பாக்கியம் ராமசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாக்கியம் ராமசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 டிசம்பர், 2022

2350. பாக்கியம் ராமசாமி - 4

அப்புசாமியும் ஸ்வீட் ஸிக்ஸ்டீனும் !

பாக்கியம் ராமசாமி 


டிசம்பர் 7. ஜ.ரா.சுந்தரேசன் ( பாக்கியம் ராமசாமி) -இன் நினைவு தினம்.  .


 கல்கியில் அவர் எழுதிய ஒரு கதை.





[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
பாக்கியம் ராமசாமி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

1426. பாக்கியம் ராமசாமி - 3

ழகரக் கொலை
ஜ.ரா. சுந்தரேசன்






சினிமா ஸெட் கெட்டது - முதலிரவு அறை அட்டகாசமாக மலர்களாலும் பட்டு ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கட்டிலில் நுரை மெத்தையும் குஷன் திண்டுகளும் காத்திருந்தன.

'ஒராள் ஒராள்' என்று கட்டிலுக்கு வாய் இருந்தால் குதிரை வண்டிக்காரன் மாதிரி கூவி இருக்கும். ஏனென்றால் கட்டிலில் ஒருத்தர்தான் - 'ழ' பித்தன்' என்ற பெயர் கொண்ட கீழைப் பெருமழை எழிலெழு கிழவோன் - மட்டும்தான் அமர்ந்திருந்தான்.

இன்னும் ஒருத்தருக்காக கட்டில் காத்திருந்தது. அந்த ஒருத்தர் மல்லிகா.
அவன் தேர்ந்தெடுத்த அழகு தேவதை அவள். முத்து பவளத்தில் ஒளிந்திருக்கும் நீரோட்டம் போல அவள் மேனியில் எழில் ஓட்டம். இளமைக்குத் தக்க உயரம், உடற்கட்டு, அணிகள்.

யார் பார்த்திருக்கிறார்கள் ரம்பையையும், ஊர்வசியையும்.
இவள் மாதிரி அவர்கள் இருக்கக்கூடும்.

வெகு நேரம் நின்று கொண்டே இருந்தவள் வாய் திறந்தாள். "பளம் சாப்பிடுறீங்களா."

திடுக்கிட்டான். "பளம்மா?"

"இல்லை. பளம். ஒரு ஆப்பிள் பளம் நறுக்கட்டுங்களா?"

அவன் முதலில் ஏதோ ஒரு பள்ளியில் தமிழாசிரியராக இருந்தபோது அவனுக்கு 'ழ வாத்தியார்', 'ஊதுவத்தி வாத்தியார்' என்ற பெயர்கள் உண்டு. இது மல்லிகாவுக்கு தெரியுமோ தெரியாதோ.

பள்ளி ஆசிரியருக்கு மாணவர்கள் சூட்டும் கேலிப் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்குமா என்ன.

அவள் மறுபடியும் கேட்டாள். "எந்தப் பளம்?"

"பழம் இருக்கட்டும். இன்னிக்கு என்ன கிழமை?"

"வியாளக் கிளமைங்க."

"வியாழக் கிழமை! ரொம்ப சரி. போன வியாழன்தானே பிள்ளையார் சதுர்த்தி?"

"ஆமாங்க."

"உனக்குக் கொழுக்கட்டை பிடிக்குமா."

"கொளுக்கட்டைங்களா? பிடிக்கும்."

"என்னென்ன வகை இருக்கு கொழுக்கட்டையிலே?"

''எள்ளுக் கொளுக்கட்டை, உளுந்து கொளுக்கட்டை, வெல்லக் கொளுக்கட்டை."

"கழுகுகளுக்கு கொழுக்கட்டை பிடிக்குமா?"

ஒருத்தருடைய நடத்தையையும் பழக்கவழக்கத்தையும் உறவையும் துவங்குமுன் அவர்களை சோதனை செய்வான். நகர சோதனை மாதிரி 'ழ'கர சோதனை. சாதாரணமானவர்களிடமே சோதனை நடத்துபவன் மனைவியாகிவிட்டவளிடம் நடத்தமாட்டானா?

மனையாளுக்கு ழகரம் எவ்வளவு தூரம் வருகிறது என்பதை அவனுடைய கெட்டிக்காரத்தனம் சோதிக்கத் துவங்கியது.

"கேட்டேனே, கழுகுகளுக்கு கொழுக்கட்டை பிடிக்குமா?" மறுபடியும் கேட்டான்.

"களுகுங்களுக்கா? வந்து... வந்து தெரியலீங்க. நான் களுகுங்களுக்கு கொளுக்கட்டை போட்டுப் பார்த்ததில்லே."

"கிழவி கிழவனுங்களுக்குக் கொழுக்கட்டை சாப்பிட ரொம்பப் பிடிக்குமில்லையா?"

"கிளவன் கிளவிங்கள்னு எங்க வீட்டிலே யாருமில்லே. தாத்தா பாட்டியெல்லாம் கிராமத்திலே இருக்காங்க."

"ரொம்ப நேரமா நிற்கிறாயே உட்காரு. நான் நேரம் கழித்து வந்ததிலே உனக்கு வருத்தமா?"

"நீங்க நேரம் களிச்சி வரலீங்களே. சரியாகத்தானே வந்தீங்க."

"வீட்டையெல்லாம் ஒழிச்சு வைப்பியா? அது பிடிக்குமா உனக்கு?"

"நல்லா ஒளிச்சி வைப்பேனுங்க."

"நீ ஒளிச்சி வெச்சிட்டால் நான் எப்படிக் கண்டுபிடிக்கிறது?"

"ஒளிச்சி இல்லீங்க. ஒளிச்சி.."

"அதாவது ஒழிச்சி?"

"ஆமாங்க ஒளிச்சி.."

பல்லைக் கடித்துக் கொண்டான்.

முதலிரவு அறை அவனைப் புழுங்கச் செய்தது. மல்லிகா பாஷையில் புளுங்கச் செய்தது.

'ழ'கரதம் வராத பையனின் நாக்கில் அவன் ஊதுவத்தியால் சுட்டுப் பெரிய கலவரமே கீழைப் பெருமழையில் ஏற்பட்டு, விசாரணை, ஸஸ்பென்ட் அது இது என்று அமர்க்களமாகி கல்வி உயர் அதிகாரி கணேசனார் மட்டும் அவனை ஆதரிக்காமலிருந்திருந்தால் அவன் வேலையும் போய், சிறைத் தண்டனையும் அடைந்திருப்பான்.

"உனக்கு 'ழ'வைத் தவறாக உச்சரித்தால் அவ்வளவு கோபம் வருமா? உன்னைப் பாராட்டுகிறேன்" என்று மேலதிகாரி கணேசனார் அவனைச் சிக்கலிலிருந்து விடுவித்து அவனை மேலே மேலே உயர்த்தினார்.

அதெல்லாம் ஞாபகம் வந்தது. சிந்தனை இறுக்கமாயிற்று.

வாழ்க்கை பூராவும் 'ழ' சப்தத்தை விகாரப்படுத்துகிறவளுடனேயே கழிக்க முடியுமா?

வாழ்க்கையை மல்லிகா வாள்க்கை என்றுதான் சொல்லுவாள். கழிக்க என்பது களிக்க. வாழைப்பழங்கள் வாளைப்பளங்களாகத்தான் ஆயுளுக்கும் இருக்கும்.

அவளுடைய பளக்கம் ஐயோ இப்போதே பழக்கம். பளக்கமாகிவிட்டதே.
அவளைக் கழித்துக் கட்டுவதே புத்திசாலித்தனம். என்ன கலவரம் வந்தாலும் நஷ்டம் ஏற்பட்டாலும் குத்து வெட்டு அடி உதை விழுந்தாலும் விழுந்தது விழுந்ததாக இருக்க வேண்டும். அது ஒரு நாளும் விளுந்ததாக ஆகக் கூடாது. அதுவும் தன் வீட்டுக்குள்ளேயே 'ழ' கொலை நிகழ்வதை அவனால் சகிக்க முடியாது.

கலவரமில்லாமல் சாமர்த்தியமாகக் கழற்றிக் கொள்ள வேண்டும்.
ஓரிரு மாதம் சகித்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு ஏதாவது பிரச்னை கிளப்பி விவாகரத்து.

'ழ'வைக் கெடுப்பவர்களுக்கு மன்னிப்பே தரக்கூடாது.

"பால் வெச்சு ரொம்ப நாளி ஆவுதுங்க."

"ரொம்ப நாளி ஆவுதா? ஆகட்டும் ஆகட்டும், பழியை உன்மீது போட்டுவிட மாட்டேன். பயப்படாதே. நான் எந்த ஊர்க்காரன் தெரியுமா?"

"தெரியும்."

"சொல்லு பார்க்கலாம்."

"கீளைப் பெருமளை."

அவன் நெஞ்சிலே கொள்ளியை செருகினாற்போலிருந்தது. அவன் ஊரின் தலையிலும் மேற்படி கொள்ளியையே வைத்ததுபோல் உணர்ந்தான். எழிலெழு கிழவோன் என்ற தன் பெயரை அவளால் சத்தியமாக ஆயுளில் சொல்ல முடியாது. எளிளெளு கிளவோன் என்று அவள் கொலை செய்யாதிருக்க அவள் வாயில் நுழைகிற மாதிரி சின்னதாக 'ழ' வராத பெயராக ஒன்றை அவன் சீக்கிரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அவனுடைய மனைவி அழகாக இருந்தால் மட்டும் போதாது. 'ழ' உச்சரிக்கத் தெரியாதவளோடு அவனால் அமைதியாக தாம்பத்தியம் நடத்த முடியாது, முடியாது, முடியாது.

பாலைத் தந்தாள்.

"தமிழே! நீ வாழ்க! நீடுழி நீ வாழ வேண்டும்!" என்று கூறியவாறு அதை வாங்கி வெறுப்புடன் குடித்தான்.

விரல்களும் கையும் மெய்யும் அழகாக எழில் ஓவியமாகத்தான் இருக்கிறாள்.
ஆனால் 'ழ'?

இத்தனை அழகியிடம் வெறுப்புக் கொள்ளலாகாது.

அவள் தமிழே பேசாவிட்டால் அவனுக்கு வெறுப்பு வராது.

அவளிடம் கேட்டான். "உன்கிட்டே ஒரு வேண்டுகோள். தப்பாக எண்ணாதே."

"சொல்லுங்க."

"நீ தமிழே பேச வேண்டாம். ஓரளவு ஆங்கிலம் தெரியுமல்லவா? எனக்கும் ஓரளவு புரியும். ஆங்கிலத்திலேயே நீ பேசு. கஷ்டப்படுவாயோ."

"ஒரு கஷ்டமுமில்லை. இங்கிலீஷில் சரளமாகப் பேசுவேன்."

"சந்தோஷம். வேறு என்ன மொழி தெரியும்?"

"இந்தி பேசுவேன். ராஜபாளையத்திலிருந்தபோது அங்கு சமஸ்கிருதம் கற்றேன். வடமொளியில் நன்றாகப் பேசுவேன். திராவிட மொளிகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் பேச, எளுத வரும்.

"பெங்காளி படிப்பேன். எளுதுவேன் - தாகூரை ஒரிஜினலாக ரசிக்க பெங்காலி கற்றேன். டிப்ளமோ ஹோல்டர்.

"மொளிகள் கற்பதுதான் என் பொளுது போக்கு.''

அவனுக்குத் தலை சுற்றியது. தமிழும், ஓரளவு ஆங்கிலம் மட்டுமேதான் அவனுக்குத் தெரியும். அவளோ சகல பாஷா பண்டிதையாக... சும்மா அளக்கிறாளா?

"எங்கே, ஒரு வாக்கியம் சொல்லுகிறேன். நீ அதை உனக்குத் தெரிந்த எல்லா மொழியிலும் எழுதிக் காட்டு பார்ப்போம்."

அவள் பேனாவை எடுத்தாள். பேப்பரை எடுத்தாள். "சொல்லுங்க."

சொன்னான். "இனிய ஆச்சரியத்தை என் கணவன் வெளிப்படுத்தினார்."
இதையே இந்தி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி, பிரெஞ்ச், ஜப்பான் - உனக்குத் தெரிந்த எல்லா மொழியிலும் எழுது பார்ப்போம்.

"நேபாளிளீஸ்கூட வரும்."

எல்லாவற்றையும் இரண்டு நிமிஷத்தில் எழுதி அவனிடம் ஒப்படைத்தாள்.
அவனுக்கு படிக்கத் தெரிந்தால்தானே.

அவளது வித்தையின் முன் மானசீகமாகச் சுருண்டு விழுந்தான்.
"எப்படி இத்தனை மொழி இந்தச் சின்ன வயசில்?" அவளை மிருதுவாக அணைத்துக் கொண்டான்.

"மொளிகள் கற்பதுதான் என் பொளுது போக்கு!"

இப்போது 'ழ'கரம் ளகரமாகக் கொலை செய்யப்பட்டாலும் அவனுக்கு ஏனோ ரத்தம் கொதிக்கவில்லை. ஏனோ என்ன ஏனோ?

மரியாதை தந்து தலை வணங்கினான்.

இவ்வளவு மொழி கற்ற இந்த சரஸ்வதி தேவியால் 'ழ'வை உச்சரிக்கக் கற்றுக்கொள்ள முடியாதா என்ன?

பன்மொழிப் புலவரான மனைவிக்கு அந்த விதத்தில் தான் ஆசானாகப் போவதில் அவனுக்குப் பெருமையே இப்போது ஏற்பட்டது.

"நான்தான் - இந்தக் கீழப் பெருமழை எழிலெழு கிழவோன்தான் உனக்கு இனிமேல் ஆசிரியர்?" என்று அவள் காது மடலில் கிசுகிசுத்தான்.

குறும்பாக ஏதோ சொல்கிறான் என்று நினைத்து நிதானத்துடன் அவள் புன்னகைத்தாள்.

[ நன்றி: - தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்:
பாக்கியம் ராமசாமி

வியாழன், 28 பிப்ரவரி, 2019

1239. சுஜாதா- 4

சுஜாதா - குமுதம் - நான்
( நண்பருக்கு நினைவாஞ்சலி )
பாக்கியம் ராமசாமி 

 
ஜ.ரா.சு. அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் செப்டெம்பர் 13, 2017 -இல் எழுதிய ஒரு கட்டுரை.

டியர் சுஜாதா,
தாங்கள் புறப்பட்டுப் போய் ஒன்பது வருடமாகிறது. இலக்கியத்தில் நீங்கள் வசித்த பகுதிக்கு இன்னும் யாரும் குடித்தனம் வரவில்லை.
எனது ஏக்கத்தின் பிரதிபலிப்பாக இந்த அஞ்சலி.
அய்யா சுஜாதா, உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை. சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.
பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.
ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.
திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.
அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.
ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.
அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.
அவர் குமுதத்தில் எழுதிய ‘ சிவப்பு கறுப்பு வெளுப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.
‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.
ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.
‘சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.
எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பையும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.
மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.
உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.
தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.
நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.
அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.
நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.
குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.
குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.
சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.
ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.
இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..
- பாக்கியம் ராமசாமி
( நன்றி: குமுதம் 12.3.2008 )

======
1. சுஜாதாவின் அந்தத் தொடரின் (1980) முதல் இரண்டு பக்கங்கள்:






[ படங்கள்: நன்றி: கணேஷ் பாலா ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா


பாக்கியம் ராமசாமி

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

1138. பாக்கியம் ராமசாமி - 2

அலங்காநல்லூர் அப்புசாமி
பாக்கியம் ராமசாமி





"கொம்பைச் சீவறானா? எதுக்குடா, ரசம்?" பதறினார் அப்புசாமி.
ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந்தேகம் கேட்டான்.

"ஏன் தாத்தா, 'வீர'வுக்கு 'ற' வா? 'ர' வா?"

இலக்கணப் பிழை பற்றிக் கவலைப்படும் நிலையில் அப்போது அப்புசாமி இல்லை. இலக்கணம் பிழைக்கிறதோ இல்லையோ, தாம் உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்.

"கொம்பை ஏண்டா சீவறான்? அதைச் சொல் முதலில்."

ரசகுண்டு கையிலிருந்த பெயிண்ட்டிங் பிரஷ்ஷைத் தூக்கி எறிந்துவிட்டுக் கோபத்துடன் அவரருகே வந்தான். "வேலை செய்ய விடமாட்டீங்களே. உயிரோடிருக்கிற மாட்டுக் கொம்பை ஒருத்தன் எதற்குச் சீவுவான்? சீப்பு செய்யறதுக்காகவா சீவுவான்? மாட்டைப் பிடிக்கிற உங்கள் குடலைக் குத்தி உருவறதுக்குத்தான் சீவறான்."

அப்புசாமிக்கு அப்போதே உருவு மயக்கமாகி விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "ஏண்டா ரசம். போட்டியிலிருந்து வாபஸ் வாங்க ஏதாவது வழியில்லையாடா? கொஞ்சம் யோசனை பண்ணுடா." என்று கெஞ்சினார்.

"வாபஸா?" அதிர்ச்சியடைந்தான் ரசகுண்டு. "விடிந்தால் வீரப் போட்டி. இனிமேல் 'செய் அல்லது செத்து மடி'தான் தாத்தா. நீங்க மாட்டைப் பிடித்துத்தான் ஆகணும். நான் தட்டியெல்லாம் எழுதியாச்சு. நீங்கதான் கரிமாட்டுக் கருவாயன்!"

அப்புசாமி அவசரமாகவும் ரோஷமாகவும் வாயைத் துடைத்துக் கொண்டார். "நான் ஏண்டா கரிமேட்டுக் கருவாயன்?"

"கரிமேட்டு இல்லே தாத்தா. கரிமாட்டுக் கருவாயன். கறுப்பான மாட்டைப் பிடிக்கப் போறீங்களில்லையா? அதுக்காக வீரப் பட்டம்!"

தான் எழுதிய விளம்பரத் தட்டியை அப்புசாமியின் முன் காட்டினான்.
'சென்னையில் ஓர் அலங்காநல்லூர்!'


'வீர விளையாட்டு!'
'கரிமாட்டுக் கருவாயன்!'
'வீரர் அப்புசாமி விடும் சவால்!!'
'நமது பேட்டையின் திமிர் பிடித்த காளையின் கொட்டத்தை அடக்கப் போகிறார்!'
'இன்றே கண்டுகளியுங்கள்!'
அப்புசாமிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. "ஆமாண்டா, ரசம். இன்றே கண்டு களிக்கட்டும்! நாளைக்குன்னா செத்துப் போயிடுவேனில்லையா?"

தெருவில் பயங்கரமானதொரு செருமல் சத்தம் கேட்டது.
அப்புசாமி கலவரத்துடன், "என்னடா ரசம் சத்தம்?" என்றார். "போபால் காஸா?"
"போபால் காஸுமில்லை, நேப்பால் காஸுமில்லை. பொட்டுவோட பொலி காளைதான் செருமுது!" என்று வாசலுக்கு ஓடி, எட்டிப் பார்த்துவிட்டு வந்தான்.
"பொட்டுவோட பொலி காளையேதான். காலைக் காலை மண்ணில் அடிச்சுக்கிட்டுச் செருமுது! நீங்களும் ஒரு எதிர்ச் செருமல் கொடுங்க, தாத்தா! அப்பத்தான் அதுக்கு ஒரு பயம் இருக்கும்."

அப்புசாமியின் கலவரக் கண்கள் மேலும் சிலோன் ஆயின.
ரசகுண்டு அவரருகே வந்து, அவரது ஜிப்பாவுக்குள் கை விட்டு, அவர் மார்பைச் சந்தனம் தடவுவது போல நீவி விட்டான்.
"என்ன தாத்தா, டீசல் ஜெனரேட்டராட்டமா மார்பு டங்கணக்கான் டங்கணக்கான்னு அடிச்சுக்குது. நாளைக்குப் பொலி காளையோடு மோதி, எப்படித்தான் அதை மண்டியிட வைக்கப் போறீங்களோ? பாட்டி வேறு உங்களைப் பெரிசா நம்பிக்கிட்டிருக்காள். இந்தத் தெருவைப் பிடித்த பீடையை நீங்கள் விரட்டி அடித்துவிடப் போறீர்களாம்."
பெருமூச்சு விட்டார் அப்புசாமி. "அவள் நினைப்பாள்டா; நல்லா நினைப்பாள். நான் அல்லவா நாளைக்குச் சாகணும்!"

......சீதாப்பாட்டியின் தெருவில் பால்காரப் பொட்டு என்னும் புள்ளி இருந்து வந்தான். எல்லாக் கட்சிக் கொடிகளும் அவனுடைய மாட்டுக் கொட்டகையில் ஸீஸனுக்குத் தகுந்தபடி பறக்கும். காலைச் சாய்த்துச் சாய்த்து நடப்பான். அரசியலிலும் நல்ல சாய்கால் உள்ளவன்.
ஆகவே, அவன் வம்புக்கு யாரும் போவதில்லை. பால் வியாபாரத்தைத் தவிர, பொலி காளை விவகாரம் வைத்துக் கொண்டிருந்தான்.
பட்டப் பகலில் அந்தப் பொலி காளை செய்யும் கற்பழிப்பும் - அனுமதி பெற்ற கற்பழிப்பு - உடந்தையாக வில்லன்கள் கும்பல் போல் ஏழெட்டுச் சங்கிலி முருகன்கள், அந்தக் கற்பழிப்புக்குப் பலியாகும் பசு ஓடி விடாமல் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொள்ள, பசு பலாத்காரத்துக்கு உள்ளாகும்.
சில பசுக்கள்சில வேளைகளில் நாலு கால் பிராணியா, எட்டுக் கால் பிராணியா என்று குழப்புகிற அளவு கீழே தரையோடு தரையாகச் சட்னி மாதிரி பொலி காளையால் அழுத்தப்பட்ட பதிப்பாகி, எலும்பு முறிந்து குற்றுயிரும் குலையுயிருமாய் - புத்தூர் போய்க் காலைக் கட்டிக்கொண்டு வருவதும் உண்டு.


இந்த அசிங்கங்கள் தெருவில் வேண்டாமென்று சீதாப்பாட்டி பலதரம் பால்காரப் பொட்டுவைக் கூப்பிட்டு எச்சரித்துப் பார்த்தாள்.
அவன் அவளை மதிக்கிறவனாக இல்லை. நீலக் காட்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

அப்புறந்தான் அலங்காநல்லுர் விவகாரத்தில் அப்புசாமி மாட்டிக் கொண்டார்.

அப்புசாமியின் போதாத காலந்தான், அவர் அலங்காநல்லூர் போய்ச் சல்லிக்கட்டு பார்க்க ஆசைப்பட்டது.

"எவனெவனோ வெள்ளைக்காரன் எல்லாம் வந்து வேடிக்கை பார்க்கிறான். வீர விளையாட்டு வீர விளையாட்டுன்னு..."

”அலங்காநல்லூர் போகணுமா அலங்காநல்லூர்! நம்ம தெருவிலே நடக்கிறதே ஒரு நாஸ்ட்டி மெனஸ்! அப்ஸீனிடி டு த கோர். அந்தப் பால்காரப் பொட்டுவை ஓர் அதட்டல் போட்டு அவனுடைய ஸ்டட் புல்லை வேறு எங்காவது கொண்டு போகச் சொல்ல தில்
இல்லாதவருக்கு, அலங்காநல்லூர் என்ன கேடு?" என்றாள் சீதாப்பாட்டி சுடச்சுட.

அப்புசாமி அதே சுடச்சுட, "பொட்டு என்ன பொட்டு. அவனைப் பொளந்து வெச்சுடுவேன். காளை இன்னாம்மே காளை? இந்தப் பொலி காளையென்ன, இதனுடைய பாட்டன், முப்பாட்டன் காளையையெல்லாம் கீழே போட்டுப் பட்டுனு ஒரே மிறி மிறிச்சுக் காட்டறேன் பார்க்கறியா?" என்று கிரிகிரி காட்டினார்.

அவரது போதாத காலம், தெருப்பக்கம் அந்தச் சமயம் பார்த்துப் பால்காரப் பொட்டு போய்க் கொண்டிருந்தான். அவன் காதில் "பொலி காளை, பொட்டு" என்று விழுந்தவுடன் ஓசைப்படாமல் உள்ளே வந்து, அப்புசாமியும், சீதாப்பாட்டியும் பேசியது முழுவதையும் எந்தவித நவீன 'பக்கிங்' கருவிகளும் இல்லாமல், நேர் காது மூலமாகவே கேட்டுக் கொண்டுவிட்டான்.

"நீ ஆம்புளைன்னா, நம்ம பொலி காளை மேலே கையை வைச்சிப் பார்ரா!" என்று ஏக வசனத்தில் பேச, அப்புசாமி மனைவியின் முன்னிலையில் தம் மானம் போவதா என்று ஓர் அவசர புத்தியில், "பந்தயமடா! மைதானத்திலேயே வேணுமின்னா ஏற்பாடு செய்! உன் பொலி காளையைப் பிடிச்சுக் காட்டறேன்" என்று கூவினார்.
இதற்குள் தெருவில் அக்கம் பக்கத்தினர் வேறு கூடி, அப்புசாமியின் தைரியத்தைப் பாராட்டி, ஊக்கம் கொடுத்து அவரைப் பலிகடாவாக்கி விட்டார்கள்.

போட்டி தினம். சூரியன் வழக்கம் போலச் சரியாகக் கிழக்கே உதித்துவிட்டுத் தப்பான பிளாட்பாரத்துக்கு வந்துவிட்ட ரயில் மாதிரி திருதிருவென்று விழித்தது. நாம் ஒரு கால், லேட்டாக உதித்துத் தொலைத்து விட்டோமா? மாமூலாக நான் உதிக்கும் போது அப்புசாமி, கட்டிலில் துப்பட்டிக்குள் அல்லவா இருப்பார்? இன்றைக்குக் குளித்து ஈரம் சொட்டச் சொட்டக் கண்ணை மூடி ஏதோ சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாரே! வாய் என்னவோ முணுமுணுக்கிறதே!
சீதாப்பாட்டி நெற்றிக் குங்குமத்தை அழுத்தமாக வைத்துக்கொண்டு வெளியே வந்தாள். முணுமுணுத்துக் கொண்டிருந்த அப்புசாமியின் அருகில் ஓசைப்படாமல் வந்தாள். 'ஸ்பெஷலாக ஏதோ மந்த்ராஸ் சாண்ட் செய்கிறார் போலிருக்கிறது' என்று அவர் அருகே மதிப்புடன் நெருங்கினாள்.

அப்புசாமியின் உதடுகள் "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு... ஆறிலும் சாவு, நூறிலும் சாவு...." என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
ரசகுண்டு, "பெப்பர பெப்பர பெப்!" என்று பெரிய ஊதலை ஊதிக்கொண்டு வந்து சேர்ந்தான். "தாத்தா! இப்பவே சொல்லிட்டேன். அப்பப்போ கைக்கு மண்ணு தடவிக்கணும். பார்த்தீங்களா, இந்தச் சின்னச் சிமிழைக் கையிலே வெச்சுக்கங்க. இதிலேதான் நீங்க ஜெயிக்கிற ரகசியமே இருக்கு!"
அப்புசாமி ஆவலுடன் கண்ணைத் திறந்தார். "ஏண்டா ரசம்! ஏதாவது வசிய மையா? பொலிகாளை தானாக வந்து என் முன்னாலே மண்டியிட்டுடுமா?"
"தாத்தா! இந்தச் சிமிழ்லே இருக்கிறது மந்திரக் களிம்பு இல்லை. ரோஜனம் தெரியுமா, ரோஜனம். அந்தப் பொடி. கைக்குத் தடவிக்கிட்டா நல்லா கிரிப் இருக்கும். குரங்குப்பிடி மாதிரி கப்புனு கொம்பைப் பிடிக்கிறீங்க. மளுக்! ஒரே திருப்பு. லெப்டுலேயோ, ரைட்டுலேயோ, லாரிக்காரன் ஸ்டியரிங்கை ஒடிக்கிற மாதிரி ஒரே ஒடி! மளுக்! மாடு காலி!"

அப்புசாமி ரோஜித்தவாறே ரோஜனத்தை வாங்கிக் கொண்டார். "அடியே சீதே! நான் மாட்டைப் பிடிச்சுத்தான் ஆகணுமா? நீ கற்புள்ள பொம்மனாட்டி தானே? ஏதாவது அவ்வையார் மாதிரி ஒரு பாட்டுப் பாடி மழை, புயல், குளிர் வரவழைக்க முடியுமா, பாருடி! கிரிக்கெட் மாட்ச்சின் போதெல்லாம் அந்தக் காலத்திலே நம்ம ஊர்ப் பத்தினிகள் மழை வரவழைச்சு எத்தனையோ ஆட்டத்தை டிரா பண்ணியிருக்காங்க!"
சீதாப்பாட்டி சிரித்தாள். "உங்கள் வீரத்தைக் காட்ட சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு யூ ஷுட் பி ஹாப்பி. ரசம், எத்தனை மணிக்குப்பா மைதானத்துக்கு மாடு வருது? நிறையப் பேர் மாட்டுக்கு மாலை போடுவாங்களில்லையா? என் சார்பாக ஒரு மாலை தர்றேன், போட்டுடுப்பா."

அப்புசாமி அலறினார். "சீதேய்! அடியே கியவி! நீ போடற மாலை மாட்டுக்கு இல்லேடி! என் மரணத்துக்கு!"
"ஆல் ரைட்! எனக்கு இன்னிக்கு வேலை இருந்தாலும் கட்டாயம் மைதானத்துக்கு வந்துடறேன். ஸீ யூ."
"சீதே... என்னை நீ ஸீ பண்ண முடியாதுடி. என் குடலைத்தான் நீள நீளமாய் மைதானம் பூரா வடாம் பிழிந்தது போல் பார்க்கலாம்."
.........மைதானம், கும்பல், குதூகலம் - அப்புசாமி நீங்கலாக.
ரசகுண்டு தேர்ந்தெடுத்த சில இசைத் தட்டுகளைப் போட்டுக் கொண்டிருந்தான்.

கண்டசாலா பாடிக்கொண்டிருந்தார்.
"துணிந்தபின் மனமே
துயரம் கொல்லாதே..."

அப்புசாமிக்கு அத்தனை படபடப்பிலும் ஆறுதலாக இருந்தது. 'கண்டசாலா நல்ல மனுஷன்! கொல்லாதே, கொல்லாதேன்னு அனுதாபமா பாடறார். ஆனால், அது அந்தப் பொலி காளைக்குப் புரியுமா? கொல்லாது விடுமா?'
திடீரென்று அவர் மூக்குக்கிட்டே ஓர் உஷ்ண வீச்சு!

பொட்டுவின் பொலிகாளை! அவருக்குச் சரியாக ஆறடி தூரத்தில்.
கழுத்து நிறைய மாலைகளைப் போட்டுக் கொண்டு, காலால் மைதானத்து மண்ணைக் குழி பறித்தவாறு, அவரைப் பார்த்து ஆயிரம் மில்லி அடித்துவிட்டு வந்ததைப் போலச் சிவப்பாக முறைத்தது.
பால்காரப் பொட்டு தன் கையிலிருந்த கயிற்றை எந்த நிமிஷத்திலும் விட்டு விடலாம். தாரை, தப்பட்டை, மைக், கை விசில், குலவை, டப்பாங்குத்து!
பால்காரப் பொட்டு அப்புசாமியைப் பார்த்து 'உய்ய்' என்று ஒரு விசில் அடித்தான். "யோவ்! வஸ்தாத்! வுடட்டுமாய்யா கயிற்றை!"
வாய் வார்த்தை வாயிலிருக்கும் போதே காளையின் கயிற்றை விட்டுவிட்டான்.

அப்புசாமி பழங்கால சந்திரபாவுவாக மாறி ஜகா வாங்குவதற்குள், காளை வேகமாக வந்து அவரை ஒரு மோதல்...
"ஆ! சீதே!" என்று அவர் அலறினதுதான் தெரியும். அதற்குள் இரண்டு மூன்று போலீஸ் ஜீப்புகள் மைதானத்துக்கு வேகமாக வந்தன.
அடுத்த நிமிடமே அவை பொலி காளையைச் சுற்றி வளைத்துக் கொண்டு, காளை எங்கேயும் ஓட முடியாமல் செய்துவிட்டன. ஜீப்பிலிருந்து இறங்கிய சிறிய போலீஸ் பட்டாளம், காளையின் கயிற்றைப் பிடித்து, அதை அருகிலிருந்த மரத்தில் கொண்டு கட்டியது. சில நிமிஷங்களில் பால்காரப் பொட்டு கை கட்டிக்கொண்டு வினயமாக வந்து நின்றான்.

"தப்பு அவர் மேலதாங்க. அவர் தானுங்க சவால் விட்டார். டீ சாப்பிடறீங்களா? போர்ன்விடாவா?" என்றான் போலீஸ் அதிகாரியிடம் - சத்யராஜ் பாணியில்.

போலீஸ் அதிகாரி சொன்னார். "நாங்கள் இப்போது வந்தது, நீங்க ஏன் இங்கே ஜல்லிக்கட்டு நடத்தினீங்க என்பதை விசாரிக்கிறதுக்கு அல்ல. அதற்குத்தான் நீங்க ஏற்கனவே பர்மிஷன் வாங்கியிருக்கீங்களே. வைரக் கம்மல் திருட்டு விஷயமா விசாரிக்க வந்திருக்கிறோம். உன் பொலி காளை கழுத்திலேயிருக்கிற மாலைகளையெல்லாம் நீயே கழற்று! நீ நிரபராதின்னா உன்னை விட்டுடிறோம். இல்லேன்னா... உன்னையும் உன் பொலி காளையையும் அரெஸ்ட் பண்ணறதைத் தவிர வேறு வழியில்லை."
"சார், மில்லி கில்லி அடிச்சீட்டு வந்தீங்களா...?"

உதட்டில் ஒரு தட்டுத் தட்டினார் போலீஸ்காரர். "இது சினிமா போலீஸ் அல்ல, அசல் போலீஸ். கழற்றுப்பா முதலிலே மாலைங்களை."
பால்காரப் பொட்டு, ஆயுளில் முதல் தடவையாகச் சற்றே பயத்துடன், தன் காலையின் கழுத்தில் பலரும் போட்ட மாலைகளைக் கழற்றினான். ஒரு குறிப்பிட்ட மாலையில் சிறிய துணி முடிச்சு!
இன்ஸ்பெக்டர் அதை எடுத்துப் பிரித்தார். ஒரு ஜோடி வைரத் தோடுகள் பளபளத்தன.

"சார்! சார்! எனக்கு ஒண்ணும் தெரியாது, சார்!"
......அப்புசாமி கால் கை கட்டுடன் படுத்திருந்தார். "சீதே! உன்னை நான் புரிஞ்சுக்காத முட்டாள்! பொலி காளை மாட்டுக்கு நீயும் மாலை போடப் போறேன்னதும் எனக்கு உன் மேலே எவ்வளவு ஆத்திரம் வந்தது தெரியுமா?" என்றார்.

"உங்கள் ஆத்திரம் நியாயமான ஆத்திரந்தான். நான் மாலைக்குள் என் வைரத் தோட்டை வைத்து, அதை மாட்டுக் கழுத்திலே போட்டுப் பால்காரப் பொட்டுவை மாட்ட வைப்பேன் என்பதை, புவர் மேன், நீங்கள் எப்படி ஊகித்திருப்பீர்கள்? ஆனாலும், நான் கொஞ்சம் ஓவராகவே ரிஸ்க் எடுத்துக் கொண்டுவிட்டேன். சப்போஸ், போலீஸ் மட்டும் காளையை ரவுண்டப் பண்ண இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தால் என் நெற்றிப் பொட்டு கதி என்னாயிருக்கும்?"

அப்புசாமி அலுத்துக் கொண்டார். "உன் நெற்றிப் பொட்டுதான் உனக்குப் பெரிசு! என் குடல் என்னாயிருக்கும்னு கவலைப்படறியா?"
- முற்றும்
------------
[ நன்றி:  appusami.com  ]

தொடர்புள்ள பதிவுகள்:
பாக்கியம் ராமசாமி

வெள்ளி, 8 டிசம்பர், 2017

929. பாக்கியம் ராமசாமி - 1

நகைச்சுவைக் கதைகளின் நாயகன்... 
பாக்கியம் ராமசாமி நினைவலைகள்!
 வி.எஸ்.சரவணன்


நேற்று மறைந்த ஜ.ரா.சுந்தரேசன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாய் ‘விகடன்’ -இல் இன்று வந்த இக்கட்டுரை.
====

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை எழுத்துக்கென்று தனி இடம் இருக்கிறது. வஞ்சப்புகழ்ச்சி, சிலேடை உள்ளிட்ட உத்திகளில் அங்கதம் தமிழ் இலக்கியத்தில் ஆதி முதலே பயணித்து வருகிறது. பாரதிக்குப் பின் எழுச்சிபெற்ற உரைநடையில் நகைச்சுவை மிளிர எழுதிய எழுத்தாளர்கள் பலர். ஆர்.மகாதேவன் எனும் தேவன் உருவாக்கிய ‘துப்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தை மறக்க முடியாது. அவர் ஏராளமான நகைச்சுவைக் கதைகளை எழுதினார். அவரைத் தொடர்ந்து பலரும் எழுதினார்கள். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் ஜ.ரா.சுந்தரேசன் எனும் இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி.


சேலம் பகுதியைச் சார்ந்த பாக்கியம் ராமசாமி, குமுதம் பத்திரிகையில் பணியாற்றியவர். இவர் உருவாக்கிய அப்புசாமி - சீதாப்பாட்டி கதாபாத்திரங்கள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவை ததும்பும் கதைகளை எழுதினார். பொதுவாக, அனைவரின் வீடுகளில் இருக்கும் தாத்தா, பாட்டிகளைப் போலத்தான் அப்புசாமியும் சீதாப்பாட்டியும். ஆனால், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டே இருப்பவர்கள்போலக் கதைகளை அமைப்பார். விவரணைகளைத் தவிர்த்து, காட்சிகளாகவே கதையைக் கொண்டுசெல்வார்.



ஒரு காட்சியின் உரையாடலில் அப்புசாமியின் குரல் மேலோங்குவதுபோல இருந்தால், அடுத்த காட்சியில் சீதாப்பாட்டியின் குரல் மேலோங்கும். ஒருவரையொருவர் வார்த்தைகளால் வாரிக்கொள்வதுதான் மைய இழை. அதை வைத்துக்கொண்டு தொடர்கதை, நாவல்களில் புகுந்து விளையாடினார் பாக்கியம் ராமசாமி. இருவரின் உரையாடலில் அதிகம் ஆங்கிலம் புழங்கும். அப்புசாமி - சீதாப்பாட்டி இடம்பெற்ற சின்னச் சின்னக் கதைகளையும் இவர் எழுதினார். அதில் ஒரு கதையில், புகழ்பெற்ற எழுத்தாளர் அப்புசாமியைப் பார்க்க வருவார். ரொம்பவும் சம்பாத்தியம் பெற்ற எழுத்தாளரா.... என்கிற உரையாடல் வரும். அப்புசாமி, அந்த எழுத்தாளரைப் பார்த்து, 'நீர் என்ன ஒரு எழுத்துக்கு ஒரு பைசா வாங்குவீரா..." என்பார். அவரோ பதறியபடி, "அவ்வளவு ரூபாய்... எப்படி?" என்பார். அதற்கு அப்புசாமியோ, "பாத்திரத்தில் பெயர் பொறிப்பவரே அவ்வளவு வாங்குகிறாரே" என்று வாருவார்.

கதைகளைப் போலவே அவர் எழுதும் கட்டுரைகளிலும் நகைச்சுவை உலவும். உடல் குண்டாவது பற்றிய கட்டுரை ஒன்றை இப்படி முடிக்கிறார். "தான் சாப்பிட்ட பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசைபோடுகிறது. அதைப்போல், மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லியாகவே இருக்கக்கூடும்!"

பாக்கியம் ராமசாமி முழு வீச்சில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நகைச்சுவை கதைகளின் முடிசூடா மன்னராக விளங்கினார். 'அப்புசாமியும் 1001 இரவுகளும்' நூல் புகழ்பெற்றது. தொழில் நுட்ப மாற்றம் நிகழ்ந்தபோது, http://www.appusami.com எனும் இணையத்தில் இயங்கி வந்தார். இதில் அவரது பல கதைகள் படிக்க கிடைக்கின்றன.

பாக்கியம் ராமசாமிக்கு இசையின் மீது தனி ஆர்வம் உண்டு. அவரின் கதைகளில் அது வெளிப்படும். அப்புசாமியைப் போலவே சீதாப்பாட்டிக்கும் சபாக்களில் பொன்னாடை கிடைப்பதைப் பார்த்து, பொறாமைப்படும் கதை ஒன்றை எழுதியிருப்பார்.  'அப்புசாமி - சீதாப்பாட்டி இசைக் கூடல்' எனும் அமைப்பை, இசைக்கலைஞர்களைக்கூ ட்ட உருவாக்கினார். சமூகப் பணிகள் செய்வதற்கு 'அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை' எனும் அமைப்பை உருவாக்கினார். இறுதி வரை எழுதியும் இயங்கிக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.

தமிழ் இலக்கிய உலகுக்குச் சிரிப்பை அள்ளித் தந்த ஜ.ரா.சுந்தரேசன் நேற்று (டிசம்பர் 7) உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரின் கதைகள் படிக்கும் காலம் வரை அவரும் வாழ்வார்.

[ நன்றி: https://www.vikatan.com/news/miscellaneous/110202-bakkiyam-ramasamy-memories.html  ]

2018-இல் 'கல்கி'யில் வந்த  குறிப்பு.




தொடர்புள்ள பதிவுகள்:
பாக்கியம் ராமசாமி
ஜ. ரா. சுந்தரேசன் : விக்கிப்பீடியா

தென்றல் இதழில் ஜ.ரா.சு.

தினமணியின் அஞ்சலி

பிடித்த பத்து: ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)

அப்புசாமி, சீதாப்பாட்டிக்கு சொல்லிடாதீங்க..!’

அப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி!

அப்புசாமிக்கு உயிர் கொடுத்தது என் பாக்கியம்! : ஜெயராஜ்