திங்கள், 29 செப்டம்பர், 2014

பாடலும் படமும் - 8 :அபிராமி அந்தாதி -2

அபிராமி அந்தாதி -2
நவராத்திரி சமயத்தில் அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அபிராமி பதிகம் இரண்டையும் பலர் படிப்பதும், பாடுவதும் உண்டு.  கடினமான ‘கட்டளைக் கலித்துறை’ என்ற  கவிதை இலக்கணத்தில் மிக எளிமையான சொற்களைப் பயன்படுத்தி, அதே சமயத்தில் பக்தி உணர்ச்சியைப் பொழிந்தும் பாடியிருக்கிறார் அபிராமி பட்டர். 

அவரைப் போற்றி நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு வெண்பா’


 கட்டளைக்க லித்துறைக்குக் கட்டமின்றி யுக்திசொல்லிப் 
பட்டரன்று தந்தனர்சொற் பெட்டகத்தை -- துட்டரஞ்சும் 
பத்திரையைப் பத்திரவில் பத்திசெய யுக்திசொலும் 
வித்தகரின் நற்கவிதை மெச்சு.

[ பத்திரவு = தசரா ] 

அபிராமி அந்தாதியிலிருந்து இரு பாடல்கள் . கோபுலுவின் 

 கோட்டோவியங்களுடனும், திருமதி தேவகி முத்தையாவின் 

விளக்கங்களுடனும். 

[ நன்றி : இலக்கியப் பீடம் ]
தொடர்புள்ள பதிவுகள் :

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

தென்னாட்டுச் செல்வங்கள் - 15

கங்கை கொண்ட சோழபுரம் -5 
125. காலக் கூத்தும் கடவுளின் கூத்தும்

கங்கை கொண்ட சோழபுரக் கோவிலைப் பற்றிய ’சில்பி’ + ’தேவ’னின் ஆறு ’விகடன்’ கட்டுரைகளில் ஐந்தாவது கட்டுரை இது.


சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் வந்த இக் கட்டுரையில் ஆனந்தக் கூத்தனை அழகிய சிற்ப ஓவியங்களாய் வழங்குகிறார் ‘சில்பி.  விளக்கம் அளிக்க வந்த ‘தேவன்’ காரைக்கால் அம்மையாரையும், தாயுமானவரையும் ( ”எந்நாள்கண்ணி - அன்பர் நெறி “ப் பாடலில் வரும் ஒரு கண்ணி மூலம்)  நமக்கு நினைவூட்டிப் பரவசமடைகிறார்.

மேலும்

பூண்ட பறையறையப் பூதம் மருள
நீண்ட சடையான் ஆடுமே
நீண்ட சடையான் ஆடும் என்ப
மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே

    

( நீண்ட சடையான் = சிவன்; மாண்ட சாயல் = மாண்புடைய 
அழகு; மலைமகள் = உமை)


என்று யாப்பருங்கலக் காரிகையின் உரையில் மேற்கோளாக  வரும் ஓர் கலித்தாழிசையையும் நினைவு கூர்கிறார் ‘தேவன்” . 

பார்த்து, ரசித்து, படித்து மகிழுங்கள்![ நன்றி : விகடன் ]

கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய முந்தைய பதிவுகள்:

தெ.செல்வங்கள் -11
தெ.செல்வங்கள் -12
தெ.செல்வங்கள் -13
தெ.செல்வங்கள் -14

முந்தைய ’சில்பி’ கட்டுரைகள்: 

தெ.செல்வங்கள் : 1-10

திங்கள், 15 செப்டம்பர், 2014

சங்கீத சங்கதிகள் - 39

இசைக்கு ஒரு ராணி!
 டி.டி.கிருஷ்ணமாச்சாரிசெப்டம்பர் 16எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்தநாள். 

1968 .எம்.எஸ். அவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்ற ஆண்டு.
அந்த வருடம் ‘விகடனில்’ ( 22 டிசம்பர் , 68 இதழில்) வந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் இதோ! 
=== 
''இன்று மாலை சௌந்தர்ய மஹாலில் ஒரு பெண் பாட்டுப் பாடுகிறாள். போவோம் வாருங்கள்...'' என்று என்னுடைய நண்பர் ஒருவர் என்னை அழைத்தார். அவர் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன். மேடையில் ஒல்லியாக, மெலிந்த உருவம் கொண்ட ஒரு சிறு பெண் பாடிக்கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. 'கணீர்' என்ற அந்தச் சாரீரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ''பரவாயில்லை; சின்னப் பெண் நன்றாகப் பாடுகிறாள். நல்ல சாரீரம்'' என்று என் நண்பரிடம் கூறினேன்.

''பிரமாதமான சாரீரம். ’ஏனாதி ஸிஸ்டர்ஸ்’ என்று ரொம்பப் பிரபலமானவர்கள் உண்டு. அதில் பெரியவளுடைய சாரீரம் பிரமாதமாக இருக்கும். இந்தப் பெண்ணுடைய சாரீரம் அதை விடச் சிறப்பாக இருக்கிறது'' என்றார் என் நண்பர்.

இது நடந்தது 1931-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்.

ஆமாம். நான் கேட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் முதல் கச்சேரி அதுதான்!

அதன்பிறகு, நான் எம்.எஸ். கச்சேரி கேட்கவே இல்லை. சங்கீத உலகிலே ஒரு பெரிய பரபரப்பையே அவர் உண்டாக்கிக்கொண்டு இருந்தார். எங்கு பார்த்தாலும் 'எம்.எஸ்., எம். எஸ்.' என்ற பேச்சுத்தான்! இடையில், சினிமாவில் சேர்ந்து நடித்தார் என்று கேள்விப்பட்டேன். நான் எதையும் பார்க்கவில்லை. அந்தச் சமயத்தில், எ.எஸ்.ஸின் பாட்டில் ஜி.என்.பி.யின் சாயல் இருக்கிறது என்று சிலர் என்னிடம் சொல்வார்கள்.   

எம்.எஸ். கச்சேரி என்னை வெகுவாகக் கவர்ந்தது 1953-ல்தான். அந்த நாள் கூட எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி, டி.எம்.எஸ். மணி வீட்டில் கல்யாணம். நான் போயிருந்தேன். என்னை முதல் வரிசைக்கு அழைத்துக்கொண்டு போய், அப்போது முதல்மந்திரியாக இருந்த ராஜகோபாலாச்சாரியார் பக்கத்தில் உட்கார வைத்து விட்டார்கள்.

''முன்னெல்லாம் நல்லா பாடிண்டிருந்தா. இப்போ கொஞ்சம் மாறுதல் இருக்கு'' என்று என்னிடம் சொன்னார் ராஜகோபாலாச்சாரி. எனக்கென்னவோ அன்றைய கச்சேரி ரொம்ப நன்றாகவே இருந்தது. அப்போதுதான் எம்.எஸ்-ஸிடம் பரிபக்குவம் ஏற்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.

''நீங்க சொல்றது சரியில்லே. இப்பத்தான் அவர் சங்கீதத்திலே ஒரு பரிபக்குவம் ஏற்பட்டிருக்கு. உணர்ச்சியோடு பாடுகிறார்'' என்று என்னுடைய அபிப்பிராயத்தை ராஜகோபாலாச்சாரியிடம் சொன்னேன்.

அது ரொம்பவும் உண்மை. அப்போது அவருக்கு, செம்மங்குடியோட சிட்சை! நல்ல அப்பியாசம் ஏற்பட்டிருந்தது. அதற்குப் பிறகு எம்.எஸ். கச்சேரியை அடிக்கடி கேட்க, எனக்கு அவகாசம் ஏற்பட்டது. டெல்லிக்கு அடிக்கடி வருவார். வரும்போது சில சமயம் என் வீட்டில் தங்குவதுண்டு. அந்தச் சமயத்திலெல்லாம் அவருடைய சங்கீதத்தை நான் கேட்பேன். ''நீ தேர்தலுக்கு நில். இப்போது உனக்கு இருக்கிற மவுசுக்கு ஜெயித்துவிடுவாய்" என்று வேடிக்கையாகச் சொல்வேன்.

சங்கீதம்தான் எம்.எஸ்.ஸுக்கு உலகம். அதைத் தவிர, அவருக்கு வேறு சிந்தனையே கிடையாது. எப்போதும் அதே தியானம்தான்.
அவர் சங்கீதத்திலே ஒரு சிறப்பு, படிக்குப் படி விருத்தி! பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிற மனப்பக்குவம் அவ ருக்கு உண்டு. சாதகம், உணர்ச்சி, கிரகித்துக்கொள்கிற சக்தி எல்லாம் உண்டு. பகவான் நல்ல சாரீரத்தைக் கொடுத்திருக்கிறார். சாதகம் செய்து அந்தச் சாரீரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார் அவர். எனக்குத் தெரிந்து இப்படிப்பட்ட இனிய சாரீரம் வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்வேன். அவருடைய க்ரமேண ஞான அபிவிருத்தி, அவரை விடாமல் கேட்கிறவர்களுக்கு நன்றாகப் புரியும்.

சமீபத்திலே ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன். சக்ரவாஹ ராகம் பாடி, 'சுகுண முலேகா' பாடினார். அது ரொம்ப இடக்கான ராகம். கொஞ்சம் இப்படி அப்படிப் போனால், சௌராஷ்டிரத்தில் கொண்டு போய் விட்டுவிடும். அன்றைக்கு அவர் பாடினது, பெரிய வித்வான்கள் வரிசையில் அவருக்கு ஓர் இடம் இருக்கிறது என்பதை நிரூபித்தது.
அவர் கச்சேரியை வெளிநாட்டுக்காரர்கள் கேட்டு ரசித்திருக்கிறார்கள். நம் சங்கீதத்தை அவர்கள் எவ்வளவு தூரம் ரசித்திருப்பார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், எம்.எஸ். ஸுடைய வாய்ஸ் அவர்களை மயக்கியிருக்கும்.

ஜவஹர்லால் அவரை 'இசைக்கு ஒரு ராணி' என்று சொன்னார். அது முற்றிலும் உண்மை!

பரிபூர்ண பக்தியுடன், விநயத் துடன் பெரியவர்களிடமிருந்து நல்லதை எல்லாம் கிரகித்துக் கொண்டு, 'வித்வத்' தன்மையை அடைந்திருக்கிற திருமதி எம்.எஸ்.ஸை. இந்த வருஷம் மியூசிக் அகாடமி கௌரவிப்பது ரொம்பப் பொருத்தம்.
              
 [ நன்றி: விகடன் ] 


ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

தேவன் - 11 : தேவன் நூற்றாண்டு விழா -3 : ‘தினமணி’க் கட்டுரை

தேவனுக்கு வழிவிடுங்கள்
ராணிமைந்தன்


[ 8-9- 2013 அன்று நடந்த ”தேவன் நூற்றாண்டு விழா” வைப் பற்றித் ‘தினமணி’யில் ராணிமைந்தன் எழுதிய ஒரு கட்டுரை ]
எளிமையாகவே வாழ்ந்து தன் 44 வயதில் மறைந்தவர் எழுத்தாளர் தேவன்
( 1913 - 1957). இம்மாதம் கடந்த எட்டாம் தேதி (8.9.13) ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கில், தேவன் அறக்கட்டளை எடுத்த தேவன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியும் அதேபோல் எளிமையாகவே இருந்தது. விழாத் துளிகளில் சில:

ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் அன்று காலை ஒன்பது மணிக்கே முக்கால் வாசி அரங்கம் நிரம்பியதற்கு முக்கியக் காரணம் சஞ்சய் சுப்ரமணியம். ஒன்றே முக்கால் மணி நேரம் ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டார். அற்புதமான கச்சேரி.

தேவனின் நெருங்கிய நண்பர் ஓவியர் கோபுலு கைத்தாங்கலாக மெதுவாக அடிமேல் அடி எடுத்து வந்தபோது அவரை வாயிலில் நின்று வரவேற்றார் ஓவியர் நடனம். தேவனுக்கும் இந்த இருவருக்கும் தொடர்பு உண்டு. அவருடன் நெருங்கிப் பழகி அவர் கதைகளுக்கு சித்திரம் வரைந்தவர் கோபுலு என்றால், தேவனின் மறைவிற்குப் பிறகு வெளியாகியுள்ள முப்பதுக்கும் மேலான அவருடைய புத்தகங்களில் பெரும்பாலானவற்றுக்கு அட்டைப் படச் சித்திரம் நடனத்தின் கைவண்ணம்தான்.

பலரின் பார்வையில் "தேவன் வரலாறு'' என்ற தலைப்பில் சாருகேசி தொகுத்த நூலை கீழாம்பூர் வெளியிட, திருப்பூர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்."ஒருமுறை அண்ணா பெருங்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த இடத்தின் வழியாக தேவன் காரில் வரவும், அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் அண்ணாவிடம் போய் "தேவனின் கார்' என்று சொன்னதும் "ஆனந்த விகடன் தேவனா... உடனே அவர் போக வழி விடுங்கள்' என்றாராம் அண்ணா. இதைச் சொன்னவர்: கீழாம்பூர்.

"தேவனின் கதைகளை பதிப்பிக்கும்போது கோபுலுவின் சித்திரங்களையும் சேர்த்து வெளியிட வேண்டும்'' என்றார் திருப்பூர் கிருஷ்ணன்.

தேவனைப் பற்றி இவ்வளவு தெரிந்த ஒருவர் கனடாவில் இருக்கிறாரா என்று வியக்க வைத்தார் அங்கிருந்து வந்து உரை நிகழ்த்திய பேராசியர் எஸ். பசுபதி. தன் கருத்துகளை சில நிமிடங்கள் பாடல்களாகவும் அவர் பாடினார். ""தேவன் எழுத்தில் இசையின் தாக்கம் உண்டு. அவரது "மைதிலி' நாவல் முழுக்க முழுக்க இசைத் தொடர்பானதுதான். தேவன் போன்று எழுதுபவர்களை ஊக்குவிக்க போட்டி வைக்கலாம்'' என்றார் பேராசிரியர் பசுபதி.

எழுத்தாளர் அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) ஒரு காரியம் செய்தார். தேவனின் "லட்சுமி கடாட்சம்' நாவலுக்கு கோபுலு வரைந்த சித்திரங்களை ஸ்கேன் செய்து அதை விஷுவலாக திரையில் காட்டியது புதுமையான முயற்சியாக இருந்தது. அது மட்டுமல்ல, அந்தச் சித்திரம் ஒவ்வொன்றையும் காட்டியபோது எந்தக் காட்சிக்காக கோபுலு வரைந்தது என்று கையில் எந்தக் குறிப்பையும் வைத்துக்கொள்ளாமல் அம்பை விளக்கியது வியக்க வைத்தது. மேலும், ""தேவன் காலத்தில் உள்ள நிலையையொட்டி பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் சுதந்திரத்தை வலியுறுத்துவதாக அவரது கதைகள் அமைந்தன'' என்றார் அம்பை.

தேவன் அவர்களின் சகோதரி மகன் கே. விசுவநாதன் (அன்னம்), தேவனின் பரம ரசிகர் வாதூலன், பதிப்பாளர் "அல்லயன்ஸ்' சீனிவாசன், திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் ஆகியோருக்கு தேவனின் நினைவாகப் பரிசு வழங்கப்பட்டது. "பலரின் பார்வையில் தேவன்' புத்தகத்தைப் பதிப்பித்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கினார் "அல்லயன்ஸ்' சீனிவாசன்.

தேவனின் முதல் சிறுகதை "மிஸ்டர் ராஜாமணி'யை வெளியிட்டதுடன், அவரது எழுத்தில் ஈர்க்கப்பட்டு விகடனில் துணை ஆசிரியராக சேர்த்துக்கொண்டார் கல்கி. பின்னர் "தேவன்' விகடனின் நிர்வாக ஆசிரியராகவே மாறினார். அவரது எழுத்தில் நகைச்சுவை நிறைந்திருக்கும். ஜஸ்டிஸ் ஜகநாதன், மிஸ் மாலதி, சி.ஐ.டி. சந்துரு, லட்சுமி கடாட்சம், ராஜத்தின் மனோரதம், துப்பறியும் சாம்பு எல்லாமே வெவ்வேறு ரகம் என்றாலும் நகைச்சுவையே பிரதானம் என்று பேசியவர்கள் பலரும் ஒருசேர குறிப்பிட்டார்கள்.

ஒரு நூற்றாண்டு விழா என்றால் அதற்கான பதாகைகளை எப்படியெப்படி எல்லாமோ டிûஸன் செய்து பொருத்துவார்கள். ஆனால் இந்த விழாவிற்கு இரண்டே இரண்டு பேனர்கள். அவையும் அநியாயத்திற்கு சிறியதாக இருந்தன.

சாருகேசியின் தனி மனித முயற்சிதான் இந்த நிகழ்ச்சியை சாத்தியமாக்கி இருந்தது என்பது தெளிவாகப் புரிந்தது. விழா நேரத்தை அவர் எப்போதும்போல துல்லியமாக நிர்வகித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் வந்திருந்தவர்கள் கருத்து வேறுபாடின்றி வெளியிட்ட ஒரு மனதான கருத்து: "ஒரு நூற்றாண்டு விழாவை இதை விட எளிமையாக யாராலும் கொண்டாடி விட முடியாது''.

(படம்: ஏ.எஸ். கணேஷ்)
[ நன்றி: தினமணி ] 

புதன், 10 செப்டம்பர், 2014

பி.ஸ்ரீ. -9: பாரதி விஜயம் -1

கதா காலக்ஷேபம்
பி.ஸ்ரீ


செப்டம்பர் 11. பாரதியார் நினைவு தினம்.


பாரதியாருடன் 1919--1920 ஆண்டுகளில் நெருங்கிப் பழகியவர் தமிழறிஞர் பி.ஸ்ரீ. “ஊழிக் கூத்து” போன்ற பாடல்களை இடிக்குரலில் பாரதியார் பாடக் கேட்ட பாக்கியம் செய்தவர் பி.ஸ்ரீ.

 பி.ஸ்ரீ அவர்கள் பெரும்பாலும் ‘ஆனந்தவிகடனில்’ தான் எழுதினாலும், ‘கல்கி’யிலும் எழுதியிருக்கிறார்! உதாரணமாய், ’கல்கி’ இதழ் தொடங்கிய பின், 1941-43 வாக்கில் ‘பாரதி விஜயம்’ என்ற சிறு தொடரைக் ’கல்கி’யில் எழுதினார். அது பத்து அத்தியாயங்கள் கொண்ட சிறு தொடர். அதிலிருந்து ஓர் அத்தியாயம் இதோ!
[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள சில பதிவுகள்: 

பி.ஸ்ரீ. படைப்புகள்

பாரதி

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

தேவன் -19 : இதென்ன உபசாரம்

இதென்ன உபசாரம் 
தேவன்

” ஒட்டவைத்த முந்திரிப் பருப்பைப் போன்றதுதான் உபசாரம்.”  -தேவன்செப்டம்பர் 8. தேவன் பிறந்த தினம்.  இதோ அவருடைய ஒரு கட்டுரை!

ஸம்பாதி என்ற பெயரில் ‘தேவன்’ எழுதிய இன்னொரு கட்டுரை --’கோபுலு’வின் ஓவியங்களுடன் தான்! 


[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள சில பதிவுகள்: 
தேவன்: நடந்தது நடந்தபடியே

தேவன் சில படைப்புகள்

துப்பறியும் சாம்பு

தேவன்: மிஸ்டர் ராஜாமணி

தேவன்: மாலதி

தேவன்: கண்ணன் கட்டுரைகள்

வியாழன், 4 செப்டம்பர், 2014

தென்னாட்டுச் செல்வங்கள் - 14

கங்கை கொண்ட சோழபுரம் -4 
124. சிற்ப மும்மணிகள் கங்கை கொண்ட சோழபுரச் சிற்பங்களைப் பற்றிய ஆறு ’ தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரைகளில் , ‘தேவனின் விளக்கத்துடன் ‘சில்பி’ விகடனில் நமக்களித்த நான்காம் கட்டுரை இது.

நவ கிரகங்கள் உள்ள ஓர் அருமையான சிற்ப 'மணியை’ முதலில் சில்பி நம்முன் வைக்கிறார். ஓவியத்தை ஒப்பிட்டுப் பார்க்க, அந்தச் சிற்பத்தின் போட்டோ ஒன்றையும் இங்கு இடுகிறேன்.


சூரியன்--சாயா தேவியின் பிள்ளை எனப் புராணங்கள் குறிப்பிடும் சனீச்வரனைப் பற்றிய இரு புலவர்கள் பேச்சுடன் தொடங்குகிறது கட்டுரை.
( இது எந்தக் கவிதையைக் குறிக்கிறது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!)

சனீச்வரனைப் பற்றி அறிஞர் கி.வா.ஜகந்நாதனின் ஒரு வெண்பாவை நாமும் படித்து விட்டுப் பின்னர் இக்கட்டுரையைப் பார்ப்போம்!

வெய்யசுட ரோன்சாயை மேவுமகன், சூற்கரத்தான்
பைய நடக்கின்ற பங்கு,கரு -- மெய்யன் 
இனியன் அருளுங்கால் இன்றேற் கொடியன், 
சனிய(ன்)அவன் சீற்றம் தவிர். 
( பைய நடக்கின்ற : சனிக்கு ஒரு கால் சற்றுச் சிறுத்திருக்கும் --- யமனின் தண்டனை! -- அதனால் மெல்ல நடப்பான். அதனால் ‘ சனைச்சரன்’ ( வடமொழி மூலம்) என்று பெயர் )

கட்டுரையில் மேலும் இரு சிற்ப மணிகள் - மகிஷாசுர மர்த்தனி , பிருகந்நாயகி -- பின்னர் வருகின்றன. கண்டு மகிழுங்கள்!


[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:

தெ.செல்வங்கள் -11
தெ.செல்வங்கள் -12
தெ.செல்வங்கள் -13

தென்னாட்டுச் செல்வங்கள்