அருணகிரி நாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருணகிரி நாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 ஜூன், 2021

1893. முருகன் - 13

திருமலிவான பழமுதிர்சோலை 
குருஜி ஏ.எஸ்.ராகவன்








[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your pc and then read after zooming. ]

தொடர்புள்ள பதிவுகள்: 
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

ஞாயிறு, 2 மே, 2021

1861. முருகன் - 11

தேனிசை துய்க்கும் தணிகைப் பிரான்
குருஜி ஏ.எஸ்.ராகவன்


    
                                   



   


[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your pc and then read after zooming. ]

தொடர்புள்ள பதிவுகள்: 

வெள்ளி, 21 டிசம்பர், 2018

1199. திருப்புகழ் - 13

அருணகிரியும் அகச்சான்றுகளும்
பசுபதி



‘அம்மன் தரிசனம்’ 2018 தீபாவளி மலரில் வந்த ஒரு கட்டுரை.







[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி: கவியோகி வேதம் ]


தொடர்புள்ள பதிவுகள்:
பசுபடைப்புகள்
சங்கச் சுரங்கம் 


திருப்புகழ்

முருகன்

ஞாயிறு, 9 ஜூலை, 2017

765. அருணகிரி : ஒரு பா ஒரு பஃது : கவிதை

அருணகிரி : ஒரு பா ஒரு பஃது
( வெண்பா, அந்தாதி மாலை)
பசுபதி 

ஆனி மூலம். பௌர்ணமி.  அருணகிரிநாதர் குருபூஜை தினமாகப் பலவிடங்களில் கொண்டாடப் படும்.
===

வாக்குக் கருணகிரி என்றுமக்கள் வாழ்த்தினர்;
தாக்கம் தருமவர் சந்தமலி -- ஆக்கங்கள்
சேவற் கொடியானின் சீர்பரவி , பற்பல
பாவினங்கள் ஈந்தன பார்.                       (1)

பாரத நாட்டுப் பரம்பரைச் சொத்தான
ஆரணபு ராணங்கள் யாவையும் -- ஆரியம்
வண்டமிழ் சேர்த்து வடித்தளித்த பாமலர்கள்
செண்டாய்த் திகழும் திரு.                        (2)

திருவருளைப் பெற்றுத் திருப்புகழ் யாத்துக்
குருவென் றழைத்தார் குகனை -- இருப்பவல் 
என்றபுகழ்ப் பாக்கள் இசைத்தால்நம் வாழ்வினில்
வென்றிகள் கிட்டுவது மெய்.                      (3)

மெய்யுரைத்த ஐயன் விளம்பும் அவிரோதம்
வையத்திற் கேற்ற வழியன்றோ? -- செய்யோனை
ஏத்தி இசைப்புலமைக் கேற்ற நவமணிகள் 
கோத்தளித்தார் பாவலர் கோ.                          (4)

கோலமயில் விந்துவை, குக்குட நாதத்தை
வேலென்ற ஞானத்தை மெச்சிப்பின்-- மாலின்
மருகோனைப் போற்றிடும் மந்திரங்கள் சொன்ன
கருணைக் குருநாதன் காண்.                       (5)

காணவொணாச் சக்தியைக் கந்தனென்ற வோருருவில்
பேணிப் புகழ்ந்து பிரபஞ்சத் -- தோணியை
ஓட்டுகின்ற மாலுமியை ஓங்கார ரூபனாய்க்
காட்டினார் சந்தக் கவி.                             (6)

கவிவகைகள் நான்கில் கைதேர்ந்து தூய
அவிரோதம் போதித்த ஐயன் -- அவதரித்த
ஆளுடைப் பிள்ளையை ஆசானாய் ஏற்றந்த
வேளைப் புகழ்ந்தார் விதந்து.                         (7)

விதம்விதமாய் வண்ணம் விளையாட்டாய்ப் பாடிப்
புதியபா யாப்பைப் புகுத்தி -- கதிபெறப்
பெம்மானைப் போற்றியவர் பெற்றவோர் மந்திரம்
சும்மா இருவென்ற சொல்.                            (8)

சொல்லும் பொருளும் சுவைபடப் பாடினவர்
சொல்லறு மௌனமும் சுட்டினார் -- உல்லாசன்
ஈராறு கையனை இந்துமதப் பாலமாய்ப்
பாராட்டிப் பாடினார் பார்.                             (9)

பாரெங்கும் காணாத பன்னரும் தாளங்கள்
வாரி வழங்கினார் ஓசைமுனி -- தாரணியைச்
சூழ்ந்த பலவகை துன்பங்கள் நீக்கிநம்
வாழ்விற் குதவுமவர் வாக்கு.                            (10)

=========

1.  வாக்குக் கருணகிரி வாதவூரார் கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதி அப்பரெனச் சொல்." - பழம் வெண்பா

 2. ஆரணம் - வேதம்

 3. 'இருப்பவல் திருப்புகழ்' -- திருப்புகழ்

 4. ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
  மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார்  - தாயுமானார்

நவமணிகள் - திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருவெழுக்கூற்றிருக்கை

 5. 'நாத விந்து கலாதீ' -- திருப்புகழ்

7. கவிவகைகள் நான்கு - ஆசு, வித்தாரம், சித்ரம், மதுரம்
   ஆளுடைப் பிள்ளை, சம்பந்தர் முருகனின் ’அவதாரம்’ என்பது
    அருணகிரியின் கொள்கை.

8. புதியபா யாப்பு -- திருப்புகழ் பாவகைக்கு அருணகிரியே ஆதிகர்த்தா

9. உல்லாச நிராகுல - கந்தர் அனுபூதி

10. 'ஓசைமுனி ' -- பாம்பன் சுவாமிகளின் வாக்கு


தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 17 மே, 2016

திருப்புகழ் - 11

வள்ளி மணவாளப் பெருமாள்
குருஜி ஏ.எஸ்.ராகவன் 


மே 17. ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் 

கல்கி’யில் 2002இல் எழுதிய  இன்னொரு கட்டுரை இதோ! ( அவர் எழுதிய மற்ற கட்டுரைகளின் சுட்டிகளைத் தொடர்புள்ள பதிவுகள் என்ற கடைசிப் பகுதியில் பார்க்கலாம்.) 

========




இன்று திருப்புகழ், கச்சேரி மேடைகளில்  ஆர்வத்தோடு பாடப் பெறுகிறது. திருப்புகழ் பாக்களடங்கிய தனிக் கச்சேரிகள் கூட நடக்கின்றன. சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் திருப்புகழ் இசை விழாவே நடக்கிறது. பிரவசன மேடைகளிலும் கலை _ இலக்கிய விழாக்களிலும் திருப்புகழ் விளக்கமும் ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டு தத்துவ முத்துக்களும் மொழி நயங்களும் வரிசைப்படுத்தப்படுகின்றன.

  அருணகிரிநாதர் அருளிய பாக்கள் இந்த கீர்த்தியை அடைவதற்குக் காரணமாய் இருந்தவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். வள்ளிமலை என்று சொன்னதுமே ‘திருப்புகழ்சுவாமிகள்’ என்ற அடைமொழியைப் பெற்ற இவர் ஞாபகம்தான் வரும்!

  வள்ளிமலை திருத்தல வரலாறைப் பார்க்கும் முன் சுவாமிகளின் அதிசய வாழ்க்கை வரலாறைச் சற்றுப் பார்ப்போம்.


  சிதம்பர ஐயர் என்பவரது மகனாகப் பிறந்த சுவாமிகளுக்குப் பூர்வாசிரமப் பெயர் அர்த்தநாரி. திருச்செங்கோடு அர்த்த நாரீசுவர பிரானை வேண்டிப் பெற்ற பிள்ளை என்பதால் அப்பெயர். சமையல் பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சிறுவனிடம் தமிழ் பயின்று திருப்புகழ் பாக்களுடன் உறவாட ஆரம்பித்தார். திருவண்ணாமலை சென்றபோது ரமண மஹரிஷியின் அனுக்கிரஹமும் சேஷாத்ரி சுவாமிகளின் வழிகாட்டலும் பெற்றவர். அந்த வழிகாட்டல்படி வள்ளிமலை சென்று வள்ளியின் அருளால் இசை ஞானமும் பெற்று திருப்புகழ் பாக்களைப் பாட ஆரம்பித்தார். அந்தக் காலத்திலேயே திருப்புகழ் கான சபைகளை நாடு முழுவதும் நிறுவினார் இந்த எளியவர் என்று அறிய பிரமிப்பு ஏற்படுகிறது.

  காம விஷயங்களைச் சொல்வதாகக் கருதி அதுநாள் வரை திருப்புகழை ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால், உண்மையில் காமத்தின் கேடுகளையே திருப்புகழ் பாக்கள் விளக்கின. அதிலும் சமுதாய அவலத்தைத் தனது சொந்த அவலம்போல் ஏற்றுப் பாடும் மரபில்தான் அருணகிரியார் அவ்வாறு பாடியிருக்க வேண்டும். அவர் வாழ்ந்த கால கட்டத்தில் ஆண்ட அரசர்களின் போக்ய வாழ்க்கையை பிரபுக்கள் முன்னுதாரணமாகக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் வாழ்வைப் பார்த்து எளிய மக்களும் திசைகெட்டுத் திரிய ஆரம்பித்தார்கள். இதைக் கண்டு பொறாமல்தான் அருணகிரிநாதர் திருப்புகழில் சில விவரங்களைப் பாடியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்களிடையே ஒரு கருத்து உண்டு.


  திருப்புகழின் பக்தி நெறியை உணர்ந்து, வேதாந்த கருத்தைத் தெளிந்து அதனை உலகம் போற்றும் சமய இலக்கியமாகவும் இசை வழிபாடாகவும் ஆக்கினார் சுவாமிகள். இத்தனைக்கும் இவர் அகண்ட கல்வியறிவோ ஆழ்ந்த மொழிப்புலமையோ உடையவர் அல்ல. எனினும் திருப்புகழ் ஒலிக்கு மந்திராக்ஷரங்களின் வலிமை உண்டு என்று வகுத்துக் கூறுகிற அளவுக்கு அதில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

  வள்ளிமலை வரலாறுக்கு வருவோம்...

  இத்தலத்தில்தான் முருகன் வள்ளிக் குறத்தியை மணம் செய்து கொண்டான் என்கிறது புராணம். இந்தப் பெருமைக்குப் போட்டி போடுகிற வேறு சில ஊர்களும் இருந்தாலும் அதிக வாக்குகள் பெற்று ஜெயிப்பது வள்ளி மலைதான்! இங்குதான் வள்ளி மஞ்சள் அரைத்துக் குளித்தாள்; இந்தச் சுனையில்தான் தேனும் தினைமாவும் கலந்து உண்டனர் கந்தனும் வள்ளியும்; இதோ _ காலடிச் சுவடுகள் _ இவை அந்த தெய்வ தம்பதியுடையவை; அதோ _ அங்கே ஒரு குன்று தெரிகிறதே, அதுதான் கணேசகிரி. அவ்விடத்தில் தான் வள்ளியைப் பயமுறுத்த வினாயகர் யானை உருவெடுத்து வந்தார்; மிரண்டு போன வள்ளி, கிழத் தோற்றத்தில் இருந்த கந்தனை நெருங்கி இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள் _ இப்படி வள்ளிமலையில் திரும்பிய திசைகளெல்லாம் கதைகள்!

  இந்த வள்ளி ஒரு வகையில் முருகனுக்கு மாமன் மகள்! திருமாலின் இரு கண்களிலிருந்தும் தோன்றிய இரு பெண்கள் சுந்தரவல்லி, அமிர்தவல்லி. இவ்விருவருமே முருகனை அடைய வேண்டும் என்று தவமிருந்தனர். முருகனும் அவர்களுடைய தவத்துக்கு இறங்கி, தக்க சமயத்தில் வந்து ஆட்கொள்வதாக வாக்களித்தான். அமிர்தவல்லி, இந்திரன் மகள் தேவ சேனையாகப் பிறந்து முருகனைத் திருப்பரங்குன்றத்தில் மணந்தாள். அந்த வல்லிதான் வள்ளி மலையில் வேடனாகப் பிறந்த வள்ளி சுந்தரி!

  வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று  
   வள்ளியை மணந்த பெருமாளே’

  என்று அருணகிரிநாதர் பாடல் பிரமாணமாக இருக்கிறது.

  வள்ளி _ தெய்வயானையரை முருகன் மணந்தது இருதார மணத்துக்கு அங்கீகாரம் தெரிவிப்பதாக நவீன குதர்க்கங்கள் எழுந்துள்ளன. கடவுளர் கதைகளின் பின் உள்ள தத்துவங்கள்தான் முக்கியமானவை. _ மாசு மருவற்ற அடியவர்களாயிருப்பின், அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச் சென்று திருவிளையாடல் புரிந்து ஆட்கொள்வான் இறைவன் என்பதற்கான அழகான உதாரணம் வள்ளி _ முருகன் திருமண வரலாறு. அவ்வாறு அவன் தேடி வந்துள்ளதை உணராமல், மாயையில் கட்டுண்டு மறுத்து, மோடி செய்யும் அசட்டு பக்தனின் சித்திரிப்புத்தான் வள்ளி! முருகனிடத்தில் அவள் கொண்ட அன்பின் மிகுதியே அவள் கண்களை மறைக்கிறது! முருகனோ அந்த நிறையன்பின் உயர்வுக்குப் பணியும் தெய்வாம்சத்தின் உருவகம். வள்ளியின் அடி பணிந்து கெஞ்சவும் அவன் தயார்!

  தெய்வீகக் காதல் வரலாற்றுத் தலமான வள்ளிமலை அரக்கோணத்திலிருந்து நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அடிவாரத்திலும் மலை மேலும் முருகன் கோயில்கள் இருக்கின்றன. சரவண பொய்கையைக் கடந்து அடி வாரக் கோயிலை அடைகிறோம்.

  ‘மயலொடு இருபுறம் இருமாதர் மருவ’ ஆறுமுகப் பெருமான் நிற்கிறான்! கிழக்கு நோக்கிய பிராகாரம்.


  வணங்கித் துதித்து விட்டு படிகள் ஏறி மலைச் சிகரத்துக் கோயிலுக்குப் போகிறோம். ஒரே பாறையில் படிகள் அமைந்துள்ளன. குடைவரைக் கோயில். கடைசிப் படியைத் தொடுகையில் இடது பக்கம் திறந்த வெளியில் துவஜஸ்தம்பம் வலப்புறம் பாறைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. துவஜஸ்தம்பத்தை வலம் வந்து குடை வரை மண்டபத்தை அடைகிறோம். அங்கே... இரு கைகளிலும் கவண், கல் ஏந்தி, தினைப் புனம் காக்கும் கோலத்தில் வள்ளி நம்மை வரவேற்கிறாள் _ பாறைச் சுவரில் செதுக்கப்பட்ட சிற்பச் சித்திரமாக. தொடர்ந்து, வினாயகர், அருணகிரியார்; வீரபத்ரர், நவவீரர்கள் என்று தரிசித்துக் கொண்டே போகிறோம். ஒரு சிறு மண்டபத்தில் காசி விச்வநாதர், விசாலாக்ஷி இருக்கின்றனர், சற்றே மேல் நிலை _ இரு படிகள் ஏறினால் மூலஸ்தானம். ஒரு திருமுகமும் இரு கரங்களும் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் அபயவரதமுடன் தென்திசை நோக்கி வள்ளி _ தேவ சேனையுடன் வீற்றிருக்கிறான். ‘வள்ளியை மணம் புணர வந்த முகம்’ தனிப் பெருமிதத்துடன் ஜொலிப்பதாக நம் சிந்தைக்கும் கற்பனைக்கும் தோன்றுகிறது.

  சன்னதிக்கு நேர் எதிரே ஒரு சதுர ஜன்னல் போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதன் பின்னே ஒரு குகை இருக்கிறது என்கிறார்கள். அங்குதான் முருகன், வள்ளியைக் களவு கொண்டு போனான் என்கிறார்கள்.

  மலையின் அமைப்பே ஓம்கார வடிவமாக இருக்கிறது. வலம் வந்து வலதுபுறம் பிரியும் பாதை வழியே சென்றால், எல்லோரும் திருப்புகழ் பாடவேண்டும் என்று பாடுபட்ட வள்ளிமலை சுவாமிகளின் ஆசிரமத்தை அடையலாம். அவரது திருவுருவச் சிலை, சமாதி இரண்டும் உள்ளன.

அருகேயுள்ள குகையில், முருகன் வள்ளியை கந்தர்வ மணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். சுற்றிலும் வேறு பல குகைகள் இருக்கின்றன.

  நான்கு கால பூஜைகளுடன் கோலாகலமாக இருக்கிறது கோயில். மலர்க்காவடி பிரார்த்தனை இத் தலத்தில் விசேஷம். தமிழ்ப் புத்தாண்டுதோறும் திருப்புகழ் திருப்படி விழா நடைபெறுகிறது. வள்ளிக்கு மஞ்சள் காப்பு சார்த்துவதும், முருகன் சன்னிதியில் சடாரி சாதித்து தீர்த்தம் வழங்குவதும் தனிச் சிறப்புகள்.


  ‘வேடர்பறி’ என்ற விழா இக்கோயிலில் மலையடிவாரத்தில் நடைபெறுகிறது. மயில் வீரன் முருகன் குதிரை வீரனாக மாறுகிறான்! வள்ளியைத் தன் குதிரை வாகனத்தில் ஏற்றி அபகரித்துச் சென்று அன்புச் சிறைக்குள் பூட்டி வைக்கிறான்! சுற்றியுள்ள மக்கள் வேடர்குலத்தவராக மாறி, முருகனிடமிருந்து வள்ளியை மீட்கப் போர் செய்து தோற்றுப் போகிறார்கள்!

  பிறகு, தாங்களே தேனும் தினைமாவும் புத்தாடைகளும் ஸ்ரீதனமாக்கி இருவருக்கும் மணம் முடித்து வைக்கிறார்கள்.

  இந்த உலகியல் நாடகங்களுக்கெல்லாம் உவப்புடன் தன்னை உட்படுத்திக் கொண்டு, உலகாளும் முருகன் மாறாத சிரிப்புடன் காட்சி தருவது பார்த்து பார்த்து வியக்கத்தக்க காட்சி.

  இந்தத் திருமணம் எதை உணர்த்துகிறது என்று அருணகிரிநாதர் மிக அழகாகச் சொல்லிவைத்திருக்கிறார்:

  ‘‘கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன 
   குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல் 
  சின்னங் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை 
   முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.’’

  ‘யாரொருவர் யான், எனது எனும் ஆணவ நிலை அற்று என்னை வழிபடுகிறார்களோ, அவர்களிடம் நான் வலியச் சென்று அவர்களுக்குக் குற்றேவல் புரிந்து என்னிடம் சேர்த்துக் கொள்வேன்’’ என்று எனக்கு ரகசியமாக உபதேசித்ததை இந்தக் குறிஞ்சிநில ஊராகிய வள்ளிமலை பகிரங்கமாக வெளிப்படுத்தி விட்டது!’

  புலவர் சு. சுந்தரேசன் என்பவர் பாடியுள்ள வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத் தமிழ், வள்ளிக்குக் கிடைத்த நிலைவாழ்வு நமக்கும் கிடைக்க வேண்டும் என்று எத்தனை எளிமையுடன் பிரார்த்திக்கிறது பாருங்கள்:

  நிலையான வாழ்வினை நிதியான பேற்றினை 
    நிறைவான தன்மனத்தை 
  நிலமீது பெரியரைப் போற்றிடும் பண்பினை 
    நெறியான நல்லொழுக்கை 
  உலையாத பொருளினை உறுதியாம் அறிவினை  
    உயர்வான ஞானமதை 
  உத்தம பக்தியை உன்கழல் நிழலினை 
    ஒருமையின் துதிப்பவர்க்கே 
  சந்ததம் அளித்திடும் சண்முகக் கடவுளே 
    தனிப்பெருங் கருணையமுதே 
  சிலையான வன்மணச் சூரனைச் சிதைத்தவா 
    செங்கீரை யாடியருளே 
  திருமகள் செல்விவளர் வள்ளிமலை முருகனே 
    செங்கீரை யாடியருளே. 

[ நன்றி: கல்கி ]


சனி, 27 பிப்ரவரி, 2016

திருப்புகழ் -10

திருப்புகழ் ; ஒரு எழுத்தாளர் பார்வையில் 

சுஜாதா 

பிப்ரவரி 27. சுஜாதா அவர்களின் நினைவுதினம்.

[ நன்றி: விகடன் ] 

அவர் நினைவில், அவருடைய பல விசிறிகளும் படித்திருக்க மாட்டாத, அவருடைய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன் !

இது “ திருப்புகழ் கருவூலம்” என்ற மலரில் 88-இல் வெளியானது. “திருப்புகழ் அன்பர்கள்” ( கருநாடக மாநிலம்) வெளியிட்ட மலர்.
===



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:
சுஜாதா
திருப்புகழ்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

திருப்புகழ் - 9

திருப்புகழ் நூலுக்கு ஒரு வாழ்த்துரை 
‘திருப்புகழடிமை’ சு. நடராஜன் 

அருணகிரிநாதர் அருளிய பாடல்களை பொதுவாக ஒன்பது மணிகளாய்ப் பிரிப்பர். அவை: திருப்புகழ், கந்தர் அலங்காரம்,  கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி, திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை. இவை யாவற்றையும் ஒரே நூலில் பலர் வெளியிட்டிருக்கின்றனர். அண்மையில் வெளிவந்த அத்தகைய ஒரு நூல் , சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை வெளியிட்ட நூல். அதில் ஒரு புதிய திருப்புகழையும் சேர்த்து வெளியிட்டிருக்கின்றனர். நூலின் சில பக்கங்களையும், அதற்குத் ’திருப்புகழ் அடிமை', சு. நடராஜன் அளித்த ஒரு சிறப்பான வாழ்த்துரையையும் இங்குக் காணலாம்.








செவ்வாய், 16 ஜூலை, 2013

திருப்புகழ் - 8

சந்தத்துள் அடங்கிய கந்தன்
குருஜி ஏ.எஸ்.ராகவன்

’போகாத ஊரில்லை, போற்றாத தெய்வமில்லை’ என்று சொல்லும்படி பாடிய அருணகிரிநாதர் பல ஊர்களில் உள்ள முருகப் பிரானைப் பற்றிப் பல பாடல்களை நமக்கு வழங்கியுள்ளார். ஆனால் சில ஊர்களில் அவர் பாடியவற்றுள் ஒரே ஒரு திருப்புகழ்ப் பாடல் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. அத்தகைய ஒரு ஸ்தலம் தான் ‘கந்தன்குடி’. அதைப் பற்றிக் குருஜி ராகவன் எழுதிய கட்டுரை இதோ!




திருவாரூர் மாவட்டத்தில் ஒரு காட்டுப் பிரதேசம். அங்கே மரங்கள்அடர்ந்திருக்க, அவற்றை மலர்க்கொடிகள் தழுவ, அக்கொடிகளில் பூத்து சிரித்த மலர்கள் தேன் சிந்தி மகிழ... அந்த ரம்மியமான வனத்தை ஒட்டி ஒரு குக்கிராமம். அக்கிராமத்து மக்களின் நிறை செல்வம் ஆநிரைகள். காட்டுப் பகுதியில் அவை மேய்ச்சலுக்குச் செல்வதும், அந்தியில் வீடு திரும்புவதும் வழக்கமாயிருந்தது.

ஒரு செல்வந்தர் வீட்டுப் பசு மட்டும் பின் தங்கித் தாமதமாய் வீடு திரும்பிற்று. பால் கறந்த நேரத்தில் இப் பசுவின் மடி மட்டும் வற்றிக் காணப்பட்டது.

இந்த வினோதம் ஏன் என்று விசாரிக்கப் புறப்பட்ட ஆட்கள், பசுமாடு வனத்திடையே இருந்த பல புற்றுகளுள் குறிப்பாக ஒன்றினை நெருங்கி, அதன் மீது மடியிலிருந்த பாலைச் சொரிந்துவிட்டு வருவதைக் கண்டனர். இந்த ‘அபிஷேகம்’ தினந்தோறும் நடைபெற்று வந்தது!

விஷயம் தெரிந்ததும் ஊர் மக்கள் புற்று இருந்த இடத்தைத் தோண்டினர். அவ்வாறு தோண்டிய பொழுது கிடைத்தது ஓர் அழகான முருகன் சிலை _ வள்ளி _ தெய்வானையுடன் கூடிய உருவம்.  கிராமத்தாரின் மகிழ்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா! அப்போது, அங்கேயே கோயில் அமைப்பதென்று முடிவு செய்து செயல்படுத்தினர். முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டான். மூன்று கால பூஜையும் வழிபாடுகளும் அமோகமாக நடைபெறலாயின.

 கந்தன் விரும்பி குடிகொண்ட இடம் என்பதால் இத்தலம் கந்தன்குடி என்று வழங்கலாயிற்று.  ‘கந்தன் குடி’ என்று சொல்வதிலேயே ஒரு சந்தம் அடங்கியிருக்கிறது. வல்லினமும் மெல்லினமும் கலந்த ஓசை நயம் ‘தந்தன் தன’ என்ற சந்தத்துள் அழகாகப் பொருந்தி உட்காருகிறது.  ஊர்ப் பெயரிலுள்ள இந்த சந்தத்தையே பயன்படுத்தி இவ்வூர் முருகனை அதனுள் பொதித்துத் துதித்துப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்:

எந்தன்சட லங்கம்பல பங்கம்படுதொந்தங்களை
  யென்றுந்துயர் பொன்றும்படி யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
  யென்றும்படி பந்தங்கெட மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
  மண்டும்படி நின்றுஞ்சுட ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
  வண்டன்தமி யன்றன்பவம் ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
  தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு மணியாரம்
சந்தன்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
  சம்புந்தொழ நின்றுந்தினம் விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
  கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே
கண்டன்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
  கந்தன்குடி யின்தங்கிய பெருமாளே.

இன் கனி சுவைசிந்துகின்ற, பொங்கு புனல்களும் தங்கு சுனைகளும் வளப்படுத்துகிற ஊராக கந்தன்குடியை வர்ணிக்கிறார் அருணகிரிநாதர்.

 அங்கே குடிகொண்டிருப்பவனோ ‘கந்தன் குகன் எந்தன் குரு’, சம்புவும் தொழக் கூடியவன், ‘தந்தந்தன’, ‘திந்திந்திமி’ என்று சந்தமெழ அவன் மணியாரங்கள் ஒலித்து அசைந்து கொண்டிருக்கின்றன. உலகியல் பந்தங்கள் அறுபட, நம் நெஞ்சில் குடி கொண்ட வஞ்சம் பொடிபட அவனே, சந்தத்திலுறையும் கந்தனே, வந்து நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

இத் தலம் பேரளம் - காரைக்கால் ரயில் பாதையில் உள்ள அம்பகரத்தூரிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கிறது.  குமரக்குடி என்றும் ஒரு பெயர் உண்டு.  தெய்வானை அம்மை இங்கே கடுந்தவமிருந்து முருகனை அடைந்ததாக புராணம் சொல்கிறது. அச்சமயம் மகளுக்குக் காவலாகவும் துணையாகவும் தனது வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பைரவரையும் அனுப்பி வைத்தானாம் இந்திரன்.  இன்றைக்கும், கந்தன்குடி முருகன் கோயிலில் ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்தைக் கடந்து கொடி மரத்தை நாம் அடைந்தோமானால் மயிலுக்குப் பதிலாக அங்கே யானை வாகனம் இருப்பதைக் காண்கிறோம்.

வெளிப் பிராகாரம் புல் மண்டிக் கிடக்கிறது. உட்பிராகாரத்தை வலம் வருகையில், முதலில் தவக்கோலத்தில் நிற்கும் தெய்வ யானையின் சன்னிதியில் நிற்கிறோம். அவளைப் போல் ஒருமுகச் சிந்தனையுடன் நாமும் முருகனை எண்ண வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.  தவத்துக்கிறங்கி தெய்வானையைத் திருமணம் கொண்ட முருகன், ‘கல்யாண சுந்தரர்’ என்ற திருப்பெயருடன் ஒரு முகமும் நான்கு கைகளுமாகக் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை இருவரும் இருபுறமும் இருக்கிறார்கள். கிழக்கு நோக்கிய சன்னிதி. மயில் உருவம் பொறித்த அழகான பீடத்தின் மேல் நின்ற திருக்கோலம்.

இந்திரன் அனுப்பிய ஐராவதேசுவரர், பைரவர் ஆகியோருக்கு இங்கே சன்னிதிகள் உண்டு. ஈசனும் அன்னையும் விச்வநாதர் - விசாலாக்ஷி என்ற பெயர்களுடன் இங்கு விளங்குகின்றனர்.  ஸ்கந்த புஷ்கரிணி என்ற தீர்த்தமும் ஸ்தல விருட்சமான வன்னி மரமும் உள்ளன.    மிக சிரத்தையுடன் ஐந்துகால வழிபாடு நடக்கிறது இங்கே.  பசுக்கள் பால் பொழிந்து, புதையுண்டு கிடந்த கடவுள் திருவுருவங்களை அடையாளம் காட்டியதாகப் பல கதைகள் உண்டு. பெரும்பாலான கதைகளில் அவ்விடங்களில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பிரதிஷ்டையானதாகவே வரலாறு அமையும். கந்தன்குடி கதை சற்று மாறுபட்டிருந்தாலும் அப்பாவுக்குப் பிள்ளையாகவே முருகன் தப்பாமல் பிறந்திருப்பதைக் காட்டுகிறது!

[ நன்றி: கல்கி ]

செவ்வாய், 25 ஜூன், 2013

திருப்புகழ் - 7

அமெரிக்காவில் திருப்புகழ் !



நவம்பர் 2, 1997
. அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில், அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாட்டில், குருஜி ராகவன் தலைமையில் திருப்புகழ் இசை வழிபாடு நடந்தது. டொராண்டோவிலிருந்து என்னைப் போன்ற பல திருப்புகழ் அன்பர்கள் அங்குச் சென்று பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த  ‘ஸரிகமபதநி’ என்ற பத்திரிகையின் பிப்ரவரி -98 இதழில் நான் ஒரு சிறு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்!




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:





சனி, 8 ஜூன், 2013

திருப்புகழ் -6

புள்ளூர் குருபரன்
குருஜி ஏ.எஸ்.ராகவன் 




வைதீஸ்வரன் கோயில் என்று சொன்ன மாத்திரத்தில் அங்கே உறைகின்ற வைத்தியநாதசுவாமியும் அவனது தேவியான தையல்நாயகியும்தான் ஞாபகம் வருவார்கள். இந்த ‘வைத்யபதி’யும் அவனது ‘ஹ்ருதய விஹாரிணி’யான பாலாம்பிகையும், ஏராளமான தமிழர்களின் குலதெய்வம். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் திருமந்திரத்தில் சொன்னதை மறந்து நாம் இரண்டையுமே போட்டு படாதபாடு படுத்திக் கொள்ளும் நேரத்தில், உடல் ரோகத்தையும் பவரோகத்தையும் (வினைப் பயன்) நீக்கி ஆட்கொள்வோர் இந்த தெய்வ தம்பதி!

அதனால்தான் அப்பர் சுவாமிகள்,
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை... என்று வைதீஸ்வரனைப் பாடுகிறார்.

உண்மையில் சிவனும் உமையும் இத்திருத்தலத்தில் வைத்தியர்களாக அமர்வதற்குக் காரணமாயிருந்தவன் அவர்களுடைய செல்லப் பிள்ளையான பால முத்துக்குமாரன்தான்!

தாரகாசுரனோடு போர் புரிந்த நேரத்தில் முருகனுடைய பூதப்படை வீரர்கள் பலர் காயமுற்றுச் செயலிழந்தனர். அவர்களைக் குணப்படுத்திக் காப்பாற்றியாகவேண்டும். அந்த ஆற்றல் முருகனுக்கே இருந்தபோதிலும் அதனை அம்மையப்பர்களின் பொறுப்பாக்கி, அவர்களே உலகம் உய்யச் செய்பவர்கள் என்று உணர்த்த விரும்பினான் முருகன். இருவரையும் வேண்டி அழைக்க, அவர்கள் வைத்தியநாதராகவும் தையல் நாயகியாகவும் வந்தமர்ந்த இடம்தான் வைதீஸ்வரன் கோயில்.

ஜடாயு என்கிற புள், ரிக் வேதம், முருகப் பெருமான் (வேள்), சூரியன் (ஊர்) ஆகிய நால்வரும் வழிபட்ட ஸ்தலம் என்பதால் இதற்குப் புள்ளிருக்குவேளூர் என்று பெயர். ‘வைதீஸ்வரன் கோயில்’ என்று ஆலயத்தின் பெயரால் ஊர் அழைக்கப்படுகிற தனிச் சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.

மிகப்பெரிய கோயில். தருமை ஆதினத்தின் மேற்பார்வையில் நாளொரு விழாவும் பொழுதொரு சிறப்பும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ராஜகோபுரங்களைத் தரிசித்து, உயர்ந்த மதில்சுவர்களைத் தாண்டி உள்ளே போனால், சிறிய கோபுரங்களுடன் உள் பிராகாரங்கள்.
ஸ்தல விருக்ஷமாக வேம்பு நிற்கிறது. வேம்படிமால் என்றழைக்கப்படுகிறது. ஆதிவைத்யநாத ஸ்வாமி இதனடியில் ஒரு மிகச் சிறு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார். சுற்றிலும் ஆதிபுராணேஸ்வரர், வீரபத்ரர், அன்னபூரணி தேவி சந்நிதிகள். தெற்குப் பாகத்தில் தையல்நாயகி சன்னிதி எதிரில் சித்தாமிர்த தீர்த்தம் இருக்கிறது. கிருதயுகத்தில் காமதேனு வைத்தியநாத பெருமாளுக்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்ய, பெருகியோடிய அந்தப் பாலே தீர்த்தமாயிற்று என்பது புராணம். கலியுகத்து சித்தர்கள் தேவாமிர்தத்தால் செய்த அபிஷேகம் இங்கு கலந்ததாகவும் நம்பிக்கை. சித்தாமிர்த தீர்த்தம் என்ற பெயர் அதனால்தான் ஏற்பட்டது!

ஈசன் முதல் பிராகாரத்தில் மேற்கு நோக்கி இருக்க, அவனை இத்தலத்துக்கு வருவித்த முருகன், ‘குமரகுருபரன்’ என்ற மிக அழகான திருப்பெயருடன் இரண்டாம் பிராகாரத்தில் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை சமேதனாக ஆறுமுகங்களிலும் அழகு துலங்க, பன்னிரு விழிகளிலும் கருணை பெருக காட்சி தருகிறான். இந்த ஆறுமுகப் பெருமானின் உத்ஸவ மூர்த்திக்குத்தான் செல்வ முத்துக்குமாரசாமி என்று பெயர்!

பூமி மெச்சிடும் பெற்றோரின் செல்வத் திருக்குமரன் என்பதால் மட்டுமா அப்பெயர்? உடலாரோக்கியமாகிற செல்வத்தையும் மன ஆரோக்கியமாகிற செல்வத்தையும் அருளவல்ல தெய்வ தம்பதியை வந்தமரச் செய்த செல்வன்.


தமிழால் அவனைத் துதித்து இந்நாட்டின் இலக்கிய ஆன்மிகச் செல்வத்தைப் பெருக்கிய அருணகிரிநாதரையும் குமர குருபரரையும் ஆட்கொண்ட அருட்செல்வன்.

இசையுலகுக்கு, இணையற்ற மாணிக்கமாக ஒரு வாக்கேயக்காரரை வழங்கி ஞானக் கடவுளாக அவர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற செல்வன். அவன் பெயரையே தாங்கிய அந்த வாக்கேயக்காரர், முத்துஸ்வாமி தீக்ஷிதர். வடமொழி கீர்த்தனைகளில் திருத்தலச் சிறப்புகளையும் மூர்த்தி சிறப்பையும் தெய்வீக ஆற்றலுடன் பதிவு செய்து, ‘குருகுஹ’ என்று தமது இஷ்டதெய்வத்தின் நாமத்தையே முத்திரையாக்கிய பக்தர்.
முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பெற்றோரான ராமஸ்வாமி தீக்ஷிதர் - சுப்புலட்சுமி அம்மாள் தம்பதி, நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாதிருந்தனர். வைதீஸ்வரன்கோயில் பாலமுத்துக்குமார ஸ்வாமி சன்னதியில் மனமுருக வேண்டி, விரதமிருந்து புத்ர பாக்கியம் அடைந்தனர். அந்த முருகன் நினைவாகவே மூத்த மகனுக்கு முத்துஸ்வாமி என்று பெயரும் வைத்தனர். பிற்காலத்தில் இந்த முத்துஸ்வாமி திருத்தணி முருகன் அருளால் கீர்த்தனைகள் இயற்ற ஆரம்பித்து, முருகனை மட்டுமின்றி அனைத்து தெய்வங்களையும் பாடினார். இதே வைதீஸ்வரன் கோயில் ஈசுவரனான வைத்தியநாதன் பெயரிலும் பாலாம்பிகையின் பெயரிலும் கிருதிகள் அமைத்துள்ளார். அவற்றில் முத்துக்குமாரனையும் மறவாமல் குறிப்பிட்டிருக்கிறார். ‘ரூப முத்துக்குமார ஜனனி’ என்று ‘பஜரே ரேர்சித பாலாம்பிகா...’ கீர்த்தனையில் அந்த முருகனின் ரூப லாவண்யத்தை அழகாக ஞாபகப்படுத்துகிறார். குமரகுருபரனும் சரி, முத்துக்குமார சாமியும் சரி, சொல்லொணா அழகுடன் பொலிகிறார்கள்!

குமரகுருபர ஸ்வாமிகள் இந்த பால முத்துக்குமாரனுக்குப் பிள்ளைத்தமிழ் இயற்றி, கொண்டாடியிருக்கிறார். தருமை ஆதீன குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் இயற்றிய ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருவருட்பாகூட பிள்ளைத் தமிழைப் போலத்தான் அவனைக் கொண்டாடி அழைக்கிறது:

மதிவதன மாடவிரு காதில்நவ ரத்னமணி 
  மகரகுண் டலமாடநாள் 
  மலர்ப்புண்ட ரீகவிழி யாட அருளாட 
  மனமகிழ்மந்த காசமாடக் 
கதிருதயம் ஆயிரம் கோடியென வேயிலகு 
  காருண்ய மேனியாடக் 
  கனவஜ்ர புயவலயம் ஆடவண் டாடக் 
  கடப்பமலர் மாலையாட 
விதமணி இழைத்தபரி புரமாட சரணார 
  விந்தங்க ளாட நீள்கை 
  வெற்றிவே லாடமயி லாடவென் கண்முன்நீ 
  விளையாட ஓடிவருவாய் 
முதுமறைக ளாகம முழங்கு புள்ளூரனே 
  முக்கட் குருக்கள் குருவே 
  முத்தர்குரு வேயோக சித்தர்குரு வேபால 
  முத்துக் குமாரகுருவே 

என்று குழந்தை முருகனை விளையாட அழைக்கும் ஆடல் பருவச் செய்யுள் போலவே அமைந்திருக்கிறது.

கதிருதயமாயிரம் கோடி ஒத்த அவன் அழகு எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், அவன் உள்ளத்தின் காருண்யத்திலிருந்து அல்லவா அது பெருகுகிறது! அதனால்தான் அவன் மேனியையே ‘காருண்ய மேனி’ என்று வர்ணித்துப் பாடுகிறார் சுவாமிகள்.


கிருத்திகை, சஷ்டி தினங்கள் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேக நாட்கள். அர்த்தஜாம வழிபாடு முதலில் இந்த முருகனுக்குத்தான். அதன் பிறகுதான் வைத்தியநாதருக்கு வழிபாடு நடைபெறுகிறது! பங்குனி மாத உத்ஸவத்தின்போது ஐந்தாம் நாள், செல்வ முத்துக்குமாரர் அம்மாவையும் அப்பாவையும் சென்று வழிபட்டு, ‘செண்டு’ பெறும் காட்சி மிக அழகான வைபவம்.

‘திருச்சாந்துருண்டை’ என்று இத்தலத்தில் வழங்கப்படும் பிரசாதம் 4448 வித நோய்களைக் குணப்படுத்த வல்லது என்பர். இந்தப் பிரசாதம் தயாரிக்கும் பந்ததியே விசேஷமானது. சுக்ல பக்ஷத்தில், நல்ல நாழிகை பார்த்து அங்கசந்தான தீர்த்தம் என்ற இத்தல தீர்த்தத்தில் நீராட வேண்டும். அதிலுள்ள மண்ணை எடுத்து, புதுப் பாத்திரத்தில் வைத்து, இங்கே உள்ள ஜடாயு குண்டத்திலிருந்து விபூதியையும் சித்தாமிர்த தீர்த்தத்திலிருந்து நீரையும் கலந்து பஞ்சாக்ஷர தியானம் செய்து கொண்டே பிசைய வேண்டும். அதை முத்துக்குமாரசுவாமி சந்நிதியிலுள்ள குழியம்மியிலிட்டு அரைத்து, சிறு கடுகளவு உருண்டைகளாக்கி தையல் நாயகி அம்மன் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் இம்மருந்தை சித்தாமிர்த தீர்த்தத்துடன் உண்ண வேண்டும். ஈசனும் அம்மையும் இங்கே மருத்துவர்கள் எனில், மருந்தாளர் முத்துக்குமார சுவாமிதான்! அதனால்தான் அருணகிரிநாதர் அவரை வைத்திய நாதப் பெருமாளே! என்றே பாடுகிறார்:

உரத்துறை போதத் தனியான 
  உனைச் சிறிதோதத் தெரியாது 
மரத்துறை போலுற் றடியேனும் 
  மலத்திருள் மூடிக் கெடலாமோ 
பரத்துறை சீலர் தவர்வாழ்வே 
  பணித்தடி வாழ்வுற் றருள்வோனே 
வரத்துறை நீதர்க் கொருசேயே 
  வயித்திய நாதப் பெருமாளே. 

ஞாயிறு, 19 மே, 2013

திருப்புகழ் - 5

குராவடிக் குமரன் 
குருஜி ஏ.எஸ்.ராகவன் 


அண்மையில் ( 17 மே, 2013) காலமான குருஜி ஏ.எஸ்.ராகவன் அவர்களுக்கு நினைவஞ்சலியாக அவர் ‘கல்கி’ யில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன். 2002-இல் அவர் ‘தலந்தோறும் தமிழ்க்கடவுள்’ என்ற தொடரைக் ‘கல்கி’யில் எழுதினார்; அத்தொடரில் வந்த ஒரு கட்டுரை இது. 

குருஜி ராகவன் கனடாவிற்கு 1988-இல் வந்தபோது  அவருக்கு டொராண்டோ திருப்புகழ் அன்பர்கள் கொடுத்த வரவேற்பில் நான் படித்த ஒரு கவிதை ( சில சிறு மாற்றங்களுடன்) :

திருப்புகழுக் கிசைசேர்த்த மாசாதகன்
  திருச்செந்தூர் தீரனே கதியென்பவன்
முருகனது புகழ்பரப்பும் பணியேற்றவன்
  மனமுருகப் பண்ணிசைக்கும் குணக்குன்றவன்
திருப்புகழ் அன்பர்களுக் குயிரானவன் 
  திருமுருக பக்தியே சாறானவன் 
அறுமுகன் புகழ்பாட அசராதவன் 
  ஆறுமுக மங்கலத்து ஸ்ரீராகவன்  

இதோ அவர் எழுதிய ஒரு கட்டுரை.


 மருக்கு லாவிய மலரணை கொதியாதே
   வளர்த்த தாய்தமர் வசையது பொழியாதே
  கருக்கு லாவிய அயலவர் பழியாதே
   கடப்ப மாலையை யினிவர விடவேணும்
  தருக்கு லாவிய கொடியிடை மணவாளா
   சமர்த்த னேமணி மரகத மயில்வீரா
  திருக்கு ராவடி நிழல்தனி லுறைவோனே
   திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே

  அருணகிரிநாதர் திருவிடைக்கழி முருகனைக் குறித்துப் பாடிய எட்டு திருப்புகழ் பாடல்களுள் மிகப் பரவலாக அறியப்படுவது மேற்படி பாடல்தான்.

  காமாக்கினிக்கு வசப்படாமல், பழிச் சொல்லுக்காளாகாமல், தாய் தந்தையரைத் தூற்றாமல்வாழ்ந்து சிறக்க திருமுருகனின் கருணையை வேண்டி நிற்கிறார் அருணகிரி நாதர்.

  கற்பகவிருக்ஷமான தேவ தருவின் நிழலில் வளர்ந்த கொடியிடையாளம் தேவசேனையின் மணாளனே!

  போர் புரிவதிலும் அதில் வெற்றி கண்டு தேவமங்கையின் கரம்பற்றுவதிலும் சமர்த்தனாயிருப்பவனே! மணி நிறத்தவனே! மரகத வண்ணமான பச்சைநீல மயில் மீது ஆரோகணித்து வரும் வீரனே! திருக்கு ராமரத்தின் நிழலில் உறைபவனே! திருக்கரத்தில் வேலாயுதம் தாங்கியவனே! என்று அழைத்து அழைத்து அருணகிரிநாதர் கேட்பது என்ன...?

  கடப்ப மாலையை யினிவர விடவேணும்!

 - இந்த வரியில்தான் இருக்கிறது திருவிடைக்கழி முருகனின் வரலாறு; இந்த வரியிலும் திருக்குராவடி நிழலிலும் ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு முருகன் கதை:

  சிவபெருமானுடைய சக்தி வெளிப்பாடுதான் முருகப் பெருமான் என்பது நாம் அறிவோம்.

  ஜோதி பிழம்பாக நின்ற சிவபரம் பொருள், தன்னிடமிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தது. அந்த ஆறு பொறிகள்தான் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்ட கந்தனாக உருவாகின.
இதைத்தான் கந்தபுராணம் சொல்கிறது.

  அருவமும் உருவும் ஆகி
     அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
  பிரமமாய் நின்ற சோதிப் 
   பிழம்பதோர் மேனியாகக்
  கருணை கூர் முகங்களாறும்
     கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
  ஒருதிருமுருகன் வந்தாங்
   குதித்தனன் உலகமுய்ய


  ஆகவே, சிவன் வேறு முருகன் வேறு அன்று. அருணகிரிநாதரும் இவ்விருவரிடையே வேறுபாடு கொள்ளாமல் வழிபட்டார்.

  சிவபெருமானே முருகனைக் குறித்து பார்வதியிடம் சிலாகிப்பதாகச் சொல்கிறது கந்தபுராணம்:

  ‘‘நமது சக்தி ஆறுமுகன்’’ என்று எடுத்துச் சொல்லி, ‘‘ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும் போதமும் அழிவில் வீடும், போற்றினர்க் கருளவல்லான்’’ என்று உறுதியளிக்கிறார்.

  முருகப் பெருமான் இவ்வாறு சிவனால் அருளப்பெற்றவன் என்பதையும் சிவ ஸ்வரூபமே அவன் என்பதையும் உணர்த்துகிற திருத்தலம் திருவிடைக்கழி.

  சூரபத்மனின் மகனான இரண்யாசுரனை திருவிடைக்கழியில்தான் சம்ஹாரம் செய்தான் முருகன். அந்த சம்ஹார தோஷம் நீங்குவதற்காக, இத்தலத்திலுள்ள குராமரத்தின் நிழலில் சிவபெருமானுக்கு ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டான். சிவபெருமானும் அவனுடைய தோஷத்தை நீக்கி ஆட்கொண்டதோடுஅவ்விடத்தில் முருகன் தன்னுடைய ஸ்வரூபத்தையே பெற்று விளங்கும்படிச் செய்தாராம்! சிவஸ்வரூபமாக முருகனே இருக்கையில் தமக்கு அங்கு வேலை இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டாராம்!

  அதனால்தான் இந்த ஊரின் முருகன் கோயில் சிவாலய அமைப்பிலேயே இருக்கிறது. பிராகார அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தால் சோமாஸ்கந்தமூர்த்தி இருக்க வேண்டிய இடத்தில் வள்ளி-தேவசேனா சமேதராக முருகனே இருக்கிறார்! நடராஜர் சன்னிதி இருக்க வேண்டிய இடத்தில் _ சபா மண்டபத்தில் _ குமரப் பெருமான் இடது கையில் வில்லும் வலக் கரத்தில் வேலும் ஏந்தி நிற்கிறான்!

  இத்தலத்தில் திருக்குராவடி நிழலில் சிவலிங்கத்தை பூஜித்தபடி காணக்கிடைக்கிறான் முருகன். சம்ஹாரமூர்த்தியாயிருந்தபோது அணிந்த கடப்ப மாலையைக் களைந்து, குரா மலர்களாலான மாலையை முருகன் அணிந்த தலம் இது (கடப்ப மாலையை இனி விட வரவேணும்)

  பிரதான மூர்த்தியாக கருவறையில் குமார சிவமாக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறான் பாலசுப்ரமணியன். அவனுக்கு முன்னே ஸ்படிக லிங்க வடிவிலும் பின் புறத்தில் லிங்க உருவமாகவும் பாபநாசப் பெருமான் என்ற பெயருடன் சிவபெருமான் கோலோச்சுகிறார்!

  நாகை மாவட்டம் திருக்கடவூர் அருகே தில்லையாடி என்ற ஊர் இருக்கிறது. சுதந்தரப் போராட்ட வீராங்கனை வள்ளியம்மையின் ஊர்தான்! இந்த ஊருக்கு வெகு அருகில் இருக்கிறது திருவிடைக்கழி.
மகிழாரண்யம், மகிழ்வளங்குடி என்ற மங்களமான பெயர்களும் திருவிடைக்கழிக்கு உண்டு. நாகதலம் என்பது மற்றும் ஒரு பெயர்! சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற குராப்பள்ளி என்ற ஊர் இவ்வூர்தான்.

  தொன்மைச் சிறப்புடைய இவ்வூரில் திருமால், பிரும்மா வசிஷ்டர் தவிர முசுகுந்த சக்கரவர்த்தியும் வழிபட்டிருக்கிறார். சுமார் ஆயிரத்திருநூறு ஆண்டுகளுக்கு முன் முசுகுந்த மன்னர் பல திருப்பணிகளை இங்கு நடத்திக் காட்டியிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் பிராகாரத்தில் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன.

  கிழக்கு நோக்கிய ஆலயம் அதை எதிர்நோக்கி ஐந்நூற்று வினாயகர் என்ற பிள்ளையார் கோயில் இருக்கிறது.

  வெளிப்பிராகாரத்தில் திருகாமேஸ்வரர்என்ற பெயருடன் சிவன் இருக்கிறார்.


  மூலஸ்தானத்தில் சிவ வடிவமாக நின்று அருள் செய்யும் பாலசுப்ரமண்யன் அழகுக்கு இலக்கணமாய் அமைந்து நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறான். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய ஒரு முகம், இரு கரங்கள். வலது கரம் அபயமருளும் முத்திரை காட்ட, இடது கை இடுப்பில் பொருந்தியிருக்கிறது. திருப்பாதங்களில் வீரக் கழல்கள் மின்ன, விபூதி காப்பணிந்த எளிய அலங்காரமாயினும் சரி, விதவித ஆபரணங்கள் பூட்டிய ராஜ அலங்காரமாயினும் சரி... முருகனின் மறு பெயர் அழகுஎன்று நினைவூட்டி நிற்கிறான்.

  பதினோரு பாடல்கள் கொண்ட திருவிசைப்பா என்னும் பதிகத்தில் சேந்தனார் என்ற புலவர், இந்த பால முருகனை திருக்குரா நிழற்கீழ் நின்ற எழுங்கதிர்என்று உதய சூரியனின் பொலிவுடையவனாகப் பாடியிருக்கிறார்! பன்னிரு திருமுறைகளிலும் பாடப் பெற்றுள்ள தலம் திருவிடைக்கழி.

  வெளிப்பிராகாரத்தில் தெற்கு நோக்கிய மண்டபத்துக்கு வருவோம். இங்கே அந்த முருகனின் க்ரியாசக்தி அம்சமான தெய்வயானை, அவன் அழகில் மயங்கி நாணத்துடன் சற்று வலப்புறம் தலை சாய்த்து அவன் திருவுருவைக் கடைக்கண்ணால் நோக்கும் பாவனையில் நிற்கிறாள்.

  வசிஷ்டர் பூஜித்த வசிஷ்ட லிங்கம், சிவ சண்டேஸ்வரர், குஹ சண்டேஸ்வரர் என்று இரு சண்டேஸ்வரர் சன்னிதிகள் ஆகியவை இக் கோயிலின் தனிச் சிறப்புகள்.

  குராமர நிழலில் உள்ள பலிபீடத்துக்குத் தினமும் அர்த்த ஜாம ஆராதனை நடைபெறுகிறது.

  அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறையில் பேராசிரியராக இருந்தவர் திருமங்கலமுடையார். இவர் தம்மைத் திருவிடைக்கழி முருகனிடம் அர்ப்பணித்து இத்தலத்தின் பெருமை திசையெங்கும் பரவுவதற்கு நிறைய உழைத்தார். முன்னின்று நிதி திரட்டி ஏழு நிலை ராஜ கோபுரம் அமைத்தார்.

இன்றும் அடியார்கள் பலரை தன் அழகிலும் அருளிலும் கட்டிப்போட்டுக் கொண்டுதான் இருக்கிறான் முருகன். அந்த கருணையில் கட்டுண்டு எழில் தோற்றத்தில் மயங்கி நாம் அவனிடம் எதுவும் கேட்க மறந்து நிற்போம் என்பதை அறிந்துதானோ என்னவோ, அருணகிரிநாதர் என்னென்ன கேட்கலாம் என்பதை அன்றே வரிசைப் படுத்திவிட்டுப் போயிருக்கிறார்:

  பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
   பயனு மெப்படிப்    பலவாழ்வும்
  பழைய முத்தியிற் பதமு நட்புறப்
   பரவு கற்பகத்     தருவாழ்வும்
  புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
   பொலியும் அற்புதப்  பெருவாழ்வும்
  புலன கற்றிடப் பலவி தத்தினைப்
   புகழ்ப லத்தினைத்  தரவேணும்

  அற்புதப் பெருவாழ்வை வேண்டுகிறவர், தவப் பயனைத் தா என்று கேட்கிறவர் முத்தமிழின் பொருளும் வரமருளக் கேட்கிறார் என்றால் அந்தத் தமிழின் உயர்வை நாம் எத்தகையதாகக் கொள்வது! முக்தி நிலைக்கு நிகராக மொழிச் சிறப்பைச் சொல்லியிருப்பது அம் மொழியை ஆன்ம சிந்தனையின் வாகனமாக அவர் கருதுவதையே காட்டுகிறது. தமிழ்க் கடவுளுக்கும் தமிழ் மொழிக்கும் திருவிடைக்கழியில் அருணகிரிநாதர் செய்த சிறப்பை எண்ணி வியந்தபடி அந்த அழகு முருகனை வலம் வருவோம்.