்சுனு எல்லார் மனசிலயும் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்குல்ல கூட்டம்?'' அவன் எழுந்து வணங்கிவிட்டுச் சென்றான்.

 'செல்வரத்தினம்...’
டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக்கொண்டு இருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது 'செல்வரத்தினம், ஸ்ரீலங்கா’ என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போல் இருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். ''பீப்பி கால். டாக்டர் மணிமேகலை...''
பத்து நிமிஷத்தில் கால் வந்தது.
''மணி! நாந்தான்.''
''என்ன, விசாரிச்சீங்களா? கிடைச்சிருச்சா?''
''ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரெட் டரியேட்லயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்.''
''அப்ப இனிப்பு செய்துர வேண்டியதுதான். இந்தக் கணத்துல உங்ககூட இருக்க...''
''மணி! ஒரு சின்ன சிக்கல்...''
''என்னது... அருணாசலம் மறுபடி பாயறாரா?''
''அதில்லை மணி! இன்னிக்குக் கூட்டத்துல அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் மகாநாட்டுல சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்.''
''பேசட்டுமே, உங்களுக்கு என்ன?''
''அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்திய கலகத்துல ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்புல இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியாக் கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்.''
''என்ன செய்யப்போறான்?''
''யாழ்ப்பாணத்துல லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப்போறேங்கறான். கேக்கறதுக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா, கூட்டத்துல கலாட்டா ஆகி, எங்கயாவது எனக்குச் சந்தர்ப்பம் வர்றதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா, அமைச்சர் வந்து...''
''த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்!''
''எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க.''
''என்ன, கேக்குதா?''
''கேக்குது... கேக்குது. இத பாருங்க. உங்க பேச்சை இன்னிக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்.''
''எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே! தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?''
கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.
''என்ன செய்யச் சொல்றீங்க?''
''எப்படியாவது உங்க அண்ணன்கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு...''
''அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்... வெச்சுருங்க.''
''எப்படியாவது...''
''வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்.''
''சரி மணிமேகலை!''
''கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்சா மாதிரிதான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சைக் கேட்டுட்டாப் போதும்னாரு...''

டெலிபோனை வைத்துவிட்டு டாக்டர் சற்றுத் திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்துகாட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள் இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். அவள் சக்தி!
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி

இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப்புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு 'எண்ணிய முடிதல் வேண்டும், நல்லதே எண்ணல் வேண்டும்...’ என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்து இருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன! ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக்கொண்டு இருக்க, வரவேற்புரைஞர், ''தலைவர் அவர்களே! உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே!'' என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்கும் இங்கும் வணங்கிக்கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு, உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.
இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை... இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம்.

பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.
''முதற்கண் பிஜி தீவில் இருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்'' என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.
''ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் ஃபெலோ டெலிகேட்ஸ்! ஐ’ம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐ’ம் ஸாரி ஐ’ம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில். பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி...''

டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க... போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசை ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த்தார்.
பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான்! ஒரு மணி நேரத்தில் சாதித்துவிட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.
''அடுத்துப் பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால், சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்...''
தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது:
டாக்டர் நல்லுசாமி தன் தலைமை உரையின்போது, '' 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப் போம்’ என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல; மனப் பாலத்தை...'' என்றார். அமைச்சர் தன் உரையில் உள்ள புதிதாகத் துவக்கப்போகும் பாரதி பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற செய்தியை அறிவித்தார்.

செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி, கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை!

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா

திங்கள், 27 பிப்ரவரி, 2017

சுஜாதா - 2

ரஞ்சனி 
சுஜாதா





பிப்ரவரி 27. சுஜாதாவின் நினைவு தினம்.

இதோ அவர் ‘விகடனில்’ 1969-இல் எழுதிய ஒரு ’சங்கீத’க் கதை!

====



ஸார்! நான் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படிச்சேன். அதற்கப்புறம் படிப்பு ஏறலே. நான் எங்கப்பாவுக்கு இரண்டாவது பையன். என் அண்ணா நல்ல வேலையில் இருக்கான். படிச்சு நெட்டுருப் போட்டு, பரீட்சை எழுதிப் பாஸ் பண்ண எனக்குச் சிரத்தை இல்லை; பொறுமை இல்லை; வரலை. அம்மா அப்பாவுக்குக் கவலையா இருந்தேன். எங்க குடும்பத்திலே சங்கீதம் கிடையாது. ஆரத்தி எடுக்கறபோது கூட எங்கம்மா பாடினது கிடையாது. எங்கப்பா நியூஸ் கேக்கறதுக்கு மட்டும்தான் ரேடியோ வைத் திருப்புவார். அப்படி இருக்க எனக்கு எங்கேயிருந்து இந்த வாத்தியத்தின் மேலே மோகம் வந்தது? அது ஆச்சர்யம்.

எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு... நியூஸூக்கு ஒரு நிமிஷம் பாக்கியிருக்கிறபோது ரேடியோவிலே ஒத்தை வீணை மட்டும் வெச்சான். அப்பதான் தெளிவா எனக்கு ஆசை ஏற்பட்டுது. அது, ரஞ்சனி ராகம்னு கேள்விப்பட்டிருக்கேன்.

மறுநாள் உள்ளூர் ராமய்யங்காரிடம் போய், ''ஸ்வாமி! இந்த வீணை வாத்யம் கத்துக்கறதுக்கு எத்தனை நாளாகும்?''னு கேட்டேன்.

''யார் கத்துக்கணும்?'' என்று கேட்டார்.

''நான்தான்'' என்றேன்.

''முதல்லே நீ சிகரெட் குடிக்கிறதை நிறுத்தணும். வேஷ்டி கட்டிக்கொண்டு வரணும். வீணை தெய்விகமான வாத்யம். அதை அணுகறதுக்கு முன்னாலே மனுஷனுக்குச் சுத்தம் வேணும்...'' அப்படி இப் படின்னு சொன்னார். மாசம் நாப்பது ரூபாய் கேட்டார்.

அப்பா கிட்டப் போய், ''அப்பா, நான் வீணை கத்துக்கலாம்னு இருக்கேன்''னேன்.

''போடா, போய் மளிகைக் கடையிலே பொட்டலம் மடி. செப்டம்பருக்குப் படிக்கத் துப்பில்லை. வீணை கத்துண்டு என்ன வெங்கடேச பாகவதருக்கு சுருதி போடப் போறயா?'' என்றார்.


அண்ணாவுக்குக் கடிதம் எழுதினேன். ஐ.ஏ.எஸ். படிச்சுட்டு பீஹாரிலே என்னவோவா இருக்கான். ''உன் சகோதரன் போல நீயும் முன்னுக்கு வரவேண்டாமா? இண்டஸ்ட்ரியல் லய்னிங் இன்ஸ்டிட்யூட்டிலே சேர்ந்து, ஏதாவது தொழில் கத்துக்கொள்ளேன். அதுக்கு வேணா பணம் அனுப்பறேன்''னு பதில் எழுதி, நிறையப் பொன்மொழிகளும் எழுதி இருந்தான். 'சரி, தொழில் கத்துக்கறேன்; பணம் அனுப்பு'ன்னு எழுதினேன். பணம் அனுப்பலை. ஒரு அப்ளிகேஷன் ஃபாரம் அனுப்பினான்.

அம்மா கிட்ட கேட்டுப் பார்த்தேன். ''என்கிட்ட ஏதுடா காசு? ஒண்ணு செய்யேன். ஏதாவது வேலை பார்த் துக்கொள். அதிலே வர காசை நீ ஒண்ணும் எங்க கிட்டே கொடுக்க வேண்டாம்'' என்றாள். வேலையாவது கிடைக்கிறதாவது!

தைரியமா ஒரு காரியம் செஞ்சேன். ஒரு காயலான் கடையிலே எங்க வீட்டுச் சைக்கிளை வித்துட் டேன். திரும்பி வந்து அப்பா கிட்ட, மைதானத்திலே சைக்கிள் தொலைந்து போய்விட்டதுன்னு சொன்னபோது அவருக்கு ரொம்பக் கோபம் வந்துட் டுது. நான் சொல்றது பொய்னு அவ ருக்குச் சந்தேகம். ''வா, போலீஸ்லே போய்க் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க லாம்''னார். ஜாஸ்தி பொய் சொல்ல வரலை. இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கக் கேட்க, எனக்குக் கழண்டு போச்சு.

அப்பா ''எங்கேடா காசு?'' என்றார். பனியனுக்குள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தேன்.

''எதுக்குடா வித்தே?'' என்றார்.

''வீணை வாங்க'' என்றேன்.

அப்பா போலீஸ் ஸ்டேஷனிலே என்னை அடிக்கலை. வீட்டுக்கு வந்ததும் அடிச்சார். அம்மா தடுத்து, ''அவனுக்கு வர மாசிக்கு இருபது வயசாகப் போறது. அவனை அடிச்சா ஏதாவது ஒண்ணு கிடக்க, ஒண்ணு ஆய்டும். பேசாம விட்டுடுங்களேன். கத்துக்கட்டுமே! அவனுக்குப் புத்தி அதிலேதான் போறதோ என்னவோ'' என்றாள்.

''அப்பா, என்னை அடிக்க உங்க ளுக்கு உரிமை இருக்கு. நான் உங்களுக்கு உபயோகமில்லாம சுமையா இரக்கேன். ஆனா, நீங்க இந்தக் காசை கடன் மாதிரி எனக்குக் கொடுங்க. மாசாமாசம் கணக்கு வெச்சுக்குங்க. எப்படியாவது பிற்காலத்திலே சம்பாதிச்சு உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்றேன்.

அப்பா சிரித்தார். அப்பாவையும் குற்றம் சொல்ல முடியாது. மூத்த பையன் வசதி வந்ததும், அப்பா அம்மாவை மறந்துட்டான். சௌக்கியமா சௌக்கியமான்னு கடுதாசி எழுதுறானே ஒழிய, காசா, பணமா... ம்ஹும்! நான்தான் இருக்கவே இருக்கேன். நாங்க மூணு பேரும் அப்பா பென்ஷனிலே வாழணும். அதனாலே எப்படியாவது என்னை ஒப்பேத்தி விடணும்னு ஆசைப்படறார். நானானால் வீணை வாசிக்கணும் என்கிறேன்!

அப்புறம், ராமய்யங்கார் கிட்ட அப்பா பேசி, அதட்டி கிதட்டி மாசம் இருபத்தஞ்சு ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தார். நான் வீணை கத்துக்க ஆரம்பிச்சேன்.

இதுலே பாருங்க ஸார்... என் னுள்ளே ஒரு புயல் இருந்து, அதற்கு வெளியே வர ஒரு வாய்ப்பு கிடைச்சாப்பலே ஆய்டுத்து. நான் ஆரம்பிச்ச விதமே தப்பு. எனக்கு வாத்தியம் கையாளத் தொடங்கின வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்கு. வாத்தியத்தை விழுந்து சேவிக்கச் சொன்னார். 'மாய மாளவ கௌள' வின் சுரங்களை எல்லாம் புள்ளி வெச்சு மார்க் போட் டிருந்தது. அந்த வீணையிலே ராமய்யங்கார் இதுதான் 'ஸ'ன்னு தட்டினார். என் கை விரலை மடக்கி அழுத்தி நாதம் பண்ணச் சொன்னார். எப்படி அழுத்தறதுன்னு தெரிஞ்சப்புறம், இரண்டு சுரம் பிசிறில்லாமல் சுத்தமாகக் கேட்டப்புறம், எனக்குச் சைக்கிள்லே பாலன்ஸ் கிடைச்சாப்பலே ஆய்டுத்து. அதையே 108 தடவை வாசிக்கச் சொல்லிட்டுப் பின்கட்டுப் பக்கம் போனார். அவர் போன உடனே மற்ற சுரங்களைத் தேட ஆரம் பிச்சேன். அந்தப் பெரிய கம்பியைத் தட்டிப் பார்த் தேன். அதிலே ஒரு ஸ்வரத் தைப் பிடித்துக்கொண் டேன். அது இனிமையா இருந்தது.

திரும்பி வந்த வாத்தியார் கேட்டுண்டே வந்தார். கோபித்துக் கொண்டார். 'நிதானம் வேணும். சாதகம்கிறது இந்த மாதிரி கன்னா பின்னா என்று தேடித் தேடி வாசிக்கிறதில்லை'ன்னு சொல்லி, சங்கீதத்திலே இருக்கிற ஆதார சுரங்களைப் பத்திச் சொன்னார். அஸ்தி வாரம் கட்டறதைப் பத்திச் சொன்னார். பொறுமை வேணும் என்றார்.

எனக்குப் பொறுமை இல்லை. அதுதான் என் கிட்டே இருந்த தவறு. அந்தச் சரளி ஜண்ட வரிசைகளையும் வர்ணங்களையும் நிதானமா பொம்மனாட்டி மாதிரி ஒவ்வொரு தடவையும் தாளக் கம்பிகளைச் சிதற அடிச்சுண்டு வாசிச்சுப் பழகப் பொறுமையில்லை. ஏதோ நாளன்னிக்குச் செத்துப் போய்விடப் போகிறேன், அதுக்குள்ள இந்த வாத்யத்தைக் கரை காண வேணும்ங்கறாப்போல அவசரம். நோட்டிலே எழுதி நெட்டுருப் போட முடியல்லை. அவரோட சேர்ந்து வாசிக்க முடியல்லை.

இரண்டு மாசம் பார்த்தார். எங்கப்பாவைக் கூப்பிட்டார். சொன்னார்... ''உங்க பையனுக்குக் கட்டுப்பாடு கிடையாது. அவனுக்குச் சங்கீதம் வராது ஸ்வாமி, உங்க பணம் வேஸ்ட்!''

எனக்கு அழுகை வந்தது. அப்படிச் சொன்னதால் இல்லை. என்னை வீணை வாத்யத்திலிருந்து பிரிச்சுப்புட்டார். என் விரல் பழகறதுக்கு முன்னே, என் மனசிலே வடிவம் வடிவமா இருக்கிற ஆசைகள் எல்லாம் விரல் வழியா ரூபம் பெறு வதற்கு முன்னாலே என்னைப் பிரிச்சுட்டார்.

அப்பதான் எனக்கு வேலை கிடைச்சுது. அதுவும் அப்பாவினாலேதான். உள்ளூர் கோ-ஆப ரேடிவ் ஸ்டோர் பிரஸிடெண்ட்டைத் தெரியும். அதிலே ஒரு கிளார்க்குக்கு டைபாய்ட் வந்து ரெண்டு மாசம் லீவ் போட்டிருந்தான். அந்த லீவ் வாகன்ஸியில் எனக்கு மன்றாடிக் கிடைச்சது. கிலோ 4-66 பைசா மேனிக்கு 6 கிலோ 75 கிராம்னு டெஸிமல் கணக்குப் போட ஆரம்பிச்சேன். எழுதறபோது ஆறு அஞ்சு முப்பது, ஆறு ஏழு நாப்பத்தி ரண்டுனு பெருக்கல் மெதுவா மெதுவா ராகமா மாறும். மாறி மனசில் சஞ்சாரம் பண்ணும். அந்தப் பெயரில்லாத, நம்பரில்லாத வடிவங்களைத் தேடுவேன். கணக்கிலே நிறையத் தப்புப் பண்ணி ராத்திரி 9.30 வரைக்கும் கூட்டிக் கழித்தும் சரியா வராது. அவாளுக்குப் பொறுமை இழந்து போக, எனக்கு வேலை போச்சு! அப்புறம் நானே சொந்த முயற்சியா முனிஸிபாலிடி சேர்மன் கிட்ட போய்க் கெஞ்சிக் கேட்டு, அவர் ஓனராக இருக்கும் பெட்ரோல் பங்க்கில் கணக்கு எழுதற வேலை கிடைச்சது. மறுபடி பெட்ரோல் டீஸல் லிட்டர் கணக்குத்தான். கொஞ்சம் கவனமா இருந்தேன். இந்த வேலை கொஞ்சம் நிலைச்சுது. அம்மா என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பித்து விட்டாள்.

நான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சதுக்கு முதல் காரணம் வீணை. 'அம்மா! எனக்கு சூட் வேண்டாம்; ரிஸ்ட் வாட்ச் வேண்டாம்; அவாளை ஒரு வீணை வாங்கிக் கொடுத்துடச் சொல்லு. வாத்தியார் காட்டற பொண்ணுக்குத் தாலி கட்டறேன்'னு சொல்லிட்டேன். அம்மா சிரிச்சா. எனக்குக் கல்யாணம் நடந்தது. நெருப்பிலே நெய்யை விடற போது நாதஸ்வர சங்கீதத்திலே ஆழ்ந்து, தவில் கருவி மாதிரி உருளுவதைக் கவனிச்சுண்டு, அவ பட்டுப் புடவையெல்லாம் நெய்யாக்கின ஒரே மாப்பிள்ளை நான்தான்னு நினைக்கறேன். அந்தப் பாவிப் பயல் மலய மாருதத்தை அப்படி வாசிச் சான்.

என் கல்யாணம் நடந்தது. அதுக்கு முன்னாலேயே ஒரு நல்ல தஞ்சாவூர் வீணையா வாங்கியாச்சு! புதிய வீணை. புதிய பெண். இரண்டும் எனக்கு மிகவும் புதுசு. இரண்டும் பெரிய சப்ஜெக்ட்! வீணையைப் பத்தியாவது பரிச்சயம் உண்டு. பெண்ணைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. நாங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளே படுத்துக்குற சந்தர்ப்பம் வந்தபோது, அந்த வீணை ஓரத்திலே இருந்தது. மூணு மணி நேரம் அவள் சும்மா உட்கார்ந்திருக்க, நான் ஸ்வரங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோதுதான் அவள் உட்கார்ந்திருந்தது ஞாபகம் வந்தது. அவள் கண்களில், 'என்னை வாசியுங்களேன்' என்று சொன் னது போல இருந்தது.

ஒரு வீணைக்காக கணவனான என் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்? கல்யாணம் என்கிறது ரொம்பப் பெரிய பொறுப்பு, ஸார்! எனக்கு அது முதல்லே தெரியலை. ஆனா, ஒரு வாரத்துக்குள்ளே, ''நாம எப்ப தனியா குடித்தனம் போகப் போறோம்?''னு கேட்டப்போ தெரிஞ்சது. பெட்ரோல் பங்க் கிளார்க் எப்படி வாடகை கொடுத்துண்டு தனியா இருக்க முடியும்? அம்மாவுக்கும் அவளுக்கும் கொஞ்சம் சரிப்பட்டு வரலை. அம்மாவைப் பத்தி அவ புகார் சொல்றது எனக்குப் பிடிக்கலை. என் அம்மா அம்மா தான். சீதாதேவியே மாமியாரா இருந்தாக்கூட ஒரு மருமகள் புகார்தான் சொல்வாள் போலிருக்கு. ஆதி காலத்திலிருந்தே ரஃபா இருக்கிற உறவு போலிருக்கிறது இது. நான் இதை யெல்லாம் கவனிக்கிறதில்லை. வீணை வீணை வீணைதான். காலையிலே அவசர அவசர மாகப் பல்லைத் தேய்த்து விட்டுக் காபி சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்துவிடுவேன். ஒன்றரை மணி நேரம் சாதகம். அப்புறம் பங்க்குக்குப் போய் வந்த உடனே... எட்டு மணி வரை. ஒரு சினிமா கிடையாது; விளையாட்டுக் கிடையாது. பெண்டாட்டிக்கு எப்படி இருக்கும்!

என் முதல் பெண்ணுக்கு 'ரஞ்சனி'ன்னு பேர் வெச்சேன். ரேடியோவிலே ஆடிஷனுக்குப் போய் வந்தேன். மிருதங்கத்துடன் வாசித்துப் பழக்கமே இல்லை. ''முழுசா மூணு நாலு கீர்த்தனம் வாசிக்கக் கத்துட்டு வாங்க''னு சொன்னான், அந்த அதிகாரியோ யாரோ. 'சரிதான், போய்யா'னு வந்துட்டேன். எனக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம்? ஆனால், என் வாசிப்பிலே நிச்சயம் இம்ப்ரூவ்மென்ட் இருந்தது.

பேசாம கணக்கு எழுதிண்டு இருந்தேனா இல்லையா? இந்தச் சிதம்பரம் வந்து வெறுப்பேத்திட்டுப் போய்ட்டான். சிதம்பரம் என் பழைய பள்ளிக்கூடச் சிநேகிதன். பட்டணத்திலே செயலா இருக்கான். ரொம்ப நாளைக்கப்புறம் தகப்பனாரைப் பார்க்க லீவிலே வந்தான். என்னை வந்து பார்த்தான். ''இப்ப என்ன பண்றே நீ?'' என்றான். 'பெட்ரோல் பங்க்கிலே கணக்கு எழுதறேன், கூடவே வீணை வாசிச்சிண் டிருக்கேன்'னேன். வாசிச்சுக் காட்டச் சொன்னான். ஒரு பாட்டு வாசிச்சேன்.

''என்னடா இது, இந்த மாதிரி வாசிப்பை வெச்சுண்டு பெட்ரோல் பங்க்கிலே கிளார்க்கா இருக்கியா? உன் வாசிப்பு என்ன லெவல் தெரியுமா? இப்ப முன்னணிலே இருக்கிறவாள்ளாம் (கையைக் கீழே காட்டி) இங்கே இருக்கான்னா நீ (உத்தரத்தைக் காட்டி) அங்கே இருக்கே! மெட்ராசுக்கு வாடா, ஒரு சபையிலே வாசி, போதும். காட்டுத் தீ மாதிரி பரவிடுவே. காசு, புகழ் வரும். பாவிப் பயலே, என்னமா வாசிக்கறே?'' என்றான்.

அவன் சொன்னதிலே ஒண்ணும் பொய்யோ, முகஸ்துதியோ இல்லேங் கறது தெரிஞ்சது. கிளம்பறபோது கூட அப்பாகிட்டே என்னைப் பத்தி 'ஓஹோ ஓஹோ'ன்னு சொன்னான். 'உங்க வீட்டிலே இருக்கறது ஒரு ஜீனியஸ்'னு சொன்னான். அப்பா மெட்ராஸ்லே மல்லாக்கொட்டை என்ன விலை விக்கறதுன்னு விசாரிச்சார்.

அவன் போனப்புறம், எனக்குக் கொஞ்சம் ஆசை ஏற்பட்டது. போய்த் தான் பார்க்கலாமேனு பட்டுது. பெட்ரோல் பம்புக்கும், டீஸல் பம்புக் கும், கம்ப்ரெஸ்ஸருக்கும், பேரேடு புத்தகத்துக்கும் பிரியா விடை கொடுத்துவிட்டு, சம்பளப்பாக்கியை எண்ணி வாங்கிண்டு (87 ரூபாய் சொச்சம்) வடக்கே சூலமில்லாத ஒரு நாளிலே பெண்டாட்டி குழந்தை வீணை சகிதமாகக் கிளம்பிட்டேன். சாமான் ஜாஸ்தி எடுத்துக்கொண்டு போகல்லே; ஏராளமான நம்பிக்கையைத்தான் எடுத்துண்டு போனேன்.

பழைய மாம்பலத்திலே ஒரு வீட்டிலே, ஒரு ஓரத்திலே இடம் பார்த்து வெச்சான் சிதம்பரம். சின்ன ரூம். வீணை வாசிக்கணும்னா க்ராஸா உக்கார்ந்தாத்தான் முடியும். அப்புறம் சிதம்பரம் தனக்குத் தெரிஞ்ச சபா செக்ரட்டரிகளையெல்லாம் என்னை அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்தி வெச்சான்.

எனக்குச் சான்ஸ் வந்து, நான் செய்த முதல் கச்சேரியைப் பத்திச் சொல்றேன். என் டர்ன் எப்ப வந்தது தெரியுமா? பஸ்ஸூக்கு நாழியாயிடும்னு எல்லோரும் எழுந்து போனதற்கப்புறம் லேட்டா வந்தது. கொடுத்த ஒண்ணே கால் மணி நேரத்துலே ஒரு பாட்டே பூரணமா வாசிக்கமுடியலே. மிருதங்கக்காரர் வேறு கொஞ்சம் ஸீனியர் ஆசாமி போல இருக்கு. என்னை பூச்சியா மதிச்சுத் தட்டிண்டிருந்தார்.முன் வரிசையில் யாரையோ பார்த்து அடிக்கடி சிரிச்சிண்டிருந்தார். நான் என்ன என்னவோ செய்ய இருந்தவன் எப்படி எப்படியோ காட்ட இருந்த திறமைகள் எல்லாம் அந்தச் சோம்பேறித்தனமான காலி நாற்காலி ராத்திரி யிலே கரைந்துவிட்டன. ஒரு ப்ரஸ் ஆளு வரப்போறார் வரப்போறார்னு எல்லாரும் எதிர்பார்த்திண்டிருந்தா. அவர் வேற ஏதோ பரதநாட்டியக் கச்சேரிக்குப் போயிட்டாராம். என் கச்சேரி முடிஞ்சதும் ஒரே ஒரு வய சானவர் வந்து என்னைத் தட்டிக் கொடுத்து, ''நானும் எவ்வளவோ கேட்டிருக்கேன். நீ ரொம்ப ரொம்பப் பேஷா வாசிக்கிறே. இந்த நூற்றாண் டின் மகாமேதை நீ''னு சொன்னார்.சொன்னா என்ன? பரவலா என் கச்சேரி ஏதும் சலனம் உண்டு பண்ணினாப் போல தெரியல்லே.

என்னவோ பட்டணம் பட்டணம்னு சொல்றாங்க. பிரதானம் வந்துடும், கச்சேரிக்கு 700, 800 எல்லாம் சர்வசாதாரணமா கிடைக்கும், அப்படி இப்படிங்கறாங்க. நான் ஒரு வருஷம் பூரா முயற்சி பண்ணிப் பார்த்தேன். அலையா அலைஞ்சேன். ஃப்ரீயா வாசிச்சேன். பத்து பேருக்கு வாசிச்சேன். தனியா வாசிச்சுக் காண்பிச்சேன். ஒரே ஒரு தடவை வார பத்திரிகையிலே என்னைப் பத்தி 'புது விதமான பாணிகள் எல்லாம் கையாள்றார்'னு வந்தது. ஒரு சினிமா நடிகையைப் பத்தின புது விதமான போட்டோ தகவலுக்குப் பக்கத்திலே சின்னதா ஒரு ஓரத்திலே வந்திருந்தது. என்னைப் பத்திப் போட்டிருந்தை நிறையப் பேர் படிச்சிருப்பாங்களானே சந்தேகம். என் வாசிப்பைக் கேட்ட எல்லாருமே, ''புதுவிதமாத்தான் வாசிக்கிறார். புரியாத ராகங்களிலே தைரியமா விளையாடறார். இருபத்து நாலு வயசுக்கு அற்புதமான வாசிப்பு''ன்னு ஒரு மனதாத்தான் சொல்றா. எல்லோருக்கும் என் திறமையோட ஆச்சர்யம் தெரியறது. என் வித்வத்தைப் பற்றி ஒருத்தருக்கும் சந்தேகமில்லை. முன்னுக்கு வரவேண்டியவர்னு சாமர்த்தி யமா பேறாங்க. ஆனா, எப்படி முன்னுக்கு வரது? எவ்வளவு நாள் பெண்டாட்டியோட தங்க நகைகள் தாங்கும்? வேறு என்ன வழி இருக்கு சொல்லுங்களேன்! என் கலையைப் பற்றிச் சந்தேகமிருந்தா வீட்டுக்கு வாங்க. 34-ஏ, கவரை ஸ்ட்ரீட், புள்ளையார் கோயிலுக்குப் பக்கத்திலே...வாசிச்சுக் காட்டறேன். கேளுங்க.

எங்கே ஸார் தப்பு? திரும்பிப் போயிடட்டுமா?

இவ்வளவு விஸ்தாரமா எழுதறனே, கடைசியிலே உங்க கிட்ட கைமாத்தா அஞ்சு பத்து கேக்கப் போறேன்னு நினைச்சுக்காதீங்க. இல்லை, ஸார். பகவான் என்னை அவ்வளவு தூரம் கொண்டு போகலே. கடைசியிலே வழி காட்டிட்டான். என் பணக் கஷ்டம் தீர்ந்துபோச்சு, என் வீணையாலே! எப்படின்னு சொல்றேன்.

நான் குடியிருக்கிற வீட்டு மாடி யிலே ஒரு 30, 32 வயசுக்காரக் கிறிஸ்தவர் இருக்கார். பேர் பெர்னாண்டஸ். பாச்சலர். ரொம்ப நல்ல மாதிரி. அவர் ஒரு நாள் வந்து, ''சார், நீங்கதான் தினம் தினம் வாத்தியம் வாசிக்கிறீங்களா?'' என்று கேட்டார். ''ஆமாம்''னேன். ''என்ன வாத்தியம், சித்தாரா?'' என்றார். ''இல்லை, வீணை''ன்னு சொன்னேன். ''சித்தார் மாதிரியே வாசிக்கிறீங்களே! ரொம்ப வேகமா இனிமையா இருக்குது ஸார்'' என்றார். ''தாங்க்ஸ்'' என்றேன். ''சித்தார் வாசிப்பீங்களா''னு கேட்டார். ''அதுவும் கம்பி வாத்தியமா?''ன்னேன். ''ஆமாம். மாடிக்கு வாங்க. என் கிட்டே ஒரு சித்தார் இருக்குது''ன்னு கூட்டிண்டு போனார். அந்த ஆறு கம்பி வாத்தியம் வீணையை விடச் சின்னதாக இருந்தது. கம்பி அமைப்பு தலைகீழா இருந்தது. கீழ்க் கம்பி சின்னதா இருந்தது. கீழ்க் கம்பி முன்னாலேயும், மேல் கம்பி கடைசிலேயும்! வாசிச்சு வாசிச்சுப் பார்த்தேன். அரை மணியிலே அந்த வாத்தியத்தை அலட்சியமா வாசிக்க ஆரம்பிச்சேன். அவர் ஆச்சர்யப்பட் டார். ''இன்னிக்குதான் முதல்லே வாசிக்கிறீங்களா, இதை?'' என்று கேட்டார். 'ஆமாம்'னேன்.

''உங்களுக்கு மேற்கத்திய சங்கீதம் பிடிக்குமா?''

''ஜாஸ்தி கேட்டதில்லை..''

''ஸார், நீங்க எதிலே வேலை செய்யறீங்க?'' என்று கேட்டார்.

''எனக்கு வேலையே கிடையாது'' என்றேன்.

''அப்ப, உடனே என்னோட வாங்க''ன்னார். கூடப் போனேன்.

தி.நகர்லே ஒரு வீட்டு மாடியிலே கீத்துக் கொட்டாய் போட்டிருந்தது. அதிலே பத்துப் பதினைஞ்சு பேர் உட்கார்ந்திருந்தாங்க. பெர்னாண்டஸ் அந்தக் க்ரூப்புக்கு என்னை அறிமுகப்படுத்தினார். ''வாத்தியார்கிட்ட விஷயம் இருக்கு. வீணையில் பூந்து விளையாடறாரு''ன்னார்.

அந்த இடத்திலே விதவிதமான வாத்யங்கள்ளாம் இருந்தது. எல்லாம் மேற்கத்திய வாத்தியம். அந்த வாத்தியங்களோட பேரேல்லாம் எனக்குப் பிற்பாடு அத்துப்படி ஆயிடுத்து. டபிள் பேஸ், எலெக்ட்ரிக் வேலையா மூணு சித்தார், ஸாக்ஸ் (காலுக்குப் போட்டுக்கறது இல்லை. ஸாக்ஸபோன். இதிலே டெனர், ஆல்டோன்னு ரெண்டு ஜாதி) ட்ரம்பெட், லாட்டின் தாள வாத்தியங்கள், அக்கார்டியன், அப்புறம் நம்ம தேசத்து சிதார், ஸரோட், தப்லானு ஒரே கதம்பம்.

அந்தக் கோஷ்டி ஃபிலிம்லே பின்னணி வாசிக்கிறாங்களாம். சில பார்ட்டிகள்லேயும் வாசிக்கிறாங்களாம். அட்வர்டைஸ்மென்ட் வேலைகள் வேற செய்யறாங்களாம். அவங்களுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டதாம். என்னைக் கேட்டாங்க. 'ஈக்வலா மாச வரும்படியை பேர் பண்ணிப்போம். 150, 200க்கு மாசம் தரோம்' னாங்க. சம்மதிச்சேன்.

சமீபத்தில் நான் ஒரு ஸோலோ ரிக்கார்ட் கூடக் கொடுத்திருக்கேன், ஸார்! வீணையில்தான். நீங்க கூட ரேடியோவிலே கேட்டிருப்பீங்களே...அதிலே முதல்லே டங் டங் டங் டங் டங்னு கீழ்த் தந்தியைத் தட்டறேன். அது முடிஞ்சதும், அந்த ஆள் ''மணி ஐந்தாகிவிட்டதே! என் தலைவலி இன்னும் தீரவில்லையே'' என்கிறான்.உடனே அந்தப் பெண், ''கவலைப்படாதீர்கள். ஒரு வில்லை --- மாத்திரை சாப்பிடுங்கள்'' என்கிறாள். நான் உடனே படபடவென்று சந்தோஷமாக கமாஸ் வாசிக்கிறேன். அவர்கள் இருவரும் சேர்ந்து ''எப்பொழுதும் உங்கள் வீட்டில் ஒரு புட்டி --- மாத்திரைகளை வைத்திருங்கள்'' என்கிறார்கள். அரை நிமிஷம் கூட இல்லை ஸார், அதற்கு ஐந்து ரூபாய் கொடுத்தான். யார் ஸார் சொன்னது, கலை சோறு போடாதுன்னு?

 [ நன்றி: விகடன் ]

பி.கு:

சுஜாதாவின் இசைசார்ந்த சிறுகதைகள் எவை? தலைப்பு, பத்திரிகை, வருடம், ஓவியர் ..என்ற பட்டியல் யாரேனும் தரமுடியுமா?



தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா

செவ்வாய், 3 மே, 2016

சுஜாதா - 1

பாமரருக்கும் படித்தவருக்கும் கணிப்பொறி : நூல் 
இராதாகிருஷ்ணன், சுஜாதா 

மே 3. சுஜாதாவின் பிறந்த தினம்.

முதலில் விக்கியின்  சுஜாதா  கட்டுரையின் நூல்கள்  பட்டியலில் தேடினேன்.  கிட்டவில்லை.

கூகுள் ஆண்டவனிடம் முறையிட்டேன். ஒரு நூற்குறிப்பு  கிட்டியது.

கொஞ்சம் மகிழ்ச்சி.



ஆனால்  என் நண்பர்  கணிப்பொறியியல் பேராசிரியர் அமரர் தி.இராதாகிருஷ்ணன் சுஜாதாவுடன் எழுதிய ஒரு நூல் பற்றிய மற்ற விவரம்  எதுவும் சிக்கவில்லை. அதனால், அவரைப் பற்றியும், அந்த நூலைப் பற்றியும் எழுதவேண்டும் என்ற முடிவின் விளைவே இந்தப் பதிவு!

தமிழார்வம் மிக்கவர் இராதாகிருஷ்ணன். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் எனக்கு மூன்று ஆண்டுகள் ஜூனியர்; பிறகு கான்பூர் ஐ.ஐ.டியில் முனைவர் படிப்பு.  கனடாவில் மாண்ட்ரியாலில் உள்ள கன்கார்டியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய்த் திகழ்ந்தவர்.
( அவரைப் பற்றிய ஒரு பதிவை இங்கே படிக்கலாம்.)

 குமுதம் வாரப் பதிப்பில் வந்த அவருடைய கட்டுரைகளைச் சுஜாதா அவர்களின் துணையுடன் சீர்செய்து இந்தப் புத்தகத்தை 1996-இல் அவர் வெளியிட்டார்.

இனி அவரே  நூலின் சில பக்கங்கள் மூலம் பேசட்டும்!












[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

திருப்புகழ் பற்றிச் சுஜாதா

சுஜாதா

[ நன்றி: ரேகா இராதாகிருஷ்ணன் ] 

சனி, 27 பிப்ரவரி, 2016

திருப்புகழ் -10

திருப்புகழ் ; ஒரு எழுத்தாளர் பார்வையில் 

சுஜாதா 

பிப்ரவரி 27. சுஜாதா அவர்களின் நினைவுதினம்.

[ நன்றி: விகடன் ] 

அவர் நினைவில், அவருடைய பல விசிறிகளும் படித்திருக்க மாட்டாத, அவருடைய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன் !

இது “ திருப்புகழ் கருவூலம்” என்ற மலரில் 88-இல் வெளியானது. “திருப்புகழ் அன்பர்கள்” ( கருநாடக மாநிலம்) வெளியிட்ட மலர்.
===



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:
சுஜாதா
திருப்புகழ்