வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

வெண்பா வீடு - 1: இன்று ஏன் பல்லிளிப்பு?

என் நண்பன் ‘நம்பி’, அவன் மனைவி ‘நங்கை, அவர்கள் குழந்தைகள் யாவரும் இருக்கும் வீட்டின் பெயர் ‘வெண்பா வீடு’;

இது என் வீட்டிற்கு அருகில்தான்  உள்ளது. எல்லோரும் அங்கே ‘வெண்பா’க்கள் மூலமாய்த்தான் பேசிக்கொள்வார்கள்.


ஒரு நாள்  ‘வெண்பா வீட்'டிற்குள் நுழையும் போது, நான் கேட்டது:


நம்பி:


முன்தூங்கிப்  பின்னெழுந்துன் மூஞ்சிக்குச் சாயமிட்டுப்
பொன்னான நேரத்தைப் புத்தகத்தில் பாழாக்கி
மிஞ்சிடுமிவ் வேளையிலே வீண்வம்பு பேசாமல்
கொஞ்சம்நீ என்னுடன் கொஞ்சு.இதற்குப் பதில் சொன்னாள் நங்கை


நங்கை:


பண்பற்ற நண்பருடன் பாதிநாள் சீட்டாட்டம்;
கண்கெடுக்கும் தீயதொலைக் காட்சி சிலமணிகள்;
மின்னிணைய மேனகைகள் மீதிநாள் வீணடிக்க
என்னிடமின்(று) ஏன்பல் இளிப்பு ?என்கையில் இருந்த சீட்டுக் கட்டை அவசரம் அவசரமாக மறைத்துக் கொண்டு, நான் வெண்பா வீட்டை விட்டு வெளியேறினேன்.

[ பல வருடங்களுக்கு முன் ‘மன்றமைய’த்தில் ( forumhub)  ‘வெண்பா வடிக்கலாம் வா!’ என்ற இழையில் எழுதியது. ]

 தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள் 

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சாவி -5 : ’வைத்தியர்’ வேதாசலம்

'வைத்தியர்' வேதாசலம் 
சாவி
                                                          
'சாவி’ என்று அழைக்கப்பட்ட சா.விஸ்வநாதன் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைத் தொடர்களில் ‘கேரக்டர்’ மிகச் சிறப்பு.

இருபத்தெட்டு நபர்களைப் பற்றிய “குறும்பு வர்ணனை”கள் கொண்டது அந்நூல். அதிலிருந்து ஒரு ‘கேரக்டர்’ இதோ!. படித்து முடிந்ததும், எங்கேயோ இவரைப் பார்த்தது போல் இருக்கும்! நிச்சயமாய்! ==== எமனே பயந்து நடுங்கக் கூடிய குரல். பேச்சில் நயமோ தயவோ தாட்சண்யமோ இருக்காது. யாரையும் தூக்கி எறிந்தாற் போலத்தான் பேசுவார். நோயாளிகள் தங்கள் வியாதியைப் பற்றி  விவரிக்கும்போது வைத்தியர் வேதாசலம் இஷ்டமிருந்தால் 'ஊம்' போடுவார். காட்டு மிருகங்கள் உறுமுவதைப்போல் அவர் 'ஊம்' போடுவதைக் கேட்கும்போதே நோயாளிகளுக்குச் சப்த நாடிகளும் அடங்கிப் போகும், கடைசியில் அவர் புட்டியில் மருந்தையும், டப்பாவில் லேகியத்தையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கண்டிப்பான குரலில், ''மூன்று நாளைக்கு இதைச் சாப்பிடணும். அடுத்த வெள்ளிக்கிழமை மறுபடியும் என்னை வந்து பார்க்கணும். இப்போது மருந்துக்கு இரண்டு ரூபாய் கொடுக்கணும்'' என்பார்.


''அடுத்த வெள்ளிக்கிழமை கலியாணங்க. அதனாலே...''


''வியாதியெல்லாம் தீர்ந்த பிறகு கலியாணம் செய்துக்கலாம்...... இப்ப ஒண்ணும் அவசரம் இல்லே...''


''கல்யாணம் எனக்கு இல்லிங்க. என் சகலபாடி மகனுக்கு.''


''அது சகலபாடியோ, வியாசர்பாடியோ? வெள்ளிக்கிழமை இங்கே வந்தாகணும்.''


''ஊம்; அடுத்த கேஸ் யாரய்யா? நீயா? உனக்கு என்ன?''


''மூணு நாளா பாதை பொறுக்கலீங்க. முதுகுப் பக்கம் ஒரே வலியாயிருக்குது. மல்லாந்து படுத்தா மாரை வலிக்குது.''


''அப்படியா? இனி மல்லாந்து படுக்காதே, போ! இந்தா, இந்த மாத்திரையை ஒரு வாரம் சாப்பிடு. சரியாயிடும்! ஊம்... பெரியவரே, உமக்கு என்ன?...''


''உடம்புக்குச் சொகம் இல்லீங்க!''


''அது தெரியுது. இல்லேன்னா எதுக்கு என்னைத் தேடிக்கிட்டு வரப்போறீங்க? வைத்தியரைத் தேடிக்கிட்டு வந்தாலே உடம்புக்குச் சொகம் இல்லேன்னுதான் அர்த்தம். வியாதி என்னங்கறதைச் சொல்லும்!''


''பசி இல்லே.''


''இருக்காது.''


''காது கேட்கல்லே.''


''கேட்காது!''


''கண் தெரியல்லே.''


''தெரியாது.''


''இதுக்கு என்ன செய்யலாங்க?''


''உமக்கு என்ன வயசு ஆகுது?''


''எழுபத்தொன்பது.''


''பேசாமல் வீட்டிலேயே இரும். வயசாயிட்டப்புறம் இதுக்கெல்லாம் மருந்து கிடையாது. அப்புறம்? இந்தக் குடையை இங்கே யார் வைத்தது? நீயா? இந்த ஈரக் குடையைக் கொண்டுவந்து நாலுபேர் உட்காருகிற பெஞ்ச் மேலே வெச்சிருக்கியே? உனக்கு புத்தி இருக்கா?'' வைத்தியர் அந்த ஈரக் குடையை எடுத்துக் கோபமாக வெளியே வீசி எறிவார்.


[ ஓவியம்: நடனம் ]


''வைத்தியரய்யா, என்னைக் கொஞ்சம் சீக்கிரம் கவனியுங்க. தெருவிலே டாக்ஸி வெயிட் பண்ணுது.''
           
''ஏன்யா, உனக்கு எந்த ஊரு?''


''திருநெல்வேலிங்க.''


''மெட்ராஸுக்கு எதுக்கு வந்தே?''


''வைத்தியம் செஞ்சுக்கத்தான்.''


''உன்னோடு எத்தனை பேரு வந்திருக்காங்க?''


''இரண்டு பேரு!''


''எங்கே தங்கியிருக்கீங்க?''


''ஓட்டல்லே.''


''ஏன்யா, ரயிலுக்கும் ஓட்டலுக்கும் பணத்தைச் செலவழிச்சுக்கிட்டு வந்தவருக்கு டாக்ஸிக்கு வெயிட்டிங்கிலே ஒரு நாலணா கூட ஆயிட்டா குடியா முழுகிடும்? உனக்கு முன்னாலே வந்தவங்களையெல்லாம் கவனிச்சப்புறந்தான் உன்னைக் கவனிப்பேன். அவசரமாக இருந்தா எழுந்து போகலாம்.''


''ஐயா, ஐயா, ஒரு மாசமா வயிற்றுவலி தாங்காமல் துடிக்கின்றேன்யா.''


''இந்தச் சூரணத்தைத் தேனிலே குழைச்சு மூணு நாளைக்குச் சாப்பிடு. சரியாப் போயிடும்.''


''ஆகாரம் என்னங்க சாப்பிடலாம்?''


''மசாலா தோசையும், மலபார் அடையும் சாப்பிடு. ஆளைப்பாரு ஆளை! வயிற்று வலின்னுட்டு ஆகாரம் என்ன சாப்பிடலாமாம்? ஒரு மாசத்துக்குச் சாப்பாட்டையே தொடக்கூடாது. தெரியுமா? ரவையும், சர்க்கரையும் சேர்த்துக் கஞ்சி பண்ணிச் சாப்பிடணும். ரவையும் சர்க்கரையும் சேர்த்து லட்டா செஞ்சு சாப்பிட்டா என்னான்னு கேட்கக் கூடாது. ஊம்... உமக்கு என்ன?''

''அடிக்கடி மயக்கமா வருது.''''உத்தியோகம் எங்கே?''


''ரயில்வேயிலே இருக்கேன்.''


''ரெயில்வேலே இருக்கேன்னா போறாது. போர்ட்டர்கூட ரெயில்வேலேதான் இருக்கான். என்ன வேலைங்கறதைச் சொல்லணும்.''


''ஹெட் கிளார்க்!''


''அப்படிச் சொல்லுமே; சம்பளம்?''


''நூற்றெண்பது ரூபாய்.''


''பிடிப்பு உண்டா?''


''இடுப்பாண்டை அடிக்கடி பிடிச்சுக்குது.''


''ஓய், அதைக் கேட்கலை. சம்பளத்திலே பிடிப்பு உண்டான்னு கேட்டேன்.''


''உண்டு, உண்டு; பிடிப்பெல்லாம் போக கைக்கு நூற்றைம்பதுதான் வருது!''


''ஊம்; இதிலே மூணு வேளை மருந்து இருக்குது; நாலு மணிக்கொரு தடவை சாப்பிடணும். அப்புறம் ஒரு மண்டலம் நவரக்கிழி சிகிச்சை செய்துக்கணும். நூறுரூபாய் செலவாகும். அதுக்குத்தான் உம் வேலையைப்பற்றி விசாரிச்சேன்.''


''சரிங்க, இந்த மூணு அவுன்ஸை எத்தனை நாளைக்குச் சாப்பிடறது?''


''நாலு மணிக்கு ஓர் அவுன்ஸ்வீதம் மூணு வேளை சாப்பிட்டால், இந்தப் புட்டியிலே இருக்கிற மருந்து   ஒருநாளைக்குத்தான் காணும். இந்தச் சின்னக் கணக்குக்கூடத் தெரியறதில்லே. நான் சொல்றப்பவும் கவனிக்கிறதில்லே. ஊம்... அடுத்த கேஸ் யாரு?...''


''சவனப்பிராஸம் அரைபாட்டில் வேணுங்க!''


''இப்படி எழுந்து வந்து, என்னுடைய நாற்காலியிலே உட்கார்ந்துகொள்ளும். என்னய்யா முழிக்கிறீர்? ஏன்யா வைத்தியர் நானா? நீரா? உம் வியாதி என்னங்கறதைச் சொல்லும். மருந்து என்ன என்பதை நான் சொல்கிறேன் சவனப்பிராஸம் வேணுமாம், சவனப்பிராஸம்!''


வைத்தியர் வேதாசலம் நோயாளிகளிடம் என்னதான் சீறிப் பாய்ந்தாலும் எவ்வளவுதான் எரிந்து விழுந்தாலும் எல்லோரும் அவரைத்தான் தேடி வருவார்கள். என்ன செய்யலாம்? வைத்தியருக்கு வாய் பொல்லாதுதான். ஆனால் கைராசிக்காரராயிருக்கிறாரே!

 =============
[ நன்றி: சாவியின் ‘கேரக்டர்’ நூல் ]

தொடர்புள்ள பதிவுகள்

சாவியின் படைப்புகள்

சனி, 25 ஆகஸ்ட், 2012

கல்கி - 3: மீசை வைத்த முசிரி! திரைப்பட விமர்சனம்

பக்த துகாராம்


ஐம்பதுகளில் ஒரு நாள்.

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன்.

அப்போது  பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பர் “  நல்லாப் பார்த்துக்கோ! இந்த ‘மழ மழ’ முக முசிரி ஒரு காலத்தில் ஒரு ’கரு கரு’ மீசை வைத்திருந்தார், தெரியுமா? ” என்று சொன்னவுடன் நான் திடுக்கிட்டேன். ஏனென்றால்,  நான் சிறுவயதில் கேட்டு, ரசித்த எந்தச் சங்கீத வித்வானும் மீசை வைத்துக் கொண்டு இருந்ததாக நினைவில்லை.

அப்போது இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டேன்.

இப்போது ? அறுபதாண்டுகளுக்குப் பின்? அந்த நினைவு வரவே ‘மீசை வைத்த முசிரி’யைத் தேடினேன்.

1938-ஆம் ஆண்டு ’ஆனந்த விகடன்’ தீபாவளி மலரில்  “ பாண்டுரங்கா” என்ற தலைப்பில் மீசை வைத்த முசிரி சுப்பிரமண்ய ஐயரின் ஓர் அழகான முழுப் பக்கப் படத்தைப் பார்த்தேன்.  அதன் அடியில் கீழ்க்கண்ட வரிகள் :.

                                                       முசிரி
 சங்கீத உலகிலிருந்து முசிரி சுப்பிரமண்ய ஐயர் தமிழ் டாக்கி உலகத்திற்குப் போனபோது, அதனால் என்ன லாப நஷ்டம் ஏற்படுமோ என்று சங்கீதாபிமானிகள் கவலை கொண்டிருந்தார்கள். முசிரி துகாராமைப் பார்த்த பிறகு, அந்தக் கவலை நிவர்த்தியாயிற்று. முசிரி டாக்கியில் நடிக்கப் போனதினால், டாக்கி உலகத்துக்கு லாபம். சங்கீத உலகத்துக்கு நஷ்டமில்லை என்று ஏற்பட்டது. முசிரிக்கோ லாபமுமில்லை, நஷ்டமும் கிடையாது. துகாராம் படத்துக்காகவே மீசையை வளர்த்து, படம் முடிந்தவுடன் மீசையையும் எடுத்து விட்டாரல்லவா! ஆனால், இனிமேல், முசிரி சுப்பிரமணிய ஐயர்வாள் சங்கீத மேடையில் அமர்ந்து, கன்றின் குரலைக்  (1) கேட்டுக் கனிந்துருகும் பசுவைப் போல் குழைந்து உருகும் போது மட்டும்  அவரை நாம் நம்ப மாட்டோம். ஸாவேரியில் அவர் ‘எத்தனை சொன்னாலும்’ (2) கேட்க மாட்டோம். காம்போதியில் ‘திருவடி சரணம்’ (3 )என்று கதறினாலும் மாட்டோம். ‘பாண்டுரங்கா!’ என்று பெருமூச்சு விட்டாலும் முடியாது. அவ்வளவும் ’நடிப்பு’ என்றுதான் சொல்வோம்.

[ கல்கி குறிப்பிட்டவை இவைதான் என்று நினைக்கிறேன் :

(1) ‘ என்றைக்குச் சிவ கிருபை’ என்ற நீலகண்ட சிவனின் முகாரி ராகக் கிருதியில் வரும் ‘கன்றின் ‘ என்று தொடங்கும் அனுபல்லவி.
(2) ‘எத்தனை சொன்னாலும்’ என்பது சுப்பராம ஐயரின் பதம்.
(3) ‘திருவடி சரணம்’ கோபால கிருஷ்ண பாரதியின் கிருதி . ]


இப்படி எழுதியவர் ‘கல்கி’யாய்த்தான் இருக்கும் என்று எண்ணிய எனக்குக்
‘கர்நாடகத்தின்’ ‘துகாராம்’ திரைப்பட  விமர்சனத்தைப் படிக்க ஆவல் பிறந்தது.


1938-இல் வெளிவந்த ‘ பக்த துகாராம்’   சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமண்ய ஐயர் நடித்த ஒரே திரைப்படம்  என்பது என் ஆவலுக்கு ஒரு காரணம். பொதுவாக, அந்த நாள் திரைப்படங்களைக் ‘கிழி கிழி’ என்று கிழிக்கும் கல்கி எப்படி/எதனால் துகாராமை விட்டு வைத்தார் என்றறிந்து கொள்வதும் இன்னொரு காரணம்.


  ‘கல்கி’ யின் நீண்ட விமர்சனத்தில் முசிரியைப் பற்றியும், சங்கீதத்தைப் பற்றியும் உள்ள சில பகுதிகள் ( மீசையைப் பற்றியும் தான்! ) இதோ:


முசிரி துகாராம்

கல்கி

     முசிரி சுப்பிரமண்ய ஐயர் நம்மை மறுபடியும் ஏமாற்றி விட்டார்!


சென்ற சில காலமாகவே அவர் நம்மை ஏமாற்றுவது சகஜமாயிருந்து வருகிறது. உடம்பு சரியில்லையென்றும், தொண்டை சரியில்லையென்றும் சொல்லிக் கச்சேரிக்கு வராமல் ஏமாற்றி வருகிறார். சென்ற மாதக் கடைசியில் கூட மயிலாப்பூர் ரஸிக ரஞ்சனி சபைக்கு இம்மாதிரி ஒரு ஏமாற்றத்தை அளித்தார்.

''இந்த இலட்சணத்தில் டாக்கி என்ன வேண்டிக் கிடக்கிறது? அது மட்டும் வெளியாகட்டும். வெளுத்து வாங்கிவிடலாம்'' என்று நான் கர்வம் கட்டிக் கொண்டிருந்தேன். முசிரி டாக்கியில் சேர்ந்தார் என்று பிரஸ்தாபம் காதில் விழுந்தது முதலே, எனக்கே இம்மாதிரி ஆசை கொஞ்சம் இருந்தது. ''சங்கீத வித்வானாய் இலட்சணமாய்ப் பேசாமல் பாடிக் கொண்டிருக்க கூடாதா? டாக்கியிலும் கீக்கியிலும் சேர்ந்து ஏன் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்!'' என்ற நினைவு ஒரு புறம் ''வெறுமனே இவரைப் பாராட்டிப் பாராட்டி சலித்து விட்டது. ஒரேயடியாய்த் தீர்த்துக் கட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வரட்டும்'' என்னும் ஆவல் ஒரு பக்கம்.

டாக்கி எடுக்க ஆரம்பித்த பின், அதற்கு நேரிட்டு வந்த இடையூறுகளைப் பற்றி வெளியாகி வந்த வதந்திகள் அந்த ஆசையை அதிகப்படுத்தி வந்தன. ''சரிதான், கடைசியில், சரியாக மாட்டிக் கொள்ளப் போகிறார்'' என்று எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் பலிப்பதற்கின்றி என்னை மனுஷ்யர் அடியோடு ஏமாற்றிவிட்டாரே! ஒரு நல்ல முதல் தர டாக்கியை எப்படியோ கொண்டு வந்து விட்டாரே!

இந்தப் படத்தை 'முசிரி துகாராம்' என்று சொல்வது முற்றிலும் பொருந்தும். ஆரம்பம் முதல் முடிவு வரையில் முசிரிதான் பிரதானமாக விளங்குகிறார். படத்தின் சிறப்புக்கெல்லாம் இவர்தான் காரணம் என்று சொல்லுவதே அநாவசியம். இந்த டாக்கிக்கு டைரக்டர் யார் என்னும் விவரம், முதலில் காட்டும் பெயர் அட்டவணையில் காணப்படவில்லை. (ஐந்தாறு டைரக்டர்களின் கைமாறியதாகக் கேள்விப்பட்டோம்.) ஆனால், முசிரியைப் பற்றிய வரையில் அவரே டைரக்டராகவும் இருந்திருக்கிறார் என்று ஊகிக்க இடமிருக்கிறது.


முதலில், வேஷப் பொருத்தத்தை சொல்லுங்கள்! முசிரி டாக்கிக்காக மீசை வளர்த்துக் கொள்கிறார் என்று கேள்விப்பட்டபோது நமக்கெல்லாம் பரிகாசமாயிருந்தது. மீசையுடன் சென்னையில் சபை முன்னால் வருவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான் அப்போதெல்லாம் கச்சேரிகளுக்கு மட்டம் போட்டு விட்டார் என்றும் சொன்னார்கள். ஆனாலும் அதிலிருந்தே டாக்கி வெற்றி பெறுவதில் அவர் எவ்வளவு சிரத்தையுடன் இருக்கிறார் என்று ஒருவாறு தெரிந்தது. இப்போது, திரையில் பார்த்தால், ''ஆகா! என்ன பொருத்தம்! என்ன வேஷப் பொருத்தம்! என்ன மீசைப் பொருத்தம்!'' என்று ஆச்சரியப்பட வேண்டியவர்களாகிறோம். மீசை ஒன்று மட்டும் பொய் மீசையாயிருந்திருக்கும் பட்சத்தில், படமே ஒரு கேலிக் கூத்துப்போல் நமக்குத் தோன்றியிருக்கக்கூடும். முசிரி அதற்கு இடம் வைக்கவில்லை.

மீசைதான் இஷ்டப்பட்டால் வளர்த்துக் கொள்ளலாம், அது அவரவர்கள் கையில் உள்ள விஷயம். ஆனால், நடிப்புக் கலையை இஷ்டப்பட்டால் வளர்த்துக் கொண்டுவிட முடியும்? இந்த பாகவதர் - கச்சேரி வித்வான் - இவ்வளவு இயற்கையாகவும் அழகாகவும் நடிக்க எங்கே கற்றுக் கொண்டார்? எப்போது கற்றுக் கொண்டார்? ஆச்சரியமாகவல்லவா இருக்கிறது?


இறைவனுடைய பக்தி பரவசத்தில் சதா ஈடுபட்ட ஒரு பரம பக்தரிடம் நாம் எதிர்பார்க்கும் சாந்தம், கருணை, சகிப்புத் தன்மை முதலிய உயர் குணங்களெல்லாம் இவரிடம் பூரணமாய்ப் பொலிந்திருப்பதைக் காண்கிறோம். குடும்ப வாழ்க்கையில் தாமரை இலைத் தண்ணீரைப்போல் பட்டும் படாமலும் ஈடுபட்டிருப்பதை வெகு தெளிவாகத் தம் நடை உடை பாவனைகளினால் உணர்த்துகிறார். இதனால் எப்போதும் ஒரே நிதானமாய், நிர்விகல்ப சமாதியிலேயே இருந்து விடவில்லை. பரபரப்புக் காட்ட வேண்டிய இடங்களில், உணர்ச்சி பொங்கும்படி நடிக்க வேண்டிய இடங்களில், அவ்வாறே நடிக்கிறார். ஆனால் இதெல்லாம் நடிப்பு என்று நம்புவதுதான் நமக்குக் கஷ்டமாயிருக்கிறது. உண்மை சம்பவங்கள் என்றே தோன்றிவிடுகிறது. படத்தின் ஆரம்பத்தில், ''ஜீஜா! ஏன் குழந்தையை அடிக்கிறாய்?'' என்று அவர் கூறும் போதே, அந்தக் குரலின் கனிவு நம்மை உருக்கிக் கண்ணில் ஜலம் வருவித்துவிடுகிறது. இப்படி அநேக கட்டங்கள் இருக்கின்றன.

நடிப்புத் திறமை நாம் முசிரியிடம் எதிர்பாராதது, ஆனால் சங்கீத மேன்மையோ எதிர்பார்த்தது. அது எப்படியிருக்கிறது? எதிர்பார்த்ததற்கு அதிகமுமில்லை, குறைவுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

முதன் முதலில் இந்த டாக்கியைப் பற்றிப் பிரஸ்தாபம் ஏற்பட்டபோது ஒருவர் வந்து, ''ஸ்ரீ தியாகராஜா வில் மதனி வேஷத்தில் வந்த சீதா தான் துகாராமின் மனைவியாக வரப் போகிறாளாம். பாவம்! முசிரியை அழ வைத்துவிடுவாள்!'' என்று பரிதாபப்பட்டார். இதைக் கேட்ட இன்னொருவர், ''ரொம்ப நன்றாயிருக்கிறது! முசிரியை இன்னொருவர் அழப் பண்ணுவானேன்? அவரேதான் அழுதுவிடுவாரே!'' என்றார். மூன்றாவது மனுஷர் ஒருவர், ''ஏற்கெனவேயே அழுவார் என்றால், இப்போது கேட்க வேண்டியதில்லை. டாக்கியெல்லாம் கண்ணீராய்த்தானிருக்கும்!'' என்று முத்தாய்ப்பு வைத்தார்.

இது உண்மைதான், துகாராமில் முசிரி அசாத்தியமாகத்தான் அழுதிருக்கிறார். ஆனால், அந்த அழுகையெல்லாம் சுத்தமான கர்நாடக ராகங்களில் அழகாக அமைந்து, ஒரு தடவை இரண்டு தடவை மூன்று தடவை கேட்க வேண்டுமென்று தூண்டக் கூடியதாயிருக்கிறது.

வாழ்க்கையில் கஷ்டத்தை வெறுக்கும் மனிதர்கள் கலைகளில் மட்டும் சோக ரஸத்தை அநுபவிப்பதில் ஏன் இவ்வளவு இன்பமடைகிறார்கள் என்பது சிருஷ்டி ரகசியங்களில் ஒன்று. அதைப் பற்றி சர்ச்சை செய்ய இடம் இதுவல்ல. நவரஸங்களில் எல்லாவற்றையும் விட அதிகமாக ஜனங்கள் ரஸிப்பது சோக ரஸம் என்பதில் மட்டும் சந்தேகம் கிடையாது. சோக ரஸம் இல்லாத எந்த உயர்ந்த இதிகாசமாவது நாடகமாவது காவியமாவது உலகத்தில் உண்டா என்று சொல்லுங்கள்.சோக ரஸத்தைப் பரிபூரணமாய் அநுபவிப்பதற்கு சங்கீதத்தைப் போன்ற சிறந்த சாதனம் வேறில்லையென்பதும் நிச்சயம். சிற்சில ராகங்களை வெறுமனே பாடினாலே நம் உள்ளம் குழைகின்றது, ஊனும் உருகுகின்றது. சோக பாவமுள்ள சாஹித்யமும் சேர்ந்துவிட்டாலோ கேட்க வேண்டியதில்லை. அதுவும், ஒரு நல்ல கதையில் - நல்ல கட்டத்தில் - வருவதாயிருந்தால் சொல்ல வேண்டுமா?

பாபநாசம் சிவனின் சாஹித்யமும், முசிரியின் சங்கீதமும் சேர்ந்து இந்த டாக்கியை சிறந்த சங்கீத மேன்மையுடையதாகச் செய்திருக்கின்றன. மனோகரமான பிலஹரி ராகத்தில் ''ஜய விட்டல ஜய விட்டல'' என்று பாடி முசிரி டாக்கியை ஆரம்பித்து வைக்கிறார். இந்தப் பாட்டில் முசிரியின் சாரீரம் கொஞ்சம் 'இரைச்ச'லாக தொனிப்பதைக் கேட்கிறோம். ஆனால், அடுத்த பாட்டிலேயே இது சரியாகிவிடுகிறது. ஹம்ஸ நாதத்தில், ''நீயே பராமுகமாயின்'' பாடும்போது, ஒரு தூக்குத் தூக்கி விடுகிறார். பின்னால், நாதநாமக்கிரியையில், ''சர்வலோக சரண்ய'' பாடும்போது முசிரியின் சங்கீதமும் சாரீரமும் உச்ச நிலையை யடைகின்றன.

பாட்டுக்கள் கனராகத்திலும், அபூர்வ ராகத்திலும், பழைய கர்நாடக ராகத்திலும், நவீன கர்நாடக ராகத்திலும் மாறி மாறி அமைந்திருக்கின்றன.

''தேவகி ஸ்ரீ வசு

       தேவ குமாரனே!''

என்னும் பாட்டைத் துகாராம் பாடி முடித்ததும், ''இந்த ஒரு பாட்டுப் போதுமே!'' என்று நான் வாய் விட்டு சொன்னேன். ஆனால், என் குரலின் சப்தம் இவ்வளவு பெரியதா என்று சந்தேகம் தோன்றியது. அப்புறம் விசாரித்தால், ஏக காலத்தில், என் அருகில் இருந்தவர்கள் ஐந்தாறு பேரும் அப்படியே சொன்னார்கள் என்று தெரிந்தது. வாய் விட்டு சொல்லாத இன்னும் இரண்டு மூன்று பேரும் ''நாங்களும் அப்படித்தான் நினைத்தோம்'' என்றார்கள்.

மேற்படி பாட்டு குந்தலவராளியில் அமைந்தது. சாதாரணமாய், இந்த ராகத்திலுள்ள பாட்டுக்கள் இங்கிலீஷ் நோட்டுக்கள் போல் தொனிக்கும். ஸ்வரங்களைத் தனித்தனியாகப் பிரித்து உதிர்த்து விடலாம் போல் இருக்கும். அத்தகைய ராகத்தில் இவ்வளவு கமகமும் குழைவும் கொடுத்து இவ்வளவு உருக்கத்தை ஊட்டிப் பாடியிருப்பது முசிரி ஒருவருக்குத் தான் சாத்தியம் என்று சொல்லலாம்.

பாட்டுக்கள் எல்லாம் நன்றாய்த்தானிருக்கின்றன. ஆனால் முசிரி ஏற்கெனவே பிளேட்டுகளில் கொடுத்துப் பிரபலமான மூன்று மெட்டுக்களை இதில் சேர்க்காமலிருந்தால் ஒன்றும் ழுழுகிப் போயிராது. அந்தப் பாட்டுக்களை அப்படியே புகுத்த முடியுமாயிருந்தாலும் பாதகமில்லை. அதே மெட்டுக்களில் அதே மனுஷர் வேறு ஸாஹித்யத்தைப் பாடுவது எனக்கு என்னமோ அவ்வளவு ரஸிக்கவில்லை. மற்றவர்களுக்குப் பிடித்திருந்தால் சரி.

முசிரியைப் பொறுத்த வரையில் நாம் எதிர்பார்த்தற்கெல்லாம் மேலாகவே நடித்துப் புகழ்பெற்றுவிட்டார்.

. . . // . . .

கடைசியாக, இந்தப் படத்திலுள்ள பின்னணி சங்கீதத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். நடிகர்களின் சங்கீதம் உயர்தரமாயிருப்பது போலவே பின்னணி சங்கீதமும் அமைந்திருக்கிறது. பெரும்பாலும் இனிய கோட்டுவாத்திய
சங்கீதத்தைக் கேட்கிறோம். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் ராகங்களை அமைத்திருப்பது மிகவும் அழகாயிருக்கிறது. துகாராம் தூங்கி எழுந்திருக்கும்போது பூபாளம். மும்பாஜியின் காதல் காட்சியின் போது காபி
ராகத்தில் சிருங்கார ரஸ ஜாவளி. கிருஷ்ணன் வரும்போதெல்லாம்  புல்லாங்குழல் . பின்னணி சங்கீதத்தில் இவ்வளவு கவனம்
செலுத்தி அமைத்த தமிழ் டாக்கி மிகவும் அபூர்வம் என்றே சொல்லலாம்.

. . . // . . .


மொத்தத்தில், முசிரி துகாராம் தமிழ் டாக்கிகளுக்குள் ஒரு உன்னத பதவியை வகிக்கிறது என்றே நான் கருதுகிறேன். 'பக்த குசேல'ருக்கு அடுத்தபடியாக உயர்ந்த தமிழ் டாக்கி என்று இதைத்தான் சொல்ல வேண்டும். ஆகையினால்தான் இதற்கு இரண்டு நட்சத்திரம் அளித்திருக்கிறேன்.

[ நன்றி : கல்கி களஞ்சியம், வானதி பதிப்பகம், தொகுப்பு: தி.ஸ்ரீ. ரங்கராஜன் ]

தொடர்புள்ள சில பதிவுகள் :

கல்கி’ கட்டுரைகள்

காளிதாஸ் 

இராஜாம்பாள்: நூல் மதிப்புரை

கல்கி மறைவு: வாசன்

பக்த துகாராம்: ராண்டார் கை

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்

நன்றி கூறும் நினைவு நாள்
ரா.கி. ரங்கராஜன்ரா.கி. ரங்கராஜன்  பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.
இவற்றுள் சில: ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் ( Papillon) (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் ( If Tomorrow Comes) (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் ( The Stars Shine Down) (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ் ( Rage of Angels) (ஜெனிஃபர்).கீழுள்ள கட்டுரையில் அவர் மொழிபெயர்ப்புகளைப்  பற்றிப் பேசியிருக்கிறார்.


புகழ் பெற்ற ஆங்கில தினசரியின் அலுவலகத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ஃபோன் செய்தார்கள். பேசியவர் அதன் ஆசிரியர் குழுவை சேர்ந்த ஒரு பெண்மணி. பேட்டிகளையும் விமரிசனக் கட்டுரைகளையும் சுவைபட எழுதியிருக்கிறார்.

'உங்களை பேட்டி கண்டு எழுத நினைக்கிறேன். எப்போது வந்தால் செளகரியப்படும்?’ என்று கேட்டார் அந்தப் பெண்மணி.

ரொம்ப சந்தோஷம். எப்போது வேண்டுமானாலும் வரலாம். வருவதற்கு முன்னால் ஃபோன் செய்யுங்கள். என் உடல்நிலை ஒரு நாள் மாதிரி இன்னொரு நாள் இருப்பதில்லை என்று சொல்லிவிட்டு என் கதைகளைப் படித்திருக்கிறீர்களா?” என்று விசாரித்தேன்.

'நிறைய. சிறு வயது முதல் எனக்கு உங்கள் கதைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஃபோன் செய்து விட்டு வருகிறேன்ன்றார்.

இவர் கூப்பிட்டதைப் பற்றிப் பெருமையாக ஒரு நண்பரிடம் சொன்னேன். 

கேட்கவே சந்தோஷமாயிருக்கிறது ஸார் என்றவர் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வருத்தப்படமாட்டீர்களே என்றார்.

கொஞ்சம் திக்கென்றிருந்தாலும் மாட்டேன், மாட்டேன். சொல்லுங்கள் என்றேன்.

"நாற்பது ஜப்பது வயதுக்கு உட்பட்டவர்களிடம் உங்கள் பெயரை சொன்னால் ஒ! அவரா லிட்னி ஷெல்ட்டன், ஜெஃப்ரே ஆர்ச்சர் நாவல்களைப் பிரமாதமாய் மொழி பெயர்த்திருக்கிறாரே! நான் படித்திருக்கிறேன் என்கிறார்கள். நீங்கள் சுயமாக, சொந்தத்தில் எவ்வளவு நல்ல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியிருக்கிறீர்கள்! அவற்றை சொல்லாமல் மொழிபெயர்த்த நாவல்களை மட்டும் குறிப்பிடுகிறார்களே என்று எனக்கு வருத்தம் ஏற்படுவதுண்டு என்றார் நண்பர்.

எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது. சுயமாக, சொந்தமாக ஏராளமாய் எழுதித் தள்ளியிருக்கிறேன். அவைகளில் சிறந்தவையும் உண்டு. ரொம்ப சாதாரணமானவைகளும் ஏராளம். ஆனால் அதெல்லாம் அறுபது எழுபதுகளில், பட்டாம்பூச்சி, ஜெனிஃபர், லாரா முதலிய மொழிபெயர்ப்பு நாவல்கள் எனக்கு நற்பெயர் வாங்கிக் கொடுத்ததற்குக் காரணம் அவை ஆற்றல்மிக்க எழுத் தாளர்களால் படைக்கப்பட்டவை என்பதுதான். பன்னீரைப் பிறர் மீது தெளிக்கும் போது தெளித்தவர் மீதும் சில துளிகள் விழும் என்ற நியதிப்படி எனக்கும் சிறிது பெயர் கிடைத்தது.
இருந்தாலும் நண்பர் சொன்னது போல நான் ஆரம்ப காலத்தில் எழுதியவை ரொம்பப் பேருக்குத் தெரியவில்லையே என்ற வருத்தம் உண்டாயிற்று.அப்போது உலகப் பிரசித்தி பெற்ற தத்துவஞானி பாலோ கொயலோ எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். ஆறுதல் ஏற்பட்டது.
ஆர்மீனியாவில் ஒஷான் என்ற ஊரில் அவருக்கு நிகழ்ந்த ஒர் அனுபவத்தை சொல்கிறது அந்தக் கட்டுரை (Like the Flowing River என்ற அவருடைய கட்டுரைத் தொகுப்பில் இருக்கிறது.) அதில்

எந்த ஊருக்கு சென்றாலும் மியூசியங்களையும் கட்டிடங்களை யும் பார்ப்பது எனக்குப் பிடிக்காது. அதைக் காட்டிலும் அங்குள்ள மக்களோடு பேசிப் பழகுவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். அதன்படி ஆர்மீனிய நாட்டின் ஒரு நகரத்திற்கு சென் றிருந்த போது மார்க்கெட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னேன். என்னை அந்த ஊருக்கு அழைத்திருந்தவர்கள் 'இன்று மார்க்கெட்டோ கடைகளோ கிடையாது. எல்லாவற்றுக்கும் தேசிய விடுமுறை. காரணம் இன்று ஒரு புனிதருடைய நினைவு தினம். அதை எல்லாரும் கொண்டாடுகிறோம் என்று கூறி ஒரு சர்ச்சுக்கு அழைத்துப் போனார்கள். துரத்தில் பணி மூடிய மலைச் சிகரங்கள் அழகுறக் காட்சி தந்தன.

சர்ச்சில் கூடியிருந்தவர்கள் அனைவரும் ஏதோ திருமண வைபவத்திற்கு வந்தவர்களைப் போல ஜம்மென்ற புத்தாடைகளுடன் கலகலப்பான சூழலில் இருந்தார்கள். சாதாரண ஜீன்ஸ் சட்டையுடன் நிற்க எனக்கே வெட்கமாக இருந்தது. எனக்குப் பூங்கொத்தைக் கொடுத்து வரவேற்று முன்னே அழைத்துச் சென்றார்கள். புனிதர் என்று சொல்லப்பட்டவரின் சமாதி வரை சென்றேன். அங்கிருந்த சமாதியில் பூங்கொத்தை வைத்து வணக்கம் செய்யும்படி சொன்னார்கள். அவர்களுடைய விருப்பப்படியே நடந்து கொண்டேன்.

யாருடைய நினைவு தினம் என்று பிற்பாடு விசாரித்த போது புனித மொழி பெயர்ப்பாளர் (Holy Translator) என்று தெரிவித்தார்கள்
எனக்கு ஆச்சரியாமாயிருந்தது. மொழிபெயர்ப்பாளர்களில் புனிதமானவர் என்றும் உண்டா என்ன? பிறகு தெரிந்து கொண்டேன். அவருடைய பெயர் ஸெயின்ட் மெஸ்ரோப். அன்றுவரை ஆர்மீனிய பாஷை பேசப்பட்டதேயொழிய அதற்கென்று எழுத்து வடிவம் (லிபி) இருக்கவில்லை. லெயின்ட் மெஸ்ரோப் அதற்கு எழுத்து வடிவத்தை ஏற்படுத்தியதோடு பைபிள் உள்பட எல்லா இலக்கியங்களையும் ஆர்மீனிய பாஷையில் மொழி பெயர்த்தார். கிரேக்க மொழியிலும் பாரசீக மொழியிலும் இருந்த மாபெரும் இலக்கியங்களை அந்த பாஷையில் மொழிபெயர்த்து மக்களிடையே பரப்பினார். அதன் பிறகு ஆர்மீனியா நாடு தன் பரம்பரைக் கலாசாரத்தின் பெருமையை உணர்ந்து இன்று வரை சீரும் சிறப்புமாகக் காப்பாற்றி வருகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஒன்பதாம் தேதியை அவருடைய நினைவு நாளாக ஆர்மீனியாவில் கொண்டாடி வருகிறார்கள்.

அன்று செயின்ட் மெஸ்ரோபின் சமாதியின் முன்னே நின்ற போது என் கண்களில் நீர் துளித்தது. நான் எழுதியவற்றைத் தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்களையும் மற்ற மொழிகளில் வெளியானவற்றை எனக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்த்துக் கொடுத்து நான் படிக்கும்படி செய்து என்னை உருவாக்கியவர்களையும் நினைத்து நன்றி கூர்கிறேன். அவர்கள் வெறும் மொழி பெயர்ப்பாளர்கள் அல்ல. மனித சிந்தனைகளை இணைத்துப் பாலம் கட்டியவர்கள்.
( ஆகவே மொழி பெயர்ப்பாளார்களுக்கு ஜே!)

[நன்றி : அண்ணாநகர் டைம்ஸ்]

என் பின் குறிப்பு :

ஷெர்லக் ஹோம்ஸ், ஆர்சின் லூபின் போன்றவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஆரணி குப்புசாமி முதலியாருக்கு ஜே! 


அண்ணாநகர் டைம்ஸில் ரா.கி எழுதிய ‘நாலுமூலை’ப் பத்திகளின் ஒரு தொகுப்பைக் கிழக்கு பதிப்பகம் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.


தொடர்புள்ள பதிவுகள் :
ரா.கி.ரங்கராஜன்: சில கட்டுரைகள்

’ஹிந்து’க் கட்டுரை - 2

'கல்கி' இதழின் அஞ்சலிக் கட்டுரைகள்

’லைட்ஸ் ஆஃப்’ : சுஜாதா தேசிகன் 

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட்க வராதீர்கள்!

யோசனை கேட்க வராதீர்கள்!
ரா.கி. ரங்கராஜன்


மறைந்த மாபெரும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனுக்கு ஓர் அஞ்சலியாக அவர் எழுதிய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்.

அவருடைய ‘ நான் கிருஷ்ண தேவராயன்’  ஒரு முக்கியமான வரலாற்றுப் புதினம். (  ஐ க்ளாடியஸ் (I, Claudius) என்ற ஆங்கில நாவலின் தாக்கத்தால்  எழுதப்பட்ட நவீனம் ) விகடனில் தொடராக வந்தது. வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கின்றனர். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
===========
எழுத்தாளன் என்றால் சகலகலா வல்லவன், எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கிறார்கள். கல்யாண ரிசப்ஷனுக்கும் போகும்போது, யாராவது என்னிடம் வந்து பேச்சுக் கொடுப்பார்கள். உடனே ஒரு அம்மையார் குறுக்கிட்டு, ''மாமாகிட்டே பேசாதேடா சீமாச்சு! உன்னை வச்சுக் கதை எழுதிடுவார்'' என்று அவரை எச்சரிப்பார்.

உண்மையில் 'முதல் பந்தி எப்ப போடுவாங்கன்னு தெரியலே! சாப்பிட்டுவிட்டு ரயிலைப் பிடிக்கணும்' என்ற தன்னுடைய அப்போதைய கவலையைத்தான் அந்த சீமாச்சு என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அதை வைத்து, அவரை வைத்து எந்தக் கதையையும் யாராலும் எழுத முடியாது. இருந்தாலும் அப்படியொரு மந்திர சக்தி எனக்கு இருப்பதாகப் பல பேர் கருதுகிறார்கள்.

''தன்னுடைய மூளையை வைத்துப் பிழைக்கிறவன் புத்திசாலி. இன்னொருவனின் மூளையையும் சேர்த்துக் கொண்டு பிழைப்பவன் மகா புத்திசாலி'' என்று ஒரு அறிஞர் சொன்னார். நான் அந்த ரகம். விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்துக்கொண்டு கதை அளப்பேன். அந்தக் கதையோ, நாவலோ புத்தகமாக வரும்போது யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதை என் முன்னுரையில் ஒப்புக்கொண்டு நன்றி சொல்வேன். ஆனால் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள் கம்மி. பத்திரிகையில் வருவதைப் படிப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு என் குட்டு தெரியாது. 'அடேங்கம்மா! எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்!' என்று தப்பாக பிரமிப்பார்கள்.

நான் 'கிருஷ்ண தேவராயன்' என்ற சரித்திரத் தொடர் கதையை ஆனந்தவிகடனில் எழுதி வந்தபோது பல சமயங்களில் பல அறிஞர்களிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நாட்டியச் சிற்பத்தைப் பற்றி ஒரு ஆஸ்தானச் சிற்பிக்கும், ஆஸ்தான நடன ஆசிரியருக்கும் அபிப்பிராய பேதம் வருவதாக அந்தக் கதையில் ஒரு நிகழ்ச்சி வந்தது. பொதுவான அபிப்பிராய பேதம் என்று சொல்லாமல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றியது என்று சொன்னால் சுவையும், அழகும் ஏற்படும் என்று தோன்றியது. ஸ்ரீநிதி ரங்கராஜன், பத்மா சுப்ரமணியம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த விஷயத்தைத் தொடர்கதையில் எழுதினேன். உடனே சிலர் தங்கள் குழந்தையை எந்த நடனப் பள்ளியில் சேர்த்தால் நன்றாய் சொல்லிக் கொடுப்பார்கள் என்று என்னைக் கேட்டார்கள்.

ஒரு இத்தாலிய இளைஞன் விஜயநகரத்துக்கு வந்து சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெறுகிறார்ன என்று அந்தத் தொடர் கதையில் வருகிறது. அவனுடைய மூலிகை ஆராய்ச்சி பற்றிப் பல இடங்களில் எழுதினேன். உடனே இந்த மூலிகை நல்லதா, அந்தக் கீரையைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் மருத்துவம் சம்பந்தப்பட்ட என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர் என் உற்ற நண்பர் டாக்டர் ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற ரகசியம் யாருக்கும் தெரியாது. குன்றத்தூரில் 46 வருட காலமாக சித்த வைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம் இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாகப் பிராக்டிஸ் செய்து, மக்களின் அபிமானத்தைப் பெற்ற டாக்டராக விளங்குபவர் இவர். மத்திய அரசின் ஆயுர்வேத சித்த வைத்திய ஆராய்ச்சிக் கவுன்ஸிலில் பிரதான பொறுப்பில் இருப்பவர். மயக்க மருந்து கொடுக்காமல் ஒரு பெரிய ரண சிகிச்சை நடப்பதாக என் 'படகு வீடு' கதையில் கிளைமாக்ஸ் கட்டம் வந்தபோது, அது எப்படிச் சாத்தியம் என்பதை விளக்கிச் சொல்லித் தந்தார். அன்று முதல் இன்று வரை நாவல், சிறுகதை, கட்டுரை முதலிய பலவற்றிலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டறிந்து எழுதியிருக்கிறேன். இருப்பினும் வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று என்னைப் போய் எல்லோரும் நம்புகிறார்கள் !

கிருஷ்ண தேவராயன் கதையில் ஒரு வழிப்பறிக் கூட்டத்தை மடக்குவதற்காகக் கிருஷ்ண தேவராயர் புறப்படுகிறார் என்ற ஒரு சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. சாதாரணப் பிரஜை போல மாறுவேடம் அணிந்து ஒரு யாத்திரிகர் கோஷ்டியில் அவர் சேர்ந்துகொள்கிறார். அதில் வழிப்பறிக் கூட்டத்தின் தலைவனும் இருக்கிறான். எல்லா யாத்திரிகர்களும் ஒரு சத்திரத்தில் இரவு தங்குகிறார்கள். நள்ளிரவில் அந்த வழிப்பறிக்காரன் 'விடியப் போகிறது! எல்லோரும் எழுந்திருங்கள்!' என்று எல்லோரையும் எழுப்புகிறான். அவனது வழிப்பறித் தோழர்கள் யாத்திரிகர்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பதற்காகச் சிறிது தூரத்தில் காத்திருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் சத்திரத்திற்கு வெளியே வந்து வானத்தில் எந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கிறார். பொழுது விடிவதற்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது என்பதை அறிகிறார். வழிப்பறித் தலைவனின் தந்திரத்தை அறிந்து, அவனையும் அவன் கூட்டத்தையும் சாமர்த்தியமாகப் பிடித்துவிடுகிறார்.

எந்தக் குறிப்பிட்ட மாதத்தில் இரவின் எந்த வேளையில் எந்த நட்சத்திரம் ஆகாயத்தில் எந்த இடத்தில் காணப்படும் என் விவரத்தை எனக்குச் சொன்னவர் பழம்பெரும் எழுத்தாளரான மகரம் (கே. ஆர். கல்யாணராமன்). நட்சத்திரங்களின் நடமாட்டங்களைப் பார்ப்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவரைக் கேட்டு அதை எழுதினேன்.

ஆனந்தவிகடனில் மேற்படி அத்தியாயம் வந்த சில நாட்களுக்கெல்லாம் டெல்லியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி என்ற விஞ்ஞானி. கே. கே. பிர்லா அகாடமியின் டைரக்டர். பிலானியில் கணிதப் பேராசிரியர்.

இரவு வேளைககளில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதற்கு நான் தகவல்கள் தந்து உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார் அந்தக் கடிதத்தில்.

இது எப்படி இருக்கு!

மகரத்தின் விலாசத்தைத் தந்து அவரிடம் தொடர்பு கொள்ளுமாறு பதில் எழுதிப் போட்டேன். மகரமும் அவருக்கு உதவி செய்தார். Night Sky என்ற அவருடைய புத்தகம் வெளியே வந்ததும் எனக்கும் மகரத்துக்கும் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்பினார். முன்னுரையில் எங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

எனவே, இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்: என் எழுத்தைப் படிப்பவர்கள் யாரும் சிற்சில துறைகளில் நான் அத்தாரிட்டி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். யோசனை கேட்க வேண்டாம்.
[ நன்றி: www.appusami.com ]

தொடர்புள்ள சில பதிவுகள்:

’ஹிந்து’க் கட்டுரை -1 (ஆங்கிலம்)

 ரா.கி.ரங்கராஜன்