சனி, 30 ஏப்ரல், 2016

பாரதிதாசன் - 4

பாலாமணி பாட்டுக்கள்

பாரதிதாசன்.

ஏப்ரல் 29. பாரதிதாசன் பிறந்த தினம்.பாலாமணி அல்லது பக்காத் திருடன்’ என்பது வடுவூர் துரைசாமி ஐயங்காரின்  நாவல். அது 1937-இல் திரைப்படமாய் வந்தது.

டி.கே.சண்முகம் தான் கதாநாயகன். டி.எஸ்.ஜெயா கதாநாயகி. எஸ்.வி.ஸஹஸ்ரநாமம் தான் துப்பறியும் ரஞ்சித் சிங்.  ( உண்மைப் பாத்திரமான) நார்டன் ( Eardley Norton  ) என்ற வழக்கறிஞர் கதாநாயகியின் வழக்கில் வாதாடி அவளை விடுவிப்பதாய் இருப்பது கதையில்  ஒரு சுவையான பகுதி.

அந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதினதைப் பற்றி நகைச்சுவையுடன் பாரதிதாசன் எழுதியதைப் படியுங்கள்!
=============


‘ஜனநாயகம்’ ஆசிரியர் தோழர் திருமலை சாமியும், தோழர் எஸ்.வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப் படுத்த உரிமையுடையவர்கள். மேலும், அவர்கள் ஈரோடு ஷண்முகானந்தா டாக்கி கம்பெனியாருக்கும் நண்பர்கள், நான் ‘பாலாமணிக்குப்’ பாட்டு எழுத வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். டாக்கிகாரர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

ஈரோடு சென்றேன். பாலாமணிக்குடையவர் கதா சந்தர்ப்பங்களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன்.

நான் வீடு திரும்பும் போது ‘பாலாமணி’ யுடைய வரை நோக்கி, பிரதானமாகக் கேட்டவரம் ஒன்றே ஒன்று.

அண்ணா சம்ப்ரதாயப்படி ‘பாலாமணி’ ப் பாடல்களைப் புத்தகமாக நீங்கள் அச்சடிக்கும் போது அதில் பிழையில்லாதிருக்க - என்னையும் கலந்து கொள்ளுங்கள்.அவ்வாறே வரம் கிடைத்தது. பிறகு பாலாமணி வெளிவந்தது. எனக்குக் கொடுத்த வரத்தை உடனே உறிஞ்சிக் கொண்டார்களாதலால் லக்ஷணத்தின் எதிர்முனையில் பாட்டுப் புத்தகம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அது மாத்திரமல்ல, நான் எழுதிய பாடல்கள் சில நீக்கப்பட்டும், வேறு பாடல்கள் சில சேர்க்கப்பட்டும் இருப்பதைப் பார்த்தேன். அதுபற்றி ஒன்றுமில்லை. இன்னின்ன பாடல்கள் இன்னின்னாரால் ஆகியவை என்பதைக் குறிக்க வேண்டியது அவசியமல்லவா? அப்படிச் செய்யாமல் வேறொருவர் எழுதிய பாடல்களுக்கு, இடப் பக்கமாக ஃஇக்குறி வைத்ததோடு நின்றார்கள். மேலும் அப்புத்தகத்தில் அச்சுப்பிழை யில்லாத இடம் அருமையாகிவிட்டது. முதலாளிகட்கு இதில் கவலை யிருக்க வேண்டியது அநாவசியமாகத் தோன்றலாம். இருந்தாலும் அவர்களின் இச்சட்டம் அக்கிரமமானதும் நாணயமற்றதுமாகும்.

நான் விழுப்புரத்தில் “பாலாமணி” பார்க்கப் போனேன். அங்குத் தோழர் மிக்சேட் அவர்களைக் கண்டேன். இப்படிச் செய்ததற்கு என்ன காரணம் என்று கேட்டேன். அவர் கம்பெனியின் சார்பாகச் சொல்லிய பதில்கள் ரசமானவை.

‘பாலாமணிக் குடையவர்கள் விரும்பியபடி நான் கோரஸாக எழுதிய பாடல் இது:-

ஸ்ரீபாரத தேவி! புரா தனியே!
எழில் அன்னைநல் வீராவேசம் தீராக் காதல்
மேவச் செய்தாய் என்னை! உதாரி ஜெயசீலி!

காவேரி கங்கா தீர நாரீ ப்ரபல ஹிமய கிரிதேஹி 
கோடானு கோடிப் போர் வீரர் தங்கள் முதல்வி! 
புனித வளமுடைய நிலத் தலைவி! 
அமுதுபோல் கவிதைகள் ஆர்ந்த சாந்தமுகி வாழி!


இதை நீக்கி - ‘கார்குகா ஷண்முகா’ என்று தொடங்கும் ஓர் பாட்டைச் சேர்த்தற்கு என்ன காரணம் என்றேன்.‘ஷண்முகான ந்தா டாக்கி’ என்று கம்பெனிக்குப் பேர் வைத்திருப்பதால் கோரஸிலும் ஷண்முகம் என்று வரவேண்டுமாம். மேலும், முதலில் மங்களகரமாக இருக்க வேண்டுமாம். காப்பாற்று குகா என்ற பொருளில், காகுகா என்று எழுதாமல் கார்குகா என்று எழுதுவதும், பாடச் செய்வதும் பிழையல்லவா? காரால், பிழைமொழியால் துவக்குவதுதானா மங்களகரம்? சரி, போகட்டும்.

வேதவல்லியை நோக்கி, சச்சிதானந்தன் பாடும் ‘மதுரித மொழியுடையாய் ஒரு வார்த்தை சொல்வாய்’ என்று தொடங்கும் என் பாட்டை நீக்கியதற்குக் காரணம் கேட்டேன்.

சச்சிதாநந்தனாக நடிக்கும் ஸ்ரீ கருணாலய பாகவதர் அந்தப் பாட்டை வெகு இனிமையாகப் பாடிவிடுவாராம். அதனால் வேதவல்லி நடிகைக்குக் குறைவு ஏற்பட்டு விடுமாம்.

முதலாளிக்கு வேண்டிய பேர்வழியைவிட வேறு பேர்வழி அழகாய் இருந்துவிட்டால், அந்த அழகனின் மூக்கை முதலாளி வெட்டி விடலாம் என்று ஓர் சட்டம் உண்டாகாமல் இருப்பது பற்றி வருத்தப்படாதிருக்க முடியுமா?

நகரதூதன், 19.9.1937

[ நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாரதிதாசன்

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

கோபுலு - 2

குழந்தையுலகம் -1 
கோபுலு 


ஏப்ரல் 29.  கோபுலு அவர்களின் நினைவு தினம்.

அவர் நினைவில், சில ஓவியங்கள்!

( தொடரும்)

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கோபுலு

வியாழன், 28 ஏப்ரல், 2016

உ.வே.சா. - 6

திருடனைப் பிடித்த விநோதம்
உ.வே.சாமிநாதய்யர் ஏப்ரல் 28. உ.வே.சா அவர்களின் நினைவு தினம்.   இதோ அவர் எழுதிய ஒரு கட்டுரை!

 கணிதப் படிப்பில்   கணித மேதை யூக்லிட் ( Euclid) பற்றிப் படித்திருப்பீர்கள்


[ நன்றி : தி இந்து ] 
ஆனால்  " யூக்ளிட் ஸ்ரீநிவாசய்யர் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? 

படியுங்கள்! என்னிடம் இருக்கும்  மிகப் பழமையான சில தீபாவளி மலர்களில் ஒன்று,  விகடன் 1938- மலர்.    அந்த மலரின் பொருளடக்கப் பக்கங்களைப் பாருங்கள்!
அப்போது ‘கல்கி’ விகடனின் ஆசிரியராய் இருந்தார். அவர் யாரையெல்லாம் அணுகிக் கதை கட்டுரைகளைப் பெற்றிருக்கிறார் என்பது இதிலிருந்து தெரியும்.  ‘கல்கி’யே மலரில் ”கல்கி” “ரா.கி” என்ற இரு பெயர்களில் இரண்டு கதைகளை வெளியிட்டிருக்கிறார்!  கவிமணியின் இரு கவிதைகளும் உள்ளன!


 ( இந்த 1938 மலரிலிருந்த சில இசைத் தொடர்புள்ள கட்டுரைகளையும், கவிமணியின் கவிதைகளையும் நான் ஏற்கனவே என்   வலைப்பூவில் இட்டிருக்கிறேன்.)

தமிழ்த்தாத்தா மலரில் எழுதிய கட்டுரை இதோ!
கும்பகோணம் கலாசாலையில் நான் வேலை பார்த்து வந்த காலத்தில் அநேகமாக மற்ற‌ எல்லா ஆசிரியர்களோடும் மனங்கலந்து பழகுவேன். ஒவ்வொருவரிடத்திலும் உள்ள விசேஷ குணங்களைக் கண்டு இன்புறுவேன்.
சிலரிடத்தில் எனக்கு மிக்க மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டன. அத்தகையவர்களில் ஆர்.வி. ஸ்ரீநிவாசையர் ஒருவர்.

கூரிய அறிவு, இடைவிடாத படிப்பு, நேர்மையான குணம், உபகாரசிந்தை என்பவை ஸ்ரீநிவாசையரிடத்தில் குடி கொண்டிருந்தன. அவர் நினைத்தாரானால் மற்றவர்களால் முடியாத காரியத்தை முயன்று சாதித்து விடுவார். கணிதத்தில் அவர் மிக்க புகழ் பெற்ற‌வர். அதனால் 'யூக்ளிட் ஸ்ரீநிவாசையர்' என்றும் அவரைச் சொல்வதுண்டு.
[ யூக்ளிட் ஸ்ரீநிவாசய்யர் ] 

காலேஜில் எந்த உபாத்தியாயரேனும் வராமற்போனால் அவருடைய பாடத்தைச் சிறிதும் சிரமமில்லாமல் நடத்துவார். அவருக்குத் தன் காடு, பிறன் காடு என்ற வேற்றுமை இல்லை.

சிறிய மனஸ்தாபங்களையெல்லாம் பெரியவையாகச் செய்துகொண்டு தாமும் கஷ்டத்துக் குள்ளாகிப் பிறரையும் கலங்கச் செய்யும் சிலரைப் போன்றவர் அல்லர் அவர். அவருடைய கம்பீரமான குணம் சிறு சிறு குற்றங்களிற் கவனத்தைச் செலுத்த விடுவதில்லை. அவருடன் பழகின‌வர்கள் எப்போதும் அவ‌ருடன் பழகிக்கொண்டே இருக்க விரும்புவார்கள். தமக்குப் பிற்காலத்தில் உதவுமே என்று பொருளைச் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் உப‌காரம் செய்யும் இயல்பு அவரிடம் இருந்தது.

ஸ்ரீநிவாசையர் சில காலம் கும்பகோணம் கலாசாலையில் உபாத்தியாயராக இருந்தார்; பிறகு சென்னை இராசதானிக் கலாசாலைக்கு வந்தார். அப்பாற் சிலகாலம் 'ரெவினியூ போர்டாபீஸி'ல் வேலை பார்த்து வந்து கடைசியில் பத்திரப்பதிவிலாகாவில் தலைமை ஸ்தானத்தை வகித்தார். எல்லா இடங்களிலும் அவருடைய மேதை பிரகாசித்துக்கொண்டு வந்தது.

சற்றேற‌க் குறைய நாற்பது வருஷங்களுக்கு முன் அவர் சென்னையில் இருந்தார். அப்பொழுது மயிலாப்பூரில் தெற்கு மாடவீதியில் மேலைக் கோடியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து வந்தார். அவருடைய வீட்டில் எப்பொழுதும் விருந்தினர்களுடைய கூட்டத்தைக் காணலாம்.

ஸ்ரீநிவாசையருடன் படித்தவரும் அவருடைய நண்பரும் கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்தவருமாகிய ஒருவர் சென்னைக்கு ஒரு சமயம் வந்திருந்தார். அவர் ஸ்ரீநிவாசையர் வீட்டிலேயே தங்கினார்.

அக்காலத்தில் மயிலாப்பூரில் இப்பொழுதுள்ள மாதிரி அவ்வளவு அதிகமான வீடுகள் இல்லை. திருட்டுப் பயம் அதிகமாக இருந்தது. அடிக்கடி வீடுகளில் திருட்டுப் போகும். ஸ்ரீநிவாசையருடைய வீட்டில் தங்கியிருந்த ஆசிரியர் இந்த விஷயத்தைக் கேள்வியுற்றார். அங்கே தங்கியிருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும், "இன்றைக்கு இன்ன பண்டம் களவுபோய் விட்டது", "இன்றைக்கு அந்த வீட்டில் துணிகள் களவு போயின" என்று பலர் கூறுவதைக் கேட்டார். அவருக்கு, 'இவ்வளவு மனிதர்கள் இங்கே வசிக்கிறார்கள்; இவர்கள் இந்தத் திருடர்களைப் பிடித்துச் சரியானபடி தண்டிக்கும் வீரமில்லாமல் இப்படிக் கதை பேசுவதோடு நிற்கிறார்களே!' என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று.

அந்த ஆசிரியர் தேக வன்மையோடு மனோதைரியமும் உடையவர். ஒருநாள் யாரோ ஒருவர் ஓரிடத்தில் நிகழ்ந்த திருட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். உடனிருந்தவர்கள் திருட்டுப்போன வீட்டினருக்கு நேர்ந்த நஷ்டத்தைப் பற்றி இரங்கினார்கள். அந்த ஆசிரியரோ சிறிதேனும் இரங்கவில்லை; அவருக்கு கோபந்தான் உண்டாயிற்று; "இவர்கள் திருடனைப் பிடிக்கத் தைரியம் சிறிதுமில்லாதவர்கள்; ஆண்பிள்ளைகளென்று சொல்லிகொள்கிறார்களே" என்று பல்லைக் கடித்தார். அவருடைய கை அவரையறியாமலே மீசையை முறுக்கியது. 'நம்மிடம் மாத்திரம் ஒரு திருடன் அகப்பட வேண்டும்;

அப்பொழுது தெரியும் அவன் படும்பாடு' என்று நினைத்தார். தம் கையை இறுக்கிப் பிடித்துப் பல்லை மீண்டும் கடித்தார். அவர், ஒரு திருடன் வருவதுபோலவும் அவனைப் பிடித்து இறுக்கி நசுக்குவதுபோலவும் மனத்திலே கற்பனைசெய்து கொண்டார்.

ஸ்ரீநிவாசையர் தம் வீட்டு மேல்மாடியில் கீற்றுக்கொட்டகையொன்று போட்டிருந்தார். விருந்தினர்கள் அங்கே படுத்துத் தூங்குவது வழக்கம். கொட்டகைக்குத் தென்பக்கம் தனியே ஓரிடத்தில் மணல் பரப்பித் தட்டிகள் வைத்துத் தடுக்கப்பட்டிருந்தது. இரவில் கீழே இறங்கிவரும் அவசியமின்றி எல்லாச் சௌகரியங்களையும் மேலே அமைத்திருந்தார். மேற்கூறிய ஆசிரியரும் அக்கொட்டகையிலே இராத்திரி வேளைகளில் படுத்துவந்தார்.

ஒருநாள் அவ்வாசிரியர் அங்கே படுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய ஞாபகம் முழுவதும் திருட்டுக்கதைகளிலேயே இருந்தது. தம்முடைய வீரத்தைக் காட்ட வேண்டுமென்ற ஆவல் அவருக்கு மிதமிஞ்சி இருந்தது. அதனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை; விழித்துக்கொண்டே யிருந்தார்.

நடுராத்திரி வேளை. அப்பொழுது ஏதோ சத்தம்கேட்டது. யாரோ ஓர் ஆள் சந்தடி செய்யாமல் அந்தக் கொட்டகைக்கு வெளியே நடப்பது தெரிந்தது; 'சரி,இன்று அகப்பட்டுக் கொண்டான் திருடன். இவனை லேசில் விடக்கூடாது' என்று ஆசிரியர் உறுதி செய்துகொண்டார். படுக்கையில் படுத்தபடியே மூச்சுக்கூட விடாமல் அந்த உருவத்தைக் கவனித்தார். அவர் தேகம் பதறியது. உடம்பு வேர்த்தது. கைகள் உடனே சென்று பற்ற வேண்டுமென்பதுபோலத் தினவெடுத்தன.

அவர் கண்ட ஆள் தட்டி உள்ள இடத்திற்கு மெல்லச் சென்றான். அப்பொழுது ஆசிரியவீரர் சத்தம் செய்யாமல் எழுந்தார். ஓசைப் படாமல் நடந்தார். அந்த ஆள் தட்டி உள்ள‌ இடத்திற்குள் சென்று உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்தானோ இல்லையோ உடனே ஆசிரியர் ஒரே தாவலாகத் தாவி அவன் முதுகுப்புறமாகச் சென்று இரண்டு கைகளாலும் அவனை இறுகப் பற்றிக்கொண்டார். பிடிபட்ட ஆள் உளற‌ ஆரம்பித்தான். "திருட்டுப் பயலே, அகப்பட்டுக் கொண்டாயா? எல்லாரையும் ஏமாற்றுவதுபோல் என்னையும் ஏமாற்றலா மென்றா பார்த்தாய்? இந்தத் துடைநடுங்கிகள் ஒரு திருடனையாவது பிடிக்கும் சாமர்த்திய மில்லாதவர்களென்று உங்கள் கூட்டத்தாருக்கு ந‌ன்றாகத் தெரிதிருக்கிறது. அதுதான் இப்படி உங்கள் விளையாடல்களைத் தடையில்லாமல் நடத்திக்கொண்டு போகிறீர்கள். இன்றைக்கு அக‌ப்பட்டுக் கொண்டாய்" என்று அவர் வீரம் பேசத்தொடங்கினார்.

பிடிபட்ட மனிதன் என்ன என்னவோ கூறினான். அவை ஆசிரியர் காதில் விழவில்லை.

இந்தக் கலவரத்தில் அங்கே படுத்திருந்த சிலர் எழுந்து வந்தார்கள். கீழேயிருந்து விள‌க்குகளோடு சிலர் வந்துவிட்டார்கள். அவர்களைக் கண்டவுடன் ஆசிரியர், "பார்த்தீர்களா? இந்தப் பயலைக் கட்டுங்கள். நானும் இவ்வளவு நாள் பார்த்தேன். இன்றைக்கு அகப்பட்டுக் கொண்டான்' என்று பலமாகக் கூவினார்.

வந்தவர்கள் விளக்கைக் கொண்டு வந்து ஆசிரியர் பிடிக்குள் அகப்பட்ட மனிதனைப் பார்த்தார்கள். உடனே அவர்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அப்பொழுது ஸ்ரீநிவாசையரும் கீழிருந்து மேலே வந்தார்.

"இவன் எங்கள் வீட்டுச் சமையற்காரனல்லவா? இவனையா திருடனென்று பிடித்தீர்கள்?" என்று ஒருவர் விஷயத்தை வெளிப்படுத்தினார்.

"நான் இவனை இவர்களுக்கு ஏதாவது வேண்டி யிருந்தால் கவனித்துக் கொள்வதற்காக இங்கே படுத்துக்கொள்ளச் சொல்லியிருந்தேன். இவன் எங்கே இவர் கையில் அகப்பட்டான்!" என்றார் ஸ்ரீநிவாசையர்.

" கீழே எல்லோரும் போஜனம் செய்த பிறகு நான் சாமான்களையெல்லாம் ஒழுங்காக எடுத்து வைத்தேன். நாளைக்குச் சீக்கிரம் சமையலாக வேண்டுமென்று எஜமான் சொல்லியிருந்தபடியால் காய் கறியை இன்றைக்கே நறுக்கி வைத்துவிடலாமென்று நறுக்கினதில் பன்னிரண்டு மணியாகிவிட்டது. அப்பால் இங்கே வந்தேன். அந்தப் பக்கம் போனேன். அவ்வளவுதான்: திடீரென்று யாரோ என்னை இறுகப் பிடித்து தெரி்ந்தது. யாராவது திருடனோ என்று நான் பயந்து விட்டேன்; இந்த ஆலமரத்திலுள்ள பிசாசுதானோ வென்ற பயம் வேறு வந்துவிட்டது" என்று சமையற்காரன் சொன்னான். எல்லோரும் வயிறுகுலுங்கச்சிரித்தார்கள். அக்காலத்தில் அவ்வீட்டுக் கருகிலிருந்த ஆலமரமொன்றில் பேய் ஒன்று இருப்பதாகப் பெண்களும் வேறு சிலரும் பயந்து கொண்டிருந்தனர்.

ஆசிரிய வீரர் என்ன செய்வார் பாவம்பேசாமற் போய்ப் படுத்துக் கொண்டார். அது முதல் திருட்டைப் பற்றிய பேச்சு அவர் இருக்கும்போது எங்கே நடந்தாலும் அங்கே இராமல் அவர் எழுந்து சென்று விடுவார்!"
-----
[ நன்றி: ஆனந்த விகடன்  ]

பின் குறிப்பு:

”யூக்ளிட்”  ஸ்ரீநிவாசய்யரைப் பற்றி மேலதிக விவரங்கள் இங்கே:
http://bispindia.com/content/diwan-rv-srinivasa-iyer

தொடர்புள்ள பதிவுகள்:
உ.வே.சா

யூக்ளிட்

புதன், 27 ஏப்ரல், 2016

பதிவுகளின் தொகுப்பு : 376 -400

பதிவுகளின் தொகுப்பு : 376 -400
376. அ.சீநிவாசராகவன் -1
கலைமகள் கோயில்
பேராசிரியர் அ.சீநிவாசராகவன்

377. லக்ஷ்மி -1
"லக்ஷ்மி' வாழ்க்கையிலும் எழுத்திலும் மருத்துவரே!
கலைமாமணி விக்கிரமன்

378. சங்கீத சங்கதிகள் - 69
ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்
உ.வே.சாமிநாதய்யர்
மார்ச் 24. முத்துசாமி தீக்ஷிதரின் பிறந்த நாள். 

379. பதிவுகளின் தொகுப்பு: 351 - 375

380. விபுலானந்தர் - 1
இசைத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்
தேசிகன்

381. டி.கே.பட்டம்மாள் - 6
பாட்டம்மாள்
வீயெஸ்வி
மார்ச் 28. பட்டம்மாள் அவர்களின் பிறந்த நாள்

382. ஆனந்தரங்கம் பிள்ளை

383. தி.வே.கோபாலையர் -1
இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர்
செந்தலை ந.கவுதமன்

384. வ.வே.சு.ஐயர் - 1
தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்
 பெ.சு.மணி

385. சங்கீத சங்கதிகள் - 70
கிட்டப்பா பிளேட்
கல்கி

386. மீனாட்சிசுந்தரம் பிள்ளை -1
சாலப் பெரிய ஆசிரியர் பிரான்!
ம.வே. பசுபதி

387. சுத்தானந்த பாரதி - 2
அசடு வழிந்தது !
ஸ்ரீ சுத்தானந்த பாரதி 
மார்ச் 7. சுத்தானந்த பாரதியாரின் நினைவு தினம்.

388. சங்கீத சங்கதிகள் - 71
டாக்டர் எஸ்.இராமநாதன் - 1
ஏப்ரல் 8.  சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதனின் பிறந்த நாள்.

389. ஜெயகாந்தன் -1
ஜெயகாந்தன் கவிதைகள்

ஏப்ரல் 8. ஜெயகாந்தனின் நினைவு நாள்.


390. கி.வா.ஜகந்நாதன் - 1
கண்ணீரில் எழுதிய காட்சி
கி.வா.ஜகந்நாதன்

391. சங்கீத சங்கதிகள் - 72
வீணையின் குரல்
வீயெஸ்வி
ஏப்ரல் 13. வீணை எஸ்.பாலசந்தர் அவர்களின் நினைவு தினம்.

392. வ.சுப.மாணிக்கம்
தமிழ் இமயம் வ.சுப.மாணிக்கம்
இடைமருதூர் கி.மஞ்சுளா

393. பி.ஸ்ரீ. -12 :கம்பன் கண்ட சித்திரசாலை
சித்திர ராமாயணம்  
கம்பன் கண்ட சித்திரசாலை 
பி.ஸ்ரீ

394. தென்னாட்டுச் செல்வங்கள் - 18
மீனாட்சி திருக்கல்யாணம்

395. சிட்டி என்றொரு தகவல் பெட்டகம்
 திருப்​பூர் கிருஷ்​ணன்

ஏப்ரல் 20.  சிட்டி என்ற பி.ஜி.சுந்தராஜன் அவர்களின் பிறந்த தினம்.


396. பாரதிதாசன் -3
தமிழ்
பாரதிதாசன்
ஏப்ரல் 21. பாவேந்தர்  பாரதிதாசனின் நினைவு தினம்.

397. சங்கீத சங்கதிகள் - 73
நினைவில் நீங்காத தோடி!
வீயெஸ்வி
ஏப்ரல் 22. லால்குடி ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்.

398. ஜெயகாந்தன் -2
அக்ரஹாரத்துப் பூனை  
             ஜெயகாந்தன்
ஏப்ரல் 24. ஜெயகாந்தன் பிறந்த தினம்.

399. மு.வரதராசனார் -1
ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் அகல்விளக்கு
தெ. ஞானசுந்தரம்

400. புதுமைப்பித்தன் -1
தமிழ்ச் சிறுகதையின் தந்தை "புதுமைப்பித்தன்'
மு.பரமசிவம்
ஏப்ரல் 25. புதுமைப் பித்தன் பிறந்த தினம்.தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

’அவ்வை ‘ டி.கே.சண்முகம் -1

நாடகத்தில் நகைச்சுவை
டி.கே.சண்முகம்
ஏப்ரல் 26. ‘அவ்வை’ டி.கே.சண்முகம் அவர்களின்  பிறந்த தினம்.
அவருடைய வானொலிப் பேச்சு ஒன்று இதோ!
==============

நான் இங்கே குறிப்பிட விரும்புவது நகைச்சுவை நாடகங்களையல்ல; நாடக மேடையில் எதிர்பாராது நிகழும் சம்பவங்களினால் விளையும் நகைச்சுவையினையே சுட்டிக்காட்டத் துணிகிறேன்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய செய்தி. எங்கள் நாடகக் குழுவில் நடைபெற்ற நிகழ்ச்சி. பொள்ளாச்சி நாடக மேடையில் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதிய ”காலவ ரிஷி”  நாடகம் நடந்து கொண்டிருந்தது.

காலவ முனிவர் ஆற்றின் நடுவே நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மண்டு, கமண்டு என்னும் இரு சீடர்கள். அவர்களும் கரையருகே கண்களை மூடிய வண்ணம் வீற்றிருக்கிறார்கள்.

திரை உருண்டு உயர்ந்ததும் சித்ரசேனன் என்னும் கந்தர்வன், ஊர்வசி சமேதனாய் உல்லாசத்துடன் விமானத்தில் பறந்து வருகிறான். விமானம் ஆற்றைக் கடந்து செல்லும்போது சித்ரசேனன் தன் வாயி லிருந்த தாம்பூலத்தைக் கீழே உமிழ்கிறான். அது ஆற்றில் கண்களை மூடிக் கைகளை நீட்டி நிஷ்டையிலிருந்த காலவ முனிவரின் வலது கரத்தில் விழுகிறது. கரத்தில் ஏதோ விழுந்து நிஷ்டை கலைக்கப்பட்டதும் காலவர் நாற்புலமும் பார்க்கிறார் சினத்துடன் சீடர்களை அழைக்கிறார், பிறகு ஞான திருஷ்டியால் உண்மை அறிந்து ஏதோ சபதம் செய்கிறார். இதன் காரணமாக கிருஷ்ணார்ஜுன யுத்தம் நடக்கிறது. இது நாடகக்கதை.

காலவர் நிஷ்டையிலிருக்கும் நிலையில் காட்சி தொடங்கியது. அன்று காலவராக வேடம் புனைந்து இருந்தவர் திரு. மாதவராவ் என்னும் சிறந்த ஹாஸ்ய நடிகர். சாதாரணமாக வீட்டிலேயேகூட அவருடைய நடவடிக்கைகள் எங்களுக்குச் சிரிப்பூட்டுவதாக இருக்கும். காலவரின் சிஷ்யர்கள் மண்டு, கமண்டு, வேடங்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கே. கே. பெருமாள் இருவரும் நடித்தார்கள். மேலே பறந்து செல்லும் கந்தர்வன் சித்ரசேனனாக நான் நடித்தேன்.

நாடகம் அன்றுதான் முதன்முறையாக நடிக்கப் பெற்றதால், நடிகர்கள் அனைவரும் மிகவும் உணர்ச்சியோடு நடித்தார்கள். மேடையில் குறுக்கே கட்டப் பட்ட கம்பியில் இணைக்கப்பட்டிருந்த ஓர் அட்டை விமானத்தில் நான் ஊர்வசியுடன் பறந்து சென்றேன். ஆற்றின் நடுவே விமானத்தை நிறுத்தித் தாம்பூலத்தையும் உமிழ்ந்தேன். சபையில் ஒரே கரகோஷம். அதைத் தொடர்ந்து பெரும் சிரிப்பு. காட்சியை மக்கள் பிரமாதமாக ரசித்ததாக எண்ணிப் பூரிப்படைந்தேன் நான்.

"அடே மண்டு, கமண்டு' என்று கூச்சலிட்டு, ஆவேசத்துடன. "என் வலக்கரத்தில் உச்சிஷ்டத்தை உமிழ்ந்தவர் யார்?' என அலறினார், காலவராக வீற்றிருந்த நடிகர் மாதவராவ். மண்டுவும், கமண்டுவும்: "ஸ்வாமி' என ஓடி வந்ததும் சபையில் மேலும் சிரிப்பொலி அதிகரித்தது.

திரை மறைவில் மேலே விமானத்திலிருந்த எனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தலையை நீட்டிப் பார்த்தேன். சிஷ்யர்களாக நின்ற என். எஸ். கேயும், கே. கே. பெருமாளும் மாதவராவைப் பார்த்து வாயைப் பொத்தியவாறு சிரிப்புத் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்கள். சீடர்களின் சிரிப்பைக் கண்ட சபையோர் மேலும் கைதட்டிச் சிரித்தார்கள். மாதவராவ், இருந்த இடம் எனக்குத் தெரியவில்லை. இதற்குள் உள்ளேயும் சிரிப்பொலிகள் கேட்கத் தொடங்கின.

என். எஸ். கே. பேச வேண்டும். அவரோ பேச முடியாமல் "ஸ்வாமி! தங்கள்...தங்கள்......' என்று. தவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ” திரை விடுங்கள்', "திரை விடுங்கள்” என்று உள்ளே பல குரல்கள். திரை விடப்பட்டது. விமானம் கீழேயிறக்கப் பட்டது பிறகுதான் எனக்கு உண்மை விளங்கியது.
விமானம் காலவரைக் கடந்து செல்லும்போது, அந்த அட்டை விமானத்தில் நீட்டிக் கொண்டிருந்த, ஓர் ஆணி நிஷ்டையிலிருந்த முனிவரின் நீண்ட கொண்டையோடு கூடிய சடைமுடி டோப்பா'வையும் பூப்போல எடுத்துக் கொண்டு போய்விட்டது. விமானம் மறைந்ததும் நிஷ்டை கலைந்த காலவர் மொட்டைத் தலையில் உச்சிக் குடுமியோடு சபைக்கும் காட்சியளித்தார். உணர்ச்சியோடு வீற்றிருந்த அவருக்குக் கொண்டை பறிபோனதுகூடத் தெரியவில்லை. அவ்வளவு லகுவாக டோப்பாவைக் கொண்டு போயிருக்கிறது ஆணி. இந்த நிலையில் முனிபுங்கவரைப் பார்த்த, சிஷ்யர்களால் எப்படி வாய்திறந்து பேசமுடியும்? ரசிகர்களால்தான் எப்படிச் சிரிப்பை அடக்க முடியும்?

இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் சபையோர் விழுந்து விழுந்து சிரிக்கலாம். நாங்கள் என்ன செய்ய முடியும்? நடிகர்களுடைய நிலை எவ்வளவு கஷ்டம் பாருங்கள். இதாவது நகைச்சுவை நடிகர்கள் கலந்து கொண்ட கட்டம். நகைச்சுவையே இல்லாத உணர்ச்சிகரமான கட்டங்களில்கூட இவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படுவதுண்டு. ஒன்று சொல்லுகிறேன். முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முந்திய சம்பவம். மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நான் நடிகனாக இருந்தேன்.

திருப்பாதிரிப்புலியூரில் ஒரு நாள். அன்று :மனோகரன்' நாடகம். நான் மனோகரனாக நடித்தேன். நாடகம் நடந்து கொண்டிருந்தது
மனோகரனில் முக்கியமான காட்சி. சங்கிலிகளால் கட்டப்பட்டு ஆவேசங் கொண்ட நிலையில் நிற்கிறான் மனோகரன். ” என் மைந்தனா நீ' என்கிறார் தந்தை புருஷோத்தமன்.உடனே மனோகரன் ஆக்ரோஷத்துடன் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு எதிரே நிற்கும் காவலனின் வாளை உருவியபடியே தந்தையின்மீது பாய்கிறான்.

புருஷோத்தமன் பேச்சு முடிந்தது. நான் ”ஆ என்ன சொன்னீர்?’ என்று கர்ஜித்தபடி சங்கிலிகளைப் பிணைத்திருந்த சுருக்குக் கயிற்றை இழுத்தெறிந்து விட்டு எதிரே நின்ற காவலனின் உடைவாளை உருவிக் கொண்டு சிம்மாதனத்தில் வசந்தசேனையுடன் வீற்றிருந்த புருஷோத்தமனை நோக்கிப் பாய்ந்தேன். சபையில் ஒரே சிரிப்பொலி. எவ்வளவு ரசனைக் குறைவான சபையாயிருந்தாலும் சிரிக்கக் கூடிய கட்டம் அல்ல அது. எதிரே சிம்மாதனத்தில் வீற்றிருந்த புருஷோத்தமன் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது. ஒரு வினாடி எனக்கு ஒன்றும் புரியவில்லை.

பிறகு உண்மையை உணர்ந்தேன். என் உயிரே போய் விடும் போலிருந்தது. மனோகரனுடைய அப்போதைய நிலைமை மிகப் பரிதாபகரமானது. விஷயம் என்ன தெரியுமா? காவலனிடமிருந்து நான் உடைவாளை உருவியபோது என் கையோடு வந்தது கத்தியின் கைப் பிடி மட்டும்தான். கத்தி, பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வராமல் காவலனின் உறைக்குள்ளேயே தங்கிவிட்டது.

உணர்ச்சி வேகத்தில் நான் இதைக் கவனிக்க வில்லை. வெறும் கைப்பிடியோடு நின்ற மனோகரனின் நிலையைக் கண்டு யார்தான் சிரிக்க மாட்டார்கள் ? என்னுடைய நிலை மிக மிகப் பரிதாபகரமாக இருந்தது. நான் எப்படிச் சிரிக்க முடியும்? இப்படி மிகப் பரிதாபகரமாக எங்கள் பொறுமையைச் சோதிக்கும் கட்டங்கள் அநேகம் உண்டு.

இன்னொரு பரிதாபத்திற்குரிய சம்பவத்தைச் சொல்கிறேன். 1932ல் ஒருநாள். சந்திரகாந்தா நாடகம் கடந்து கொண்டு இருந்தது. சுண்டூர் இளவரசன் சந்திர வதனாவைப் பலாத்காரம் செய்யப் போய் உதை வாங்கும் கட்டம். நாடகத்தில் இது ஒரு சுவையான காட்சி.

பூங்காவில் சந்திரவதனா உலாவிக் கொண்டு இருக்கிறாள். சுண்டூர் இளவரசன் அங்கு வருகிறான். தனக்கு அவள் மீதுள்ள தணியாத காதலைப் பற்றி விவரிக்கிறான் சந்திரவதனா அவனை விரும்ப மறுக்கிறாள். கடைசியில் காமவெறி கொண்ட இளவரசன் அவளைப் பலாத்காரம் செய்ய முயல்கிறான். சந்திரவதனா கூச்சலிடுகிறாள். அவள் காதலன் ராகவரெட்டி திடீரென்று தோன்றி, சுண்டூர் இளவரசனை அடித்து வீழ்த்திச் சந்திரவதனாவைக் காப்பாற்றுகிறான். காட்சி இவ்வாறு நடைபெற வேண்டும்.
இந்தச் சுவையான காட்சி தொடங்கியது. சுண்டூர் இளவரசன் வந்தார். சந்திரவதனாவிடம் தனது காதலின தன்மையைப் பற்றி அபாரமாக அளந்தார். தமிழில் மட்டுமல்ல. ஆசிரியர் திரு. எம். கந்தசாமி முதலியார் அவர்கள் பயிற்சியளித்திருந்தபடி ஆங்கிலத்திலும் தான் கொண்ட ”லவ்"வைப் பற்றிப் பொழிந்து தள்ளினார். பலிக்கவில்லை. கடைசியாக,

'அட்டியின்றிக் கட்டி
முத்த மிடாவிடில் நானே-உன்னைத்
திட்டம் பலாத்காரம் செய்குவேன்
சத்தியம் தானே'

என்று பாட்டிலேயே சத்தியமும் செய்துவிட்டு சக்திர வதனாவைப் பலாத்காரம் செய்வதற்குப் பாய்ந்தார்.

எங்கே ராகவரெட்டி? காணோம் அவரை. சந்திர வதனாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எதிரே காதலரைக் காணவில்லை. வேறு எங்கிருந்தாவது வரக்கூடுமென நம்பி இளவரசனின் பிடியிலிருந்து திமிறுவதுபோல் சிறிது நடித்தாள். ராகவரெட்டி வரவேயில்லை. திரை மறைவில் பல குரல்கள், ராகவ. ரெட்டியைத் தேடின. முதுகில் அடி விழுவதை எதிர் பார்த்து நின்ற சுண்டூர் இளவரசனுக்கு ஒரே திகைப்பு. பலாத்காரம் செய்யக் கையைப் பிடித்தாயிற்று. வழக்ககம் போல் அறை விழவில்லை. நெருக்கடியான கட்டம். பின்னால் திரும்பிப் பார்க்கவும் கூடாது. என்ன செய்வார் இளவரசன்? சந்திரவதனா பெண் வேடம் புனைந்த ஆணாக இருந்தாலாவது சிறிது அதிகமாக நடிக்கலாம். அதற்கும் வழியில்லை. அவள் நிஜமாகவே பெண். அதிலும் மங்கைப் பருவம் கடந்த பெண். பலாத்காரம் செய்யப் பிடித்த கையை விடவும் முடியாமல் வேறு வழியும் தோன்றாமல் திண்டாடினார் இளவரசன்.

ராகவரெட்டி எங்கோ ஒரு மூலையில் அமைதியாக உறங்குகிறார் என்பது மட்டும் புரிந்தது. அரங்கின் உட்புறம் அமர்க்களப்பட்டது சுபேதார் அண்ணாசாமியாக வேடம் தரித்திருந்த எங்கள் பெரியண்ணா (திரு. டி. கே. சங்கரன்) அவர்களின் குரல் உட்புறம் பயங்கரமாக ஒலித்தது. அவர் கையில் வைத்திருந்த சவுக்கும் யார் மீதோ சாத்துபடி ஆயிற்று. ”பளார்-பளார்’ என்று ஓசையுடன் விழுந்த சில பூசைகளின் ஒலியும் கேட்டது. சந்திரவதனாவும் சுண்டூர் இளவரசனும் மேடையில் பலாத்காரக் கட்டத்தில் நின்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.

சபையோருக்கு ஒருவாறு விஷயம் விளங்கி விட்டது. அவர்களென்ன இதற்காகப் பரிதாபப்படவா செய்வார்கள். விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். நிலையைக் கண்டு சபையிலும் உள்ளேயும் ஒரே களேபரமாயிருந்தது.

திடீரென்று பேய் அறைந்தது போன்ற ஒரு பயங்கரமாக அடி இளவரசனின் முதுகில் விழுந்தது. அவ்வளவுதான். அறைந்தபின் ராகவரெட்டியால் கீழே இழுத்துத் தள்ளப்பட வேண்டிய இளவரசன் அறை பட்டவுடனேயே விழுந்துவிட்டான். ஐயோ பாவம்' நல்ல உறக்கம் கலைக்கப்பட்டதால் உண்டான கோபம்; உள்ளே தான் வாங்கிய பலத்த அடிகளால் ஏற்பட்ட ஆத்திரம், எல்லாவற்றையும் சேர்த்து, சுண்டூர் இளவரசனைப் பலங்கொண்ட மட்டும் தாக்கிவிட்டார், அந்த ராகவரெட்டியார். கீழே விழுந்தபின் மீண்டும் எழுந்து உறுமிவிட்டுப் போகவேண்டிய சுண்டூர் இளவரசன் அன்று எழுந்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு, எப்படியோ ஒருவகையாகத் தட்டுத்தடுமாறி உள்ளேபோய்ச் சேர்ந்தார். பலாத்காரம் செய்யப் போய்ப் பரிதவித்த, அந்த பரிதாபத்துக்குரிய சுண்டூர் இளவரசன் வேறு யாருமல்லன்; அடியேன்தான். கும்பகர்ணனின் சேவையிலிருந்து விடுபட்டு உள்ளே அறையும் பட்டுவந்த உணர்ச்சியில் என்னைப் பேயறை அறைந்த அந்த ராகவரெட்டியார் யார் தெரியுமா? என் அருமைத் தம்பி டி. கே. பகவதி!

நடிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் இவை போன்ற நகைச்சுவைக் கட்டங்கள் மேடையில் அடிக்கடி நிகழ்வதுண்டு. என்ன செய்வது? இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துத்தான் நாங்கள் நடிக்க வேண்டும்.
இன்னொரு அற்புதமான நிகழ்ச்சி. இராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். சீதா கல்யாணத்தில், இராமர் சிவதனுசை வளைக்கும்போது அது ஒடிந்து விடுகிறது. ஜானகி, ராமருக்கு மாலை சூட்டுகிறாள். இது கதை. சபையில் பல அரசர்கள் கூடியிருக்கிறார்க ளல்லவா? அவர்கள் எல்லோரும் முதலில், சிவதனுசை வளைக்க முயல்கிறார்கள். யாராலும் முடியவில்லை. எதிர்பாராதபடி ஒருநாள் சபையிலிருந்த அரசர் ஒருவர் விஷயம் தெரியாமல் வில்லில் கையை வைத்து அது முறிவதற்காக செய்திருந்த சூட்சுமத்தை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். இராமர் வளைக்கும்போது முறிய வேண்டிய வில்லை அந்த அரசரே முறித்து விட்டார். இப்போது நிலைமை என்ன? எப்படிச் சமாளிப்பது? ஜனக மகாராஜா வேடம் புனைந்தவர் ஒரு பழைய நடிகர். அனுபவசாலி. வில் முறிந்ததும் அவர் திகைத்துப் போய் சபையோரின் சிரிப்புக்கிடையே காவலரை நோக்கி, “ சிவதனுசைக் கொண்டு வாருங்கள் என்றால், வேறு ஏதோ ஒரு விளையாட்டு வில்லைக் கொண்டு வந்து விட்டீர்களே. மடையர்களே, போய் சிவதனுசை எடுத்து வாருங்கள்' என்றார் பிறகு காட்சி ஒருவாறு சமாளிக்கப்பட்டது.

நகைச்சுவை மிகவும் சிறப்பான ஒரு பகுதி தான். ஆனால் இந்த மாதிரி எதிர்பாராத நகைச்சுவை ஏற்பட்டு எங்களைத் திண்டாட்டத்தில் வைத்து விடும் போதுதான் மிகவும் கஷ்டமாய் இருக்கும். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் எப்படியாவது சாதுர்யமாகச் சமாளிக்க வேண்டும்.

-சென்னை வானொலி 5-11-1959

தொடர்புள்ள பதிவுகள்:


திங்கள், 25 ஏப்ரல், 2016

ரா.பி. சேதுப்பிள்ளை -2

ரா.பி. சேதுப்பிள்ளை
வெங்கடேசன்

ஏப்ரல் 25. ”சொல்லின் செல்வர் ”ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நினைவு தினம்.

அவர் நினைவில், வெங்கடேசன் அவர்கள் தினமணியில் 2011-இல் எழுதிய கட்டுரை இதோ!


================


தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்கறிஞர், மேடைப்பேச்சாளர் என பன்முகம் கொண்ட பாவலர். தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.  உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.

பிறப்பு: சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2 ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் தம்பதியினருக்குப் பதினோராவது பிள்ளையாகப் பிறந்து வளர்ந்தார்.

கார்காத்த வேளாளர் குலத்தில் சேது பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்கு சேது என்று பெயர் சூட்டினர். இரா. பி. சேதுப்பிள்ளையின் முன்னெழுத்துகளாக அமைந்த 'இரா' என்பது இராசவல்லிபுரத்தையும் 'பி' என்பது 'பிறவிப்பெருமான்பிள்ளை' அவர்களையும் குறிப்பன.

கல்வி: ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார். பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங் கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்கு தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.

தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார். சட்டப்படிப்பை முடித்து நெல்லை திரும்பிய சேது, நெல்லையப்ப பிள்ளையின் மகள் ஆழ்வார்ஜானகியை மணந்தார்.

பணிகள்:  சேதுப்பிள்ளை 1923 ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். நெல்லையில் வழக்குரைஞர் தொழிலை மேற்கொண்ட சேதுப்பிள்ளை ,நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பணியின் போது இவர் நெல்லை நகரில் தெருக்களின் பெயர்கள் தவறாக வழங்கி வந்ததை மாற்றி அத்தெருக்களின் உண்மையான பெயர்கள் நிலை பெறுமாறு செய்தார்.

வழக்குரைஞராக இருப்பினும் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். இவரின் செந்தமிழ்த் திறம் அறிந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவரைத் தமிழ் அறிஞராக ஏற்றுக் கொண்டு தமிழ்த் துறையில் தமிழ்ப் பேரறிஞர் பதவியை அளித்தது. சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து விபுலானந்தர் சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் பணிபுரிந்தார். தம் மிடுக்கான செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தார். மொழி நூலை இளங்கலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பித்துத் தமிழுக்கு இணையான தம் ஆங்கிலப் புலமையையும் வெளிப்படுத்தினார்.


1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி இனிது நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.


சொற்பொழிவுகள்: பல்கலைக்கழகப் பணிகளை சிறப்பகச் செய்த சேதுப்பிள்ளை, தமதுசெந்தமிழ்ப் பேச்சால் சென்னை மக்களை ஈர்த்தார். இவரின் மேடைப் பேச்சு ஒவ்வொன்றும் மேன்மை மிகு உரைநடைப் படைப்பாக அமைந்தது. அவரின் அடுக்குமொழித் தமிழுக்கு உலகமெங்கும் அன்பான வரவேற்பும், ஆர்வம் மிகுந்த பாராட்டும் கிடைத்தன. சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் அவரது கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது. அச்சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது. சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.


படைப்புகள்: இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. பதினான்கு கட்டுரை நூல்கள் மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்தார். சேதுப்பிள்ளையின் நூல்களுள் பலவும் அவர் தமிழக வானொலி நிலையங்களில் ஆற்றிய இலக்கியப் பொழிவுகளின் தொகுப்புக்களாகும். இன்னும் சில நூல்கள் அவர் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புக்களாக அமைந்தவை. எனவே அவரது உரைநடை மேடைப் பேச்சின் இயல்பினில் அமைந்ததாக உள்ளது. ஆதலின் அவரது எழுத்தும்பேச்சும் வேறுபாடின்றி அமைந்துள்ளன. இலக்கிய அமைப்புகளில் அவர் ஆற்றிய எழுச்சி மிகுந்த பொழிவுகளே இனிய உரைநடையாக வடிவம் பெற்றன.

இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் "திருவள்ளுவர் நூல் நயம்" என்பதாகும். படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, "தமிழகம் ஊரும் பேரும்" என்பதாகும். இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது. மேலும்,

    சிலப்பதிகார நூல்நயம்

    தமிழின்பம்

    தமிழ்நாட்டு நவமணிகள்

    தமிழ்வீரம்

    தமிழ்விருந்து

    வேலும்வில்லும்

    வேலின்வெற்றி

    வழிவழி வள்ளுவர்

    ஆற்றங்கரையினிலே

    தமிழ்க்கவிதைக் களஞ்சியம்

    செஞ்சொற் கவிக்கோவை

    பாரதியார் இன்கவித்திரட்டு போன்ற நூல்கள் இவரின் படைப்புகளாகும்.


சிறப்புகள்: சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.

அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருது வழங்கியது. சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது.

உரைநடை நயங்கள்: இரா.பி. சேதுப்பிள்ளையின் உரை நடைகளில் அடுக்குத் தொடர், எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகியன அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு - அருமையான தமிழ்ச் சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?

“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. அவரது சொன்மாரி செந்தமிழ்ச் சொற்கள் நடம்புரிய, எதுகையும் மோனையும் பண்ணிசைக்க, சுவைதரும் கவிதை மேற்கோளாக, எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும்”அன்பழகன் குறிப்பிடுகின்றார்.

    "வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியம்போல் பொலிவிழந்திருக்கின்றன."

    "அறம் மணக்கும் திருநகரே! சில காலத்திற்கு முன்னே பாண்டி நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது; பஞ்சம் வந்தது; பசிநோயும் மிகுந்தது; நாளுக்குநாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது; நெல்லுடையார் நெஞ்சில் கல்லுடையார் ஆயினர். அப்போது அன்னக் கொடி கட்டினார் சீதக்காதி. 'கார்தட்டினால் என்ன? கருப்பு முற்றினால் என்ன? என் களஞ்சிய நெல்லை அல்லா தந்த நெல்லை - எல்லார்க்கும் தருவேன்’ என்று மார்தட்டினார் - இதுவன்றோ அறம்?"

    "தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்."

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

    ஆற்றங்கரையினிலே (நூல்)

    கடற்கரையினிலே (நூல்)

    கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் (நூல்)

    தமிழ் விருந்து (நூல்)

    தமிழக ஊரும் பேரும் (நூல்)

    தமிழர் வீரம் (நூல்)

    தமிழின்பம் (நூல்)

    மேடைப் பேச்சு (நூல்)

    வேலின் வெற்றி (நூல்)

மறைவு: தமிழ் வளர்ச்சிக்காகத் தமது இறுதிக்காலம் வரை பாடுபட்ட சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை 1961 ஏப்ரல் 25 இல் 65 -ஆம் வயதில் மறைந்தார்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ரா.பி.சேதுப்பிள்ளை

மு.வரதராசனார் -1

ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் அகல்விளக்கு
தெ. ஞானசுந்தரம்

ஏப்ரல் 25. பேராசிரியர் மு.வரதராசனாரின் (1912-1974) பிறந்த தினம்.  அவர் நினைவில், தெ. ஞானசுந்தரம் தினமணியில் 2012-இல் எழுதிய கட்டுரை இதோ!
==============


சென்ற நூற்றாண்டில் எத்தனையோ பேராசிரியர்கள் பணிபுரிந்தார்கள்; ஓய்வு பெற்றார்கள்; மறைந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் இன்று நினைவுகூரப்பட்டுப் போற்றப்படவில்லை. ஒரு சிலரே மறைந்தும் மறையாமல் வாழ்கிறார்கள். அவர்களில் சிலரை மாணவர்கள் மட்டும் நினைவுகூர்கிறார்கள்; மிகச் சிலரையே எல்லோரும் நினைந்து போற்றுகிறார்கள். அத்தகைய மிகச் சிலருள் ஒருவரே பேராசிரியர் மு.வ.

இருபதாம் நூற்றாண்டு கண்ட நிகரற்ற பேராசிரியர் டாக்டர் மு.வ. என்பது வரலாற்று உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.வ. என்னும் இரண்டெழுத்து, தமிழ் மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே ஒலித்த இரண்டெழுத்து மந்திரம் ஆகும். வட ஆர்க்காடு மாவட்டத் திருப்பத்தூரில் பிறந்த மு.வ. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். தனியே படித்துப் புலவர் தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சி பெற்று, அவ்வூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகி, பின் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகத் திகழ்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒளிர்ந்து புகழின் உச்சியில் மறைந்தார். அவரது வாழ்வு எளிய குடும்பத்தில் பிறந்து ஆர்வத்தாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றம் கண்ட பெருவாழ்வு நேரிய வாழ்வு.

ஆசிரியர்கள் மூன்று வகை. சிலர் மாணவர்களைப் பகைவர்களைப்போல் நினைப்பார்கள். இவர்கள் மாணவர்கள் செய்யும் சிறு தவறுகளைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் தண்டிப்பார்கள். சிலர், மாணவர்களைத் தங்களிடம் பாடம் கற்க வந்தவர்களாக மட்டும் கருதுவார்கள். இவர்கள் பாடத்தை மட்டும் கற்பித்து மாணவர்களைத் தேர்வுக்கு ஆயத்தம் செய்வார்கள். சிலர் மாணவர்களைத் தங்கள் மக்களாகக் கருதி, எல்லா வகையிலும் துணை நிற்பார்கள். இவர்களே மாணவர்களை வாழ்வாங்கு வாழத்தக்கவர்களாக உருவாக்குபவர்கள். இவற்றில் இறுதிவகையைச் சேர்ந்தவர் பெருந்தகை மு.வ.

அவர் மாணவர்களுக்குப் பாடம்சொல்லும் ஆசிரியராக மட்டுமன்றி ஆதரவு நல்கும் தந்தையாகவும் திகழ்ந்துள்ளார். அவர்கள் குடும்பச் சூழல்நிலையை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிந்துள்ளார். மறைந்த பேராசிரியர் பொன். செüரிராசன் போன்ற எளிய மாணவர்களைத் தம் வீட்டிலேயே தங்கச்செய்து உணவும் தந்து படிக்க வைத்துள்ளார். மறைந்த பேராசிரியர் ப. இராமன் போன்ற சிலருக்கு விடுதிக்கட்டணமும் வேறு சிலருக்குக் கல்லூரிக் கட்டணமும் கட்டி உதவி புரிந்துள்ளார். இவ்வுதவிகளை எல்லாம் அடுத்தவருக்குத் தெரியாமலே செய்துள்ளார். மாணவர்கள் நல்வாழ்வுக்காகப் பல்கலைக்கழகத்தோடு போராடியுள்ளார். அவர் ஆசிரியப் பணியைத் தாம் வாழ்வதற்கான பணியாக மட்டும் கருதாமல் மாணவர்களை வாழ்விக்கும் பணியாகக் கருதி அரும்பாடுபட்டுள்ளார்.

பெரும்பாலும் கல்லூரி முடிந்ததோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பு அறுந்து போய்விடுகிறது. அதன்பின்பு அவர்கள் யாரோ, இவர்கள் யாரோ. ஆனால் மு.வ. மாணவர்களோடு கொண்டிருந்த தொடர்பு கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பும் வளர்ந்து, வாழ்நாள் உறவாக நிலைபெற்றுள்ளது. அவர் பலருக்கு வேலை தேடும் முயற்சியில் உதவியுள்ளார்; வீடு கட்டுவதற்குப் பணம் கொடுத்து உதவியுள்ளார்; பலரை நூல்கள் எழுதச் செய்து, அவற்றைப் பாடநூல்களாக வைத்து வருவாய்க்கு வழிசெய்துள்ளார். வாழ்க்கைச் சிக்கல்களுக்குக் கடிதங்கள் எழுதி வழிகாட்டியுள்ளார். அவர் அளவுக்குத் தம் மாணவர்களுக்குக் கடிதம் எழுதிய பேராசிரியர் மற்றொருவர் இல்லை என்றே சொல்லலாம்.


அவர் மாணவர்களை மதிப்போடு நடத்தியவர். தம் நாவல்கள் குறித்து மாணவர்கள் சிலரிடம் விவாதம் செய்துள்ளார். படிக்கக் கொடுத்துக் கருத்துக் கேட்டுள்ளார். தம் முதலணி மாணவர் ம.ரா.போ. குருசாமியின் கருத்தை ஏற்று, நாவலுக்கு வைத்திருந்த முருங்கைமரம் என்ற பெயரைச் "செந்தாமரை' என்று மாற்றிக்கொண்டார். ஒரு சிறுகதைக்கு அவர் தெரிவித்த "விடுதலை' என்னும் தலைப்பையொட்டி "விடுதலையா?' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், நான்கு நாவல்களுக்குத் தம் முதல்அணி மாணவர்கள் நால்வரையும் ஒவ்வொரு நாவலுக்கு அணிந்துரை எழுதச் சொல்லி அவர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

மற்றப் பேராசிரியர்களெல்லாம் தமிழைப்பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவர் ஒரு படி மேலே சென்று தமிழர்களைப் பற்றியும் சிந்தித்தார். அதன் விளைவே அவர் எழுதிய நண்பர்க்கு, தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு ஆகிய கடித இலக்கியங்கள். தமிழர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அவற்றின் உள்ளடக்கமாக அமைந்தது. இந்தச் சமுதாய அக்கறை அவரை ஏனைய தமிழாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.


மாணவர்கள் மட்டுமன்றிப் பிறரும் அவர் அறிவுரைகளால் வாழ்ந்துள்ளார்கள். தங்கள் குடும்பச் சிக்கலைத் தெரிவித்து வழிகேட்டுக் கடிதம் எழுதியவர்கள் பலர். ஒருமுறை சூழ்நிலையால் வாழ்க்கையில் தவறிவிட்ட தன் மனைவியைக் கொன்றுவிடலாமா என்று தோன்றுவதாக ஒருவர் கடிதம் எழுதி அவருடைய அறிவுரையை நாடினாராம். அதற்கு மு.வ., அப் பெண்ணை மனைவியாக ஏற்க முடியாவிட்டாலும், இரக்கங்காட்டி வீட்டு வேலைக்காரி போலவாவது இருந்துவிட்டுப்போக அனுமதிக்கலாம் என்று பதில் எழுதினாராம். மு.வ.வின் எழுத்து வாழ்விக்கும் எழுத்து என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

அவருடைய தமிழ்ப்பணிகள் எல்லாம் காலத்திற்கு ஏற்பத் தமிழை வளர்க்கும் பணிகளாக அமைந்தன. திரு.வி.க.வால் எளிமைக் கோலம் பூண்ட தமிழ்நடையை எளிமையின் எல்லைக்குக் கொண்டுசென்றவர் மு.வ. எளிதில் புரியும் திருக்குறளுக்கு விளங்காத நடையில் உரைகண்டு பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உரையாசிரியர்கள் அதனை ஏற்றி வைத்திருந்தார்கள். அவர் குறளுக்கு எளிய உரைகண்டு கையடக்கப் பதிப்பாக வெளியிட்டு அதனை எளியவரும் கற்கும்படி ஆக்கினார். சராசரித் தமிழ் மக்களுக்குப் புரியாமல் இருந்த சங்கப்பாடல்களை விளக்கிப் புரியும் தமிழில் கட்டுரைகளாக வடித்து, விருந்து என்ற பெயரிலும், செல்வம் என்ற பெயரிலும் வழங்கினார். அவர் காலத்தில் வளர்நிலையில் இருந்த இலக்கியத் திறனாய்வுப் போக்கில் சிலப்பதிகாரம் குறித்து, இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி ஆகிய நூல்களை எழுதினார். இவை பண்டை இலக்கியங்களைப் பரப்புதற்கு மேற்கொண்ட ஆக்கப் பணிகள்.


இலக்கியத் திறனாய்வும் மொழியியலும் அவர் காலத்தில்தான் தமிழில் புதிய துறைகளாகத் தோற்றம் கொண்டன. அவற்றின் வளர்ச்சிக்காக. இலக்கியத் திறன், இலக்கிய மரபு, இலக்கிய ஆராய்ச்சி, எழுத்தின் கதை, மொழியின் கதை, மொழி வரலாறு, மொழிநூல், மொழியியற் கட்டுரைகள் முதலியவற்றை எழுதினார். இவை புதிய துறைகளில் தமிழ் வளர்வதற்கு ஆற்றிய அரும்பணிகள்.

இலக்கிய உலகில் மு.வ. பெற்ற தனிச் சிறப்புக்குக் காரணம் அவரது படைப்பிலக்கியத் திறனே. ஆங்கில இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் மு.வ. அதன் பயனாக ஆங்கில இலக்கியப் போக்குகளைத் தமிழில் புகுத்தும் முயற்சியிலும் தலைப்பட்டார். நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய வகைகளில் தம் படைப்பாற்றலைச் செலுத்தினார். சிறுகதையில் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை. நாடகத்தில் ஓரளவே வெற்றி கண்டார். ஆனால், நாவல் இலக்கியத்தில் தனித்தடம் பதித்தார்.

அவரைத் தமிழ் வகுப்பறைகளிலிருந்து தமிழர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவை அவருடைய நாவல்களே. பொதுவாக ஆசிரியர் கூற்றாகவே நாவல்கள் அமையும். ஆங்கில நாவல்களில் பாத்திரங்களே கதை சொல்லுவதாக அமைந்திருப்பது கண்ட மு.வ., "கள்ளோ காவியமோ' என்னும் நாவலை மங்கையும் அருளப்பரும் மாறி மாறிச் சொல்வதாகப் படைத்தார். கதைத் தலைவனின் நண்பன் வேலய்யன் கதையைச் சொல்வதாக அகல்விளக்கினைப் படைத்தார். ஆசிரியர் கூற்றாகக் "கயமை' நாவலை அமைத்தார். கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, வாடா மலர், அல்லி, கயமை, கரித்துண்டு முதலிய நாவல்களைப் படிக்காத தமிழ் மாணவர்களோ, சுவைஞர்களோ சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இல்லை என்றே சொல்லலாம். அந்த நாளில் இந்த நாவல்களைப் பலர் திருமணங்களில் பரிசாக வழங்கி வந்தனர்.

சிலர் சொல்வதுபோல் அவருடைய படைப்புகள் நாவல் இலக்கணத்திற்கு முற்றிலும் பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் அவை நன்னெறி காட்டி இளைஞர்களைத் திருத்துவன; சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வுகாட்டுவன. இல்லறத்தைத் தொடங்கும் காதலர்கள் பிறர் என்ன கருதுவார்களோ என்று எண்ணாமல், ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்தல் வேண்டும், இல்லையென்றால் பிரிந்து தொல்லைப்பட நேரிடும் என்னும் அறிவுரையை வழங்குவது கள்ளோ காவியமோ. உணர்ச்சிக்கு முதன்மை தாராமல் அறிவு வழி வாழ்ந்தால் வாழ்க்கை முற்றும் துளசியைப்போல் மணமுடையதாக அமையும், உணர்ச்சி வயப்பட்டு வாழ்ந்தால் ஒருபகுதி அழகாக அமைய, ஏனைய பகுதிகள் வெறுக்கத்தக்கனவாய் அரளிச் செடிபோல் ஆகிவிடும் என்று இளைஞர்களுக்கு எச்சரிக்கையூட்டுவது அகல்விளக்கு. முறையற்ற வேகம் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் என்னும் உண்மையை உணர்த்துவது வாடாமலர். ஒருவனோடு வாழும்போது மற்றொருவனை எண்ணாமல் அவனுக்கு நேர்மையாக நடந்துகொண்டால் அதுவே "கற்பு' என்று வாழ்க்கையை இழந்தவர்களுக்கும் வாழ வழி காட்டுவது கரித்துண்டு. அவர் நாவல்கள் பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமல்ல பழுதுபார்க்கும் நாவல்கள். அவர் கலை கலைக்காகவே என்று கருதாமல் கலை வாழ்க்கைக்காகவே என்னும் கருத்தில் வேரூன்றி நின்றவர். அவர் எழுத்துகளில் உருவான அல்லி, மங்கை, பாவை, தேன்மொழி, வளவன், எழில், நம்பி போன்ற பெயர்களை அன்றைய பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததே அவர் நாவல்கள் பெற்ற வெற்றிக்குச் சான்றாகும்.

அவர் நாவல்களின் சிறப்பை விளக்கும் நிகழ்ச்சி ஒன்று. மு.வ., மயிலை மாணிக்கஞ்செட்டியார், அவர் மைந்தர் மா. சம்பந்தம் போன்றவர்களோடு வடநாட்டுச் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது காஷ்மீரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவரும் மா. சம்பந்தமும் அறியாமல் ராணுவப் பாதுகாப்பு எல்லைக்குள் சென்றுவிட்டனர். உடனே காவலர்கள் இருவரையும் ராணுவ அதிகாரிமுன் அழைத்துச் சென்று நிறுத்திவிட்டார்கள்.

தமிழரான ராணுவ அதிகாரி பெயரைக் கேட்டுள்ளார். மு.வரதராசன் என்று தெரிவித்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்து, நாவல்கள் எழுதும் மு.வ.வா? என்றவாறு வணங்கினாராம். பின்னர் சிற்றுண்டி அளித்து வண்டியில் ஏற்றி அவர்கள் இருந்த இடத்திற்கு அனுப்பிவைத்தாராம். அவர் எழுத்து அவரைக் காத்ததோடு சில நாள்களாய்த் தமிழ்நாட்டு இட்லியைக் காணாமல் இளைத்துப் போயிருந்த வாய்க்கு இனிய உணவையும் ஈட்டித் தந்துவிட்டது.

வள்ளுவமும் காந்தியமும் அவர் கைக்கொண்ட நெறிகள். அவர் பகவத் கீதையை தூற்றாமலே திருக்குறளைப் போற்றியவர். அவர் திருக்குறளை நடத்தியவர் மட்டுமல்லர், அதன்வழி நடந்தவர். அவரைக் குறை சொன்னவர்கள் உண்டு. அவர் யாரைப் பற்றியும் குறை சொன்னதே இல்லை. மாணிக்கவாசகரிடத்தும் தாயுமானவரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளிய பாடல்களைப் பலகால் ஓதி ஓதி உள்ளத்தைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றவர். ஆனால், திருத்தலங்களுக்குச் செல்வதிலோ, சமயச் சின்னங்களை அணிந்துகொள்வதிலோ விருப்பம் இல்லாதவர். தேசியத்தை மறவாத தமிழ்ப்பற்றும், இறைப்பற்றை இகழாத சீர்திருத்தமும், பிறர் மனதைக் காயப்படுத்தாத எழுத்தாற்றலும் அவருடைய சிறப்பு இயல்புகள்.

தம் புகழ்கேட்க நாணிய சான்றோர் அவர். முனைவர் பட்டம் பெற்றபோது, திருப்பத்தூரில் பாராட்டு விழா எடுக்க முயன்றனர். தாம் அப் பட்டம் பெற்றது "நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குப் போவது போன்ற ஒரு செயல்தான்' என்று தெரிவித்து அதனைத் தவிர்த்தார். தமிழக அரசு இயல்தமிழ் விருது வழங்கியபோது அவரிடம் மாணவர்கள் கூட்டமாகச் சென்று பாராட்டு விழா எடுக்க இசைவு கேட்க, "இத்தனை பேர் வந்து பாராட்டியதே போதும், காலத்தை வீணாக்க வேண்டா' என்று கூறி மறுத்துவிட்டார். அவ்வாறே மணிவிழா எடுக்க மாணவர்கள் முயன்றபோதும் கண்டிப்போடு கடிதம் எழுதித் தடுத்துவிட்டார்.

அவர் தூய வாழ்வு வாழ்ந்த கொள்கைவாதி. வாழ்நாள் முழுவதும் வெந்நீர் பருகாதவர். ரஷியா சென்றிருந்தபோது குளிர் தாங்காமல் வாடினார். அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தவர்கள் குளிரைத் தாங்க மது அருந்துமாறு வற்புறுத்தினார்கள். மறுத்துவிட்டார். தேநீர் அருந்துமாறு வேண்டினார்கள். வேண்டா என்று ஒதுக்கிவிட்டார். வெந்நீராவது பருகுங்கள் என்றார்கள். தாம் வெந்நீர் அருந்துவதில்லை என்று தம் கொள்கையைத் தெரிவித்தார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபோது, ""எனக்கு உதவுவதாயின், இன்னும் ஒரு போர்வை கொடுங்கள்'' என்று கூறிப் பெற்று அதனைப் போர்த்திக்கொண்டு உறங்கினார். இந்தக் கொள்கை உறுதியோடு அவர் தம் வாழ்க்கை முடிவினை எதிர்கொண்டார். அவர் இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் தம் பிள்ளைகள் மூவரும் ஆங்கில மருத்துவம் பயின்றிருந்தும் அவர் அதனை ஏற்க மறுத்தார். அவர் அதனை ஏற்றிருந்தால் ஒருவேளை இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்பது பலரது கருத்து.

அவர் கால்கள் எந்த அரசியல் தலைவர் வீட்டையும் நோக்கி நடந்ததில்லை. ஆனால், அவரை நாடி அவர் வீட்டுக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்தார்கள். அவர் பெரும்பதவிகளை நாடிச் செல்லவில்லை. பதவிகளே அவரை நாடி வந்தன. அவர் இறுதிச் சடங்கில் காமராஜர், அன்பழகன், எம்.ஜி.ஆர். போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர் என்பதே அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அறிஞர் என்பதனைக் காட்டும்.

வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் புகழையும் கொண்டாட்டத்தையும் வேண்டாத அவரை நாடிப் புகழ் குவிந்தது. உலகம் நூற்றாண்டு விழாக் கொண்டாடி அவரை நினைவுகூர்கிறது. இராமன் சொல்லையும் மீறி அவனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் செயல் அவன் அண்ணன்மீது கொண்ட அளவற்ற அன்பினைக் காட்டுவதுபோல், மு.வ.வின் கருத்துக்கு மாறாக எடுக்கப்படும் இந்த விழாக்கள் தங்கள் ஆசிரியர்மீது மாணவர்கள் கொண்ட அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகின்றன. அகல் விளக்கு எழுதிய மு.வ.வும் ஓர் அகல்விளக்கே. அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக உழைப்பே திரியாக ஒளி தந்த விளக்கு அது. அதன் ஒளி எங்கும் பரவட்டும்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு.வரதராசனார்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

புதுமைப்பித்தன் -1

தமிழ்ச் சிறுகதையின் தந்தை "புதுமைப்பித்தன்'

மு.பரமசிவம்

ஏப்ரல் 25. புதுமைப் பித்தன் பிறந்த தினம்.  அவர் நினைவில், தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!
=============மனிதன்! என்ன கம்பீரமான வார்த்தை!'' என்றார் இலக்கிய மேதை மாக்சிம் கார்க்கி.

 ""வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா!'' என்றார் கம்பர்.

 ""மனிதன், அவன் ஒரு புழு!'' என்றார் புதுமைப்பித்தன். அதுதான் அவர் வாழ்க்கையில் கண்ட விரக்தி, வேதனை, சகிப்புத்தன்மை எல்லாம் அவரை அப்படிப் பேசவைத்தது.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி சொக்கலிங்கம்-பர்வதம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் விருத்தாசலம்.

 தொடக்கக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணிபுரிந்த அவருடைய தந்தை ஓய்வு பெற்றதால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்ப நேர்ந்தது. அங்குள்ள ஆர்ச் யோவான் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார். 6 வயதிலேயே தாயை இழந்தார்.

 பின்னர், நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.,) பட்டம் பெற்று, பாரதி அன்பர் வ.ரா.வின் உதவியுடன் பத்திரிகை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1933 முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து - நைந்துபோன பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில் கதைகளைப் படைத்தார்.

 உலக இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படிப்பதில் வல்லவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரைகள், விமர்சனம், ஓரங்க நாடகம், மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பல படைப்புகளை வழங்கியுள்ளார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான்.

 நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன். ""கருத்தின் வேகத்தையே பிரதானமாக்கிக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது'' என்று புதுமைப்பித்தன் கூறியுள்ளார்.÷

 ""எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்தை உயிரோடு, உணர்ச்சியோடு பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த நடை, கையாளும் நடையின் பெருமிதத்துக்கு ஏற்ப மிக ஆழ்ந்த விஷயம்; கதையின் உருவமும் பூரணத்துவம் பெற்றது. உருவமும் கதைப்போக்கும் தனித்தன்மை பெற்றவை'' என்று புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றி கு.அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 1933-இல் இவருடைய முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்' காந்தி இதழில் வெளிவந்தது. 1934-இல் இருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. மணிக்கொடியில் வெளிவந்த முதல் சிறுகதை "ஆற்றங்கரைப் பிள்ளையார்'.

 இவரது நூல்கள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், புதிய ஒளி, காஞ்சனா, அன்று இரவு, ஆண்மை, விபரீத ஆசை, சித்தி முதலிய ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவரது அனைத்து சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் பிறமொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பல கதைகள் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன. "உலகத்துச் சிறுகதைகள்' என்ற நூலில், ரஷ்யா, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹாலந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளின், மொழிகளின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

 பதினைந்து ஆண்டுகளே எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில் கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத் தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

 "பொன்னகரம்' கதையில் வரும் அம்மாளு கணவனுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க, தன் கற்பை விலைபேசினாள் என்பது கதையின் கருத்து. இப்படிக் கருத்து மோதல் கதைகளையும், பிரச்னைகளை எழுப்பும் கதைகளையும் எழுதியது போலவே, "தினமணி'யில் "ரசமட்டம்' என்கிற பெயரில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி சிலரது மனதைப் புண்படுத்தியும், சிலரது மனதைப் பண்படுத்தியும் இருக்கிறார்.

 ஒரு காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் பேனா, கூர்மைமிக்க போர்வாளாக இலக்கிய உலகில் சுழன்று சுழன்று வீசியிருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு சமூக சிந்தனையாளர். ஏழை எளியவர்கள் படும் துன்ப துயரங்களைக் கண்டு கண்ணீர் வடித்தவர். அதற்கு சாட்சி "நாசக்காரக் கும்பல்' என்ற கதை. இக்கதையில் சோஷலிசம், எதார்த்தவாதம், காந்தியம், சாதியம் அனைத்தும் ஒன்றாகச் சங்கமித்து நிலப்பிரபுத்துவத்தின் ஆணவத்தை அடக்க முஷ்டியை உயர்த்துகிறது. 1936-ஆம் ஆண்டு எழுதப்பட்டது இக்கதை. அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஜமீன்களும், நிலப்பிரபுத்துவமும் சரிந்துகொண்டிருந்த காலம். இந்த எதார்த்த நிலையை எழுச்சியுடன் எடுத்துக்காட்டியுள்ளார் புதுமைப்பித்தன்.

 ""வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை'' (குறள்-872)

 என்னும் குறளின் கருத்துக்கு ஏற்ப, புதுமைப்பித்தன் புரட்சிப் பித்தனாக மாறி சமூகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை, அநியாயங்களைக் கண்டு இலக்கிய நயத்துடன் எதார்த்தமாக எழுதிக்காட்டினார். 1933-இல் திருவனந்தபுரம் சுப்பிரமணியம் மகள் கமலாவை மணந்தார். இவர்களுக்கு தினகரி என்கிற ஒரே ஒரு பெண் வாரிசு. அந்த அம்மையார் இன்று நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

 புதுமைப்பித்தன் திரையுலகிலும் கால்பதித்தார். மூன்று ஆண்டுகள் வசனகர்த்தாவாக இருந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த "ராஜமுக்தி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் புதுமைப்பித்தன்தான். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காந்தியடிகள் சுடப்பட்டு, இந்திய மக்கள் சோகத்தில் இருந்த நேரத்தில் புதுமைப்பித்தன் பூனாவில் இருந்தார். அந்தச் சமயத்தில் அவரின் நோய் உச்சத்தில் இருந்தது. உடனே மனைவியின் ஊரான திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அங்கு சிதம்பரம் என்பவர் புதுமைப்பித்தனுக்கு உதவிகள் பல செய்தும் பலனில்லாமல் போனது. 1948-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 2002-ஆம் ஆண்டு இவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அண்மையில் நடந்த தமிழ்ச் சிறுகதை கருத்தரங்கம் ஒன்றில், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதம் நடந்தது. ஆனால், முன்பே சொல்லிவிட்டார் தமிழறிஞரும் இலக்கியவாதியுமான டாக்டர் மு.வரதராசனார், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை புதுமைப்பித்தன்' என்று!

[ நன்றி : தினமணி ] 

தொடர்புள்ள பதிவுகள்: 
புதுமைப்பித்தன்